‘கிட்நாப்பிங்’—அடிப்படை காரணங்கள்
ஆட்களைக் கடத்துவது நவீன நாளைய கொள்ளை நோய். கொலை, கற்பழிப்பு, திருட்டு, குழந்தை துஷ்பிரயோகம், இன அழிவு ஆகியவையும்கூட இப்படியே. வாழ்க்கை ஏன் இத்தனை ஆபத்துக்கள் நிறைந்ததாக உள்ளது, இரவில் வீட்டைவிட்டு வெளியே வரவே ஏன் மக்கள் பயந்து நடுங்குகிறார்கள்?
ஆட்களை கடத்துவது உட்பட, குற்றச்செயல்கள் இப்படி கொள்ளை நோய் போல பரவியிருப்பதற்கு காரணங்கள் மனித சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றிவிட்ட குறைகளாகும். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படிப்பட்ட ஆபத்தான காலங்கள் வரும் என்று பைபிள் முன்னறிவித்திருப்பது உங்களுக்குத் தெரியுமா? 2 தீமோத்தேயு 3:2-5-ல் முன்னறிவிக்கப்பட்டிருப்பதை தயவுசெய்து வாசித்துப் பாருங்கள்.
“எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.”
எத்தனையோ காலத்துக்குமுன் பதிவு செய்யப்பட்ட இந்த வார்த்தைகள் இன்றைய நிலைமையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறதே என்று நீங்கள் ஒருவேளை வியக்கலாம். நம்முடைய காலத்தில்தான் மனித சமுதாயத்தில் புரையோடிய குறைபாடுகள் மிகவும் அதிக அளவில் எரிமலையாக வெடித்துக் கொண்டிருக்கின்றன. மனித நடத்தையில் நாம் காணும் வருத்தத்திற்குரிய இந்த நிலைமையை விவரிப்பதற்கு முன்னால் பைபிளில் இந்த வார்த்தைகளை பதிவு செய்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும்: ‘கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.’ (2 தீமோத்தேயு 3:1) கொள்ளை நோய் போல எங்கும் காணப்படும் இந்தக் கடத்தலுக்கு காரணமாக சமுதாயத்தில் இருக்கும் மூன்று முக்கிய குறைபாடுகளை நாம் இப்போது சிந்திக்கலாம்.
சட்டத்தை அமல்படுத்துவதில் பிரச்சினைகள்
“துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.”—பிரசங்கி 8:11.
குற்றச்செயல்களை சமாளிக்கும் அளவுக்கு பல காவல் படைகளுக்கு போதிய பொருளாதாரமும் சக்தியும் இருப்பதில்லை. ஆகவே அநேக நாடுகளில் ஆட்களைக் கடத்துவது ஆதாயம் தரும் குற்றச்செயலாக உள்ளது. 1996-ல் கொலம்பியாவில் ஆட்களை கடத்தும் கடத்தல்காரர்களில் 2 சதவீதத்தினர் மாத்திரமே தண்டிக்கப்பட்டனர். மெக்ஸிகோவில் 1997-ல் குறைந்தபட்சம் 20 கோடி டாலர் மீட்புத்தொகையாக செலுத்தப்பட்டது. பிலிப்பீன்ஸில் சில கடத்தல்காரர்கள் மீட்புத் தொகையாக காசோலைகளைக்கூட பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
தடுக்க வேண்டிய போலீஸே லஞ்ச ஊழலில் ஈடுபடுவது, சில சமயங்களில் குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிப்பதில் தடையாக இருக்கிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, கடத்தலை தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட படைகளின் தலைவர்களே ஆட்களைக் கடத்துவதாக மெக்ஸிகோ, கொலம்பியா, முன்னாள் சோவியத் யூனியன் ஆகிய இடங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்களின்படி, பிலிப்பீன்ஸில் 52 சதவீதம் ஆட்கள் கடத்தப்படுவதில், பணியில் இருக்கும் அல்லது ஓய்வுபெற்ற போலீஸ் அல்லது இராணுவத்தை சேர்ந்த ஆட்களுக்கும் பங்கிருக்கிறது என பிலிப்பீன்ஸ் நாட்டு சட்ட மன்றத் தலைவர் பிளாஸ் ஓப்லி ஏஷியாவீக்-ல் கூறியிருக்கிறார். ஆட்களைக் கடத்துவதில் பேர்போன மெக்ஸிகோ நாட்டு மனிதன் ஒருவனை, “நகராட்சி, காவல்துறை அதிகாரிகள், அரசாங்க வக்கீல்கள் ஆகியோருக்கு கொடுத்த லஞ்சம் மதில்போல” பாதுகாத்ததாக சொல்லப்படுகிறது.
வறுமையும் சமுதாயத்தில் காணப்படும் அநீதியும்
“நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப் பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன்; அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்களின் பட்சத்தில் பெலம் இருந்தது.”—பிரசங்கி 4:1.
சமுதாயத்தில் இன்று அநேகருடைய பொருளாதார நிலைமைகள் மிகவும் பரிதாபத்துக்குரியது, இவர்கள்தான் அநேகமாக ஆட்களைக் கடத்தும் தொழிலை செய்கிறார்கள். ஆகவே, உலகில் பணக்காரருக்கும் ஏழைகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டுவரும் வரையில், நேர்மையாக பணம் சம்பாதிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இல்லாத வரையில், ஆட்களைக் கடத்துவது ஒரு தொடர்கதையாகவே இருக்கும். ஒடுக்கப்படுதல் இருக்கும் வரை அதற்கு பதிலடி கொடுப்பதற்கு ஆட்களைக் கடத்துவதும் இருக்கும்; இது சகிக்க முடியாத சூழ்நிலை என்று அவர்கள் நினைப்பதை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டுவதாக நினைக்கின்றனர்.
பேராசை, அன்பில்லாமை
“பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது.” (1 தீமோத்தேயு 6:10) “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம்.”—மத்தேயு 24:12.
பண ஆசையின் காரணமாக வரலாறு முழுவதிலும் மக்கள் கொடிய காரியங்களைச் செய்து வந்திருக்கிறார்கள். வேறு எந்தக் குற்றமும் ஆட்களை கடத்தும் குற்றத்தைப் போல மனிதரின் வேதனை, துக்கம், விரக்தி ஆகியவற்றை அந்த அளவுக்கு வியாபாரமாக்குவது கிடையாது. நிறைய பேருக்கு பேராசையே, அதாவது பண ஆசையே முன்பின் தெரியாத ஒருவரை கொடுமைப்படுத்தி சித்திரவதை செய்து அவருடைய குடும்பத்துக்கு வாரக்கணக்கில், மாதக்கணக்கில், சில சமயங்களில் வருடக்கணக்கில் கொடுமையான வேதனைகளை சுமக்கும்படி செய்கிறது.
மனிதநேயத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, பணம் பணம் என பேயாய் அலையும் இந்தச் சமுதாயத்தில் ஏதோ பயங்கரமான கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. சந்தேகமின்றி இதுவே ஆட்களை கடத்துதல் உள்ளிட்ட எல்லாவித குற்றச்செயல்களும் தழைத்தோங்குவதற்கு சாதகமான சூழ்நிலைமையை உருவாக்கியுள்ளது.
பைபிள் சொல்கிறபடி நாம் ‘கடைசி நாட்களில்’ இருக்கிறோம் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? அப்படியென்றால், பூமிக்கும் நமக்கும் இது எதை அர்த்தப்படுத்தும்? ஆட்களை கடத்துதல் உட்பட மனிதகுலம் எதிர்ப்படும் பயங்கரமான பிரச்சினைகளுக்கு பரிகாரம் இருக்கிறதா?
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
இது புதிதல்ல
மோசேயின் நியாயப்பிரமாணம் பொ.ச.மு. 15-ம் நூற்றாண்டிலேயே கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. (உபாகமம் 24:7) பொ.ச.மு. முதலாம் நூற்றாண்டில் ஜூலியஸ் சீசரும் பொ.ச. 12-ம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசன் அஞ்சா நெஞ்சம் படைத்த முதலாம் ரிச்சர்டும் பணத்துக்காக கடத்தப்பட்டார்கள். 1533-ல் இன்கா மக்களின் தலைவன் அதாஹுல்பாவை விடுவிக்க ஃபிரான்சிஸ்கோ பிஸாரோ என்ற ஸ்பானிய படைத்தலைவன் கேட்ட தொகை இதுவரை யாரும் கேட்டிராத பம்பர் தொகை—24 டன் பொன்னும் வெள்ளியும்! அவ்வளவு கிடைத்தும் அந்தக் கடத்தல்காரன் இவரை விடுவிக்காமல் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டான்.
[பக்கம் 9-ன் பெட்டி/படம்]
காவல்துறை வசதியிருந்தும் எங்கும் கடத்தல்