பெத்லகேம் மற்றும் கிறிஸ்மஸ்—பற்றிய உண்மை என்ன?
“பெத்லகேமின் புதிரைப் பற்றி நாம் சிந்திக்கையில், கேள்விகளும் சந்தேகங்களும் நம்முடைய மனதில் வருவதை நாம் தவிர்க்க முடியாது.”—மரியா தெரசா பெட்ரோஸி எழுதிய பெத்லகேம்.
‘ஏன் கேள்விகளும் சந்தேகங்களும்?’ என்று நீங்கள் கேட்கக்கூடும். எப்படியும், கிறிஸ்மஸ் பற்றிய பல்வேறு நம்பிக்கைகளும் இந்த நம்பிக்கைகளோடு சம்பந்தப்பட்ட இடங்களும் உண்மையையே ஆதாரமாகக் கொண்டவைதானே. அல்லது அவை அவ்விதமாக இருக்கின்றனவா?
அவர் எப்போது பிறந்தார்?
இயேசு பிறந்த நாளைப் பற்றி, மரியா தெரசா பெட்ரோஸி கேட்கிறார்: “மீட்பர் சரியாக எப்போது பிறந்தார்? நாம் வருடத்தை மட்டுமின்றி, மாதத்தையும் நாளையும் மணிநேரத்தையும்கூட அறிந்து கொள்ள விரும்புகிறோம். சரிநுட்பமான கணக்கு நமக்கு அருளப்படவில்லை.” நியு கேத்தலிக் என்சைக்ளோபீடியா (The New Catholic Encyclopedia) இதை ஆதரிக்கிறது: “இயேசு கிறிஸ்து பிறந்த தேதி தோராயமாகவே கணக்கிடப்படமுடியும்.” கிறிஸ்து பிறந்ததாகச் சொல்லப்படுகிற தேதியைக் குறித்து அது சொல்கிறது: “டிசம்பர் 25-ம் தேதி, கிறிஸ்துவின் பிறப்போடு அல்ல, ஆனால் கதிர்த்திருப்பத்தின் போது ரோமர்களுடைய சூரிய விழாவோடு (Natalis Solis Invicti) ஒத்திருக்கிறது.”
ஆகவே நீங்கள் கேட்கக்கூடும், ‘இயேசு டிசம்பர் 25-ம் தேதி பிறக்கவில்லையென்றால், எப்போது அவர் பிறந்தார்?’ மத்தேயு அதிகாரங்கள் 26 மற்றும் 27-லிருந்து, பொ.ச. 33, ஏப்ரல் 1-ல் துவங்கின யூதர்களுடைய பஸ்காவின் சமயத்தில் இயேசு மரித்தார் என்பதாக புரிந்து கொள்கிறோம். லூக்கா 3:21–23, இயேசு தம்முடைய ஊழியத்தை ஆரம்பிக்கையில் சுமார் 30 வயதுள்ளவராக இருந்தார் என்று தெரிவிக்கிறது. அவருடைய பூமிக்குரிய ஊழியம் மூன்றரை ஆண்டுகள் நீடித்திருந்ததன் காரணமாக, அவர் மரித்த போது அவர் சுமார் 33 1/2 வயதினராக இருந்தார். ஆறு மாதங்களுக்குப் பின், சுமார் அக்டோபர் 1 போல் கிறிஸ்து 34 வயதைப் பூர்த்தி செய்திருப்பார். இயேசு எப்போது பிறந்தார் என்பதைக் காண நாம் பின்னால் கணக்கிடுவோமானால், நாம் டிசம்பர் 25 அல்லது ஜனவரி 6-ஐ அல்ல, ஆனால் பொ.ச.மு. 2-ம் ஆண்டு அக்டோபர் சுமார் 1-ஐ அடைகிறோம்.
டிசம்பர் மாதத்தின் போது, பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பனிக்கால கடுங்குளிரான வானிலையும், கடுங்குளிர் ஊட்டுகிற மழையும் மற்றும் சிலசமயங்களில் பனியுமாக இருப்பதும்கூட கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. மேய்ப்பர்களை அந்தச் சமயத்தில் இரவில் வெளியே தங்கள் மந்தைகளோடு ஒருவர் காண்பதில்லை. இது அண்மைக்கால வானிலை சம்பவம் அல்ல. யூதேய அரசனாகிய யோயாக்கீம் “ஒன்பதாம் மாதத்திலே [சிஸ்லேவ், நவம்பர்-டிசம்பரோடு ஒத்திருக்கிறது], குளிர்க்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாகக் கணப்பு மூட்டியிருந்தது” என்பதாக வேதாகமம் சொல்லுகிறது. (எரேமியா 36:22) அனலாக வைத்துக் கொள்ள அவனுக்கு சூடு தேவைப்பட்டது. மேலுமாக எஸ்றா 10:9, 13-ல், கிஸ்லேவ் மாதம் “மாரிகாலமுமாக, வெளியே நிற்கக் கூடாத” காலமுமாகவும் இருந்தது என்பதற்கு தெளிவான அத்தாட்சியை நாம் காண்கிறோம். பெத்லகேமில் டிசம்பர் மாத வானிலை நிலைமைகள், இயேசு கிறிஸ்துவின் பிறப்போடு சம்பந்தப்பட்ட சம்பவங்களின் பைபிள் விவரிப்போடு பொருந்துவதில்லை என்பதை இவை அனைத்தும் காண்பிக்கின்றன.—லூக்கா 2:8–11.
எந்த இடத்தில்?
நூறாயிரத்துக்கும் மேலான ஃபிரெஞ்சு போர் வீரர்களின் உயிர்களைப் பறித்த “கொடூரமான போராட்டமாக” இருந்த கிரிமியன் போரின் (1853–56) உள்ளெழுச்சியின் பாகமாக இருந்த அந்தப் போர் நடந்த இடத்தைப் பற்றிய சரியான நோக்குநிலை என்ன? அந்தக் குறிப்பிட்ட இடம் உண்மையில் இயேசுவின் பிறப்பிடமாக இருக்கிறதா?
முதலாவதாக, இயேசு பிறந்த இடத்தை பைபிள்தானேயும்கூட துல்லிபமாக குறிப்பிடுவதில்லை. இயேசுவின் பிறப்பு, “அநாதி நாட்களாகிய பூர்வத்திலிருந்து வருகிறவராகிய இஸ்ரவேலை ஆளப்போகிறவர்” பெத்லகேமிலிருந்து வருவார் என்று மீகா 5:2-ல் முன்னறிவிக்கப்பட்ட மேசியானிய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது என்பதை மத்தேயுவும் லூக்காவும் உறுதி செய்கிறார்கள். (மத்தேயு 2:1, 5; லூக்கா 2:4) இரண்டு சுவிசேஷ பதிவுகளுமே இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்ற அத்தியாவசியமான தகவலை மட்டுமே குறிப்பிடுகிறது, லூக்காவின் பிரகாரம், குழந்தை துணிகளில் சுற்றப்பட்டு முன்னணையிலே கிடத்தப்பட்டிருந்தது.—லூக்கா 2:7.
சுவிசேஷ எழுத்தாளர்கள் ஏன் அதிகமான விவரங்களைச் சேர்க்கவில்லை? மரியா தெரசா பெட்ரோஸி குறிப்பிடுகிறார்: “சுவிசேஷகர்கள் இந்த விவரங்களை புறக்கணித்துவிட்டிருக்கிறார்கள், ஏனென்றால் அவைகளை அவர்கள் அர்த்தமற்றதாக கருதுகிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது.” உண்மையில், இயேசு தாமே தம்முடைய பிறப்பைப் பற்றிய விவரங்களை விசேஷமாக அர்த்தமுள்ளவையாக கருதவில்லை என்பது தெளிவாக இருக்கிறது, ஏனென்றால், ஒரு சமயம்கூட தாம் பிறந்த தேதியை அல்லது துல்லிபமாக தாம் பிறந்த இடத்தைச் சொன்னதாக மேற்கோள் கொடுக்கப்பட்டில்லை. பெத்லகேமில் பிறந்தபோதிலும், இயேசு அவ்விடத்தைத் தம்முடைய தாயகமாக கருதவில்லை, ஆனால் கலிலேயாவை சுற்றியிருந்த பகுதியே “அவருடைய வீடாக” குறிப்பிடப்பட்டது.—மாற்கு 6:1, 3, 4; மத்தேயு 2:4, 5; 13:54.
பொதுவாக ஜனங்கள் அவர் கலிலேயாவில் பிறந்தாரென்ற எண்ணமுடையவர்களாய் அவர் பிறந்த இடத்தைக் குறித்து அறியாதவர்களாய் இருந்தார்களென்பதை யோவான் 7:40–42-ஐ வாசிக்கையில் தெரிகிறது: “கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்?” என்றார்கள். யோவான் 7:41-ல் பதிவு செய்யப்பட்டிருப்பதன் அடிப்படையில், தி சர்ச் ஆப் தி நேடிவிட்டி, பெத்லகேம் (The Church of the Nativity, Bethlehem) இவ்வாறு முடிக்கிறது: “இப்படிப்பட்ட பேச்சு எழும்பினதுதானே, கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தார் என்பதை தவறென்று நிரூபிக்கவில்லை; ஆனால் குறைந்தபட்சம் அவருடைய கூட்டாளிகளில் அநேகர் அதைக் குறித்து அறியாதவர்களாய் இருந்தனர் என்பதைக் காண்பிக்கிறது.”
இயேசுவின் சொந்த பூமிக்குரிய வாழ்நாளின் போது, அவர் தம்முடைய பிறப்பின் விவரங்களை விளம்பரப்படுத்திக் கொண்டில்லை என்பது தெளிவாக இருக்கிறது. அவர் பிறந்த இடத்திற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. அப்படியென்றால் மரியாள் குழந்தையைப் பெற்றெடுக்கும்படியாக யோசேப்பு அவளை அழைத்துக் கொண்டுவந்த இடம் பிறப்பாலய குகையே (Nativity Grotto) என்ற நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன?
பெட்ரோஸி நேர்மையாக ஒப்புக்கொண்டார்: “இந்தக் குகை பெத்லகேமின் சுற்றுவட்டாரத்திலிருக்கும் எண்ணற்ற இயற்கையான குகைகளில் ஒன்றாக இருந்ததா அல்லது பயணிகள் விடுதி ஒன்றில் குதிரை லாயமாக பயன்படுத்தப்பட்ட ஓர் அடிநிலக்குகையாக இருந்ததா என்பதை நிச்சயமாக அறிந்து கொள்வது கூடாத காரியமாகும். என்றபோதிலும் இரண்டாம் நூற்றாண்டின் முதல் பாதிக்குச் செல்லும் பாரம்பரியம் தெளிவாக உள்ளது; அது ஒரு குகை–குதிரைலாயம்.”—தடித்த எழுத்து எங்களுடையது.
வெறும் பாரம்பரியம்
பொ.ச. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜஸ்டின் மார்டர் எந்தக் குகை என்பதை திட்டவட்டமாக குறிப்பிடாமல் இயேசு ஒரு குகையில் பிறந்தார் என்று முதலாவதாக உரிமைப்பாராட்டியவர் என்பதாக மரியா தெரசா பெட்ரோஸியும் R. W. ஹாமில்டனும் பெத்லகேமின் வரலாறு பயிலும் மற்ற பல்வேறு மாணாக்கர்களோடு சேர்ந்து குறிப்பிடுகிறார்கள். ஹாமில்டன், ஜஸ்டின் மார்டரின் கூற்றைக் குறித்து பின்வரும் முடிவுக்கு வருகிறார்: “இது தற்செயலாக சொல்லப்பட்ட ஒரு குறிப்பே ஆகும். செயின்ட் ஜஸ்டின் குறிப்பிட்ட ஒரு குகையை மனதில் கொண்டிருந்தார் என்று ஊகிப்பதும் இன்னுமதிகமாக இயேசுவின் பிறப்பாலயத்தில் தற்போதுள்ள குகையை அவர் குறிப்பிட்டார் என்று கொள்வதும் தனியொரு வார்த்தையின் அத்தாட்சியை அளவுக்கு அதிகமாக அழுத்திக் கூறுவதாக இருக்கும்.”
அடிக்குறிப்பில் ஹாமில்டன் எழுதுகிறார்: “அதேக் காலப்பகுதியில் எழுதப்பட்ட தள்ளுபடியாகம ‘யாக்கோபுவின் புத்தகத்தில்’ அல்லது ‘புரோட்டெவான்ஜலியத்தில்’ காணப்படும் பிறப்பைப் பற்றிய விவரப்பதிவும் ஒரு குகையை அறிமுகப்படுத்துகிறது, ஆனால் அது பெத்லகேமுக்குப் போகும் பாதி வழியில் இருப்பதாக விவரிக்கிறது. சரித்திரப்பூர்வமான எந்த மதிப்பையும் குறித்ததில், அந்த விவரம் தெரிவிப்பதாவது, இந்தப் பாரம்பரியம் குறிப்பாக எந்த ஓர் இடத்தோடும் இதுவரை தொடர்புபடுத்தப்படவில்லை, பிறப்பாலய குகையுடன் நிச்சயமாக இது தொடர்புபடுத்தப்படவில்லை.”
மூன்றாவது நூற்றாண்டு சமய எழுத்தாளர்கள் ஆரிகெனும் யூசிபியஸும் அப்போது அறியப்பட்டிருந்த பாரம்பரியத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தோடு இணைக்கிறார்கள். ஹாமில்டன் விவாதிக்கிறார்: “கதை குறிப்பிட்ட ஒரு குகையோடு ஒரு முறை தொடர்புபடுத்தி பேசப்பட்ட பிறகு, அது தொடர்பற்றது என்று எண்ணுவது சாத்தியமில்லை; கி.பி. 200-க்குப் பின் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்ட குகை தற்போதுள்ள பிறப்பாலய குகையோடு எல்லாவகையிலும் ஒப்பானதாக இருந்தது என்று முடிவுசெய்வதே பாதுகாப்பாக இருக்கிறது.”
எருசலேம் நகரத்திலும் சுற்றுப்புறத்திலும் உலா வருதல் (Walks About the City and Environs of Jerusalem [1842]) என்ற தன்னுடைய புத்தகத்தில் W. H. பார்லெட் இந்தக் குகையைப் பற்றி ஊகித்து மதிப்பிடுகிறார்: “அருகாமையிலிருந்த ஒரு துறவிமடத்தில் வாழ்ந்து மரித்துப் போன செயின்ட் ஜெரோமினால் குறிப்பிடப்பட்டுள்ளபடியால், இதுவே நம்முடைய இரட்சகரின் பிறப்பிடம் என்ற பாரம்பரியம் மதிப்புக்குரிய பழமைச் சின்னமாக இருந்தபோதிலும் குறிப்பிட்ட இடம் நம்பக்கூடிய இடத்திலிருந்து வித்தியாசமாக உள்ளது. பலஸ்தீனாவில் குகைகள் குதிரை லாயங்களாக எப்போதாவது பயன்படுத்தப்படுவது சாத்தியமாக இருந்தபோதிலும், இப்படிப்பட்ட ஒரு நோக்கத்துக்கு வசதியாக இருக்க, இது அதிக ஆழமான அடிநிலமாக உள்ளது; மேலும் கூடுதலாக, ஒருவேளை இப்படிப்பட்ட இடங்கள் மனதில் பதிந்து விடுவதன் காரணமாக, குறிப்பிடத்தக்க வேதப்பூர்வமான சம்பவங்களின் காட்சியைக் குகைகளோடு இணைக்கும் துறவிகளின் மனச்சாய்வை நோக்குமிடத்து, குறிக்கப்பட்ட இடத்துக்கு எதிரான உத்தேசம் பெரும்பாலும் முடிவானதாகவே இருக்கிறது.”
கைவசமிருக்கும் வரலாற்று அத்தாட்சியிலிருந்தும் அதிமுக்கியமாக இயேசுவோ அல்லது அவருடைய சீஷர்களோ அவர் பிறந்த இடத்துக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை என்ற வேதப்பூர்வமான உண்மையிலிருந்தும் நாம் என்ன முடிவுக்கு வரலாம்? பொ.ச. 326-ல் சர்ச் ஆப் நேடிவிட்டிக்காக மகா கான்ஸ்டன்டைனின் தாய் ஹெலீனா அரசி இடத்தைக் குறித்த போது, ஹாமில்டன் குறிப்பிடும் ‘நீண்ட கால பாரம்பரிய கருத்து தொடர்பின்’ அடிப்படையில் அதைச் செய்தாள். அது வரலாற்று அல்லது வேதப்பூர்வமான ஆதாரத்தின் பேரில் அல்ல.
கிறிஸ்து பிறந்த சரியான இடம் அறியப்படவில்லை என்ற மேலுமான முடிவுக்கு இது வழிநடத்துகிறது. ஆகவே உண்மையுள்ளவர்கள் பிறப்பாலய குகை போன்ற இடங்களுக்கு புனித யாத்திரை சென்று அவைகளை வழிபட வேண்டும் என்பது நியாயமாக இருக்கிறதா? இப்படிப்பட்ட காரியம் கிறிஸ்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டிருந்தால், இயேசு தாமேயும் இந்தக் கடமையைக் குறித்து அல்லது அவருடைய பங்கில் இந்த விதமான ஓர் ஆசையைக் குறித்து தம்முடைய சீஷர்களுக்குத் தெரிவித்திருக்க மாட்டாரா? மனிதவர்க்க உலகம் வாசிப்பதற்காக அது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்காதா? இப்பேர்ப்பட்ட அத்தாட்சிகள் பரிசுத்த வேதாகமத்தில் தெளிவாகவே இல்லாததன் காரணமாக நினைவுகூரப்பட தகுதியுள்ளதாக இயேசு எதைக் கருதினார் என்பதை நாம் ஆராய்வது நல்லது.
நாம் ஆராய்ந்து பார்க்கையில், தலைமுறை தலைமுறையாக கிறிஸ்துவின் சீஷர்கள் நினைவுகூர வேண்டியதாயிருந்த ஒரே சம்பவம் அவருடைய பலிக்குரிய மரணமாக இருப்பதை நாம் காண்போம். அவர் வசந்த காலத்தில், தம்முடைய கடைசி பஸ்கா போஜனத்தைத் தம்முடைய சீஷர்களோடு கொண்டாடிய சிறிது நேரத்துக்குப் பின், மரித்தார். அந்தச் சமயத்தில் மாட்ஸாத்தைப் போன்ற புளிப்பில்லா அப்பத்தையும் சிவப்பு திராட்சரசத்தையும் பயன்படுத்தி, அடையாள அர்த்தமுள்ள ஒரு போஜனத்தைக் கொண்டிருக்கும்படியாக கட்டளையிட்டார். பொ.ச. 33, ஏப்ரல் 1-ல் முதன்முதலாக நடைபெற்ற இந்த எளிய ஆசரிப்பின் சம்பந்தமாக அவர் கட்டளையிட்டதாவது: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.”—லூக்கா 22:19, 20.
இயேசுவிடம் தாமேயிருந்து வந்த இந்த வேதப்பூர்வமான கட்டளைக்குக் கீழ்ப்படியும் வகையில், உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்துவின் பலிக்குரிய மரணத்தின் நினைவுகூருதலை ஆண்டுதோறும் ஆசரிக்கிறார்கள். இந்தக் கிறிஸ்தவக் கூட்டத்தை எருசலேமிலுள்ள ஒரு மேலறையில் ஏதோவொரு விசேஷமான இடத்தில் நடத்துவதில்லை, ஏனென்றால் இயேசு அவ்விதமாகச் சொல்லவில்லை. ஆனால் உலகம் முழுவதிலும் அவர்கள் தங்கள் ராஜ்ய மன்றங்களிலும் தங்கள் பிராந்தியத்திலுள்ள பொருத்தமான இடங்களிலும் கூடிவருகிறார்கள். அடுத்த ஆசரிப்பு 1992-ல் ஏப்ரல் 17-ல் நடைபெறும். உங்கள் வீட்டுக்கு அருகாமையிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் ஆஜராகும்படி நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்.
இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிதலாக இந்த முக்கியமான ஆசரிப்புக்கு ஆஜராவதற்கு நீங்கள் எருசலேமுக்கோ அல்லது பெத்லகேமுக்கோ பயணப்பட்டு போகவேண்டியதில்லை. இயேசுவோ அவருடைய சீஷர்களோ, கிறிஸ்தவ வணக்கத்தின் மைய ஸ்தலங்களான இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மாறாக, எருசலேமுக்கு வடக்கே சமாரியாவிலுள்ள ஒரு மலையாகிய கெரிசீமை தன் வணக்கத்துக்கு மைய இடமாக கொண்டிருந்த ஒரு சமாரிய பெண்ணிடம் இயேசு இவ்விதமாகச் சொன்னார்: “ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.”—யோவான் 4:21, 23.
பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்பவர்கள் தங்கள் வணக்கத்தில் பெத்லகேம் போன்ற விசேஷித்த ஸ்தலங்களின் மீதோ அல்லது விக்கிரகங்கள் போன்ற பொருட்களின் மீதோ சார்ந்திருப்பதில்லை. அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னான்: ‘இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோம், ஏனென்றால் நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்.’—2 கொரிந்தியர் 5:6, 7.
என்றபோதிலும் ஒருவர் எவ்விதமாக கடவுள் ஏற்கத் தகுந்த வகையில் அவரை தொழுது கொள்ள முடியும் என்பதாக இன்னும் ஒருவர் யோசிக்கக்கூடும். அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் உங்கள் வீட்டுக்கு வரும்போது அவரை அல்லது அவளை தயவுசெய்து கேளுங்கள். (w90 12/15)
[பக்கம் 22-ன் படங்கள்]
குளிர் காலத்தில், பனி பெத்லகேம் அருகேயுள்ள நிலத்தின் மேற்பரப்பை மூடிக்கொள்ளக்கூடும். மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளோடு வெளியே படுத்திருப்பார்களா?
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 23-ன் படங்கள்]
பெத்லகேமிலுள்ள சர்ச் ஆப் நேடிவிட்டியும் அதன் நிலத்தின் கீழுள்ள குகையும்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[படத்திற்கான நன்றி]
Garo Nalbandian