ஏணி ஏறுதல்—பாதுகாப்புக்கு சில டிப்ஸ்!
அயர்லாந்திலிருந்து விழித்தெழு! நிருபர்
பால் என்பவர் தன் வீட்டிற்கு வெளியே உயரத்தில் இருந்த ஒரு பல்பை மாற்ற வேண்டியிருந்தது. அதோடு மேல்மாடி ஜன்னல்களின் வெளிப்புறத்தையும் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது—இதை செய்யும்படி அவருடைய மனைவி சொல்லாத நாளில்லை. ஆனால் இந்த வேலைகளை பவுல் நாளை, நாளைமறுநாள் என தள்ளிப்போட்டுக்கொண்டே போனார். ஏன்? ஏனென்றால், அவர் அதையெல்லாம் செய்ய ஏணியில் ஏற வேண்டியிருந்தது.
அவர் இவ்வாறு இழுத்தடித்ததற்கு நியாயமான காரணம் ஒன்று இருந்தது. ஏணிகளால் ஏற்படும் விபத்துக்கள் மோசமான, சாவுக்கேதுவான காயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர் அறிந்திருந்தார். ஏணியை பயன்படுத்துபவர்கள், ஏணியை எவ்வாறு சரியாக பயன்படுத்துவது என்று அதிகம் யோசிக்காததன் விளைவே இப்படிப்பட்ட காயங்கள் ஏற்படுவதற்கான காரணம்.
பவுல் இந்த வேலைகளை செய்வதற்கு முன்பு, ஏணிகளை பற்றி அவர் என்ன குறிப்புகளை சிந்தித்துபார்க்க வேண்டியிருந்தது? காரியங்களை சரிவர பாதுகாப்பாய் செய்வதற்கு அவருக்கு உதவிய பத்து வழிகள் இதோ.
ஏணியை பாதுகாப்பாக பயன்படுத்த சில டிப்ஸ்
1 ஏணி சரியானதா? ஏணி சிறியதாக இருந்தால் நீங்கள் அதிக சிரமப்பட்டு எட்ட வேண்டியதாக இருக்கும். அதேசமயத்தில் அது பெரியதாக இருந்தால், அதை ஆபத்தான கோணத்தில் வைக்க வேண்டியிருக்கும். உங்கள் வீட்டு மேல்மாடிக்கு போவதற்கு மடக்கு ஏணி பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக சுவரோடு பொருத்தப்பட்ட ஏணியை, அல்லது சாய்வான ஏணியை பயன்படுத்துங்கள்.
2 ஏணியின் கண்டீஷன். அந்த ஏணி வெளியிலேயே வெகுகாலம் வைக்கப்பட்டிருந்ததா? சாதாரணமாக மர ஏணிகள், ஈரமாயிருக்கும்போது விரியும், காயும்போது சுருங்கும். நாளாக நாளாக அந்த ஏணிப்படிகள் லூஸாகி, ஏணியே உறுதியில்லாமல் ஆகிவிடும். எந்த ஏணிப்படியிலாவது விரிசல் இருக்கிறதா, அல்லது மோசமான நிலையில் இருப்பதற்கான அறிகுறி ஏதாவது தெரிகிறதா? பெரும்பாலும், அந்த ஏணிப்படிகள் உறுதியாய் இருப்பதற்காக ஒவ்வொரு ஏணிப்படிக்கு கீழும், ஒரு உலோகப்பட்டை இருக்கும். அந்தப் பட்டை சரியாக இருக்கிறதா, அது சரியான இடத்தில் பொருத்தப்பட்டிருக்கிறதா? அந்தப் பட்டைகள் நேராக இருக்கும்படி பொருத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்குரூக்களும் ஆணிகளும் உடைந்திருக்கிறதா அல்லது துருப்பிடித்திருக்கிறதா? சில பெரிய, நீளத்தை கூட்டக்கூடிய ஏணிகள் உருளைகளையும் கயிறுகளையும் கொண்டிருக்கும். அந்த உருளைகள் சரியாக வேலைசெய்கின்றனவா? அந்த கயிறு மோசமான அறுந்துவிடும் நிலையில் இருக்கிறதா, மேலும் போதிய அளவு நீளம் இருக்கிறதா? சரியான நேரத்தில் பழுதுபார்க்க வேண்டியவைகளை சரிசெய்து, மாற்ற வேண்டியவைகளை மாற்றவும்.
ஏணியில் ஏறுபவர் வழுக்கிவிடாதபடி, பெரும்பாலான ஏணிப்படிகளில் வரிப்பள்ளங்கள் இருக்கும். அதில் அழுக்குகள் சேர்ந்து அடைத்துவிடாதபடி சுத்தமாக வைத்திருங்கள். ஏணியின் கால்கள் வழுக்கிவிடாதபடி கீழே ஏதாவது சாக்கோ, முரட்டு துணியோ பயன்படுத்தலாம். அல்லது ஏணியில் ரப்பர் புஷ் பொருத்தப்பட்டிருந்தால் அது அதிகம் கிழிந்திருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்.
3 எடுத்துச்செல்கையில் ஜாக்கிரதை. வாகனத்தில் கொண்டு செல்லும்போது, ஏணிகளை வைப்பதற்கென்று சட்டம் ஏதாவது இருந்தால் அதில் பத்திரமாக வைக்கவும், அல்லது ஏணியை ஒரு டிரெய்லரில் கொண்டு சென்றால் குறைந்தபட்சம் இரு இடங்களிலாவது கட்டவும். ஒருவேளை அது நீளமான ஏணியாக இருந்தால் அந்த வாகனத்தின் பின்புறம் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். ஆகவே, வாகனத்திற்கு பின்னால் வருபவர்கள் கண்ணில்படும்படி ஏணியின் முனையில் ஒரு எச்சரிப்புக் கொடியை கட்டவும்.
ஒரு நீளமான ஏணியை இருவர் தூக்கிச்செல்வது பாதுகாப்பானது. ஆனால் அந்த ஏணியை நீங்கள் தனியாகவே தூக்கவேண்டியதாக இருக்கலாம், அப்போது அதை சாய்த்து படுக்கைவசமாக கொண்டுசெல்ல தீர்மானிக்கிறீர்கள். அப்படிப்பட்ட சமயத்தில் தோளில் தாங்கியபடி ஒரு கையால் இறுக்கமாக ஏணியை பிடித்துக்கொண்டு, அந்த ஏணி ஒருபக்கமாக சாய்ந்துவிடாதபடி மற்றொரு கையால் பிடித்துக்கொள்ளுங்கள். யாரையும் இடித்துவிடாமலிருக்க அந்த ஏணியின் முன்பாகத்தை தலைமட்டத்திற்கு மேலே கொண்டு செல்லவும். இருப்பினும், உங்களுக்கு முன்னால் எந்தளவு ஏணியிருக்கிறதோ அதே அளவு பின்னாலும் இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள்! ஒருவர் ஏணியில் மோதிக்கொள்ளும் ஒரு நகைச்சுவை காட்சியை திரையில் பார்க்கும்போது அது நமக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில், அதிலும் முக்கியமாக நீங்கள் காயமடைந்தால்—அது வேடிக்கைக்குரிய விஷயமே அல்ல.
நீங்கள் ஏணியை செங்குத்தாக எடுத்து செல்லும்போது, அதன் சுமையை உங்கள் உடலின் மீது சாய்த்துக்கொள்ளுங்கள். அந்த ஏணியை ஒரு கையால் தூக்கிக்கொண்டு, அந்த ஏணி ஒருபக்கமாக சாய்ந்துவிடாதபடி மற்றொரு கையை தோள்மட்டத்திற்கு மேலே உயர்த்தி பிடித்துக்கொள்ளுங்கள். தலைக்குமேல் உள்ள மின்கம்பிகள், மின் விளக்குகள், மற்றும் குறிப்பு பலகைகள் போன்றவற்றில் இடித்துவிடாதபடி கவனமாய் இருங்கள்!
4 வைக்கும் முறை. ஏணியை அதிக பக்கவாட்டாக சாய்த்து வைக்காதீர்கள். அதை 75 டிகிரி அளவில் வையுங்கள், இது பாதுகாப்பிற்கு உதவும்.
5 மேலேயும் கீழேயும் ஆதாரங்கொடுங்கள். ஏணியின் மேல் முனையை எங்கே வைக்கிறீர்கள் என்பதில் கவனமாய் இருங்கள். ஏணியின் மேல்முனையை வைக்கும் இடம், நிலையாக இருக்கவும் வழுக்காதபடியும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். எப்போதும் ஏணியை கண்ணாடி மீதோ பிளாஸ்டிக் மீதோ சாய்த்து வைக்காதீர்கள். முடிந்தவரையில், அந்த ஏணியை சாய்வாக வைத்தவுடன் அதை பக்கத்தில் உள்ள உறுதியான ஏதோ ஒன்றில் கட்டிவைக்கவும்; ஏணியை வைக்கும்போது நாம் எந்த இடத்திற்கு ஏறுகிறோமோ அதைவிட சுமார் ஒரு மீட்டர் அதிக உயரத்திற்கு ஏணியின் உயரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
முதல்தடவை ஏணியில் ஏறும்போது மேலே கட்டுவதில் அதிக கவனமாய் இருங்கள். அந்த முதல்தடவை ஏறும்போதும் சரி, கட்டியதை அவிழ்த்துவிட்டு திரும்பி கீழே கடைசியாக இறங்கும் போதும் சரி, அது அவ்வளவு பாதுகாப்பாய் இராது. பாதுகாப்பாய் ஏறியிறங்க, ஏணியைப் பிடித்துக்கொள்ள ஒருவரை துணைக்கு வைத்துக்கொள்வது நல்லது. இருப்பினும், இந்த யோசனை, ஏணியின் உயரம் ஐந்து மீட்டருக்குள் இருந்தால் மட்டுமே பயனுள்ளது.
தரைமட்டம் ஒருவேளை சரிவாக இருந்தால், பாரமான ஏதாவது ஒன்றை ஏணியின் அடியில் வைத்து முட்டுக்கொடுக்கவும், அல்லது கீழுள்ள கடைசி ஏணிப்படியை பக்கத்தில் உள்ள ஒரு உறுதியான பொருளுடன் கட்டவும். ஒருவேளை தரைமட்டம் உறுதியாக இருந்தும் சமமாக இல்லையென்றால், செருகுகட்டையை பயன்படுத்தி தரையை சமமாக்கவும். ஒருவேளை தரை உறுதியாக இல்லையென்றால் அல்லது புதையக்கூடிய தரையாக இருந்தால், மரப்பலகை அல்லது அதைப்போன்ற ஒன்றை பயன்படுத்தவும்.
நீங்கள் மடக்கு ஏணியை பயன்படுத்தினால், தரையில் அதன் நான்கு கால்களும் உறுதியாக நிற்கிறதா என்றும், அதன் இரண்டு பாகங்களும் முழுவதுமாக பிரிந்திருக்கிறதா என்றும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, அதில் பாதுகாப்பு இணைப்புகள் ஏதாவது இருந்தால் அது சரியாக பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனியுங்கள்.
உங்கள் பாதுகாப்புக்கு சில டிப்ஸ்
6 காலணிகளை கவனியுங்கள். ஏணியில் ஏறும்போது ஈரமில்லாத காலணிகளை பயன்படுத்துங்கள். மேலும், வழுக்கக்கூடிய மண் அல்லது சகதி போன்ற ஏதாவது ஒட்டியிருந்தால் அதை அகற்றிவிடுங்கள்.
7 பொருட்களை கவனமாக எடுத்து செல்லுங்கள். கைகள் ஏணியை பற்றி ஏறுவதற்கு வசதியாக, நீங்கள் ஏணியில் ஏறுகையில் எதையும் கையில் தூக்கிக்கொண்டு ஏற வேண்டாம். முடிந்தால் எல்லா கருவிகளையும் பெல்டில் இணைக்கப்பட்டிருக்கும் சிறுபையில் வைத்து எடுத்துச் செல்லுங்கள். கடினமான பொருட்களை எடுத்துசெல்ல வேறொரு முறையை பயன்படுத்துங்கள், அப்படி முடியவில்லை ஏணியில்தான் எடுத்துசெல்ல வேண்டுமென்றால், நீங்கள் ஏறும்போது ஒரு கையில் எப்போதும் ஏணியை பிடித்துக்கொண்டு மற்ற கையால் எடுத்துச்செல்லுங்கள். எப்போதும் நன்கு யோசித்து, சரியான முறையில், அவசரப்படாமல் செயல்படுங்கள்.
மின்சாரத்தால் இயங்கும் கருவிகளை நீங்கள் உபயோகித்தால், அதை இயக்க உங்கள் இரு கைகளையும் பயன்படுத்தாதீர்கள். உதாரணமாக, நீங்கள் துளைபோட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று எசகுபிசகாக அந்தக் கருவி பழுதடைந்தாலோ, அல்லது வழுக்கிவிட்டாலோ உங்கள் சமநிலையை இழந்து நீங்கள் கீழே விழ நேரிடலாம். அவைகளை செயல்படும் நிலையிலேயே வைக்காதீர்கள்; அவை செயல்படும்போதே கீழே விழக்கூடும்.
8 மற்றவர்கள் மேல் கரிசனை. நீங்கள் ஒரு பொது இடத்தில் வேலை செய்து கொண்டிருந்தால், ஏணி மற்றவர்கள் எளிதில் பார்க்கும்படியாக இருக்கட்டும், மேலும் முடிந்தால் மற்றவர்கள் அதன் பக்கம் வராதபடி எதையாவது வைக்கவும். ஒரு தெருமுனையிலோ வீட்டுமுனையிலோ ஏணியை திருப்பி எடுத்து செல்ல வேண்டிய சமயத்தில், இதை மற்றவர்கள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கமாட்டார்கள் என்பதை நினைவில் வையுங்கள். அதை தவிர்க்க, அன்பான எச்சரிப்புக் குரல் கொடுத்து உங்கள் பாதையில் தடை ஏதுமிருக்கிறதா என்பதை கவனியுங்கள்.
நீங்கள் ஏணியில் இருக்கும்போது கருவிகளை வைத்திருந்தால், அது ஒரு சிறிய ஸ்க்ரூடிரைவராயிருந்தாலும் மேலேயிருந்து விழுந்தால் காயப்படுத்தக்கூடும் என்பதை நினைவில் வையுங்கள். ஏணி பத்திரமாக கட்டப்படாத நிலையில் ஏதாவது காரணத்திற்காக அந்த இடத்தைவிட்டு போகவேண்டியிருந்தால், யாரையாவது ஏணியருகே நிறுத்திவிட்டு செல்லவும். அல்லது, நீங்கள் திரும்பி வரும்வரை ஏணியை கீழே படுக்கைவசத்தில் வைத்துவிட்டு செல்லுங்கள். அதன் அருகே யாருமே இல்லாமல் ஏனோதானோ என்று விட்டுவிடாதீர்கள்.
9உங்கள் உடல் நிலை. உயரத்தில் ஏறுவதற்கு சமநிலையும், சீரான வேகத்தில் ஏறுவதும் அவசியம் என்பதால், உங்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது ஏணியில் ஏறுவதை தவிருங்கள். முக்கியமாக குமட்டல், தலைசுற்றல் போன்ற உணர்வு ஏற்படும்போது ஏறவேண்டாம்.
10 பத்திரமாக ஏறுங்கள். எப்பொழுதும் பாதுகாப்பு உணர்வுடன் இருங்கள். ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் ஏணியில் ஏற ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். கடுமையாக காற்றுவீசும் சமயங்களில் ஒருபோதும் ஏறாதீர்கள். மடக்கு ஏணியில் மேலிருந்து முதலாவது ஏணிப்படியிலோ, நீளமான ஏணிகளில் மேலிருந்து நான்காவது ஏணிப்படிக்கு மேலோ ஒருபோதும் நிற்காதீர்கள். நீளத்தை கூட்டக்கூடிய ஏணிகளில் ஒருபோதும் மிக அதிகமாக நீட்டவேண்டாம்; எப்பொழுதும் குறைந்தபட்சம் மூன்று ஏணிப்படிகளாவது ஒன்றின்மேல் ஒன்று இருக்கும்வகையில் வைக்கவும். அதிக தூரத்திலுள்ளவைகளை எட்ட ஒருபோதும் முயற்சிக்காதீர்கள். ஏணியில் இருக்கும்போது அதிக தூரத்திலுள்ளவைகளை எட்ட சாய்ந்தீர்களேயானால், உங்கள் சமநிலையை இழந்து கீழே விழுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த வேலையை செய்து முடிக்க அதிக நேரம் எடுத்தாலும்சரி, ஆபத்தான காயங்களைவிட ஏணியை அந்த இடத்திற்கு பக்கத்தில் வைத்துக்கொள்வது நல்லதல்லவா. ஏறும்போது, எப்பொழுதும் முன்னால் பார்த்து ஏறுங்கள்.
நீங்கள் என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், ஏணிகளை பயன்படுத்துவது எப்போதும் ஆபத்தானதே. இருப்பினும் இந்த ஆலோசனைகள் மூலமாக அந்த ஆபத்துக்களை குறைத்துக்கொள்ளலாம். இவைகள் பவுலுக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தன. இந்த ஆலோசனைகளை பின்பற்றி, அவர் அந்த புதிய பல்பை மாட்டினார். அந்த ஜன்னலை சுத்தம் செய்யும் வேலை என்ன ஆனது? ஒருவேளை . . . வேறொரு சமயம் அதை செய்வார்!
[பக்கம் 22, 23-ன் படங்கள்]
1 சரியான ஏணியை பயன்படுத்துங்கள்
2 நல்ல கண்டிஷனுள்ள ஏணியை பயன்படுத்துங்கள்
3 ஏணியை ஜாக்கிரதையாய் எடுத்துச்செல்லுங்கள்
4 ஏணியை சரியாக வையுங்கள்
5 ஏணிக்கு மேலேயும் கீழேயும் ஆதாரங்கொடுங்கள்
6 உங்கள் காலணிகளை கவனியுங்கள்
7 பொருட்களை கவனமாக எடுத்து செல்லுங்கள்
8மற்றவர்கள் மேல் கரிசனை காட்டுங்கள்
9 உங்கள் உடல் நிலையை பார்த்துக்கொள்ளுங்கள்
10 பத்திரமாக ஏறுங்கள்