‘கிட்நாப்பிங்’—கட்டுப்படுத்த முடியுமா?
“ஆட்களை கடத்துவது முழு தேசத்தினரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது. தேசத்தார் அனைவரும் இதற்கெதிராக போர்க் கொடியைத் தூக்க வேண்டும்” என்று செச்னியாவின் பிரதம மந்திரி கூறினார். கடத்தல் நோயை ரஷ்யாவிலிருந்து ஒழித்துவிடுவதாக அவர் உறுதி எடுத்துக் கொண்டபோது இவ்வாறு கூறினார்.
கடத்தலை ஒழிப்பதா? கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் டக்கென்று மனதில் எழும் கேள்வி என்னவென்றால், ‘புலியின் கழுத்தில் மணிகட்டுவது’ யார்?
‘மணிகட்டும்’ முயற்சிகள்
கடத்தலை அடியோடு ஒழித்துக்கட்டுவதற்கென்று கொலம்பியா நாட்டு அதிகார குழு 2,000 ரகசிய ஏஜென்டுகளையும் 24 அரசாங்க வக்கீல்களையும் விசேஷித்த கடத்தல் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஒருவரையும்கூட நியமனம் செய்திருக்கிறது. பிரேஸில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் கடத்தலுக்கு எதிரான கண்டன பேரணியில் சுமார் 1,00,000 பேர் கலந்துகொண்டார்கள். பிரேஸில், கொலம்பியா ஆகிய நாடுகளில் இராணுவ துணைத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடத்தல்காரர்களின் உறவினர்களை கடத்திச்சென்று எதிர்த்தாக்குதல் செய்திருக்கின்றனர். பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த சிலர் சட்டத்தை தாங்களே கையிலெடுத்துக்கொண்டு மரண அடி கொடுத்திருக்கின்றனர்!
குவாதமாலாவில் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது, இந்நாட்டு ஜனாதிபதி ‘கடத்தல் புலிகளை’ மொத்தமாக பிடித்து கூண்டுக்குள் அடைப்பதற்கு படைகளை திரட்டினார். இத்தாலிய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது; கடத்தப்பட்டவர்களை மீட்பதற்கு பணம் கொடுப்பது சட்ட விரோதமானது என்று அறிவித்து, உறவினர்கள் பணம் செலுத்துவதை தடை செய்வதற்காக அவர்களுடைய பணம், உடைமைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தது. இந்த நடவடிக்கைகளினால் இத்தாலியில் இது குறைந்திருப்பதாக அதிகாரிகள் பெருமையடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இதை விமர்சிப்பவர்கள் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, அவர்கள் காதோடு காது வைத்தால் போல விஷயங்களை தங்களுக்குள் முடித்துக்கொள்வதால், கடத்தல் எண்ணிக்கை பதிவு செய்யப்படுவது குறைந்திருக்கிறது என்று சொல்கின்றனர். 1980-கள் முதற்கொண்டு இத்தாலியில் மட்டும் ஆட்களைக் கடத்துவது இரண்டு மடங்காகிவிட்டது என்கிறது ஒரு தனியார் பாதுகாப்பு துறை.
ஆலோசனைகள் ஏராளம்—தீர்வோ குறைவு
குடும்பத்தில் ஒருவர் கடத்தப்பட்டால், எத்தனை சீக்கிரமாக முடியுமோ அத்தனை சீக்கிரமாக பணத்தைக் கொடுத்து அவரை விடுவித்து விடுவதே ஒரே வழி என அந்தக் குடும்பத்தார் நினைக்கின்றனர். விடுவிப்பதற்கு கடத்தினவர்கள் கேட்கும் தொகை அதிகமாக இருந்து அது சீக்கிரமாக கொடுக்கப்பட்டுவிட்டால் இவர்களிடம் பணம்பறிப்பது எளிது என்று கடத்தினவர்கள் யோசிக்கலாம்; ஆகவே மறுபடியும் அவரையே கடத்தலாம். அல்லது அவரை விடுவிப்பதற்கு இரண்டாவது தடவையும் பணம் கேட்கலாம்.
சில குடும்பங்கள் ஏற்கெனவே பிணமாகிவிட்டவருக்கு மிக அதிகமான பணத்தைக் கொடுத்து ஏமாந்து போயிருக்கிறார்கள். ஆகவே கடத்தப்பட்டவர் உயிரோடு இருக்கிறார் என்பது உறுதியாக தெரிந்தாலொழிய அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்கவோ அல்லது பேரம் பேசவோ கூடாது என்பதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி கடத்தப்பட்டவர் மாத்திரமே பதிலளிக்கக்கூடிய ஒரு கேள்வியை கேட்கலாம். சமீபத்திய செய்தித்தாளை கடத்தப்பட்டவர் கையில் பிடித்தபடி எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று தங்களுக்கு வேண்டும் என்பதாக சில குடும்பங்கள் கேட்டிருக்கின்றன.
அவர்களை விடுவிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பற்றி என்ன? அது அநேகமாக மிகவும் ஆபத்தாகவே இருக்கிறது. “இவர்களை விடுவிக்க எடுக்கப்படும் முயற்சிகளின் போதுதான் 79 சதவீதமான பணயக் கைதிகள் கொல்லப்படுகிறார்கள்” என்பதாக கிட்நாப் வல்லுநர் பிரயன் ஜென்கின்ஸ் கூறுகிறார். சில சமயங்களில் இவர்களை பத்திரமாக விடுவித்துக்கொண்டு வரமுடிகிறது.
ஆகையால் கடத்தப்படுவதை எப்படி தவிர்க்கலாம் என்பதற்கே அநேகர் கவனம் செலுத்துகிறார்கள். கடத்தல் நடக்காமல் இருப்பதற்காக அரசாங்க அதிகாரிகள் மட்டுமே முயற்சித்துக் கொண்டில்லை. சாமர்த்தியமாக அவர்களிடமிருந்து எவ்வாறு தப்பித்துக்கொள்வது, ஓடிக்கொண்டிருக்கும் காரிலிருந்து எவ்வாறு கீழே குதிப்பது என்ற டிப்ஸ்களை செய்தித்தாள்கள் மக்களுக்கு வாரிவழங்குகின்றன. கடத்தப்படாமல் தற்காத்துக்கொள்வதற்கு ஜூடோ, காரத்தே ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன. 15,000 டாலர் விலையுள்ள அல்ட்ரா மைக்ரோ டிரான்ஸ்மிட்டர்களை சில கம்பெனிகள் விற்கின்றன, இதை பிள்ளையின் பற்களில் பொருத்திவிட்டால் போதும். இவர்கள் கடத்தப்பட்டால் இதிலிருந்துவரும் எலக்ட்ரோமேக்னட்டிக் சிக்னல்களை வைத்து பிள்ளை இருக்கும் இடத்தை போலீஸால் கண்டுபிடித்துவிட முடியும். ஒரு சில கார் உற்பத்தியாளர்கள் “கடத்திச்செல்ல முடியாத” கார்களை உற்பத்தி செய்கின்றன, இதில் கண்ணீர்புகை தெளிப்பான்கள், துப்பாக்கி வைத்து சுடுவதற்கு ஒரு ஓட்டை, குண்டு துளைக்க முடியாத கண்ணாடிகள், கத்தியால் வெட்டமுடியாத டயர்கள், எண்ணெய் தெளிப்பான்கள் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். கையில் காசு வைத்திருப்பவர்களுக்காக இந்தக் கார்கள் தயார்செய்யப்படுகின்றன.
ஆனால் ஒரு சில பணக்காரர்கள் மெய்காப்பாளர்களை நியமித்துக் கொள்கிறார்கள். இருந்தாலும் மெக்ஸிகோவிலுள்ள நிலைமையைக் குறித்து பாதுகாப்பு நிபுணர் ஃபிரான்சிஸ்கோ கோமஸ் லெர்மா இவ்வாறு கூறுகிறார்: ‘மெய்காப்பாளர் பிறர் கவனத்தை ஈர்ப்பதால் அவர்களால் ஒன்றும் பயனில்லை, சிலசமயம் அவர்களும் கடத்தல்காரர்களோடு கூட்டுச்சேர்ந்துவிடலாம்.’
இந்தப் பிரச்சினை மிகவும் சிக்கலானது, அதன் வேர்கள் மிகவும் ஆழத்தில் பரந்து விரிந்து இருப்பதால் அதை மனிதரால் ஒழிக்க முடியாது போல தெரிகிறது. அப்படியென்றால் இதற்கு தீர்வே இல்லையா?
தீர்வு உண்டு
மனிதர்கள் எதிர்ப்படும் இப்படிப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே உண்மையான தீர்வு உண்டு என்பதை இந்தப் பத்திரிகை திரும்பத் திரும்பச் சொல்லிவந்திருக்கிறது. கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு பின்வருமாறு ஜெபிக்கும்படி கற்றுக்கொடுத்தபோது அவர் காண்பித்த பரிகாரமே அது: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:10.
இந்த உலகம் முழுவதுமுள்ள வித்தியாசப்பட்ட மக்களை சரியான வழியில் நடத்துவதற்கு நமக்கு நீதியான ஒரு உலக அரசாங்கம் தேவை, ஆம் இயேசு கூறின கடவுளுடைய ராஜ்யம் நமக்குத் தேவை. மனிதர்களால் இப்படியொரு அரசாங்கத்தை ஏற்படுத்த முடியாத காரணத்தால், நம்முடைய படைப்பாளராகிய யெகோவா தேவனையே நாம் எதிர்பார்க்க வேண்டும். இப்படியொரு அரசாங்கத்தை ஏற்படுத்துவதே அவருடைய நோக்கம் என்பதாக அவருடைய வார்த்தையாகிய பைபிள் கூறுகிறது.—சங்கீதம் 83:17.
யெகோவாவின் நோக்கம் என்ன என்பதை தானியேல் தீர்க்கதரிசி இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; . . . அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) கடத்தல் உள்ளிட்ட எல்லா குற்றச்செயல்களையும் துடைத்தழிப்பதற்கு கடவுளுடைய இந்த அரசாங்கம் எவ்வாறு படிப்படியாக நடவடிக்கை எடுக்கும் என்பதை பைபிள் விவரிக்கிறது.
கல்வி அவசியம்
உண்மையான மதிப்புள்ளவையாக இருப்பவை எவை என்பதை மக்கள் மனதில் பதிய வைப்பது கடத்தல் பிரச்சினையை தீர்ப்பதற்கு மிகவும் அவசியம் என்பதை நீங்கள் சந்தேகமில்லாமல் ஒத்துக்கொள்வீர்கள். உதாரணத்துக்கு பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் புத்திமதியை அனைவரும் பின்பற்றினால் சமுதாயம் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்: “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்.” (எபிரெயர் 13:5) “ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்.”—ரோமர் 13:8.
யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதிலும் 230-க்கும் மேற்பட்ட நாடுகளில் செய்துவரும் கல்வி புகட்டும் வேலையைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எதிர்காலத்தில் வாழ்க்கை எப்படிப்பட்ட வசந்தமாக இருக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள். ஒரு காலத்தில் பேராசையுள்ளவர்களாய் அல்லது மிகவும் ஆபத்தான குற்றவாளிகளாய் இருந்தவர்களும் ,இந்தக் கல்விதிட்டத்தினால் முழுமையாக பயனடைந்திருக்கிறார்கள். முற்காலங்களில் ஆட்களை கடத்தும் இந்தத் தொழிலை செய்துவந்தவர் இவ்வாறு கூறினார்: “கடவுளை பிரியப்படுத்துவதற்கு என்னுடைய பழைய குணங்களை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு புதிய குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் உணர்ந்துகொண்டேன். நான் சாந்தத்தையும் கிறிஸ்து இயேசுவினுடையதைப் போன்ற குணங்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன்.”
எத்தனை சிறப்பான கல்வியாலும் எல்லா குற்றவாளிகளையும்—ஒருவேளை பெரும்பாலானவர்களைக்கூட—திருத்திவிட முடியாது. ஆனால் திருந்தாதவர்களுக்கு என்ன சம்பவிக்கும்?
திருந்தாதவர்கள் நீக்கப்படுவர்
வேண்டுமென்றே திருந்தாமல் இருப்பவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களாக இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசி மார்க்கத்தாரும், . . . பொருளாசைக்காரரும், . . . கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:9, 10) “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள். . . . துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்.”—நீதிமொழிகள் 2:21, 22.
பண்டைய காலங்களில் திருந்தாத கடத்தல்காரனுக்கு கடவுளுடைய நியாயப்பிரமாணம் மரண தண்டனை வழங்கியது. (உபாகமம் 24:7) ஆட்களைக் கடத்தும் பேராசைப் பிடித்த இந்த ஆட்களுக்கு கடவுளுடைய ராஜ்யத்தில் இடம் கிடையாது. இன்றைய குற்றவாளிகள் மனிதரின் சட்டத்தில் பிடிபடாமல் தப்பித்துவிடலாம், ஆனால் கடவுளுடைய சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. யெகோவாவின் நீதியுள்ள ராஜ்ய ஆட்சியில் வாழவேண்டுமென்றால் தவறு செய்கிறவர்கள் தங்கள் வழிகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
குற்றச்செயல்களுக்கு சாதகமாக நிலைமைகள் இருக்கும்வரை குற்றங்களும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். ஆனால் கடவுளுடைய ராஜ்யம் அதை அனுமதிக்காது, ஏனென்றால் பைபிள் இவ்வாறு வாக்களிக்கிறது: “அந்த ராஜ்யம் . . . [இந்த] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி,” திருந்தாத குற்றவாளிகளையும் அழித்துவிடும். கடவுளுடைய ராஜ்யமோ என்றென்றைக்கும் நிலைத்துநிற்கும் என்று அந்தத் தீர்க்கதரிசனம் தொடர்ந்து சொல்கிறது. (தானியேல் 2:44) நிகழப்போகும் மாற்றங்களை சற்று கற்பனை செய்து பாருங்கள்!
நீதியுள்ள ஒரு புதிய உலகம்
பைபிளிலுள்ள மற்றொரு தீர்க்கதரிசனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எதிர்காலத்தை இந்த அழகிய வார்த்தைகளில் விவரிப்பதைப் பாருங்கள்: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள்; திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.”—ஏசாயா 65:21, 22.
கடவுளுடைய ராஜ்யம் இந்த முழு கிரகத்தின் தோற்றத்தை அப்படியே மாற்றிவிடும். உயிரோடிருக்கும் அனைவரும் வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து மகிழுவர், தங்களுக்கு மனநிறைவை அளிக்கும் வேலையிலும் ஆரோக்கியமான பொழுதுபோக்கிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு தங்கள் இயற்கையான திறமைகளை வளர்த்துக்கொள்வர். உலகம் முழுவதிலும் இருக்கப்போகும் அந்த நிலைமைகளில் யாருமே இன்னொருவரை கடத்திச் செல்வதைப் பற்றி எண்ணிக்கூட பார்க்கமாட்டார். முழுமையான ஒரு பாதுகாப்புணர்வு எங்கும் இருக்கும். (மீகா 4:4) கடவுளுடைய ராஜ்யத்தில், இன்று உலகெங்கிலும் காணப்படும் இந்தக் கடத்தல் பயம் மறைந்துவிடும், அதைப்பற்றி எவரும் எண்ணிக்கூட பார்க்கமாட்டார்கள்.—ஏசாயா 65:17.
[பக்கம் 10-ன் படம்]
‘பயமுறுத்துவோர் யாரும் இருக்கமாட்டார்.’—மீகா 4:4