பைபிள்—உங்களுக்கு நடைமுறையானதா?
“மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்” என்பதாக தேவனுடைய மனுஷன் ஒருவன் 2,700 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதினான். (மீகா 6:8) ஆனால் அது நம்முடைய நாளில் நமக்கு “நன்மையாக அல்லது நடைமுறையானதாக இருக்கிறதா?
“பைபிள் வெகு காலத்துக்கு முன்பாகவே, தற்கால மனோதத்துவத்தையும் மனோதத்துவ பாலுணர்ச்சி வளர்ச்சி பற்றியும் எவரும் எதையும் அறியாதிருந்த சமயத்திலேயே எழுதப்பட்டது” என்பதாக டாக்டர் சேஸன் சொல்லுகிறார். “எழுத்தாளர்களின் உள்ளெண்ணங்கள் மிகச் சிறந்தவையாக இருந்தாலுங்கூட இந்த முக்கியமான உண்மைகளை அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க முடியாது. என்றபோதிலும் ஒழுக்கங்களை அல்லது கட்டளைகளைப் பற்றிய விஷயம் வரும்போதும் பைபிளும் அதற்கு அர்த்தம் சொல்பவர்களும் சொல்வதற்கு அதிகத்தை உடையவர்களாக இருக்கிறார்கள்.”
பைபிள் மனிதனுடைய சிந்தனையின் விளைவாக இருந்திருக்குமேயானால், அந்தக் கருத்து ஒப்புக்கொள்ளத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால் எமது 1987 ஜூன் 1, காவற்கோபுரத்தில் காண்பிக்கப்பட்டபடி பைபிள் மனிதனுடைய வார்த்தை அல்ல, அது கடவுளுடையதாகும், முக்கியமான இந்த உண்மையை நாம் புறக்கணித்துவிடமுடியாது. ஏன்? ஏனென்றால், மனிதனுடையதைப் போல் கடவுளுடைய அறிவு காலத்தாலும் சூழ்நிலைமைகளாலும் கட்டுப்படுத்தப்பட்டதாகவோ அல்லது மாற்றத்துக்கு உட்பட்டதாகவோ இல்லை. மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகராக கடவுள் தம்முடைய அமைப்பையும் நமக்கு எது மிகச் சிறந்தது என்பதையும் தீர்க்கமாக அறிந்து வைத்திருக்கிறார். ஆகவே அப்போஸ்தலன் பொருத்தமாகவே பின்வருமாறு சொல்லுகிறான்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது: அவைகள் உபதேசத்துக்கும் கடிந்து கொள்ளுதலுக்கும் சீர்த்திருத்தலுக்கும் நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17.
தற்காலங்களில் ஏற்பட்டிருக்கும் முக்கியமான மாற்றங்களைப் பற்றி என்ன? நாம் ஒரு சுதந்திரமான மூடநம்பிக்கைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறதல்லவா? அநேக சம்பிரதாயமான தடைகளைப் பொதுவில் சமுதாயம் நிராகரித்து விட்டிருக்கிறதல்லவா? ஆம், அறிவு பெருக்கத்தின் மத்தியிலும், சுதந்திரத்தின் மத்தியிலும், மனிதனின் அடிப்படை தேவைகளும் அவனுடைய அமைப்பும் மாறாமலே இருந்திருக்கிறது. உள்ளுக்குள்ளாக நாம் இன்னும் அதே விதமாக இருக்கிறோம். நம்முடைய முற்பிதாக்களைப் போலவே உண்பதற்கும் குடிப்பதற்கும் உறங்குவதற்கும் பிள்ளைகளைப் பிறப்பிப்பதற்கும் வணங்குவதற்கும் தூண்டுதலைக் கொண்டவர்களாக இருக்கிறோம், அன்புக்கும் பாசத்துக்குமான தேவையை நாம் இன்னும் உடையவர்களாகவும் மகிழ்ச்சியாயிருக்க விரும்புகிறவர்களாகவும் இருக்கிறோம். நாம் இன்னும் அர்த்தமுள்ள வாழ்க்கையே நடத்துவதே அவசியமாய் இருக்கிறது.
இந்தத் தேவைகள் அனைத்திலும் பைபிள் நியமங்கள் பொருத்தமாக இருக்கின்றன. மேலுமாக இந்தத் தற்கால நாட்களிலும்கூட பைபிளின் போதனைகள் நம்முடைய நன்மைக்கே வழிவகுக்கின்றன. இன்னும் அதிகமாக, பைபிளின் புத்திமதியைப் பின்பற்றுவதால் கிடைக்கும் பலன்கள் வேறு எந்த முறையிலும் பெறப்படுகின்றவைக்கும் மேலானதாக இருக்கிறது. ஒழுக்கம் பொருளாதாரம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றின் சம்பந்தமாக இது எவ்விதமாக உண்மையாயிருக்கிறது என்பதைச் சுருக்கமாக ஆராய்வோமாக.
பைபிளும் ஒழுக்கமும்
நமது நவீன காலங்களில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று, ஒழுக்கத்தைப் பற்றிய கருத்துக்கள் சம்பந்தப்பட்டவையாகும். முற்காலத்தில் அருவருப்பானதாகக் கருதப்பட்ட பழக்க வழக்கங்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. விவாக உறவுக்கு வெளியே பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளும் பெண்களை இனிமேலும் சமுதாயம் ஒதுக்கிவிடுவதில்லை. ஓரினபுணர்ச்சிக்காரர்கள் தங்களுடைய “உரிமை”களுக்காகப் பகிரங்கமாகப் போராடுகிறார்கள். வயது வந்த இரு நபர்கள் ஒப்புதலோடு செய்யும் எந்தப் பழக்க வழக்கத்தையும் பற்றிக் குறை சொல்லவோ அதில் தலையிடவோ எவருக்கும் உரிமையில்லை என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. பைபிளின் தராதரங்கள் விக்டோரியா அரசி காலத்துக்குரியவை என்பதாகத்தள்ளி வைக்கப்படுகின்றன.
ஆனால் பைபிளின் தராதரங்கள் இங்கிலாந்தின் விக்டோரியா அரசியின் காலமாகிய 19-வது நூற்றாண்டுக்கு வெகுமுன்பாகவே கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை. அவை தொடர்ந்து மனிதவர்க்கத்துக்குப் பயனுள்ளதாகவே நிரூபித்திருக்கிறது. “புதிய ஒழுக்கத்தோடு”கூட இணையாக உயர்ந்து வரும் விவாகரத்து விகிதத்தையும், எண்ணற்ற கருச்சிதைவுகளையும், கொள்ளைநோயைப்போல் பரவியிருக்கும் பருவ வயதில் கருதரித்தலும் பாலுறவுகளினால் கடத்தப்படும் அநேக நோய்களையும்பற்றிச் சிந்தித்துப் பார்க்கையில் இதை நிச்சயமாக காணமுடியும். இவை அதிக பணச் செலவை உட்படுத்தும் சோர்வூட்டும் சாவுக்கேதுவான பிரச்னைகளாகவுங்கூட இருக்கின்றன. பாலுறவு, கற்பு மற்றும் விவாகத்தில் பற்றுறுதி ஆகியவற்றின் சம்பந்தமாகப் பைபிளின் புத்திமதியைப் பின்பற்றுவது நடைமுறையில் அதிக பிரயோஜனமாக இருக்குமல்லவா?—நீதிமொழிகள் 5:3-11, 15-20; மல்கியா 2:13; எபிரெயர் 13:4; 1 கொரிந்தியர் 6:9, 10.
நியு யார்க் டைம்ஸிலிருந்து எடுக்கப்பட்ட இந்த அறிக்கையில் காண்பிக்கப்பட்டபடி ஒரே ஒரு நோயின் விஷயத்தில் இது குறிப்பாக எவ்வளவு உண்மையாக இருக்கிறது என்பதைக் கவனியுங்கள்: “தொடர்ந்து இதற்கு எளிதில் ஆளாகும் நிலையிலுள்ளவர்கள் மத்தியில் ஏய்ட்ஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. மற்றவர்கள் மத்தியில் அல்ல.” என்று நியு யார்க் சுகாதார ஆணையர் டாக்டர் டேவிட் J. சென்ஸர் சொன்னார். . . .இதற்கு எளிதில் ஆளாகும் நிலையிலிருப்பவர்களின் ஆண்புணர்ச்சிக்காரர்கள், இருபாலாரிடமும் கவர்ந்திழுக்கப்படும் ஆண்கள், போதை மருந்தை ஊசி மூலம் நரம்பிற்குள் செலுத்திக்கொள்பவர்கள். . .நோய் நுண்ணமங்களுள்ள இரத்ததானம் செய்பவர்களின் இரத்தத்தைச் ஏற்றிக்கொள்பவர்கள், ஏய்ட்ஸ் நோயுள்ள துணைவர்கள் அல்லது பிள்ளைகளை உள்ளடங்குவர்.”
உண்மையில் எது அதிக அறிவுள்ளதாக இருக்கிறது-அநேகமாக பயத்தோடும் கவலையோடும் சேர்ந்த முறைகேடான கண நேர இன்பமா அல்லது சுத்தமான மனசாட்சியும் சுயமரியாதையுமா? எது நிலையான மகிழ்ச்சியையும் மனநிறைவையும் கொண்டுவருகிறது-அவலமான பின்விளைவுகளை உண்டு பண்ணக்கூடிய குறுகிய கால காதல் விவகாரமா அல்லது பைபிள் சிபாரிசு செய்யும் உறுதியான ஆதாரமுள்ள சுத்தமான விவாகத்தில் ஈடுபட உறுதி கொள்வதா?
பைபிளும் பொருளாதாரமும்
பொருளாதார பிரச்னைகளுக்குப் பரிகாரத்தையுடைய புத்தகமாக வெகு சிலரே பைபிளைக் கருதுகிறார்கள், என்றபோதிலும் அதன் தராதரங்களைப் பின்பற்றுவது உண்மையில் உங்கள் மேசையில் கூடுதலான உணவுக்கு வழி செய்வதாக இருக்கும் இது எவ்விதமாக முடியும்?
அநேகமாக ஒரு நபர் சம்பாதிக்கும் பெரும் பகுதியான பணம் அனாவசியமாக விரயம் செய்யப்படுகிறது. பைபிளின் புத்திமதிகளைப் பின்பற்றும்போது, இந்தப்பணத்தைப் பிரயோஜனமான வழியில் செலவிடமுடிகிறது. உதாரணமாக அநேகமாக வறுமைக்கு வழிநடத்தக்கூடிய ஒரு பழக்கம் மிதமிஞ்சிய குடியாக இருக்கிறது. லட்சக்கணக்கான ஆட்கள் கையில் கூலியோடு மது அருந்தும் வெளியே வரும்போது செலுத்துவதற்குத் தேவையான தொகை கையில் இல்லாதவர்களாக அல்லது தங்களுடைய குடும்பங்களுக்குப் போதிய அளவு உணவுக்குப் பணம் கொடுக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள். சில சமயங்களில் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளுக்குக் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஞானமாக பைபிள் மிதமிஞ்சி குடிப்பதை ஆதரித்துப் பேசுகிறது.—நீதிமொழிகள் 23:20, 21, 29, 30; 1 தீமோத்தேயு 3:2, 3, 8.
புகைப் பிடிக்க அல்லது போதை வஸ்துக்களைத் துர்பிரயோகம் செய்ய ஆரம்பிக்கிறவர்களின் விஷயத்திலும் இது உண்மையாகவே இருக்கிறது. இந்தப் பழக்கங்களுக்கு எவ்வளவு பணம் செலவாகிறது! அதை நிறுத்துவது எவ்வளவு கடினமாக இருக்கிறது! நியு யார்க் போஸ்டில் பிரசுரிக்கப்பட்ட மனோதத்துவ நிபுணர் ஜாய்ஸ் சகோதரர்களுக்கு வந்த பின்வரும் கடிதம் இதற்கு உதாரணமாக இருக்கிறது: “நான் கொக்கேனை (உணர்ச்சிகளை இழக்கச் செய்யும் மருந்து) உபயோகிக்க ஆரம்பித்ததற்குக் கரணம் அது வேடிக்கை விளையாட்டாக இருந்தது மேலும் என்னுடைய நண்பர்களில் பெரும்பாலானோர் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அவ்விதமாகச் செய்ததுமே. ஆம், என்னுடைய வாழ்க்கையில் எல்லா நல்ல காரியங்களிலும் இது உண்மையில் ஒரு தடங்களாக இருக்கிறது. அதை நிறுத்துவது எனக்குப் பயங்கர கஷ்டமாக இருக்கிறது. நான் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருக்கிறேன். என்னால் விரைவில் இதை நிறுத்த முடியவில்லையென்றால், அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று நினைக்கிறேன். எனக்குத் தலை தூக்கமுடியாத அளவுக்கு ஏகப்பட்ட கடன் இருக்கிறது, நான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறேன்.”
போதை மருந்தை உபயோகிக்கும் மற்றொருவர் பின்வருமாறு எழுதினார்: “நானும் என்னுடைய கணவரும் நல்ல வேலையில் இருக்கிறோம். மூன்று வருடங்களாக கொக்கேனை பயன்படுத்தி வருகிறோம். ஆரம்பத்தில் அது கவர்ச்சியாக இருந்தது. இப்போது அதிகதிகமாக முக்கியமானதாக மாறி வருகிறது. உண்மையில் நாங்கள் அதற்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறோம். எங்கள் பழக்கம் பெருஞ்செலவை உட்படுத்தியதாகும் நாங்கள் இப்பொழுது கடன்பட்டிருக்கிறோம். நாங்கள் இருவருமே இந்தப் போதை மருந்தின் பழக்கத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம். சில நாட்களில் மாயமான கற்பனைக் காட்சிகள் கண்களைவிட்டு மறைவதே இல்லை.”
புகைப்பிடிப்பவர்கள் தங்களுடைய பழக்கத்தால் பொருளாதார ரீதியிலுங்கூட பாதிக்கப்படுகிறார்கள். ஒருவேளை அதே அளவாக இது இல்லாமலிருக்கலாம். நவீன அலுவலக நுட்பம் என்ற பத்திரிகையில் ஒரு அறிவிப்பு பின்வருமாறு இருந்தது: “அண்மையில் வெளியான, தேசம் முழுவதிலும் செய்யப்பட்ட சுற்றாய்வு அறிக்கையின்படி, வேலை தேடிக்கொண்டிருக்கும் புகைப்பிடிக்காத நபர்கள் அதே கல்வி தகுதிகளைப் பெற்றிருக்கும் புகைப் பிடிப்பவர்களைவிட வேலைக்குச் சேர்க்கப்படுவது அதிக சாத்தியமாக இருக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய கம்பெனிகளின் நிர்வாகிகளையும் பேட்டி கண்டதை அடிப்படையாக வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில். . .முதலாளிகள் பெரும்பாலும் புகைப்பிடிக்காதவர்களையே விரும்புவதை வெளிப்படுத்தியது,” ஏன்? ஏனென்றால் அமெரிக்க சட்ட மாமன்ற ஆராய்ச்சி ஒன்றில் காண்பிக்கப்பட்டபடி, புகைப்பிடித்தல், மருத்துவ செலவு, மற்றும் குறைந்த உற்பத்தி திறன் உட்பட தேசத்தின் உடல் நல காப்பு செலவுகளை அதிகப்படுத்துகிறது. இதற்காகும் செலவு 84,500 கோடி ரூபாயாக இருக்கிறது. விற்கப்படும் ஒரு சிகரெட் பாக்கெட்டுக்கு ஆகும் செலவு சுமார் 28 ரூபாயாகும்.
ஆம், வெறுமென பைபிளின் புத்திமதியைப் பின்பற்றும்போது ஒரு நபர் பொருளாதார ரீதியில் உதவப்படுகிறார். “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மை சுத்திகரித்துக் கொள்வோம்.” (2 கொரிந்தியர் 7:1) பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதன் மூலம் எல்லா விதமான சூதாட்டங்களிலிருந்தும் விலகியிருப்பவர்களின் விஷயத்திலும் இதுவே உண்மையாக இருக்கிறது. (ஏசாயா 65:11, 12;லூக்கா 12:15) தவிர, பைபிள் நியமங்களைப் பின்பற்றுகிறவர்கள் அவர்களுடைய நேர்மைக்காகவும் நாணயத்துக்காகவும் கடின உழைப்புக்காகவும் முதலாளிகளால் வெகு உயர்வாக மதிக்கப்படுகிறார்கள். இவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதற்கு முதலானவர்களாகவும் வேலை நீக்கம் செய்யப்படுவதற்குக் முதலானவர்களாகவும் வேலை நீக்கம் செய்யப்படுவதற்குக் கடைசியானவர்களாகவும் இருக்கிறார்கள். கொலோசேயர் 3:22, 23; எபேசியர் 4:28.
பைபிளும் உடல்நலமும்
மருத்துவரீதியில் நாம் இவ்வளவு முன்னேறியிருப்பதன் காரணமாக, பைபிளின் புத்திமதி பொருத்தமற்றதாகிவிட்டிருக்கிறதா? ஆம் மூட நம்பிக்கைகள் ஏராளமாக இருந்த மற்றும் தற்கால மருத்துவ சிகிச்சைகள் பற்றி அல்லது நோய்துண்மங்களையும் கிருமிகளையும் பற்றி எதுவும் அறியப்படாத ஒரு சமயத்தில் பைபிள் எழுதப்பட்ட போதிலும், மருத்துவம் மற்றும் சுகாதாரம் சம்பந்தமான விஷயங்களில் பைபிள் எவ்வளவு துல்லிபமாகவும் காலத்துக்கு ஒத்ததாகவும் இருப்பதானது ஆராய்ச்சியாளர்களைப் பிரமிக்கச் செய்திருக்கிறது.
தற்கால மருத்துவ விஞ்ஞானத்தின் மத்தியிலும் நிச்சயமாகவே உடல்நல பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. என்றபோதிலும் பைபிளின் புத்திமதி மிகச்சிறந்த உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக இருக்கும் பழக்கவழக்கங்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. நம்முடைய மனநலத்தையுங்கூட அவை மேம்படுத்துகின்றன. மனநிலைகளும் உணர்ச்சிகளும் நம்முடைய உடலின் மீது ஏற்படுத்தும் பாதிப்பை பைபிள் ஒப்புக்கொள்கிறது (நீதிமொழிகள் 14:30) ஆகவே கெடுதல் விளைவிக்கும் மனநிலைகளையும் உணர்ச்சிகளையும் ஒழித்து அதற்குப் பதிலாக நேர்மையான கட்டியெழுப்பும் குணங்களை வளர்ப்பதற்கு அது நமக்கு உதவி செய்கிறது.
எபேசியர் 4:31, 32,-ன் கொடுக்கப்பட்டிருக்கும் புத்திமதியைக் கவனியுங்கள்: “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும், மன உருக்கமாயும் இருந்து, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” ஆம், அழிவுண்டாக்கும் கேடு செய்யும் ஆள்த்தன்மையை புதிய, ஆரோக்கியமுள்ள கிறிஸ்தவ ஆள்தன்மையாக மாற்றிக்கொள்வதைப் பைபிள் வலியுறுத்துகிறது. (எபேசியர் 4:20-24) கடவுளுடைய ஆவியின் கனியைப் பிறப்பிக்க அது நமக்கு உதவி செய்கிறது: “அன்பு சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.” (கலாத்தியர் 5:22, 23) பைபிலிலுள்ள ஆரோக்கியமான உணவை மனதும் இருதயமும் உட்கொண்டு அவை சமாதானமாயிருக்க முடியும்—நீதிமொழிகள் 3:7,8; 2:20-22; பிலிப்பியர் 4:6-8.
மேலுமாக பைபிள் விதிமுறைகளின்படி நடக்கிறவர்கள் சரீரத்துக்குக் காயத்தை உண்டுபண்ணக்கூடிய குற்றச்செயல்கள், கலகங்கள், கிளர்ச்சிகள் அல்லது மற்ற காரியங்களின் ஈடுபடுவது கிடையாது. மகிழ்ச்சியான மனநிலையையும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்வதற்குப் பெரும் உதவியாக இருக்கும் நல்மனச்சாட்சி அவர்களுக்கிருக்கிறது. (1 பேதுரு 3:16-18) மேலுமாக பைபிளின் புத்திமதியைப் பின்பற்றுகிறவர்கள் ஒரு அனலான பலன்தரும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையும் மற்றவர்களோடு சமாதானமான உறவுகளையும் அனுபவித்துக் களிக்கிறார்கள்.
ஆம், பைபிளின் நம்முடைய நாளுக்கு நடைமுறையானதாக இருக்கிறது. உண்மையில் அதன் நியமங்களைப் பின்பற்றும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையில் இது தெளிவாகத் தெரிகிறது. அது உங்களுக்கு உதவக்கூடும். அதன் போதகங்களை உங்களுடைய வாழ்க்கையில் பரிசோதித்துப் பார்க்க நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். எவ்விதமாக என்பதை உங்களுக்குக் காண்பிக்க யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள். (W86 5/1)