உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w91 7/1 பக். 16-21
  • உண்மைத்தன்மை—அதன் கிரயம் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உண்மைத்தன்மை—அதன் கிரயம் என்ன?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உண்மைத்தன்மை முன்மாதிரியுடன் மெய்ப்பிக்கப்படுகிறது
  • கோத்திரப்பிதாக்கள் உண்மைத்தன்மையைப் பிரதிபலிக்கின்றனர்
  • கிறிஸ்தவ உண்மைத்தன்மை
  • உண்மைத்தன்மை—அதன் கிரயம் என்ன?
  • கிரயம் இல்லாத உண்மைத்தன்மை
  • உண்மைப் பற்றுறுதியுள்ளோரைப் பாருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • “நீங்கள் ஒருவர்தான் பற்றுமாறாதவர்”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • நீங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
w91 7/1 பக். 16-21

உண்மைத்தன்மை—அதன் கிரயம் என்ன?

“உண்மையாயிருப்பவரிடம் நீர் உண்மைத்தன்மையோடு செயல்படுகிறீர்.”—சங்கீதம் 18:25, NW.

1, 2. (எ) உண்மைத்தன்மை என்பது என்ன? அதன் பல்வேறு அம்சங்கள் எவ்வாறு நம்மைப் பாதிக்கிறது? (பி) நம்முடைய மிகச் சிறந்த முன்மாதிரியாக நாம் யெகோவாவை நோக்குவது ஏன் நல்லது?

உண்மையாயிருத்தல், கடமை, அன்பு, பொறுப்பு, பற்றுறுதி. இந்த வார்த்தைகள் பொதுவில் கொண்டிருப்பது என்ன? இவை உண்மைத்தன்மையின் பல்வேறு அம்சங்கள். உண்மைத்தன்மை ஒரு தெய்வீகப் பண்பு, இது இருதயப்பூர்வமான பக்தியிலிருந்து தோன்றுகிறது. என்றபோதிலும், இன்றுள்ள பலருக்கு உண்மைத்தன்மை அர்த்தமற்றதாயிருக்கிறது. விவாகத் துணைக்கு உண்மையாயிருத்தல், மூத்த குடும்ப அங்கத்தினருக்குக் கடமைப்பட்டிருத்தல், முதலாளியிடம் தொழிலாளி பற்றுறுதியுடன் நடந்துகொள்ளுதல்—இவை அனைத்துமே சாதாரணமாகக் கருதப்பட்டு அநேக சமயங்களில் விட்டுக்கொடுக்கப்படுகிறது. உண்மைத்தன்மைகளின் பேரில் ஒரு போராட்டம் ஏற்படும்போது என்ன சம்பவிக்கிறது? அண்மையில், இங்கிலாந்தில், ஒரு கணக்கர் வரி ஆய்வாளர்களிடம் தன்னுடைய கம்பெனியின் நிதி விவகாரம் பற்றிய உண்மையைத் தெரிவித்த போது, அவர் தன்னுடைய வேலையை இழந்தார்.

2 உண்மைத்தன்மையைக் குறித்துப் பேசுவது எளிது, ஆனால் மெய்யான உண்மைத்தன்மை பயந்து விட்டுக்கொடுக்கும் காரியத்தை உட்படுத்தாத செயல்களைக் கொண்டிருக்க வேண்டும். அபூரண மனிதர்களாக, இதில் அநேகமாக நாம் தோல்வியடைகிறோம். எனவே தம்முடைய உண்மைத்தன்மை எவ்விதத்திலும் கேள்விக்கிடமில்லாதிருக்கும் ஒருவருடைய, யெகோவா தேவனுடைய முன்மாதிரியைக் கவனிப்பது நல்லது.

உண்மைத்தன்மை முன்மாதிரியுடன் மெய்ப்பிக்கப்படுகிறது

3. ஆதியாகமம் 3:15-ல் தெரிவிக்கப்பட்டிருக்கும் தம்முடைய நோக்கத்திற்கு யெகோவா எவ்விதம் தம்முடைய உண்மைத்தன்மையை நிரூபித்திருக்கிறார்?

3 ஆதாம் பாவம் செய்தபோது, யெகோவா இன்னும் பிறவாத மனித குடும்பத்தை மீட்டுக்கொள்ளும் தம்முடைய நோக்கத்தை மிகவும் தெளிவாகத் தெரிவித்தார். அவர் மனித சிருஷ்டியினிடமாகக் கொண்டிருந்த அன்புதானே இந்தச் செயலுக்கு அடிப்படையாக இருந்தது. (யோவான் 3:16) உரிய காலத்தில், இயேசு கிறிஸ்து, ஆதியாகமம் 3:15-ல் முன்னறிவிக்கப்பட்ட வித்து, மீட்கும் கிரய பலியாக நிரூபித்தார், யெகோவா வெளிப்படுத்திய நோக்கத்தைச் செயல்படுத்தத் தவறுவது என்பதை அவர் எண்ணிப்பார்க்கலாகாது. இயேசுவின் பலியை ஏற்றுக்கொள்வதில், நம்முடைய விசுவாசம் ஏமாற்றத்திற்கு வழிநடத்தாது.—ரோமர் 9:33.

4. யெகோவா எவ்விதம் இயேசுவிடம் உண்மைத்தன்மையை நிரூபித்திருக்கிறார்? இதன் பலன் என்ன?

4 யெகோவா இயேசுவிடமாக உண்மைத்தன்மையைக் காண்பித்தது, குமாரன் பூமியில் இருந்த காலப்பகுதியில் அவரை அதிகமாகப் பலப்படுத்தியது. தாம் மரணத்தைச் சந்திக்க வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்தார். தம்முடைய கடவுளுக்குக் கடைசி வரைக்கும் உண்மையாயிருப்பது என்பது அவருடைய உறுதியான தீர்மானமாக இருந்தது. மனிதனாகப் பிறப்பதற்கு முன்பு இருந்த வாழ்க்கை பற்றிய முழு அறிவு அவருக்கு முழுக்காட்டுதல் மற்றும் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட சமயத்தில் வெளிப்படுத்தப்பட்டது. தாம் காட்டிக்கொடுக்கப்படும் அந்த இரவின்போது தம்முடைய பரம பிதாவிடம் மீண்டும் சேர்க்கப்படுவதற்காக, ‘உலகம் உண்டாகிறதற்கு முன்னே அவரிடத்தில் தனக்கு உண்டாயிருந்த மகிமையில்’ மீண்டும் சேர்க்கப்படுவதற்காக ஜெபித்தார். (யோவான் 17:5) இது எவ்விதம் கூடிய காரியமாயிருக்கப் போகிறது? தம்மிடமாக உண்மைத்தன்மையோடு நடந்துகொள்ளும் தம் குமாரனைப் பிரேத குழியில் அழிவைக் காணாமல் இருக்கச் செய்வதன் மூலம் மட்டுமே. யெகோவா அவரை மரணத்திலிருந்து அழியாமைக்கு உயிர்த்தெழுப்பினார். இப்படியாக உண்மையுள்ளவராக சங்கீதம் 16:10-ல் கூறப்பட்டிருக்கும் தீர்க்கதரிசன வாக்குறுதியை நிறைவேற்றுகிறவராயிருந்தார்: “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்.”—அப்போஸ்தலர் 2:24–31; 13:35; வெளிப்படுத்துதல் 1:18.

5. உண்மைத்தன்மை சார்ந்த வேறு என்ன செயல்கள் யெகோவா இயேசுவுக்கு கொடுத்த வாக்குகளுடன் சம்பந்தப்படுகின்றன?

5 அதுபோல, தம்முடைய உயிர்த்தெழுதலைத் தொடர்ந்து, ‘தம்முடைய சத்துருக்களைப் பாதபடியாக்கிப்போடும்’ யெகோவாவின் அந்த வார்த்தைகளைத் தாம் நம்பியிருக்கலாம் என்பதை இயேசு அறிந்திருந்தார். (சங்கீதம் 110:1) அந்த நேரம் 1914-ல், “புறஜாதியாருக்குக் குறிக்கப்பட்ட காலங்களின்” முடிவில், ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்படுவதோடு வந்தது. தம்முடைய சத்துருக்களுக்கு மேல் அரச அதிகாரம் பெறுவார் என்ற வாக்குத்தத்தம் சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பரலோகத்திலிருந்து தள்ளிவிடுவதுடன் ஆரம்பித்தது. அவர்கள் ஓர் ஆயிர ஆண்டுகளுக்கு அபிஸில் போடப்பட்டு “பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும்” அழிக்கப்பட்டிருக்கும் சமயம் அதன் உச்சக்கட்டமாயிருக்கும்.—லூக்கா 21:24; வெளிப்படுத்துதல் 12:7–12; 19:19; 20:1–3.

6. கடவுள் என்ன நிச்சய நம்பிக்கையை நமக்கு அளிக்கிறார்? அதற்கு நம்முடைய போற்றுதலை எவ்வாறு காண்பிக்கலாம்?

6 சங்கீதக்காரன் இப்படியாக ஊக்குவித்தான்: “யெகோவாவில் நம்பி அவருடைய வழியைக் கைக்கொள், அப்பொழுது அவர் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு உன்னை உயர்த்துவார்.” (சங்கீதம் 37:34, NW) யெகோவா தம்முடைய வார்த்தையைத் தொடர்ந்து காத்துவருவார், இந்தப் பொல்லாத உலகின் முடிவுபரியந்தம் தம்முடைய “வழியைக் கைக்கொள்”ளும் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் அவர் மீட்டருள்வார் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். பூர்வ எபிரெயு மொழியில் அந்தத் தொடர், யெகோவாவைச் சேவிப்பதில் ஊக்கமுடனும் உண்மையுடனும் இருக்கும் கருத்தைக் கொண்டிருக்கிறது. எனவே, இது சோர்ந்துவிடுவதற்கும் அல்லது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஊழிய சிலாக்கியங்களை விட்டுவிடுவதற்குமான நேரம் இல்லை. நம்முடைய கடவுளுக்கும் அவருடைய ராஜ்யத்துக்கும் நாம் செய்யும் உண்மையுள்ள சேவையில் நம்மை மும்முரமாக ஈடுபடுத்திக்கொள்வதற்குரிய நேரமாக இது இருக்கிறது. (ஏசாயா 35:3, 4) நம்மை உற்சாகப்படுத்துவதற்கு நல்ல முன்மாதிரிகள் உண்டு. அவற்றில் சிலவற்றைக் கவனிப்போம்.

கோத்திரப்பிதாக்கள் உண்மைத்தன்மையைப் பிரதிபலிக்கின்றனர்

7, 8. (எ) யெகோவா நோவாவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் என்ன வேலை பொறுப்பை அளித்தார்? (பி) பூகோள அளவில் ஏற்பட்ட அந்த ஜலப்பிரளயத்தின் போது நோவாவின் குடும்பம் எவ்விதம் கடவுளுடைய பாதுகாப்புக்குப் பாத்திரமுள்ளவர்களாகத் தங்களை நிரூபித்தனர்?

7 யெகோவா ஜலப்பிரளயத்தால் ஒரு பொல்லாத மனித சமுதாயத்தை அழிப்பதற்கு எத்தனித்தபோது, நோவாவின் குடும்பம் பாதுகாக்கப்படுவது மற்றும் பூமியில் உயிர்வாழ்வு தொடருவதன் சம்பந்தமாக அவர் இந்தக் கோத்திரப்பிதாவுடன் ஓர் உடன்படிக்கை செய்தார். (ஆதியாகமம் 6:18) தெய்வீக பாதுகாப்பின் எதிர்பார்ப்புக்காக நோவா அதிக நன்றியுள்ளவனாயிருந்தான், ஆனால் அவனும் அவனுடைய குடும்பமும் அதற்குப் பாத்திரமுள்ளவர்களாகத் தங்களை நிரூபிக்க வேண்டியதாயிருந்தது. எப்படி? யெகோவா கட்டளையிட்டதைச் செய்வதன் மூலம். அவர்கள் முதலில் ஒரு பிரமாண்டமான பேழையைக் கட்டும் பணியை எதிர்ப்பட்டனர். அது முடிந்தவுடன், நோவா அதை விலங்கினங்களின் பிரதிநிதிகளாலும் ஒரு நீண்ட காலப்பகுதிக்கு அவைகளை பராமரிப்பதற்கு வேண்டிய உணவாலும் நிரப்பவேண்டியதாயிருந்தது. ஆனால் அதுமட்டும் அல்ல. அந்த நீண்ட ஆயத்தக் காலப்பகுதியில் நோவா அதற்கு முன்பு செய்யப்பட்டிராத பிரசங்க வேலையில், வரவிருக்கும் தெய்வீக நியாயத்தீர்ப்பு குறித்து எச்சரிப்பதில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தான்.—ஆதியாகமம், அதிகாரங்கள் 6 மற்றும் 7; 2 பேதுரு 2:5.

8 “நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்,” என்று பைபிள் சொல்லுகிறது. (ஆதியாகமம் 6:22; 7:5) நோவாவும் அவனுடைய குடும்பமும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலைகளை நிறைவேற்றுவதில் உண்மைத்தன்மையை நிரூபித்தனர். அவர்களுடைய சுய தியாக ஆவி அவர்களுடைய நேரம் பயனுள்ளவிதத்தில் உபயோகிக்கப்பட்டதைக் குறித்தது, ஆனால் வேலை கடினமாக இருந்தது, பிரசங்கம் செய்வதும் சுலபமாக இருக்கவில்லை. ஜலப்பிரளயத்திற்கு முன்பு பிள்ளைகளைப் பிறப்பித்துக்கொள்ளாமல் இருப்பதன் மூலம், நோவாவின் குமாரர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையில் கவனமாயிருக்கவும் தங்களுடைய செயல்களை ஒத்திசைவுபடுத்திக்கொள்வதற்கும் உதவியாயிருந்தது. அந்த ஜலப்பிரளயம் பொல்லாத உலகிற்கு நீதியான ஒரு முடிவைக் கொண்டுவந்தது. நோவாவும் அவனுடைய மனைவியும், அவர்களுடைய மூன்று குமாரர்களும் அவர்களுடைய மூன்று மனைவிகளும் மட்டுமே தப்பிப்பிழைத்தனர். அவர்கள் கடவுளுக்கும் அவருடைய வழிநடத்துதலுக்கும் உண்மையுள்ளவர்களாயிருந்தனர் என்பதில் நாம் களிகூரலாம், ஏனென்றால் நாம் ஒவ்வொருவரும் நேரடியாக நோவாவிலிருந்து சேம், காம், அல்லது யாபேத் வழியாய் வந்த சந்ததியினர்.—ஆதியாகமம் 5:32; 1 பேதுரு 3:20.

9. (எ) யெகோவா ஆபிரகாமைச் சோதித்தது எப்படி அவனுடைய உண்மைத்தன்மையின் ஒரு சோதனையாக இருந்தது? (பி) இதில் ஈசாக்கு எவ்விதம் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தினான்?

9 ஆபிரகாம் ஈசாக்கைப் பலியாகக் கொடுப்பதற்கு ஆயத்தமாயிருந்தபோது, அவன் யெகோவாவின் கட்டளைக்கு உண்மையுள்ளவிதத்தில் கீழ்ப்படிதலுடன் நடந்தான். அவனுடைய உண்மைத்தன்மைக்கு அது என்னே ஒரு சோதனை! என்றபோதிலும், யெகோவா ஆபிரகாமின் கையை நிறுத்தி, பின்வருமாறு சொன்னார்: “நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்.” என்றாலும், இதற்கு முன்பு என்ன நடந்தது என்பதை மனதிற்குக் கொண்டுவருவது நல்லது. மோரியா மலைக்குச் செல்ல எடுத்த மூன்று நாள் நடை பயணத்தின்போது, ஆபிரகாம் காரியங்களைச் சீர்தூக்கிப் பார்க்கவும், தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ளவும் போதிய நேரத்தைக் கொண்டிருந்தான். பலிக்காக கட்டைகளைச் சுமந்து சென்றவனும், கை கால் கட்டப்படுவதற்கு அனுமதித்தவனுமான ஈசாக்கைப் பற்றியது என்ன? தன்னுடைய தகப்பனாகிய ஆபிரகாமுக்குரிய தன்னுடைய பற்றுறுதியில் அவன் சற்றும் அசையவில்லை, அல்லது தன்னுடைய உண்மைத்தன்மைக்குரிய விலை தன்னுடைய உயிர் என்பதாகத் தோன்றிய போதிலும் தன்னுடைய பாகத்தைக் கேள்வி கேட்கவுமில்லை.—ஆதியாகமம் 22:1–18; எபிரெயர் 11:17.

கிறிஸ்தவ உண்மைத்தன்மை

10, 11. பூர்வ கிறிஸ்தவர்கள் உண்மைத்தன்மைக்கு என்ன முன்மாதிரியை அளித்தனர்?

10 யெகோவா எல்லாச் சமயத்திலுமே மெய்யான உண்மைத்தன்மையுடன் செயல்பட்டிருக்கிறார். “தேவனைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்,” என்று பவுல் அப்போஸ்தலன் ஊக்குவிக்கிறான். (எபேசியர் 5:1, 2) கோத்திரப் பிதாக்கள் பிரதிபலித்ததுபோலவே கிறிஸ்தவர்களும் பிரதிபலிக்கவேண்டியிருந்தது. பின்வரும் அனுபவம் எடுத்துக்காட்டுவதுபோல் பூர்வ கிறிஸ்தவர்கள் உண்மைத்தன்மையோடுகூடிய வணக்கத்தில் அருமையான முன்மாதிரியை வைத்தனர்.

11 ரோமப் பேரரசர் கான்ஸ்டன்டியஸ் I, பேரரசன் கான்ஸ்டன்டீனின் தந்தை, இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கு ஆழ்ந்த மதிப்பைக் கொண்டிருந்தார். தன்னுடைய அரண்மனையில் சேவித்துவந்த கிறிஸ்தவர்களின் உண்மைத்தன்மையைச் சோதிக்கும் வகையில், அவர்கள் விக்கிரகங்களுக்குப் பலி செலுத்தினால் மட்டுமே தன்னுடைய பணியில் தொடர்ந்து இருக்க முடியும் என்றான். அதற்கு மறுப்பு தெரிவித்தல் அரச பணியிலிருந்து நீக்கப்படுவதிலும் அவர் கையால் பழிவாங்கப்படுவதிலும் விளைவடையும் என்று அவர்கள் சொல்லப்பட்டார்கள். இந்த எளிய திட்டத்தின் மூலம், தங்களுடைய உண்மைத்தன்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதவர்களை அடையாளங்காண கான்ஸ்டன்டியஸ் விரும்பினார். கடவுளுக்கும் அவருடைய நியமங்களுக்கும் உண்மையுள்ளவர்களாய்த் தங்களை நிரூபித்தவர்கள் பேரரசரின் பணியில் தொடர்ந்து வைக்கப்பட்டனர், சிலர் நம்பிக்கையான ஆலோசகர்களாகவும் ஆனார்கள். கடவுளுடைய கட்டளைக்கு உண்மையற்றுப்போனவர்கள் அவமானப்படத்தக்கதாக பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

12. கிறிஸ்தவ கண்காணிகள் எவ்விதம் உண்மைத்தன்மையைக் காண்பிக்க வேண்டும்? சபையின் நலத்துக்கு இது ஏன் அவசியமாயிருக்கிறது?

12 உண்மைத்தன்மை அனைத்து கிறிஸ்தவர்களையும் அடையாளங்காட்ட வேண்டும் என்றாலும், தீத்து 1:8-ல் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு கிறிஸ்தவ கண்காணியாக இருப்பதற்குத் தேவையான தன்மைகளடங்கிய பட்டியலில் குறிப்பாகக் கூறப்பட்டிருக்கிறது. இங்கு “உண்மைத்தன்மை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஹோசியாஸ் என்ற கிரேக்க சொல் “எந்த மனித சட்டங்களும் இருப்பதற்கு முன்னால் இருந்த அல்லது இருக்கும் நித்திய சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் மனிதனை” விவரிக்கிறது என்று வில்லியம் பார்க்ளே சொல்லுகிறார். கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் காரியத்தில் மூப்பர்கள் இப்படிப்பட்ட உண்மைத்தன்மையோடுகூடிய நிலைநிற்கை எடுப்பது அவசியம். இந்தச் சரியான முன்மாதிரி, சபை வளருவதற்கும், அதை ஒரு தொகுதியாக அல்லது அதன் தனிப்பட்ட நபர்களை அச்சுறுத்தும் எல்லா வகையான சோதனைகளையும் அழுத்தங்களையும் சந்திப்பதற்கு வேண்டிய பலத்தைக் கொண்டிருக்கவும் உதவும். (1 பேதுரு 5:3) நியமிக்கப்பட்ட மூப்பர்கள் மந்தையினிடமாக ஒரு பெரிய உத்தரவாதத்தை, அதாவது யெகோவாவுக்குத் தங்களுடைய உண்மைத்தன்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ஓர் உத்தரவாதத்தை உடையவர்களாயிருக்கிறார்கள், ஏனென்றால் சபை “அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்று”ம்படி ஆலோசனை கூறப்படுகிறது.—எபிரெயர் 13:7.

உண்மைத்தன்மை—அதன் கிரயம் என்ன?

13. “எல்லா மனிதருக்கும் ஒரு கிரயம் உண்டு” என்ற முதுமொழி குறிப்பது என்ன? இதை விளக்கிடும் உதாரணங்கள் என்ன?

13 “எல்லா மனிதருக்கும் ஒரு கிரயம் உண்டு” என்ற முதுமொழி 18-வது நூற்றாண்டு பிரிட்டிஷ் பிரதமர் சர் ராபர்ட் வால்போலுக்கு உரித்தாக்கப்படுகிறது. சரித்திரம் முழுவதிலுமே உண்மைத்தன்மை என்பது தன்னல லாபத்துக்காக வியாபாரம் செய்யப்பட்டுவந்திருக்கிறது என்ற உண்மையை இது சுருங்கச் சொல்லுகிறது. பைபிள் மொழிபெயர்ப்பாளர் வில்லியம் டின்டேலைக் கவனியுங்கள். இவர் ஹென்றி ஃபிலிப்ஸை ஓர் உத்தம நண்பராகத் தவறாக ஏற்றுக்கொண்டார். 1535-ல் ஃபிலிப்ஸ் உண்மையற்றவராக டின்டேலை அவருடைய எதிரிகளுக்குக் காட்டிக்கொடுத்தார், இது டின்டேல் உடனடியாகக் கைது செய்யப்படுவதிலும் அகால மரணம் அடைவதிலும் விளைவடைந்தது. ஃபிலிப்ஸ் அநேகமாக ஓர் ஆங்கில அரசனின் கையாளாகவோ அல்லது ஆங்கில கத்தோலிக்கரின் கையாளாகவோ இருந்திருக்க வேண்டும், “அவனுடைய யூதாஸ் செயலுக்கு நல்ல கூலி கொடுக்கப்பட்டது” என்று ஒரு சரித்திராசிரியர் கூறுகிறார். இந்தச் சரித்திராசிரியர் இயேசு கிறிஸ்துவைக் காட்டிக்கொடுப்பதற்கான கிரயமாக 30 வெள்ளிக் காசைப் பெற்ற யூதாஸ்காரியோத்தை மேற்கோள் காட்டுகிறார். என்றபோதிலும் இந்த உதாரணங்களை வைத்து, ஒருவருடைய உண்மைத்தன்மைக்குரிய “கிரயம்” எல்லாச் சமயத்திலும் பணம்தான் என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. அது அப்படி இல்லை.

14. யோசேப்பு யெகோவாவுக்கு உண்மைத்தன்மையுடையவனாய் இருந்த காரியம் எவ்விதம் சோதனைக்குட்படுத்தப்பட்டது? விளைவு என்ன?

14 போத்திபாரின் மனைவி யோசேப்பை “[தன்னுடன்] சயனிக்”கும்படி சொன்னபோது, யெகோவாவுக்கு அவனுடைய உண்மைத்தன்மை சோதனைக்குட்படுத்தப்பட்டது. அவன் என்ன செய்வான்? உட்பட்டிருக்கும் நியமங்களை மனதில் தெளிவாகக் கொண்டிருந்தவனாய், யோசேப்பு அந்த வீட்டிலிருந்து ஓடினான். “இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது” கூடாது என்பதில் அவன் தீர்மானமாயிருந்தான். பாலுறவு இன்பத்தின் எதிர்பார்ப்பு யோசேப்பு யெகோவாவுக்கு உண்மையாயிருப்பதை மேற்கொள்ள முடியவில்லை.—ஆதியாகமம் 39:7–9.

15. அப்சலோம் எப்படி உண்மைத்தன்மையற்றவனாய்த் தன்னை வெளிப்படுத்தினான்? விளைவு என்ன?

15 என்றபோதிலும், வேறு ஆபத்துகளும் உண்டு; புகழ் நாடும் பேராசை உண்மைத்தன்மையை மட்டுப்படுத்தக்கூடும். தன்னுடைய தகப்பனாகிய தாவீது அரசனுக்கு எதிராகக் கலகம் செய்த அப்சலோமின் உள்நோக்கம் அதுவாகவே இருந்தது. சூழ்ச்சியினாலும் கலகத்தினாலும் மக்களுக்குத் தான் உகந்தவனாக இருக்க நாடி, தன்னுடைய தகப்பனின் உண்மை ஆதரவாளருக்கு எதிராக ஒரு சேனையை ஏற்படுத்தினான். யோவாபின் கைகளில் அப்சலோமின் மரணம் அவனுடைய தகப்பனாகிய தாவீதுக்கு அவன் உண்மைத்தன்மையற்றதன்மைக்கு முடிவுகட்டியது, ஆனால் தேவராஜ்ய ஏற்பாட்டைக் கவிழ்த்துப்போடும் முயற்சிக்கு செலுத்தப்பட்டக் கிரயம் தான் என்னே!—2 சாமுவேல் 15:1–12; 18:6–17.

கிரயம் இல்லாத உண்மைத்தன்மை

16. சாத்தானின் உள்நோக்கம் குறித்து 2 கொரிந்தியர் 11:3 வெளிப்படுத்துவது என்ன?

16 ஒவ்வொருவருக்கும் கிரயம் இருக்கிறது என்று சாத்தான் உரிமைப்பாராட்டினாலும், இது அப்சலோமின் விஷயத்தில் உண்மையாயிருந்த போதிலும், இது யோசேப்பின் காரியத்திலும் யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தாருடைய காரியத்திலும் ஒருபோதும் உண்மையாயிருந்ததில்லை. என்றபோதிலும், நம்முடைய சிருஷ்டிகரிடமாக நாம் கொண்டிருக்கும் உண்மைத்தன்மையை முறித்திட சாத்தான் என்ன கிரயமும் கொடுப்பான். “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல,” நம்முடைய யோசனையும் கெடுக்கப்பட்டு, யெகோவாவுக்கும் அவருடைய வணக்கத்திற்கும் நாம் காண்பிக்கும் உண்மைத்தன்மையை விட்டுக்கொடுப்பதில் விளைவடையுமோ என்ற தன் அச்சத்தை அப்போஸ்தலனாகிய பவுல் வெளிப்படுத்தினான்.—2 கொரிந்தியர் 11:3.

17. விலைமதிக்கமுடியாத ஊழிய சிலாக்கியங்களைச் சிலர் எதற்கு விற்றுப்போட்டிருக்கிறார்கள்?

17 பொருத்தமாகவே நம்மை நாம் இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னுடைய சிருஷ்டிகரை உண்மைத்தன்மையோடு வணங்கும் என் சிலாக்கியத்திற்கு மாற்றீடாக நான் ஏற்றுக்கொள்ளத்தக்க கிரயம் ஏதேனும் உண்டா?’ யோசேப்புக்கு மாறாக, யெகோவாவின் ஒப்புக்கொடுத்த சாட்சியாக இருந்த சிலர் மாற்றீடாக மிகக் குறைந்த கிரயத்தைக் கேட்டிருக்கிறார்கள். சில மூப்பர்களுங்கூட விலைமதிக்க முடியா தங்களுடைய சிலாக்கியங்களை ஒழுக்கங்கெட்ட சிற்றின்பத்தைத் தற்காலிகமாக அனுபவிப்பதற்காக மாற்றீடு செய்திருக்கின்றனர். மூப்பர்களாக இருந்தாலுஞ்சரி, இல்லாவிட்டாலுஞ்சரி, இதைச் செய்த பலர் திரும்பப்பெற முடியாத குடும்ப ஐக்கியத்தையும், சபையின் அன்பு மற்றும் மரியாதையையும், யெகோவாவின் அங்கீகாரத்தையும் இழந்துவிட்டிருக்கின்றனர்—இவர் உண்மைத்தன்மையைக் காத்துக்கொள்வதற்கும் சாத்தானின் எந்த ஒரு சோதனையையும் எதிர்த்துப்போடுவதற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியவர்.—ஏசாயா 12:2; பிலிப்பியர் 4:13.

18. ஏன் 1 தீமோத்தேயு 6:9, 10-லுள்ள எச்சரிப்புக்குச் செவிகொடுப்பது முக்கியம்?

18 மற்றவர்கள், உலக காரியங்களில் தொடருவதற்குப் பேராசையுடன் தீர்மானமாயிருந்தவர்கள் பைபிளின் தெளிவான எச்சரிப்பின் மத்தியிலும் “அநேக வேதனைகளால் தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.” (1 தீமோத்தேயு 6:9, 10) பவுல் குறிப்பிட்ட ஒரு கிறிஸ்தவனாகிய தேமா, இதனாலேயே தற்காலிகமாகவோ அல்லது நிரந்திரமாகவோ விழுந்துவிட்டான். (2 தீமோத்தேயு 4:10) கடவுளுக்கு உண்மைத்தன்மையோடு இருப்பதை விட்டுக்கொடுப்பது மோசமான விளைவுகளில்லாமல் இராது. “தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைத்கிறானோ அதையே அறுப்பான்.”—கலாத்தியர் 6:7.

19, 20. (எ) அளவுக்கு அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதுடன் சம்பந்தப்பட்டிருக்கும் சில ஆபத்துகள் என்ன? (பி) சாட்சிகளின் ஒரு குடும்பம் என்ன முன்மாதிரியை வைத்தது?

19 சில சமயங்களில் பேரத்துக்கு உட்படும் கிரயம் மிகவும் தந்திரமாகத் தோன்றுகிறது. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களிலிருந்து வந்த ஓர் அறிக்கை கூறுவதாவது, அநேக குடும்பங்கள் விழித்திருக்கும் தங்களுடைய நேரத்தில் பாதியைத் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவழிக்கின்றனர், குறிப்பாக இளைஞர் இதற்கு அடிமையாகிவிட்டிருக்கிறார்கள். ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய மனதை அடிப்படையாக பாலுறவு மற்றும் வன்முறையுடன்கூடிய தொலைக்காட்சியால் நிரப்புகிறவனாயிருந்தால், விரையில் தன்னுடைய கிறிஸ்தவ நியமங்களை மதிக்காமற்போய்விடுவான். அதுதானே அவன் உண்மைத்தன்மையற்றவனாவதற்கு, யெகோவாவைவிட்டு விலகிவிடுகிறவனாவதற்கு மிக எளிதில் வழிநடத்தக்கூடும். அப்படிப்பட்ட கெட்ட கூட்டுறவு பிரயோஜனமுள்ள பழக்கவழக்கங்களை நிச்சயமாய்க் கெடுக்கும். (1 கொரிந்தியர் 15:33) யெகோவாவின் வார்த்தையைப் படிப்பதற்கும் தியானிப்பதற்கும் நாம் நேரம் எடுத்துக்கொள்ளும்படி வேத வசனங்கள் நமக்குப் புத்திமதி கொடுக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு தொலைக்காட்சித் திரைக்கு முன் ஓய்வாக அளவுக்கு அதிகமான நேரத்தைச் செலவழிப்பது, யெகோவாவின் உண்மையுள்ள வணக்கத்தாராக நித்திய ஜீவனைப் பெறுவதற்கு வழிநடத்தும் அறிவைப் பெற்றுக்கொள்ள பயன்படுத்தக்கூடிய நேரத்துக்கு நியாயமான மாற்றீடாகுமா? இன்று சத்தியத்தின் அறிவுக்கு வரும் அநேகர் இந்த விஷயத்தில் தங்களுடைய யோசனையில் பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியதாயிருக்கிறது.—1 தீமோத்தேயு 4:15, 16; 2 தீமோத்தேயு 2:15.

20 டகாஷி இங்கிலாந்தில் வாழும் ஒரு ஜப்பானிய வியாபாரி. அவர் அநேக சாயங்காலங்கள் தன்னுடைய குடும்பத்தோடு தொலைக்காட்சி பார்ப்பதில் மூன்று அல்லது நான்கு மணிநேரங்களைச் செலவழிப்பதுண்டு. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவரும் அவருடைய மனைவியும் முழுக்காட்டப்பட்ட பின்பு, அவர் தனிப்பட்ட படிப்பும் குடும்ப படிப்பும் முதலிடத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். தொலைக்காட்சி பார்ப்பதை நாள் ஒன்றுக்கு சராசரியாக 15 முதல் 30 நிமிடத்துக்கு மட்டுமே குறைப்பதன் மூலம் தன்னுடைய குடும்பத்தை நல்ல விதத்தில் முன்னின்று வழிநடத்தினார். டகாஷி ஆங்கிலத்திலும் ஜப்பானிய மொழியிலுமாக இரண்டு பைபிள்கள் பயன்படுத்தி படிக்க வேண்டியதாயிருந்தாலும், அவருடைய ஆவிக்குரிய வளர்ச்சி வேகமாக இருந்து வந்திருக்கிறது, அவர் இப்பொழுது ஆங்கில மொழி சபையில் ஓர் உதவி ஊழியராக சேவிக்கிறார். அவருடைய மனைவி இப்பொழுது ஒரு துணைப் பயனியர். “எங்களுடைய இரண்டு இளம் பையன்களின் ஆவிக்குரிய தன்மையைக் காத்துக்கொள்வதற்காக, நானும் என் மனைவியும் அவர்கள் தொலைக்காட்சியில் எதைப் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதை நான் கவனமாகக் கண்காணித்துவருகிறேன்,” என்று சொல்கிறார். இப்படிப்பட்ட சுயக் கட்டுப்பாடு நல்ல பலன்களுடையது.

21. சாத்தானின் தந்திரமான வழிகளைப் பற்றி நாம் என்ன காரியத்தைத் தெரிந்துவைத்திருக்கிறோம்? நம்மை நாமே எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்?

21 இதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம்: சாத்தானுக்கு நம்முடைய பலவீனங்கள் தெரியும், ஒருவேளை அவற்றை நாம் அறிந்திருப்பதைக்காட்டிலும் நன்றாகவே அவன் தெரிந்திருக்கிறான். யெகோவாவிடம் நாம் கொண்டிருக்கும் பற்றுறுதியை விட்டுக்கொடுக்க அல்லது பலவீனப்படுத்த அவன் மேற்கொள்ளும் முயற்சியில் எதுவும் அவனைத் தடைசெய்யாது. (மத்தேயு 4:8, 9-ஐ ஒப்பிடவும்.) அப்படியிருக்க, நம்மை நாம் எவ்விதம் பாதுகாத்துக்கொள்ளலாம்? நாம் அவ்வப்போது நம்முடைய ஒப்புக்கொடுத்தலை நமக்கு முன்பாக வைத்து, மற்றவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளுக்காக நாம் ஊழியஞ்செய்கையில் திறமைகளை வளர்த்துக்கொள்வதில் மகிழ்ச்சி காண்கிறவர்களாக இருப்பதன் மூலம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். யெகோவாவின் உண்மையுள்ள ஊழியராக, நாம் அவருடைய வேலையில் சுறுசுறுப்பாக இருந்து, அவருடைய பரிசுத்த வார்த்தையால் எல்லாச் சமயத்திலும் வழிநடத்தப்பட வேண்டும். இது சாத்தான் அளித்திடும் எந்தக் கிரயமும் கடவுளிடமாய் நம்முடைய உண்மைத்தன்மையை விலக்கிட முடியாது என்ற நம் உறுதியான தீர்மானத்தைக் காத்துக்கொள்ள உதவியாயிருக்கும்.—சங்கீதம் 119:14–16. (w90 8/15)

நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?

◻ யெகோவாவும் இயேசுவும் எவ்விதம் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்?

◻ உண்மைத்தன்மைக்கு வேறு என்ன பைபிள் உதாரணங்கள் இருக்கின்றன?

◻ சாத்தான் நமக்கு என்ன அளிக்க அல்லது செய்ய முன்வரக்கூடும்?

◻ யெகோவாவின் வணக்கத்தில் நாம் உண்மைத்தன்மையுடன் நிலைத்திருக்க நம்மை நாமே எவ்விதம் பலப்படுத்திக் கொள்ளலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்