படிப்பு 33
சாதுரியம் ஆனாலும் உறுதி
சாதுரியம் என்பது பிறரை அநாவசியமாக புண்படுத்தாமல் நடந்துகொள்ளும் திறமை. எப்படி பேச வேண்டும், எப்பொழுது பேச வேண்டும் என்பதை அறிந்திருப்பதும் இதில் அடங்கும். சரியானதை சொல்லாமல் மழுப்புவதையோ உண்மைகளைத் திரித்துக் கூறுவதையோ இது அர்த்தப்படுத்தாது. சாதுரியத்தை மனித பயத்துடன் குழப்பிக்கொள்ளக் கூடாது.—நீதி. 29:25.
சாதுரியத்துடன் நடந்துகொள்வதற்கு ஆவியின் கனிகள் சிறந்த அஸ்திவாரமாக அமைகின்றன. ஆகவே அன்புள்ளம் கொண்டவர் மற்றவர்களுக்கு எரிச்சல் உண்டாக்க விரும்புகிறதில்லை; அவர்களுக்கு உதவி செய்யவே விரும்புகிறார். தயவும் சாந்தமும் நிறைந்தவர் எல்லா சமயங்களிலும் மென்மையாக நடந்துகொள்கிறார். சமாதானமாக இருப்பவர் பிறருடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள நாடுகிறார். நீடிய பொறுமையுள்ளவர் கடுகடுப்பானவர்களிடத்திலும் அமைதியாகவே இருக்கிறார்.—கலா. 5:22, 23.
ஆனால் பைபிளின் செய்தியை நாம் எப்படி சொன்னாலும், சிலர் புண்படுத்தப்பட்டதாகவே உணர்வார்கள். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூதர்கள் பெரும்பாலோருடைய இருதயம் பொல்லாததாக இருந்ததால், இயேசு கிறிஸ்து அவர்களுக்கு ‘இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமானார்.’ (1 பே. 2:7, 8) ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை அறிவிப்பதன் சம்பந்தமாக இயேசு இவ்வாறு கூறினார்: “பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன்.” (லூக். 12:49) யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய இந்தச் செய்தியில், படைப்பாளருடைய அரசதிகாரத்தை மனிதர் அங்கீகரிக்க வேண்டிய அவசியமும் உட்பட்டுள்ளது; இதுவே கொழுந்துவிட்டெரிகிற விவாதமாக, அதாவது மனிதகுலம் எதிர்ப்படுகிற மிகத் தீவிர விவாதமாக இருந்து வருகிறது. கடவுளுடைய ராஜ்யம் இந்தத் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையை விரைவில் அழித்துவிடும் என்ற செய்தியைக் கேட்டு அநேகர் இடறலடைகிறார்கள். என்றாலும், நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து தொடர்ந்து பிரசங்கிக்கிறோம். அப்படி செய்யும்போது, “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” என்ற பைபிளின் அறிவுரையை மனதிற்கொள்ள வேண்டும்.—ரோ. 12:18.
சாட்சி கொடுத்தலில் சாதுரியம். பல்வேறு சந்தர்ப்பங்களில் நம்முடைய விசுவாசத்தைக் குறித்து மற்றவர்களிடம் பேசுகிறோம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பேசுகிறோம், உற்றார் உறவினர்களிடத்திலும் சக பணியாளர்களிடத்திலும் பள்ளி தோழர்களிடத்திலும் பேசுவதற்கு சந்தர்ப்பங்களைத் தேடுகிறோம். இந்த எல்லா சூழ்நிலைகளிலும் சாதுரியத்துடன் நடந்துகொள்வது அவசியம்.
உபதேசம் செய்வது போல நாம் ராஜ்ய செய்தியை அறிவித்தால் ஜனங்கள் ஆத்திரமடையலாம். அவர்கள் நம்மிடம் எந்த உதவியும் கேட்கவில்லை, உதவி தேவையென்று உணரவும் இல்லை; அப்படியிருக்கும்போது அவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும் என்பது போல நாம் பேசினால் அவர்கள் கோபப்படலாம். இந்தத் தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதை நாம் எப்படி தவிர்க்கலாம்? சிநேகபாவத்துடன் உரையாடும் கலையை கற்றுக்கொள்வது கைகொடுக்கலாம்.
ஆர்வத்தைத் தூண்டும் விஷயத்தை சொல்லி உங்கள் உரையாடலை ஆரம்பியுங்கள். உறவினரிடமோ சக பணியாளரிடமோ அல்லது பள்ளி தோழரிடமோ பேசுகையில், அவருக்கு எதில் ஆர்வம் என்பது ஒருவேளை உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். முன்பின் தெரியாத நபராக இருந்தாலும், நீங்கள் கேள்விப்பட்ட அல்லது செய்தித்தாளில் வாசித்த விஷயத்தை சொல்லி ஆரம்பிக்கலாம். இப்படிப்பட்ட விஷயங்களே பொதுவாக பலருடைய மனதில் இருக்கின்றன. வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் சுற்றும் முற்றும் நன்கு கவனியுங்கள். வீட்டின் அலங்காரம், முற்றத்திலுள்ள பொம்மைகள், வழிபாட்டுப் பொருட்கள், வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டிருக்கும் காரில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் போன்றவை வீட்டுக்காரரைப் பற்றி சில அறிகுறிகளைத் தரலாம். வீட்டுக்காரர் பேச ஆரம்பித்ததும் அவர் சொல்வதை நன்கு கவனியுங்கள். தன்னுடைய விருப்பங்களையும் கருத்துக்களையும் குறித்து அவர் என்ன சொல்கிறாரோ அது நீங்கள் எடுத்த முடிவுகளை உறுதிப்படுத்தும் அல்லது மாற்றும். மேலும், சாட்சி கொடுப்பதற்கு கவனத்தில் வைக்க வேண்டிய கூடுதலான அறிகுறிகளையும் உங்களுக்குத் தரும்.
சம்பாஷணையில் அவரைப் பற்றி தெரியவரும்போது, அவர் பேசும் விஷயத்திற்குப் பொருத்தமான குறிப்புகளை பைபிள் மற்றும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களிலிருந்து பகிர்ந்துகொள்ளுங்கள். ஆனால் நீங்களே பேசிக்கொண்டிருக்காதீர்கள். (பிர. 3:7) வீட்டுக்காரரையும் உங்களுடைய உரையாடலில் உட்படுத்துங்கள். அவருடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் அக்கறையோடு கேளுங்கள். இவை சாதுரியமாக நடந்துகொள்ள தேவையான சிறு சிறு துணுக்குகளை உங்களுக்குத் தரலாம்.
வீட்டுக்காரரிடம் ஒரு விஷயத்தை சொல்வதற்கு முன்பு அதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ‘விவேகமுள்ள வாயை’ நீதிமொழிகள் 12:8 (NW) புகழ்ந்து பேசுகிறது. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய வார்த்தை உட்பார்வை, முன்யோசனை போன்ற கருத்துக்களோடு தொடர்புடையது. ஆகவே, விவேகமாக பேசுவது என்பது ஞானமாய் செயல்படுவதற்கு ஒரு காரியத்தை தீர யோசித்துப் பார்த்து கவனமாக பேசுவதை குறிக்கிறது. நீதிமொழிகள் புத்தகத்தில் அதே அதிகாரத்தின் 18-ம் (NW) வசனம் ‘பட்டயக்குத்துகள் போல் யோசனையின்றி பேசுவதைக்’ குறித்து எச்சரிக்கிறது. ஆகவே மற்றவர்களைப் புண்படுத்தாமல் பைபிள் சத்தியத்தை எடுத்துச் சொல்ல முடியும்.
பகுத்துணர்வோடு வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பது அநாவசியமாக பிறரை புண்படுத்துவதை தவிர்க்க உதவும். “பைபிள்” என்ற வார்த்தையை பயன்படுத்துவது இடறலாக இருக்கும் என தெரிந்தால், “புனித நூல்” அல்லது “தற்போது 2,000-க்கும் அதிகமான மொழிகளில் பிரசுரிக்கப்படுகிற புத்தகம்” போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். பைபிளைப் பற்றி குறிப்பிடுகையில், அதைப் பற்றி அந்த நபருடைய அபிப்பிராயத்தை கேளுங்கள்; அதற்குப்பின் அவருடைய அபிப்பிராயத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து பேசுங்கள்.
சாதுரியமாக நடந்துகொள்வது பெரும்பாலும் ஏற்ற சமயத்தில் பேசுவதைக் குறிக்கிறது. (நீதி. 25:11) ஒருவர் பேசும் எல்லாவற்றையும் ஒருவேளை நீங்கள் ஒத்துக்கொள்ளாதிருக்கலாம், அதற்காக அவருடைய வேதப்பூர்வமற்ற கருத்துக்கள் ஒவ்வொன்றையும் விவாதித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வீட்டுக்காரருக்கு சொல்லாதீர்கள். இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: ‘இன்னும் அநேக காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்க மாட்டீர்கள்.’—யோவா. 16:12.
பொருத்தமான சமயங்களில், நீங்கள் யாரிடத்தில் பேசுகிறீர்களோ அவரை மனதார பாராட்டுங்கள். அவர் தர்க்கம் செய்தாலும், அவருடைய கருத்துக்கள் சிலவற்றை நீங்கள் பாராட்டலாம். அத்தேனே பட்டணத்தில் மார்ஸ் மேடையில் தத்துவஞானிகளிடம் பேசும்போது அப்போஸ்தலன் பவுல் இதையே செய்தார். தத்துவஞானிகள் ‘அவருடனே வாக்குவாதம் பண்ணினார்கள்.’ அவர்களைப் புண்படுத்தாமல் எப்படி அவரால் தன்னுடைய குறிப்பை சொல்ல முடிந்தது? அவர்கள் தங்களுடைய கடவுட்களுக்காக கட்டியிருந்த அநேக பலிபீடங்களை அவர் முன்பே கவனித்தார். அத்தேனியரின் விக்கிரக வழிபாட்டை கண்டனம் செய்வதற்கு பதிலாக, அவர்களுடைய உறுதியான மதப் பற்றை சாதுரியமாக பாராட்டினார். “எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதா பக்தியுள்ளவர்களென்று காண்கிறேன்” என அவர் கூறினார். இந்த அணுகுமுறை, மெய்க் கடவுளைப் பற்றிய செய்தியை அவர்களிடம் சொல்வதற்கு வழிவகுத்தது. இதன் பலனாக, சிலர் விசுவாசிகளானார்கள்.—அப். 17:18, 22, 34.
ஆட்சேபணைகள் எழும்பும்போது நிலைகுலைந்துவிடாதீர்கள். அமைதியாக இருங்கள். ஒருவருடைய சிந்தையை ஓரளவு ஊடுருவிப் பார்ப்பதற்கு கிடைத்த வாய்ப்பாக இவற்றை கருதுங்கள். அவருடைய கருத்துக்களைத் தெரிவித்ததற்கு நன்றி சொல்லலாம். “எனக்குன்னு ஒரு மதம் இருக்கு” என வெடுக்கென்று அவர் சொன்னால்? நீங்கள் சாதுரியமாக இவ்வாறு கேட்கலாம்: “உங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே மதத்தின்மீது பற்று இருந்திருக்கிறதா?” அவர் பதிலளித்த பிறகு, “எல்லாரும் ஒரே மதத்தவராக மாறும் காலம் என்றைக்காவது வருமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என கேளுங்கள். இது உரையாடலை தொடர வழிவகுக்கலாம்.
நம்மைப் பற்றி சரியான நோக்குநிலையைக் கொண்டிருப்பது சாதுரியமாக நடந்துகொள்ள நமக்கு உதவலாம். யெகோவாவின் வழிகள் சரியானவை என்றும் அவருடைய வார்த்தையே சத்தியம் என்றும் நாம் உறுதியாக நம்புகிறோம். இவற்றைப் பற்றி உறுதியான நம்பிக்கையோடு பேசுகிறோம். ஆனால் நாம் சுய நீதியுடையவராக இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. (பிர. 7:15, 16) சத்தியத்தை அறிந்திருப்பதற்காகவும் யெகோவாவின் ஆசீர்வாதத்தை அனுபவிப்பதற்காகவும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; அதே சமயத்தில் நாம் அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது நம்முடைய சொந்த நீதியினால் அல்ல, ஆனால் அவருடைய தகுதியற்ற தயவினாலும் கிறிஸ்துவின் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசத்தினாலுமே என்பதை நன்றாக அறிந்திருக்கிறோம். (எபே. 2:8, 9, NW) ‘நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா என்று சோதித்து அறிவதும், நம்மையே பரீட்சித்துப் பார்ப்பதும்’ அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறோம். (2 கொ. 13:5, தி.மொ.) ஆகவே, கடவுளுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவதன் அவசியத்தைக் குறித்து ஜனங்களிடம் பேசும்போது, அவற்றை நமக்கும் தாழ்மையுடன் பொருத்துகிறோம். சக மனிதரை நியாயந்தீர்ப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. யெகோவா, “நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக் கொடுத்திருக்கிறார்.” அவருடைய நியாயாசனத்திற்கு முன் நம்முடைய செயல்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும்.—யோவா. 5:22; 2 கொ. 5:10.
குடும்பத்தாரோடும் சக கிறிஸ்தவர்களோடும். சாதுரியமாக நடந்துகொள்வது என்பது வெளி ஊழியத்திற்கு மட்டுமே உரிய ஒன்றல்ல. சாதுரியம் கடவுளுடைய ஆவியின் கனிகளின் வெளிப்பாடாக இருப்பதால், வீட்டில் குடும்ப அங்கத்தினரிடம் நடந்துகொள்ளும் விதத்திலும் இதைக் காட்ட வேண்டும். மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு கவனம் செலுத்த அன்பு நம்மைத் தூண்டும். எஸ்தர் ராணியின் கணவர் யெகோவாவை வணங்காதவர், இருந்தாலும் எஸ்தர் அவருக்கு மரியாதை காண்பித்தாள்; யெகோவாவின் ஊழியர்களைப் பற்றிய விஷயத்தை அவரிடம் சொல்லும்போது மிகவும் பகுத்துணர்வோடு செயல்பட்டாள். (எஸ்தர், 3-8 அதி.) சில சந்தர்ப்பங்களில், சாட்சிகளாக இல்லாத குடும்ப அங்கத்தினர்களிடம் சாதுரியமாக சத்தியத்தை தெரியப்படுத்துவதற்கு, நம்முடைய நம்பிக்கைகளை விளக்குவதற்கு பதிலாக நம்முடைய நடத்தையின் மூலம் சாட்சி கொடுக்க வேண்டியிருக்கலாம்.—1 பே. 3:1, 2.
இது போலவே, சபை அங்கத்தினர்கள் நமக்கு தெரிந்தவர்கள் என்பதால் நயமற்ற அல்லது தயவற்ற விதத்தில் பேசலாம் என்பதை அர்த்தப்படுத்தாது. அவர்கள் முதிர்ச்சி வாய்ந்தவர்கள் என்பதால் பொறுத்துப் போக வேண்டும் என நாம் சொல்லக் கூடாது. அல்லது “நான் பேசும் விதமே இப்படித்தான்” என்றும் சாக்குப்போக்கு சொல்லக் கூடாது. நாம் பேசும் விதம் மற்றவர்களைப் புண்படுத்துமானால், நம்மை மாற்றிக்கொள்ள திடத்தீர்மானமாக இருக்க வேண்டும். நாம் ‘ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாய் இருப்பது’ ‘விசுவாச குடும்பத்தார்களுக்கு நன்மை செய்ய’ நம்மை உந்துவிக்க வேண்டும்.—1 பே. 4:8, 15; கலா. 6:10.
சபையாரிடம் பேசுகையில். மேடையில் பேசுபவர்களும் சாதுரியமாக இருப்பது அவசியம். பல்வேறு பின்னணியை சேர்ந்தவர்களும் பல்வேறு சூழ்நிலையில் வாழ்பவர்களும் சபையில் இருக்கிறார்கள். அவர்களுடைய ஆவிக்குரிய முதிர்ச்சியும் வேறுபடுகிறது. சிலர் ராஜ்ய மன்றத்திற்கு முதன்முறையாக வந்திருக்கலாம். வேறு சிலரோ பல பிரச்சினைகளில் உழன்று கொண்டிருக்கலாம், ஆனால் இது பேச்சாளருக்குத் தெரியாமல் இருக்கலாம். அப்படியானால், சபையாரை புண்படுத்துவதைத் தவிர்க்க பேச்சாளருக்கு எது உதவும்?
தீத்துவுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த ஆலோசனைக்கேற்ப ‘ஒருவனையும் அவதூறாக பேசாமல், . . . நியாயத்தன்மை உள்ளவர்களாய் எல்லா மனிதரிடமும் சாந்த குணத்தைக் காண்பிப்பதை’ உங்களுடைய இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். (தீத். 3:2, NW) வேறொரு இனத்தவரையோ தேசத்தவரையோ அல்லது மொழியினரையோ தாழ்வாக பேசுவதற்கு உலகத்தார் பயன்படுத்தும் வார்த்தைகளைத் தவிருங்கள். (வெளி. 7:9, 10) யெகோவா எதிர்பார்க்கும் காரியங்களை வெளிப்படையாக பேசுங்கள்; அவற்றை பொருத்துவதால் வரும் நன்மைகளைப் பற்றி பேசுங்கள். ஆனால் யெகோவாவின் வழியில் இன்னும் சரிவர நடக்காதவர்களை மட்டம்தட்டி பேசுவதை தவிருங்கள். மாறாக, கடவுளுடைய சித்தத்தைப் பகுத்துணர்ந்து அவருக்குப் பிரியமானதைச் செய்ய அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். மனதார பாராட்டி, கனிவான வார்த்தைகளால் அன்புடன் அறிவுரை வழங்குங்கள். பேசும் விதத்திலும் குரலின் தொனியிலும் ஒருவருக்கொருவர் சகோதர சிநேகத்தை காட்டுங்கள்.—1 தெ. 4:1-12; 1 பே. 3:8.