‘கிட்நாப்பிங்’—பிஸினஸ் “பயங்கரம்”
“ஆட்களைக் கடத்துவது என்பது ஏதோ பொருட்களை பறித்துக்கொள்ளும் ஒரு குற்றச்செயல் போல அல்ல. மனித குலத்தின் அடிப்படை அம்சமான குடும்பத்தையே தவறாகவும் அற்பமாகமாகவும் கொடுமையாகவும் நடத்துகிற செயல்” என கிட்நாப் பிஸினஸ் என்ற நூலில் மார்க் பிளஸ் கூறுகிறார். குடும்பத்தில் யாராவது கடத்தப்பட்டால் மற்றவர்கள் பைத்தியம் பிடித்தது போல ஆகிவிடுகின்றனர். ஒவ்வொரு கணமும் என்ன செய்வது ஏது செய்வது என்று அறியாமல் மனம் குழம்பிவிடுகின்றனர். குற்றவுணர்வு, வெறுப்பு, தவிப்பு போன்ற உணர்ச்சிகளோடு போராடுகின்றனர். இந்தக் கொடுங்கனவு நாள்கணக்காக, வாரக்கணக்காக, மாதக்கணக்காக—ஏன், வருடக்கணக்காகவும்கூட—தொடரலாம்.
எப்படியாவது பணம் பறிக்க வேண்டும் என்ற வெறியில், கடத்தல்காரர்கள் குடும்ப பாசங்களை தூண்டில் புழுவாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். செய்தித் துறைக்கு இவ்வாறு எழுதும்படி, கடத்தல்கார கும்பல் ஒன்று அவர்கள் வலையில் சிக்கிய ஒருவரை வற்புறுத்தியது: “செய்தித்துறை எல்லா இடங்களிலும் இதை கட்டாயம் வெளியிட வேண்டும், நான் திரும்பி வராவிட்டால் அதற்கு கடத்தல்காரர்களும், என்னைவிட பணம்தான் முக்கியம் என்று நினைக்கும் என் குடும்பத்தாருமே பொறுப்பு.” பணயத் தொகைக்காக இத்தாலிய கடத்தல்காரர்கள் உடல் உறுப்புக்களை ‘கட்’பண்ணி உறவினர்களுக்கு அல்லது டிவி நிலையங்களுக்கு பார்சல் செய்து அனுப்பி வைத்தனர். மெக்ஸிகோவில் ஒரு கடத்தல்காரன் தன் பணயக் கைதிகளின் வீட்டாரிடத்தில் பேரம் பேசும்போதே அவர்களை சித்திரவதை செய்தான்.
கடத்தப்பட்டவர்கள் “மெய் மறந்து” உல்லாசமாக இருக்க சில கடத்தல்காரர்கள் வழிவகை செய்து தருகிறார்கள். உதாரணமாக, பிலிப்பீன்ஸில் தொழிலதிபர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு மணிலாவில் ஒரு சொகுசு ஓட்டலில் ராஜபோக கவனிப்பு கொடுக்கப்பட்டார். தொகை கைக்கு வரும்வரை அவரை அங்கே “குடி”யும் “குடித்தன”முமாக வைத்திருந்தனர். ஆனால் அநேகருடைய விஷயத்தில் அப்படியில்லை. சொல்லப்போனால், கஞ்சித் தண்ணிகூட தராமல் பலர் ஈவிரக்கமின்றி மூர்க்கத்தனமாக நடத்தப்படுகின்றனர். சுகாதாரத் தேவைகளுக்கு எவ்வித மதிப்பும் தரப்படாமல் அடைத்து வைக்கப்படுகின்றனர். எப்படியிருந்தாலும்சரி, மாட்டிக்கொண்டவர் தனக்கு என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பயத்தில் செத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
அதிர்ச்சியை சமாளிப்பது
கடத்தல்காரர்கள் உங்களை விடுவித்தப் பின்பும்கூட உணர்ச்சிப்பூர்வமான ரணங்கள் ஆறுவதில்லை. சோமாலியாவில் கடத்தப்பட்ட சுவீடன் நாட்டு நர்ஸ் கூறுகிறார்: “நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டியது நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பேசுவது, தேவைப்பட்டால் நிபுணர்களின் உதவியை நீங்கள் நாட தயங்கக் கூடாது.”
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிகிச்சை நிபுணர்கள் ஒரு முறையை வகுத்திருக்கின்றனர். இதன்படி, பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய குடும்பத்தாரை சந்தித்து சகஜ வாழ்க்கைக்குத் திரும்பும்முன் தங்களுக்கு நடந்ததைப் பற்றி இந்த நிபுணர்களிடம் பேச வேண்டும். இந்த சந்திப்பு கொஞ்சம் கொஞ்ச நேரம் என பலமுறை இருக்கும். “உடனடியாக அளிக்கப்படும் இத்தகைய சிகிச்சை, நிரந்தரமான பாதிப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது” என கூறுகிறார் செஞ்சிலுவை சங்கத்தைச் சேர்ந்த சிகிச்சை நிபுணர் ரிக்மோ கில்பர்க்.
கூடுதலான பின்விளைவுகள்
பாதிப்பு கடத்தப்படுகிறவர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் மாத்திரம் அல்ல. கடத்தப்படுவோமோ என்ற பயத்தால் அந்த நாட்டிற்கு விஜயம் செய்யும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைய வாய்ப்புண்டு. அதோடு முதலீடும் பாதிக்கப்படலாம். மேலும், சமுதாயத்தில் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. 1997-ல் கடத்தல் பீதியின் காரணமாக ஆறு சர்வதேச கம்பெனிகள் சில மாதங்களுக்குள் பிலிப்பீன்ஸிலிருந்து ஓடியே போய்விட்டன. சிட்டிஸன்ஸ் அகைன்ஸ்ட் கிரைம் என்ற ஒரு தொகுதிக்கு வேலை செய்யும் பிலிப்பீன்ஸ் நாட்டு பெண்மணி “நாங்கள் எப்போதும் ஒருவித திகிலில் வாழ்ந்து வருகிறோம்” என்று சொன்னாள்.
தி அரிசோனா ரிப்பப்ளிக்-ல் ஒரு கட்டுரை இவ்வாறு கூறுகிறது: “கடத்தப்படும் பயம் மெக்ஸிகோ நாட்டு அதிகாரிகளுக்கு ஹிஸ்டீரியா வரும் அளவுக்கு கொண்டு சென்றுவிட்டது. அந்தளவுக்கு அது பயங்கரமானது என்று சொன்னால் மிகையாகாது.” பிரேஸில் நாட்டு சிறுவர்கள், கதைகளில் வரும் பூதங்களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்த காலம் மாறி இப்போதெல்லாம் அவர்கள் கடத்தல்காரர்களுக்கும் திருடர்களுக்குமே பயப்படுவதாக வேழா என்ற பிரேஸில் நாட்டு பத்திரிகை அறிக்கை செய்கிறது. கடத்தப்படுவதை எப்படி தவிர்ப்பது என்பது தைவானில் பள்ளிப் பாடமாகிவிட்டது, அமெரிக்காவில், பாதுகாப்பு காமிராக்கள் நர்சரி பள்ளிகளில் ஆங்காங்கே குடியேறியிருக்கின்றன.
பாதுகாப்பு நிறுவனங்களில் பண மழை
கடத்தல் எண்ணிக்கை பெருகி வருவதாலும், கடத்தல் பேர்வழிகளை மிகவும் சாதுரியமாக கையாள வேண்டியிருப்பதாலும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்கள் பக்கம் பலத்த பண மழை பொழிய தொடங்கிவிட்டன. பிரேஸில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ என்ற நகரில் மட்டும் இப்படிப்பட்ட நிறுவனங்கள் 500-க்கும் மேல் இருக்கின்றன, இவற்றின் வருமானமோ வாயைப் பிளக்க வைக்கிறது—180 கோடி டாலர்!
பெருகிவரும் இந்தச் சர்வதேச பாதுகாப்பு நிறுவனங்கள் கடத்தலை தவிர்ப்பது எவ்வாறு என்று கற்றுத் தருகின்றன, ஆபத்தான பகுதிகள் எவை என்பதை பற்றிய அறிக்கையை வெளியிடுகின்றன, கடத்தப்படுகிறவர்களுக்கான தொகையை பேரம் பேசி குறைக்கின்றன. குடும்பங்களுக்கும் கம்பெனிகளுக்கும் ஆலோசனை வழங்குகின்றன, கடத்தல்காரர்களின் சூழ்ச்சிகளைப் பற்றி கற்றுத் தருகின்றன, மனதளவில் அதை சமாளிப்பதற்கு உதவி புரிகின்றன. சில நிறுவனங்கள் கடத்தல்காரர்களைக் கையும் களவுமாக பிடித்து கடத்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் பணத்தை அவர்களிடமிருந்து மீட்டு தந்திருக்கின்றன. ஆனால் இத்தனையும் இலவசமாக அல்ல.
பல நாடுகளில் இதையெல்லாம் கடத்தல்காரர்கள் கால்தூசியாக உதறிவிட்டு தங்கள் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். லத்தீன் அமெரிக்காவிலுள்ள நிலைமையைக் குறித்து சிட்லின் அண்ட் கம்பெனியின் துணைத் தலைவர் ரிச்சர்ட் ஜான்சன் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறார்: “கடத்தப்படும் ஆட்களின் எண்ணிக்கை இன்னும் கூடிக்கொண்டுதான் போகும் என்றே எதிர்பார்க்கிறோம்.”
அதிகரிப்புக்கு காரணங்கள்
அண்மையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்புக்கு நிபுணர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர். மோசமான பொருளாதார நிலைமை ஒரு காரணம். ரஷ்யாவில் நால்சிக் என்ற நகரில் நிவாரண பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் சொல்லும்போது: “எளிதில் பணம் சம்பாதிக்க சிறந்த வழி யாரையாவது கடத்துவதே.” முன்னாள் சோவியத் குடியரசுகள் சிலவற்றில் கடத்தலில் கிடைக்கும் பணத்தைக் கொண்டே உள்ளூர் தனியார் படைகள் செயல்படுவதாக சொல்லப்படுகிறது.
முன்பைவிட இப்போதெல்லாம் அநேகர் வியாபாரத்துக்காகவும் சுற்றுலாவிற்காகவும் பயணம் செய்கின்றனர். இது யாரை கடத்தலாம் என்று தேடி அலையும் கடத்தல்காரர்களுக்கு அல்வா கிடைத்ததுபோல. கடத்தப்படும் அயல்நாட்டவரின் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காகிவிட்டது. 1991-க்கும் 1997-க்கும் இடையே சுற்றுலா பயணிகள் சுமார் 26 நாடுகளில் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்தக் கடத்தல்காரர்கள் எங்கிருந்து முளைக்கின்றனர்? சில நாடுகள் போர்களுக்கு ‘குட்-பை’ சொல்லிவிட்டதால் ராணுவ வீரர்கள் பலர் வேலைக்கும் காசுக்கும் அலைகின்றனர். இவர்களுக்கு லாபகரமான தொழிலாக விளங்குவது கடத்துவதே. இதற்கான அனைத்து திறமைகளும் இவர்களிடம் இருப்பது ‘ப்ளஸ்பாய்ண்ட்.’
அதேபோல, போதைப்பொருள் வியாபாரத்துக்கு தண்டனை கடுமையாகி விட்டது, வங்கிகள் பக்கமோ பலத்த பாதுகாப்பு. ஆகவே இதை தொழிலாக செய்துவந்த கயவர்களின் வருமானத்துக்கு இப்போது கைகொடுத்திருப்பது இந்தக் கடத்தல் தொழிலே. மைக் ஏக்கர்மேன் என்ற வல்லுனர் இதை விளக்கும்போது: “பொருட்களை பாதுகாப்பதற்கு கெடுபிடியான நடவடிக்கை எடுக்கும்போது, அதுவே மனிதர்களின் பாதுகாப்புக்கு உலைவைத்து விடுகிறது” என்றார். கேட்கப்படும் மெகா தொகை பகிரங்கமாக விளம்பரப்படுத்தப்படுகையில் மற்றவர்களையும் இத்தொழில் பக்கம் சுண்டியிழுப்பதாக உள்ளது.
ஒரே உள்நோக்கம் எப்போதும் இருப்பதில்லை
பெரும்பாலும் கடத்தல்காரர்களின் கண்கள் காசில்தான் இருக்கிறது. பணயமாக கேட்கும் தொகை கொஞ்சமாகவோ ஜாஸ்தியாகவோ இருக்கலாம். ஹாங்காங்கில் ஒரு வியாபார பெரும்புள்ளிக்கு கேட்கப்பட்ட தொகை சுமார் ஆறு கோடி டாலர், இந்தப் பெரிய தொகை கொடுக்கப்பட்டபோதிலும் அவர் விடுவிக்கப்படவே இல்லை.
மறுபட்சத்தில் பார்த்தால் கடத்தல்காரர்கள் சிலர் ஆட்களைக் கடத்தி வைத்துக்கொண்டு விளம்பரம், உணவு, மருந்து, ரேடியோக்கள், கார்கள், புதிய பள்ளிகள், சாலைகள், மருத்துவமனைகள் என்று கேட்டு பேரம் பேசுகிறார்கள். ஆசியாவில் கூடைப்பந்துகளுக்காகவும் சீருடைகளுக்காகவும் ஒரு அதிகாரியை கடத்தினர்; அவை கிடைத்ததும் விட்டுவிட்டனர். சில கும்பல்கள் நிலத்தையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் நோக்கத்தில், அயல்நாட்டவர் முதலீடு செய்வதையும் சுற்றுலா பயணிகள் விஜயம் செய்வதையும் தடுப்பதற்கு அவர்களை பயமுறுத்திக் கடத்திக்கொண்டு போய்விடுகின்றனர்.
இவ்வாறு, கடத்தல்காரர்களின் உள்நோக்கங்களும் ஏராளம், கடத்தும் முறைகளும் ஏராளம், கடத்துபவர்களும் கடத்தப்படுபவர்களும் ஏராளம், ஏராளம். ஆனால் இதற்கான பரிகாரங்கள் ஏராளமாக உள்ளதா? இருந்தால் அவை யாவை? உண்மையிலேயே இதை ஒழித்துக்கட்ட முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு விடை காணும்முன் இந்தக் கடத்தல் வியாபாரம் திடீரென அமோக வளர்ச்சி அடைந்திருப்பதற்கு ஆழமான, அடிப்படையான காரணங்களை நாம் ஆராய்வோமாக.
[பக்கம் 5-ன் பெட்டி]
நீங்கள் கடத்தப்பட்டால்
நீங்கள் கடத்தப்பட்டால் என்ன செய்வது? இத்தகைய சிக்கலான சமயத்தில் சிந்தித்து செயல்பட வல்லுனர்கள் கொடுக்கும் சில டிப்ஸ்.
• அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்; அடம்பிடிக்காதீர்கள். முரட்டுத்தனம் செய்பவர்கள்தான் மிகவும் கொடூரமாக நடத்தப்படுகின்றனர். தனியாக கொண்டுபோய் சித்திரவதை செய்யப்படுகின்றனர் அல்லது அவர்களது உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
• பீதியடைய வேண்டாம், கடத்தப்படுகிறவர்களில் பெரும்பாலோரின் உயிருக்கு உலை வைக்கப்படுவதில்லை.
• நாள், நேரம் போன்றவற்றை ஏதாவது ஒரு வகையில் கணக்கிட்டு வையுங்கள்.
• தினந்தோறும் ஏதாவது வேலைகளை பழக்கமாக செய்யுங்கள்.
• நகருவதற்கு உங்களுக்கு அதிக வாய்ப்பில்லாதபோதிலும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
• சுற்றுப்புறத்தை நன்கு நோட்டமிட்டு மனத்திரையில் படம்பிடித்துக் கொள்ளுங்கள்; ஒலிகளையும் வாசனைகளையும் தெரிந்துகொள்ளுங்கள். கடத்தல்காரர்களைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ளுங்கள்.
• முடிந்தால் கடத்தல்காரர்களோடு பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளுங்கள். அதை தொடர்ந்து செய்துவர முயலுங்கள். கடத்தல்காரர்கள் உங்களை பற்றி நன்கு அறிந்துகொள்ளும்போது, உங்களை காயப்படுத்தவோ கொலை செய்யவோ மாட்டார்கள்.
• உங்கள் தேவைகளை பணிவோடு தெரியப்படுத்துங்கள்.
• எக்காரணம் கொண்டும் பேரம் பேசாதீர்கள்.
• விடுவிக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கையில், தப்பிக்கும்வரை தரையில் படுத்தவாறு காத்திருங்கள்.
[பக்கம் 6-ன் பெட்டி]
கிட்நாப் இன்சூரன்ஸ்—சர்ச்சைக்குரிய விஷயம்
இன்சூரன்ஸ் தொழிலை செழிக்கச் செய்வது கடத்தப்படும் நபர்களின் எண்ணிக்கையே. லாயட்ஸ் ஆஃப் லண்டனில் 1990-களில் கிட்நாப் இன்சூரன்ஸ் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதை கண்டு இன்னும் பல கம்பெனிகள் இப்படிப்பட்ட இன்சூரன்ஸை வழங்க முன் வந்துள்ளன. பேரம் பேசுபவருக்கான சம்பளம், பணயத் தொகையை அளிப்பது, சில சமயம் இந்தத் தொகையை மீட்டுத்தர உதவும் நிபுணர்களுக்கு ஃபீஸ் கொடுப்பது போன்ற விஷயங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. இருந்தாலும், இன்சூரன்ஸ் மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட கிட்நாப் இன்சூரன்ஸுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இது குற்றத்தை வியாபாரமாக்கிவிடுகிறது என குறிப்பிடுகின்றனர். கிட்நாப் செய்யப்படுவதை வைத்து லாபம் சம்பாதிப்பது நெறியற்ற செயல் என்றும் சொல்கின்றனர். இதனால், இன்சூரன்ஸ் செய்தவர் தன் சொந்த பாதுகாப்பைக் குறித்து அசட்டையாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும், பணப் பேய்களாக திரியும் கடத்தல்காரர்கள் பணத்தைப் பிடுங்குவதற்கு இன்சூரன்ஸே வழி ஏற்படுத்திக் கொடுப்பதாகிவிடும் என்றும் அவர்கள் சொல்கின்றனர். இது, இந்தக் குற்றச்செயலுக்கு உரம் போடுவதற்கு சமம் என்பது அவர்கள் வாதம். தாங்கள் இன்சூரன்ஸ் செய்த பணத்தை தாங்களே சுருட்டிக்கொள்ள கடத்தல் நாடகம் நடத்துவதற்கும் இது வழி வகுத்துவிடும் என்று சிலர் அஞ்சுகின்றனர். ஜெர்மனி, கொலம்பியா, இத்தாலி ஆகிய நாடுகளில் கிட்நாப் இன்சூரன்ஸ் தடைசெய்யப்பட்டுள்ளது.
கிட்நாப் இன்சூரன்ஸை ஆதரிப்பவர்களும் இதில் இருக்கும் பிரச்சினையை எடுத்துக்காட்டுகிறார்கள்; மற்ற இன்சூரன்ஸ் திட்டங்களைப் போலவே இதிலும் சிலருடைய இழப்பிற்காக பலர் பணத்தைக் கட்ட வேண்டியிருக்கிறது. ஆனால், இன்சூரன்ஸ் செய்துகொண்ட குடும்பங்களுக்கும் கம்பெனிகளுக்கும் தகுதிபெற்ற வல்லுநர்களின் உதவி கிடைக்கிறது, இவர்களால் கவலை குறைகிறது, பேரம் பேசி தொகையை குறைக்கிறார்கள், கடத்தல்காரர்களை பிடிப்பது சுலபமாகிறது, இதனால் ஓரளவு பாதுகாப்பு கிடைக்கிறது என்பது ஆதரவாளர்களின் வாதம்.
[பக்கம் 7-ன் பெட்டி]
ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம்
1974-ல் கோடீஸ்வரர் ரான்டால்ப் ஏ. ஹர்ஸ்ட் என்பவரின் மகள் பேட்டி ஹர்ஸ்ட்டை கடத்திச் சென்றனர். ஆனால், ஆயுதம் ஏந்திய கடத்தல்காரர்களோடு அவளும் சேர்ந்து கொள்ளையடித்தபோது நிலைமை தலைகீழானது. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் தன்னை கடத்தியவர்களை மன்னித்துவிட்டு அவர்கள் எங்கிருந்தாலும் நலமாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
ஸ்வீடனில் ஸ்டாக்ஹோமிலுள்ள ஒரு வங்கியில் 1973-ல் கடத்தப்பட்டவர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளுக்குப்பின் இதற்கு ஸ்டாக்ஹோம் சின்ட்ரோம் என்ற பெயர் வழங்கப்பட்டது. அப்போது கடத்தப்பட்டவர்கள் தங்களைப் பிடித்து வைத்திருந்தவர்களோடு ஒருவித நட்பை வளர்த்துக் கொண்டார்கள். இது, கடத்தப்பட்டவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வேலியாக இருந்தது. கிரிமினல் பிஹேவியர் என்ற நூல் இதைத்தான் சொல்கிறது: “கடத்தப்பட்டவர்களும் கடத்தியவர்களும் ஒருவரையொருவர் நன்றாக தெரிந்துகொள்ளும்போது அவர்கள் ஒருவரையொருவர் விரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு காலத்துக்குப்பின் கடத்தப்பட்டவருக்கு எந்தத் தீங்கும் செய்ய கடத்தல்காரருக்கு மனம்வராது என்பதை இது காட்டுகிறது.”
செச்னியாவில் கடத்தப்பட்டு பின்னர் கற்பழிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டுப் பெண் இவ்வாறு கூறுகிறாள்: “காவலன் எங்களை தனித்தனியாக அறிந்துகொண்ட பிறகு என்னை கற்பழிப்பது தவறு என்ற உணர்வு அவனுக்கு வந்தது. அதற்குப்பின் என்னை கற்பழிக்கவில்லை, அதோடு என்னிடம் மன்னிப்பும் கேட்டான்.”
[பக்கம் 4-ன் படம்]
கடத்தல் என்பது குடும்பத்தினரின் சப்த நாடியை ஒடுக்கி, கதிகலங்க வைக்கும் சம்பவம்
[பக்கம் 5-ன் படம்]
கடத்தப்பட்ட நபர்களுக்கு ஆறுதல் தேவை
[பக்கம் 7-ன் படம்]
கடத்தப்படுகிற அநேகர் உணவோ சுகாதார வசதியோ இன்றி அடைத்து வைக்கப்படுகின்றனர்