‘கிட்நாப்பிங்’—பாரெல்லாம் வியாபாரம்
‘கிட்நாப்பிங்’—சமீபத்திய பத்தாண்டுகளில் பாரெல்லாம் தூள்பறத்தும் வியாபாரமாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது! 73 நாடுகளில், 1968-க்கும் 1982-க்கும் இடைப்பட்ட காலத்தில் கடத்தப்பட்டோர் சுமார் 1,000 பேர். ஆனால் 1990-களின் பிற்பகுதியிலோ ஒவ்வொரு ஆண்டும் 20,000 முதல் 30,000 பேர் என ஓர் அறிக்கை சொல்கிறது.
ரஷ்யாவிலிருந்து பிலிப்பீன்ஸ் வரை எங்கு பார்த்தாலும், ‘கிட்நாப்’ செய்வது குற்றவாளிகள் மத்தியில் ஒரு ஃபேஷனாகிவிட்டது! சுவாசிக்கும் எதையும் ‘சுட்டுக்கொண்டு’ போவதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனர். இந்தக் கூத்தை கேளுங்கள்: தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த 24 மணிநேரத்திற்குள்ளாகவே சேயை தள்ளிக்கொண்டு போய்விட்டார்களாம்! குவாதமாலாவில் சக்கர நாற்காலியில் வலம் வந்துகொண்டிருந்த 84 வயது ‘குமரியை’ கடத்திச்சென்று இரண்டு மாதங்களுக்குக் கைதியாக வைத்திருந்தார்கள். ரியோ டி ஜெனிரோவில், தெருவில் நடமாடும் எவரையும் போக்கிரிகள் பிடித்துக்கொண்டுபோய் விடுகிறார்கள். சில சமயங்களில் அவர்களை பணயமாக வைத்துக்கொள்கிறார்கள்—வெறும் 100 டாலருக்கு!
நாலுகால் ஜீவன்களுக்கும் இதே கதிதான். சில ஆண்டுகளுக்கு முன், தாய்லாந்தில் ‘எஃகு’ உள்ளம் படைத்த ஆசாமிகள் ஆறு டன் எடையுள்ள யானையை அலாக்காக “தூக்கிக்கொண்டு” போய்விட்டார்கள்! அதற்கு கேட்ட பணயத் தொகை 1,500 டாலர்! மெக்ஸிகோ குற்றவாளி கும்பல்கள் புதிதாக தங்கள் கும்பலில் சேருபவர்களுக்கு ‘டிரெய்னிங்’ கொடுக்கிறார்கள்—ஆட்களை கடத்துவதற்கு முன்னால் செல்லப்பிராணிகளை கடத்துவதும் ஆடு மாடுகளை “ஓட்டிக்கொண்டு” வருவதும்தான் அந்த டிரெய்னிங்!
முன்பெல்லாம் முக்கியமாக பணக்காரர்களைத்தான் கடத்திக்கொண்டு போவார்கள். ஆனால் அந்தக் காலமெல்லாம் ‘லிஃப்ட்’ ஏறிவிட்டது. ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையை கேளுங்கள்: “குவாதமாலாவில் ஆட்கள் கடத்திச் செல்லப்படுவது அன்றாடம் காட்சி. ‘ஹூம், முன்பெல்லாம் சீமான்களைத்தான் புரட்சிக்காரர்கள் கடத்திக்கொண்டு போனார்கள்’ என்று அப்போது இருந்த ‘நல்ல நிலைமைகளை’ பற்றி இங்குள்ளவர்கள் இப்பொழுது அங்கலாய்க்கிறார்கள். ஆனால் இப்போதோ பணக்காரர்கள், பரதேசிகள், சிறுசுகள், பெருசுகள் என்று யாரையும் விட்டுவைப்பதில்லை.”
‘பெரும்புள்ளிகள்’ கடத்தப்பட்டால் கொட்டை எழுத்துக்களில் செய்திவரும்—அதுவும் முன்பக்கத்தில்! ஆனால் ‘சிறுபுள்ளிகள்’ விஷயமோ ஓரம் சாரத்திலும் வருவதில்லை. ஏன் இந்த இருட்டடிப்பு? சொல்லப்போனால், “கடத்தப்படுவதை பல காரணங்களுக்காக தேசங்கள் விளம்பரப்படுத்த விரும்புவதில்லை.” இதற்கான காரணங்களை அறிய அடுத்த கட்டுரைக்கு திருப்பவும்.
[பக்கம் 3-ன் வரைப்படம்]
(For fully formatted text, see publication)
மெக்ஸிகோ
ஆண்டுக்கு சுமார் 2,000 பேர் கடத்தப்படுவதால் இதற்கு “சிறு தொழில்” என்றே பெயர்.
கிரேட் பிரிட்டன்
லாயட்ஸ் ஆஃப் லண்டன் என்ற இன்சூரன்ஸ் கம்பெனியில் 1990 முதற்கொண்டு கடத்தல் காப்பீடு வருடத்திற்கு 50 சதம் அதிகரித்திருக்கிறது.
ரஷ்யா
ரஷ்யாவின் தெற்கு பகுதியிலுள்ள காகஸஸ் பகுதியில் மட்டுமே கடத்திச் செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. 1996-ல் 272 பேர். 1998-ல் 1,500 பேர்.
பிலிப்பீன்ஸ்
“ஏஷியாவீக்” பிரகாரம், “ஆசியாவின் கடத்தல் கேந்திரம் பிலிப்பீன்ஸ்.” அங்கே இயங்கும் கடத்தல் கும்பல்கள் 40-க்கும் அதிகம்.
பிரேஸில்
கடத்தல்காரர்கள் தாங்கள் கடத்தி வந்தவர்களை விடுவிப்பதற்காக ஒரே ஆண்டில் பெற்ற தொகை 120 கோடி டாலர்.
கொலம்பியா
சமீப ஆண்டுகளாக வருடந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கடத்தப்பட்டிருக்கிறார்கள். மே 1999-ல் ‘மாஸ்’ நடந்துகொண்டிருக்கும்போதே கலகக்காரர்கள் வந்து நூறுபேரை கடத்திக்கொண்டு போய்விட்டார்கள்.
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.