வேலையில் ஜாக்கிரதை தருமே பாதுகாப்பை!
வரலாறு காணாத படுபயங்கர சம்பவம் ஒன்று இந்த உலகத்தில் நிகழப்போகிறது! அப்போது, சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா தம்முடைய அங்கீகாரத்தைப் பெற்ற அனைவரையும் ‘பாதுகாப்பார்.’ (யோவே. 2:32, NW) சொல்லப்போனால், மனிதர்களை ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பது அன்றுமுதல் இன்றுவரை அவருடைய விருப்பமாக இருந்துவந்திருக்கிறது. அவர் ‘ஜீவ ஊற்றாக’ இருப்பதால் எல்லா மனிதர்களின் உயிரையும் அருமையானதாகக் கருதுகிறார்; அவர்களைப் பாதுகாக்க வேண்டுமென விரும்புகிறார்.—சங். 36:9.
பூர்வ காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்களும் மனித உயிரை அருமையானதாகக் கருதினார்கள். யாக்கோபும் அவருடைய குடும்பத்தாரும் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு ‘பாதுகாப்பாக’ வந்துசேர்ந்தார்கள் என்று ஆதியாகமம் 33:18 (NW) குறிப்பிடுகிறது. அப்படிப் பயணம் செய்தபோது தனக்கும் தன்னுடன் இருந்தவர்களுக்கும் யெகோவா பாதுகாப்பு தருவார் என யாக்கோபு உறுதியாக நம்பினார்; அதே சமயம், நடைமுறையான படிகளையும் எடுத்தார். (ஆதி. 32:7, 8; 33:14, 15) எனவே, பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்களும் மற்றவர்களும் பாதுகாப்பாக இருக்கும்படி நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். ராஜ்ய மன்றக் கட்டுமானப் பணிகளிலும், இதுபோன்ற மற்ற வேலைகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபடுகிறவர்கள் பாதுகாப்பு சம்பந்தமான பைபிள் நியமங்களை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதை இப்போது நாம் சிந்திப்போம்.
திருச்சட்டத்தில் பாதுகாப்பு விதிமுறைகள்
கடவுளுடைய மக்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென மோசேயின் திருச்சட்டம் குறிப்பிட்டது. உதாரணமாக, ஓர் இஸ்ரவேலன் வீடு கட்டும்போது, மொட்டைமாடியில் கைப்பிடிச் சுவரையும் கட்ட வேண்டியிருந்தது. பொதுவாக, இஸ்ரவேல் மக்கள் மொட்டைமாடியை அடிக்கடி புழங்கினார்கள்; அங்கிருந்து யாரும் தவறி கீழே விழுந்துவிடாதபடி அந்தச் சுவர் பாதுகாப்பளித்தது. (1 சா. 9:26; மத். 24:17) வீட்டின் சொந்தக்காரர் இந்த விதிமுறைக்குக் கீழ்ப்படியாததன் காரணமாக விபத்து நேரிட்டால், அவர் யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியிருந்தது.—உபா. 22:8.
வீட்டு விலங்குகளால் ஆபத்து ஏற்படும்போது என்ன செய்ய வேண்டுமெனவும்கூட திருச்சட்டத்தில் விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு மாடு யாரையாவது முட்டிக் கொன்றுபோட்டால், அதன் சொந்தக்காரர் மற்றவர்களுடைய பாதுகாப்பைக் கருதி அதைக் கொன்றுவிட வேண்டும். அப்படிக் கொல்வது அவருக்குப் பெரும் இழப்பாக இருந்தது; ஏனென்றால், அதன் இறைச்சியைச் சாப்பிடவோ அதை மற்றவர்களுக்கு விற்கவோ முடியாமல்போனது. ஆனால், அந்த மாடு மற்றவர்களை முட்டிக் காயப்படுத்துகிறது என்பதை அறிந்திருந்தும் அவர் அதைக் கட்டி வைக்காவிட்டால்? அந்த மாடு பின்பு யாரையாவது முட்டிக் கொன்றால், அந்த மாடும் அதன் சொந்தக்காரரும் சேர்த்துக் கொல்லப்பட வேண்டும். இவ்விஷயத்தில் அசட்டையாக இருந்துவிடக் கூடாது என்பதை விலங்குகளின் சொந்தக்காரர்களுக்கு இந்தச் சட்டம் உணர்த்தியது.—யாத். 21:28, 29.
கருவிகளைச் சரியாகப் பயன்படுத்துவது பற்றியும் திருச்சட்டம் குறிப்பிட்டது. இஸ்ரவேலர் பலர் விறகு வெட்ட கோடரியைப் பயன்படுத்தினார்கள். விறகு வெட்டுவதற்காகக் கோடரியை ஓங்கும்போது, அதன் கைப்பிடியிலிருந்து இரும்பு கழன்று யார் மீதாவது பட்டு அவர் இறந்துபோனால், விறகை வெட்டியவர் அடைக்கலப் பட்டணத்திற்கு ஓடிப்போக வேண்டியிருந்தது. தலைமைக் குரு சாகும்வரை அவர் அந்தப் பட்டணத்தில் தங்கியிருக்க வேண்டியிருந்தது; அப்படியானால், தெரியாத்தனமாகக் கொலை செய்தவர் தன் குடும்பத்தாரிடமிருந்தும் வீட்டிலிருந்தும் பல வருடங்களுக்குப் பிரிந்திருக்க வேண்டியிருந்தது. உயிரை யெகோவா புனிதமானதாகக் கருதுகிறார் என்பதை இந்த ஏற்பாடு இஸ்ரவேல் தேசத்தாருக்கு உணர்த்தியது. கடவுளைப் போலவே உயிரைப் புனிதமாகக் கருதுகிற ஒருவர் தன் கருவிகளை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டியிருந்தது; அதோடு, அதைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டியிருந்தது.—எண். 35:25; உபா. 19:4-6.
யெகோவா கொடுத்த இந்தச் சட்டங்கள் எவற்றை எடுத்துக்காட்டின? இஸ்ரவேலர் தங்களுடைய வீட்டிலோ வெளியிலோ, அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடாதபடி கவனமாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்பினார் என்பதை எடுத்துக்காட்டின. யாராவது தெரியாத்தனமாக ஒருவரைக் காயப்படுத்தினாலோ கொன்றுவிட்டாலோ அவர் யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டின. பாதுகாப்பு விஷயத்தில் யெகோவாவின் கண்ணோட்டம் மாறவே இல்லை. (மல். 3:6) இன்றும்கூட, ஒருவர் தன்னைக் காயப்படுத்திக்கொள்வதையோ மற்றவர்களைக் காயப்படுத்திவிடுவதையோ அவர் விரும்புவதில்லை. உண்மை வழிபாட்டுக்காக அர்ப்பணம் செய்யப்படுகிற கட்டிடங்களைக் கட்டும்போதும் சரி பராமரிக்கும்போதும் சரி, இதை நாம் மனதில் வைக்க வேண்டும்.
கட்டுமானப் பணி நடக்கிற இடங்களில் பாதுகாப்பு
ராஜ்ய மன்றங்கள், மாநாட்டு மன்றங்கள், கிளை அலுவலக வளாகங்கள் ஆகியவற்றைக் கட்டுகிற வேலைகளையும் பராமரிக்கும் வேலைகளையும் மிகப் பெரிய பாக்கியமாக நாம் கருதுகிறோம். நிவாரணப் பணிகளில் பங்கெடுப்பதையும் அப்படித்தான் கருதுகிறோம். எல்லாச் சமயங்களிலும் நம் வேலைகளைத் திறம்படச் செய்வது அவசியம். ஏனென்றால், சாதாரண வேலைகளைக்கூடச் சரியாகச் செய்யாவிட்டால் நமக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடலாம். (பிர. 10:9) ஆம், வேலை செய்யும்போது பாதுகாப்புக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தால் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
‘வாலிபரின் அலங்காரம் அவர்களுடைய பலம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்களுடைய நரை’ என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 20:29) கடினமான வேலைகள் செய்வதற்கு வாலிபர்கள் தேவை. ஆனால், கட்டுமானப் பணிகளில் கரைகண்டிருக்கிற முதிர்வயதான ஆட்கள், கைகளாலும் கருவிகளாலும் நுணுக்கமாக வேலை செய்வதில் கைதேர்ந்தவர்கள். ஒரு காலத்தில் இவர்கள் தங்களுடைய சக்தியையெல்லாம் ஒன்றுதிரட்டிக் கடின வேலைகளைச் செய்தவர்கள். நீங்கள் கட்டுமானப் பணியில் புதிதாகச் சேர்ந்த வாலண்டியர் என்றால், அப்படிப்பட்ட அனுபவசாலிகள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்; அவர்கள் தரும் ஆலோசனைகளைக் கடைப்பிடியுங்கள். நீங்கள் விரும்பினால், கட்டுமானப் பணிகளில் அனுபவம் வாய்ந்த சகோதரர்கள் உங்களுக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தருவார்கள். ஆபத்தான பொருள்களை எப்படிக் கையாளுவது என்றும், பளுவான பொருள்களை எப்படித் தூக்குவது என்றும் அவர்கள் சொல்லித் தருவார்கள். இதனால், நீங்கள் திறமையாகவும் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் வேலை செய்வீர்கள்.
கட்டுமானப் பணி நடக்கிற இடங்களில் வேலை செய்கிறவர்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால், அங்குள்ள சூழல் திடீர் திடீரென மாறிவிடலாம். நிலத்தில் குழி தோண்டப்பட்டிருக்கலாம். ஓர் ஏணியை, ஒரு பலகையை அல்லது பெயின்ட் பக்கெட்டை ஓரிடத்திலிருந்து வேறிடத்தில் யாராவது மாற்றி வைத்திருக்கலாம். கவனமாக இல்லாவிட்டால், எளிதில் தடுக்கி விழுந்து காயப்படுத்திக்கொள்வீர்கள். பொதுவாக, பணியாளர்கள் தங்களுடைய பாதுகாப்புக் கவசத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது பாதுகாப்பு விதிமுறைகளில் ஒன்று. பாதுகாப்புக் கண்ணாடி, ஹெல்மெட், பொருத்தமான ஷூ ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தினால் கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் ஏற்படுகிற பல விபத்துகளைத் தவிர்க்கலாம். ஆனால், அப்படிப்பட்ட பொருள்களை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும், அவற்றை உபயோகிக்கவும் வேண்டும். அப்போதுதான் அவை உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கும்.
சில கருவிகள் பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தெரியலாம்; ஆனால், அவற்றைப் பாதுகாப்பாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதற்குப் பயிற்சி அவசியம். ஏதாவது ஒரு கருவியைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாவிட்டால், பொறுப்பிலுள்ள சகோதரரிடம் தெரிவியுங்கள். உங்களுக்குப் பயிற்சி அளிக்க அவர் ஏற்பாடு செய்வார். உங்களுடைய வரம்புகளை அறிந்து செயல்படுவது நல்லது. இல்லாவிட்டால், கட்டுமானப் பணி நடக்கும் இடத்தில் உங்களையும் மற்றவர்களையும் காயப்படுத்திவிடுவீர்கள்.—நீதி. 11:2.
கட்டுமானப் பணி நடக்கிற இடங்களில் பெரும்பாலும் காயம் ஏற்படுவதற்குக் காரணம், தவறிக் கீழே விழுந்துவிடுவதுதான். ஏணியிலோ சாரப் பலகையிலோ ஏறுவதற்கு முன்பு அது நல்ல நிலையில் இருக்கிறதா, பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். சாரப் பலகையிலோ கூரையிலோ நின்று வேலை செய்ய வேண்டியிருந்தால், பாதுகாப்பு பெல்ட்டுகளை அணிந்துகொள்ள வேண்டும், தடுப்புச் சுவர்களை அமைத்திருக்க வேண்டும்; இவை பாதுகாப்பு விதிமுறைகளில் அடங்கும். உயரமான இடங்களில் வேலை செய்வது சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், பொறுப்பிலுள்ள சகோதரரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.a
யெகோவாவின் மக்களுடைய எண்ணிக்கை உலகெங்கும் அதிகரித்துக்கொண்டே வருவதால், உண்மை வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படுகிற ராஜ்ய மன்றங்களையும் பிற கட்டிடங்களையும் அதிகளவில் கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ராஜ்ய மன்றக் கட்டுமான வேலைகளையும் அதுபோன்ற மற்ற வேலைகளையும் மேற்பார்வை செய்கிற சகோதரர்களுக்கு யெகோவாவின் அருமையான ஆடுகளை, தங்களுக்குக் கீழே வேலை செய்கிறவர்களை, பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. (ஏசா. 32:1, 2) கட்டுமானப் பணிகளில் ஈடுபடுகிற சகோதர சகோதரிகளை வழிநடத்துகிற பாக்கியம் உங்களுக்கு இருந்தால் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்துவிடாதீர்கள். கட்டுமானப் பணி நடக்கிற இடங்கள் சுத்தமாக இருக்கும்படியும், பொருள்கள் அங்குமிங்கும் இறைந்து கிடக்காதபடியும் பார்த்துக்கொள்ளுங்கள். ஜாக்கிரதையாக வேலை செய்வது எப்படி என்பதைச் சிலருக்கு அடிக்கடி நினைப்பூட்ட வேண்டியிருந்தால், அவர்களிடம் கரிசனையோடு ஆனால் உறுதியோடு சொல்லுங்கள். இளம் பணியாளர்களையோ அனுபவமில்லாத பணியாளர்களையோ ஆபத்தான பகுதிகளில் வேலை செய்ய அனுமதிக்காதீர்கள். பணியாளர்களுக்கு என்னென்ன ஆபத்து நேரிடலாம் என்பதைத் தெரிந்து வைத்திருங்கள். ஜாக்கிரதையாக வேலை செய்ய அவர்களுக்குப் பயிற்சி அளியுங்கள். யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படாமல் கட்டிட வேலையை முடிக்க வேண்டும் என்பதே நம் குறிக்கோள் என்பதை நினைவில் வையுங்கள்.
அன்பின் பங்கு
ராஜ்ய மன்றங்களையும் பிற கட்டிடங்களையும் கட்டுகிற வேலையில் ஈடுபடும்போது ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுகிறவர்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பைபிள் நியமங்களுக்கு மதிப்புக் கொடுப்பதன் மூலமும், பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், சமயோசிதமாகச் செயல்படுவதன் மூலமும் உங்களையும் சக பணியாளர்களையும் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
பாதுகாப்புக்கு நாம் இந்தளவு முக்கியத்துவம் கொடுப்பதற்கு முக்கியக் காரணம் என்ன? அன்புதான். ஆம், நமக்கு யெகோவாமீது அன்பு இருப்பதால், அவரைப் போலவே உயிரை அருமையானதாகக் கருதுகிறோம். அதோடு, மக்கள்மீது அன்பு இருப்பதால் அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடாதபடி கவனமாக இருக்கிறோம். (மத். 22:37-39) எனவே, கட்டுமான வேலைகளில் ஈடுபடும்போது பாதுகாப்பாக இருக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோமாக! யெகோவாவின் விருப்பமும் அதுவே!!
[அடிக்குறிப்பு]
a பக்கம் 30-ல் உள்ள “ஏணியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?” என்ற பெட்டியைக் காண்க.
[பக்கம் 30-ன் பெட்டி/படம்]
ஏணியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?
சமீபத்திய ஆண்டின்போது, அமெரிக்காவில் 1,60,000-க்கும் அதிகமான பணியாளர்கள் ஏணியிலிருந்து தவறிக் கீழே விழுந்து காயமடைந்தார்கள். அதோடு, 150 பேர் உயிரிழந்தார்கள். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி எங்கு வேலை செய்தாலும் சரி, ஏணியிலிருந்து தவறி விழுவதைத் தவிர்க்க உதவும் சில ஆலோசனைகள் இதோ:
◇ உடைந்துபோன ஏணியையோ, லொடலொடவென்று ஆடுகிற ஏணியையோ உபயோகிக்காதீர்கள்; அதைப் பழுதுபார்த்துப் பயன்படுத்தவும் முயலாதீர்கள். அதைக் கழித்துக்கட்டுங்கள்.
◇ ஒவ்வொரு ஏணியும் குறிப்பிட்ட அளவு எடையைத்தான் தாக்குப்பிடிக்கும். உங்கள் எடையும், உங்கள் கருவிகள், கட்டுமானப் பொருள்கள் ஆகியவற்றின் எடையும் சேர்ந்து அந்த அளவைத் தாண்டிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
◇ ஏணியைச் சமதளத்தில் நிறுத்தி வையுங்கள். சாரப் பலகைகள், வாளிகள், பெட்டிகள் போன்றவற்றின் மீது நிறுத்தி வைக்காதீர்கள்.
◇ ஏணியைப் பார்த்தவாறே ஏறுங்கள், அவ்வாறே இறங்குங்கள்.
◇ ஏணியின் உச்சியிலுள்ள இரண்டு படிகளில் நிற்காதீர்கள், உட்காராதீர்கள்.
◇ உயரத்தைக் கூட்ட முடிந்த ஏணியை (எக்ஸ்டென்ஷன் லேடர்) பயன்படுத்த வேண்டியிருந்தால், நீங்கள் வேலை செய்ய நிற்கும் இடத்திலிருந்து அல்லது ஏணியைச் சாய்த்து வைத்திருக்கும் சுவரிலிருந்து அதன் மேற்பகுதி மூன்று அடி உயரத்திற்காவது இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஏணி சறுக்கிவிடாதபடி அதன் கால்களைத் துணிவைத்துக் கட்டுங்கள், அல்லது கட்டையை வைத்து ஆணி அடியுங்கள். இப்படி எதுவும் செய்ய முடியாவிட்டால், ஒருவரைப் பக்கத்தில் நிறுத்தி ஏணியைப் பிடித்துக்கொள்ளச் சொல்லுங்கள். அது பக்கவாட்டில் சரிந்துவிடாதபடி அதன் மேல்பகுதியை இறுக்கமாகக் கட்டிவிடுங்கள்.
◇ ஏணிப்படிகளில் பலகைகளை வைத்து அதன்மீது நின்று வேலை செய்யாதீர்கள்.
◇ ஏணியில் நின்று வேலை செய்யும்போது கையையோ காலையோ ரொம்பவே நீட்டினீர்கள் என்றால், ஏணி சரிந்துவிடக்கூடும். எனவே, ஏணியில் நிற்கும்போது எக்கி எக்கி வேலை செய்யாதீர்கள். தேவைக்குத் தகுந்தாற்போல் ஏணியை நகர்த்தி வைத்துக்கொள்ளுங்கள்.
◇ மூடியிருக்கும் கதவுக்குப் பின்னால் ஏணியில் நின்று வேலை செய்ய நேர்ந்தால், வெளியே ஓர் அறிவிப்புப் பலகையை வைத்துவிடுங்கள் அல்லது கதவை உட்புறமாகப் பூட்டிக்கொள்ளுங்கள். கதவைப் பூட்ட முடியாத பட்சத்தில், யாரையாவது வெளியே நிறுத்தி வையுங்கள்.
◇ இரண்டு பேர் நின்று வேலை செய்கிற விதத்தில் ஓர் ஏணி அமைக்கப்பட்டிருந்தால் அதில் இரண்டு பேர் வேலை செய்யலாம். இல்லையென்றால், ஒருவர் மட்டுமே நின்று வேலை செய்ய வேண்டும்.b
[அடிக்குறிப்பு]
b ஏணியில் வேலை செய்வது சம்பந்தமான கூடுதல் தகவல்கள் அடங்கிய ஒரு செக்-லிஸ்ட்டை ஆகஸ்ட் 8, 1999 தேதியிட்ட விழித்தெழு!-வில் பக்கம் 22-ஐக் காண்க.
[பக்கம் 29-ன் படம்]
மொட்டைமாடியில் கைப்பிடிச் சுவரைக் கட்ட வேண்டுமென்று திருச்சட்டம் கட்டளையிட்டது