நரகம் வெப்பமுள்ளதா?
“ஆயிரத்து தொளாயிரத்து அறுபதுகளின் ஒரு கட்டத்தில் நரகம் இல்லாமற்போனது.” பிரிட்டிஷ் எழுத்தாசிரியர் டேவிட் லாட்ஜ் ஆத்துமாக்களும் உடல்களும் என்ற தன்னுடைய நூலில் இப்படியாக எழுதினார். இவருடைய வார்த்தைகள் இரண்டாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்த பத்தாண்டுகளின்போது இருந்த பல கத்தோலிக்கர் மற்றும் புராட்டஸ்டன்ட் மதத்தினரின் எண்ணத்தின் பிரதிபலிப்பாக இருந்தன. பல முக்கிய சர்ச்சுகள் நவீன எண்ணப் போக்குக்குத் தங்களைப் பொருத்திக்கொள்ளும் வகையில் எரி நரகத்தைப் பற்றிய தங்களுடைய அதிகாரப்பூர்வ கோட்பாட்டைச் சில காலத்துக்கு மென்மைப்படுத்தின.
மரணத்துக்குப் பின்னர் தண்டிக்கப்படுதல் என்ற கருத்துதாமே விசேஷமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாததற்குக் காரணம், பாவத்துக்கான விளக்கம்தானே அவர்களுடைய மனதில் தெளிவற்றதாய் இருந்தது. 1984-ல் ரோமின் கார்டினல் ரேட்ஸிங்கர் பின்வருமாறு பேட்டியில் சொன்னார்: “நம்முடைய நாகரிகம் மக்களின் குற்ற உணர்வை, பாவ உணர்வை, நரகத்துடனும் உத்தரிக்கும் ஸ்தலத்துடனும் இருக்கும் நம்பிக்கை சம்பந்தப்பட்டிருக்கும் அந்த மெய்மையை நீக்கிப்போடும் ஒரு முயற்சியில் . . . சூழ்நிலைகளையும் செயல் நடப்பித்த இடங்களையும் மட்டுப்படுத்துவதன் பேரில் கவனம் செலுத்துகிறது.”
மரணத்துக்குப் பின்னர் உத்தரிக்கும் ஸ்தலத்திலும் நரகத்திலும் தண்டனை பெறுதல் என்ற கோட்பாட்டை ஏற்காமல் இன்று பாவத்தின் மெய்மையில் நம்பிக்கை வைப்பது கூடிய காரியமா? அண்மையில் வெளிவந்த ஒரு புத்தகம் Abrėgė de la foi catholique (கத்தோலிக்க மத விசுவாசத்தின் சுருக்கம்), ஃபிரஞ்சு கார்டினல் டிகோர்ட்ரே என்பவரால் முகவுரையிடப்பட்டது, “நரகத்தில் நம்ப வேண்டிய அவசியம் இருக்கிறதா?” என்ற நேரடியான கேள்வியை எழுப்புகிறார். பதில்: “அச்சுறுத்தும் நரகம் சார்ந்த கேள்வியைத் தப்பிச்செல்வது கூடாதது.” வத்திக்கன் கவுன்சில் II—திருச்சபைக் குழுக்குரிய கூடுதல் பின் ஆவணங்கள் (1982) என்ற நூல் “தேவ மக்களின் கோட்பாடு” இப்படிச் சொல்வதாக மேற்கோள் காண்பிக்கிறது: “தேவனுடைய அன்புக்கும் கிருபைக்கும் நன்கு பிரதிபலித்திருப்பவர்கள் நித்திய ஜீவன் அடைவர். கடைசி வரைக்கும் அவற்றை மறுத்தவர்கள் ஒருபோதும் அணைக்கப்படாத அக்கினியில் போடப்படுவர் . . . என நாங்கள் நம்புகிறோம்.”
எனவே, எதிர் காரியத்தை நிரூபிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் இறைமையியலரின் முயற்சிகள் ஒருபக்கம் இருப்பினும், எரிநரகம் கத்தோலிக்க மத கோட்பாட்டின் ஒரு பாகமாகவே இன்னும் இருக்கிறது. என்றபோதிலும், கிறிஸ்தவ இறைமையியலின் ஒரு புதிய அகராதி (1983) நித்திய வாதனை என்ற கோட்பாடு இன்றைய கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் அநேக அங்கத்தினருக்கு ஏற்படுத்தும் “இக்கட்டான நிலையை” மற்றும் “அசெளகரியத்தைக்” குறித்துப் பேசுகிறது. இந்தக் கோட்பாட்டை அன்பான ஒரு கடவுள் என்ற எண்ணத்துடன் பொருத்திப்பார்ப்பதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. “வெப்பமுள்ள ஒரு நரகம் உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவ அல்லது பைபிள் கோட்பாடா? இல்லை என்றால், அதன் மூல தோற்றம் எங்கே இருந்தது?” என்று அவர்கள் சிந்திக்கின்றனர். (w89 10/1)