உலகை கவனித்தல்
சிறந்த பெற்றோருக்கு தட்டுப்பாடு
பெற்றோர் பிள்ளைகளை வளர்ப்பது பற்றிய கனடாவின் முதல் தேசியச் சுற்றாய்வின்படி, “பிள்ளையின் வளர்ச்சியைப் பற்றியும் அதற்குப் பெற்றோர் செய்யும் உதவி பற்றியும் அநேகருக்கு [பெற்றோருக்கு] ஒன்றுமே தெரியாது” என்கிறது நேஷனல் போஸ்ட் செய்தித்தாள். “ஆறுவயதை எட்டாத சிறுபிள்ளைகளையுடைய அப்பாக்கள், அம்மாக்கள், மற்றும் ஒற்றை தாய்மார்கள்” என 1,600-க்கும் மேற்பட்டோருடன் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வில், 92 சதவீதத்தினர் பெற்றோராயிருப்பது மிக மிக முக்கியமான பொறுப்பு என ஒத்துக்கொண்டனர். இருப்பினும், “அவர்களுள் 50 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தங்கள் பிள்ளைக்கு வாசித்து காட்டுவதாலும், அவர்களுடன் விளையாடுவதாலும், தொடுவதாலும், அரவணைத்துக்கொள்வதாலும் அந்தப் பிள்ளையின் புத்திக்கூர்மையை நல்ல விதத்தில் வளர்க்கலாம் என தெரிந்திருந்தனர்.” சுமார் 30 சதவீதத்தினரோ, “ஒவ்வொரு குழந்தையும் குறிப்பிட்ட அளவு புத்திக்கூர்மையுடனேயே பிறக்கிறது, அதோடு பெற்றோர் என்ன செய்தாலும் அந்த புத்திக்கூர்மையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது என நம்புகின்றனர்.” ஆனால் ஆராய்ச்சிகளோ, “ஒரு குழந்தையின் முதல் ஐந்து ஆண்டுகளே கற்றுக்கொள்வதற்கும், புதுப்புது விஷயங்களைப் படைப்பதற்கும், அன்பாயிருப்பதற்கும், நம்புவதற்கும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்குமான தங்கள் திறமைகளை அபிவிருத்தி செய்வதற்கான மிகச் சிறந்த காலம்,” என்பதை காண்பிக்கின்றன; எனவே சுற்றாய்வு காட்டிய முடிவுகள் வருத்தமடையச் செய்கின்றன என்கிறது போஸ்ட்டின் அறிக்கை.
அரசாங்கத்தோடு சர்ச் ‘டூ’
ஜனவரி 1, 2000 அன்று சர்ச் ஆஃப் ஸ்வீடன் முற்றிலுமாக அரசாங்கத்திலிருந்து தன் உறவை வெட்டிக்கொள்ளப் போவதாக தெரிவிக்கிறது. 16-ம் நூற்றாண்டு முதல் ஸ்வீடன் அரசாங்கத்துடன் அது கொண்டிருந்த உறவு இதனால் துண்டிக்கப்படும். “ஜனவரி 1, 1996 வரையிலும், பெற்றோரில் ஒருவர் அந்த சர்ச் ஆஃப் ஸ்வீடனில் அங்கத்தினராக இருந்தால்போதும், அந்த நபருடைய குழந்தை பிறக்கும்போதே அந்த சர்ச்சின் அங்கத்தினராகிவிட வாய்ப்பிருந்தது, ஞானஸ்நானம்கூட தேவைப்படவில்லை” என்கிறது சர்ச்சின் அதிகாரப்பூர்வ வெப்-சைட். நாற்பது ஆண்டுகள் இந்த போராட்டம் நடந்ததாலும் சர்ச் குருமார் சபைக்குள் நடந்த கலந்தாலோசிப்புகளுக்குப் பிறகும், 1995-ல் இந்த மாற்றம் ஸ்வீடன் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஸ்வீடனின் ஜனத்தொகையில் சுமார் 88 சதவீதத்தினர் இந்த சர்ச் ஆஃப் ஸ்வீடனின் அங்கத்தினரே.
கம்ப்யூட்டரின் ஒப்பாரி
“உங்கள் PC [பர்சனல் கம்ப்யூட்டர்] நீங்கள் நினைத்ததை சாதிக்கவில்லை என்றால் அதை என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்கிறது ஜெர்மன் பத்திரிகையான பிசி வெல்ட். “அதை நீங்கள் உதைக்கிறீர்களா? அல்லது அதை குப்பைத்தொட்டியில் தூக்கி எரிகிறீர்களா?” இப்படிச் செய்வது ஒன்றும் அரிதல்ல, அநேக இடங்களில் நடப்பதுதான். 150 தகவல் தொழில்நுட்ப மேனேஜர்களிடையே நடத்தப்பட்ட ஒரு சர்வதேச சுற்றாய்வு, அவர்களுள் 83 சதவீதத்தினர் கம்ப்யூட்டர்கள்மேல் கோபாவேசப்படுதல் அல்லது அவற்றைப் போட்டு அடித்து உதைப்பது போன்ற வன்முறை செயல்களைச் செய்வதாக அறிவித்தனர் என்பதை காட்டுகிறது. நகல் எடுப்பதற்கு அது எடுக்கும் நேரத்தால் அல்லது மௌஸ் (mouse) வேலை செய்யாமற்போவதால் அதைப் பயன்படுத்துபவர் சீறிஎழுகிறார், மானிட்டரை அடித்து நொறுக்குகிறார், கீபோர்டை குத்துகிறார், மௌஸை தூக்கி எறிகிறார் அல்லது கம்ப்யூட்டரை எட்டி உதைக்கிறார். தன்னைப் பயன்படுத்தியவரின் கோபத்திற்குப் பலியான கம்ப்யூட்டரோ மௌனமாய் ஒடுங்கிவிடுகிறது, ஆனால் பெரும்பாலும் இதற்குக் காரணம் அதைப் பயன்படுத்துபவரே. உதாரணத்திற்கு, ஒரு பெண்மணி தன் ஈ-மெயில் புரோகிராம் எந்த தபாலையும் அனுப்பாததால் கொதித்தெழுந்தார். ஆனால் உண்மை என்னவெனில், அவர் ஈ-மெயிலுக்குரிய முகவரியில் டைப் செய்யாமல், தெருவிற்குரிய முகவரியில் டைப் செய்திருக்கிறார் என்பது பின்பு தெரியவந்தது!
உடை செய்யும் சிபாரிசு
“ஆள் பாதி, ஆடை பாதி” என்னும் சொல்லை நீங்கள் ஒரு இன்டர்வியூவிற்காக தயாராகும்போது, மனதில்கொள்ளவேண்டும் என்கிறது டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள். ஏனென்றால் முதல் அபிப்பிராயமே வெகுகாலம் நம் மனதில் நிற்கும். ஆகவே, “வியாபாரத்துறையில் உள்ளவர்களுக்கான அடிப்படை செய்தி இதுவே: உங்கள் தோற்றத்தைப் பற்றி உங்களுக்கே அக்கறை இல்லையென்றால் நீங்கள் ஓர் அக்கறையற்ற மனிதர் என்பது சுட்டிக்காட்டுகிறீர்கள்!” என்கிறது அந்த அறிக்கை. ஒருவர் நல்ல கண்ணியமான தோற்றத்தை கொண்டிருந்தால், அவருடைய வருங்கால முதலாளி அல்லது வாடிக்கையாளர் தன்னிடமிருந்து தரமான வேலையை எதிர்பார்க்கலாம் என்ற உறுதிமொழியை சொல்லாமல் சொல்கிறார் என்பது சில அனுபவஸ்தர்களின் கருத்து. “கம்பீரமான தோற்றமும் சுறுசுறுப்பும் முதல் பார்வையிலேயே உங்களைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தை கொடுக்கும். உங்கள் தொனியும் பேசும் வேகமும் ரொம்ப முக்கியம்” என்கின்றனர் சில தோற்றத்தைப் பற்றிய ஆலோசகர்கள்.
நவீன கடற்கொள்ளையர்கள்
“இக்காலத்து கடற்பயணத்திற்கு எதிராக இன்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சவால்விடுவது, சந்தேகத்திற்கிடமின்றி கடற்கொள்ளையே” என்கிறது இன்டர்நேஷனல் ஹெரல்ட் டிரிப்யூன் செய்தித்தாள். முக்கியமாக தென்கிழக்கு ஆசிய கடல்களில், கடற்படையின் கண்காணிப்பு குறைவாக இருப்பதால், இந்த கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தக் கடல்களில், உலகத்தின் பிஸியான சில கப்பல்மார்க்கங்கள் இயங்கிவருகின்றன. இப்பகுதிகளிலுள்ள அநேக தீவுகளிலிருந்து ஜரூராக தங்கள் தொழிலை நடத்திவருவதாக நம்பப்படும் இந்த கடற்கொள்ளையர்களை இந்த கடல்கள் பாலூட்டி சீராட்டி வளர்க்கின்றன. நன்கு ஆயுதம் தரித்த இந்த கடற்கொள்ளையர்கள், கப்பல்களிலுள்ள விலையேறப்பெற்ற பொருட்களை சூறையாட அதிவேகப் படகுகளை பயன்படுத்துகின்றனர். இந்த கடற்கொள்ளையர்களை கடலில் பிடிப்பது மிகக் கடினம், ஆனால் அவர்களுடைய திருட்டுப் பொருட்களை விற்பதற்காக கரைக்கு வரும்போது அவர்களை மடக்கினால் மட்டுமே அவர்களை பிடிக்கமுடியும் என்று சில அதிகாரிகள் சொல்கின்றனர்.
எகிப்திய தங்கச் சுரங்கங்கள்
பண்டைய காலங்களில் எகிப்திய தங்கச் சுரங்கங்கள் 1,500 டன்னிற்கும் அதிகமான தங்கத்தை உற்பத்தி செய்திருப்பதாக நம்பப்படுகிறது. பெரிதளவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு அல்லது தோண்டி எடுக்கப்பட்டு சுமார் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டபோதிலும், இன்னும் அதிகளவான தங்கம் பூமிக்கடியில் புதைந்திருப்பதாக புவியியலாளர்கள் கணக்கிடுகின்றனர். “பார்வோனின் மகிமையை மீண்டும் நிலைநாட்டவும், 6,000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்துள்ள இந்த சுரங்கங்களை தோண்டியெடுக்கவும் விரும்புகிறோம்” என்கிறார் சாமி எல்-ராகீ. இவர் ஒரு ஆஸ்திரேலிய தங்கச் சுரங்க கம்பெனியின் நிர்வாக இயக்குனராவார். 16 பார்வோனிய சுரங்கங்கள் இருப்பதாக நம்பப்படும் செங்கடலுக்கு அருகிலுள்ள கிழக்கத்திய பாலைவனங்களை ஆய்வு செய்வதற்காக அவருடைய கம்பெனிக்கு எகிப்திய அரசாங்கம் உரிமையளித்துள்ளது. இருப்பினும், லக்ஸர் (பண்டைய தீப்ஸ்) என்ற இடத்தில் 2,900 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வரைபடம் ஒன்று 1820-ல் கண்டுபிடிக்கப்பட்டது. வனாந்தர மணல்களால் மூடப்பட்டு தொலைந்துபோன 104 சுரங்கங்களையும் அந்த வரைபடம் சுட்டிக்காட்டுகிறது. த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தித்தாளின் பிரகாரம், இன்றுள்ள நவீன தொழில்நுட்பத்தின்மூலம், அந்த தங்கச் சுரங்கங்களுள் சில, மீண்டும் உயிர்பெறக்கூடும் என நம்பப்படுகிறது.
600 கோடியை தாண்டுகிறது
உலக ஜனத்தொகை அக்டோபர் 12, 1999 அன்று 600 கோடியை எட்டிவிட்டதாக ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதிநிறுவனம் மதிப்பிடுகிறது. வெறும் 12 ஆண்டுகளிலே உலக ஜனத்தொகை, 500 கோடியிலிருந்து 600 கோடியை எட்டிவிட்டது, என்கிறார் பாப்புலேஷன் ரெஃபரன்ஸ் பியூரோவின் கார்ல் ஹௌப். ஒரு பியூரோவின் அறிக்கையின் பிரகாரம், “இந்த இருபதாம் நூற்றாண்டில் அதிகரித்த உலக ஜனத்தொகையின் எண்ணிக்கை 440 கோடி,” அதேசமயத்தில் 19-ம் நூற்றாண்டில், “அதிகரித்த ஜனத்தொகையோ வெறும் 60 கோடிதான்.” இந்த இருபதாம் நூற்றாண்டில் ஒரேடியாக உயர்ந்துவிட்ட உலக ஜனத்தொகையின் எண்ணிக்கைக்கான காரணம் ஆயுட்கால எதிர்பார்ப்பில் ஏற்பட்ட அதிகரிப்பே. “இன்று, உலக ஜனத்தொகை அதிகரிப்பில் சுமார் 98 சதவீதம், வளர்ந்துவரும் நாடுகளிலேயே ஏற்படுகிறது” என்று புலம்புகிறார் ஹௌப்.
சாதனைபடைக்கும் தட்ப வெப்பநிலை
“1998-ல் பூமியின் சராசரி தட்ப வெப்பநிலை முன்பிருந்த எல்லா சாதனைகளையும் முறியடித்து புதிய சாதனை படைத்து சிகரத்தில் நின்றது” என்று உவர்ல்ட்வாட்ச் இன்ஸ்டிட்யூட் பிரெஸ் ரிலீஸ் சொல்கிறது. வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரிப்பதன் விளைவால், அதிகமான தண்ணீர் ஆவியாகிவிடுகிறது, மழையும் பெய்கிறது; அதனால் பயங்கரமான சேதங்களை ஏற்படுத்தும் புயற்காற்றுகள் உருவாகின்றன. உதாரணத்திற்கு, “1998-ல் உலகம் முழுவதும் ஏற்பட்ட வானிலையோடு சம்பந்தப்பட்டுள்ள சேதங்களின் மதிப்பு 9,200 கோடி டாலர், ஆனால் அதன் முந்தின பதிவோ 1996-ல் 6,000 கோடி டாலர்; ஆக சமீபத்திய மதிப்பு முன்பைவிட 53 சதவீதம் அதிகம்” என உவர்ல்ட்வாட்ச் கூறுகிறது. கூடுதலாக, சாதனைபடைத்துள்ள இந்தப் புயற்காற்றும் வெள்ளமும், 1998-ல் சுமார் 30 கோடிபேரை அவர்கள் வீட்டிலிருந்து விரட்டிவிட்டிருக்கிறது. 1998-ல் நடந்த இந்த கோர நிகழ்ச்சிகள் உண்மையிலேயே அசம்பாவிதமா அல்லது இப்படிப்பட்ட அழிவுப் படலம் தொடர்கதையாகுமா என்பதைப் பற்றி விஞ்ஞானிகளே நிச்சயமாய் இல்லை. இருப்பினும், அந்த அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “1998-ல் ஏதோ மின்னல் போல் வந்து மறைந்த இந்த நிகழ்ச்சிகள், எதிர்காலத்தைக் காட்டும் ஒரு ஜன்னலாக இருக்கலாம் என தட்ப வெப்பநிலை ஆராய்ச்சி கணிப்புகள் காட்டுகின்றன.”
அதிவேகக் காடுகள்
சுரங்கங்களால் நாசப்படுத்தப்பட்ட அமேசான் மழைக்காட்டின் ஒரு பகுதி, இரண்டே வருடத்திற்குள்ளாக செழிப்பான அடர்ந்த காடாக மாற்றப்பட்டுவிட்டது, என்று அறிவிக்கிறது நியூ சைன்டிஸ்ட் பத்திரிகை. பிரேஸிலின் அரசு வேளாண்மை ஆராய்ச்சி மையமான எம்ப்ராப்பாவில், நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களை மரத்தின் விதைகளில் செலுத்தும் முறையை விஞ்ஞானிகள் உருவாக்கினர். அந்த விதைகள் நடப்பட்டபிறகு, அதிவேகத்தில் வளர்கின்றன. பாக்ஸைட் சுரங்கத்தால் அதிகம் நாசப்படுத்தப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட காடுகள் உள்ள பாராவின் வடக்குப்பகுதியான ஓரிஷேமேனாவில் இந்த முறை பயன்தருவது ஊர்ஜிதமானது. முந்தைய காட்டில் 6 சதவீதம் மட்டுமே மீந்திருக்கும் இடமாகிய பிரேஸிலின் கிழக்குக் கரையோரப் பகுதியில் இந்த புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திவருகிறார்கள் என்கிறது அந்தப் பத்திரிகை.
தாயின் அருமை
ஒரு வருடத்திற்கு ஒரு தாய் செய்யும் வேலைகளுக்குரிய மதிப்பு அல்லது சம்பளம் எவ்வளவு என எப்போதாவது கணக்கிட்டிருக்கிறீர்களா, நீங்கள் எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்கும் என நினைக்கிறீர்கள்? த வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில் வந்த ஒரு அறிக்கையின் பிரகாரம் அவருக்கு ஒரு வருடத்திற்கு 5,08,700 டாலர் கொடுக்கவேண்டும்! அம்மாமார்கள் செய்யும் வேலைகளின் தோராய சம்பளத்தைக் கணக்கிட்டுப் பார்த்தபோது வந்த எண்ணிக்கையே இது. அவர்களுடைய வருடாந்தர சம்பளத்தோடு அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்த 17 வேலைகளில் சில: குழந்தைப் பராமரிப்பாளராக, 13,000 டாலர்; பஸ் டிரைவராக, 32,000 டாலர்; சைக்காலஜிஸ்டாக, 29,000 டாலர்; பிராணிகள் பராமரிப்பாளராக, 17,000 டாலர்; அங்கீகரிக்கப்பட்ட ஒரு நர்ஸாக, 35,000 டாலர்; கைதேர்ந்த சமையல்காரியாக, 40,000 டாலர்; மற்றும் ஒரு அலுவலக கிளார்க்காக, 19,000 டாலர். இந்தக் கணக்கெடுப்பை நடத்திய பொருளாதார சேவை கம்பெனியின் தலைவர் ரிக் இடெல்மேனின் பிரகாரம், அவர்களுடைய சமூக பாதுகாப்பு வசதிகளோ அல்லது ஒருவர் ரிடையர் ஆகும் போது கிடைக்கும் பணமோ இந்தக் கணக்கில் உட்படவில்லை.