பைபிள்—வெறுமென மனிதனுடைய வார்த்தையா?
அதை யாவருக்கும் கிடைக்கச் செய்வதற்கு முயற்சித்த வில்லியம் டின்டேல் அதற்காகத் தனது உயிரையும் தியாகம் செய்தார். அதை ஜெர்மானிய மொழிக்கு மொழிபெயர்ப்பதற்காக மார்ட்டின் லூதர் பெரும் பாடுபட்டார். ஜான் கால்வினின் சீஷர்களுக்கு அது அனைத்து சத்தியத்திற்கும் அதிகாரப்பூர்வ நூல் தொகுப்பாக இருந்தது. ஆம், பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதை ஒரு சமயத்தில் ஒரு சிலர்தான் சந்தேகித்தனர். அது ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் தனிக்கோட்பாட்டு நூலாகவும் கருதப்பட்டது.
என்றபோதிலும், இன்றைய நிலை முற்றிலும் வித்தியாசப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிக அதிகமாக விற்பனையாகும் நூல் சிலரால் மட்டுமே படிக்கப்பட்டு வருகிறது, அதிலும் சிலரே அதைப் பின்பற்றுகிறார்கள். பலருடைய உணர்வுகளைப் பிரதிபலிப்பவராக, ஜேம்ஸ் பார் என்ற எழுத்தாசிரியர் அவர்களுடைய எண்ணத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார், “பைபிள் பாரம்பரியம் உருவாவதைப் பற்றிய என்னுடைய விவரிப்பு ஒரு மனிதனின் படைப்பு என்பதாகும். அது தனது நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் மனிதனின் கூற்று. அது இஸ்ரவேலின் வார்த்தை, பிரதானமான சில பூர்வீக கிறிஸ்தவர்களின் வார்த்தை என்ற வார்த்தைகளே பைபிளை விவரிக்கப் பொருத்தமான வார்த்தைகளாகும்.”—ஜேம்ஸ் பார் எழுதிய நவீன உலகில் பைபிள்.
இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன? பைபிள் கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதரின் வார்த்தையா? அது மதச்சார்பற்ற இந்த 20-ம் நூற்றாண்டுக்கு அவசியந்தானா?
அது அவசியந்தானா?
கடைசி கேள்வியை முதலில் எடுத்துக்கொண்டால், ஆம், அது அவசியந்தான். ஏன்? பைபிள் ‘நம்முடைய கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது,’ என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. (சங்கீதம் 119:105) இன்று நமக்கு அப்படிப்பட்ட ஒரு வெளிச்சம் நிச்சயமாகவே அவசியப்படுகிறது. நமது அழகிய கோளம் கெடுக்கப்பட்டு வருகிறது. பல லட்சம் மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். எதிர்காலத்தின் நிச்சயம் பெரும்பான்மையினருக்கு இல்லை, மனிதவர்க்கம் உயிர்வாழ்வதுதானே ஆபத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட பயங்கரமான நாட்களினூடே நம்மை பைபிள் ஒரு பாதுகாப்பான மகிழ்ச்சியுள்ள எதிர்காலத்திற்குள் வழிநடத்துகிறது. அது உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தையாக இருக்கிறதென்றால், நமக்கு வேண்டியதும் அதுதான்.
அப்படியிருக்க, மனிதர் ஏன் அதை சந்தேகிக்க ஆரம்பித்திருக்கின்றனர். இந்தக் கேள்விக்குரிய விடைதானே, பைபிள் உண்மையிலேயே கடவுளுடைய வார்ர்த்தையா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது.
நம்பிக்கைக்கு என்ன ஏற்பட்டுவிட்டது?
பைபிள் பேரிலிருந்த அந்தச் சர்வலோக நம்பிக்கை 17-ம், 18-ம் நூற்றாண்டில் மாறுபட்ட கருத்துகளுக்கு இறையானது. ஐரோப்பாவில் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை இழந்த ஆவியும், மதச் சார்பற்றிருக்கும் ஆவியும் வளர ஆரம்பித்தது. அரசாங்கம், பொருளாதாரம், இயற்கை, மதம் போன்ற அனைத்து முறைகளும் கேள்வி கேட்கப்படலாயின. பைபிளும் அதற்குத் தப்பவில்லை.
இந்தப் புத்தகத்தின் பேரில் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த முன்னாள் கத்தோலிக்கர் பயரி பேல் சந்தேகங்களை வெளிப்படையாகவே தெரிவித்தார். அவர் பைபிள் சரித்திரம் மற்றும் காலக்கணக்குகளின் பேரில் கேள்விகளை எழுப்பினார். மற்றவர்களும் அவருடைய கருத்துக்களைப் பின்பற்ற ஆரம்பித்தனர். 19-ம் நூற்றாண்டில் பைபிள் வரலாற்று முறை ஆய்வுப் பள்ளிகளில் எதிர்காலத்தின் பேரில் நம்பிக்கை இழந்த ஆவி பரவலாகக் காணப்பட்டது. பைபிள் என்னவாக இருந்ததோ, அது அப்படி இல்லை என்று அந்த ஆய்வாளர்கள் குறை கண்டார்கள். முதல் ஐந்து ஆகமங்களை மோசே எழுதவில்லை என்பது அவர்களுடைய கருத்து. மோசே வாழ்ந்ததற்குப் பின்பு பல நூற்றாண்டுகள் கழிந்துதான் அவை வித்தியாசமான பல மூலங்களிலிருந்து எழுதப்பட்டதென்றும் யூத சரித்திரத்தின் பிற்பகுதியில் எழுதப்பட்டதென்றும் கருத்து தெரிவித்தனர். எழுதப்பட்ட எந்த ஒரு தீர்க்கதரிசனமும், காரியங்கள் சம்பவித்தப் பின்பு எழுதப்பட்டிருக்க வேண்டும். எனவே, ஏசாயா புத்தகம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளினூடே வித்தியாசமான ஆட்களால் எழுதப்பட்டது. தானியேல் புத்தகம் பொ.ச. மு. 165-ல் எழுதப்பட்டது போன்ற கருத்துக்கள் நிலவியது.
இந்த உயர்தர ஆய்வுகளின் விளைவு டேவிட் பிரிட்ரிக் ஸ்ட்ராஸ் என்ற ஜெர்மானிய பைபிள் நிபுணரின் விஷயத்தில் புலனாகிறது: “நாம் இன்னும் கிறிஸ்தவர்களாக இருக்கிறோமா? இல்லை, என்கிறார் ஸ்ட்ராஸ். பைபிள் வரலாற்று முறை ஆய்வுகளைக் கிரகித்திருக்கும் நாம், [கிறிஸ்தவர்களாக] இருக்க முடியாது, ஏனென்றால் நாம் இனிமேலும் பைபிளைக் கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொள்ள முடியாது.”—ப்ராங்க்லின் L. பாமர் எழுதிய மதமும் எதிர்காலத்தின்பேரில் நம்பிக்கையின்மையின் வளர்ச்சியும்.