நீங்கள் யாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்?
“நம் நாடு: . . . எப்போதும் சரியானதையே செய்வதாக; ஆனால், சரியோ தவறோ நம் நாட்டையே ஆதரிப்போம்.”—ஸ்டீவன் டிகேடர், ஐ.மா. கப்பற்படை அதிகாரி, 1779-1820.
சொந்த நாட்டிற்கு கேள்வி கேட்காமல் விசுவாசமாயிருப்பதே தங்களின் தலையாய பொறுப்பாக அநேகர் நினைக்கிறார்கள். மற்றவர்களோ ஸ்டீவன் டிகேடர் கூறியதை சற்று மாற்றி, ‘என் மதமே எப்போதும் சரியானதாய் இருப்பதாக; ஆனால், சரியோ தவறோ என் மதத்தையே ஆதரிப்பேன்’ என்று கூறுகிறார்கள்.
எதார்த்தத்தில், விசுவாசமாயிருப்பதை நம்மிடம் எதிர்பார்க்கும் நாடு அல்லது மதம் பெரும்பாலும் நாம் பிறக்கும் இடத்தைப் பொறுத்ததே. ஆனால், நாம் யாருக்கு விசுவாசமாயிருக்க வேண்டும் என்ற தீர்மானம் அதிமுக்கியமானதால் அதை தற்செயலாக நிகழும்படி விட்டுவிட முடியாது. என்றாலும், எதற்கு விசுவாசமாயிருக்க வேண்டும் என்று ஒருவர் வளர்க்கப்படுகிறாரோ அதைப் பற்றி கேள்வி கேட்க அவருக்கு தைரியம் தேவை, அதனால் அவர் சவால்களையும் சந்திக்க வேண்டி வரலாம்.
விசுவாசமாயிருப்பது சம்பந்தப்பட்ட சோதனை
ஜாம்பியாவில் வளர்ந்த ஒரு பெண் இவ்வாறு கூறுகிறார்: “சிறு வயதிலிருந்தே எனக்கு கடவுள் பக்தி அதிகம். வீட்டு பூஜை அறையில் தினமும் பிரார்த்திப்பது, மத பண்டிகைகளை தவறாமல் கொண்டாடுவது, தவறாமல் கோயிலுக்கு போவது, இப்படிப்பட்ட சூழலில்தான் வளர்ந்து வந்தேன். என் மதமும், வணக்கமும் என் கலாச்சாரத்தோடும், சமுதாயத்தோடும், குடும்பத்தோடும் பின்னிப்பிணைந்திருந்தன.”
ஆனால், டீனேஜை தாண்டும் வயதில் அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்தார்; கொஞ்ச நாட்களிலேயே தன் மதத்தை மாற்றிக்கொள்ள தீர்மானித்தார். இது விசுவாச துரோகத்திற்கு ஓர் உதாரணமா?
போஸ்னியாவில் வளர்ந்த ஸ்லாட்கோ என்பவர் தன் தாய் நாட்டிற்காக சில காலம் சண்டையில் ஈடுபட்டார். அவரும் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க ஆரம்பித்தார். இப்போது யாருக்கு எதிராகவும் துப்பாக்கியைத் தூக்க மறுக்கிறார். அவர் விசுவாச துரோகத்தை வெளிக்காட்டுகிறாரா?
அந்தக் கேள்விகளுக்கான பதில் உங்கள் கண்ணோட்டதைப் பொறுத்ததே. “நான் வளர்ந்து வந்த சமுதாயத்தில் மதம் மாறுவது அவமானச் சின்னமாக கருதப்பட்டது. அது உண்மையற்ற செயலாகவே, தன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் துரோகம் செய்வதாகவே கருதப்பட்டது” என்று ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்தப் பெண் கூறுகிறார். அதைப் போலவே, தங்களோடு சேர்ந்து யுத்தம் செய்ய சம்மதியாதவர்களை தேசதுரோகிகள் என்றுதான் ஸ்லாட்கோவின் முன்னாள் இராணுவ நண்பர்கள் கருதினர். மாறாக, கடவுளுக்கு விசுவாசமாயிருக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமே தாங்கள் அவ்வாறு நடந்துகொண்டதற்குக் காரணம் என்று அந்தப் பெண்ணும் ஸ்லாட்கோவும் உணருகின்றனர். ஆனால், கடவுளிடம் உண்மையாயிருக்க விரும்புவோரை அவர் எவ்வாறு கருதுகிறார்?
மெய்யான பற்றுறுதி—அன்பின் வெளிக்காட்டு
“உண்மைப்பற்றுறுதி உள்ளவனிடம் நீர் உண்மைப்பற்றுறுதி உள்ளவராக நடந்துகொள்வீர்” என்று தாவீது ராஜா யெகோவாவிடம் கூறினார். (2 சாமுவேல் 22:26, NW) இங்கு “உண்மைப்பற்றுறுதி” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை, ஒரு பொருளோடு தொடர்புடைய அதன் நோக்கம் நிறைவேறும் வரை அந்தப் பொருளோடு தன்னை அன்பாக இணைத்துக்கொள்ளும் தயவு என்ற கருத்தைக் கொடுக்கிறது. பால் குடிக்கும் குழந்தையிடம் தாய் காட்டும் பாசத்தைப் போலவே தம்மிடம் உண்மையாய் இருப்போரோடு யெகோவா தம்மை அன்பாக இணைத்துக் கொள்கிறார். “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை” என்று பூர்வ இஸ்ரவேலிலிருந்த தமது உண்மையுள்ள ஊழியர்களிடம் யெகோவா கூறினார். (ஏசாயா 49:15) கடவுளுக்கு காட்டும் உண்மைப்பற்றுறுதியை வாழ்க்கையில் முதலிடத்தில் வைக்க விரும்புவோர் அவருடைய அன்பான தயவை பெறுவார்கள் என்பது உறுதி.
யெகோவாவுக்குக் காட்டும் பற்றுறுதிக்கு அடிப்படை அன்பே. அது, யெகோவா நேசிப்பதை நேசிக்கவும், அவர் வெறுக்கும் துன்மார்க்கத்தை வெறுக்கவும் ஒருவரை தூண்டுகிறது. (சங்கீதம் 97:10) அன்பே யெகோவாவின் பிரதான குணமாதலால் கடவுளுக்கு விசுவாசமாயிருப்பது, மற்றவர்களிடம் அன்பற்ற விதத்தில் நடந்துகொள்ளாமல் இருக்க ஒருவருக்கு உதவுகிறது. (1 யோவான் 4:8) ஆகவே, கடவுளுக்கு விசுவாசமாயிருப்பதற்காக ஒருவர் தன் மத நம்பிக்கைகளை மாற்றிக்கொண்டால் அவர் இனியும் தன் குடும்பத்தாரை நேசிக்கவில்லை என்று அர்த்தமாகாது.
கடவுளுக்குக் காட்டும் பற்றுறுதி—நன்மையான சக்தி
முன்னர் கூறப்பட்ட பெண் தன் செயல்களுக்கான காரணத்தை இவ்வாறு விளக்குகிறார்: “பைபிளை ஆராய்ந்ததில் யெகோவாவே உண்மையான கடவுள் என்பதை அறிந்தேன், அவரோடு தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொண்டேன். யெகோவா, நான் முன்பு வணங்கிவந்த கடவுட்களைப் போன்றவர் அல்ல. அவருடைய அன்பு, நீதி, ஞானம், வல்லமை அனைத்தும் பரிபூரண சமநிலையில் இருக்கின்றன. யெகோவா தனிப்பட்ட பக்தியை கேட்பதால் மற்ற கடவுட்களை ஒதுக்கிவிட வேண்டியிருந்தது.
“என் செயல் என் பெற்றோருக்கு மிகுந்த மன வருத்தத்தை தந்ததாகவும் நான் அவர்களை ஏமாற்றிவிட்டதாகவும் அவர்கள் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். என் பெற்றோரின் அங்கீகாரத்தை பெரிதும் மதித்ததால் இது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஆனால், பைபிள் சத்தியத்தைப் பற்றிய அறிவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தபோது என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக தெரிந்தது. என்னால் யெகோவாவை ஒதுக்கித் தள்ள முடியவில்லை.
“மத பாரம்பரியங்களை ஓரங்கட்டிவிட்டு யெகோவாவுக்கு விசுவாசமாயிருக்க முடிவு செய்ததால் என் குடும்பத்திற்கு உண்மையற்றவளாகிவிட்டேன் என்று அர்த்தமில்லை. அவர்கள் உணரும் விதத்தை புரிந்துகொண்டிருப்பதை என் வார்த்தைகளிலும் செயல்களிலும் காட்ட முயலுகிறேன். ஆனால், நான் யெகோவாவுக்கு பற்றுறுதியைக் காட்டாமல் போனால் என் குடும்பத்தார் அவரை அறிந்துகொள்வதற்கு நானே முட்டுக்கட்டையாகி விடுவேன். உண்மையில் இதுவே உண்மையற்ற செயலாகும்.”
அதைப் போலவே, கடவுளுக்குக் காட்டும் உண்மைப்பற்றுறுதியால் ஒருவர் அரசியலில் நடுநிலை வகித்து, மற்றவர்களுக்கு எதிராக ஆயுதங்களை எடுக்க மறுத்தால் அவர் தேசதுரோகி அல்ல. ஸ்லாட்கோ தன் செயல்களுக்கு இவ்வாறு விளக்கம் கொடுக்கிறார்: “பெயருக்கு கிறிஸ்தவன் என்று வளர்க்கப்பட்டாலும், வேறு மதத்தைச் சேர்ந்த பெண்ணையே மணந்தேன். யுத்தம் ஆரம்பித்தபோது நான் அவர்களுக்கு விசுவாசமாயிருக்க வேண்டும் என்றே இரு தரப்புகளும் என்னிடம் எதிர்பார்த்தன. யுத்தத்தில் எந்த பக்கத்தை ஆதரிக்கப் போகிறேன் என்பதை முடிவு செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். மூன்றரை வருடங்கள் யுத்தத்தில் ஈடுபட்டேன். கடைசியில், நானும் என் மனைவியும் குரோஷியாவிற்கு ஓடிப்போனோம்; அங்குதான் யெகோவாவின் சாட்சிகளை சந்தித்தோம்.
“முக்கியமாக யெகோவாவுக்கே நாம் உண்மைப்பற்றுறுதி காட்ட வேண்டும் என்பதையும் நம் அயலகத்தார் எந்த மதத்தை அல்லது இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களை நேசிக்க வேண்டும் என்று அவர் விரும்புவதையும் பைபிளை ஆராய்ந்ததிலிருந்து புரிந்துகொண்டோம். இப்போது நானும் என் மனைவியும் யெகோவாவை வணங்குவதில் ஒன்றுபட்டிருக்கிறோம். கடவுளுக்கு விசுவாசமாயிருக்கும் அதேசமயம் என் அயலானுக்கு எதிராக யுத்தமும் செய்ய முடியாது என்பதை கற்றிருக்கிறேன்.”
திருத்தமான அறிவால் வடிவமைக்கப்பட்ட பற்றுறுதி
நமது உண்மைப்பற்றுறுதியை வேறு யார் அல்லது எது எதிர்பார்த்தாலும் சிருஷ்டிகர் என்பதால் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பதற்கு முதலிடம் கொடுப்பதே நியாயமானது. (வெளிப்படுத்துதல் 4:11) என்றாலும், கடவுளுக்கான உண்மைப்பற்றுறுதி வெறித்தனமான, அழிவுக்குரிய சக்தியாக மாறிவிடாதிருக்க அது திருத்தமான அறிவால் வடிவமைக்கப்பட வேண்டும். ‘உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான . . . பரிசுத்தத்தில் [“உண்மைப்பற்றுறுதியில்,” NW] தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்’ என பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (எபேசியர் 4:23, 24) ஏவுதலால் இவ்வார்த்தைகளை எழுதிய புகழ் பெற்ற மனிதனுக்கு, எவற்றிடம் உண்மைப்பற்றுறுதி காட்டும்படி வளர்க்கப்பட்டாரோ அவற்றைக் குறித்து கேள்வி கேட்க தைரியம் இருந்தது. அவருடைய ஆராய்ச்சியால் விளைந்த மாற்றம் நன்மையில் முடிந்தது.
ஆம், விசுவாசமாயிருப்பது பற்றிய சோதனையை நம் நாட்களில் அநேகர் சந்தித்திருப்பதைப் போலவே அன்று சவுல் சந்தித்தார். அவர் தன் குடும்பத்தின் கட்டுப்பாடுமிக்க பாரம்பரியங்களுக்கு ஏற்ப வளர்க்கப்பட்டார், தன் மதத்திற்கு விசுவாசமாயிருப்பதில் சிறந்து விளங்கினார். தனது குறிக்கோளுக்கு விசுவாசமாயிருந்ததால் தன்னுடைய நோக்குநிலையை ஏற்காதோருக்கு எதிராக வன்முறையில் இறங்கவும் தூண்டப்பட்டார். தண்டிப்பதற்காகவும் கொலை செய்வதற்காகவும்கூட கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களை இழுத்துச் சென்றதற்கு சவுல் நன்கு அறியப்பட்டிருந்தார்.—அப்போஸ்தலர் 22:3-5; பிலிப்பியர் 3:4-6.
இருந்தாலும், பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவை பெற்றவுடன் தன் சகாக்களில் அநேகர் கற்பனையும் செய்திராத ஒன்றை சவுல் செய்தார். தன் மதத்தை மாற்றிக்கொண்டார். அப்போஸ்தலன் பவுல் என பின்னர் அறியப்பட்ட சவுல், பாரம்பரியங்களுக்கு அல்ல, கடவுளுக்கு விசுவாசமாயிருக்க முடிவு செய்தார். ஒருகாலத்தில் சவுலின் நடத்தை வெறித்தனமிக்கதாக, அழிவுக்குரியதாக இருந்தது. ஆனால், திருத்தமான அறிவின் அடிப்படையில் கடவுளுக்கு விசுவாசமாயிருப்பதோ சகித்திருக்கவும், அன்பு காட்டவும், உற்சாகப்படுத்தவும் அவரை தூண்டியது.
ஏன் உண்மைப்பற்றுறுதி காட்ட வேண்டும்?
நமது உண்மைப்பற்றுறுதி கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக இருந்தால் வெளிப்படையான ஆசீர்வாதங்கள் கிடைக்கும். உதாரணமாக, நீடித்திருக்கும் திருப்திகரமான மண வாழ்க்கைக்கு, “நம்பிக்கை, பற்றுறுதி . . . ஆன்மீக உணர்வு” போன்றவையே அஸ்திவார கற்கள் என குடும்ப ஆராய்ச்சிகள் பற்றிய ஆஸ்திரேலிய கழகத்தின் 1999-ம் ஆண்டின் அறிக்கை கூறியது. “நிலையான, திருப்திகரமான மண வாழ்க்கை” காரணமாக ஆண்களும் பெண்களும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக, நீடூழி வாழ்வதாகவும், நிலையான மண வாழ்க்கையால் சந்தோஷத்தை அனுபவிக்க பிள்ளைகளுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதாகவும் அதே ஆராய்ச்சி கண்டுபிடித்தது.
நிச்சயமற்ற இன்றைய உலகில், தண்ணீரில் மூழ்கும் ஒருவரைக் காப்பாற்ற வந்த கப்பலோடு இணைக்கப்பட்டிருக்கும் கயிற்றிற்கு உண்மைப்பற்றுறுதியை ஒப்பிடலாம். ‘மூழ்குபவர்’ எதற்கும் உண்மைப்பற்றுறுதி காட்டாவிட்டால் அலைகளாலும் காற்றாலும் அலைக்கழிக்கப்படுவார். தவறான ஒன்றின்மேல் பற்றுறுதி வைத்தாலோ, அந்தக் கயிறு மூழ்கும் கப்பலோடு இணைக்கப்பட்டிருப்பது போலிருக்கும். சவுலைப் போல, அவரும் அழிவுக்குரிய பாதையில் இழுத்துச் செல்லப்படுவதைக் காணலாம். மாறாக, திருத்தமான அறிவின் அடிப்படையில் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக இருப்பது நமக்கு ஸ்திரத்தன்மையை தந்து இரட்சிப்பிற்கு வழிநடத்தும் உயிர்காக்கும் கயிறாக சேவிக்கிறது.—எபேசியர் 4:11, 14, 15.
தமக்கு உண்மைப்பற்றுறுதி காட்டுவோரிடம் யெகோவா பின்வரும் வாக்குறுதியை அளிக்கிறார்: “கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் [“தம்மிடம் உண்மைப்பற்றுறுதி காட்டுவோரை,” NW] கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்.” (சங்கீதம் 37:28) யெகோவாவுக்கு விசுவாசமாயிருக்கும் அனைவரும் சீக்கிரத்தில் பரதீஸான பூமியில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர். அங்கே அவர்கள் எல்லா துன்பத்திலிருந்தும் வலியிலிருந்தும் விடுதலையைப் பெற்று, மத, அரசியல் பாகுபாடுகள் ஏதுமின்றி நிலையான உறவுகளை அனுபவித்து மகிழ்வர்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; 21:3, 4.
யெகோவாவுக்கு பற்றுறுதி காட்டுவதே மெய்யான மகிழ்ச்சியை தரும் என்பதை உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கானோர் இப்பொழுதேகூட கண்டிருக்கின்றனர். உண்மைப்பற்றுறுதி பற்றிய உங்களுடைய நோக்குநிலையை பைபிள் சத்தியத்தின் வெளிச்சத்தில் ஆராய யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவ ஏன் அனுமதிக்கக்கூடாது? “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்” என்று பைபிள் நம்மிடம் கூறுகிறது.—2 கொரிந்தியர் 13:5.
நம் விசுவாசத்தைக் குறித்தும், அதற்கு பற்றுறுதி காட்டுவதைக் குறித்தும் கேள்வி கேட்பதற்கு தைரியம் தேவை. ஆனால், நாம் யெகோவா தேவனிடம் நெருங்கி வருவதால் கிடைக்கும் பலன்களை சிந்திக்கையில் அந்த முயற்சி தகுதியானதே. “யெகோவாவுக்கும் அவருடைய தராதரங்களுக்கும் விசுவாசமாயிருப்பது நம் குடும்ப உறவுகளில் சமநிலையோடு நடந்துகொள்ளவும் சமுதாயத்தின் சிறந்த குடிமக்களாக திகழவும் உதவுவதை கற்றிருக்கிறேன். எவ்வளவு கடினமான சோதனைகள் வந்தாலும் நாம் யெகோவாவுக்கு உண்மைப்பற்றுறுதி உள்ளவர்களாக இருந்தால் அவர் நிச்சயம் நம்மிடம் உண்மைப்பற்றுறுதி உள்ளவராக இருப்பார்” என்று முன்னர் மேற்கோள் காட்டப்பட்ட பெண் கூறுகிறார்; மற்ற அநேகரும் இவ்வாறே உணருகிறார்கள்.
[பக்கம் 6-ன் படங்கள்]
சவுல் எதனிடம் விசுவாசமாயிருந்தாரோ அதை மாற்றிக்கொள்ள திருத்தமான அறிவு அவரைத் தூண்டியது
[பக்கம் 7-ன் படம்]
பைபிள் சத்தியத்தின் வெளிச்சத்தில் உங்களுடைய உண்மைப்பற்றுறுதியை ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது?
[பக்கம் 4-ன் படங்களுக்கான நன்றி]
சர்ச்சில், மேல் இடது: U.S. National Archives photo; ஜோசப் காபல்ஸ், வலது கோடி: Library of Congress