பேராசை இல்லாத ஓர் உலகத்தைக் கற்பனை செய்துபாருங்கள்
போட்டியிடுவதற்குப் பதிலாக ஒத்துழைக்கும் மக்களைக் கொண்ட ஓர் உலகை நீங்கள் தரிசிக்க முடிகிறதா? தாங்கள் எப்படி நடத்தப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அப்படியே மனிதர் நடத்தப்படுவதை நீங்கள் தரிசிக்க முடிகிறதா? இவைதான் பேராசை இல்லாத ஓர் உலகின் தன்மையாகும். அது எப்பேர்ப்பட்ட ஓர் உலகமாயிருக்கும்! அது எப்பொழுதாவது வருமா? ஆம், அது நிச்சயமாய் வரும். ஆனால் மனிதவர்க்கத்தில் இந்தளவுக்கு பதிந்துவிட்டிருக்கும் பேராசை எப்படி முற்றிலும் நீக்கப்படும்?
இதற்கு விடை பெறுவதற்கு, நாம் முதலில் பேராசையின் ஆரம்பத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது எப்பொழுதுமே மனித இனத்தின் தன்மையாக இருக்கவில்லை என்பதை பைபிள் காண்பிக்கிறது. பேராசை இல்லாத சிருஷ்டிகரின் பரிபூரண சிருஷ்டியாகிய முதல் மனிதனில் பேராசை போன்ற இப்படிப்பட்ட குறைபாடு ஆரம்பத்தில் காணப்படவில்லை என்று தீர்க்கதரிசியாகிய மோசே நினைவுபடுத்துகிறான்: “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம்.” எனவே காரியம் இப்படியிருக்க, பேராசை எங்கிருந்து வந்தது? முதல் மானிட ஜோடி இதைத் தங்களில் வளரும்படி அனுமதித்தனர்—ஏவாள் கடவுள் தடைசெய்திருந்த கனியைப் புசிப்பதில் தனக்குக் கிடைக்கும் காரியத்தின்பேரில் பேராசையின் எதிர்பார்ப்புடையவளாயிருக்க, ஆதாம் தன்னுடைய அழகிய மனைவியை இழக்க மனமில்லாதவனாய்ப் பேராசையை வெளிப்படுத்தினான். ஆதாம் ஏவாள் விஷயத்திலும் உண்மையாயிருந்த இந்த வார்த்தைகளை மோசே கூட்டினான்: “அவர்களோ துரோகிகள், பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் குற்றமாம்.”—உபாகமம் 32:4, 5, தி.மொ.; 1 தீமோத்தேயு 2:14.
நோவாவின் நாளைய பூகோளப் பிரளயம் ஏற்படும் சமயத்திற்குள் “மனுஷருடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாதது” என்றளவுக்கு பேராசையும் தன்னிச்சையும் வளர்ந்துவிட்டது.—ஆதியாகமம் 6:5.
மனிதனில் இந்தப் பேராசை இன்று வரையும் தொடர்ந்து, இன்றைய நன்றியறிதலில்லாத பேராசை மிகுந்த சமுதாயத்தில் அதன் உச்சத்தை எட்டியிருப்பதாய்த் தெரிகிறது.
கல்வியின் மூலம் பேராசையை ஒழித்தல்
மனிதரிடையே பேராசை வளர்ந்திருப்பது போலவே, எதிர்ச்செயலும் சாத்தியமே. பேராசையை மேற்கொள்ளலாம். என்றபோதிலும், இது நடைபெறுவதற்குச் சரியான கல்வியும் பயிற்றுவிப்பும் அவசியம், கண்டிப்பான வழிமுறைகளும் விதிமுறைகளும் பின்பற்றப்படவேண்டும். இது நம்பத்தக்கதாய் தொனிக்கக்கூடும், ஆனால் யார் அப்படிப்பட்டக் கல்வியை அளித்து, கற்றுக்கொண்டவற்றை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த—தேவைப்பட்டால் அமல்படுத்தவும் முடியும்?
இப்படிப்பட்ட கல்வி பேராசைக்குத் தூரமாயிருக்கும் ஓர் ஊற்றுமூலத்திலிருந்து புறப்படுவதாயிருக்க வேண்டும். அப்படிப்பட்ட பயிற்றுவிப்புக்கு ஏதாவது உள்நோக்கமோ அல்லது கைமாறாக ஏதாவது எதிர்பார்ப்போ இருக்கக்கூடாது. கூடுதலாக, தன்னலமற்ற தன்மையின் மதிப்பும் நடைமுறையும் கற்பிக்கப்பட்டு செயல்முறையுடன் காண்பிக்கப்படவேண்டும். கற்றுக்கொள்ளுகிறவர், இப்படிப்பட்ட வாழ்க்கை முறை சாத்தியமானது மட்டுமின்றி, அதுவே விரும்பப்படும் ஒன்று, இது தனக்கும் தன்னைச் சூழ்ந்தவர்களுக்கும் நன்மைகளைக் கொண்டது என்பதை உறுதியாய் நம்ப வேண்டும்.
பரலோகக் கடவுள் மட்டுமே இப்படிப்பட்ட கல்வியை அளித்திட முடியும், ஏனென்றால் பூமியிலுள்ள எந்த மனிதன் அல்லது அமைப்பு இதற்கான தகுதியையும் பின்னணியையும் கொண்டிருக்க முடியும்? பைபிள் குறிப்பிடும் இந்த உண்மையின் அடிப்படையில் எல்லா மனிதருமே தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்: “எல்லாரும் பாவம் செய்து, தேவ மகிமையற்றவர்கள்.”—ரோமர் 3:23.
மகிழ்ச்சிக்குரிய காரியம், பரலோகத்தின் தேவனாகிய யெகோவா இப்படிப்பட்ட கல்வியை எழுதப்பட்ட தம்முடைய பாடநூலில், அல்லது பரிசுத்த பைபிளில் அளித்திருக்கிறார். அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இந்தப் பூமியில் மனிதனாக இருந்தபோது இப்படிப்பட்ட போதனையைக் கொடுத்தார். இயேசு ஆற்றிய புகழ்பெற்ற மலைப்பிரசங்கத்தின் இடையில், தம்முடைய சொற்பொழிவுக்குச் செவிகொடுத்துக்கொண்டிருந்த அநேகருக்கு விநோதமாகத் தொனித்த ஒரு வாழ்க்கை முறையைக் குறித்து பேசினார், ஏனென்றால் அது தன்னலமற்ற தன்மையைத் தழுவியது, ஒருவருடைய எதிராளிகள் அல்லது பகைவர்களிடையேயும் காண்பிக்கப்பட வேண்டிய ஒன்றாயிருந்தது. இயேசு சொன்னார்: “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; . . . உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதனால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும், அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்களை சிநேகிக்கிறவர்களை நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?”—மத்தேயு 5:44–46.
பூமியில் இயேசுவின் வேலையின் ஒரு பாகம் தன்னலமற்ற போதகர்களைப் பயிற்றுவிப்பதாயிருந்தது, இப்படியாக அவர்கள் இந்தப் பேராசை இல்லாத வாழ்க்கை வழியில் மற்றவர்களைப் பயிற்றுவிக்கக்கூடும். இயேசு மரித்து உயிர்த்தெழுந்ததற்குச் சற்று பின்னர், பவுல் அப்போஸ்தலன் அப்படிப்பட்ட போதகர்களில் ஒருவனானான். பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட அவனுடைய பல கடிதங்களில் பவுல் இந்தப் பேராசையை முற்றிலும் நீக்குவது பற்றித் துரிதப்படுத்தினான். உதாரணமாக அவன் எபேசியருக்கு இப்படியாக எழுதினான்: “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.”—எபேசியர் 5:3.
அதுபோல இன்றும் பேராசைக்குரிய மனச்சாய்வுகளை ஒடுக்கிடும்படியாக யெகோவாவின் சாட்சிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்பிக்கின்றனர். காலப்போக்கில், இவர்களுங்கூட அப்படிப்பட்ட தேவ வழிகளை மற்றவர்களுக்குக் கற்பிக்க தகுதிபெறுகிறார்கள்.
செயல்முறையில் பைபிள் சத்தியங்கள்
ஆனால் நீங்கள் இப்படியாகக் கேட்கக்கூடும்: ‘பேராசைப் பதிந்திருக்கும் அபூரண மனிதர்கள் அதைத் தங்களுடைய ஆள்தன்மையிலிருந்து வேரோடு களைந்தெடுத்திட முடியுமா?’ ஆம், அவர்களால் முடியும். பரிபூரணமாக முடியாது என்றாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முடியும். இதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
ஸ்பெய்ன் தேசத்தில் திருடனாயிருந்த ஒரு குற்றவாளி இருந்தான். அவனுடைய வீடு முழுவதும் திருட்டுப் பொருட்களால் நிறைந்திருந்தது. பின்பு அவன் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளை படிக்க ஆரம்பித்தான். இதனால் அவனுடைய மனச்சாட்சி அவனைத் தொல்லைப்படுத்தியது, எனவே தான் திருடிய பொருட்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் திருப்பிக் கொடுக்க தீர்மானித்தான். தன்னை வேலையில் அமர்த்திய முன்னாள் முதலாளியை அணுகி, அவரிடமிருந்து சலவை இயந்திரத்தைத் திருடியதாக அறிக்கை செய்தான். அவனுடைய மனமாற்றத்தைக் கண்டு அதிகம் கவர்ந்திழுக்கப்பட்டவராய் அந்த முதலாளி காவல் துறையிடம் அறிவிக்க விரும்பாமல், அந்தச் சலவை இயந்திரத்திற்குரிய தொகையைக் கொடுத்துவிடுவதன் மூலம் ஈடுசெய்துவிட அனுமதித்தார்.
பின்பு, மனமாறிய திருடன் தான் முன்பு திருடிய பொருட்களின் உரிமையாளர்களை ஞாபகப்படுத்தி, அவற்றை அவர்களிடம் ஒப்படைத்துவிட தீர்மானித்தான். அவன் சந்திக்கச் சென்ற அனைவருமே அவன் பைபிள் நியமங்களைப் பொருத்தியதால் இந்தளவுக்கு மனநிலையில் மாற்றத்தைச் செய்திருப்பது கண்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.
இப்பொழுது அவன் ஓர் இக்கட்டான நிலைமையை எதிர்ப்பட்டான். தன்னிடம் எஞ்சியிருந்த பொருட்கள் பலவற்றின் சொந்தக்காரர்கள் யாவர் என்பதை அறியாதிருந்தான். எனவே, யெகோவாவிடம் ஜெபித்த பின்பு, அவன் காவல்துறைத் தலைமையகத்திற்குச் சென்று, தான் கார்களிலிருந்து திருடிய ஆறு ஸ்டீரியோ ரேடியோக்களை ஒப்படைத்தான். அவன் அவர்களுடன் சுத்தமான ஒரு பதிவைக் கொண்டிருந்ததால் காவல் துறையினர் அவன் செயலைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அவன் ஓர் அபராதத்தைச் செலுத்தவும், சிறிது காலத்துக்குச் சிறைத் தண்டனையை அனுபவிக்கவும் வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தனர்.
யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய சபையின் ஒரு பாகமாயிருப்பதற்குக் குற்றச்செயலும் பேராசையும் கொண்ட ஒரு வாழ்க்கையைக் கைவிட்டவனாய், இந்த முன்னாள் திருடன் இப்பொழுது ஒரு சுத்தமான மனச்சாட்சியைக் கொண்டிருக்கிறான்.
இதுபோன்ற ஆயிரக்கணக்கான உதாரணங்களை உடனடியாகக் கொடுக்கலாம். தங்களுடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட மாற்றங்களைச் செய்திருப்போர் இப்பூமியின் குடிகளில் ஒரு சிறுபான்மையினராகவே இருந்தாலும், அநேகர் இப்படிச் செய்திருப்பதுதானே பைபிள் நியமங்களை அறிந்து அவற்றைப் பொருத்துவதனால் ஏற்படும் நற்பலன்களை விளக்குகிறது.
ஆண்டுகள் கடந்திட, அதிகமதிகமான ஆட்கள் இந்த வாழ்க்கை வழியைத் தழுவிக்கொள்கின்றனர். பூமி முழுவதும் யெகோவாவின் சாட்சிகளுடைய 60,000-ற்கும் மேற்பட்ட சபைகளில் பைபிள் போதனைகள் கொடுக்கப்பட்டுவருகிறது. சாட்சிகள் இந்தச் சமயத்தில் உலக முழுவதையும் மாற்றும், இப்பொழுது வாழும் கோடிக்கணக்கான மக்கள் மத்தியிலிருந்து பேராசையை நீக்கிவிடும், எதிர்பார்ப்பைக் கொண்டில்லை. என்றபோதிலும், வெகு விரைவில் பேராசை இல்லாத ஒரு வாழ்க்கை உலகமுழுவதும் இருக்கும் என்று பைபிள் தீர்க்கதரிசனம் சுட்டிக்காட்டுகிறது!
பேராசை இல்லாத ஒரு புதிய உலகம்
வரப்போகும் புதிய உலகில் பேராசைக்கும் தன்னலத்துக்கும் இடம் இராது. நீதி என்பது “புதிய வானங்க”ளின் ஒரு சிறப்புக் குறியாக மட்டும் இல்லாமல் “புதிய பூமி”யின் சிறப்புக் குறியாகவும் இருக்கும் என்று பேதுரு உறுதியளிக்கிறான். (2 பேதுரு 3:13) நோய், துக்கம், மற்றும் மரணமும் ஒழிந்துபோயிருக்கும் “முந்தினவைகளில்” பேராசையும் இடம்பெறும்.—வெளிப்படுத்துதல் 21:4.
எனவே, இன்று நம்மைச் சூழ ஏற்றம் காணும் பேராசை மற்றும் தன்னலம் மிகுந்த வாழ்க்கை முறை கண்டு நீங்கள் வருந்துகிறீர்களென்றால், திடன் கொள்ளுங்கள்! விரையில் உண்மையாயிருக்கப்போகும் புதிய உலகுக்காக வாழ இப்பொழுதே ஆரம்பியுங்கள். கடவுளுடைய உதவியால் உங்கள் சொந்த வாழ்க்கையில் பேராசையை ஒழித்திட கடினமாக உழைத்திடுங்கள். கிறிஸ்தவ வாழ்க்கை மூலம் இப்பொழுதே அனுபவித்து மகிழும் நன்மைகளைக் காண உதவுவதில் சேர்ந்துகொள்ளுங்கள். விரும்பப்படாத ஏராளமான காரியங்களில் பேராசையும் ‘இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை’ என்ற யெகோவா தேவனின் வாக்குறுதியில் விசுவாசமும் நம்பிக்கையுமுள்ளவர்களாய் இருங்கள்.—ஏசாயா 65:17. (w90 2/15)
[பக்கம் 5-ன் படம்]
இயேசு தன்னலமற்ற தன்மையை முன்னேற்றுவிக்கும் ஒரு வாழ்க்கை முறையைக் குறித்துப் பேசினார்—பேராசையுள்ள ஒன்றையல்ல
[பக்கம் 7-ன் படம்]
விரைவில்—பேராசை இல்லாத ஓர் உலகம்