பேராசை என்னும் கண்ணியைத் தவிர்ப்பதில் வெற்றிபெறுங்கள்
“ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும் . . . விழுகிறார்கள்.” —1 தீமோத்தேயு 6:9.
1. நாம் ஏன் கண்ணிகளைப்பற்றி அக்கறையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்?
“கண்ணி” என்ற வார்த்தை, தீங்கை எதிர்ப்பார்க்காத இரை விலங்கைப் பிடிப்பதற்காக ஒரு வேடன் அமைக்கும் ஏமாற்றுக் கருவியை உங்கள் மனதிற்குக் கொண்டுவரக்கூடும். இருப்பினும், அப்படிப்பட்ட சொல்லர்த்தமான கண்ணிகள் அல்ல, ஆனால் நம்மை ஆவிக்குரிய அல்லது ஒழுக்கரீதியில் சிக்கவைக்கக்கூடியவையே மிக ஆபத்தான கண்ணிகள் என்று கடவுள் நமக்குத் தெளிவாக்குகிறார். அப்படிப்பட்ட கண்ணிகளை அமைப்பதில் பிசாசு திறமைசாலியாக இருக்கிறான்.—2 கொரிந்தியர் 2:11; 2 தீமோத்தேயு 2:24-26.
2. (அ) ஆபத்தான கண்ணிகளைத் தவிர்ப்பதற்கு யெகோவா நமக்கு எப்படி உதவிசெய்கிறார்? (ஆ) எந்தக் குறிப்பிட்ட வகையான கண்ணி இப்போது கவனத்திற்கு வருகிறது?
2 சாத்தானுடைய அநேக, பல்வகைப்பட்ட கண்ணிகளில் சிலவற்றை அடையாளங்கண்டுணரச் செய்வதன்மூலம் யெகோவா நமக்கு உதவுகிறார். உதாரணமாக, நாம் ஞானமற்ற விதத்தில், துணிச்சலாக, அல்லது நாம் பேசக்கூடாததைக் குறித்துப் பேசுவது நம்முடைய உதடுகளுக்கு, அல்லது வாய்க்கு, ஒரு கண்ணியாக இருக்கலாம் என்று கடவுள் எச்சரிக்கிறார். (நீதிமொழிகள் 18:7; 20:25) கோப சுபாவமுள்ள மக்களுடன் தோழமை கொண்டிருப்பது கண்ணியாக இருப்பது போலவே பெருமையும் ஒரு கண்ணியாக இருக்கலாம். (நீதிமொழிகள் 22:24, 25; 29:25) ஆனால் நாம் மற்றொரு கண்ணிக்குக் கவனம் செலுத்துவோம்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:9) அந்தக் கண்ணிக்குப்பின் இருப்பது என்ன என்பதை அல்லது அதன் அடிப்படையை “பேராசை” என்ற ஒரே வார்த்தையில் அடக்கலாம். செல்வந்தராகவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தோடு பேராசை அடிக்கடி தொடர்புபடுத்திக் காண்பிக்கப்பட்டாலும், உண்மையில், பேராசை அதிக அம்சங்களை உடைய ஒரு கண்ணியாக இருக்கிறது.
யெகோவா ஆபத்தைக்குறித்து எச்சரிக்கிறார்
3, 4. பேராசையைப்பற்றி பண்டைய மனித சரித்திரம் என்ன பாடத்தைக் கொண்டிருக்கிறது?
3 அடிப்படையாக, பேராசை என்பது பணம், ஆஸ்திகள், வல்லமை, பாலுறவு, அல்லது மற்றெந்த காரியங்களிலும் அதிகத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்ற மட்டுமீறிய அல்லது மிகுந்த ஆசையாக இருக்கிறது. பேராசை என்னும் கண்ணியால் ஆபத்திற்கு உள்ளாக்கப்படுபவர்களில் முதன்மையானவர்களாய் நாம் இல்லை. வெகு காலத்திற்குமுன், ஏதேன் தோட்டத்தில், முதலில் ஏவாளையும் பின்னர் ஆதாமையும் பேராசை சிக்கவைத்தது. ஏவாளைவிட வாழ்க்கையில் அதிக அனுபவமுடையவராய் இருந்த அவளுடைய துணை, யெகோவாவால் நேரடியாக போதிக்கப்பட்டவராக இருந்தார். கடவுள் ஒரு பரதீஸிய வீட்டைக் கொடுத்திருந்தார். மாசுப்படுத்தப்படாத நிலத்தில் விளைவிக்கப்பட்ட நல்ல மற்றும் பல்வகைப்பட்ட பேரளவான உணவை அவர்கள் அனுபவிக்க முடிந்தது. அவர்கள் பரிபூரண பிள்ளைகளைக் கொண்டிருந்து, முடிவில்லா காலத்திற்கு அவர்களோடு சேர்ந்து வாழவும், கடவுளைச் சேவிக்கவும் முடிந்திருக்கும். (ஆதியாகமம் 1:27-31; 2:15) எந்த மனிதனையும் திருப்தி செய்வதற்கு அது போதுமானதாகத் தோன்றாதா?
4 இருப்பினும், ஒருவர் போதுமானதைக் கொண்டிருப்பது, பேராசையை ஒரு கண்ணியாவதிலிருந்து தடுப்பதில்லை. ஏவாள், கடவுளைப் போலாகி, அதிக சுதந்திரத்தையும் தனக்கென சொந்த தராதரங்களையும் அமைத்துக்கொள்ளும் எதிர்நோக்கில் சிக்கவைக்கப்பட்டாள். என்ன விலையாக இருந்தாலும், ஆதாம் அவனுடைய அழகான துணைவியுடன் தொடர்ச்சியான தோழமையை விரும்பினான் எனத் தோன்றுகிறது. இந்தப் பரிபூரண மனிதர்கள்கூட பேராசையின் கண்ணிக்குள் சிக்கவைக்கப்பட்டனர் என்றால், பேராசை நமக்கு ஏன் ஆபத்தாக இருக்கக்கூடும் என்பதை நீங்கள் மதித்துணர முடியும்.
5. பேராசையின் கண்ணியைத் தவிர்ப்பது நமக்கு எவ்வளவு முக்கியமானது?
5 பேராசையால் சிக்கவைக்கப்படுவதற்கு எதிராக நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும், ஏனென்றால் அப்போஸ்தலன் பவுல் நம்மை எச்சரிக்கிறார்: “அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், [பேராசைக்காரரும், NW] . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:9, 10) பவுல் இவ்வாறும் நமக்குச் சொல்கிறார்: “வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் [பேராசையும், NW] ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.” (எபேசியர் 5:3) ஆகவே, நம்முடைய அபூரண மாம்சத்தை மகிழ்விக்கும் நோக்கத்திற்காக, பேராசை நம் சம்பாஷணைக்குரிய பேச்சுப்பொருளாகக்கூட இருக்கக்கூடாது.
6, 7. (அ) பேராசை எவ்வளவு வல்லமையாக இருக்கலாம் என்பதை என்ன பைபிள் உதாரணங்கள் அழுத்திக் காட்டுகின்றன? (ஆ) அந்த உதாரணங்கள் ஏன் நமக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்?
6 பேராசையின் ஆபத்திற்கு நம்மை விழிப்புடன் வைப்பதற்குப் பல உதாரணங்களை யெகோவா நமக்குப் பதிவுசெய்து வைத்திருக்கிறார். ஆகானின் பேராசையை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். எரிகோ அழிக்கப்படும், ஆனால் அதன் பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இரும்பும் அவருடைய பொக்கிஷத்திற்கு என்று கடவுள் சொன்னார். அந்தக் கட்டளையைப் பின்பற்றவேண்டும் என்றே ஆகான் முதலில் நினைத்திருக்கக்கூடும், ஆனால் பேராசை அவனைச் சிக்கவைத்தது. அவன் எரிகோவுக்குச் சென்றதும், அது அவனுக்குப் பொருட்களை வாங்குவதற்காகச் சென்ற ஒரு பயணத்தைப்போல் தோன்றிற்று; அங்கே அவனுக்கே உரியதாகத் தோன்றிய ஓர் அழகான உடை உட்பட நம்பமுடியாத அளவிற்கு மலிவான பேரம்பேச்சுகளைக் கண்டான். ஆயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக்கொண்டு, அவன் நினைத்திருக்கக்கூடும், ‘என்னே ஓர் அதிர்ஷ்டம்! திருடியதைப்போன்ற அளவிற்கு அவ்வளவு மலிவாகக் கிடைத்திருக்கிறது.’ உண்மையில் அது திருட்டுதான்! அழிக்கப்பட வேண்டிய அல்லது கொடுக்கப்பட வேண்டியவற்றை இச்சித்து எடுத்துக்கொள்வதன்மூலம், அவன் கடவுளிடமிருந்து திருடினான்; அதற்கு ஆகான் தன்னுடைய உயிரை விலையாக்க வேண்டியிருந்தது. (யோசுவா 6:17-19; 7:20-26) கேயாசி மற்றும் யூதாஸ் காரியோத்தின் உதாரணங்களையும் சிந்தியுங்கள்.—2 இராஜாக்கள் 5:8-27; யோவான் 6:64; 12:2-6.
7 மேற்குறிப்பிடப்பட்ட மூவரும் யெகோவாவின் தராதரங்களை அறியாமலிருந்த புறமதத்தினராக இல்லை என்ற உண்மையை நாம் கவனிக்கத் தவறிவிடக்கூடாது. மாறாக, அவர்கள் கடவுளுடன் ஓர் ஒப்புக்கொடுக்கப்பட்ட உறவில் இருந்தனர். அவர்கள் அனைவரும் அற்புதங்களைக் கண்கூடாகக் கண்டிருக்கின்றனர்; அது கடவுளுடைய வல்லமையையும் அவருடைய தயவைக் காத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர்களில் பதியச் செய்திருக்க வேண்டும். இருந்தாலும், அவர்களுடைய அழிவுக்குக் காரணம் பேராசை என்னும் கண்ணியாக இருந்தது. எந்த விதமான பேராசையாலும் சிக்கவைக்கப்பட அனுமதிப்போமானால், நாமும் கடவுளுடனிருக்கும் நம் உறவைக் கெடுத்துக்கொள்வோம். பேராசையின் என்ன விதங்கள் அல்லது வகைகள், குறிப்பாக நமக்கு ஆபத்தானதாக இருக்கக்கூடும்?
செல்வம் அல்லது ஆஸ்திகளுக்கான பேராசையால் சிக்கவைக்கப்படுதல்
8. செல்வத்தைப்பற்றி பைபிள் நமக்கு என்ன எச்சரிக்கையைக் கொடுக்கிறது?
8 பணத்திற்கான ஒரு பிரியத்தை, செல்வத்திற்கான ஓர் ஏக்கத்தை வளர்ப்பதற்கு எதிராக பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பைபிளிலிருந்து தெளிவான எச்சரிக்கைகளைக் கேட்டிருக்கின்றனர். மத்தேயு 6:24-33; லூக்கா 12:13-21; மற்றும் 1 தீமோத்தேயு 6:9, 10-ல் காணப்படுகிறபடி, நாம் ஏன் அவற்றில் சிலவற்றை மறுபடியும் கவனிக்கக்கூடாது? அப்படிப்பட்ட ஆலோசனையை ஏற்று, பின்பற்றுவதாக நீங்கள் உணர்ந்தாலும், ஆகான், கேயாசி, மற்றும் யூதாஸ் காரியோத்தும் அவற்றை ஒத்துக்கொள்வதாகச் சொல்லியிருப்பார்கள் அல்லவா? தெளிவாக, நாம் வெறும் அறிவுப்பூர்வமாக ஒத்துக்கொள்வதற்கு அப்பால் செல்ல வேண்டும். நம்முடைய தினசரி வாழ்க்கையை செல்வம் அல்லது ஆஸ்திகளுக்கான பேராசையின் கண்ணி பாதிக்காமல் இருக்கும்படி நாம் கவனமாக இருக்கவேண்டும்.
9. பொருட்களை வாங்கச் செல்லும் நம்முடைய மனநிலையைப்பற்றி நாம் ஏன் சோதிக்கவேண்டும்?
9 தினசரி வாழ்க்கையில், நாம் அடிக்கடி பொருட்களை—உணவு, துணிகள், மற்றும் வீட்டிற்கான மற்ற பொருட்கள்—வாங்கவேண்டிதாய் இருக்கிறது. (ஆதியாகமம் 42:1-3; 2 இராஜாக்கள் 12:11, 12; நீதிமொழிகள் 31:14, 16; லூக்கா 9:13; 17:28; 22:36) ஆனால் வியாபார உலகம் அதிகத்திற்கான, புதிய காரியங்களுக்கான ஓர் ஆசையைத் தூண்டுகிறது. செய்தித்தாள்கள், பத்திரிகைகள், மற்றும் டிவி திரைகளை நிரப்பும் பல விளம்பரங்கள் பேராசையைத் தூண்டுவதற்கான ஏமாற்றுக் கவர்ச்சிகளே ஆகும். அத்தகைய கவர்ச்சிகள் கடைகளில், சட்டைகள், மேற்சட்டைகள், மேலுடைகள், கம்பளிச் சட்டைகளின் அடுக்குகளிலும், புதிய காலணிகள், மின்னணுவியக்க கருவிகள், காமராக்களாலான அடுக்குகளிலும் காணப்படக்கூடும். கிறிஸ்தவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ளக்கூடும், ‘பொருட்களை வாங்கச் செல்லுதல் என்னுடைய வாழ்க்கையின் சிறப்பு அம்சமாக அல்லது முதன்மையான இன்பமாக ஆகிவிட்டதா?’ ‘நான் பார்க்கும் புதிய காரியங்கள் உண்மையில் எனக்குத் தேவையா, அல்லது வியாபார உலகம் பேராசையின் விதைகளை என்னில் வளம்பெறச் செய்கிறதா?’—1 யோவான் 2:16.
10. பேராசையின் என்ன கண்ணி குறிப்பாக ஆண்களுக்கு ஓர் ஆபத்தானதாக இருக்கிறது?
10 பொருட்களை வாங்கச் செல்லுதல், பெண்களுக்குப் பொதுவான ஒரு கண்ணியாகத் தோன்றுகிறதென்றால், அதிக பணத்தைப் பெறுவது எண்ணற்ற ஆண்களுக்கு ஒரு கண்ணியாக இருக்கிறது. ஒரு பணக்கார மனிதன், ஒரு நல்ல வருவாயைக் கொண்டிருந்தபோதிலும், ‘தன்னுடைய களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, தனக்கு விளைந்த தானியத்தையும் பொருட்களையும் அங்கே சேர்த்துவைக்கத்’ தீர்மானமாயிருந்ததை வைத்து இந்தக் கண்ணியைப்பற்றி இயேசு விளக்கினார். அந்த ஆபத்தைக்குறித்து இயேசு எந்தச் சந்தேகத்தையும் விட்டுவைக்கவில்லை: “பொருளாசையைக்குறித்து” அல்லது பேராசையைக்குறித்து “எச்சரிக்கையாயிருங்கள்.” (லூக்கா 12:15-21) நாம் பணக்காரராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாம் அந்த அறிவுரைக்குக் கவனம் செலுத்தவேண்டும்.
11. ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு அதிக பணத்திற்கான பேராசையில் சிக்கவைக்கப்படக்கூடும்?
11 அதிக பணம், அல்லது பணம் வாங்கக்கூடிய காரியங்களுக்கான பேராசை பெரும்பாலும் ஏமாற்றம் என்னும் போர்வையில் வளர்க்கப்படுகிறது. சீக்கிரமாகப் பணக்காரராவதற்கான ஒரு திட்டம் அளிக்கப்படக்கூடும்—ஒருவேளை ஓர் அபாயகரமான முதலீட்டின் மூலம் நிதிசம்பந்தமான பாதுகாப்பிற்காக வாழ்க்கையில் ஒரே ஒருமுறை கிடைக்கும் வாய்ப்பாக அது இருக்கலாம். அல்லது கேள்விக்குரிய அல்லது சட்டவிரோதமான வியாபார பழக்கவழக்கங்களால் பணம் சம்பாதிக்க ஒருவர் சோதிக்கப்படலாம். இந்தத் தகாத பேராசை அடக்கி ஆட்கொள்ளுவதாக, சிக்கவைப்பதாக ஆகக்கூடும். (சங்கீதம் 62:10; நீதிமொழிகள் 11:1; 20:10) கிறிஸ்தவ சபையிலுள்ள சிலர், தங்களுடைய நம்பகரமான சகோதரர்கள் தங்கள் முக்கிய வாடிக்கையாளராக இருப்பர் என்னும் எதிர்பார்ப்புடன் வியாபாரத் தொழில்களை ஆரம்பித்துள்ளனர். அவர்களுடைய நோக்கம் வெறுமனே ஒரு தேவையான பொருளை அல்லது சேவையை ‘தன் கைகளினால் நலமான வேலை செய்து பிரயாசப்பட வேண்டும்’ என்று இல்லாமல் உடன் கிறிஸ்தவர்களின் செலவில் அவசரமாகப் பணம் சம்பாதிப்பதாக இருந்தால், அவர்கள் பேராசையாலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். (எபேசியர் 4:28; நீதிமொழிகள் 20:21; 31:17-19, 24; 2 தெசலோனிக்கேயர் 3:8-12) பணத்திற்கான பேராசை சிலரைக் குலுக்குச் சீட்டுகள், குதிரைப்பந்தயம், அல்லது லாட்டரிகள் போன்ற சூதாட்டங்களுக்கு வழிநடத்தி இருக்கிறது. மற்றவர்கள் ஒரு பெரிய வெகுமதியை அல்லது தீர்வுப்பணத்தைப் பெறும் நம்பிக்கைகளில் ஒற்றுணர்வையும், நியாயத்தன்மையையும் புறக்கணித்து, அவசரமாக வழக்குகளைத் தொடுத்திருக்கின்றனர்.
12. செல்வத்திற்கான பேராசையை மேற்கொள்ளலாம் என்று நாம் ஏன் அறிந்திருக்கிறோம்?
12 மேற்சொல்லப்பட்ட அம்சங்கள், நம்மில் பேராசை கிரியை செய்கிறதா என்று நம்மைநாமே நேர்மையாகச் சோதித்துப் பார்ப்பதற்குப் பொருத்தமானவை. அவ்வாறு இருந்தாலுங்கூட, நாம் மாற்றிக்கொள்ளலாம். சகேயு மாற்றிக்கொண்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (லூக்கா 19:1-10) செல்வத்திற்கு அல்லது ஆஸ்திகளுக்கான பேராசையை ஒரு பிரச்னையாக ஒருவர் கண்டால், அந்தக் கண்ணியிலிருந்து தப்புவதற்காக சகேயு எந்தளவிற்கு உறுதியான தீர்மானத்துடன் இருந்தாரோ, அவ்வாறு அவர் இருக்கவேண்டும்.—எரேமியா 17:9.
வாழ்க்கையின் மற்ற அம்சங்களில் பேராசை
13. சங்கீதம் 10:18 என்ன மற்றொரு வகையான பேராசைக்கு நம் கவனத்தை ஈர்க்கிறது?
13 சிலர் பேராசையின் அபாயத்தை அது காணப்படும் மற்ற வழிகளில் காண்பதைவிட பணம் மற்றும் ஆஸ்திகளைப் பொருத்தவரையில் எளிதாகக் காண்கின்றனர். “பேராசை” அல்லது “பொருளாசை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை தொகுதிகள், “அதிகாரம் போன்றவை மற்றும் சொத்து ஆகியவற்றின் சம்பந்தத்தில் ‘அதிகத்தை விரும்பும்’” என்ற பொருளைக் கொண்டிருப்பதாக ஒரு கிரேக்க அகராதி சொல்கிறது. ஆம், நாம் மற்றவர்களின்மீது வல்லமை செலுத்துவதற்கு, ஒருவேளை நம்முடைய அதிகாரத்தின்கீழ் அவர்களை நடுங்கச்செய்வதற்கு பேராசையுடன் விரும்புவதன்மூலம் சிக்கவைக்கப்படலாம்.—சங்கீதம் 10:18.
14. எந்தக் காரியங்களில், வல்லமைக்கான ஆசை கேடு விளைவிப்பதாய் இருந்திருக்கிறது?
14 ஆரம்ப நாட்கள் முதற்கொண்டே அபூரண மனிதர் மற்றவர்கள்மீது வல்லமை செலுத்துவதை அனுபவித்துக்களித்திருக்கின்றனர். மனித பாவத்தின் ஒரு துக்ககரமான விளைவு, அநேக கணவன்மார் தங்கள் மனைவிகளை “ஆண்டுகொள்ளு”தல் என்று கடவுள் முன்னறிந்தார். (ஆதியாகமம் 3:16) எனினும் இந்தத் தவறு, திருமண காட்சிக்கும் அப்பால் சென்றுவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப்பின், ஒரு பைபிள் எழுத்தாளர், “ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுண்டு” என்று குறிப்பிட்டார். (பிரசங்கி 8:9) அரசியல் மற்றும் இராணுவ காரியங்களில், அது எவ்வளவு உண்மையாக இருந்திருக்கிறது என்று நீங்கள் ஒருவேளை அறிந்திருப்பீர்கள்; ஆனால் நாம் செல்வாக்குச் செலுத்தக்கூடிய பகுதிகளில் நாம் அதிக தனிப்பட்ட அதிகாரத்திற்கும் கட்டுப்படுத்தலுக்கும் முயலுவதாக இருக்கக்கூடுமா?
15, 16. ஒரு கிறிஸ்தவன் என்ன வழிகளில் அதிக அதிகாரத்திற்கான ஆசையில் சிக்கவைக்கப்படக்கூடும்? (பிலிப்பியர் 2:3)
15 நாம் எல்லாருமே மற்ற மனிதருடன் தொடர்பு கொள்கிறோம்—நமக்கு நெருங்கிய அல்லது தூரத்து உறவினர்களிடம், நம்முடைய வேலை செய்யுமிடத்தில் அல்லது பள்ளியில், நண்பர்கள் மத்தியில் மற்றும் சபையில். அவ்வப்போது அல்லது அடிக்கடி, என்ன செய்யப்படும், எப்போது அல்லது எப்படி செய்யப்படும் என்பதைக்குறித்து தீர்மானிக்கும் பங்கை நாம் கொண்டிருக்கக்கூடும். அதுதானே தவறானதாக அல்லது கெட்டதாக இல்லை. ஆனாலும், நமக்கிருக்கும் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்துவதில் மட்டுமீறிய மகிழ்ச்சியை அடைகிறோமா? நாமே கடைசி தீர்மானத்தை எடுப்பதை விரும்பி அதை மேலும் மேலுமாக விரும்புவதாக இருக்கலாமா? உலகப்பிரகாரமான மேலாளர்கள் அல்லது அதிகாரிகள், கருத்துவேறுபாடுகளைத் தெரிவிக்காத, தங்களுடைய மேலதிகாரிகளின் அதிகாரத்திற்கான உலகப்பிரகாரமான தேடுதலுக்கு (பேராசைக்கு) சவாலாக இல்லாத, ஆம் என்று சொல்லும் மனிதரால் சூழ்ந்திருக்கப்படுவதை விரும்புவதன்மூலம் இந்த மனநிலையைக் காண்பிக்கின்றனர்.
16 உடன் கிறிஸ்தவர்களுடன் நம்முடைய செயல்தொடர்புகளில் நாம் தவிர்க்கவேண்டிய கண்ணியாக இது இருக்கிறது. இயேசு சொன்னார்: “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.” (மத்தேயு 20:25, 26) கிறிஸ்தவ மூப்பர்கள் ஒருவரோடொருவரும், உதவி ஊழியர்களுடனும், மந்தையுடனும் செயல்தொடர்பு கொள்ளுகையில் அப்படிப்பட்ட மனத்தாழ்மை காணப்படவேண்டும். உதாரணமாக, ஒரு நடத்தும் கண்காணி சக மூப்பர்களுடன் சிறிய காரியங்களுக்கு மட்டும் ஆலோசனை கேட்டு ஆனால் எல்லா முக்கிய தீர்மானங்களையும் தானே சொந்தமாக எடுத்தால், அதிகாரத்திற்கான ஓர் ஆசை பிரதிபலிக்கப்படுமா? அவர் உண்மையிலே வேலைகளை மற்றவர்களுக்கு ஒப்படைக்க மனமுள்ளவராய் இருக்கிறாரா? வெளி ஊழியத்திற்கான கூட்டத்தைக் கையாளும் ஓர் உதவி ஊழியர் தன்னுடைய ஏற்பாடுகளில் நியாயமற்ற விதத்தில் அதிகத்தைக் கேட்பவராகவும், சட்டங்களை ஏற்படுத்துபவராகவும் இருந்தால் பிரச்னைகள் விளையக்கூடும்.—1 கொரிந்தியர் 4:21; 9:18; 2 கொரிந்தியர் 10:8; 13:10; 1 தெசலோனிக்கேயர் 2:6, 7.
17. பேராசையின் கண்ணியைக்குறித்து கலந்தாலோசிக்கையில் உணவைப்பற்றி கவனிப்பது ஏன் பொருத்தமானதாக இருக்கிறது?
17 அநேகர் பேராசையில் சிக்கவைக்கப்படும் மற்றொரு அம்சம் உணவாகும். சந்தேகமின்றி, உண்ணுவதிலும் குடிப்பதிலும் மகிழ்ச்சியைக் காண்பது இயல்பானதே; பைபிள் அதைக்குறித்து ஏற்கத்தக்கதாகப் பேசுகிறது. (பிரசங்கி 5:18) இருந்தாலும், இதன் தொடர்பாக ஒரு காலப்பகுதிக்குப்பின் ஆசை வளர்ந்து, நியாயமாக அனுபவிப்பதற்கும் போதுமானதற்கும் மிக அதிகமாக விரிவடைவது அசாதாரணமானது அல்ல. கடவுளுடைய ஊழியர்கள் அக்கறை கொள்வதற்கு இது பொருத்தமான பகுதியாக இல்லாவிட்டால், யெகோவாவின் வார்த்தை நீதிமொழிகள் 23:20-ல் “மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே” என்று ஏன் சொல்ல வேண்டும்? இருப்பினும், நாம் இந்தக் கண்ணியை எப்படித் தவிர்ப்போம்?
18. உணவையும் பானத்தையும் குறித்த என்ன சுய பரிசோதனையை நாம் செய்யக்கூடும்?
18 கடவுள், தம்முடைய மக்கள் ஏதோவொரு எளிமையான உணவு திட்டத்தில் வாழவேண்டும் என்பதாகக் குறிப்பிடவில்லை. (பிரசங்கி 2:24, 25) ஆனால், அதேநேரத்தில் நம்முடைய சம்பாஷணை மற்றும் திட்டமிடுதலில் உணவையும் பானத்தையும் ஒரு முக்கிய பாகம் வகிக்கச் செய்வதையும் அவர் அங்கீகரிப்பதில்லை. நாம் நம்மைநாமே கேட்டுக்கொள்ளக்கூடும், ‘நான் அனுபவித்த அல்லது அனுபவிக்க திட்டமிட்டிருக்கிற குறிப்பிட்ட உணவைப்பற்றி விவரிக்கையில் நான் பெரும்பாலும் அளவுக்கதிக ஆர்வமுடையவனாகிறேனா?’ ‘நான் எப்போதும் உணவையும் பானத்தையும்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேனா?’ நாம் தயாரிக்காத அல்லது நாம் பணம்கொடுத்து வாங்கியிராத உணவை, ஒருவேளை இன்னொருவர் வீட்டிற்கு ஒரு விருந்தினராகச் செல்லுகையில் அல்லது ஒரு கிறிஸ்தவ அசெம்பிளிக்குச் செல்கையில் சாப்பிடும்போது, நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம் என்பது சுட்டிக்காட்டக்கூடிய மற்றொரு அடையாளக்குறிப்பாகும். அப்போது நாம் சாதாரணமாகச் சாப்பிடுவதைவிட அதிகத்தைச் சாப்பிடும் மனச்சாய்வைக் கொண்டிருக்கிறோமா? தனக்கு நித்திய கேடு விளைவடையும்விதத்தில், உணவு தேவைக்கதிகமான முக்கியத்துவத்தைப் பெறும்படி ஏசா அனுமதித்தான் என்பதை நினைவுகூரலாம்.—எபிரெயர் 12:16.
19. பாலுறவு இன்பத்தைப்பற்றியதில் பேராசை எவ்வாறு ஒரு பிரச்னையாக இருக்க முடியும்?
19 பவுல் மற்றொரு கண்ணிக்கு உட்பார்வையை அளிக்கிறார்: “மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் [பேராசையும், NW] ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது.” (எபேசியர் 4:17-19; 5:3) உண்மையில், பாலுறவு இன்பத்திற்கான பேராசை வளரலாம். சந்தேகமின்றி, இந்த மகிழ்ச்சி, திருமணக் கட்டிற்குள் ஒரு பொருத்தமான வெளிக்காட்டுதலைக் கொண்டிருக்கிறது. இந்த இன்பத்துடன் தொடர்புடைய நெருங்கிய பாசம், கணவனும் மனைவியும் திருமணத்தில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரோடொருவர் பற்றுறுதியுடன் இருக்க உதவிசெய்வதில் ஒரு பாகம் வகிக்கிறது. இன்றைய உலகம், உண்மையில் பவுல் குறிப்பிட்ட பேராசையின் பிரதிபலிப்பாக இருப்பதை சாதாரணமானது என்பதாகக் காண்பித்து, பாலுறவிற்கு மட்டுமீறிய அழுத்தம் கொடுத்திருக்கிறது என்பதை வெகுசில மக்களே மறுப்பர். குறிப்பாக, பல திரைப்படங்கள், வீடியோக்கள், பத்திரிகைகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களிலும் இன்று சாதாரணமாக இருக்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் அம்மணத்திற்கும் தங்களை வெளிப்படுத்தியிருப்பவர்களால், பாலுறவு இன்பத்தைப்பற்றிய அப்படிப்பட்ட தவறான கருத்து எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
20. கிறிஸ்தவர்கள் பாலின காரியங்களில் பேராசையின் ஆபத்துக்கு விழிப்புடன் இருப்பவர்களாய் தங்களை எப்படிக் காண்பிக்க முடியும்?
20 கடவுளுடைய ஊழியர்களில் ஒருவர் பாலுறவுக்கான பேராசையின் கண்ணியில் சிக்கலாம் என்பதை பத்சேபாளுடன் தொடர்பு கொண்ட தாவீதின் பாவத்தைப்பற்றிய பதிவு காண்பிக்கிறது. தன்னுடைய சொந்த திருமணத்தில் இன்பத்தை அனுபவிப்பதற்கு உரிமையை உடையவராய் இருந்தபோதிலும், தாவீது முறைதவறிய பாலுறவிற்கான ஆசை வளர அனுமதித்தார். உரியாவின் மனைவி எவ்வளவு கவர்ச்சியானவளாய் இருக்கிறாள் என்று கவனித்ததும், தன்னுடைய எண்ணத்தை—செயலையும்—கட்டுப்பாடின்றி வளரவிட்டு அவளுடன் முறைதவறிய இன்பத்தைக் கண்டார். (2 சாமுவேல் 11:2-4; யாக்கோபு 1:14, 15) நிச்சயமாக, நாம் இந்த விதமான பேராசையைத் தவிர்க்கவேண்டும். திருமணத்திற்குள்ளுங்கூட பேராசையைத் தவிர்ப்பது பொருத்தமானதாய் இருக்கிறது. இது மட்டுமீறிய பாலுறவு பழக்கவழக்கங்களை நிராகரிப்பதை உட்படுத்தும். இந்த அம்சத்தில் பேராசையைத் தவிர்க்கத் தீர்மானமாயிருக்கும் ஒரு கணவன் தன்னுடைய துணையில் உண்மையான அக்கறையுடையவனாய் இருப்பான்; அப்படியென்றால், அவர்கள் இருவரும் குடும்பக் கட்டுப்பாட்டிற்காகச் செய்யும் எந்தத் தெரிவும், அவனுடைய மனைவியின் தற்போதைய அல்லது எதிர்கால ஆரோக்கியத்தைவிட தன்னுடைய இன்பத்தை மிக முக்கியமானதாகக் கருதியதாக இருக்காது.—பிலிப்பியர் 2:4.
பேராசையைத் தவிர்ப்பதற்குத் தீர்மானமுள்ளவர்களாய் தொடர்ந்திருங்கள்
21. பேராசையைப்பற்றின கலந்தாலோசிப்பு ஏன் நம்மை சோர்வடையச் செய்யக்கூடாது?
21 எந்த அவநம்பிக்கையின் காரணமாகவும் யெகோவா முன்னறிவிப்புகளை அல்லது எச்சரிக்கைகளைக் கொடுப்பதில்லை. அவருடைய பற்றுறுதியுள்ள ஊழியர்கள் அவரை உண்மைத்தவறாமல் சேவிக்க விரும்புகிறார்கள் என்று அவர் அறிந்திருக்கிறார்; பெரும் திரளானோர் அவ்வாறு தொடர்ந்திருப்பார்கள் என்று அவர் உறுதியுள்ளவராய் இருக்கிறார். தம்முடைய மக்கள் அனைவரையும் குறித்து, அவர் சாத்தானிடம் பேசியபோது யோபைக்குறித்து சொன்ன அதேவிதமான கூற்றைச் சொல்லலாம்: “என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை.” (யோபு 1:8) நம்முடைய அன்பான, நம்பிக்கையுள்ள பரலோகத் தகப்பன், பேராசையின் வகைகளுடன் தொடர்புடையவற்றைப் போன்ற ஆபத்தான கண்ணிகளுக்கு நம்மை எச்சரிக்கிறார், ஏனென்றால் நாம் கறையற்றவர்களாயும் அவருக்கு உண்மையுள்ளவர்களாயும் தொடரும்படி அவர் விரும்புகிறார்.
22 நாம் ஒவ்வொருவரும் பேராசையிடமான மனச்சாய்வை சுதந்தரித்திருக்கிறோம்; பொல்லாத உலகின் செல்வாக்கின்கீழ் இதை மேலுமாக வளர்த்திருக்கக்கூடும். பேராசையைப்பற்றிய நம்முடைய படிப்பில்—செல்வம், ஆஸ்திகள், வல்லமை மற்றும் அதிகாரம், உணவு அல்லது பாலுறவு இன்பத்தில்—ஏதாவது ஒரு பகுதியில் பலவீனத்தைக் கண்டால் என்ன செய்யலாம்? அப்போது இயேசுவின் ஆலோசனையை மனதில் கொள்ளுங்கள்: “உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.” (மாற்கு 9:43) மனநிலையில் அல்லது அக்கறைகளில் தேவைப்படும் எந்த மாற்றங்களையும் செய்யுங்கள். பேராசையின் பயங்கரமான கண்ணியைத் தவிருங்கள். இவ்வாறு கடவுளின் உதவியுடன், நீங்கள் ‘ஜீவனுக்குள் பிரவேசிக்கக்கூடும்.’
நான் என்ன கற்றுக்கொண்டேன்?
◻ நாம் ஏன் பேராசையின் கண்ணியைக்குறித்து அக்கறையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்?
◻ செல்வம் அல்லது ஆஸ்திகளுக்கான பேராசை என்ன விதங்களில் நம்மைச் சிக்கவைக்கக்கூடும்?
◻ வாழ்க்கையின் மற்ற அம்சங்களில் பேராசை எவ்வாறு உண்மையான ஆபத்துக்களை வருவிக்கக்கூடும்?
◻ பேராசையின் சம்பந்தத்தில் நமக்கிருக்கும் எந்தப் பலவீனங்களிடமாகவும் நம்முடைய மனநிலை என்னவாக இருக்கவேண்டும்?
22. நம்முடைய படிப்பு, தனிப்பட்ட ஆபத்து அல்லது பலவீனமிருக்கும் ஒரு பகுதியை வெளிப்படுத்தினால் நாம் என்ன செய்ய வேண்டும்?