உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w91 7/1 பக். 4-5
  • நரகத்தின் மூல தோற்றம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நரகத்தின் மூல தோற்றம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மெசொப்பொதேமியர் நரகம்
  • எகிப்திய மற்றும் கிழக்கத்திய மதங்கள்
  • கிரேக்கர், எட்ரூரியர், மற்றும் ரோமர் நரகங்கள்
  • யூதரும் எபிரெயு வேதாகமமும்
  • நரகம் பற்றிய உண்மை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • எரிநரகம் என்ன ஆனது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • நரகம் என்பது என்ன? அது என்றென்றும் சித்திரவதை செய்யப்படுகிற இடமா?
    பைபிள் தரும் பதில்கள்
  • யார் நரகத்திற்குப் போகிறார்கள்?
    பைபிள் தரும் பதில்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
w91 7/1 பக். 4-5

நரகத்தின் மூல தோற்றம்

“நரகம்” என்ற வார்த்தை “மீளாத் தண்டனைக்குரியவர்களுக்கான இடம்” என்று நியு கத்தோலிக்என்சைக்ளோபீடியா விளக்குகிறது. ஒரு புராட்டஸ்டன்ட் என்சைக்ளோபீடியா நரகத்தை “துன்மார்க்கருக்கு எதிர்கால தண்டனைக்குரிய ஓர் இடம்” என்று விளக்குகிறது.a ஆனால் மரணத்துக்குப் பின்பு அப்படிப்பட்ட தண்டனைக்குரிய ஓர் இடம் இருக்கிறது என்ற நம்பிக்கை கிறிஸ்தவமண்டல முக்கிய சர்ச்சுகளுக்கு மட்டுப்பட்டதாக இல்லை. கிறிஸ்தவமண்டலம் தோன்றுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இது தோற்றத்தைக் கொண்டிருந்தது.

மெசொப்பொதேமியர் நரகம்

இயேசு பிறப்பதற்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமேரியரும் பாபிலோனியரும் ஒரு கீழ் உலகத்தில் நம்பினர், இதை அவர்கள் போனால் திரும்பி வர முடியாத தேசம் என்று அழைத்தனர். இந்தப் பூர்வீக நம்பிக்கையின் பிரதிபலிப்பு சுமேரியர் மற்றும் அக்கேதியர் கவிதைகளில் காணப்படுகிறது. இக்கவிதைகள் “கில்காமேஷ் காப்பியம்” என்றும் “இஷ்டார் கீழ் உலகத்திற்கு இறங்கியது” என்றும் அழைக்கப்பட்டது. இந்த மரித்தோரின் இடத்தை அந்தகார வீடு, “பிரவேசித்த எவரும் விட்டு வெளியேறாத வீடு,” என்று அவர்கள் அழைத்தனர்.

அங்கு இருக்கும் நிலைமைகளைக் குறித்ததில், “அந்தக் கீழ் உலகம் பயங்கரம் நிரம்பியது,” என்று ஒரு பூர்வீக அசீரிய வாசகம் குறிப்பிடுகிறது. மரித்தோரின் இந்தக் கீழ் உலகத்தைக் காணும் வாய்ப்பு அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் அசீரிய இளவரசன் பார்த்தவை தன் “கால்களுக்கு நடுக்கம் தந்தன” என்று சாட்சி பகர்ந்தான். கீழ் உலகத்தின் அரசன் நெர்கலை விவரிக்கையில் அவன் பதிவு செய்ததாவது: “அச்சுறுத்தும் ஒரு குரலில் அவன் ஒரு மூர்க்கப் புயல் போன்று எரிச்சலோடு என் மீது சீறினான்.”

எகிப்திய மற்றும் கிழக்கத்திய மதங்கள்

பூர்வீக எகிப்தியர் ஆத்துமா அழியாமையில் நம்பினர், பின்னுலகம் பற்றிய தங்களுடைய சொந்த கருத்தைக் கொண்டிருந்தனர். புதிய என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா பின்வருமாறு கூறுகிறது: “எகிப்திய ஈமச்சடங்கு வாசகங்கள் அடுத்த உலகிற்கான வழி பயங்கரமான துன்பங்கள் கொண்டவையாக விவரிக்கின்றன: அச்சுறுத்தும் ராட்சத விலங்குகள், அக்கினி கடல்கள், மந்திர சக்தி வாய்ப்பாடுகளின்றி கடந்திட முடியாத வாயிற் கதவுகள், மந்திரத்தினால் மாத்திரமே மாற்றவல்ல தீய நோக்குடைய படகோட்டி.”

இந்தோ–ஈரானிய மதங்கள் மரணத்துக்குப் பின்பு தண்டனை சார்ந்த பல்வேறு நம்பிக்கைகளை வளர்த்தன. இந்து மதம் குறித்து, ஃபிரஞ்சு என்சைக்ளோபீடியா யுனிவர்சாலிஸ் (சர்வலோக என்சைக்ளோபீடியா) கூறுகிறது: “இந்துக்கள் கற்பனை செய்யும் 21 நரகங்கள் பற்றிய எண்ணிலடங்கா விளக்கங்கள் உள்ளன. பாவம் செய்பவர்கள் கொடிய விலங்குகளாலும் சர்ப்பங்களாலும் விழுங்கப்படுகின்றனர், வேதனையுண்டாக வறுத்தெடுக்கப்படுகின்றனர், உடற்பாகங்கள் ரம்பங்கள் கொண்டு அறுக்கப்படுகின்றன, தாகத்தாலும் பசியாலும் வாதிக்கப்படுகின்றனர், எண்ணையில் வேக வைக்கப்படுகின்றனர், இரும்பு அல்லது கற் கலங்களில் மாவாக அரைக்கப்படுகின்றனர்.”

ஜைன மதமும் புத்த மதமும் நரகத்தைப் பற்றிய சொந்த கருத்தையுடையனவாக இருக்கின்றன, இங்கே கல்மனமுள்ள பாவிகள் வாதிக்கப்படுகின்றனர். ஈரான் அல்லது பெர்சியாவில் தோன்றிய ஸொராஸ்ட்ரிய மதத்திலும்கூட ஒரு நரகம் இருக்கிறது—இது பாவிகள் வாதிக்கப்படும் கடுங்குளிரான அருவருப்பான நாற்றம் வீசும் இடமாகும்.

அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், எகிப்திய மதம், இந்து மதம், ஜைன மதம், புத்த மதம் மற்றும் ஸொராஸ்ட்ரிய மதம் ஆகிய மதங்களில் நரகத்தைப் பற்றிய கருத்துக்கள் நித்தியம் அல்ல. இந்த மதங்களின்படி, ஒரு குறிப்பிட்ட கால துன்பங்களுக்குப் பின்பு, பாவிகளின் ஆத்துமாக்கள் வேறு ஓர் இடத்துக்கு அல்லது நிலைக்குச் செல்கின்றன, இது மனிதன் முடிவில் சென்றடையும் இடம் குறித்த அந்தந்த மதத்தின் கொள்கைக்கு ஏற்ப அமைந்திருந்தன. நரகம் பற்றிய அவர்களுடைய கருத்துக்கள் கத்தோலிக்கரின் உத்தரிக்கும் ஸ்தலம் கருத்துக்கு ஒப்பாயிருக்கின்றன.

கிரேக்கர், எட்ரூரியர், மற்றும் ரோமர் நரகங்கள்

பூர்வீகக் கிரேக்கர் தப்பிப்பிழைக்கும் ஓர் ஆத்துமாவில் (சைக்கீ, இந்த வார்த்தை பட்டாம்பூச்சிக்கும் பயன்படுத்தப்பட்டது) நம்பினர். அவர்கள் ஹேடீஸை மரித்தோர் மண்டலம் என்றழைத்தனர், அதே பெயர் கொண்ட கடவுளால் அது ஆளப்பட்டு வருகிறது என்றும் நம்பினர். ஆர்ஃபியஸ்—மதங்களின் ஒரு பொது சரித்திரம் என்ற தன்னுடைய புத்தகத்தில், ஃபிரஞ்சு அறிஞர் சாலமோன் ரீனாக் கிரேக்கரைக் குறித்து இப்படியாக எழுதினார்: “சாரன் என்னும் வயதான படகு செலுத்துபவனின் படகில் ஸ்டைக்ஸ் நதியைக் கடந்த பின்பு [அந்த ஆத்துமா] அந்தக் கொடிய பிரதேசங்களுக்குள் பிரவேசித்தது என்றும் மரித்த நபரின் வாயில் வைக்கப்பட்ட ஒரு வெள்ளி [நாணயத்தை] அவன் கட்டணமாகப் பெற்றுக்கொண்டான் என்றும் பரவலாக நம்பப்பட்டது. கீழுலகக் கொடிய பிரதேசங்களில் அந்த இடத்தின் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் நின்றது . . . ; அதன் குற்றச் செயல்களுக்காக தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டால், அது டார்ட்டரஸில் வேதனைப்பட வேண்டும். . . . கிரேக்கர் ஒரு லிம்போவை, குழந்தையிலேயே மரித்து விடும் பிள்ளைகள் சென்றடையும் இடத்தையும், கடுமையாயிராத சிட்சிப்பு ஆத்துமாக்களைச் சுத்திகரித்த ஓர் இடமாக உத்தரிக்கும் ஸ்தலத்தையும் கண்டுபிடித்தனர்.” தி உவர்ல்டு புக் என்சைக்ளோபீடியா குறிப்பிடுகிறபடி, டார்ட்டரஸை சேர்ந்தடைந்த ஆத்துமாக்கள் “நித்திய சித்திரவதையை அனுபவித்தன.”

இத்தாலியில் ரோமரின் நாகரிகத்துக்கு முன்னிருந்த எட்ரூரியருங்கூட மரணத்துக்குப் பின் தண்டனையில் நம்பினர். டிக்‍ஷனேர் டெஸ் ரிலிஜன்ஸ் (மதங்களின் அகராதி) குறிப்பிடுகிறதாவது: “எட்ரூரியர் தங்கள் மரித்தோர் சம்பந்தமாக அளவுகடந்த கவனம் செலுத்திய காரியம் கீழ் உலகம் குறித்த அவர்களுடைய கொள்கைகளால் விளக்கப்படுகிறது. பாபிலோனியர் போன்று, இவை [மரித்தோரின் ஆவிகளுக்கு] சித்திரவதை மற்றும் துயர் மிகுந்த இடங்களாக இருப்பதாய்க் கருதினர். இவர்களுடைய வம்சத்தினர் அளித்திடும் நிவாரண பலிகளால் மட்டுமே இவர்களுக்கு விடுதலை வரக்கூடும்.” மற்றொரு விளக்கக் குறிப்பு கூறுவதாவது: “நரகத்தைப் பற்றிய கிறிஸ்தவர்களுடைய சித்திரங்களுக்கு ஏவுதலாயிருந்த காட்சிகளை எட்ரூரியரின் கல்லறைகள் காண்பிக்கின்றன.”

ரோமர்கள் எட்ரூரியர் நரகத்தையே பின்பற்றினர். இதை அவர்கள் ஆர்கஸ் அல்லது இன்ஃபெர்னஸ் என்று அழைத்தனர். இவர்கள் ஹேடீஸ், அதாவது கீழ் உலகின் அரசன் பற்றிய கிரேக்கரின் கற்பனைக் கதையையும் கடன் வாங்கினர், இவனை ஆர்கஸ் அல்லது புளூட்டோ என்று அழைத்தனர்.

யூதரும் எபிரெயு வேதாகமமும்

இயேசுவின் நாட்களுக்கு முன்னர் வாழ்ந்த யூதர்களைப் பற்றியது என்ன? அவர்களைக் குறித்து நாம் என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (1970)-ல் வாசிப்பதாவது: “கி.மு. ஐந்தாவது நூற்றாண்டு முதல் யூதர்கள் பாரசீக மக்களுடனும் கிரேக்கருடனும் நெருங்கிய தொடர்பையுடையவர்களாய் இருந்தனர், இருவருமே மரணத்துக்குப் பின் சம்பந்தப்பட்ட நன்கு வளர்ந்த கருத்துக்களைக் கொண்டிருந்தனர். . . . கிறிஸ்துவின் காலத்துக்குள், பொல்லாத ஆத்துமாக்கள் மரணத்துக்குப் பின் கெஹன்னாவில் தண்டிக்கப்படும் என்ற ஒரு நம்பிக்கையைப் பெற்றனர்.” என்றபோதிலும், என்சைக்ளோபீடியா ஜுடைக்கா குறிப்பிடுகிறது: “கெஹன்னாவைப் பற்றிய இந்தப் பின் கருத்து வேதாகமத்தில் காணப்படுவதில்லை.”

பின்னர் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தக் கூற்று சரியானது. ஓர் ஆத்துமா எரி நரகத்தில் மரித்ததற்குப் பின்னான ஒரு தண்டனை பெறுவதைப்பற்றிய எந்த ஒரு குறிப்பும் எபிரெயு வேதாகமத்தில் இல்லை. இந்த அச்சுறுத்தும் கோட்பாட்டின் தோற்றம் ஜலப்பிரளயத்திற்குப் பின்னர் அமைந்த பாபிலோனிய மதங்களுக்குச் செல்வதாயிருக்கிறது, பைபிளுக்கு அல்ல. நரகத்தில் தண்டனை என்ற கிறிஸ்தவமண்டலத்தின் கோட்பாடு பூர்வீக பாபிலோனியரிடம் தோற்றம் கண்டது. உத்தரிக்கும் ஸ்தலத்தில் பரிகார வேதனை என்ற கத்தோலிக்கக் கருத்து ஆரம்பக்கால எகிப்திய மற்றும் கிழக்கத்திய மதங்கள் வரைச் செல்கிறது. லிம்போ கிரேக்க கற்பனைக் கருத்திலிருந்து எடுக்கப்பட்டது. மரித்தோருக்கு ஜெபங்களும் பலிகளும் ஏறெடுத்தல் எட்ரூரியரால் பின்பற்றப்பட்ட பழக்கம்.

ஆனால் மரணத்துக்குப் பின்னர் உணர்வுள்ளவராய் தண்டிக்கப்படுதல் என்ற இந்தக் கோட்பாடுகள் என்ன அடிப்படை ஊகங்களின் பேரில் சார்ந்தவை? (w89 10/1)

[அடிக்குறிப்புகள்]

a மெக்ளின்டாக் மற்றும் ஸ்ராங்ஸின் என்ஸைக்ளோபீடியா ஆப் பிப்ளிக்கல், தியாலஜிக்கல் அண்டு எக்ளிஸியாஸ்டிக்கல் லிட்டரேச்சர், புத்தகம் 4, பக்கம் 165.

[பக்கம் 5-ன் படம்]

டான்டேயின் “இன்ஃபெர்னோ”வில் விவரிக்கப்பட்டிருக்கும் ஸ்டைக்ஸ் நதியைக் கடந்து செல்லுதல்

[படத்திற்கான நன்றி]

Dover Publications, Inc.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்