எமது வாசகரிடமிருந்து
மத சுதந்திரம் நான் பல ஆண்டுகளாக விழித்தெழு! பத்திரிகையை படித்து வருகிறேன். உங்கள் பத்திரிகையில் வந்த “உங்கள் மத சுதந்திரம்—அச்சுறுத்தப்படுகிறதா?” (ஜனவரி 8, 1999) என்ற கட்டுரைக்காக என்னுடைய போற்றுதலை உங்களுக்கு தெரிவிக்கிறேன். இருண்ட காலங்கள் என்றழைக்கப்பட்ட நாட்களில் ஐரோப்பாவில் மத சகிப்புத்தன்மை நசுக்கப்பட்டது என்று அறிந்திருக்கிறேன். அச்சமயம் கத்தோலிக்க சர்ச், அதிகாரத்தில் இருந்தவர்களை திசைதிருப்பி அதன் மூலம் ஜனங்கள் தங்களுடைய மனசாட்சியின்படி நடப்பதையும் மதத்தை தேர்ந்தெடுப்பதையும் தடை செய்தது. தற்சமயம் பிரான்சு நாட்டில் என்ன நடக்கிறது என்பதை படித்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். ‘உத்தரவாதமளிக்கப்பட்ட மத சுதந்திரத்தை பறிப்பதன் மூலம் இந்த நாடு ஏன் தன் பெயரைக் கெடுத்துக்கொள்கிறது?’ என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இதனால் என்ன விளைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை உங்களுடைய கோடிக்கணக்கான வாசகர்களுக்கு தெரிவியுங்கள். பிரான்சு மதசகிப்புத்தன்மையை செயலில் காட்டி மற்ற நாடுகளுக்கு ஒரு மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
சி. சி., போர்டோ ரிகோ
ஏழு பையன்களை வளர்த்தல் ஜனவரி 8, 1999 இதழில் பெர்ட் மற்றும் மார்கரெட்டின் அனுபவத்தை பிரசுரித்ததற்கு நன்றி. நாங்களும் எங்களுடைய மூன்று பிள்ளைகளை சரியான விதத்தில் வளர்த்து, அதன் மூலம் அவர்களும் ஆவிக்குரிய சொத்தை பெற்றுக்கொள்ள இந்தக் கட்டுரை உற்சாகப்படுத்தியது. எங்களுடைய பிள்ளைகளும் இந்தக் கட்டுரையை ரசித்துப் படித்தார்கள். டெக்கிற்கு கேக் கிடைக்காததால் அவன் கற்றுக்கொண்ட பாடத்தைப் பற்றி பிள்ளைகள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டதைக் கேட்டோம்! இப்படிப்பட்ட உற்சாகமளிக்கும் அனுபவத்தை பிரசுரித்ததற்காக நன்றி.
எஸ். ஜே., இந்தியா
பரிசுத்த ஆவி ஜனவரி 8, 1999-ல் வெளியான “பைபிளின் கருத்து: பரிசுத்த ஆவி என்றால் என்ன?” என்ற கட்டுரைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். நான் ஒரு யெகோவாவின் சாட்சியாகி சில ஆண்டுகள் சென்றுவிட்டன என்றாலும் எனக்கு யெகோவா தேவனைப் பற்றி இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எப்போதுமே உண்டு. இந்தக் கட்டுரை அந்தத் தலைப்பில் இருந்த கேள்விக்கு மிக அருமையான முறையில் பதிலளித்தது. யெகோவாவைப் பற்றியும் அவரது கிரியைகளைப் பற்றியும் எந்தளவிற்கு அதிகமாக தெரிந்துகொள்கிறேனோ அந்தளவிற்கு அவர் மீதிருக்கும் அன்பு எனக்குள் பெருகுகிறது.
ஒய். பி., ரஷ்யா
தங்கம் செப்டம்பர் 22, 1998 இதழில் பிரசுரிக்கப்பட்ட “தங்கம்—அதன் வசீகரம்” என்ற கட்டுரையை வாசித்தேன். இதில், 1945-ஆம் ஆண்டு ஜெர்மானிய அரசு சரணடைந்த பிறகு, அங்குள்ள கைஷரோடா உப்பு சுரங்கத்தில் மலைக்க வைக்கும் அளவான தங்கத்தை நேசநாடுகளின் துருப்புகள் கண்டுபிடித்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மை என்னவென்றால் நேசநாடுகள் அந்தச் சுரங்கத்தை யுத்தம் முடிவடைவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்பாகவே கைப்பற்றிவிட்டன.
ஜே. எஸ்., ஜெர்மனி
இந்த விளக்கத்திற்கு நன்றி. ஜெர்மானிய அரசு மே 8, 1945-ல் சரணடைந்தது; கைஷரோடா சுரங்கங்கள் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஏப்ரல் 4, 1945-ல் கைப்பற்றப்பட்டன.—ED.
தொலைதூர காதலை தொடர்வது ஜனவரி 22, 1999 இதழில் வெளியான “இளைஞர் கேட்கின்றனர் . . . தொலைதூர காதலை தொடர்வது எப்படி?” என்ற கட்டுரை என்னைப் பொருத்தவரை தாமதமாக பிரசுரிக்கப்பட்ட ஒன்று. நான் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் வாழ்கிறேன்; தென் அமெரிக்காவிலிருக்கும் ஓர் இளைஞனுடன் கடிதத்தொடர்பு கொண்டிருந்தேன். என் வாழ்க்கையில் அதைவிட கடினமான ஒரு அனுபவத்தை நான் எதிர்ப்பட்டதேயில்லை. நீங்கள் எவ்வளவுதான் உண்மையாக உங்களைப் பற்றிய விவரத்தையெல்லாம் கடிதத்தில் குறிப்பிட்டாலும் ஒரு நபரின் ஆள்தன்மையைப் பற்றி கடிதத்தொடர்பின் மூலமாக நிச்சயம் புரிந்துகொள்ள முடியாது. இருவருமே வெகுதொலைவில் இருப்பதால் ஒருவரைப் பற்றி மற்றவர் ஆஹா ஓஹோ என்று கற்பனைதான் செய்துகொள்ள முடியும். எங்களுடைய விஷயத்தில் எங்கள் இருவரின் நாகரிகமும் முற்றிலும் வித்தியாசமானது. எனவே எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த உறவு முடிவுக்கு வந்தபோது நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று நினைக்குமளவிற்கு மனம் உடைந்து போனேன். என் அன்பான குடும்ப அங்கத்தினரின் ஆதரவால் இதயத்தை சுக்கு நூறாக நொறுக்கிய இந்த அனுபவத்தில் இருந்து மீண்டு வந்தேன்.
எஸ். ஹெச்., அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள்
யெகோவாவின் சாட்சிகளின் சர்வதேச மாநாட்டில் நான் ஒரு பெண்ணை சந்தித்தேன், அவளுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறேன். நாகரிகம் மற்றும் மொழி வித்தியாசமாக இருந்தால் நம்முடைய எண்ணங்களை மற்றவர்களுக்கு புரியவைப்பது மிகவும் கடினம். ஆகவே நான் அவளது மொழியை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். டேப் ரெக்கார்டரை பயன்படுத்தலாம் என்று நீங்கள் குறிப்பிட்டது ஒரு நல்ல ஆலோசனை. இதற்காக உங்களுக்கு நன்றி.
ஏ. எஸ்., ஜெர்மனி
நான் கிழக்கத்திய நாடுகளில் வசிக்கும் ஒரு சகோதரியை ஐக்கிய மாகாணங்களில் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் சந்தித்தேன். அவளோடு எவ்வாறு கடிதத்தொடர்பு கொள்ளலாம் என்பதைப் பற்றி நான் அதிகம் குழம்பிப்போயிருந்தேன். இதைப்பற்றி நான் ஜெபம் செய்தேன், அடுத்த சில நாட்களுக்குள் இந்த அருமையான கட்டுரை என் கையில் கிடைத்தது. நான் அதை மறுபடியும் மறுபடியும் படித்தேன். எனக்கு இருந்த எல்லா கேள்விகளுக்கும் இது பதிலளித்தது.
ஜி. ஆர்., இத்தாலி