உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sg படிப்பு 17 பக். 84-90
  • கடிதங்கள் எழுதுவது எப்படி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடிதங்கள் எழுதுவது எப்படி
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • இதே தகவல்
  • கடிதத் தொடர்பு
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...​—⁠கடிதங்கள் எழுதுவது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • பைபிள் புத்தக எண் 53—2 தெசலோனிக்கேயர்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
sg படிப்பு 17 பக். 84-90

படிப்பு 17

கடிதங்கள் எழுதுவது எப்படி

1 ஆரம்பகால கிறிஸ்தவ சபையில் கடிதங்கள் பல வழிகளில் நன்கு பயன்படுத்தப்பட்டன. அவை சபைகளோடு தொடர்புகொள்வதற்கு வழிமுறையாக இருந்தன. (பிலி. 1:1) விசேஷித்த பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டிருந்தவர்களை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டன. (2 தீ. 1:1, 2, 6) கடிதங்கள் அண்மையில் விசுவாசிகளாக மாறினவர்களை அல்லது பெருங்கஷ்டத்தை எதிர்ப்பட்டிருந்தவர்களைக் கட்டியெழுப்பின. (1 தெ. 1:1-7; 3:1-7) பூர்வ கிறிஸ்தவர்கள் கர்த்தருடைய சேவையில் தங்களுக்கு நெருக்கமாகிவிட்டவர்களோடு தொடர்புகொள்வதற்கு கடிதங்களைப் பயன்படுத்தினர்.—3 யோ. 1, 14.

2 இன்றுள்ள தேவராஜ்ய ஊழியர்களும்கூட கடிதங்களை எழுதுவதற்கு, அநேக காரணங்களைக் கொண்டிருக்கின்றனர், இந்தக் கடிதங்கள் மிகுதியான நன்மையைச் சாதிக்கமுடியும். வணிக கடிதங்கள் சில சமயங்களில் அவசியமாக இருக்கலாம். இராஜ்ய வேலையின் சம்பந்தமாக பொதுப் பணிச் சார்ந்த அதிகாரிகளுக்கு எழுதவேண்டியிருக்கலாம். கடிதங்கள் மூலமாக மட்டுமே, மற்றவர்கள் அணுகமுடியாத அடுக்கக கட்டடங்களில் குடியிருப்பவர்களையும் ஒதுக்கமாயுள்ள இடங்களில் வாழ்பவர்களையும் அநேகமாக நற்செய்தியோடு தொடர்புகொள்ள முடிகிறது. உங்கள் சபையிலுள்ள சில பிரஸ்தாபிகள் இடம் மாறிச்சென்றிருக்கலாம், அல்லது உறவினர்கள் கணிசமான தூர இடங்களில் வாழ்ந்துவரலாம், நீங்கள் ஒரு கடிதமெழுதுவதன் மூலம் அவர்களுக்கு உங்களுடைய அன்பார்ந்த அக்கறையைக் காண்பிக்க விரும்பலாம். மேலும், நன்றியை அல்லது அனுதாபத்தைத் தெரிவிக்க நீங்கள் ஒரு கடிதத்தை அனுப்பும் சமயங்கள் இருக்கின்றன.

3 நம்முடைய கடிதங்கள் நம் கடவுள் கொடுத்த ஊழியத்துக்கு தகுதியானதாக இருக்க வேண்டும். அவை சிநேகமாயும் சாதுரியமாயும் மற்றும் அவற்றைப் படிக்கிறவர்களுக்கு அன்பார்ந்த கரிசனையைக் காட்டுவதாயும் இருக்க வேண்டும். அவை வாசிப்பவரின் விசுவாசத்தை அழித்து சோர்வடையச்செய்யும் வகையில் எதிர்மறையாயும் குறைகூறும் ஆவியை வெளிப்படுத்துவதாயும் இருப்பதற்குப் பதிலாக நம்பிக்கையானதாயும் கட்டியெழுப்புவதாயும் இருக்க வேண்டும். “அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்,” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (1 கொ. 8:1) கடிதத்தின் அனைத்தையும் உள்ளிட்டத் தோற்றத்தையும் அது தரும் அபிப்பிராயத்தையும்கூட கவனியுங்கள். நேர்த்தியாக இருப்பதற்கு, இரண்டு பக்கங்களிலும் கடிதத்தின் கீழ்ப்பகுதியிலும் நியாயமான ஒரேயளவான மார்ஜினைக் கொண்டிருப்பது உதவியாக இருக்கிறது. மை அப்பியிருப்பது நல்ல அபிப்பிராயத்தைக் கொடுப்பதில்லை. மேலும், நல்ல எழுத்துக்கூட்டு மற்றும் வாக்கிய அமைப்பு கவனிக்கப்பட தகுதியாய் இருக்கிறது. இருப்பினும், இவற்றில் நீங்கள் தேர்ச்சிபெற்றவராக இல்லையென்றால், நண்பர்களுக்கு எழுதுவதிலிருந்து அது உங்களை சோர்வடையச் செய்ய அனுமதியாதீர்கள். கனிவு, அக்கறை மற்றும் உற்சாகம் ஆகியவை பொதுவாக எழுத்துக்கூட்டிலும் வாக்கிய அமைப்பிலுமுள்ள பிழைகளை ஈடுசெய்வதற்கும் அதிகமாகச் செய்துவிடுகிறது. ஆனால் அகராதி ஒன்றைப் பயன்படுத்துவதன் மூலம் எழுத்துக்கூட்டை முன்னேற்றுவிக்கமுடியும், மற்றவர்கள் எவ்வாறு சொற்களையும் சொற்றொடர்களையும் ஒன்றாகச் சேர்க்கின்றனர் என்பதைக் கவனிப்பதன் மூலம் வாக்கிய அமைப்பை முன்னேற்றுவிக்க முடியும். இந்தக் குறிப்புகளை மனதில் கொண்டவர்களாய், நம்முடைய ஊழியத்தின் சம்பந்தமாக நாம் எழுதும் பல்வேறு வகையான கடிதங்களையும் இப்பொழுது கூர்ந்து ஆராயலாம்.

4 வணிக கடிதங்கள். நீங்கள் ஒரு வணிக கடிதத்தை எழுதும்போது, உங்கள் பெயர், விலாசம் மற்றும் தேதியை கடிதத்தின்மேல் எழுதுவது பொருத்தமானதாகும். இது தலைப்பு என்றழைக்கப்படுகிறது, இது தாளின் வலதுபக்கத்தில் காணப்படுகிறது. (உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதும் கடிதங்களில், அது சபை பற்றின விஷயங்களாக இருக்கையில் தலைப்பில் அனுப்புநரின் சபை பெயரும்கூட இடம்பெற வேண்டும்.) “உள் விலாசம்” தாளின் இடது பக்கத்தில் ஆனால் தலைப்புக்குச் சற்று கீழே இருக்க வேண்டும். இங்கே நீங்கள் கடிதமெழுதுகின்ற நிறுவனம் அல்லது நபரின் பெயர் மற்றும் விலாசத்தைக் கொடுப்பீர்கள். வரிசையில் அடுத்து வருவது வணக்கவுரை ஆகும். யெகோவாவின் சாட்சிகளோடு சம்பந்தமில்லாத நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுக்கு எழுதும்போது, “அன்புள்ள ஐயா,” “மதிப்புக்குரியவர்களே,” “அன்புள்ள திருவாளர் போன்றவை பொருத்தமாயிருக்கும். சொஸைட்டிக்கும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் மற்றவர்களுக்கும் எழுதும்போது, “அன்புள்ள சகோதரர்களே,” அல்லது “அன்புள்ள சகோதரர் போன்ற வணக்கவுரைகளைப் பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது. கடைசியாக “தங்கள் உண்மையுள்ள” அல்லது “தங்களின் மிகவும் உண்மையான” என்பது போன்ற முடிவான சொற்றொடர் வருகிறது. யெகோவாவின் அமைப்புக்குள் இருப்பவர்களுக்கு எழுதுகையில் “தங்கள் சகோதரர்” அல்லது “தங்கள் உடன் ஊழியர்” போன்ற முடிவான சொற்றொடர்கள் பொருத்தமாயிருக்கின்றன. இது பக்கத்தின் நடுப்பகுதியில் ஆரம்பமாகிறது, அதை ஒரு காற்புள்ளி தொடருகிறது. அதற்கு நேராக கீழே, உங்கள் பெயரை கையொப்பமிடுங்கள். ஒரு சபை அல்லது ஒரு வட்டாரத்தின் சார்பாக சொஸைட்டிக்கு கடிதம் எழுதப்படுகையில், எழுதுபவர் தன்னுடைய கையொப்பத்துக்கு நேராக கீழே “நடத்தும் கண்காணி” அல்லது “வட்டாரக் கண்காணி” போன்ற தன் வேலையையும்கூட காட்ட வேண்டும்.

5 உங்கள் கடிதத்தின் ஆரம்பத்திலே, அதனுடைய நோக்கத்தை தெரிவித்துவிடுங்கள். அப்போது பெறுநர் நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள் என்பதை உடனடியாகத் தெரிந்துகொள்வார். கடிதம் இதற்கு முந்திய ஒரு கடிதத்தின் தொடர்செயலாக இருந்தால், முந்திய கடிதத்தையும் அது எந்தத் திட்டவட்டமான விஷயத்தைப் பற்றியதாக இருந்தது என்பதையும் குறிப்பிடுவது நல்லது. கடிதப்போக்குவரத்து, அநேக இலாக்காக்களைக் கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தோடிருக்குமானால், நிறுவனத்திலிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட கடைசி கடிதத்தில் காணப்படும் அடையாளக் குறிகள் ஏதேனும் இருந்தால் அதைக் காட்டுவதும்கூட பிரயோஜனமாயிருக்கிறது. கடிதத்தின் பொருளுரையைப் பொருத்தமட்டில், ஒவ்வொரு திட்டவட்டமான விஷயத்துக்கும் அல்லது எண்ணத்துக்கும் தனித்தனி பாராக்களைப் பயன்படுத்துவதால் நல்ல பலன்கள் கிடைப்பதை நீங்கள் காண்பீர்கள். உங்கள் கடிதத்திலுள்ள பல்வேறு குறிப்புகளும் தெளிவாக மேலெழுந்து நிற்கச் செய்வதற்கு இது உதவிசெய்கிறது, அநேகமாக மேம்பட்ட சேவையில் விளைவடைகிறது. கடிதம் பாதி தொழில்சம்பந்தமாகவும் பாதி தனிப்பட்ட முறையிலும் இருந்தால், தொழில் விஷயங்களுக்கு முதலில் கவனம் செலுத்துவதே சிறந்தது.

6 கடிதமெழுதுவதில் சுருங்கக்கூறுவது எப்பொழுதும் மதிப்புள்ளதாக இருக்கிறது, என்றாலும் நீங்கள் சொல்ல விரும்பும் தகவல் தெளிவாகவும் முழுமையாகவும் இருக்க வேண்டும். ஆனால் அநாவசியமான வார்த்தைகளும் திரும்பத் திரும்பக் கூறப்பட்ட கருத்துக்களும் நீக்கப்பட்டால், உங்கள் கடிதம் அதிக பலன்தரத்தக்கதாக இருக்கும். உங்கள் தலைப்புப் பொருளோடு சம்பந்தப்படாத பொருளை நீங்கள் விட்டுவிட்டால் உங்கள் கடிதத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்த அது உதவியாயிருக்கிறது. மேலும், மற்றவர்களின் முயற்சிக்காக உண்மையான போற்றுதலைத் தெரிவிப்பதும் பொதுவாக பொருத்தமாயிருக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சினையை விவரிக்கும் ஒரு வணிகக் கடிதத்திலும்கூட, “இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் எனக்கு நீங்கள் செய்வதை (அல்லது உங்களால் செய்யமுடிவதை) நான் வெகுவாக போற்றுகிறேன்” போன்ற ஏதோ சில சொற்றொடர்களை நீங்கள் பயன்படுத்தும்போது பிரதிபலிப்பு பொதுவாக மேம்பட்டதாக இருக்கிறது.

7 சாட்சி கொடுப்பதற்கு. இராஜ்ய செய்தியை பிரசங்கிப்பதிலும்கூட கடிதமெழுதுவது பயனுள்ளதாக நிரூபித்திருக்கிறது. சில இடங்களில் தடையின்றி ஊழியம் செய்யமுடியாத பெரிய அடுக்கக வீடுகள் அல்லது குடியிருப்புவசதியுள்ள விடுதிகள் இருக்கின்றன, ஆனால் குடியிருப்போருக்கு நாம் கடிதங்களை எழுதமுடியும். மேலும், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சில ஆட்கள் அடிக்கடி வீட்டில் காணப்படுவதில்லை, ஆனால் அவர்கள் தங்களுக்கு வரும் தபாலை பார்க்கின்றனர். நோய் காரணமாக தன் வீட்டைவிட்டு வெளியே செல்லமுடியாத ஒரு பிரஸ்தாபிக்கு, இந்த ஆட்களுக்குக் கடிதங்களை எழுதுவதே ராஜ்ய செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கு அவருக்கிருக்கும் ஒரே வழியாக இருக்கலாம்.

8 கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து சாட்சிகொடுக்க கடிதமெழுதுகையில், முதலில் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்வது நல்லது. நேரடியாக வந்து சந்திப்பதற்குப் பதிலாக நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள் என்பதைக் குறிப்பிடவும்கூட நீங்கள் விரும்பலாம். உங்களுடைய ஊக்கமுடைமை பெறுநரை கவர்ந்துவிடும். பின்னர் உங்களால் நேரடியாக சந்திக்கமுடிந்திருந்தால் நீங்கள் என்ன சொல்ல விரும்பியிருப்பீர்கள் என்பதை தயார்செய்யுங்கள். ஊழியப் பள்ளியில் நீங்கள் கற்றுவந்திருக்கும் நியமங்களைப் பொருத்திப்பிரயோகித்தால் அதைச் செய்வது கடினமில்லை. நம் ராஜ்ய ஊழியம் சமீப இதழிலிருந்து ஒரு வேதாகம அளிப்பை நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது சமீபத்தில் வந்த காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை உங்களுடைய சொந்த வார்த்தைகளில் அமைத்து எழுதலாம். ஒரு துண்டுப்பிரதி, பத்திரிகை அல்லது சிறுபுத்தகத்தை உறையிலிட்டு அந்த நபரை வாசிக்கவும்கூட உற்சாகப்படுத்தலாம். இந்தத் தகவல் ஏன் அவ்வளவு முக்கியமானது என்பதை விளக்குங்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நீங்கள் செய்வது போலவே, அவர் தன்னுடைய சொந்த பைபிளில் வேதவசனங்களை எடுத்துப்பார்க்கும்படியாக ஆலோசனை கூறலாம். பின்னர், ஒருவேளை அக்கறைத் தூண்டப்பட்டிருந்தால் அதை வளர்க்கும் எண்ணத்துடன் உங்களுடன் எவ்வாறு தொடர்புகொள்ளமுடியும் என்பதைச் சொல்லி, அவ்விதமாகச் செய்ய அவருக்கு அழைப்புக்கொடுங்கள். அவர் உங்களுக்கு நன்றிசொல்லவோ காவற்கோபுரம் அல்லது விழித்தெழு!-வுக்கு சந்தாசெய்யவோ விரும்பினால், எங்கே எழுதுவது என்பதை அறிந்திருக்கும்பொருட்டு உங்கள் பெயரையும் விலாசத்தையும் தெளிவாக குறிப்பிடுங்கள்.

9 உறைக்கு வெளியே எப்போதும் உங்கள் சொந்த விலாச விவரங்களை கொடுங்கள். விசேஷமாக பிரசுரங்களை நீங்கள் உறையிலிட்டிருந்தால், போதிய தபால் தலைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்துகொள்ள சரிபார்த்துக்கொள்ளுங்கள். தபால் தலைகள் போதுமானதாக இல்லையென்றால், வீட்டுக்காரரிடமிருந்து செலுத்தப்படவேண்டிய தொகை வசூல்செய்யப்படும், இது நல்ல ஒரு சாட்சிகொடுப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சியிலிருந்து கவனத்தை வேறுவழியில் திருப்பிவிடக்கூடும்.

10 குடும்ப அங்கத்தினர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும். தினசரி வாழ்க்கையில், நாம் அதிமுக்கியமானதாக கருதும் நடவடிக்கைகளுக்கு நம்முடைய நேரத்தையும் கவனத்தையும் செலுத்துகிறோம். ஆனால் அன்புள்ள உறவினர்களோடும் நெருங்கிய நண்பர்களோடும் தபால் மூலமாக தொடர்பு வைத்துக்கொண்டிருக்க நாம் நேரத்தை எடுத்துக்கொள்கிறோமா? பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடமிருந்து வரும் கடிதங்களை வெகுவாக போற்றுகின்றனர், பிள்ளைகள் தங்கள் பெற்றோர் எழுதும் கடிதங்களிலிருந்து நன்மையடைகின்றனர். கடிதங்கள் மூலமாக “சம்பாஷணை” பரிமாறிக்கொள்வது குடும்ப அங்கத்தினர்கள் சரீரப்பிரகாரமாக வெகு தொலைவிலிருந்தாலும் அவர்களை ஒன்றாகச் சேர்ந்திருக்கச் செய்கிறது. நீங்கள் நலமாயிருப்பதற்கு ஒருவித அத்தாட்சியாக உங்கள் பேனா அல்லது தட்டெழுத்துப்பொறியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஓர் உற்சாகமான, செய்திகள் நிறைந்த கடிதத்தினால் உங்கள் நண்பர்களும் உறவினர்களும் கட்டியெழுப்பப்படுவது நிச்சயம். நீங்கள் அதை சந்தேகிக்கிறீர்களா? அப்பொழுது உங்கள் சொந்த அனுபவத்தைப்பற்றி எண்ணிப்பாருங்கள். வெகுசில பொருட்களே நேர்த்தியானதொரு கடிதத்தைப் போல அத்தனை சந்தோஷத்துடன் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. பொதுவாக அதைப்பற்றியதில் இன்பமான ஒரு கிளர்ச்சி இருக்கிறது. எவரோ ஒருவர் உங்களைப் பற்றி நினைத்திருக்கிறார் என்பது உங்களை மகிழ்ச்சியடையச்செய்கிறது, அல்லவா? கிறிஸ்தவர்களின் குறிப்பிடத்தக்க பண்பு ஒருவரிலொருவர் அன்புகூருவதே என்பது நினைவிலிருக்கட்டும். இதைக் காண்பிப்பதற்கு ஒரு வழி தொலைதூரத்தில் பிரிந்திருந்தாலும் தொடர்புவைத்துக்கொள்வதன் மூலமாகும்.

11 ஆனால் எதைப்பற்றி நீங்கள் எழுதுவீர்கள்? நீங்கள் அக்கறையூட்டும் அனுபவங்களை மகிழ்ந்து அனுபவிக்கிறீர்களா? உங்களுக்கு இன்பத்தைக்கொண்டுவருகிறவற்றை பொதுவாக மற்றவர்கள் அனுபவிக்கின்றனர். அது ஒருவேளை ஊழியத்தில் உங்களுக்குக் கிடைத்த அனுபவமாக அல்லது மற்றவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட அனுபவமாக இருக்கலாம். (ஆனால் நம்புவதற்கு ஒருவித சந்தேகத்தைக் கொண்டிருக்கும் காரியங்களைப்பற்றி சொல்வது ஞானமற்றதாகும்.) சில சமயங்களில் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் அந்த நபரோடு பகிர்ந்துகொண்ட இன்பமான அனுபவங்களைப் பற்றி நினைப்பூட்ட விரும்பலாம். இது நண்பர்களை நெருங்கிவரச் செய்கிறது. நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் புதிய காரியங்களைப்பற்றியும்கூட எழுதலாம். சமீபத்தில் தனிப்பட்டவிதமாக செய்துகொண்டிருந்தக் காரியங்களைப்பற்றி, ஒருவேளை நீங்கள் சென்றிருந்த இடங்களைப்பற்றி என்ன? இப்படிப்பட்ட விஷயங்கள் எப்பொழுதும் நண்பர்களுக்கு அக்கறைக்குரியவையாக இருக்கின்றன. நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் அந்த நபர் வியாதிப்பட்டவராக இருக்கிறாரா? உற்சாகப்படுத்தி எழுதுங்கள். அக்கறையாய் இருப்பதைக் காண்பித்து அவர் விரைவில் நலம்பெற நம்பிக்கையைத் தெரிவியுங்கள். சபையில் ஒரு கூட்டத்தின்போது நடந்த விசேஷமான அக்கறைக்குரிய ஏதோவொன்றை, ஊக்கமூட்டுவதாக இருந்த ஒன்றை, வியாதிப்பட்டவருக்கு அந்த நாளை பிரகாசிப்பிக்கச் செய்யும் ஒன்றைப்பற்றியும்கூட நீங்கள் குறிப்பிடலாம். எழுதுவதற்குரிய காரியங்களின் சம்பந்தமாக, சமீபத்தில் என்ன நடந்தது அல்லது நீங்கள் எதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தீர்கள் என்பது பற்றிய விவரங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வதில் உங்களுக்குப் பிரச்சினை இருந்தால், அவை நினைவுக்கு வரும்போது ஏன் ஞாபகக்குறிப்பு அட்டை ஒன்றில் அவற்றை குறித்துக்கொள்ளக்கூடாது? பின்னர் நீங்கள் எழுதுவதற்கு உட்காருகையில், தகவல் உடனடியாக கிடைப்பதாய் இருக்கும்.

12 மேலும் என்ன எழுதுவது என்பதன் சம்பந்தமாக, கடிதத்தைப் பெற்றுக்கொள்பவரைச் சத்தியத்தின் வழியில் உற்சாகப்படுத்துவதைக்காட்டிலும் அதிக மதிப்புள்ள வேறு எதையாவது உங்களால் சிந்தித்துப்பார்க்க முடியுமா? ஒருவேளை உங்களோடு படித்துக்கொண்டிருந்த ஒருவர் மற்றொரு நகரத்துக்கு இடம்மாறிச் சென்றிருக்கலாம். உங்கள் தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்தி உற்சாகமளிக்கும் கடிதத்தை எழுதுவீர்களானால், சத்தியத்தில் அவருடைய அக்கறையை உயிருள்ளதாக வைத்திருக்க இது உதவிசெய்யாதா? வீட்டிலிருந்து தொலைவில் இருக்கும் மகனோ மகளோ ஆண்டுகளினூடாக பெற்றோர் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பதற்காகவும் பிள்ளைகளை யெகோவாவின் வழிகளைப் போற்றும்படியாக வளர்த்திருப்பதற்காகவும் போற்றுதலை வெளிப்படுத்தி கடிதமெழுதுகையில், பெற்றோர் எவ்விதமாக உணருகின்றனர் என்பதையும்கூட எண்ணிப்பாருங்கள். மேலும், சாட்சிகளுக்கு விசேஷமாக தேவை அதிகமாயிருக்கும் இடங்களுக்கு இடம் மாறிச்சென்றிருப்பவர்களை அல்லது மிஷனரி வேலையில் அல்லது பெத்தேல் வீடுகளில் நியமிப்புகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்களைப் பற்றி என்ன? யெகோவாவுக்கு அவர்களுடைய உண்மையுள்ள சேவைக்காக அவர்களை மெச்சிக்கொள்ளும் கடிதங்களைப் பெற்றுக்கொள்வது அவர்களுக்கு என்னே ஓர் ஊக்குவிப்பாக இருக்கும்! (நியா. 11:40, NW) அவர்கள் வழக்கமாகச் சென்றுகொண்டிருந்த சபையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்லும் விஷயங்களை உங்கள் கடிதத்தில் சேர்த்துக்கொண்டால் அவர்கள் அதை போற்றுவார்கள்.

13 எல்லா கவனத்தையும் உங்கள்மீதே ஒருமுகப்படுத்தாதிருப்பதன் மூலம் உங்கள் கடிதங்களின் தரத்தைக் கூட்டுங்கள். அவருடைய சுகநலம், அவருடைய திட்டங்கள், இதற்கு முன்னால் அவர் எழுதியிருந்த விஷயங்கள் என்னவாயின, உங்களுக்குப் பொதுவாயிருக்கும் நண்பர்கள், அவர் பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருப்பவர்களுடைய முன்னேற்றம் ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளையும் சேர்த்துக்கொள்வதன் மூலம் அவரில் உங்கள் அக்கறையைக் காண்பியுங்கள். மற்ற நபரில் இப்படிப்பட்ட அக்கறை ஆரோக்கியமான கட்டியெழுப்பும் பாதிப்பைக் கொண்டிருந்து மேலுமான செய்தி பரிமாற்றத்தை ஊக்குவிக்கிறது.

14 உங்கள் கடிதத்தின் பொருளுரையை முடித்தப்பின்பு, அதை நீங்கள் எவ்வாறு முடிப்பீர்கள்? அர்த்தமுள்ள முடிவுகள் நிச்சயமாகவே விரும்பத்தகுந்தவை. “எழுதுவதற்கு இடமில்லாததால் நான் முடித்துக்கொள்ள வேண்டும்,” என்று மாத்திரமே நாம் சொல்வோமானால் அது எழுதுபவர்மீது நல்லவிதமாக பிரதிபலிப்பதில்லை. ஏன் அதிக அர்த்தமுள்ள ஏதோவொன்றைப் பற்றி யோசித்துப்பார்க்கக்கூடாது? அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய கடிதங்களை பல்வேறு வித்தியாசமான அக்கறையூட்டும் வழிகளில் முடித்தார். உதாரணமாக: “சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக.” (கலா. 6:18; 2 கொ. 13:14) அப்போஸ்தலன் யோவான் தன்னுடைய கடிதங்களில் ஒன்றை இவ்வாறு முடித்தார்: “உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகின்றனர். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.” (3 யோ. 14) உங்கள் கடிதத்தின் பொதுவான தலைப்புப் பொருளுக்கு இசைவாகவும் அந்தத் தனி நபரோடு உங்களுடைய உறவுக்குப் பொருத்தமாகவும் ஒரு முடிவுரையைப் பயன்படுத்துங்கள்.

15 ஒவ்வொரு நாளும் உங்களைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் காரியங்களை நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களானால் கடிதமெழுதுவது கடினமானதல்ல. பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக அநேக காரியங்கள் சம்பவித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் பழைய காரிய ஒழுங்குமுறை, அதனுடைய மத அம்சம் உட்பட வேகமாக சீரழிந்துகொண்டிருக்கிறது. என்றபோதிலும் யெகோவாவின் வேலை அதன்மீது அவருடைய ஆசீர்வாதத்தைக் கொண்டிருப்பதன் காரணமாக அதிசயமாக செழித்தோங்கி வருகிறது. உங்கள் சகோதரர்கள் உங்கள் பகுதியின் தேவராஜ்ய விஸ்தரிப்பு செய்திகளைக் கேட்பதில் களிகூருகின்றனர். நீங்கள் யாராயிருந்தாலும், உங்கள் கனிவுள்ள, தனிப்பட்ட அக்கறைக்குரிய வார்த்தைகளை ஒரு கடிதத்தில் பெற்றுக்கொள்ள சந்தோஷமுள்ளவர்களாயிருக்கும் மற்ற ஆட்கள் இருக்கின்றனர். மற்றவர்களுக்கு இந்த அக்கறையைக் காண்பிப்பது உண்மையில் நம்முடைய ஊழியத்தின் பாகமாக இருக்கிறது, ஏனென்றால் தொலைதூரத்தினால் நாம் பிரிந்திருக்கும் காரணத்துக்காக நம்முடைய சகோதர சிநேகம் ஒழிந்துபோய்விடக்கூடாது. ஆம், கடிதமொன்றை எழுதுவதன் மூலம் அது அதிகரிக்கப்படலாம்.

[கேள்விகள்]

1, 2. கடிதங்கள் என்ன நல்ல நோக்கங்களை நிறைவேற்றமுடியும்?

3. நம்முடைய ஊழியத்துக்குத் தகுதியானதாக இருப்பதற்கு, நம்முடைய கடிதங்களை எது தனிப்படுத்திக்காட்ட வேண்டும்?

4.ஒரு வணிக கடிதத்தின் சரியான வடிவத்தை சுருக்கமாக கூறுங்கள்.

5, 6. கடிதத்தில் முதலாவது கவனிக்கப்பட வேண்டியது என்ன, சாதகமான பிரதிபலிப்பைக் கொண்டுவர எது பொதுவாக உதவிசெய்கிறது?

7-9. சாட்சிகொடுக்கும் நோக்கமுடைய ஒரு கடிதத்தில் என்ன சொல்லப்படலாம்?

10, 11. குடும்ப அங்கத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் எழுதும் கடிதங்கள் ஏன் பிரயோஜனமாயிருக்கின்றன, அவற்றில் என்ன சேர்க்கப்படலாம்?

12, 13.நம்முடைய கடிதங்கள் எவ்விதமாக மற்றவர்களைச் சத்தியத்தின் வழியில் ஊக்குவிக்கக்கூடும்?

14, 15.உங்கள் கடிதத்தின் முடிவுரையை அர்த்தமுள்ளதாக்க என்ன செய்யப்படலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்