மூன்றாம் ஆயிரமாண்டு எப்பொழுது ஆரம்பமாகிறது?
மூன்றாம் ஆயிரமாண்டு 2000-ல் அல்ல, ஆனால் 2001-ல் தான் ஆரம்பமாகும் என்று கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது சரிதான்—ஓரளவுக்கு. இப்போது அறியப்படும் பொ.ச.மு. 1-ல் இயேசு பிறந்தார் என ஒருசமயம் சிலர் எண்ணினர். அப்படி நாம் எடுத்துக்கொண்டால், டிசம்பர் 31, 2000-ல்தான் (1999 அல்ல) இரண்டாம் ஆயிரமாண்டு முடியும். மேலும், ஜனவரி 1, 2001 மூன்றாம் ஆயிரமாண்டின் தொடக்கமாயிருக்கும். a ஆனால், பொ.ச.மு. 1-ல் இயேசு பிறக்கவில்லை என்பதை பெரும்பாலான கல்விமான்கள் இன்று ஒத்துக்கொள்கிறார்கள். சரி, அப்படியானால் அவர் எப்போது பிறந்தார்?
இயேசு எப்போது பிறந்தார்?
இயேசு பிறந்த தேதியை பைபிள் மிகத் துல்லியமாக தெரியப்படுத்துவதில்லை. இருப்பினும், “ஏரோது ராஜாவின் நாட்களில்” பிறந்தார் என அது குறிப்பிடுகிறது. (மத்தேயு 2:1) பொ.ச.மு. 4-ம் வருடத்தில் ஏரோது இறந்தார், ஆகவே இயேசு அதற்குமுன்—ஒருவேளை பொ.ச.மு. 5-ன் ஆரம்பத்தில் அல்லது 6-ல்—பிறந்தார் என அநேக கல்விமான்கள் நம்புகிறார்கள். முதல் நூற்றாண்டு யூத சரித்திராசிரியர் ஃப்ளேவியஸ் ஜொஸிஃபஸ் கூற்றை ஆதாரமாக வைத்து ஏரோதின் மரணத்தை அவர்கள் கணிக்கிறார்கள்.b
ஏரோது ராஜா இறப்பதற்கு சிறிது காலத்திற்குமுன் சந்திர கிரகணம் ஏற்பட்டதாக ஜொஸிஃபஸ் கூறினார். பொ.ச.மு. 4, மார்ச் 11-ல் பகுதியளவு சந்திர கிரகணம் ஏற்பட்டதாக பைபிள் கல்விமான்கள் குறிப்பிடுகிறார்கள். ஆகவே ஏரோது அந்த வருடத்தில்தான் இறந்திருக்க வேண்டும் என்பதற்கு இதுவே ஆதாரம் என்றும் சொல்கின்றனர். ஆனால் பொ.ச.மு. 1-ல், ஜனவரி 8 அன்று முழு சந்திர கிரகணமும், டிசம்பர் 27-ல் பகுதியளவு சந்திர கிரகணமும் ஏற்பட்டது. ஜொஸிஃபஸ் குறிப்பிட்டது பொ.ச.மு. 1-ல் நடந்த கிரகணத்தையா அல்லது பொ.ச.மு. 4-ல் நடந்த கிரகணத்தையா என்பதை யாரும் சொல்ல முடியாது. ஆகையால், ஜொஸிஃபஸின் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து ஏரோது இறந்த சரியான வருடத்தை நுட்பமாக நாம் சொல்ல முடியாது. அவ்வாறு சொல்ல முடிந்தாலும்கூட, கூடுதலான தகவல்கள் இல்லாமல் இயேசு எப்போது பிறந்தார் என்பதை இன்னும் நம்மால் தீர்மானிக்க முடியாது.
இயேசுவின் பிறந்த தேதிக்கான பலமான ஆதாரம் பைபிளிலிருந்து நமக்கு கிடைக்கிறது. இயேசுவின் உறவினரான முழுக்காட்டுபவனாகிய யோவான் தீர்க்கதரிசியாக தன் வேலையை ரோம சக்கரவர்த்தியான திபேரியு ராயன் அரசாண்ட 15-ம் வருடத்தில் ஆரம்பித்தான் என்பதாக ஏவப்பட்ட பதிவு குறிப்பிடுகிறது. (லூக்கா 3:1, 2) பொ.ச. 14, செப்டம்பர் 15-ல் திபேரியு ராயனுக்கு சக்கரவர்த்தி என்னும் பெயர் சூட்டப்பட்டதை சரித்திரப் பதிவுகள் உறுதி செய்கின்றன. ஆகவே, அவருடைய 15-ம் வருடம் பொ.ச. 28-ன் கடைசியில் ஆரம்பித்து பொ.ச. 29-ன் கடைசி பகுதிவரை செல்கிறது. அந்த சமயத்தில்தான் யோவான் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தார். தெளிவாகவே ஆறு மாதம் கழித்து இயேசு தம்முடைய ஊழியத்தை ஆரம்பித்தார். (லூக்கா 1:24-31) இந்த ஆதாரத்துடனும் மற்றொரு ஆதாரத்துடனும் பார்த்தால், இயேசு தன் ஊழியத்தை ஆரம்பித்தது பொ.ச. 29 இலையுதிர் காலம்.c இயேசு தம்முடைய ஊழியத்தை ஆரம்பிக்கையில் “ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார்” என பைபிள் குறிப்பிடுகிறது. (லூக்கா 3:23) பொ.ச. 29-ன் இலையுதிர் காலத்தில் அவருக்கு 30 வயது என்றால், பொ.ச.மு. 2-ன் இலையுதிர் காலத்தில்தான் அவர் பிறந்திருக்க வேண்டும். இப்பொழுது, பொ.ச.மு. 2-லிருந்து முன்னோக்கி இரண்டாயிரம் வருடங்களைக் கணக்கிட்டால் (பூஜ்ஜிய வருடம் இல்லை என்பதை நினைவிற்கொள்ளுங்கள்; ஆகவே பொ.ச.மு. 2-லிருந்து பொ.ச. 1-வரை இரண்டு வருடங்கள்), இரண்டாம் ஆயிரமாண்டு முடிவடைந்து 1999-ன் இலையுதிர்காலத்தில் மூன்றாம் ஆயிரமாண்டு ஆரம்பித்துவிட்டதை நாம் புரிந்துகொள்கிறோம்!
ஆனால் இது முக்கியமா? உதாரணமாக, இந்த மூன்றாம் ஆயிரமாண்டின் ஆரம்பம் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் துவக்கத்தை குறிக்கிறதா? இல்லை. மூன்றாம் ஆயிர வருடத்திற்கும் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சிக்கும் தொடர்பு ஏதும் இருப்பதாக பைபிளில் எங்கும் குறிப்பிடவில்லை.
தம்முடைய சீஷர்கள் நாட்களை ஊகித்தறிவதற்கு எதிராக இயேசு எச்சரித்தார். அவர் தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்: “பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.” (அப்போஸ்தலர் 1:7) நியாயத்தீர்ப்பை எப்போது நிறைவேற்றி, கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சிக்கு கடவுள் வழிவகுப்பார் என்பது இயேசுவுக்கும்கூட அப்போது தெரியாது என அவரே ஆரம்பத்தில் கூறினார். அவர் சொன்னார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.”—மாற்கு 13:32.
கிறிஸ்து மனிதனாக பிறந்து சரியாக 2,000 வருடங்கள் முடிந்தபின் திரும்ப வருவார் என எதிர்பார்ப்பது நியாயமானதா? இல்லை. இயேசுவுக்கு தம்முடைய பிறந்த நாள் தெரிந்திருக்கும். அந்த வருடத்திலிருந்து 2,000 வருடங்களை கணக்கிடுவது எப்படி என்பதையும் அவர் நிச்சயமாகவே அறிவார். இருந்தாலும், அவருடைய வருகையின் அந்த நாளையும் நாழிகையையும் அவர் அறியவில்லை. தெளிவாகவே, அவருடைய திரும்பிவருதலை நுட்பமாக தெரிவிப்பது அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்க முடியாது! ‘நேரங்களும் காலங்களும்’ பிதாவின் அதிகாரத்தில் உள்ளது—அவர் மட்டுமே கால அட்டவணையை அறிவார்.
மேலும், ஒரு குறிப்பிட்ட பூகோள பிராந்தியத்தில் தனக்காக காத்திருக்கும்படி இயேசு தம்முடைய சீஷர்களிடம் கட்டளையிடவில்லை. ஓரிடத்தில் ஒன்றாக கூடியிருந்து காத்திருக்கும்படியல்ல, ஆனால் “பூமியின் கடைசிபரியந்தமும்” பரவலாக சென்று எல்லா தேசத்து மக்களையும் சீஷராக்கும்படியே அவர்களிடம் சொன்னார். அவர் ஒருபோதும் அந்தக் கட்டளையை ரத்து செய்யவில்லை.—அப்போஸ்தலர் 1:8; மத்தேயு 28:19, 20.
அவர்களுடைய ஆயிர வருட நம்பிக்கைகள் தகர்க்கப்படுமா?
இருந்தபோதிலும், சில மத அடிப்படைவாதிகள் 2000-ம் வருடத்தின்மீது நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களில், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள சில பகுதிகள் சொல்லர்த்தமாகவே நிறைவேறும் என அவர்கள் நம்புகிறார்கள். உண்மையிலேயே அந்த நிறைவேற்றத்தில் தாங்கள் தனிப்பட்ட விதமாக பங்குகொள்வதாக அவர்கள் தங்களை காண்கிறார்கள். உதாரணமாக, வெளிப்படுத்துதல் 11:3, 7, 8-ல் பதிவு செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசனத்தை குறிப்பிடுகிறார்கள். இரண்டு சாட்சிகள் பின்வருமாறு தீர்க்கதரிசனம் உரைத்ததாக அது சொல்கிறது: ‘மகா நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார்.’ அவர்கள் சாட்சி சொல்லி முடித்திருக்கும்போது அபிஸிலிருந்து ஒரு கொடிய மிருகம் ஏறிவந்து அந்த இரண்டு சாட்சிகளையும் கொன்றுபோடுகிறது.
டிசம்பர் 27, 1998 த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் அறிக்கைபடி, “பூமியின் அழிவைப் பற்றியும் கர்த்தருடைய வருகையைப் பற்றியும் அறிவிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள இரண்டு சாட்சிகளில் தானும் ஒருவர் என்றும், அதன்பின் எருசலேமின் வீதிகளில் சாத்தானால் கொல்லப்படுவேன்” என்றும் ஒரு மதப்பிரிவின் தலைவர் தன்னை பின்பற்றும் ஜனங்களிடம் கூறியுள்ளார். இஸ்ரேல் அதிகாரிகள் உண்மையிலேயே மனக்கலக்கம் அடைந்திருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது! சில தீவிரவாதிகள் இந்தத் தீர்க்கதரிசனத்தை தாங்களே “நிறைவேற்ற” முயற்சித்து, ஒரு இராணுவ சண்டையைக்கூட தூண்டிவிடலாம் என பயப்படுகின்றனர்! ஆனால், கடவுள் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற அவருக்கு மனிதனின் உதவி தேவையில்லை. எல்லா பைபிள் தீர்க்கதரிசனங்களும் கடவுளுடைய சொந்த நேரத்தில் அவருடைய சொந்த வழியில் நிறைவேற்றப்படும்.
வெளிப்படுத்துதல் புத்தகம் ‘அடையாளங்களைக்’ கொண்டு எழுதப்பட்டது. வெளிப்படுத்துதல் 1:1 (NW) சொல்கிறபடி, சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளை இயேசு ‘தம்முடைய அடிமைகளுக்கு’ (உலகத்தாருக்கு அல்ல) வெளிப்படுத்த விரும்பினார். வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் புரிந்துகொள்வதற்கு கிறிஸ்துவின் அடிமைகளுக்கு அல்லது பின்பற்றுவோருக்கு கடவுளுடைய பரிசுத்த ஆவி தேவைப்படும். யெகோவாவுக்கு பிரியமாக நடப்போருக்கு அதை அவர் அளிக்கிறார். வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்லர்த்தமாகவே புரிந்து கொள்ளப்படும் என்றால் அவிசுவாசிகளும்கூட வாசித்து புரிந்துகொள்ள முடியும். அப்படியானால் கிறிஸ்தவர்கள் இதைப் புரிந்துகொள்வதற்கு பரிசுத்த ஆவிக்காக ஜெபம் செய்ய வேண்டிய தேவையிராது.—மத்தேயு 13:10-15.
பைபிள் ஆதாரப்படி, இயேசுவின் பிறப்பிலிருந்து 1999-ன் இலையுதிர் காலத்தில் மூன்றாம் ஆயிரமாண்டு ஆரம்பிக்கிறது. எந்த ஒரு தேதியோ ஜனவரி 1, 2000-ம் ஆண்டோ ஜனவரி 1, 2001-ம் ஆண்டோ விசேஷித்த முக்கியத்துவமுடையது அல்ல. இருந்தபோதிலும், கிறிஸ்தவர்களுக்கு அதிக அக்கறைக்குரிய ஓர் ஆயிரமாண்டு இன்னும் உள்ளது. அது மூன்றாம் ஆயிரமாண்டு அல்ல என்றால், எந்த ஆயிரமாண்டு? இந்தத் தொடரில் வரும் கடைசி கட்டுரை இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a பக்கம் 5-ல் “2000 அல்லது 2001?” என்று தலைப்பிடப்பட்ட பெட்டியைக் காண்க.
b இந்தக் கல்விமான்களுடைய காலக்கணிப்பு முறையின்படி, மூன்றாம் ஆயிரமாண்டு 1995 அல்லது 1996-ல் ஆரம்பமாயிருக்க வேண்டும்.
c கூடுதலான தகவல்களுக்கு, தயவுசெய்து உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் நியூ யார்க் பிரசுரித்த வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதி 1, பக்கங்கள் 1094-5-ஐ காண்க.
[பக்கம் 5-ன் பெட்டி]
2000 அல்லது 2001?
மூன்றாம் ஆயிரமாண்டு ஜனவரி 1, 2001-ல் தான் ஆரம்பமாகும் என சிலர் ஏன் அடித்துக் கூறுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள இந்த உதாரணத்தை கவனியுங்கள். 200 பக்கங்களை கொண்ட ஒரு புத்தகத்தை நீங்கள் வாசிப்பதாக வைத்துக்கொள்வோம். 200-வது பக்கத்தின் ஆரம்பத்திற்கு வருகையில் நீங்கள் 199 பக்கங்களை வாசித்து முடித்திருக்கிறீர்கள், புத்தகத்தை வாசித்து முடிக்க இன்னும் ஒரு பக்கம் இருக்கிறது. 200-வது பக்கத்தின் முடிவுக்கு வருமட்டும் நீங்கள் அந்த புத்தகத்தை படித்து விட்டதாக கூற முடியாது. அதேவிதமாக, டிசம்பர் 31, 1999-ல் தற்போதைய ஆயிரமாண்டின் 999 வருடங்கள்தான் முடிந்திருக்கும். இந்த ஆயிரமாண்டின் முடிவுக்கு வரவேண்டுமானால் இன்னும் ஒரு வருடம் செல்ல வேண்டும். இந்தக் கணக்கின்படி, மூன்றாம் ஆயிரமாண்டு ஜனவரி 1, 2001-ல் தான் ஆரம்பமாகிறது. இருந்தாலும், இந்தக் கட்டுரை காட்டுகிறபடி, இயேசுவின் பிறந்த தேதியிலிருந்து கணக்கிடுகையில் ஜனவரி 1, 2001-ல் சரியாக 2000 வருடங்கள் முடிவடைந்திருக்கும் என்பதை இது அர்த்தப்படுத்தாது.
[பக்கம் 6-ன் பெட்டி]
கி.மு.-கி.பி. என்ற காலக்கணக்கு உருவானது எப்படி
சர்ச்சுகளில் ஈஸ்டர் பண்டிகையின் தேதியை முறைப்படியாக குறிப்பதற்காக ஒரு காலக்கணக்கு முறையை உருவாக்க டியோனிஸியஸ் எக்ஸிக்யூஸ் என்ற துறவியிடம் பொ.ச. ஆறாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் போப் ஜான் கட்டளையிட்டார்.
அந்தப்படியே டியோனிஸியஸ் கணக்கிட ஆரம்பித்தார். அவர் இயேசுவின் மரணத்திலிருந்து இயேசு பிறந்த வருடமாக அவர் கருதிய வருடம் வரை இறங்கு வரிசையில் பின்னோக்கி கணக்கிட்டார்; பின் இயேசு பிறந்த அந்த வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடத்தையும் ஏறுவரிசையில் முன்னோக்கி எண்ணினார். இயேசுவின் பிறப்புக்கு பின்னான வருடங்களை “கி.பி.” (அன்னோ டொமினி—“நம் கர்த்தரின் வருடத்தில்”) என டியோனிஸியஸ் குறிப்பிட்டார். ஒவ்வொரு வருடமும் ஈஸ்டர் பண்டிகையின் தேதியைக் கணக்கிடுவதற்கு நம்பத்தக்க ஒரு வழிமுறையாக மட்டுமே இதை உருவாக்க எண்ணியபோதிலும், கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து வருடங்களை முன்னோக்கி கணக்கிடும் முறையை தன்னை அறியாமலேயே டியானிஸியஸ் அறிமுகப்படுத்தி வைத்தார்.
டியோனிஸியஸ் தன்னுடைய கணக்கிடுதலுக்கு அடிப்படையாக பயன்படுத்திய வருடம் இயேசு பிறந்த வருடமல்ல என்பதை அநேக கல்விமான்கள் ஒப்புக்கொள்கின்றனர். என்றபோதிலும், கால ஓட்டத்தில் சம்பவங்களை நிர்ணயிப்பதற்கும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கும் அவருடைய காலக்கணக்கு முறை நமக்கு சாத்தியமளிக்கிறது.