உங்கள் வீடு பாதுகாப்பாக இருக்க—இதோ, 20 டிப்ஸ்!
“அப்பாடா, ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தாச்சு!” அந்த நாள் வேலையை முடித்து வீடு திரும்புகையில், பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வந்துசேர்ந்த மகிழ்ச்சியில் நிம்மதி பெருமூச்சு விடுகிறீர்கள். ஆனால் நீங்கள் உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்கிறீர்களா? சொல்லப்போனால், வேறெங்கும் அல்ல, வீட்டில்தான் அறிந்தோ அறியாமலோ அநேக அபாயங்களை சந்திக்கிறார்கள் சிலர். குறிப்பாக செல்லக்குட்டிகளை, மழலைச் செல்வங்களை உடையவர்கள் வீட்டிற்குள்ளே ஏற்படும் எண்ணற்ற விபத்துகளை தவிர்க்க ஞானமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதோ! உங்களுக்கு ஒரு பட்டியல். இதைப் பயன்படுத்தி உங்கள் வீட்டைச் சுற்றி பார்வையை ஓடவிட்டு ஏதேனும் மாற்றங்கள் தேவையானால் இப்போதே அதை சரி செய்யலாமே.
✔ செடிகள். தவழ்ந்து செல்லும் குழந்தைகள் உங்களுக்கு இருந்தால், வீட்டில் வளர்க்கும் செடிகளில் ஏதேனும் விஷத்தன்மை உள்ளதா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். சொல்லவா வேண்டும், சிறு குழந்தைகள் கையில் கிடைப்பதையெல்லாம் வாயில் போட்டுவிடுவார்கள் என்பதுதான் தெரிந்த விஷயமாச்சே.
✔ திரைச்சீலைகள். திரைச்சீலைக் கயிறுகள் நண்டு சிண்டுகளின் கைகளுக்கு எட்டாத அளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அவை சிறு குழந்தைகளை சிக்க வைக்கலாம்—கழுத்தைகூட நெரித்து விடலாம்.
✔ அலமாரிகள், டிராயர்கள். அவை பூட்டப்பட்டிருக்கிறதா என்பதை கவனியுங்கள். இது, கூர்மையான விளிம்புகளுடைய சமையல் பாத்திரங்கள் மற்றும் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் ஆபத்தான பொருட்களிலிருந்து பாதுகாக்கும்.
✔ படிக்கட்டுகள். இது குப்பைகள் இல்லாமல் வெளிச்சமாக இருக்கிறதா? தவழும் குழந்தைகள் விழுந்துவிடாமலிருக்க பாதுகாப்பு வேலிகளை அமைத்திருக்கிறீர்களா?
✔ ஸ்டவ். சட்டிகள் மற்றும் வாணலியின் கைப்பிடிகள் கைக்கு எளிதில் எட்டாதபடி திருப்பி வையுங்கள், குறிப்பாக சமைக்கையில்.
✔ பிரஷர் குக்கர். ஒவ்வொரு முறை உபயோகித்தபின் நன்றாக சுத்தம் செய்யுங்கள். ஸேஃப்டி வால்வ் சரியாக வேலை செய்கிறதா என்பதையும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
✔ தீயணைக்கும் கருவி. வீட்டில் ஒன்றாவது இருக்க வேண்டும், வயதுவந்த ஒவ்வொருவரும் இதை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்திருக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
✔ ட்டில்கள். மரச்சட்டங்கள் நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தையின் தலை அடிபடாதவாறு மெத்தையை சுற்றியுள்ள இடைவெளி குறைவாக இருக்க வேண்டும்.
✔ ஜன்னல்கள். நேரான கம்பி அல்லது மரச்சட்டங்கள் பிள்ளைகள் கீழே விழாமல் பாதுகாக்கும், தீ பிடிக்குமானால் பெரியவர்களால் எளிதில் அகற்றிவிட முடியும்.
✔ வைட்டமின்களும் மருந்துகளும். இவற்றை பூட்டப்பட்ட அலமாரிக்குள் வைக்கவும் அல்லது பிள்ளைகளின் கைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
✔ தண்ணீர் தொட்டி. சிறு குழந்தையை தண்ணீர் தொட்டி அல்லது தண்ணீர் நிரம்பிய வாளி பக்கம் யாருமின்றி தனியாக விட்டுவிடக்கூடாது. ஒரு குழந்தை மூழ்கிவிடுவதற்கு கொஞ்சம் நேரம்—கொஞ்சம் தண்ணீர்—போதுமானது.
✔ மைக்ரோவேவ் அவன்கள். மைக்ரோவேவில் உணவு வேகமாக சூடாகிவிடுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உதாரணமாக பால் பாட்டில் சிறிது வெது வெதுப்பாக இருக்கையிலேயே சுட்டு விடலாம்.
✔ எலக்ட்ரிக் அவன். உங்களுடைய அவனை அவ்வப்போது பரிசோதிக்கவும். இற்றுப்போன மின்சார வயர் மிகவும் ஆபத்தானது.
✔ கேஸ் ஸ்டவ் கிரில். கிரில் சூடாக இருக்கையில் பிள்ளைகள் பாதுகாப்பான தூரத்தில் இருக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
✔ கேரேஜ் கதவு. கேரேஜ் கதவு நகர்ந்து கொண்டிருக்கையில் குறிப்பாக, மின்சாரத்தால் இயக்கப்படுவதாக இருந்தால் அதற்குக் கீழாக ஓடக் கூடாது என துரு துருவென துள்ளித்திரியும் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
✔ ஸ்மோக் டிடெக்டர். அவற்றை சுத்தமாக வைத்து தவறாமல் சரிபார்க்கவும். பாட்டரிகளை ஒவ்வொரு வருடமும் மாற்றவும்.
✔ மின்சார வயர்கள், ‘சாக்கெட்’கள். இற்றுப்போன மின்சார வயர்களை அகற்றவும். ‘சாக்கெட்’களை பயன்படுத்தவில்லையென்றால் பாதுகாப்பான உறைகளையோ அல்லது மூடிகளையோ போடுவது சிறந்தது.
✔ மின்சார சாதனங்கள். மின்சார சாதனங்களை பேசினுக்கு அல்லது ‘ஸிங்’குக்கு தூரத்தில் வையுங்கள். கிரவுண்ட் ஃபால்ட் சர்க்யூட் இன்டரப்டர்ஸ் (GFC) என்ற சாதனம் மின்சார ஷாக் ஏற்படுவதை தடுக்கும்.
✔ விளையாட்டுப் பொருட்கள் வைக்கும் பெட்டி. விளையாட்டுப் பொருட்கள் வைக்கும் பெட்டியில் காற்று உட்புகும் வண்ணம் ஓரிரண்டு துளைகள் இருக்க வேண்டும். மூடி பட்டென்று விழுந்துவிடாமல் தவிர்ப்பதற்கு கீல்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
✔ இஸ்திரி பெட்டி. இஸ்திரி பெட்டியை அதன் வயர் உட்பட பிள்ளைகளின் கைகளுக்கு எட்டாதபடி வைக்கவும்.