பொதுப் பேச்சுக்களைத் தயாரித்தல்
ஒவ்வொரு வாரமும் யெகோவாவின் சாட்சிகளது பெரும்பாலான சபைகளில் பொதுப் பேச்சு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஏதேனும் ஒரு பைபிள் பொருளின் பேரில் இப்படிப்பட்ட பேச்சுக்கள் கொடுக்கப்படுகின்றன. நீங்கள் ஒரு மூப்பராகவோ உதவி ஊழியராகவோ இருந்தால், திறம்பட்ட பேச்சாளர் அல்லது போதகர் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறீர்களா? அப்படியென்றால் பொதுப் பேச்சு கொடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு அளிக்கப்படலாம். தேவராஜ்ய ஊழியப் பள்ளி, இந்த பாக்கியத்திற்குத் தகுதிபெற ஆயிரக்கணக்கான சகோதரர்களுக்கு உதவியிருக்கிறது. பொதுப் பேச்சு கொடுக்க நியமிக்கப்பட்டால் எப்படி அதற்காக தயாரிக்க வேண்டும்?
குறிப்புத்தாளை படியுங்கள்
எந்தவொரு ஆராய்ச்சியை துவங்குவதற்கு முன்பும் குறிப்புத்தாளை வாசியுங்கள். கருத்துக்கள் தெளிவாகும்வரை அதைக் குறித்து தியானியுங்கள். மையப்பொருளை மனதில் பதிய வையுங்கள், இதுவே பேச்சின் தலைப்பாகவும் இருக்கும். நீங்கள் சபையாருக்கு எதைக் கற்பிக்க வேண்டும்? உங்கள் குறிக்கோள் என்ன?
முக்கிய குறிப்புகளை நன்கு அறிந்துகொள்ளுங்கள். அவற்றை பகுத்தறியுங்கள். அவை ஒவ்வொன்றும் எவ்வாறு மையப்பொருளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன? ஒவ்வொரு முக்கிய குறிப்பின் கீழும் அநேக உபகுறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை ஆதரிக்கும் கூடுதலான குறிப்புகளோ இவற்றிற்குக் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்புத்தாளிலுள்ள ஒவ்வொரு பகுதியும் எவ்வாறு முந்திய பகுதியோடும் பிந்திய பகுதியோடும் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனியுங்கள்; பேச்சின் குறிக்கோளை அடைய அவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் கவனியுங்கள். மையப்பொருளையும், பேச்சின் குறிக்கோளையும், முக்கிய குறிப்புகள் எவ்வாறு அந்தக் குறிக்கோளுக்கு கைகொடுக்கின்றன என்பதையும் நீங்கள் புரிந்துகொண்டால் பேச்சைத் தயாரிப்பதற்கு தயார் என்று அர்த்தம்.
முதலில், உங்கள் பேச்சை நான்கைந்து சிறு பேச்சுக்களாக பாவித்து அவற்றை தயாரித்தால் உதவியாக இருக்கும். ஒவ்வொன்றிற்கும் ஒரு முக்கிய குறிப்பு இருக்கும். இவற்றை தனித்தனியாக தயாரியுங்கள்.
கொடுக்கப்படும் குறிப்புத்தாள் பேச்சைத் தயாரிப்பதற்கான சாதனமாகும். பேச்சின்போது பார்த்து படிப்பதற்கான ஒன்றல்ல. அது உங்கள் பேச்சின் கட்டமைப்பு. நீங்கள் அதற்கு உடலும் உருவும் உயிரும் கொடுக்க வேண்டும்.
வசனங்களைப் பயன்படுத்துவது
இயேசு கிறிஸ்துவும் அவரது சீஷர்களும் வேதவசனங்களின் அடிப்படையிலேயே போதித்தார்கள். (லூக். 4:16-21; 24:27; அப். 17:2, 3) நீங்களும் அவ்வாறே செய்யலாம். வேதவசனங்கள் உங்கள் பேச்சிற்கு அஸ்திவாரமாக அமைய வேண்டும். கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புத்தாளிலுள்ள வாக்கியங்களை வெறுமனே விளக்குவதற்கும் பொருத்துவதற்கும் பதிலாக, வேதவசனங்கள் அவற்றை எவ்வாறு ஆதரிக்கின்றன என்பதை பகுத்தறிந்து பின்னர் அந்த வசனங்களைப் பயன்படுத்தி கற்பியுங்கள்.
பேச்சைத் தயாரிக்கும்போது குறிப்புத்தாளில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வசனத்தையும் ஆராயுங்கள். அவற்றின் சூழமைவை கவனியுங்கள். சில வசனங்கள், உதவியளிக்கும் பின்னணி தகவல்களை மட்டும் தரலாம். கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா வசனங்களையும் வாசிக்க அல்லது விளக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் சபையாருக்கு சிறந்த பயனளிக்கும் வசனங்களையே தேர்ந்தெடுங்கள். குறிப்புத்தாளில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களுக்கு கூர்ந்த கவனம் செலுத்தினால், கூடுதலான வசனங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
உங்கள் பேச்சின் வெற்றி, எவ்வளவு அதிகமான வசனங்களை பயன்படுத்துகிறீர்கள் என்பதில் அல்ல, ஆனால் கற்பிக்கும் தரத்தின்மீதே சார்ந்திருக்கிறது. வசனங்களை அறிமுகப்படுத்தும்போது, ஏன் அவற்றை பயன்படுத்துகிறீர்கள் என்பதை காட்டுங்கள். அவற்றை பொருத்திக் காண்பிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வசனத்தை வாசித்த பிறகு, அதை விளக்கும்போதும் பைபிளை திறந்தே வைத்திருங்கள். சபையாரும் அதையே செய்வார்கள். நீங்கள் எவ்வாறு அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டி கடவுளுடைய வார்த்தையிலிருந்து முழு பயனைப் பெற உதவலாம்? (நெ. 8:8, 12) விளக்குவதன் மூலமும், உவமையை சொல்வதன் மூலமும், பொருத்திக் காட்டுவதன் மூலமும் உதவலாம்.
விளக்குவது. ஒரு முக்கிய வசனத்தை விளக்குவதற்கு தயாரிக்கும்போது உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இதன் அர்த்தம் என்ன? நான் ஏன் இதை என் பேச்சில் பயன்படுத்துகிறேன்? இந்த வசனத்தைக் குறித்து சபையார் தங்களையே என்ன கேட்டுக்கொள்வார்கள்?’ வசனத்தின் சூழமைவு, பின்னணி, அமைப்பு, வார்த்தைகளின் வலிமை, ஏவப்பட்டு எழுதியவரின் நோக்கம் ஆகியவற்றை பகுத்தறியுங்கள். இதற்கு ஆராய்ச்சி அவசியமாக இருக்கலாம். ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்’ வழங்கும் பிரசுரங்களில் ஏராளமான பயன்மிக்க தகவல்களைக் காண்பீர்கள். (மத். 24:45-47) வசனத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் விலாவாரியாக விளக்குவதற்கு பதிலாக, கலந்தாலோசிக்கப்படும் குறிப்பு சம்பந்தமாக அதை ஏன் வாசிக்கச் சொன்னீர்கள் என்பதை சபையாருக்கு விளக்குங்கள்.
உவமையை சொல்வது. சபையார் கருத்துக்களை இன்னும் ஆழமாக புரிந்துகொள்வதற்கு அல்லது கலந்தாலோசிக்கப்பட்ட குறிப்பையோ நியமத்தையோ ஞாபகம் வைத்துக்கொள்வதற்கு உவமைகள் உதவும். நீங்கள் சொன்னதை புரிந்துகொள்ளவும் ஏற்கெனவே தெரிந்த விஷயத்தோடு அதை தொடர்புபடுத்திப் பார்க்கவும் உவமைகள் உதவும். புகழ்பெற்ற மலைப்பிரசங்கத்தில் இதைத்தான் இயேசு செய்தார். ‘ஆகாயத்துப் பட்சிகள்,’ “காட்டுப் புஷ்பங்கள்,” “இடுக்கமான வாசல்,” ‘கன்மலையின் மேலுள்ள வீடு’ போன்ற பல பதங்களை உபயோகித்ததால் அவரது போதனை வலிமைமிக்கதாக, தெளிவானதாக, நினைவை விட்டு நீங்காததாக இருந்தது.—மத்., அதி. 5–7.
பொருத்திக் காட்டுவது. ஒரு வசனத்தை விளக்குவதாலும் அதற்கு உவமையை சொல்வதாலும் அறிவை வளர்க்கலாம்; ஆனால் அந்த அறிவை பொருத்திப் பிரயோகிக்கும்போதே நன்மைகள் கிடைக்கின்றன. பைபிள் செய்தியை கடைப்பிடிக்க வேண்டியது கேட்போரின் கடமை என்பது உண்மைதான். ஆனால் என்ன செய்ய வேண்டுமென்று புரிந்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு உதவலாம். சபையார் கலந்தாலோசிக்கப்படும் வசனத்தை புரிந்துகொண்டு, சொல்லப்படும் குறிப்போடு அது எவ்வாறு பொருந்துகிறது என்பதை உணர வேண்டும்; அப்படி உணர்ந்துவிட்டனர் என்பது உங்களுக்கு தெளிவாக தெரிந்தவுடன் அவர்கள் நம்பிக்கையையும் நடத்தையையும் அது எவ்வாறு பாதிக்க வேண்டுமென்று விளக்க போதிய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். கலந்தாலோசிக்கப்படும் சத்தியத்திற்கு முரணாக இருக்கும் தவறான கருத்துக்களை அல்லது நடத்தையை விட்டொழிப்பதால் விளையும் நன்மைகளை எடுத்துக் காட்டுங்கள்.
வசனங்களை எப்படி பொருத்திக் காட்டுவது என்பதை நீங்கள் யோசிக்கையில், உங்கள் பேச்சைக் கேட்கப்போகிற சபையார் பல்வேறு பின்னணிகளையும் பலதரப்பட்ட சூழ்நிலைகளையும் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் வையுங்கள். அவர்கள் புதிதாக ஆர்வம் காட்டுவோராக, இளைஞராக, முதியோராக, வெவ்வேறு பிரச்சினைகளோடு போராடுவோராக இருக்கலாம். நடைமுறையான, எதார்த்தமான பேச்சை தயாரியுங்கள். ஒரு சிலரை மனதில் வைத்தே ஆலோசனை தருகிறீர்கள் என்ற எண்ணம் ஏற்படுவதை தவிருங்கள்.
பேச்சாளரின் தீர்மானங்கள்
உங்கள் பேச்சைக் குறித்ததில் ஏற்கெனவே சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. முக்கிய குறிப்புகள் தெளிவாக காட்டப்பட்டிருக்கின்றன, ஒவ்வொரு முக்கிய தலைப்புக்குரிய நேரமும் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற தீர்மானங்களோ உங்கள் கையில். சில உபகுறிப்புகளுக்கு அதிகமான நேரத்தையும் மற்றவற்றிற்கு குறைவான நேரத்தையும் எடுத்துக்கொள்ள நீங்கள் தீர்மானிக்கலாம். ஒவ்வொரு உபதலைப்பையும் ஒரே அளவுக்கு கலந்தாலோசிக்க வேண்டுமென நினைத்துக் கொள்ளாதீர்கள். அப்படி செய்தால் வேக வேகமாக பேசி முடிக்க வேண்டியிருக்கும், கேட்போரும் கிரகிக்க முடியாமல் திணறிப்போவர். அப்படியென்றால் எதைக் குறித்து விளக்கமாக பேசுவது, எதைக் குறித்து சுருக்கமாக பேசுவது அல்லது வெறுமனே குறிப்பிடுவது என்பதை எவ்வாறு தீர்மானிக்கலாம்? உங்களையே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பேச்சின் மையக் கருத்தை எடுத்துக்காட்ட எந்தக் குறிப்புகள் எனக்கு உதவும்? எந்தக் குறிப்புகள் கேட்போருக்கு மிகச் சிறந்த பயனளிக்கும்? கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வசனத்தையும் அதோடு சம்பந்தப்பட்ட குறிப்பையும் பயன்படுத்தாவிட்டால், அளிக்கும் அத்தாட்சியின் கோர்வை விட்டுப்போகுமா?’
ஊகத்தையோ சொந்த அபிப்பிராயத்தையோ சொல்வதை அறவே தவிருங்கள். கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும்கூட எதையும் “சுயமாய்ச் சொல்லவில்லை.” (யோவா. 14:10) யெகோவாவின் சாட்சிகளது கூட்டங்களுக்கு வருவோர், பைபிளைப் பற்றி கற்றுக்கொள்ளவே வருகிறார்கள் என்பதை உணர்ந்திடுங்கள். நீங்கள் சிறந்த பேச்சாளர் என பெயர் எடுத்தவர் என்றால், மற்றவர்களது கவனத்தை உங்களிடமாக அல்லாமல் எப்போதுமே கடவுளுடைய வார்த்தையிடமாக திருப்புவதை பழக்கப்படுத்தியிருப்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். இதற்காகவே உங்கள் பேச்சுக்கள் பாராட்டைப் பெறுகின்றன.—பிலி. 1:10, 11.
ஓர் எளிய குறிப்புத்தாளிலிருந்து, வசனங்களை கருத்தாழத்தோடு விளக்கும் பேச்சை தயாரித்த பிறகு நீங்கள் பேச்சை ஒத்திகை பார்க்க வேண்டும். சத்தமாக பேசிப் பார்ப்பது பயனளிக்கும். எல்லா குறிப்புகளும் மனதில் தெளிவாக இருப்பதே முக்கியமானது. முழு நம்பிக்கையோடு நீங்கள் பேச வேண்டும், பேச்சிற்கு உயிரூட்ட வேண்டும், சத்தியத்தை ஆர்வம் பொங்க விளக்க வேண்டும். பேச்சைக் கொடுப்பதற்கு முன், ‘எதை சாதிக்க விரும்புகிறேன்?’ என உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். அதோடு, இந்தக் கேள்விகளையும் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘முக்கிய குறிப்புகளை தெளிவாக வலியுறுத்துகிறேனா? வசனங்களை உண்மையிலேயே என் பேச்சிற்கு அடிப்படையாக ஆக்கியிருக்கிறேனா? ஒவ்வொரு முக்கிய குறிப்பும் அடுத்த குறிப்போடு இயல்பாக இசைந்து செல்கிறதா? பேச்சு யெகோவாவின் மீதும் அவரது ஏற்பாடுகள் மீதும் போற்றுதலை வளர்க்கிறதா? முடிவுரை மையப்பொருளோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறதா, என்ன செய்ய வேண்டுமென சபையாருக்குக் காட்டி அதைச் செய்யும்படி தூண்டுகிறதா?’ இந்தக் கேள்விகளுக்கு ஆம் என உங்களால் பதிலளிக்க முடிந்தால், சபையாருக்கு நன்மை பயக்கும்படியும் யெகோவாவுக்கு துதி உண்டாகும்படியும் “அறிவை உபயோகப்படுத்தும்” நிலையில் இருக்கிறீர்கள்!—நீதி. 15:2.