உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 12/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • லத்தீன் அமெரிக்காவில் கடத்தல்கள்
  • நல்லதே நினைப்பது ஆரோக்கியமளிக்கிறது
  • குண்டுப் பிள்ளைகள்
  • அசுத்த காற்று
  • மேற்கு ஆப்பிரிக்காவில் பரவியுள்ள மெனின்ஜைடிஸ்
  • கண்ணிவெடிகளுக்கு தடையில்லை
  • நகரங்களின் வேகமான வளர்ச்சி
  • “இயற்கைக்கே நன்கு தெரிகிறது”
  • அஜாக்கிரதையாக படகோட்டுவது
  • கண்டுபிடிக்கப்பட்டது—2,000 வருடத்திற்கு பழமையான ஒரு படகு
  • இயல்பான வளர்ச்சியை நிச்சயப்படுத்திக்கொள்வது
  • போர் பிள்ளைகளை எப்படி சீரழிக்கிறது
    விழித்தெழு!—1997
  • கண்ணி வெடிகளால்—ஏற்படும் சேதம்
    விழித்தெழு!—2000
  • ‘கிட்நாப்பிங்’—பிஸினஸ் “பயங்கரம்”
    விழித்தெழு!—1999
  • கண்ணிவெடிகள்—ஓர் உலகளாவிய அச்சுறுத்தல்
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 12/22 பக். 28-29

உலகை கவனித்தல்

லத்தீன் அமெரிக்காவில் கடத்தல்கள்

அர்ஜன்டினாவின் செய்தித்தாளான ஆம்பிடோ ஃபினான்ஸியேரோ-ன்படி, ஆட்களைக் கடத்துவது லத்தீன் அமெரிக்காவில் பல-கோடி லாபமளிக்கும் வியாபாரமாகியிருக்கிறது. 1995-ல் சுமார் 6,000 பேர் கடத்தப்பட்டதாக அறிக்கைகள் காண்பிக்கின்றன. 1995-ம் வருடத்தில் கொலம்பியாவில்தான் அதிகபட்சமாக 1,060 பேர் கடத்தப்பட்டதாக சமீபத்தில் செய்யப்பட்ட பரிசீலனை காட்டியது; அதற்கடுத்தபடியாக, மெக்ஸிகோ, பிரேஸில், பெரு ஆகிய இடங்களில் அதே வருடத்தில் நூற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்டதாக அந்த பரிசீலனை காட்டியது. கொலம்பியாவிலுள்ள கடத்தல்காரர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 30 கோடி டாலர் மீட்புத் தொகையாக செலுத்தப்படுகிறது. பிரேஸிலில், 1995-ல் கடத்தல்காரர்களுக்கு மொத்தம் சுமார் 100 கோடி டாலர் செலுத்தப்பட்டது. இது மூன்று மடங்கு அதிகரிப்பாகும். கடத்தப்படுபவர்கள் பணக்காரர்களாகவும் புகழ்பெற்றவர்களாகவும் இருக்கலாம் அல்லது நடுத்தர சுற்றுலா பயணிகளாக இருக்கலாம் அல்லது குறைவூதியம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகளாக இருக்கலாம். சில சமயங்களில் மீட்புத் தொகையை தவணை முறையில் பெற்றுக்கொள்ள கடத்தல்காரர்கள் சம்மதிக்கின்றனர். மறுபடியும் கடத்தப்படுவார்களென பயந்து, விடுவிக்கப்பட்ட பின்பும் கடத்தப்பட்டோர் அவ்வப்போது தவணை முறையில் பணத்தை செலுத்துகின்றனர்.

நல்லதே நினைப்பது ஆரோக்கியமளிக்கிறது

தீமையே நிகழும் என்ற நினைப்பு மனரீதியிலும் சரீரரீதியிலும் சுகவீனத்தை அளிக்கும், நல்லதே நடக்கும் என்ற நினைப்போ உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையை, பின்லாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி உறுதிசெய்திருக்கிறது. 42-லிருந்து 60 வயதுவரையுள்ள ஆட்களில் சுமார் 2,500 பேர், 4-லிருந்து 10 வருடங்களுக்கு கவனிக்கப்பட்டனர். சைன்ஸ் நியூஸ் என்ற பத்திரிகையின்படி, “நம்பிக்கையற்ற மனப்பான்மையை குறைவாகவே பெற்றிருந்த அல்லது சிறிதும் பெற்றிராத ஆட்களைவிட இந்த மனப்பான்மையை மிதமான அளவிலிருந்து உயர்ந்த அளவில் பெற்றிருந்த [ஆண்கள்] . . . இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமாக இறந்தனர்; மேலும் இவர்கள் புற்றுநோயாலும் மாரடைப்பாலும்கூட அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.”

குண்டுப் பிள்ளைகள்

தி வீக்கென்ட் ஆஸ்ட்ரேலியன் என்ற செய்தித்தாளின்படி, ஊட்ட-உணவு பொதுநல வல்லுநரான டாக்டர் பிலிப் ஹார்வே, “ஆஸ்திரேலிய பிள்ளைகள் குண்டாகிக்கொண்டே வருகிறார்கள், வேகமாக குண்டாகிக்கொண்டே வருகிறார்கள்” என்று சமீபத்தில் அறிவித்தார். ஆஸ்திரேலியாவில் குண்டுப் பிள்ளைகளின் சதவீதம் கடந்த பத்தாண்டில் இருமடங்காகியிருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி காட்டுவதே அவர் கவலைக்கு காரணமாயிருக்கிறது. 9-லிருந்து 15 வயதுவரையுள்ள பிள்ளைகளில் சுமார் 10 சதவீதத்தினர் எடை பிரச்சினையின் காரணமாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. குண்டுப் பிள்ளைகளின் சதவீதம் அடுத்த பத்தாண்டில் மறுபடியும் இரட்டிப்பாகலாம் என்பதாக டாக்டர் ஹார்வே எண்ணுகிறார். பெரியவர்கள் குண்டாவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் உடற்பயிற்சி இன்மையே, பிள்ளைகள் அதிக குண்டாவதற்கும் காரணம்; அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மற்றொரு காரணம் என்பதாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

அசுத்த காற்று

பென்சீன், ரோமில் தூய்மைக்கேட்டை உண்டாக்குகிறது என்பதாக உலக வனவாழ்வு நிதி அமைப்பு (World Wildlife Fund [WWF]) தெரிவித்திருக்கிறது; வாகனங்களால் வெளியேற்றப்படும் பென்சீன், புற்றுநோய் உண்டாக்கும் மாசுப்பொருளாக சந்தேகிக்கப்படுகிறது. WWF-ன் ஆராய்ச்சியாளர்கள், 8-லிருந்து 18 வயதுவரையுள்ள 400 இளம் நபர்களுக்கு பென்சீன் அளவிடும் கருவிகளைப் பொருத்தினர்; இந்த நபர்கள் ஆராய்ச்சிக்கு தங்களை முன்வந்து அளித்தனர். ரோமில் ஒரு “கன மீட்டர் [35 கன அடி] காற்றில் சராசரியாக 23.3 மைக்ரோகிராம் பென்சீன் இருப்பதாக” அந்த ஆராய்ச்சி காட்டியது; இது, ஒரு கன மீட்டருக்கு 15 மைக்ரோகிராம் என்ற சட்ட வரம்பைக் காட்டிலும் அதிகம். இந்த ஆராய்ச்சியை அடிப்படையாக வைத்து, ரோமில் அசுத்தமான காற்றை ஒரேவொரு நாள் சுவாசிப்பதே 13 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என விஞ்ஞானிகள் விளக்குவதாக இத்தாலிய செய்தித்தாளான லா ரேபூப்ளிக்கா அறிக்கை செய்கிறது.

மேற்கு ஆப்பிரிக்காவில் பரவியுள்ள மெனின்ஜைடிஸ்

மேற்கு ஆப்பிரிக்காவில், அறியப்பட்டிருப்பதிலேயே மிகக் கொடிய தொற்று நோய் ஒன்று திடீரென பரவியிருப்பதால், 1,00,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; 10,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர் என்பதாக தி இன்டர்நாஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் அறிக்கை செய்கிறது. பாக்டீரியல் மெனின்ஜைடஸ் (மூளை உறையழற்சி), சஹாரா பாலைவனத்திற்கு தெற்கேயுள்ள வறண்ட, தூசி நிறைந்த பகுதியை கடுமையாக தாக்கியிருக்கிறது; அங்கே சுவாச நோய்கள் பொதுவாக காணப்படும். மெனின்ஜைடஸ், மூளையிலும் தண்டுவடத்திலும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அது காற்று வழியாக பரவுகிறது—இருமல் அல்லது தும்மல் அதைப் பரப்பும். இந்நோயை தடுப்பு மருந்துகளைக்கொண்டு தவிர்க்கலாம்; முக்கியமாக ஆரம்ப கட்டத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளைக்கொண்டு குணப்படுத்தலாம். “1996-ம் வருட மெனின்ஜைடிஸ் நோய், தென்-சஹாரா இதுவரை அனுபவித்தேயிராத மிகக் கொடிய ஒன்று” என்பதாக டாக்டர்ஸ் வித்தவ்ட் பார்டர்ஸ் என்ற அமைப்பின் பேச்சாளர் கூறினார். “சாவு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது,” என்பதாகவும் அவர் சொன்னார்.

கண்ணிவெடிகளுக்கு தடையில்லை

ஸ்விட்ஸர்லாந்திலுள்ள ஜெனீவாவில் இரண்டு வருடங்களாக நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்பு, சர்வதேச பிரதிநிதிகள், கண்ணிவெடிகளை உலகம் முழுவதும் தடை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. சில வகை கண்ணிவெடிகளை தடைசெய்து மற்ற சிலவற்றை கட்டுப்படுத்த வேண்டுமென அவர்கள் தீர்மானித்தாலும், 2001-ம் வருடத்தில் நடக்கவிருக்கும் அடுத்த பேச்சுவார்த்தைக்கு முன்பு ராணுவ கண்ணிவெடிகள் அனைத்தும் முழுமையாக தடை செய்யப்படாது. இதற்கிடையில், அந்த ஐந்து வருடங்களுக்குள் கண்ணிவெடிகள் மேலும் 50,000 பேரைக் கொன்று, 80,000 பேரை ஊனமாக்கும் என்பதாகவும் இவர்களில் அநேகர் பொதுமக்களே என ஒரு மதிப்பீடு காட்டுகிறது. தி வாஷிங்டன் போஸ்ட்-ல் வெளிவந்த ஒரு தலையங்கம் இந்தத் தீர்மானத்தைக் குறித்து இவ்வாறு புலம்பியது: “சண்டைக்காக புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள், சண்டை முடிந்த பிறகும் பொது மக்களின் உயிரை கொடூரமாக தொடர்ந்து பலிவாங்குகிறபோதிலும், அதிகமான கண்ணிவெடிகளை வைத்திருக்கும் நாடுகள் அவற்றை இன்னமும் விரும்புகின்றன.” ஐக்கிய நாட்டு அமைப்பின் மதிப்பீட்டின்படி, 68 நாடுகளில் இப்போது சுமார் 10 கோடி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கின்றன.

நகரங்களின் வேகமான வளர்ச்சி

அதிகமதிகமான மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்ந்து செல்கின்றனர் என்பதாக ஐக்கிய நாட்டு அமைப்பின் ஆங்கிலப் பிரசுரமான 1996 உலக ஜனத்தொகையின் நிலை அறிக்கை செய்கிறது. அடுத்த பத்தாண்டுகளில், உலகெங்கிலும் நகரவாசிகளின் எண்ணிக்கை 330 கோடியாகும்; இது, 659 கோடியாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படும் உலக ஜனத்தொகையின் பாதியளவாகும். 1950-ல், 83 நகரங்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தனர். இன்று 280-க்கும் அதிகமான நகரங்கள் அந்த ஜனத்தொகையைப் பெற்றிருக்கின்றன; இதுவும்கூட 2015-ம் வருடத்திற்குள் கிட்டத்தட்ட இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1950-ல் நியூ யார்க் நகரத்தில் மாத்திரம்தான் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இருந்தனர்; இன்று அப்படிப்பட்ட நகரங்கள் 14 இருக்கின்றன. அவையெல்லாவற்றிலும் டோக்யோ நகரத்தில்தான் அதிக ஜனத்தொகையாக 2.65 கோடி மக்கள் இருக்கின்றனர்.

“இயற்கைக்கே நன்கு தெரிகிறது”

“சிந்திய எண்ணெய்யை எவ்வாறு சுத்தமாக்குவது என்பது இயற்கைக்கே நன்கு தெரிகிறது,” என்பதாக நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகை சொல்கிறது. 1978-ல் அமோகோ காடிஸ் என்ற எண்ணெய்க் கப்பல் வட பிரான்ஸிலுள்ள பிரிட்டனியின் கரையோரமாய் சேதமடைந்தபோது, சுற்றுச்சூழலில் பெரும் நாசம் ஏற்படலாமென இயற்கை வள பராமரிப்பாளர்கள் பயந்தனர். ஒரு பகுதியில், எண்ணெய்யால் அசுத்தமான மண்ணையும் சதுப்பு நிலத்தையும் அகற்றுவதற்கு உள்ளூர் அதிகாரிகள் ஆறு மாதங்கள் செலவிட்டனர். இன்னும் மோசமாய் அசுத்தமான மற்றொரு இடத்தை சுத்தம் செய்யாமலேயே விட்டுவிட்டனர். இரண்டையும் இப்போது ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சுத்தம் செய்தோர் அந்தளவுக்கு மண்ணையும் சேறையும் அகற்றிவிட்டதால் 39 சதவீத செடிகள் மறுபடியும் வளரவில்லை என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. எனினும், சுத்தம் செய்யப்படாத பகுதியில், கடல் அலைகள் மண்ணை அவ்வளவு நன்றாக சுத்திகரித்திருப்பதால், எண்ணெய்க் கசிவிற்கு முன்பு இருந்ததைவிட இப்போது 21 சதவீதம் அதிக செடிகள் செழுமையாக வளர்கின்றன. அந்தச் சதுப்புநிலம் முழுமையாகவே சுத்தமாகிவிட்டது, எண்ணெய்க் கசிவினால் அசுத்தமானதற்கு கடந்த பல வருடங்களாக எந்த அடையாளமும் தென்படவில்லை.

அஜாக்கிரதையாக படகோட்டுவது

மோட்டார் படகுகள் என பொதுவாக அறியப்பட்டிருக்கும் தனியார் படகுகள், ஐக்கிய மாகாணங்களில் அதிக பிரபலமானவை. இந்தச் சிறிய படகுகள் மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றன; மோட்டார் சைக்கிளைப்போன்று செயல்படுகின்றனர். இந்தப் படகுகளில் செல்வோருக்கு நேரும் பெரும் விபத்துக்களும், சிலசமயம் உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதானது அதிக கவலைக்குரியது. த வால் ஸ்ட்ரீட் ஜர்னல்-ன்படி, “நடைபெறும் விபத்துக்களில் கிட்டத்தட்ட 60 சதவீதம், படகை வாடகைக்கு எடுத்து ஓட்டுவோரால் ஏற்படுகிறது” என மதிப்பிடப்பட்டிருக்கிறது. பெரும்பாலான ஓட்டுனர்கள் சட்டத்திற்கு கீழ்ப்படிந்து லைஃப் வெஸ்ட்டுகளை அணிந்துகொண்டாலும், முறைப்படி படகோட்டுவதில் அனுபவமில்லாததால் அவர்களில் அநேகர் அஜாக்கிரதையாக ஓட்டுகின்றனர். “படகோட்டி மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது தூக்கி எறியப்பட்டால், தண்ணீரில் மோதுவது ஒரு கட்டிடத்தில் மோதுவதற்கு சமமாயிருக்கிறது,” என்பதாக எல்லைக் காவலாளிகளில் ஒருவர் விளக்கினார்.

கண்டுபிடிக்கப்பட்டது—2,000 வருடத்திற்கு பழமையான ஒரு படகு

1986-ல், கலிலேயா கடலில் நீர் மட்டம் எப்போதுமிராத அளவில் குறைந்தபோது, இயேசுவின் காலத்தைச் சேர்ந்த ஒரு படகு வெளியில் தெரிந்தது. அப்போது முதற்கொண்டு, அந்தப் படகு சீக்கிரத்தில் அழிந்துபோவதைத் தடுக்க பதனப்பொருளில் ஊறிக்கொண்டிருந்தது. இப்போது, பதனப்பொருளிலிருந்து அது வெளியே எடுக்கப்பட்டு மாக்டலா பட்டணத்திற்கு அருகே காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது என்பதாக நாஷனல் ஜியாக்ரஃபிக் சொல்கிறது. “அது சுமார் எட்டு மீட்டர் நீளமுள்ளது, பார வலையை பயன்படுத்தியது, ஒருவேளை துடுப்பு வலிப்பதற்கு நான்கு பேரும் சுக்கான் பிடிப்பதற்கு ஒருவரும் இருந்திருப்பர்,” என்பதாக அகழ்வாராய்ச்சியை முன்நின்று நடத்தியவரான ஹெல்லி வாக்ஸ்மன் விளக்குகிறார். அவர் மேலும் இவ்வாறு சொன்னார்: “பழைய படகுகளிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட மரத்துண்டுகளையும் சேர்த்து, குறைந்தபட்சம் ஏழு வகையான மரங்களாவது பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று, மரத்திற்கு பற்றாக்குறை இருந்திருக்க வேண்டும், இல்லையென்றால் அதைச் செய்தவர் மிகவும் ஏழையாக இருந்திருக்க வேண்டும்.”

இயல்பான வளர்ச்சியை நிச்சயப்படுத்திக்கொள்வது

ஒரு பிள்ளையின் வளர்ச்சி மரபுவழியாய் வரும் ஒன்று மட்டுமல்ல என்பதாக சோர்னல் டோ ப்ராசில்-ல் வெளிவந்த ஒரு அறிக்கை சொல்கிறது. “சரியான வளர்ச்சியில் ஊட்டச்சத்துள்ள உணவிற்கு மிக முக்கிய பங்கிருக்கிறது,” என்பதாகவும் நடுத்தர குடும்பங்களும்கூட ஊட்டச்சத்துக் குறைவான உணவையே உண்கின்றனர் என்பதாகவும் அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. “வளர்ச்சியைத் தூண்டுவிக்கும் மற்றொரு முக்கிய செயல், காலந்தவறாத உடற்பயிற்சி,” என்பதாக நாளமில்லாச் சுரப்பியலின் (endocrinology) பேராசிரியரான ஆமெல்யோ கோடாய் மாடாஸ் சொல்கிறார். “பல மணிநேரங்கள் ஓய்வாக தூங்குவதும் அவசியம், ஏனெனில் பிள்ளை தூங்கும்போதுதான் வளர்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கப்படுகிறது,” என்பதாக அவர் சொன்னார். மனக்கவலைகள்கூட பிள்ளையின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கலாம். “தொலைக்காட்சியை பல மணிநேரங்களாக தொடர்ந்து பார்ப்பது, முக்கியமாக வன்முறைக் காட்சிகளைப் பார்ப்பது பிள்ளையின் தூக்கத்திற்கு கேடுவிளைவிப்பதாய் இருக்கலாம், அதோடுகூட ஆரோக்கியமான வளர்ச்சியையும் தடை செய்யலாம்,” என்பதாக வால்மிர் கோடின்யூ என்ற என்டோக்ரினாலஜிஸ்ட் சொல்கிறார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்