வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
ஏலா பள்ளத்தாக்கு—தாவீது ஒரு பலவானைக் கொன்ற இடம்!
‘ஒரு கவணையும் ஒரு கல்லையும் கொண்டு’ கோலியாத் என்ற பலவானான ‘பெலிஸ்தனைக் காட்டிலும் அதிக பலவானாக நிரூபித்த தாவீது’ செயல்பட்ட விதத்திலும் அதிகச் சிலிர்ப்பூட்டும் பைபிள் காரியங்கள் வேறு இருக்கமுடியாது. (1 சாமுவேல் 17:50) இது ஏலா பள்ளத்தாக்கில் நிகழ்ந்தது.
ஆனால் அந்தப் பள்ளத்தாக்கு எங்கிருக்கிறது, அது எப்படிப்பட்டது? இதை அறிந்திருப்பதானது, இஸ்ரவேலின் எதிர்கால அரசனாக அபிஷேகம் பண்ணப்பட்ட, இளைஞனின் புகழ்பெற்ற வெற்றியை நீங்கள் காட்சிப்படுத்திப் பார்ப்பதைச் சாத்தியமாக்கும். பிறகு தேவன், நமக்கு நிரந்தர பலனைக் கொண்டுவரக்கூடிய ஒரு ராஜ்ய உடன்படிக்கையைத் தாவீதுடன் செய்தார். மேலும் இதுவும் ஏலா பள்ளத்தாக்கில் என்ன நடந்தது என்பதைப் பற்றிக் கற்றுக்கொள்ள நமக்கு அதிகக் காரணத்தைக் கொடுக்க வேண்டும்.
பெலிஸ்தர்கள் கானானின் எல்லை ஓரத்தில் வாழ்ந்து வந்தனர். இஸ்ரவேலர்கள் யூதேயாவின் மலைகளில் (எருசலேமின் தென்பகுதி) ஆதிக்கம் செலுத்தினர். ஆகையால் இப்போது உங்களுக்குப் புரியும்—மேற்கிலுள்ள தாழ்வான நிலப்பரப்பில், எதிரிகளும் கிழக்கிலுள்ள மேடான நாட்டில் கடவுளுடைய ஊழியரும் இருந்தனர். இவ்விருவருக்கும் இடையே, ஷெஃபெலா என்று அழைக்கப்படும் தாழ்வான குன்றுகளாக, கலகத்திற்கு உட்பட்ட ஓர் இடைநிலை நிலப்பரப்பு இருந்தது. பெலிஸ்தர்கள் இஸ்ரவேலரை எப்படித் தாக்கக்கூடும்? ஒரு நேர்மையான வழியானது, மேல்நோக்கி, கிழக்கு-மேற்கான கள்ளப்பாதை அல்லது ஒரு வழியாகும். அதன் முக்கிய வழிதான் ஏலா பள்ளத்தாக்கு ஆகும். இது காத் மற்றும் எக்ரோன் பட்டணங்களுக்கு அருகிலுள்ள நிலப்பரப்பிலிருந்து ஷெஃபெலாவின் வழியாக எருசலேம் மற்றும் பெத்லகேமின் தென்மேற்காக சுமார் 15 மைல்கள் உள்ள மலைகள் வரை பரவியிருந்தது. இப்பள்ளத்தாக்கின் மேற்புறமுனையை இப்படம் (தென் கிழக்கே நோக்கியது) காட்டுகிறது. தொடுவானத்தில் நீங்கள் யூதேயாவின் மலைகளைப் பார்க்கிறீர்கள்.a
இப்புகைப்படத்தைப் பார்க்கையில், பெலிஸ்தர் மலைகளை நோக்கி இத்தட்டையான பள்ளத்தாக்கு வரையிலும் வந்திருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அவர்களை நிறுத்தும்படி, இஸ்ரவேலர்கள் யூதேயாவிலிருந்து தென்புறமாக வந்தனர். இங்கே ஓர் இடைநிலை உருவானது. ஏன்? “பெலிஸ்தர் இந்தப் பக்கத்தில் ஒரு மலையின் மேலும், இஸ்ரவேலர் அந்தப் பக்கத்தில் ஒரு மலையின் மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.”—1 சாமுவேல் 17:3.
அந்தப் பள்ளத்தாக்கில் எங்கே அது நடந்தது என்பதை நுட்ப விபரத்துடன் நாம் அறியாதபோதிலும் பெலிஸ்தர்கள் மலையின் மேல் வலப்புறத்தில் கீழே இருப்பதாகக் காட்சிப்படுத்திப் பாருங்கள். சவுலின் சேனை அம்மலையின் மேல் பழுப்புநிற விளைநிலத்துக்கு அப்பால் இருந்திருக்கக்கூடும். எந்தச் சேனையும் இறங்கிவந்து, பள்ளத்தாக்கைக் கடந்து எதிர்த்து நிற்கும் சேனையை அதன் உயர்வான, எதிர்ப்பதில் பாதுகாப்பான நிலையில் தாக்கமுடியாது. அதன் விளைவாக ஏற்பட்ட இடைநிலை ஒரு மாதத்திற்கும் மேல் நீடித்தது. அதை எது முறிக்கும்?
ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் ஒரு பெலிஸ்த வீரனான ஒன்பது அடி உயரத்துக்கும் மேலான கோலியாத் என்பவன் பள்ளத்தாக்கில் நின்று ஓர் ஒற்றைக்கு ஒற்றை சண்டையின் மூலம் காரியத்தைத் தீர்மானிக்கும்படி சவுலின் சேனையை நிந்தித்தான். ஆனால் எந்த இஸ்ரவேலனும் அவனுக்கு விடையளிக்கும் அளவுக்குத் தைரியமுள்ளவனாயில்லை. முடிவாக, தாவீது என்னும் பெயர் கொண்ட ஓர் இளம் மேய்ப்பன் சேனையிலிருந்த தன் சகோதரருக்கு உணவுடன் பெத்லகேமிலிருந்து வந்தான். இத்தகைய கேவலமான சவாலுக்கு அவனுடைய பிரதிலிப்பு? “ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தன் யார்?” (1 சாமுவேல் 17:4-30) யெகோவாவின் சாட்சிகள் 1990-க்கு ஆண்டு வசனமாக கொண்டிருக்கும்: “அதினாலே நாம் தைரியங்கொண்டு, ‘யெகோவா எனக்குச் சகாயர்,’ என்ற வாக்கியத்தில் பிரதிபலிக்கும் அதே நோக்கு நிலையைத் தாவீது தெளிவாகக் கொண்டிருந்தான்.—எபிரெயர் 13:6 (NW); சங்கீதம் 56:11; 118:6.
அரசனாகிய சவுல், ஆயுதம் தரிக்காதவனும், போர் வீரனாகப் பயிற்சி பெறாதவனுமாய் இருந்த இந்த இளைஞன், பயமுறுத்தும் தோற்றமுடைய கோலியாத்தை எதிர்ப்படுவான் என்பதைப் பற்றி கேள்விப்பட்டபோது, அவன் தன்னுடைய போராயுதங்களைப் பயன்படுத்திக்கொள்ளும்படி அவற்றை அளித்தான். தாவீது அதை மறுத்துவிட்டு, தன்னுடைய மேய்ப்பனுக்குரிய தடியுடனும், தோலால் செய்யப்பட்ட ஒரு கவணுடனும் தான் பள்ளத்தாக்கில் கண்டெடுத்த ஐந்து கற்களுடனும் அந்தப் பலவானை எதிர்க்கும்படிக்குத் தயாரானான். அந்தக் கற்கள் எதைப் போன்றவை? அவை, திராட்சைப் பழங்கள் அல்லது ஒலிவப் பழங்களின் அளவே உடைய வெறும் கூழாங்கற்களே. ஒரு சிறிய ஆரஞ்சுப் பழத்தின் அளவு கொண்ட, 2 முதல் 3 அங்குல விட்டமுள்ள கவண்கற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கவண் எறியும் ஒருவர் அத்தகைய கற்களை ஒரு மணிக்கு 100 முதல் 150 மைல்கள் வேகத்தில் எறியக்கூடும்.
சந்தேகமின்றி, அந்தப் பள்ளத்தாக்கில் இரண்டு சேனைகளின் முழுமையான காட்சியில் என்ன நடந்தது என்பதை நீங்கள் வாசித்திருப்பீர்கள். தாவீது அறிவித்தான்: “நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.” பிறகு யெகோவா வெற்றி தந்தார். அந்த இளைஞன் ஒரு கல்லை அவ்வளவு வேகமாக எறிந்ததனால் அது கோலியாத்தின் நெற்றியில் ஆழமாகப் பதிந்து, அவனைக் கொன்றது. பிறகு அந்த இளைஞன் ஓடிச்சென்று அந்தப் பலவானின் சொந்த வாளாலேயே அவனுடைய தலையைத் துண்டித்தான்.—1 சாமுவேல் 17:31-51.
கடவுளின் மீது தாவீதுக்கு இருந்த விசுவாசத்தாலும் நம்பிக்கையாலும் உற்சாகம் அளிக்கப்பட்டவர்களாய், இஸ்ரவேலர், தங்களுடைய சோர்வுற்ற விரோதிகளைப் பின்தொடர்ந்து ஷெஃபெலாவின் வழியாக பெலிஸ்தியா வரையிலும் தாக்கினர்.—1 சாமுவேல் 17:52, 53.
யூதாவில் கேட்கப்பட்டிருந்த களிகூருதலைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்! மலைகளிலுள்ள கடவுளுடைய ஜனம் தற்போதைய நோக்குநிலையில், கீழ்ப்புறமாக எப்ரோனுக்கு அருகே உள்ள நிலப்பரப்பை ஒத்த ஏலா பள்ளத்தாக்கையும் ஷெஃபெலாவையும் மேற்குப் புறத்தில் பார்த்திருக்கக்கூடும். ஒரு வாதுமை மரத்தின் வெண்மை நிறப் பூக்கள் ஏறெடுத்துப் பார்ப்பதற்கு அழகான தோற்றமாக உள்ளன. ஆனால் கடவுளின் விரோதிகளுக்கு எதிரான வெற்றியின் அழகோ அதைக் காட்டிலும் அழகானதாய் இருந்தது. ஆகவேதான், தாவீதைக் குறித்து இஸ்ரவேல் பெண்கள் பொருத்தமாகவே இவ்வாறு பாடினர்: “சவுல் கொன்றது ஆயிரம், தாவீதோ பதினாயிரம்,” ஏலா பள்ளத்தாக்கில் அவன் கொன்ற அந்தப் பலவானை உட்பட.—1 சாமுவேல் 18:7. (w90 1/1)
[அடிக்குறிப்புகள்]
a இதே படம், பெரிய அளவில் யெகோவாவின் சாட்சிகளின் 1990 நாட்காட்டியில் உள்ளது. அது அவ்விடத்தை அட்டைப் படத்திலும் கொண்டுள்ளது.
[பக்கம் 28-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.