கிறிஸ்துவை முழுமையாய்ப் பின்பற்றுகிறீர்களா?
‘எங்களிடமிருந்து கற்றுக்கொண்டபடியே நடந்து வருகிறீர்கள்; அதை இன்னும் முழுமையாய்ச் செய்யுங்கள்.’—1 தெ. 4:1.
1, 2. (அ) இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் என்ன மகத்தான காரியங்களைக் கண்டார்கள்? (ஆ) நாம் வாழ்ந்துவருகிற இந்தக் காலமும்கூட ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
‘இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்!’ என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? ‘எனக்கு ஏதாவது நோய்நொடி வந்திருந்தால் இயேசு ஒரு நிமிடத்தில் குணமாக்கியிருப்பார்’ என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். ‘இயேசுவை நேரில் பார்த்திருப்பேன், அவர் பேசுவதைக் கேட்டிருப்பேன், அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றிருப்பேன், அவர் செய்கிற அற்புதங்களைக் கண்ணாரப் பார்த்திருப்பேன்’ என்றெல்லாம்கூட நீங்கள் நினைக்கலாம். (மாற். 4:1, 2; லூக். 5:3-9; 9:11) வலிமைமிக்க செயல்களை இயேசு செய்கையில் அவர்கூடவே இருந்து அவற்றைப் பார்ப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! (லூக். 19:37) அக்காலத்திற்குப் பிறகு யாருக்குமே அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை; அவர் ‘தம்மையே பலி கொடுத்ததன்’ மூலம் பூமியில் செய்துமுடித்த காரியங்களை மீண்டும் செய்யப்போவதும் இல்லை.—எபி. 9:26; யோவா. 14:19.
2 நாம் வாழ்ந்துவருகிற இந்தக் காலமும்கூட முக்கியத்துவம் வாய்ந்ததுதான்! ஏன்? இந்தக் காலத்தை, ‘முடிவு காலம்’ என்றும், ‘கடைசி நாட்கள்’ என்றும் பைபிள் முன்னுரைக்கிறது. (தானி. 12:1-4, 9; 2 தீ. 3:1) இந்தக் கடைசிக் காலத்தில்தான் சாத்தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டான். சீக்கிரத்தில் அவன் கட்டப்பட்டு, ‘அதலபாதாளத்திற்குள் தள்ளியடைக்கப்படுவான்.’ (வெளி. 12:7-9, 12; 20:1-3) இந்தக் காலத்தில்தான் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை,’ அதாவது பூஞ்சோலை பூமிக்கான நம்பிக்கையை, உலகெங்கும் அறிவிக்கிற மாபெரும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம்; இது மீண்டும் செய்யப்படாத ஒரு வேலையாகும்.—மத். 24:14.
3. பரலோகத்திற்குச் செல்வதற்குச் சற்று முன்பு, இயேசு தம் சீடர்களிடம் என்ன வேலை கொடுத்தார், அது எப்படிப்பட்ட வேலை?
3 இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்குச் சற்று முன்பு, “நீங்கள் . . . எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைமுனைவரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று தம் சீடர்களிடம் கூறினார். (அப். 1:8) அப்படியானால், சாட்சி கொடுக்கிற இந்த வேலை ஓர் உலகளாவிய வேலை! கல்விபுகட்டும் வேலை! இந்த வேலையின் நோக்கம் என்ன? முடிவு வருவதற்குமுன் இன்னும் அநேகரைக் கிறிஸ்துவின் சீடர்களாக்குவதே. (மத். 28:19, 20) கிறிஸ்து கொடுத்திருக்கும் இந்த வேலையில் வெற்றிகாண நாம் என்ன செய்ய வேண்டும்?
4. (அ) 2 பேதுரு 3:11, 12-ல் உள்ள பேதுருவின் வார்த்தைகள் எதை வலியுறுத்துகின்றன? (ஆ) எதைக் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்?
4 அப்போஸ்தலன் பேதுரு உணர்ச்சி ததும்ப இவ்வாறு சொன்னார்: ‘நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் தேவபக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்! அதே சமயத்தில், யெகோவாவின் நாளை எப்போதும் மனதில் வைத்து அதற்காக ஆவலோடு காத்திருக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்’! (2 பே. 3:11, 12) தேவபக்திக்குரிய செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா என இந்தக் கடைசி நாட்களில் நாம் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையே பேதுருவின் வார்த்தைகள் வலியுறுத்துகின்றன. தேவபக்திக்குரிய செயல்களில் நற்செய்தியை அறிவிப்பதும் அடங்கும். உலகெங்குமுள்ள நம் சகோதர சகோதரிகள் கிறிஸ்து கொடுத்த வேலையைப் பக்திவைராக்கியத்துடன் செய்துவருவதைப் பார்க்கும்போது நம் உள்ளத்தில் சந்தோஷம் பொங்குகிறதல்லவா? ஆனால், சாத்தானுடைய உலகத்தினாலும் நம்முடைய பாவ இச்சைகளினாலும் அன்றாடம் வருகிற பிரச்சினைகள் நம் பக்திவைராக்கியத்தைத் தணித்துவிடாதபடி நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆகவே, தொடர்ந்து கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமெனச் சிந்திப்போம்.
கடவுள் தருகிற பொறுப்புகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ளுங்கள்
5, 6. (அ) எருசலேமிலிருந்த சக விசுவாசிகளுக்கு பவுல் எதற்காகப் பாராட்டுத் தெரிவித்தார், எதைக் குறித்து எச்சரிப்பும் விடுத்தார்? (ஆ) கடவுள் தருகிற பொறுப்புகளை நாம் ஏன் அற்பமாக நினைத்துவிடக் கூடாது?
5 எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் துன்புறுத்தல் மத்தியிலும் உண்மையோடு சகித்திருந்தார்கள்; அதனால், அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் பாராட்டுத் தெரிவித்திருந்தார். “முந்தின நாட்களை எப்போதும் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் சத்தியத்தை அறிந்துகொண்ட பின்பு துன்பங்களோடு கடுமையாகப் போராடினீர்கள்” என்று அவர் எழுதினார். ஆம், அவர்களுடைய உண்மைத்தன்மையை யெகோவா மறந்துவிடவில்லை. (எபி. 6:10; 10:32-34) பவுலின் கனிவான பாராட்டைப் பெற்ற அந்த எபிரெய கிறிஸ்தவர்கள் நிச்சயம் புதுத்தெம்பைப் பெற்றிருப்பார்கள். என்றாலும், அதே கடிதத்தில் மனித பலவீனம் ஒன்றை அவர் குறிப்பிட்டுவிட்டு, அதற்கு இடங்கொடுத்துவிட்டால் ஒருவருடைய பக்திவைராக்கியம் தணிந்துவிடும் என்று எச்சரிப்பும் விடுத்தார். ஆம், கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் ஏதாவது ‘சாக்குப்போக்கு’ சொல்கிற பலவீனத்திற்கு இடங்கொடுக்காதபடி அந்தக் கிறிஸ்தவர்கள் கவனமாய் இருக்க வேண்டுமென்று எச்சரிப்பும் விடுத்தார்.—எபி. 12:25, அடிக்குறிப்பு.
6 இந்த எச்சரிப்பு கிறிஸ்தவர்களாகிய நமக்கும் பொருந்துகிறது. கடவுள் தருகிற பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் ஏதாவது ‘சாக்குப்போக்கு’ சொல்கிற மனப்பான்மை நமக்கு வந்துவிடாதபடி நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவ சபையில் நமக்கு அளிக்கப்படுகிற பொறுப்புகளை அற்பமாக நினைத்துவிடாதிருக்கவும், கடவுளுடைய சேவையில் நமது பக்திவைராக்கியம் தணிந்துவிடாதிருக்கவும் நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும். (எபி. 10:39) சொல்லப்போனால், பரிசுத்த சேவையில் ஈடுபடுவது வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கிற விஷயமாகும்.—1 தீ. 4:16.
7, 8. (அ) கடவுளுடைய சேவையில் நம் பக்திவைராக்கியம் தணியாமலிருக்க எது நமக்கு உதவும்? (ஆ) நம் பக்திவைராக்கியம் தணிந்திருப்பதாகத் தெரிந்தால் நாம் எதை நினைவில் வைக்க வேண்டும்?
7 கடவுள் தந்துள்ள பொறுப்புகளைச் சரிவர செய்யாமல் சாக்குப்போக்கு சொல்வதிலிருந்து எது நம்மைப் பாதுகாக்கும்? நம்மை யெகோவாவுக்கு அர்ப்பணித்தபோது நாம் எடுத்த உறுதிமொழியின் அர்த்தத்தைக் குறித்துத் தவறாமல் தியானிப்பது, இந்தப் பலவீனத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும். யெகோவாவின் சித்தத்திற்கே நம் வாழ்வில் முதலிடம் கொடுப்போமென அவருக்கு நாம் வாக்குக் கொடுத்தோம்; அந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். (மத்தேயு 16:24-ஐ வாசியுங்கள்.) ஆகையால், நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘ஞானஸ்நானம் பெற்ற சமயத்தில் என் அர்ப்பணிப்புக்கு இசைவாக வாழ வேண்டுமென்று எந்தளவு தீர்மானமாக இருந்தேனோ அந்தளவு தீர்மானமாக இன்றும் இருக்கிறேனா? அல்லது, கடவுளுடைய சேவையில் எனக்கு இருந்த பக்திவைராக்கியம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்து வருகிறதா?’
8 நேர்மையாகச் சுய பரிசோதனை செய்யும்போது, யெகோவாவின் சேவையில் நம் பக்திவைராக்கியம் சற்றுத் தணிந்துபோயிருப்பதாகத் தெரிந்தால், செப்பனியா தீர்க்கதரிசியின் புத்துணர்ச்சியூட்டும் வார்த்தைகளை மீண்டும் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ‘உன் கைகளைத் தளரவிடாதே . . . உன் தேவனாகிய யெகோவா உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்திருப்பார்’ என்று அவர் எழுதினார். (செப். 3:16, 17) நம்பிக்கையூட்டும் இந்த வார்த்தைகள், அன்று பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிய இஸ்ரவேலருக்குப் பொருந்தின; இன்று வாழ்கிற நமக்கும் பொருந்துகின்றன. நாம் செய்வது யெகோவாவின் வேலை என்பதால், அது சம்பந்தப்பட்ட பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற யெகோவாவும் அவருடைய மகனும் நமக்குப் பக்கபலமாக இருந்து உதவுவார்கள்; இதை நாம் மனதில் வைக்க வேண்டும். (மத். 28:20; பிலி. 4:13) கடவுளுடைய வேலையில் பக்திவைராக்கியம் தணியாமலிருக்க நாம் கடினமாக முயன்றால் அவர் நம்மை ஆசீர்வதிப்பார், ஆன்மீக ரீதியில் மேன்மேலும் செழித்தோங்கச் செய்வார்.
‘முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை நாடுங்கள்’—பக்திவைராக்கியத்தோடு!
9, 10. பெரிய விருந்து பற்றி இயேசு கூறிய உவமையின் குறிப்பு என்ன, அதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
9 பரிசேயர்களின் தலைவனுடைய வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துக்கு இயேசு சென்றிருந்தபோது, ஒரு பெரிய விருந்தைப் பற்றி ஓர் உவமையைச் சொன்னார். வெவ்வேறு நபர்களுக்குப் பரலோக அரசாங்கத்தில் ஆட்சி செய்கிற வாய்ப்பு அளிக்கப்பட்டதாக அந்த உவமையில் விளக்கினார். “சாக்குப்போக்கு” சொல்வது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதையும் அந்த உவமையில் தெரிவித்தார். (லூக்கா 14:16-21-ஐ வாசியுங்கள்.) விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் தாங்கள் வர முடியாததற்குச் சாக்குப்போக்கு சொன்னார்கள். தான் புதிதாக வாங்கியிருந்த வயலைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று ஒருவன் சொன்னான். தான் வாங்கிய ஏர்மாடுகளைச் சோதித்துப் பார்க்க வேண்டுமென்று இன்னொருவன் சொன்னான். “எனக்கு இப்போதுதான் திருமணம் ஆகியிருக்கிறது; அதனால் நான் வர முடியாது” என்று வேறொருவன் சொன்னான். இவையெல்லாம் நொண்டிச்சாக்குகளாய் இருந்தன. வயலையோ ஏர்மாடுகளையோ வாங்குகிறவர்கள், அவற்றை முன்கூட்டியே பார்த்த பின்புதான் வாங்குவார்கள். அவற்றை வாங்கினபின்பு அவசர அவசரமாகப் போய்ப் பார்க்க வேண்டிய அவசியமோ, சோதிக்க வேண்டிய அவசியமோ இல்லை. புதிதாகத் திருமணமாகியிருப்பதைக் காரணங்காட்டி, ஒரு முக்கியமான அழைப்பை ஒருவர் ஏன் உதறித்தள்ள வேண்டும்? அதனால்தான், விருந்துக்கு ஏற்பாடு செய்தவர் கடுங்கோபமடைந்தார்.
10 இயேசு சொன்ன இந்த உவமையிலிருந்து நாம் எல்லாருமே ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம். நிலம் வாங்குவது, ஆடுமாடுகளை வாங்குவது, திருமணம் செய்வது போன்ற காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, கடவுளுடைய சேவையை நாம் ஒருபோதும் பின்னுக்குத் தள்ளிவிடக் கூடாது. சொந்தக் காரியங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்தால், கடவுளுடைய சேவையில் நம்முடைய பக்திவைராக்கியம் படிப்படியாகக் குறைந்துவிடும். (லூக்கா 8:14-ஐ வாசியுங்கள்.) அப்படிக் குறைந்துவிடாதிருக்க, “முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருங்கள்” என்ற இயேசுவின் அறிவுரைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். (மத். 6:33) கடவுளுடைய ஊழியர்களாய் இருக்கிற இளையோரும் பெரியோரும் அந்த முக்கியமான அறிவுரையைக் கடைப்பிடித்து வருவதைக் காண்பது எவ்வளவாய் மகிழ்ச்சி அளிக்கிறது! சொல்லப்போனால், ஊழியத்தில் அதிக நேரத்தைச் செலவிடுவதற்காக அநேகர் தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கியிருக்கிறார்கள். பக்திவைராக்கியத்துடன் முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை நாடினால் உண்மையான சந்தோஷமும் ஆத்ம திருப்தியும் கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாகக் கண்டிருக்கிறார்கள்.
11. யெகோவாவின் சேவையை முழு இருதயத்தோடும் பக்திவைராக்கியத்தோடும் செய்ய வேண்டும் என்பதை பைபிளிலுள்ள எந்தச் சம்பவம் காட்டுகிறது?
11 கடவுளுடைய சேவையில் பக்திவைராக்கியமாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இஸ்ரவேல் ராஜாவான யோவாஸின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சீரியர்களின் கைகளில் இஸ்ரவேலர் சிக்கிக்கொள்வார்களோ என்ற கவலையில் யோவாஸ் அழுதுகொண்டே எலிசா தீர்க்கதரிசியிடம் சென்றார். அப்போது, சீரியா தேசம் இருந்த திசை பார்த்து ஜன்னல் வழியாக ஓர் அம்பை எய்யும்படி யோவாஸிடம் அந்தத் தீர்க்கதரிசி சொன்னார்; அந்த நாட்டின்மீது வெற்றி பெற யெகோவா உதவுவார் என்பதற்கு அது அடையாளமாக இருந்தது. இது, அந்த ராஜாவுக்கு நிச்சயமாகவே உத்வேகத்தை அளித்திருக்க வேண்டும். பின்பு, அம்புகளை எடுத்துத் தரையில் அடிக்கும்படி யோவாஸிடம் எலிசா கூறினார். ஐந்து அல்லது ஆறு முறை அடிப்பதற்குப் பதிலாக யோவாஸ் மூன்றே மூன்று முறை அடித்துவிட்டு நிறுத்திக்கொண்டார். இதைப் பார்த்த எலிசாவுக்குக் கடுங்கோபம் வந்தது. யோவாஸ் தொடர்ந்து அடித்திருந்தால் ‘சீரியரைத் தீர முறியடிப்பார்’ என்பதற்கு அது அடையாளமாக இருந்திருக்கும். ஆனால், யோவாஸ் மூன்று முறை மட்டுமே அடித்ததால் அவர் மூன்று முறை மட்டுமே வெற்றி பெறுவார் என்பதற்கு அது அடையாளமாக இருந்தது. அவர் பக்திவைராக்கியத்தில் குறைவுபட்டதால் முழுமையாக வெற்றி பெற மாட்டார் என்பதை அந்தச் சம்பவம் குறித்துக் காட்டியது. (2 இரா. 13:14-19) இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? யெகோவா நமக்கு அளித்திருக்கும் வேலையை முழு இருதயத்தோடும் பக்திவைராக்கியத்தோடும் செய்தால் மட்டுமே அவர் நம்மை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார்.
12. (அ) வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைகளின் மத்தியிலும் கடவுளுடைய சேவையில் நம் பக்திவைராக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள எது உதவும்? (ஆ) ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடுவதால் நீங்கள் பெற்றுவரும் பலன்களைக் குறிப்பிடுங்கள்.
12 வாழ்க்கையில் நாம் எதிர்ப்படும் பிரச்சினைகள், நம்முடைய பக்திவைராக்கியத்திற்குச் சோதனையாக அமையலாம். நம் சகோதர சகோதரிகளில் பலர் பணக்கஷ்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். வேறுசிலர் தீராத நோய் காரணமாக யெகோவாவின் சேவையில் முன்புபோல் ஈடுபட முடியாததை நினைத்து வேதனைப்படுகிறார்கள். என்றாலும், பக்திவைராக்கியத்தைத் தக்கவைத்துக்கொண்டு, கிறிஸ்துவை இன்னும் முழுமையாய்ப் பின்பற்ற நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். “தொடர்ந்து கிறிஸ்துவைப் பின்பற்ற. . . ” என்ற பெட்டியிலுள்ள சில ஆலோசனைகளையும் வசனங்களையும் தயவுசெய்து சிந்தியுங்கள். அதோடு, முடிந்தளவு முழுமையாக அவற்றை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்பதையும் சிந்தியுங்கள். அப்படிச் செய்தால், உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஊழியத்தில் மும்முரமாக ஈடுபடுவது வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்தும், வாழ்க்கையை வளமாக்கும், பெருமளவு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். (1 கொ. 15:58) அதோடு, ‘யெகோவாவின் நாளை எப்போதும் மனதில் வைக்க’ உதவும்.—2 பே. 3:12.
எதார்த்தமாக எடைபோட்டுப் பாருங்கள்
13. நாம் முழு மூச்சோடு சேவை செய்கிறோமென்று எதை வைத்துச் சொல்லலாம்?
13 ஊழியத்தில் நாம் அதிக நேரத்தைச் செலவிடுவதை வைத்து, முழு மூச்சோடு சேவை செய்கிறோமெனச் சொல்லிவிட முடியாது. சூழ்நிலைகள் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன. உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர், மாதத்திற்கு ஓரிரு மணிநேரம் ஊழியம் செய்தால்கூட யெகோவாவுக்குப் பிரியமானவராக இருக்க முடியும். (மாற்கு 12:41-44-ஐ ஒப்பிடுங்கள்.) ஆகவே, நாம் முழு மூச்சோடு கடவுளுக்குச் சேவை செய்கிறோமா என்பதைத் தீர்மானிக்க, நம்முடைய திறமைகளையும் சூழ்நிலைகளையும் எதார்த்தமாக எடைபோட்டுப் பார்க்க வேண்டும். கிறிஸ்துவின் சீடர்களான நாம், அவருடைய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். (ரோமர் 15:5-ஐ வாசியுங்கள்; 1 கொ. 2:16) இயேசு தம் வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுத்தார்? “நான் . . . கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று கப்பர்நகூமைச் சேர்ந்த மக்களிடம் அவர் கூறினார். (லூக். 4:43; யோவா. 18:37) ஊழியத்தில் இயேசு காட்டிய பக்திவைராக்கியத்தை மனதில் வைத்து, நீங்கள் இன்னும் அதிகளவு ஊழியம் செய்ய முடியுமா என உங்கள் சூழ்நிலையை எடைபோட்டுப் பாருங்கள்.—1 கொ. 11:1.
14. எவ்வழிகளில் நம் ஊழியத்தை இன்னும் அதிகமாகச் செய்யலாம்?
14 நம் சூழ்நிலைகளைக் கவனமாகச் சீர்தூக்கிப் பார்த்தோமென்றால், இன்னும் அதிக நேரம் நம்மால் ஊழியம் செய்ய முடியும் என்பது ஒருவேளை நமக்கே தெரியவரும். (மத். 9:37, 38) உதாரணமாக, நம் மத்தியிலுள்ள ஆயிரக்கணக்கான இளம் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு ஊழியத்தில் அதிகமாய் ஈடுபட்டு பக்திவைராக்கியமிக்க பயனியர்களாய் ஆகியிருக்கிறார்கள்; அதனால் வரும் சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள். அதே சந்தோஷத்தை நீங்களும் அனுபவிக்க விரும்புகிறீர்களா? சகோதர சகோதரிகள் சிலர் தங்களுடைய சூழ்நிலைகளைச் சீர்தூக்கிப் பார்த்து, தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்யத் தீர்மானித்திருக்கிறார்கள்; அதனால் தங்கள் நாட்டிலேயே வேறொரு பகுதிக்கு மாறிச் சென்றிருக்கிறார்கள், வெளிநாடுகளுக்கும்கூடச் சென்றிருக்கிறார்கள். இன்னும் சிலர் அயல்மொழி பேசும் மக்களுக்கு உதவுவதற்காக அந்த மக்களின் மொழியைக் கற்றிருக்கிறார்கள். ஊழியத்தை அதிகமாய்ச் செய்வது அத்தனை சுலபமல்ல என்பது உண்மைதான்; ஆனாலும், அளவில்லா ஆசீர்வாதங்கள் கிடைப்பது உறுதி! அதோடு, இன்னும் அநேகர் “சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய” நம்மால் உதவ முடியும்.—1 தீ. 2:3, 4; 2 கொ. 9:6.
பைபிளிலுள்ள முன்னுதாரணங்கள்
15, 16. கிறிஸ்துவின் பக்திவைராக்கியமிக்க சீடர்களாக இருப்பதற்கு யாருடைய உதாரணங்களை நாம் பின்பற்றலாம்?
15 தம்மைப் பின்பற்றி வரும்படி இயேசு சிலரை அழைத்தபோது அவர்கள் என்ன செய்தார்கள்? வரிவசூலிப்பவரான மத்தேயு “எழுந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிப் போனார்” என பைபிள் சொல்கிறது. (லூக். 5:27, 28) மீன்பிடித்துக்கொண்டிருந்த பேதுருவும் அந்திரேயாவும் “உடனடியாக வலைகளை விட்டுவிட்டு, அவருக்குப் பின்னால் போனார்கள்” என்றும் நாம் வாசிக்கிறோம். அடுத்ததாக, தங்கள் தகப்பனுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்த யாக்கோபையும் யோவானையும் இயேசு அழைத்தபோது அவர்கள் என்ன செய்தார்கள்? “உடனடியாகப் படகையும் தங்களுடைய தகப்பனையும் விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்.”—மத். 4:18-22.
16 அருமையான இன்னொரு முன்னுதாரணம், அப்போஸ்தலன் பவுல் (முன்பு சவுல்). கிறிஸ்துவின் சீடர்களை அவர் வெறித்தனமாகத் துன்புறுத்திவந்தபோதிலும், ஒரு கட்டத்தில் அடியோடு மாறினார்; கிறிஸ்துவின் பெயரை அறிவிப்பதற்கு ‘ஒரு கருவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.’ “இயேசுதான் கடவுளுடைய மகன் என்று ஜெபக்கூடங்களில் உடனடியாகப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.” (அப். 9:3-22) பல்வேறு கஷ்டநஷ்டங்களையும் துன்பதுயரங்களையும் எதிர்ப்பட்டபோதிலும், பவுலின் பக்திவைராக்கியம் தணியவே இல்லை.—2 கொ. 11:23-29; 12:15.
17. (அ) கிறிஸ்துவைப் பின்பற்றுவது சம்பந்தமாக உங்கள் விருப்பம் என்ன? (ஆ) யெகோவாவின் சித்தத்தை முழு இருதயத்தோடும் முழு பலத்தோடும் செய்வதால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் என்ன?
17 அந்தச் சீடர்களைப் போலவே, நாமும் கிறிஸ்துவின் சீடர்களாய் ஆவதற்கான அழைப்பை எந்த நிபந்தனையுமின்றி ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். (எபி. 6:11, 12) பக்திவைராக்கியமாகவும் முழுமையாகவும் கிறிஸ்துவைப் பின்பற்ற நாம் கடினமாய் முயலும்போது என்னென்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்போம்? கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறோம் என்பதில் உண்மையான சந்தோஷத்தைக் காண்போம். ஊழியப் பொறுப்புகளையும் சபைப் பொறுப்புகளையும் கூடுதலாகப் பெறுகையில் ஆத்ம திருப்தியைக் காண்போம். (சங். 40:8; 1 தெசலோனிக்கேயர் 4:1-ஐ வாசியுங்கள்.) ஆம், கிறிஸ்துவைப் பின்பற்ற நாம் தீவிரமாக முயலும்போது மன நிம்மதி, மன திருப்தி, கடவுளுடைய அங்கீகாரம், முடிவில்லா வாழ்வுக்கான நம்பிக்கை போன்ற அளவில்லா ஆசீர்வாதங்களை என்றென்றும் அனுபவிப்போம்.—1 தீ. 4:10.
நினைவிருக்கிறதா?
• நமக்கு என்ன முக்கியமான வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது, அதை நாம் எப்படிக் கருத வேண்டும்?
• எந்தப் பலவீனத்திற்கு நாம் இடமளிக்கக் கூடாது, ஏன்?
• நாம் எவற்றை எதார்த்தமாக எடைபோட்டுப் பார்க்க வேண்டும்?
• தொடர்ந்து கிறிஸ்துவைப் பின்பற்ற எது நமக்கு உதவும்?
[பக்கம் 27-ன் பெட்டி/படம்]
தொடர்ந்து கிறிஸ்துவைப் பின்பற்ற. . .
▪ கடவுளுடைய வார்த்தையைத் தினமும் வாசியுங்கள், வாசித்தவற்றைத் தியானியுங்கள்.—சங். 1:1-3; 1 தீ. 4:15.
▪ கடவுளுடைய சக்தியின் உதவிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் அடிக்கடி ஜெபம் செய்யுங்கள்.—சக. 4:6; லூக். 11:9, 13.
▪ ஊழியத்தில் உண்மையான பக்திவைராக்கியம் காட்டுகிறவர்களோடு சகவாசம் வைத்துக்கொள்ளுங்கள்.—நீதி. 13:20; எபி. 10:24, 25.
▪ நாம் வாழ்கிற காலத்தின் அவசரத்தன்மையை உணர்ந்து செயல்படுங்கள்.—எபே. 5:15, 16.
▪ “சாக்குப்போக்கு” சொல்வதால் வரும் மோசமான பின்விளைவுகளை மனதில் வையுங்கள்.—லூக். 9:59-62.
▪ உங்களை அர்ப்பணித்தபோது கொடுத்த வாக்கை அடிக்கடி நினைத்துப் பாருங்கள்; யெகோவாவுக்குச் சேவை செய்வதாலும் கிறிஸ்துவை முழுமையாய்ப் பின்பற்றுவதாலும் கிடைக்கிற அளவில்லா ஆசீர்வாதங்களையும் நினைத்துப் பாருங்கள்.—சங். 116:12-14; 133:3; நீதி. 10:22.