உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be பக். 71-73
  • கடிதத் தொடர்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடிதத் தொடர்பு
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடிதம் மூலம் சாட்சிகொடுத்தல்
  • கடிதத்தின் அமைப்பைக் குறித்து சில வார்த்தைகள்
  • சரியான தொனி
  • மாதிரி கடிதம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • கடிதங்கள் எழுதுவது எப்படி
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட...​—⁠கடிதங்கள் எழுதுவது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1996
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be பக். 71-73

கடிதத் தொடர்பு

கடிதங்கள் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையையும் நடத்தையையும் மேம்படுத்தியிருக்கின்றன. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தைச் சேர்ந்த பெரும்பாலான புத்தகங்கள் முதலில் கடிதங்களாகவே எழுதப்பட்டன. இன்று நாமும் கடிதங்கள் வாயிலாக புதிய கிறிஸ்தவர்களை தட்டிக்கொடுக்கலாம், நண்பர்களோடு தொடர்புகொள்ளலாம், விசேஷ பொறுப்புகளை ஏற்றிருக்கும் சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தலாம், கஷ்டநஷ்டங்களை சகிப்போரை பலப்படுத்தலாம், சபை நடவடிக்கைகளை கவனிக்க தேவைப்படும் தகவலையும் வழங்கலாம்.​—⁠1 தெ. 1:1-7; 5:27; 2 பே. 3:1, 2.

கடிதம் எழுதுவது சாட்சிகொடுப்பதற்கும் திறம்பட்ட ஒரு வழியாகும். சில இடங்களில், பலத்த பாதுகாப்புள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் அல்லது சாட்சிகொடுக்க அனுமதியில்லாத அதுபோன்ற மற்ற குடியிருப்புகளில் அநேகர் வசிக்கின்றனர். சிலர் பெரும்பாலான நேரம் வீட்டில் இருப்பதில்லை, ஆகவே நாம் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது அவர்களை சந்திக்க முடிவதில்லை. மற்றவர்கள் ஒதுக்குப்புறமான இடங்களில் வசிக்கிறார்கள்.

நோய், மோசமான வானிலை, ஊரடங்கு உத்தரவு போன்றவை சிலசமயம் உங்களை வீட்டிற்குள் முடக்கி வைக்கலாம். உறவினர் ஒருவருக்கு அல்லது நீங்கள் சந்தர்ப்ப சாட்சி கொடுத்த ஒருவருக்கு மேலுமாக சாட்சிகொடுக்க கடிதம் எழுத முடியுமா? உங்கள் பைபிள் மாணாக்கர்களில் ஒருவர் குடிமாறி சென்றுவிட்டாரா? ஆன்மீகத்தில் அவருக்குள்ள ஆர்வம் தணிந்துவிடாதிருக்க உங்கள் கடிதமே தேவையாக இருக்கலாம். அல்லது சமீபத்தில் மணம் செய்திருப்பவருக்கோ, குழந்தை பெற்றிருப்பவருக்கோ, அன்பானவரை மரணத்தில் பறிகொடுத்தவருக்கோ கடிதம் எழுதி பொருத்தமான வேதப்பூர்வ தகவலை பகிர்ந்துகொள்ளலாம்.

கடிதம் மூலம் சாட்சிகொடுத்தல்

நீங்கள் இதுவரை சந்தித்திராத ஒரு நபருக்கு கடிதம் எழுதி சாட்சிகொடுக்கும்போது, முதலில் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் உலகளாவிய வாலண்டியர் பணியில் ஈடுபட்டிருப்பதை விளக்கலாம். பொருத்தமாக இருக்குமானால், நீங்கள் யெகோவாவின் சாட்சி என்பதைக் குறிப்பிடுங்கள். நேரில் சந்திக்காமல் ஏன் கடிதம் எழுதுகிறீர்கள் என்பதை அந்நபருக்கு தெரியப்படுத்துங்கள். அவரிடம் நேருக்கு நேர் பேசுவதாகவே நினைத்து எழுதுங்கள். ஆனால் “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய்” இருக்க வேண்டுமென்ற அறிவுரைக்கு இசைவாக, உங்களைப் பற்றி எந்தளவு தகவலளிப்பது என்பதைக் குறித்ததில் உஷாராக இருங்கள்.​—⁠மத். 10:⁠16.

நேரில் சந்தித்திருந்தால் அந்நபரிடம் என்ன சொல்லியிருப்பீர்களோ அதை கடிதத்தில் எழுதுங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து ஒரு அறிமுகத்தை நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது நம் ராஜ்ய ஊழியத்தின் சமீபத்திய பிரதியிலிருந்து ஒரு வேதப்பூர்வ பிரசங்கத்தை பயன்படுத்தலாம். ஒரு கேள்வியைக் கேட்டு, அதைக் குறித்து யோசித்துப் பார்க்கும்படி அவரை உற்சாகப்படுத்தலாம். சில பிரஸ்தாபிகள், பைபிள் கேள்விகளுக்கு விடையளிக்கும் இலவச ஏற்பாடு இருப்பதை மட்டும் விளக்குகிறார்கள்; பிறகு பைபிள் படிப்புக்கு பயன்படுத்தும் ஒரு பிரசுரத்திலிருந்து சில அதிகாரங்களின் தலைப்புகளை குறிப்பிடுகிறார்கள். பக்கம் 73-⁠ல், சாட்சிகொடுப்பதற்கான ஒரு சாம்பிள் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி எழுத வேண்டும் என உங்களுக்கு ஐடியா கொடுக்கும், ஆனால் விஷயங்களை மாற்றி மாற்றி எழுதுவது நல்லது. இல்லையேல் காலப்போக்கில் மக்களுக்கு ஒரேவிதமான கடிதம் திரும்பத் திரும்ப சென்றுகொண்டிருக்கும்.

சிலர், முன்பின் தெரியாதவரிடமிருந்து வரும் நீண்ட கடிதத்தை வாசிக்க விரும்புவதில்லை. ஆகவே சுருக்கமான கடிதம் எழுதுவது ஞானமானது. நீங்கள் பக்கம் பக்கமாக எழுதினால் வாசிப்பவருக்கு அலுப்புத்தட்டிவிடும். ராஜ்ய மன்றங்களில் நடக்கும் கூட்டங்களுக்கான அழைப்பிதழை கடிதத்துடன் சேர்த்து அனுப்புவது பொருத்தமாக இருக்கும். ஒரு துண்டுப்பிரதியை, சிற்றேட்டை, காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பிரதியை அனுப்பலாம்; அவருக்கு விருப்பமென்றால் இவற்றை தவறாமல் பெற முடியுமென்பதையும் விளக்கலாம். அல்லது அந்தப் பொருளின்பேரில் இன்னுமதிகமாக கலந்துரையாட அவர் வீட்டிற்கு வரலாமா என கேட்டெழுதலாம்.

கடிதத்தின் அமைப்பைக் குறித்து சில வார்த்தைகள்

[பக்கம் 73-ன் பெட்டி]

இப்போது சாம்பிள் கடிதத்தை பாருங்கள். அதில் பின்வருபவற்றை கவனியுங்கள்: (1) கிறுக்கப்படாமல் தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. (2) கடித உறை தொலைந்துவிட்டாலும், அனுப்புநரின் பெயரும் விலாசமும் பெறுநரின் கைவசம் இருக்கும். (3) கடிதத்தின் நோக்கம் முதல் பாராவில் எளிய வார்த்தைகளில் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. (4) ஒவ்வொரு முக்கிய கருத்தும் தனி பாராவில் கொடுக்கப்பட்டுள்ளது. (5) நோக்கத்திற்கு இசைவாக, கடிதம் மிகச் சாதாரணமான முறையில் எழுதப்படவும் இல்லை, மிகக் கறாரான முறையில் எழுதப்படவும் இல்லை.

சபை செயலர் கிளை அலுவலகத்திற்கு அனுப்புவது போன்ற முறையான கடிதத்தில், சபையின் பெயரும் செயலரின் பெயரும் அவரது விலாசமும் தேதியும் இருக்கும். கடிதத்தைப் பெறும் நபருடைய அல்லது அமைப்புடைய பெயரும் விலாசமும்கூட இருக்கும். அதற்குப் பின் பொருத்தமான வாழ்த்துதலோடு கடிதம் தொடங்கும். சில மொழிகளில், கடிதத்தின் முடிவில், கையெழுத்திற்கு மேலே, “தங்கள் உண்மையுள்ள” அல்லது “தங்கள் பணிவுள்ள” போன்றவை எழுதப்படுகின்றன. கையெழுத்தை கையால் போட வேண்டும்.

எந்தக் கடிதமாக இருந்தாலும், எழுத்துப்பிழை, இலக்கியப்பிழை, நிறுத்தக்குறிகள், முக்கியமாக நேர்த்தி ஆகியவற்றிற்கு கவனம் செலுத்துங்கள். அவ்வாறு செய்வது உங்கள் கடிதத்திற்கும் அதிலுள்ள செய்திக்கும் கண்ணியம் சேர்க்கும்.

கடித உறையின்மீது எப்போதும் அனுப்புநர் விலாசத்தை​—⁠முடிந்தமட்டும் உங்கள் சொந்த விலாசத்தை​—⁠எழுதுங்கள். முன்பின் தெரியாதவர்களுக்கு கடிதம் எழுதி சாட்சி கொடுக்கையில் உங்கள் சொந்த விலாசத்தைக் குறிப்பிடுவது அவ்வளவு ஞானமானதல்ல என நீங்கள் நினைத்தால், மூப்பர்களிடம் அனுமதி கேட்டு, சபையின் தபால்களை வழக்கமாக பெறும் மூப்பரின் விலாசத்தை எழுதுங்கள். கிளை அலுவலகத்தின் விலாசத்தை ஒருபோதும் குறிப்பிடக்கூடாது; ஏனெனில், கிளை அலுவலகத்திடமிருந்தே கடிதம் வந்திருப்பதாக தவறாக நினைக்கப்படும், இதனால் குழப்பம் ஏற்படும். அனுப்புநர் விலாசம் கொடுக்காமல் பிரசுரத்தை கடிதத்துடன் சேர்த்து அனுப்பும்போதும், கிளை அலுவலகமே அனுப்பியிருப்பதாக தவறாக நினைக்கப்படும்.

போதியளவு ஸ்டாம்பு ஒட்டியிருக்கிறீர்களா என சரிபார்த்துக்கொள்ளுங்கள், முக்கியமாக பிரசுரத்தை கடிதத்துடன் சேர்த்து அனுப்பும்போது இதில் கவனமாக இருங்கள். போதியளவு ஸ்டாம்பு ஒட்டாவிட்டால் கடிதத்தை பெறுபவர் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்; இதனால் ஒருவேளை உங்கள் செய்தியை மதிப்புக்கொடுத்து வாசிக்க மாட்டார். அநேக நாடுகளில், ஒரு சிற்றேடோ பத்திரிகையோ சேர்த்து அனுப்பப்படும்போது கூடுதலான ஸ்டாம்பு ஒட்ட வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

சரியான தொனி

உங்கள் கடிதத்தை எழுதி முடித்தவுடன் அதை மதிப்பிடுவதற்காக வாசியுங்கள். அது எப்படி தொனிக்கிறது? நேசத்துடனும் சாதுரியத்துடனும் எழுதப்பட்டிருக்கிறதா? மற்றவர்களோடு தொடர்புகொள்ளும்போது அன்பையும் தயவையும் காட்டவே முயலுகிறோம். (கலா. 5:22, 23) கடிதத்தில் ஏதேனும் எதிர்மறையாக அல்லது நம்பிக்கையற்றதாக தொனித்தால், வார்த்தைகளை மாற்றி எழுதுங்கள்.

உங்களால் போக முடியாத இடங்களுக்கு கடிதங்களால் போக முடியும். இதுவே, ஊழியத்தில் அதை சிறந்த கருவியாக்குகிறது. உங்கள் கடிதம் உங்களையும் உங்கள் மதிப்பீடுகளையும் பிரதிநிதித்துவம் செய்வதால், அது என்ன சொல்கிறது, எப்படி தொனிக்கிறது, எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பவற்றிற்கு கவனம் செலுத்துங்கள். ஜீவ பாதையில் மதிப்புமிக்க ஒரு ஜீவன் நடக்க ஆரம்பிப்பதற்கு, பலப்படுத்தப்படுவதற்கு, அல்லது உற்சாகம் பெறுவதற்கு எது தேவையோ அதையே உங்கள் கடிதம் அளிக்கலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்