உயரமான பிரதேசங்களில் வாழ்க்கை
பொலிவியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
சுற்றுலா பயணிகள் அநேகர் மலைகளிடம் கவரப்படுவதற்கு காரணம் அவற்றின் ஏகாந்தம், கம்பீரமான இயற்கைக்காட்சி, நடப்பதற்கும் மலையேறுவதற்கும் பனிச்சறுக்கு விளையாடுவதற்கும் ஏற்ற இன்பச் சூழல் ஆகியவையே. மேகக் கூட்டங்களைவிட உயரத்தில் அமைந்திருக்கும் பள்ளத்தாக்குகளிலும் மேட்டுநிலங்களிலும் லட்சக்கணக்கானவர்கள் நிரந்தரமாக குடியிருக்கிறார்கள். ஆனால் அவ்வளவு உயரத்தில் வாழ்வது ஒருவரின் ஆரோக்கியத்தை அல்லது மோட்டார் வாகனத்தை விநோதமான விதத்தில் பாதிக்கலாம்; அதேபோல் அவர் சமைக்கும் உணவையும் பாதிக்கலாம். என்ன காரணத்தால் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன? அவற்றை எப்படி சமாளிக்கலாம்? முதலாவதாக, உயரமான பிரதேசங்களில் உண்மையிலேயே நிறைய பேர் வசிக்கிறார்களா?
உயரத்திலுள்ள பல பிரதேசங்கள் பொருளாதார வளர்ச்சியைக் காணும் பிரதேசங்களாக ஆகியிருக்கின்றன. மெக்சிகோ நகரில் லட்சக்கணக்கானவர்கள் கடல் மட்டத்திலிருந்து 7,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் வசிக்கிறார்கள். அ.ஐ.மா., கொலரடோவிலுள்ள டென்வர் நகரம், கென்யாவிலுள்ள நைரோபி, தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோஹெனஸ்பர்க் ஆகிய இடங்கள் 5,000 அடிக்கும் அதிக உயரத்தில் அமைந்திருக்கின்றன. இமாலய மலைகளில் லட்சக்கணக்கானவர்கள் 9,000 அடிக்கும் அதிக உயரத்தில் வசிக்கிறார்கள். ஆண்டிஸ் மலைகளிலுள்ள அநேக மாநகரங்கள் கடல் மட்டத்திலிருந்து 11,000 அடிக்கும் அதிக உயரத்தில் உள்ளன; அங்குள்ள மக்கள் 20,000 அடி உயரத்தில் உள்ள சுரங்கங்களில் வேலை பார்க்கிறார்கள். இத்தனை அநேகம் பேர் உயரமான பிரதேசங்களில் வாழ்வதால், மனித உடல் அப்படிப்பட்ட இடங்களுக்கு ஏற்ப எவ்வாறு அட்ஜஸ்ட் ஆகிக்கொள்கிறது என்பதைப் பற்றிய ஆராய்ச்சியில் பலர் மூழ்கியிருக்கிறார்கள். அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் விஷயங்கள், உங்கள் உடலின் அற்புத வடிவமைப்பை இன்னுமதிகமாக போற்றுவதற்கு உதவும்.
எவற்றை எதிர்பார்க்கலாம்
ஆண்டிஸ் மலைக்கு சென்றபோது டக் என்பவருக்கு ஏற்பட்ட அனுபவம் சிறந்த உதாரணம். அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஏர்போர்ட்டில் எங்கள் சூட்கேஸுகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தபோது திடீரென தலை கிறுகிறுத்தது, கிட்டத்தட்ட மயங்கி விழுந்துவிட்டேன். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அது சரியாகிவிட்டது என்றாலும் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு தலைவலியால் கஷ்டப்பட்டேன், அதோடு சரியாக தூங்கவும் முடியவில்லை. தூக்கத்தில் திடீரென்று மூச்சு முட்டியபடி விழித்துக்கொண்டேன். அதன் பிறகு சில மாதங்களுக்கு பசியே இல்லை, அடிக்கடி களைப்பு ஏற்பட்டது, தூக்கம் போதவில்லை.” டக்கின் மனைவியாகிய கெட்டி இப்படி தொடர்கிறார்: “உயரமான இடங்களில் வாழ்வதால் பிரச்சினைகள் ஏற்படுவதாக சிலர் சொல்வதெல்லாம் வெறும் கற்பனைதான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது நிஜம் என்பது இப்போது புரிந்துவிட்டது.”
டக்குக்கு ஏற்பட்ட தூக்கப் பிரச்சினை, உயரமான பிரதேசங்களுக்கு புதிதாக குடிபெயர்ந்து செல்பவர்கள் மத்தியில் சகஜம். உங்களுக்கு எப்போதாவது அந்தப் பிரச்சினை ஏற்பட்டால் நீங்கள் பயந்துவிடலாம். தூங்கிக் கொண்டிருக்கும்போது அவ்வப்போது பல வினாடிகளுக்கு உங்கள் மூச்சு நின்றுவிடும். சிலசமயம் மூச்சு முட்டியவாறு திடீரென்று விழித்துக் கொள்வீர்கள்.
சிலருக்கு உயரமான பிரதேசங்களுக்கு செல்கையில் எந்தப் பிரச்சினையும் ஏற்படுவதில்லை. அநேகர் 6,000 அடி உயரத்தில் அப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள். 10,000 அடி உயரத்திற்கு புதிதாக செல்பவர்களில் பாதி பேருக்கு பிரச்சினைகள் வருகின்றன. ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், உயரமான பிரதேசங்களில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் வெறும் ஓரிரு வாரங்கள் தாழ்வான இடங்களுக்கு சென்று திரும்பினாலும் அதே பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள். ஏன்?
உயரம் உங்கள் உடலை பாதிப்பதற்கான காரணம்
ஆக்ஸிஜன் குறைவுபடுவதாலேயே பெரும்பாலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உயரம் செல்லச் செல்ல வளிமண்டல அழுத்தம் குறைந்துகொண்டே வருகிறது; ஆகவே கடல் மட்டத்தைவிட 6,500 அடி உயரத்திலுள்ள ஒரு குறிப்பிட்டளவு காற்றில் சுமார் 20 சதவீத ஆக்ஸிஜன் குறைவுபடுகிறது; 13,000 அடி உயரத்தில் 40 சதவீத ஆக்ஸிஜன் குறைவுபடுகிறது. இவ்வாறு அது குறைவுபடுகையில் உங்கள் உடல் இயக்கத்தை பெருமளவு பாதிக்கிறது. ஆக்ஸிஜன் குறைவுபடுவது உங்கள் தசைகளால் அதிக வேலை செய்ய முடியாது, உங்கள் நரம்பு மண்டலத்தால் அதிக அழுத்தத்தை சமாளிக்க முடியாது, உங்கள் செரிமான மண்டலத்தால் அதிக கொழுப்பை ஜீரணிக்க முடியாது. பொதுவாக, உங்கள் உடலுக்கு கூடுதலான ஆக்ஸிஜன் தேவைப்படும்போது இயல்பாகவே நீங்கள் வேகவேகமாக மூச்சுவிடுவீர்கள், இது தேவையை பூர்த்தி செய்கிறது. அப்படியென்றால் உயரமான பிரதேசங்களுக்கு போகும்போது இது ஏன் நடப்பதில்லை?
நீங்கள் சுவாசிக்கும் வேகத்தை உங்கள் உடல் எப்படி கட்டுப்படுத்துகிறது என்பது இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளப்படாத அற்புதமாகவே இருக்கிறது. ஆனால் உங்கள் உடலை வருத்தும் சந்தர்ப்பங்களில், ஆக்ஸிஜன் குறைவுபடுவதால் மட்டுமே நீங்கள் வேகமாக சுவாசிக்க துவங்குவதில்லை. மாறாக, தசைகளின் செயல்பாட்டினால் இரத்தத்தில் உண்டாகும் அதிக கார்பன்டைஆக்ஸைடே நீங்கள் வேகமாக சுவாசிப்பதற்கு முக்கிய காரணம். உயரமான பிரதேசங்களில் நீங்கள் வேகமாகத்தான் சுவாசிக்கிறீர்கள்; ஆனால் தொடர்ந்து குறைவுபடும் ஆக்ஸிஜனை ஈடுகட்ட அது போதுமானதாக இருப்பதில்லை.
தலைவலி ஏன் வருகிறது? உயரமான பிரதேசங்களில் ஏற்படும் உடல் கோளாறுகளில் அநேகத்திற்குக் காரணம் மூளையில் சேர்ந்துவிடும் திரவம்தான் என பொலிவியா, லாபாஸில் நடைபெற்ற உயர் பிரதேச மருத்துவம் மற்றும் உடலியல் பேரிலான முதல் உலக சம்மேளனத்தில் ஒரு பேச்சாளர் குறிப்பிட்டார். சிலருக்கு இதனால் தலைக்குள் அழுத்தம் ஏற்படுகிறது. மற்றவர்களுக்கோ, ஒருவேளை அவர்களது மண்டை ஓடு பெரியதாக இருப்பதால் இந்த பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால் சிலருக்கு உயிருக்கே ஆபத்தான நிலைமை ஏற்படலாம். தசைகளின் செயலிழப்பு, மங்கலான பார்வை, பிரமை, மனக்குழப்பம் ஆகியவை, உடனடியாக மருத்துவ உதவியைப் பெற்று தாழ்வான பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கும் அறிகுறிகளாகும்.
ஞானமான முன்னெச்சரிக்கைகள்
இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில்தான் உயரத்தின் பாதிப்புகள் உச்சக்கட்டத்தை எட்டுகின்றன; ஆகவே புதிய இடத்திற்கு செல்வதற்கு சில நாட்கள் முன்பிருந்தும் சில நாட்கள் பிறகும், முக்கியமாக இரவில், குறைவாக சாப்பிடுவது நல்லது. அங்கு சென்ற பிறகு, கொழுப்புமிக்க பதார்த்தங்களுக்கு பதிலாக அரிசி, ஓட்ஸ், உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளையே சாப்பிட வேண்டும். “காலை உணவை ராஜாவைப் போல் சாப்பிடு, ஆனால் இரவு உணவை பிச்சைக்காரன் போல் சாப்பிடு” என்ற அறிவுரைக்கு செவிசாய்ப்பது நல்லது. மேலும் உடலை ரொம்ப வருத்தாதீர்கள், இது பிரச்சினையை மிகவும் மோசமாக்கும். இளைஞர்கள் இந்த அறிவுரையை பெரும்பாலும் கேட்கத் தவறுகிறார்கள்; ஆகவே அவர்கள்தான் அதிகம் அவதிப்படுகிறார்கள்.
“தொப்பியை போட்டுக்கொள்ளுங்கள், சன்ஸ்கிரீன் லோஷனை தாராளமாக தடவிக்கொள்ளுங்கள்.” உயரமான இடங்களிலும் இது நல்ல அறிவுரையே; ஏனென்றால் ஆபத்தான சூரியக் கதிர்களிலிருந்து உங்களை பாதுகாக்க போதுமான வளிமண்டலம் அங்கு இருப்பதில்லை. மேலும், சூரியக்கதிர்கள் உங்கள் கண்களை உறுத்தலாம் அல்லது சேதப்படுத்தலாம்; ஆகவே தரமான கூலிங் க்ளாஸுகளை அணிந்துகொள்ளுங்கள். மலையின் அடர்த்தியற்ற காற்று உங்கள் கண்ணை வறண்டு போக செய்யும், அதனாலும் கண் உறுத்தல் ஏற்படும். ஆகவே நிறைய பானங்களை குடிக்க வேண்டும்.
மிகவும் பருமனாக இருப்பவர்கள் அல்லது உயர் இரத்த அழுத்தம், அரிவாள் செல் சோகை, இருதய நோய், நுரையீரல் வியாதி ஆகிய பிரச்சினைகளை உடையவர்கள் உயரமான பிரதேசங்களுக்குப் போகும் முன்னர் தங்கள் உடல்நிலையைக் குறித்து கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டுமென டாக்டர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.a உங்களுக்கு பயங்கர சளி, மார்புச்சளி நோய், அல்லது நிமோனியா இருந்தால் பயணத்தை ஒத்திப்போடுவது நல்லது. ஏனென்றால் உயரமான பிரதேசங்களில் இதுபோன்ற தொற்றுகள் இருந்தாலோ நிறைய உடற்பயிற்சி செய்தாலோ நுரையீரல்களில் அதிக திரவம் சேர்ந்துவிடலாம்; இது ஆபத்தானது. உயரமான பிரதேசத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள்கூட, சுவாசக் கோளாறுகள் ஏற்படும்போது அதிகளவு ஆக்ஸிஜன் குறைவுபடுவதால் கடும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்ப்படலாம். மறுபட்சத்தில், ஆஸ்துமா நோயாளிகளுக்கு உயரமான பிரதேசங்கள் பெரும்பாலும் கைகொடுக்கின்றன. சொல்லப்போனால், சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையாக நோயாளிகளை உயரமான பிரதேசங்களிலுள்ள க்ளினிக்குகளுக்கு தாங்கள் அழைத்துச் செல்வதாய் உயர் பிரதேச மருத்துவம் மற்றும் உடலியல் பேரிலான முதல் உலக சம்மேளனத்திடம் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு டாக்டர் குழு அறிக்கை செய்தது.
உயரமான பிரதேசங்களில் குடியேறுதல்
உயரமான பிரதேசங்களில் வாழ்வதைப் பற்றி பயப்படவே வேண்டியதில்லை. சொல்லப்போனால் காகஸஸ் மலைகள் போன்ற உயரமான பிரதேசங்களில் வசிக்கும் அநேகர் மிக நீண்ட காலத்திற்கு உயிர்வாழ்ந்திருக்கிறார்கள்; இது பலரறிந்தது. மிக மிக உயர்ந்த பிரதேசங்களில்கூட சிலர் நீடித்த ஆயுசுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆண்டிஸ் மலைப்பகுதியைச் சேர்ந்த விழித்தெழு! வாசகர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “ஒரு எரிமலையின் மேற்பரப்பில் 6,000 மீட்டர் [19,500 அடி] உயரத்திலிருந்த சுரங்கத்தில் நான் 13 வருடங்களாக வேலை பார்த்தேன், அங்குதான் தங்கியும் இருந்தேன். கந்தகப் பாளங்களை சம்மட்டியால் உடைத்தெடுப்பது கடினமான வேலையாக இருந்தது. ஆனாலும் சாயங்கால வேளையில் நாங்கள் ஃபுட்பால் விளையாடினோம்!” புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் அற்புத திறன்களை மனித உடல் பெற்றிருக்கிறது; அதைக் கவனிக்கையில் நம் படைப்பாளரின் ஞானத்தை உணர்ந்து மலைத்து போகிறோம். உயர்ந்த பிரதேசங்களில் ஆக்ஸிஜன் குறைவுபடுவதை உங்கள் உடல் எப்படி சமாளிக்கிறது?
உயர்ந்த பிரதேசத்திற்கு சென்றவுடனேயே உங்கள் உடல் முதலில் உங்களது இருதயத்தையும் நுரையீரல்களையும் வேகமாக செயல்பட வைக்கிறது. பிறகு உங்கள் ரத்தத்திலிருந்து ப்ளாஸ்மா வெளியாகிறது; இவ்வாறு ஆக்ஸிஜனை சுமந்துசெல்லும் சிவப்பணுக்கள் அதிகரிக்கின்றன. கொஞ்ச நேரத்தில், கூடுதலான இரத்தம் உங்கள் மூளைக்கு திருப்பப்படுகிறது; ஏனெனில் மூளைக்குத்தான் அதிக ரத்தம் தேவை. பிறகு சில மணிநேரங்களுக்குள் உங்கள் எலும்பு மஜ்ஜை இன்னுமதிக ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது; இந்த அணுக்களால் இன்னும் திறமையாக ஆக்ஸிஜனை சுமந்துசெல்ல முடியும். ஆகவே, உயர்ந்த பிரதேசத்தின் சூழலை முழுமையாக அனுசரிக்க பல மாதங்கள் எடுக்கும் என்றாலும், சில நாட்களுக்குள்ளாகவே உங்கள் இருதயத்துடிப்பும் சுவாசமும் இயல்புக்கு திரும்ப முடியும்.
வாகனம் ஓட்டுவதிலும் சமைப்பதிலும் பிரச்சினைகள்
ஆனால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவதிப்படுவது உங்கள் உடல் மட்டுமே அல்ல, உங்கள் வாகனமும் ‘அவதிப்படலாம்.’ உங்கள் மெக்கானிக் எரிபொருள் கலவையையும், சீக்கிரமாகவே வாகனம் ஸ்டார்ட் ஆகும்படி என்ஜினின் செட்டிங்கையும் சற்று மாற்றிக் கொடுத்தால்கூட என்ஜினின் ஆற்றல் குறைவாகவே இருக்கும். சரி, சமைக்கும்போது என்ன பிரச்சினைகள் ஏற்படலாம்?
கேக் அமுங்கிப்போகும், பிரெட் பொலபொலவென உதிரும், மொச்சை வேகவே வேகாது, வேகவைத்த முட்டை தண்ணீர்போல் இருக்கும். சமைப்பவரை மனமொடியச் செய்யும் பிரச்சினைகளில் சிலதான் இவை. இதெல்லாம் ஏன் நடக்கிறது? நீங்கள் என்ன செய்யலாம்?
நீங்கள் கேக், பிரெட் போன்றவற்றை செய்யும்போதுதான் அடிக்கடி தோல்வியை சந்திக்க வேண்டிவரும், அதுவும் அவற்றின் “முகலட்சணத்தால்” மனம் நொந்துபோக வேண்டிவரும். குறைவான காற்று அழுத்தம், கேக்குகளையும் பிரெட்டுகளையும் மிருதுவாக்கும் வாயுக்களை அதிகமாக விரிவடையச் செய்கிறது; அவை கடல் மட்டத்தில் இருப்பதைவிட அதிகமாக விரிவடைகின்றன. ஆகவே மாவிலுள்ள சின்னச் சின்ன குமிழிகள் பெரிதாகி, அதை பொலபொலவென உதிர வைக்கின்றன; அதைவிட கொடுமை, குமிழிகள் வெடித்து கேக்கை தட்டையாக்கிவிடுகின்றன. ஆனால் இப்பிரச்சினையைத் தீர்ப்பது கடினமல்ல. கேக்கிற்கு முட்டை சேர்க்கிறீர்களென்றால் வழக்கத்தைவிட குறைவான நேரத்திற்கு முட்டையை அடியுங்கள். ஒருவேளை ஈஸ்ட் அல்லது பேக்கிங் பவுடர் சேர்க்கிறீர்களென்றால் குறைவாகவே சேருங்கள். அவற்றை 2,000 அடி உயரத்தில் 25 சதவீதம் குறைவாக சேர்க்க வேண்டுமென்றும் 8,000 அடி உயரத்தில் 75 சதவீதம் குறைவாக சேர்க்க வேண்டுமென்றும் த நியூ ஹை ஆல்டிடியூட் குக்புக் சொல்கிறது.
ஈஸ்ட் சேர்க்கப்பட்ட பிரெட்டுகளை தயாரிக்கையில் மாவு இரண்டு மடங்குக்கு மேல் உப்பிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். கேக்கின் அணு அமைப்பை முட்டைகள் ஸ்திரப்படுத்தும் என்பதால் பெரிய அளவு முட்டைகளை பயன்படுத்துங்கள். ஆனால் சர்க்கரையை அதிகம் சேர்த்தால் அணு அமைப்பு பலவீனமாகிவிடும். அதோடு குறைவான காற்று அழுத்தம் உங்கள் மாவிலுள்ள தண்ணீரை சீக்கிரம் வற்றச் செய்வதால் அதிலுள்ள சர்க்கரையை கெட்டியாக்கிவிடும். ஆகவே சர்க்கரையை குறைவாக பயன்படுத்துங்கள். பெரும்பாலான பதார்த்தங்களுக்கு அதிக தண்ணீர் சேர்க்க வேண்டியிருக்கும்; ஏனென்றால் மலைகளிலுள்ள அடர்த்தியற்ற வறண்ட காற்று உணவிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடுகிறது.
உயரமான பிரதேசங்களில் கிட்டத்தட்ட எல்லாவித உணவும் தயாராவதற்கு அதிக நேரம் எடுக்கும். உதாரணத்திற்கு, 5,000 அடி உயரத்தில் முட்டையை வேகவைக்க ஒரு நிமிடம் கூடுதலாக எடுக்கும்; 10,000 அடி உயரத்தில் மூன்று நிமிடம் கூடுதலாக எடுக்கும். பிரெஷர் குக்கரை வைத்திருப்பது ரொம்பவே கைகொடுக்கும். சொல்லப்போனால் உயரமான இடங்களில் அது இல்லாமல் மொச்சைகளையும் பட்டாணிகளையும் வேக வைக்கவே முடியாது.
என்றாலும், உயரமான பிரதேசங்களுக்கு செல்வதைக் குறித்து பயப்படாதீர்கள். கொஞ்ச காலத்திற்கு நீங்கள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வேண்டியிருக்கலாம், உங்கள் ஸ்பாஞ்ச் கேக் தோசைபோல் தட்டையாகிவிடலாம், உங்கள் கார் மூட்டுவியாதியுள்ள ஆமைபோல் நகரலாம், ஆனாலும் உடல்நிலை ஓரளவு நன்றாக இருந்தால் உங்கள் விஜயத்தை மகிழ்ந்து அனுபவிப்பீர்கள். (g04 3/8)
[அடிக்குறிப்பு]
a மிகவும் உயரமான பிரதேசங்களில் சுவாசத்தை அதிகரிக்க அசிட்டாசோலாமைடு (acetazolamide) என்ற மருந்தை சில டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். உயரமான பிரதேசங்களில் ஏற்படும் சிக்கல்களுக்கு மற்ற மருந்துகளும் விளம்பரப்படுத்தப்படுகின்றன, ஆனால் அவற்றை எல்லா டாக்டர்களும் பரிந்துரைப்பதில்லை.
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
உலகெங்கும் உயரத்திலுள்ள நகரங்களும் மலைகளும்
—30,000 அடி—
எவரெஸ்ட் சிகரம், நேப்பாளம் மற்றும் சீனா
29,035 அடி
—25,000 அடி—
—20,000 அடி—
கிளிமஞ்சாரோ சிகரம், டான்ஜானியா
19,341 அடி
அவ்காங்கில்ச்சா, சிலி
17,539 அடி
மான்ட் ப்ளாங்க், பிரான்சு
15,771 அடி
—15,000 அடி—
போட்டாசி, பொலிவியா
13,700 அடி
பூனோ, பெரு
12,549 அடி
ஃப்யூஜி சிகரம், ஜப்பான்
12,387 அடி
லாபாஸ், பொலிவியா,
11,900 அடி
—10,000 அடி—
ட்ரங்சா சாங், பூட்டான்
7,867 அடி
மெக்சிகோ நகரம், மெக்சிகோ
7,347 அடி
வாஷிங்டன் சிகரம், நியூ ஹாம்ப்ஷையர்,
ஐக்கிய மாகாணங்கள்
6,288 அடி
நைரோபி, கென்யா
5,495 அடி
டென்வர், கொலரடோ, ஐக்கிய மாகாணங்கள்
5,280 அடி
—5,000 அடி—
—கடல் மட்டம்—
[பக்கம் 10-ன் படம்]
லாபாஸ், பொலிவியா
[பக்கம் 10-ன் படம்]
ஜோஹெனஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா, 5,740 அடி