உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 11/8 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பருவ வயதினரின் மதம்
  • அமிலமும் பற்சிதைவும்
  • என்ன, இவ்வளவு பெரிய பாக்டீரியாவா?
  • புனித கங்கையில் மனித சடலங்கள்
  • மாயமான லிம்போ!
  • கடத்தல் பேர்வழிகள்
  • பிரார்த்தனைக்கு வெப் ஸைட் கைடு
  • கில்லாடி கரப்பான்கள்
  • ஜப்பானிய பொம்மை போதுமா?
  • ‘கிட்நாப்பிங்’—பிஸினஸ் “பயங்கரம்”
    விழித்தெழு!—1999
  • மாட்ரியாஷ்கா—என்னே ஒரு பொம்மை!
    விழித்தெழு!—1995
  • ‘கிட்நாப்பிங்’—கட்டுப்படுத்த முடியுமா?
    விழித்தெழு!—1999
  • பாவம் அதைப் பற்றிய உண்மைகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 11/8 பக். 28-29

உலகை கவனித்தல்

பருவ வயதினரின் மதம்

“கனடாவில் 80 சதவீத டீனேஜர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு” என்பதென்னவோ ஆச்சரியமூட்டும் உண்மைதான். ஆனால் “மத கல்வி கற்க ஒழுங்காக வகுப்புக்குச் செல்வது வெறும் 15 சதவீதத்தினர் மட்டுமே” என வான்கூவர் சன் செய்தித்தாள் கூறுகிறது. ஏன் இத்தனை வேறுபாடு? மதத்துக்கும் தங்களுக்கும் ஒத்துவராது என்று சிலர் முடிவெடுத்துவிடுகின்றனர். ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரை, “அநேக மத சேவைகள் ‘ரம்பமாக’ அறுக்கின்றன!” அதுமட்டுமா, “எந்தவிதத்திலும் கொள்கையில் வளைந்து கொடுக்காமல் இருப்பதால் இளசுகளின் மனசு விட்டுப்போகிறது.” அந்தச் செய்தித்தாள் மேலும் கூறுவதாவது: “செய்தித்தாளைப் பிரித்ததுமே பாதிரியார் லீலைகள், சீக்கியர் கலவரம், யூத தீவிரவாதிகள், இந்துப் போராளிகள் பற்றிய செய்திகளைத்தான் தரிசிக்க நேரிடுகிறது. இதனால் பெரிய மத ஸ்தாபனங்களின் ‘இமேஜுக்கு’ களங்கம் ஏற்பட்டுள்ளது. 1984-⁠ல் கனடா நாட்டு இளசுகளில் 62 சதவீதத்தினருக்கு மதத் தலைவர்களில் நம்பிக்கை இருந்தது; இப்போதோ, 39 சதவீதத்தினருக்கு மட்டுமே அந்த நம்பிக்கை இருப்பதாக வாக்கெடுப்புகள் காட்டுகின்றன.” “இதற்கான காரணம், மதத்தலைவரது மனப்பூர்வமான வரவேற்பு குணம் அந்த இளசுகளுக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போவது; பொதுமக்கள் கலாசாரம் மத அமைப்புகளுக்கு முரணாக செல்வது; அல்லது ஆன்மீக செய்தி பெரும்பாலான இளவட்டங்களுக்கு சலிப்புத் தட்டுவது. அல்லது இவை எல்லாமே சேர்ந்து இதற்குக் காரணமாகி, மதப்பிடிப்பை ஒருவழி பண்ணிவிடுவது” என அந்த அறிக்கை இறுதியாக கூறுகிறது.

அமிலமும் பற்சிதைவும்

“இனிப்பு சாப்பிட்டால் மட்டும்தான் பல்லில் குழி விழும் என்று நினைத்து அமிலச் சத்துள்ள உணவுப்பொருட்களை உண்ண ஆரம்பித்துவிடக் கூடாது” என்பதாக மைக் எட்கர் கூறுகிறார். இவர் ஓரல் ஹெல்த்: டயட் அண்ட் அதர் ஃபேக்டர்ஸ்-⁠ன் ஆசிரியர்களில் ஒருவர். காலை வேளை சாப்பாட்டுடன் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பவர்களோ அமிலச் சத்துள்ள உணவுப்பொருட்களை சாப்பிடுபவர்களோ, சாப்பாட்டுக்குப் பிறகு அரை மணிநேரம் வரையிலாவது தங்கள் பற்களை பிரஷ் செய்யக்கூடாது என்று அந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது. ஏன்? ஏனெனில் ஓரளவுக்கு மேல் வாயில் அமிலச்சத்து அதிகரிக்கையில் பல் இனாமல் மிருதுவாகிறது. ஆகவே அந்த சமயத்தில் பிரஷ் செய்தால் பல்லின் மேற்பரப்பு தேய ஆரம்பித்துவிடுகிறது. அமிலச் சத்தின் பாதிப்பை ஈடு செய்வதற்காக, சீஸ், நிலக்கடலை போன்ற புரோட்டீன் சத்து அதிகமாயுள்ள பொருட்களை சாப்பிடலாம்; ஆனாலும் அமிலச் சத்துள்ள உணவுப்பொருட்களை உண்ட 20 நிமிடத்திற்குள் அவற்றை சாப்பிடவேண்டும் என சிபாரிசு செய்யப்படுவதாய் லண்டனின் த டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

என்ன, இவ்வளவு பெரிய பாக்டீரியாவா?

கடல் நுண்ணுயிரியல் பற்றிய மாக்ஸ் பிளாங்க் கல்வி நிலையத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான ஹைடீ ஷுல்ஸ், ஆப்பிரிக்காவில் நமிபியா கடற்கரைக்கு அப்பால் சமுத்திரத் தரை படிவில் பிரமாண்டமான பாக்டீரியாவைக் கண்டுபிடித்துள்ளார். இந்த நுண்ணுயிரியின் விட்டம் கிட்டத்தட்ட 0.75 மில்லிமீட்டர். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாக்டீரியாக்களைவிட 100 மடங்கு பெரியது. “சராசரி பாக்டீரியா, சுடச்சுட பிறந்த எலிக்குட்டியாக இருக்கிறதென வைத்துக்கொள்வோம்; இந்த பாக்டீரியாவோ நீலத்திமிங்கலம் போல் அத்தனைப் பெரியது” என லண்டனின் த டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. தையோமார்காரிட்டா நமிபியன்சிஸ் எனப்படும் இந்த நுண்ணுயிரிகள், முத்துக்கோவை போல ஒன்றோடொன்று லூஸாகப் பிணைந்துள்ளன. இந்த பாக்டீரியாக்கள், “சல்பைடுகளை உண்டு வாழ்கின்றன; அப்போது கடல்நீரிலுள்ள நைட்ரேட்டுகளின் உதவியுடன் அவற்றை ஆக்ஸிஜனேற்றம் செய்துவிடுகின்றன” என த டைம்ஸ் கூறுகிறது.

புனித கங்கையில் மனித சடலங்கள்

“பல நூற்றாண்டுகளாக, இந்துக்கள் இறந்த தங்கள் பந்துக்களின் உடலை மரியாதையுடன் கங்கை நதியில் போட்டுவிடுகின்றனர். அவர்களது நம்பிக்கையெல்லாம், இப்படி செய்தால் நேரே மோட்சம், அல்லது திரும்பத் திரும்ப மறுபிறவி எடுக்காதபடி ஆன்மாவுக்கு விடுதலை கிடைக்கும் என்பதே” என்று எலக்ட்ரானிக் டெலிகிராஃப் நிறுவனம் குறிப்பிடுகிறது. “சுமார் 2,500 கிலோமீட்டர் நீளமுள்ள கங்கையின் ஆழம் முன்பெல்லாம் அதிகமாய் இருந்தது. இவ்வளவு தூரத்தில் நூற்றுக்கணக்கான சிதைந்த சடலங்களை நீரோட்டம் விரைவாக அடித்துச்சென்றது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த நதியின் ஆழமும் வேகமும் குறைந்துவருகிறது. தொழிற்சாலைகளின் கழிவுப்பொருட்களும் அதில் போடப்படும் குப்பைக்கூளங்களுமே இதற்குக் காரணம்.” இதன் விளைவாக, சடலங்கள் “செடிசெத்தைகளில் வாரக்கணக்காக சிக்கிக்கொள்கின்றன.” 1980-களின் பிற்பகுதியில், இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்ட அரசு தீர்மானித்தது. கங்கை நதிக்குள், மாமிசம் தின்னும் ஆமைகளை ஆயிரக்கணக்கில் விட்டுப் பார்க்க முயன்றது. ஆனால் இந்தத் திட்டம் 1994-⁠ல் கைவிடப்பட்டது. ஏனென்றால் ஆமைகள் தின்று தீர்ப்பதற்கும் அதிகமான சடலங்கள் நதியில் போடப்பட்டன. அத்துடன், அந்த ஆமைகளிலும் சில வேட்டையாடப்பட்டன. ஆகவே இப்போது ஒரு புதிய திட்டம் உதித்திருக்கிறது. அதன்படி, இறந்த தங்கள் பந்துக்களை எரித்துவிடும்படியோ நதிக்குப் பக்கத்திலேயே மணலில் குழிதோண்டி புதைத்துவிடும்படியோ மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மாயமான லிம்போ!

ஞானஸ்நானம் பெறாமல் இறந்த இளம்பிஞ்சுகளின் ஆத்துமாக்கள் போகும் இடம்தான் லிம்போ என்பதாக கத்தோலிக்க பாரம்பரியம் கற்பித்தது. இப்போது இந்த நம்பிக்கை கத்தோலிக்க இறையியலில் இருந்தே மறைந்துவிட்டது. லிம்போ என்பது சமயக்கொள்கையாக மாறவில்லைதான். என்றாலும், “இது ஏற்கெனவே நிலவிவந்த கருத்துக்களிலிருந்து 12-⁠ம் நூற்றாண்டு இறையியலாளர்கள் புதிதாக உருவாக்கியதே.” இவர்கள் கருத்துப்படி, “மரணத்திற்குப்பின்” மோட்சத்துக்கோ நரகத்துக்கோ செல்லாதவர்கள் எங்காவது செல்வதற்கு ஓர் இடம் வேண்டும். இங்குச் செல்பவர்களில், “ஞானஸ்நானம் பெறாமல் இறந்த அப்பாவி பிஞ்சுக் குழந்தைகளும், நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து ஆனால் விசுவாசத்தில் இல்லாமல் இறந்துபோனவர்களும்” அடங்குவர். “இப்படிப்பட்ட இடம் இருப்பதாக சொல்லப்பட்டது முதற்கொண்டு சர்ச்சால் போதிக்கப்பட்ட கொள்கைகளில் இது முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டது” என வத்திகன் உரையாசிரியர் மார்க்கோ பாலிட்டீ லா ரேப்பூப்ளிக்கா செய்தித்தாளில் எழுதியுள்ளார். ஆனால், 1992-⁠ல் பறைசாற்றப்பட்ட சர்வதேச சமயபோதனை உள்ளிட்ட வெகு சமீபத்திய சமயபோதனைகளில், லிம்போவைப் பற்றிய குறிப்பு காணப்படாமல் மாயமாய் மறைந்துவிட்டது. “உண்மையில், மரணத்திற்கு பின்னான நிலைமை பற்றிய கோட்பாடு அனைத்தும் கடைசி சில பத்தாண்டுகளில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன” என்று பாலிட்டீ விளக்குகிறார். ஞானஸ்நானம் பெறாத இளம்பிஞ்சுகள் இறக்கும்போது நேரே மோட்சம் செல்கின்றன என்பதாக அநேக இறையியலாளர்கள் இப்போது கூறுகின்றனர். இத்தாலிய இறையியலாளர் பீனோ ஸ்காபீனீ கூறுகிறார்: “இயேசு சொன்ன முடிவில்லா வாழ்வு, மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவையே ஏற்கெனவே வெளியாக்கப்பட்ட அத்தியாவசியமான விஷயங்கள். ஆக, இவற்றிற்கு கவனம்செலுத்த வேண்டும் என்பதே இன்றைய மனச்சாய்வு.”

கடத்தல் பேர்வழிகள்

“மெக்ஸிகோ, கொலம்பியா, ஹாங்காங், ரஷ்யா ஆகிய நாடுகளில் ஆட்களை கடத்திச்செல்லுதல், மடிநிறைய பணம்கொட்டும் வியாபாரமாகி வருகிறது” என யு. எஸ். நியூஸ் அண்ட் உவர்ல்ட் ரிப்போர்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது. “உலகமுழுவதிலும், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் பிணைக்கைதிகளாக ஆட்களைக் கடத்திச்செல்லும் கேஸ்களின் எண்ணிக்கை ரிக்கார்டை ஏற்படுத்தியுள்ளது.” லத்தீன் அமெரிக்காவில்தான் இதுவரை அதிகளவு ஆள் கடத்தல் கேஸ்கள் பதிவாகியுள்ளன. அங்கு 1995-⁠க்கும் 1998-⁠க்கும் இடைப்பட்ட வருடங்களில் 6,755 பேர் கடத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து வரிசையில் நிற்பது, ஆசியாவும் தூரக்கிழக்கு நாடுகளும் (617), ஐரோப்பா (271), ஆப்பிரிக்கா (211), மத்தியக்கிழக்கு நாடுகள் (118), மற்றும் வட அமெரிக்கா (80). இவ்வாறு கடத்தப்படுபவர்கள் பெரும்பாலும் உள்ளூர் வியாபாரிகள், மிராசுதார்கள்தான்; என்றாலும், வெளிநாட்டு உதவியுடன் பணியாற்றுபவர்கள், தொழில் சம்பந்தமாக பயணிப்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள் போன்றவர்களும் ஆபத்திற்குள்ளாகலாம். இப்போதெல்லாம் சர்வதேச நிறுவனங்கள், கடத்துவது மீட்பது போன்றவற்றிற்கும் இன்சூரன்ஸ் செய்கின்றன. இவ்வாறு, மீட்புக்கும், பேச்சுவார்த்தை நடத்துபவர்களுக்கும் மனோவியல் ஆலோசகர்களுக்கும் ஆகும் செலவை ஈடுகட்டுகின்றன. ஆட்களைக் கடத்துபவர்கள் ஒழுங்கமைக்கப்பட்டு, சந்தை நிலவரம் குறித்தும் யாரை கடத்திச்செல்லப்போகிறார்களோ அவர்களுக்கு எவ்வளவு ஈட்டுறுதி கேட்க வேண்டும் மற்றும் அதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பது குறித்தும் ஆய்வு நடத்துகின்றனர். பொதுவாக அவர்கள் பிணைக்கைதிகளாக கடத்துபவர்களை நன்றாக நடத்துகிறார்கள். ஏனெனில், தப்பித்துச்செல்ல வேண்டும் என்ற மனநிலையை பிணைக்கைதிகள் தவிர்க்கவும், எளிதில் பணத்தைச் செலுத்திவிட்டு விடுதலைபெறவும் இது உதவும் என்று கடத்தல்காரர்களுக்குத் தெரியும். “உலகளவில் கடத்தப்படும் 10 பேரில் ஒருவர் மட்டும் இறந்துபோகிறார்” என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது; ஆனாலும் அது இவ்வாறு எச்சரிக்கையும் விடுக்கிறது: “உள்ளூர் போலீஸ்காரர்களை நம்பாதீர்கள். பெரும்பாலும் கடத்தல் பேர்வழிகளுக்கு அவர்களும் கையாட்களே.”

பிரார்த்தனைக்கு வெப் ஸைட் கைடு

அண்மைக் காலத்தில் சர்ச் ஆப் இங்கிலாந்து அதன் இன்டர்நெட் வெப்ஸைட்டை அறிமுகப்படுத்தியது. அதில் ஜெபிப்பது எப்படியென்றும் குறிப்புகள் இருந்தன. எல்லா ஜெபத்தையும் கடவுள் கேட்கிறார் என்பதாக வலியுறுத்திய சர்ச், ஜெபிக்கையில் புதுப்புது வழிகளைப் பின்பற்றும்படியாகவும் ஆலோசனை கூறியது. “இசை, கல், இறகு, பூ, மெழுகுவர்த்தி ஆகியவற்றில் ஏதாவதொன்றை பயன்படுத்தி உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள்; உங்கள் கைகளையும் பயன்படுத்துங்கள். நீங்கள் ஜெபிப்பதற்கான வெவ்வேறு விஷயங்களை உங்கள் மனதிற்கு நினைப்பூட்ட, உங்கள் கைவிரல்களைப் பயன்படுத்தலாம்.” உதாரணமாக, கையின் பெருவிரல் மிகவும் பலம்வாய்ந்ததாக இருப்பதால் உங்கள் வாழ்க்கைக்கு முக்கியமான விஷயங்களான வீடு, குடும்பம் பற்றிய முக்கியமான விஷயங்களுக்காக ஜெபிக்கையில் அதைப் பயன்படுத்தலாம். நீண்ட நடுவிரல், “உலகில் அதிகாரம் செலுத்தும் மக்களுக்காக” ஜெபிக்க நினைப்பூட்டலாம், சுண்டுவிரலோ “உங்களுக்காக ஜெபிக்கும்படி” நினைப்பூட்டலாம் என்பதாக அது கூறுகிறது. இந்தப் புதிய வழிமுறைகளைப்பற்றி கருத்து தெரிவிப்பதாய் த டைம்ஸ் செய்தித்தாள் கூறுவதாவது: “நாடு எந்தளவிற்கு மதசார்பற்றதாக மாறிவிட்டது என்பதை சர்ச் உணருவதையே இந்த வெப்சைட்டில் அடங்கியுள்ள விஷயங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஓர் இடத்தில் ஒழுங்காக அமர்ந்து ஜெபிப்பதை உணவுக் கட்டுப்பாட்டுடனும் அல்லது தோட்டத்தில் களையெடுப்பதுடனும் இந்த வெப்ஸைட் ஒப்பிட்டு இவ்வாறு கூறுகிறது: ‘சுருக்கமாகவும் அடிக்கடியும் ஜெபிப்பது சிறந்தது, ஆனால் ஜெபிப்பதை அறவே நிறுத்திவிடாதீர்கள்.’ ”

கில்லாடி கரப்பான்கள்

கரப்பான் பூச்சியைக் கொல்ல முயன்று ஏமாந்த எவருக்குமே அது பலே கில்லாடி என்று நன்றாகவே தெரியும். இவ்வாறு நழுவிச்செல்வதில் அவை திறமைசாலிகளாக இருப்பதெப்படி? அவற்றின் அடிவயிற்றின் இரு பக்கங்களிலும் உள்ள பொடி ரோமங்கள் அவற்றைக் காப்பாற்றிவிடுகின்றன. எப்படியென்றால், விரோதிகளால் காற்றில் ஏற்படும் மெல்லிய அசைவையும், அதன் திசையையும் அவை கரப்பான் பூச்சிக்கு உணர்த்திவிடுகின்றன. மேலும் அவற்றின் நரம்பு மண்டலமும் திறமையாக வேலை செய்வதாகத் தெரிகிறது. இதனால் ஒரு வினாடியில் நூற்றில் ஒரு பங்கு நேரமே கரப்பான் பூச்சிகளுக்குப் போதுமானது. அதற்குள்ளாகவே தங்களுக்கு ஆபத்து வராமல் ஒரே ஓட்டம்! இப்போதோ, ஜெரூசலேமைச் சேர்ந்த எபிரெய பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஜெஃப்ரீயும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து அதிநவீன கேமிராவின் உதவியுடன் இன்னும் பல உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளனர் என்பதாக பெர்லீனர் மார்கன்பாஸ்ட் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஒரு வினாடிக்கு ஒரு மீட்டர் வேகத்தில் அவற்றால் ஓடமுடியும் என்றும், அதற்குள்ளாகவே வினாடிக்கு 25 தடவை திசையை மாற்றிக்கொள்ளவும் முடியும் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். “நமக்குத் தெரிந்தவரை, திசைதிரும்பும் பிராணிகளிலேயே இந்தளவுக்கு உடலின் திசையை மாற்றிக்கொள்ளும் திறன் வேறெந்த பிராணிக்கும் இல்லை” என காமீ கூறியதாக நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகை மேற்கோள் காட்டியது. “கரப்பான் பூச்சி மட்டும் அருவருப்பான அழையா விருந்தாளியாக இல்லாவிட்டால், அதற்கு எக்கச்சக்க மவுசு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.”

ஜப்பானிய பொம்மை போதுமா?

தங்கள் பேரப்பிள்ளைகளை விட்டு தொலைதூரத்தில் வசிக்கும் தாத்தா பாட்டிமார்களுக்கு அவர்களைப் பார்க்க வேண்டும் என ஏக்கம் பிறக்கும். இதற்கு டோக்கியோ நிறுவனமொன்று தீர்வுகண்டுள்ளது. அதாவது, குழந்தையின் புகைப்படத்தை அந்த நிறுவனத்திடம் அனுப்ப வேண்டும். ஆறே வாரத்தில் பொம்மைப் பாப்பா ரெடி. “அத்துடன் விஷயம் முடிந்துவிடவில்லை” என நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. “அந்தக் குழந்தை தொட்டிலில் படுத்துக்கொண்டு ஏற்படுத்தும் ஆ. . .ஊ. . . போன்ற சத்தத்தை பொம்மைக்குள் இருக்கும் டிஜிட்டல் மைக்ரோசிப் ரிக்கார்டர் பதிவு செய்துகொள்ளும். ஆகவே அதைக் கேட்டால், அசல் அந்தக் குழந்தையின் சத்தத்தைக் கேட்பது போலவே இருக்கும். வெறுமனே பொம்மையின் கையைப் பிடித்தால் போதும். அது அந்தக் குழந்தையின் சத்தத்தை ஒலிக்க ஆரம்பிக்கும். அல்லது நீங்கள் பதிவு செய்ததை திருப்பி சொல்லிக் காட்டும். த நிகே வீக்லி செய்தித்தாள் சுட்டிக்காட்டுவதன்படி, 16,000 ரூபாய் பெறுமான இந்தப் பொம்மையை பெரும்பாலும் ஆர்டர் செய்வது யாரென்றால், தங்கள் வயிற்றுப்பிள்ளையின் பிள்ளையை அரிதாகவே பார்க்கும் தாத்தா பாட்டிமாரே.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்