ரொம்ப சீக்கிரமா அல்லது ரொம்ப தாமதமா?
இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு பிறகு மூன்றாவது ஆயிரமாண்டு அல்லது 21-ம் நூற்றாண்டின் துவக்கமே இப்போது காரசாரமாக விவாதிக்கப்படுகிறது. “போர்க்களமாக துவங்கிய இருபதாம் நூற்றாண்டு, அணு சகாப்தமாக வளர்ச்சி அடைந்து, கேளிக்கை சகாப்தமாக முடிவுறும்போல் தோன்றுகிறதென” நியூஸ்வீக் பத்திரிகை குறிப்பிட்டது. டிசம்பர் 31, 1999-ல் புதுவருடப் பிறப்பை கோலாகலமாக கொண்டாட “உலகம் முழுவதிலுமுள்ள ஹோட்டல்கள் அனைத்தும் ஏற்கெனவே புக்காகிவிட்டனவென” 1997, ஜனவரி 22 இதழ் அறிவிக்கிறது.
எனினும், இந்தக் கொண்டாட்டங்கள் ரொம்ப சீக்கிரமாக நடைபெறுகின்றனவென சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். அநேகர் நம்புகிறதற்கு மாறாக, இருபத்தோராம் நூற்றாண்டு ஜனவரி 1, 2000-ல் அல்ல ஆனால் ஜனவரி 1, 2001-ல்தான் துவங்குகிறதென அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஏனெனில், 0 என ஒரு வருடம் இல்லையாதலால், 1 முதல் 100 வரையான வருடங்களையே முதல் நூற்றாண்டு என்கிறோம். அதேபோல், 101-ல் இருந்து 200 வரையான வருடங்கள் முடிவுற்றதையே இரண்டாம் நூற்றாண்டு என்கிறோம். எனவே, இருபதாம் நூற்றாண்டு ஜனவரி 1, 1901-ல்தான் துவங்கியது என்றும், இரண்டாம் ஆயிரமாண்டு ஜனவரி 1, 1001-ல்தான் துவங்கியது என்றும் வாதாடுகின்றனர். எனவே, இரண்டாம் ஆயிரமாண்டு டிசம்பர் 31, 2000-ல்தான் முடிவுறும் எனவும் தெரிவிக்கின்றனர்.
கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய மற்றொரு குறிப்பும் உள்ளது. கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன் அல்லது பின் என்ற அடிப்படையில்தான் நம் காலண்டர்கள் வருடங்களை கணக்கிடுகின்றன. ஆனால், இயேசு பிறந்ததாக நினைத்திருந்த வருடத்திற்கு முன்பாகவே அவர் பிறந்தாரென கல்விமான்கள் இப்போது ஒத்துக்கொள்கின்றனர். இது, காலண்டர்கள் வருடங்களை கணக்கிட பயன்படுத்திய முக்கிய ஆண்டு சரியல்ல, பிழையானது என காட்டுகிறது. இயேசு எப்போது பிறந்தார் என்பதில் கருத்துக்கள் வேறுபடுகின்றன. ஆனால், பைபிள் காலக்கணிப்போ பொ.ச.மு. 2-ம் ஆண்டையே இயேசு பிறந்த வருடமாக சுட்டிக்காட்டுகிறது. இந்த கணக்கீட்டின்படி, கிறிஸ்துவின் பிறப்பிற்கு பின் மூன்றாம் ஆயிரமாண்டு இந்த வருடம் இலையுதிர்காலத்தின்போதே துவங்கிவிட்டது! கூடுதல் தகவல்களை விழித்தெழு! 1997, மே 22, பக்கம் 28-லும், 1975, டிசம்பர் 22, ஆங்கிலப் பிரதியில் பக்கம் 27-லும் காணலாம். a
எது எப்படியாயினும், இன்னும் ஒருசில வாரங்களில் இருபத்தோராம் நூற்றாண்டும் புதிய ஆயிரமாண்டும் துவங்கும் என விதண்டாவாதமாக சொல்வதை தவிர்ப்பதே ஞானமான காரியம். என்றபோதிலும், பிரபலமாக இருக்கும் கருத்தின்படி, இந்த சமயத்தில், “20-ம் நூற்றாண்டு—சரித்திரம் படைத்த வருடங்கள்” என்ற பொருளை சிந்திப்பது பொருத்தமானதே என்பது விழித்தெழு!-வின் கருத்து.
[அடிக்குறிப்பு]
a 1999, நவம்பர் 1, காவற்கோபுர பிரதியையும் காண்க.