இசையின் “மகிமை”
“இசை மட்டுமே சுண்டி இழுக்கக் கூடியது, அலைபாயும் மனதை ஆசுவாசப்படுத்தக் கூடியது, அலைக்கழிக்கும் மனதை ஆறுதல்படுத்தக் கூடியது.”
இப்படித்தான் வில்லியம் காங்கிரிவ் என்பவர் 300 வருடங்களுக்கு முன்பு ஒத்திசைக்கு பாடல் என்ற ஆங்கில நூலில் இசையின் மகிமையை ஆராதனை செய்து எழுதினார். நூற்றாண்டுகளுக்கு முன்னர் பூர்வ கிரேக்க நூல்கள் இவ்வாறு கூறின: “வேறு எதையும்விட இசையே அதிக வலிமைமிக்கது. ஏனெனில் சந்தமும் ஒத்திசையும் ஆத்துமாவையே ஊடுருவும் வலிமைமிக்கது.”
சதா ஹெவி மெட்டல் இசையிலேயே இளைஞர் லயித்திருந்தப் பிறகு, அவர்கள் சிடுசிடுப்பானவர்களாகவும் முரண்டுபிடிக்கிறவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள் என்பதற்கு அவர்களுடைய பெற்றோரே சாட்சி பகருகின்றனர். 1930-கள் மற்றும் 40-களில், அடால்ஃப் ஹிட்லருடைய வசீகரிக்கும் பேச்சை மக்கள் கேட்பதற்காக, உணர்வை தட்டியெழுப்பும் அணிவகுப்பு இசையை நாஸிக்கள் பயன்படுத்தினர். இதிலிருந்தே இசையின் வலிமையை தெரிந்துகொள்ளலாம்.
இசையால் மனதையும் இதயத்தையும் மயக்க முடியும், அதோடு நன்மையோ தீமையோ செய்ய தூண்டுவிக்கவும் முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. உதாரணமாக, சிலவகை இசையை சிறுபிள்ளைகள் கேட்டுக்கொண்டே இருந்தால், அது அவர்களுடைய அறிவுப் புலமையையும் உணர்ச்சிரீதியிலான வளர்ச்சியையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. பேசமுடியா திக்குவாயர்களும்கூட சிலசமயங்களில் பாடல்களின் சிலவரிகளை வாய்விட்டுப் பாட முடியுமே.
நகரமுடியாமல் தவிக்கும் நரம்பு கோளாறுகளையுடைய நோயாளிகள் மீதும் இசை ஏற்படுத்தும் தாக்கம் சிலசமயங்களில் மலைக்க வைக்கிறது என்று இசையும் மனமும் என்ற ஆங்கில நூலில் சொல்கிறார் அந்தோணி ஸ்டோர். ஒரு பெண்ணின் உதாரணத்தை ஸ்டோர் குறிப்பிடுகிறார்: “[பார்கின்ஸன் நோயால்] நகர முடியாமல் உறைந்துபோன நிலையில் இருந்தாள் அந்தப் பெண். தான் இளமையில் கேட்டிருந்த சில ராகங்களை ஞாபகப்படுத்திப் பார்க்கும் வரை அசைய முடியாமல் கிடந்தாள். அவை மீண்டும் நினைவுக்கு வந்தபோதோ அவளால் மறுபடியும் நகர முடிந்தது.”
கவனமாயிருப்பதற்கு காரணம்
ஆகவே, இசையின் வலிமையால் நன்மைகள் இருப்பதாக தெரிகிறது. ஆனால், இசையின் இந்த வலிமையை தீயவர்களோ அல்லது பேராசைமிக்க ஆட்களோ சாவுக்கேதுவான ஒரு கருவியாக பயன்படுத்தும் ஆபத்துகளும் இருக்கின்றன. சமூகவிரோத நடத்தைக்கும் சில வகை இசைக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாக சில ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
இதை ஆதரித்து சைக்காலஜி ஆஃப் விமன் குவாட்டர்லி இவ்வாறு அறிவிக்கிறது: “ராக் இசை வீடியோக்களைப் பார்ப்பது ஆபாச படங்களைப் பார்ப்பதைப் போலவே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதில் ஓரளவு உண்மை இருக்கிறது. வன்முறையற்ற ராக் இசை வீடியோக்களைப் பார்க்கும் ஆண்களைவிட, வன்முறைமிக்க ராக் இசை வீடியோக்களைப் பார்க்கும் ஆண்கள் கல்நெஞ்சமுள்ளவர்களாகவும் பெண்களிடம் முரட்டுத்தனமாக நடப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.”
இந்தப் பாதிப்பு ஆண்களுக்கு மட்டும்தான் என சொல்வதற்கில்லை. பெண்களும் இப்பாதிப்புகளுக்கு விதிவிலக்கல்ல. அதே அறிக்கை மேலும் சொல்கிறது: “லாயக்கற்றவர்கள் என பெண்களை இழிவுபடுத்தும் பாடல்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் பகைமையுணர்வு வளர வழிநடத்தலாம்.”
செக்ஸ் ரோல்ஸ் என்ற பத்திரிகை இதை ஒப்புக்கொண்டு பின்வருமாறு குறிப்பிட்டது: “பருவ வயது மங்கையர் திருப்தியற்ற குடும்ப சூழலிலிருந்து வருவதும் இசை வீடியோக்களை அதிகமாய் கேட்பதுமே நெறிகெட்ட மனநிலைக்கும் நடத்தைக்கும் காரணம் என சமீப ஆராய்ச்சி கண்டுபிடித்தது.” சில ராப் ஆல்பங்கள் “சமுதாய தராதரங்களுக்கு மிக மோசமானவை” என அமெரிக்காவிலுள்ள ஒரு மாவட்ட நீதிபதி தீர்ப்பு வழங்கும் அளவுக்கு சில ராப் இசையில் தத்ரூபமான வன்முறையும் அப்பட்டமான செக்ஸ் பாடல்களும் இருந்தன.
அந்த நீதிபதி மிகைப்படுத்திக் கூறினாரா? நிச்சயமாகவே இல்லை! அடோலஸன்ஸ் என்ற பத்திரிகை இந்த முடிவுக்கு வந்தது: “ஹெவி மெட்டல் இசையையும் ராப் இசையையும் கேட்கும் இளைஞர்களுடைய வாழ்க்கையில் அதிக கொந்தளிப்பு ஏற்படுவதாக இளைஞர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் அறிவிக்கின்றனர்.” இந்தக் கொந்தளிப்பு, “வெறித்தனமான மற்றும் அழிவுக்கேதுவான நடத்தைகளோடும்” பள்ளியில் நல்ல மதிப்பெண் வாங்காததற்கான காரணத்தோடும் தொடர்புடையது.
உண்மையில், குறிப்பிட்ட வகை இசைக்கும் செக்ஸ், தற்கொலை மற்றும் சமூகவிரோத நடத்தைக்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்பதற்கு அநேக அத்தாட்சிகள் உள்ளன. ஆனால் எல்லா வகை இசையுமே இப்படிப்பட்ட தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இதைப் பற்றி பின்வரும் கட்டுரை என்ன சொல்கிறது என்பதை வாசித்துப் பாருங்கள்!
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
நல்லதுக்கோ கெட்டதுக்கோ, மனதையும் இதயத்தையும் இசை பாதிக்கிறது