உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 11/1 பக். 3-4
  • 2000—விசேஷமான ஓர் ஆண்டா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2000—விசேஷமான ஓர் ஆண்டா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • இதே தகவல்
  • மூன்றாம் ஆயிரமாண்டு எப்பொழுது ஆரம்பமாகிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • வருஷம் 2000 எந்த அளவிற்கு தனிச்சிறப்பு வாய்ந்தது?
    விழித்தெழு!—1998
  • ரொம்ப சீக்கிரமா அல்லது ரொம்ப தாமதமா?
    விழித்தெழு!—1999
  • நம்பிக்கையின் செய்தியை கேட்க வாரீர்!!!
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 11/1 பக். 3-4

2000—விசேஷமான ஓர் ஆண்டா?

வருஷம் 2000 பிறக்கப்போகிறது. இதற்கு அப்படி என்ன விசேஷம்? மேற்கத்திய தேசங்களில் வாழும் ஜனங்கள் இதை பொதுவாக மூன்றாம் ஆயிரமாண்டின் முதல் வருடமாக கருதுகிறார்கள். இந்த வருடத்தை கோலாகலமாக கொண்டாடுவதற்கு முன்னேற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன. புதிய ஆயிரமாண்டின் விடியலை எதிர்நோக்கி ஒவ்வொரு நொடிகளையும் கணக்கிடுவதற்கு பிரமாண்டமான எலக்ட்ரானிக் கடிகாரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அப்புத்தாண்டு பண்டிகையின் முந்தின இரவை ஆட்டம் பாட்டத்தோடு ஆனந்தக் கூத்தாடி மகிழ கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆயிரமாண்டின் அஸ்தமனத்திற்கு அறைகூவல்விடும் சுலோகங்கள் கொண்ட T-ஷர்ட்டுகளும் பட்டி தொட்டிகள் முதற்கொண்டு பட்டணங்களில் பளிச்சிடும் பெரிய கடைகள் வரை பெருமளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

வானளாவிய ஊசி கோபுரங்கள் கொண்ட பெரிய சர்ச்சுகளும் கவிகை மாடம்போல கவிந்த சிறிய சர்ச்சுகளும் அந்த வருடம் முழுவதும் நீடிக்கும் விழாவில் கலந்து கொள்ளும். “ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் ஆயிரமாண்டு ஜூபிலி” என அழைக்கப்படும் கொண்டாட்டத்திற்கு ரோமன் கத்தோலிக்கர்களை வழிநடத்த அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் இரண்டாம் போப் ஜான் பால் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் முதல் பார்க்க ஆவல் கொண்ட சுற்றுலா பயணிகள் வரை, சுமார் 60 லட்சம் பேர் அடுத்த வருடம் இஸ்ரேலுக்குச் செல்ல திட்டமிடுவதாக மதிப்பிடப்படுகிறது.

ஏன் இவ்வளவு அநேகர் இஸ்ரேலுக்கு பயணம் செய்ய திட்டமிடுகிறார்கள்? போப் சார்பாக பேசுகையில், வத்திகன் அதிகாரி ராஜர் கார்டினல் ஏச்சகரி சொன்னார்: “இத்தேசத்தில் கிறிஸ்துவையும் அவருடைய வாழ்க்கையையும் கொண்டாடுவதற்கே இந்த 2000-ம் ஆண்டு. ஆகவே போப் இங்கு வருவது ஆச்சரியமல்லவே.” எவ்வாறு 2000-ம் ஆண்டு கிறிஸ்துவோடு சம்பந்தப்பட்டுள்ளது? பொதுவாக 2000-ம் ஆண்டில் கிறிஸ்துவின் பிறப்பிலிருந்து சரியாக 2000 வருடங்கள் பூர்த்தியாகிறது என்பதாக எண்ணப்படுகிறது. ஆனால் இது சரியா? நாம் பார்க்கலாம்.

சில மதத் தொகுதிகளுக்கு 2000-ம் ஆண்டு இதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. அடுத்த வருடத்திற்குள்ளாகவோ அல்லது அடுத்த வருடத்திலோ இயேசு ஒலிவ மலைக்கு திரும்பி வருவார், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பேசப்பட்டுள்ள அர்மகெதோன் யுத்தம் மெகிதோ பள்ளத்தாக்கில் நடைபெறும் என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். (வெளிப்படுத்துதல் 16:14-16) இந்தச் சம்பவங்களை எதிர்பார்த்து, நூற்றுக்கணக்கான ஐ.மா. குடிமக்கள் தங்கள் வீடுகளையும் சட்டிபெட்டிகளையும் விற்றுவிட்டு இஸ்ரேலுக்கு இடம் மாறுகிறார்கள். தங்கள் வீடுகளைவிட்டு இஸ்ரேலுக்கு வரமுடியாதவர்களுக்கு, இயேசுவின் திரும்பிவருதலை டிவி மூலம் கலரில் ஒலிபரப்ப பிரசித்திபெற்ற ஐ.மா. இவான்ஜலிஸ்ட் ஒருவர் வாக்குறுதி அளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

மேற்கத்திய தேசங்களில் மூன்றாம் ஆயிரமாண்டிற்குள் அடியெடுத்து வைப்பதற்கான திட்டங்கள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. ஆனால் மற்ற நாடுகளிலுள்ள ஜனங்களோ வழக்கம்போல தங்களுடைய வேலைகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்கள். உலக ஜனத்தொகையில் மெஜாரிட்டியான இந்த ஜனங்கள் நசரேயனாகிய இயேசுவை மேசியாவாக நம்புவதில்லை. காலண்டர்களில் குறிப்பிடப்படும் கி.மு.-கி.பி. என்பதையும் ஏற்றுக்கொள்வதில்லை.a உதாரணமாக, அநேக முஸ்லீம்கள் தங்களுடைய சொந்த காலண்டரை பயன்படுத்துகிறார்கள். அதன்படி, அடுத்த வருடம் 1420​—2000 அல்ல. முகமது நபி மெக்காவிலிருந்து மெதினாவுக்கு தப்பிச் சென்ற தேதியிலிருந்து முகமதியர்கள் வருடத்தை கணக்கிடுகிறார்கள். பொதுவாக உலகமுழுவதிலும் ஜனங்கள் சுமார் 40 வித்தியாசப்பட்ட காலண்டர்களை பயன்படுத்துகிறார்கள்.

2000-ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு அர்த்தமுள்ள ஒன்றாக இருக்க வேண்டுமா? ஜனவரி 1, 2000, உண்மையிலேயே விசேஷித்த முக்கியத்துவம் வாய்ந்த நாளா? பின்வரும் கட்டுரை இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும்.

[அடிக்குறிப்புகள்]

a கி.மு.-கி.பி. (B.C.-A.D.) என்ற காலக்கணக்கு முறையின்படி, இயேசுவின் பிறப்புக்குமுன் நடந்த சம்பவங்கள் “கி.மு.” (கிறிஸ்துவுக்குமுன்) என்றும், அதற்குப்பின் நடந்த சம்பவங்கள் “கி.பி.” (அன்னோ டொமினி, அதாவது “நம் கர்த்தரின் வருடத்தில்”) என்றும் குறிப்பிடப்படுகின்றன. ஆனால், விஷயம் தெரிந்த சில கல்விமான்கள் “பொ.ச.மு.” (B.C.E.) (பொது சகாப்தத்திற்கு முன்) மற்றும் “பொ.ச.” (C.E.) (பொது சகாப்தம்) என்ற பொதுவான பெயரையே சிறந்த ஒன்றாக பயன்படுத்துகிறார்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்