சாதுரியம் எனும் கலையைக் கற்றுக்கொள்ளுதல்
தன்னுடைய மூத்த மகன், இளையவனிடம் முரட்டுத்தனமாக பேசுவதை பெக்கி கவனித்தார். “உன் தம்பிகிட்டே இப்படி பேசுறது உனக்கே சரியா தோணுதா? அவன் எவ்வளவு வேதனைப்படுறான் பார்!” என்று அவர் சொன்னார். பெக்கி ஏன் அப்படி சொன்னார்? மற்றவர்களிடம் சாதுரியமாக நடந்துகொள்வது எப்படி, அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு கரிசனை காட்டுவது எப்படி என்பதை தன் மகனுக்கு கற்றுக்கொடுக்க விரும்பியதால்தான்.
‘எல்லாரிடத்திலும் சாந்தமாக’ அதாவது சாதுரியமாக நடந்துகொள்ளும்படி அப்போஸ்தலன் பவுல் தன் கூட்டாளியான இளம் தீமோத்தேயுவை உற்சாகப்படுத்தினார். அவ்வாறு நடப்பது பிறருடைய உணர்ச்சிகளைப் புண்படுத்தாதிருக்க தீமோத்தேயுவுக்கு உதவியிருக்கும். (2 தீமோத்தேயு 2: 24) அப்படியானால், சாதுரியம் என்றால் என்ன? இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி முன்னேறலாம்? இக்கலையை மற்றவர்கள் வளர்த்துக்கொள்ள நீங்கள் எப்படி உதவலாம்?
சாதுரியம் என்றால் என்ன?
சாதுரியம் என்பது ஒரு சிக்கலான சூழ்நிலையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு மிகுந்த தயவான அல்லது மிகப் பொருத்தமான காரியத்தை செய்வது அல்லது சொல்வது என விளக்கப்படுகிறது. ஏதாவது ஒன்று பிசுபிசுப்பானதா, மிருதுவானதா, வழவழப்பானதா, சூடானதா, அல்லது உரோமம் நிறைந்ததா என கூரிய உணர்வுள்ள விரல்களால் கண்டுபிடித்துவிட முடியும்; அதைப் போலவே, சாதுரியமான ஒருவரால் பிறருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியும்; அதோடு தன்னுடைய சொல்லோ செயலோ அவர்களை எப்படி பாதிக்கிறது என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடியும். இப்படிப் புரிந்துகொள்வது ஒரு கலை மட்டுமல்ல; பிறரை புண்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற உள்ளப்பூர்வமான ஆவலும் இதில் உட்படுகிறது.
சாதுரியமில்லாமல் நடந்துகொண்ட ஒருவரின் உதாரணம் பைபிளில் உள்ளது; அது எலிசாவின் வேலைக்காரன் கேயாசியைப் பற்றியது. ஒரு சூனேமிய பெண்ணின் மகன் அவளுடைய கையில் இருந்தவாறே இறந்துவிட்டான். ஆகவே ஆறுதலை தேடி அவள் எலிசாவைக் காண வந்தாள். எல்லாரும் சுகமாயிருக்கிறார்களா என அவளிடத்தில் கேயாசி கேட்டபோது “சுகந்தான்” என்று பதிலளித்து விட்டாள். ஆனால், தீர்க்கதரிசியிடத்தில் அவள் வந்து சேர்ந்தபோதோ, “கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்.” அப்பொழுது எலிசா, “அவளைத் தடுக்காதே; அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது” என்று சொன்னார்.—2 இராஜாக்கள் 4:17-20, 25-27.
எப்படி இவ்வளவு அவசரப்பட்டு நயமின்றி நடந்துகொள்ள கேயாசியால் முடிந்தது? உண்மைதான், எல்லாரும் சுகமா என நலம் விசாரித்தபோது அவள் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவில்லை. இன்றும் அப்படித்தான், அநேகர் தங்களுடைய உணர்ச்சிகளை எல்லாரிடத்திலும் தெரியப்படுத்துவதில்லை. இருந்தாலும், அவளுடைய உணர்ச்சிகள் ஏதோவொரு விதத்தில் வெளியே தெரிந்திருக்க வேண்டும். எலிசா அதைப் புரிந்துகொண்டார், கேயாசியோ அதைப் புரிந்துகொள்ளவில்லை அல்லது அதை தெரிந்துகொள்ள விருப்பம் காட்டவில்லை. சாதுரியமற்ற நடத்தைக்கான ஒரு பொதுவான காரணத்தை இந்த உதாரணம் தெளிவுபடுத்துகிறது. ஒருவர் தன் வேலையிலேயே மும்முரமாக மூழ்கியிருக்கும் போது, தன்னோடு உள்ள மற்றவர்களின் தேவைகளை புரிந்துகொள்ளவோ கவனிக்கவோ தவறிவிடலாம். அவர் பெரும்பாலும் பயணிகளை ஏற்றாமல் நேரத்திற்கு பஸ்ஸை கொண்டுபோய் சேர்ப்பதிலேயே குறியாக இருக்கும் ஒரு பஸ் டிரைவரைப் போல்தான் இருப்பார்.
கேயாசியைப் போல் சாதுரியமற்ற விதத்தில் நடந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு, ஆட்களிடம் அன்பாக இருக்க முயல வேண்டும். ஏனெனில் அவர்கள் உண்மையில் எப்படி உணருகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. ஒருவர் தன் உணர்ச்சிகளை எவ்விதங்களில் வெளிப்படுத்துகிறார் என்பதைக் கண்டுபிடித்து அதற்கேற்ற கனிவான வார்த்தையை சொல்வதில் அல்லது செயலை செய்வதில் நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் உங்களுடைய திறமைகளை எப்படி வளர்க்கலாம்?
பிறருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுதல்
மக்களின் உணர்ச்சிகளை கண்டுணர்ந்து, அவர்களை அன்பாக நடத்த எது மிகச் சிறந்த வழி என்பதை பகுத்துணர்வதில் இயேசு தலைசிறந்து விளங்கினார். ஒருசமயம், பரிசேயனாகிய சீமோனின் வீட்டில் அவர் பந்தியிருக்கையில், “அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ” அவரிடம் வந்தாள். சூனேமிய பெண்ணைப் போலவே இவளும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் செய்கை மூலமாக தன் உணர்ச்சிகளை கொட்டியதை இயேசு கண்டுணர்ந்தார். அவள், “ஒரு பரணியில் பரிமள தைலம் கொண்டுவந்து, அவருடைய [இயேசுவின்] பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமள தைலத்தைப் பூசினாள்.” இதெல்லாம் எதற்காக என்பதை இயேசு புரிந்துகொண்டார். சீமோன் இதைப் பற்றி எதுவுமே சொல்லாவிட்டாலும் அவன் தனக்குள் என்ன சொல்லிக் கொண்டிருந்தான் என்பதை இயேசுவால் உணர முடிந்தது: “இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே” என தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.—லூக்கா 7:37-39.
அந்தப் பெண்ணை இயேசு விலக்கியிருந்தால் அது எவ்வளவு மனநோவை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அல்லது சீமோனிடம், “அவள் மனந்திரும்பியவள், இதுகூடவா உனக்குத் தெரியவில்லை” என இயேசு கேட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும். மாறாக இயேசு ஓர் உதாரணத்தை சாதுரியமாக சீமோனிடம் சொன்னார்; அதாவது ஒரு பெரிய தொகையையும் அதோடு ஒப்பிடுகையில் ஒரு சிறிய தொகையையும் கடன்பட்டிருந்த இருவருக்கு அவர்களுடைய கடனை மன்னித்த ஒரு மனிதனை பற்றிய உதாரணத்தை சொன்னார். “அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்?” என இயேசு கேட்டார். இவ்வாறு, சீமோனை இயேசு கண்டிக்காமல், அவர் கொடுத்த சரியான பதிலை பாராட்டினார். அதற்குப்பின், அந்தப் பெண் தன்னுடைய உண்மையான உணர்ச்சிகளை எப்படியெல்லாம் வெளிப்படுத்தினாள் என்பதையும் மனந்திரும்புதலை எப்படி தெரியப்படுத்தினாள் என்பதையும் புரிந்துகொள்ள சீமோனுக்கு அவர் அன்புடன் உதவினார். பின்பு அந்தப் பெண்ணிடமாக திரும்பி, அவளுடைய உணர்ச்சிகளை தான் புரிந்துகொண்டதாக அன்போடு குறிப்பிட்டார். உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று அவளிடம் கூறிய பின்பு “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ” என்றும் அவளிடம் சொன்னார். சாதுரியமாக சொன்ன அந்த வார்த்தைகள் சரியானதைச் செய்ய வேண்டுமென்ற அவளுடைய தீர்மானத்தை எவ்வளவாய் பலப்படுத்தியிருக்க வேண்டும்! (லூக்கா 7:40-50) சாதுரியத்தைக் காட்டுவதில் இயேசு வெற்றி கண்டார், எப்படியெனில் ஜனங்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதை உற்று கவனித்து பரிவிரக்கத்தோடு அவர்களிடம் நடந்துகொண்டார்.
சீமோனுக்கு இயேசு உதவியது போலவே, நாமும் உணர்ச்சிகள் எனும் மௌன மொழியை புரிந்துகொள்ள கற்றுக்கொள்வதோடு, மற்றவர்களுக்கும் உதவலாம். கிறிஸ்தவ ஊழியத்தில் புதியவர்கள் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதற்கு அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் சில சமயங்களில் உதவலாம். நற்செய்தியை அறிவிப்பதற்காக ஒருமுறை சென்ற பின், தாங்கள் சந்தித்த ஆட்கள் எந்தெந்த விதங்களில் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கலாம். அந்த நபர் கூச்ச சுபாவமுடையவராக இருந்தாரா, சந்தேகவாதியாக இருந்தாரா, எரிச்சலடைந்தாரா அல்லது வேலையாக இருந்தாரா? அந்த நபரிடம் எந்த விதத்தில் கனிவாக பேசலாம்? என சிந்தித்துப் பார்க்கலாம். சகோதர சகோதரிகள் சாதுரியமற்ற விதத்தில் ஒருவரையொருவர் புண்படுத்தியிருந்தால் அவர்களுக்கும் மூப்பர்கள் உதவலாம். ஒருவர் மற்றவரின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள உதவுங்கள். அந்த நபர் தன்னை அவமதித்து விட்டதாக, அசட்டை செய்ததாக அல்லது தவறாக புரிந்துகொண்டதாக உணருகிறாரா? இத்தகைய உணர்ச்சிகளிலிருந்து அவரை விடுவிக்க தயவு என்ற குணம் எப்படி உதவலாம்?
பரிவு என்ற குணத்தை பிள்ளைகள் வளர்க்க பெற்றோர் உதவ வேண்டும். ஏனெனில் சாதுரியமாக நடந்து கொள்வதற்கு இந்த குணமே அவர்களை உந்துவிக்கும். ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த பெக்கியின் மகன் தன் தம்பியின் முகமெல்லாம் சிவந்து, உதடு பிதுங்கி, அழுதுவிடுவதைப் போல் இருப்பதை கவனித்தான், தம்பி எந்தளவுக்கு வேதனைப்படுகிறான் என்பதையும் புரிந்துகொண்டான். அவனுடைய அம்மா எதிர்பார்த்தபடியே மூத்தவன் வருத்தப்பட்டு தன்னை மாற்றிக் கொண்டான். பெக்கியின் இரண்டு பிள்ளைகளும் சின்ன வயதிலேயே கற்றுக்கொண்ட இந்தத் திறமைகளை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். பிற்காலத்தில் சீஷராக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுகிறவர்களாயும் கிறிஸ்தவ சபையை மேய்ப்பவர்களாகவும் ஆனார்கள்.
நீங்கள் புரிந்திருப்பதை காட்டுங்கள்
முக்கியமாக ஒருவருக்கு எதிராக மனத்தாங்கல் இருக்கும்போது சாதுரியம் ரொம்பவே தேவைப்படுகிறது. அவரை அவமதிக்கும் விதத்தில் நடந்துகொள்வது மிகவும் எளிது. ஆனால் குறிப்பிட்ட ஒரு காரியத்தைச் சொல்லி முதலில் பாராட்டுவதே சரியானது. அவரை குறை கூறுவதற்கு பதிலாக, பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். அவருடைய செயல் உங்களை எப்படி பாதிக்கிறது என்றும் அவருடைய செயலில் குறிப்பிட்ட எந்த மாற்றத்தை பார்க்க விரும்புகிறீர்கள் என்றும் விளக்கிச் சொல்லுங்கள். அதற்குப்பின் அவர் சொல்வதை கேட்க தயாராயிருங்கள். ஒருவேளை நீங்கள் அவரைப் பற்றி தவறாக நினைத்திருக்கலாம்.
மற்றவர்களுடைய கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதை புரிந்துகொண்டீர்கள் என்பதை அறியவே மக்கள் விரும்புகிறார்கள். சாதுரியமாக பேசியதன் மூலம், மார்த்தாளின் துயரத்தை இயேசு அறிந்திருந்ததைக் காட்டினார். “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்” என அவர் சொன்னார். (லூக்கா 10:41) அவ்வாறே ஒருவர் ஏதோ பிரச்சினையைப் பற்றி பேசும்போது, அவர் சொல்வதை முழுமையாகக் கேட்பதற்கு முன்பே அதற்கான பரிகாரத்தை சொல்வதற்கு பதிலாக, அவருடைய பிரச்சினையை அல்லது குறையை உங்களுடைய சொந்த வார்த்தைகளில் திரும்பச் சொல்வதே நீங்கள் அவரை புரிந்துகொண்டீர்கள் என்பதை காட்டும் சாதுரியமான வழி. இது ஓர் அன்பான வழியும்கூட.
எதைச் சொல்லக்கூடாது என்பதை அறிந்துகொள்ளுங்கள்
யூதர்களை அழிப்பதற்காக ஆமான் போட்ட சதித்திட்டத்தைக் குலைத்துப் போடுவதைப் பற்றி எஸ்தர் ராணி தன் கணவரிடம் கேட்க நினைத்தாள். தன் கணவர் நல்ல மனநிலையில் இருக்கும் சமயம் பார்த்து அதைக் கேட்பதற்காக அவள் காரியங்களை முன்யோசனையோடு ஏற்பாடு செய்தாள். அதற்கு பிறகுதான் இந்த சிக்கலான விஷயத்தை அவரிடம் சொன்னாள். ஆனால் அவள் எதை சொல்லவில்லை என்பதிலிருந்தும் நாம் அதிகத்தை கற்றுக்கொள்ளலாம். இந்தச் சதித்திட்டத்தில் தன் கணவருக்கும் பங்கு உண்டு என்ற விஷயத்தை சொல்லாமல் விட்டுவிடுவதன் மூலம் அவள் சாதுரியமாக நடந்து கொண்டாள்.—எஸ்தர் 5:1-8; 7:1, 2; 8:5.
ஒரு கிறிஸ்தவ சகோதரியின் அவிசுவாசியான கணவரை சந்திக்கும்போதும் இவ்வாறே நடந்துகொள்ள வேண்டும்; எடுத்த எடுப்பிலேயே அவரிடம் பைபிளிலிருந்து பேசுவதற்கு பதிலாக, அவருக்கு எந்தெந்த விஷயங்களில் ஆர்வம் இருக்கிறதென முதலில் சாதுரியமாக ஏன் கேட்டுத் தெரிந்துகொள்ளக் கூடாது? தகுந்த விதத்தில் உடையணியாமல் புதிதாக ஒருவர் ராஜ்ய மன்றத்திற்கு வந்தால் அல்லது ஒருவர் ரொம்ப காலத்திற்கு பின் கூட்டத்திற்கு வந்தால் அவருடைய உடையைப் பற்றியோ அவர் வராமல் இருந்ததைப் பற்றியோ குறைகூறாமல் அவருக்கு அன்பான வரவேற்பு காட்டுங்கள். புதிதாக அக்கறை காட்டும் ஒருவருக்கு ஏதாவதொரு தவறான கருத்து இருந்தால் அவரை உடனடியாக திருத்தாமலிருப்பதே சிறந்ததாக இருக்கலாம். (யோவான் 16:12) எதைச் சொல்லக்கூடாது என்பதை உணர்ந்து தயவுடன் நடந்துகொள்வதும் சாதுரியத்தில் அடங்கும்.
குணப்படுத்தும் பேச்சு
சாதுரியமாகப் பேசும் கலையைக் கற்றுக்கொள்வது மற்றவர்களோடு சமாதானமான உறவை வைத்துக்கொள்வதற்கும் உதவும். உங்களுடைய எண்ணங்களை ஒருவர் தவறாகப் புரிந்துகொண்டதால் உங்கள் மீது கசப்பும் கோபமும் கொண்டாலும்கூட நீங்கள் சமாதானமாக இருக்க முடியும். உதாரணமாக, எப்பிராயீம் மனுஷர் கிதியோனோடே “பலத்த வாக்குவாதம்” பண்ணியபோது அவர் சாதுரியமாக பதிலளித்தார். உண்மையில் என்ன நடந்தது என்பதை தன்னுடைய பதிலில் கிதியோன் தெளிவாகக் குறிப்பிட்டார், அதோடு எப்பிராயீம் மனுஷர் செய்திருந்த காரியங்களைப் பற்றி நேர்மையான கருத்தைக் குறிப்பிட்டார். அவர் செய்தது சாதுரியமான காரியம். ஏனெனில் அவர்கள் நிலைகுலைந்து போனதற்கு காரணம் என்ன என்பதை அவர் அறிந்திருந்தார், அதுமட்டுமின்றி அவரது பணிவு அவர்களுடைய கோபத்தை தணித்தது.—நியாயாதிபதிகள் 8:1-3; நீதிமொழிகள் 16:24.
உங்களுடைய சொற்கள் பிறரை எப்படி பாதிக்கும் என்பதை எப்போதும் சிந்தித்துப் பார்க்க முயலுங்கள். சாதுரியமாக இருக்க முயலுவது நீதிமொழிகள் 15:23-ல் குறிப்பிட்டுள்ளபடி சந்தோஷத்தை அனுபவித்து மகிழ உங்களுக்கு உதவும். அது இவ்வாறு சொல்கிறது: “மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!”
[பக்கம் 31-ன் படம்]
சாதுரியமாக நடந்துகொள்ள அனுபவமுள்ள கிறிஸ்தவ ஊழியர்கள் புதியவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்
[பக்கம் 31-ன் படம்]
பிறரின் உணர்ச்சிகளைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள பெற்றோர் கற்பிக்கலாம்