“கண்காணியானவன் . . . தன்னடக்கமுள்ளவனாய் இருக்க வேண்டும்”
“கண்காணியானவன் . . . தன்னடக்கமுள்ளவனாய் இருக்க வேண்டும்”—தீத்து 1:7, 8, NW.
1, 2. ஆரஞ்சின் வில்லியம் கட்டுப்பாட்டுக்கு என்ன முன்மாதிரியை அளித்தார்? பயனுள்ள என்ன விளைவோடு?
உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டை உட்படுத்தும் மிகவும் குறிப்பிடத்தக்க முன்மாதிரியை சரித்திரம் அளிக்கிறது. பதினாறாவது நூற்றாண்டின் மத்தியில், ஆரஞ்சின் ஆலந்து நாட்டு இளவரசன் வில்லியம், பிரான்ஸ் அரசன் இரண்டாம் ஹென்றியோடு ஒரு வேட்டை பயணத்தில் சென்றிருந்தார். அரசன், ஸ்பேன் நாட்டு அரசனும் தானும் சேர்ந்து பிரான்சிலும் நெதர்லாந்திலுமிருந்த—உண்மையில் எல்லா கிறிஸ்தவமண்டலத்திலுமுள்ள—புராட்டஸ்டன்ட் மதப்பிரிவைச் சேர்ந்த அனைவரையும் துடைத்தழிக்க தீட்டியிருந்த திட்டத்தை வில்லியமுக்குத் தெரிவித்தார். அரசன் ஹென்றி, இளம் மனிதனாகிய வில்லியம் தன்னைப் போலவே ஒரு பக்தியுள்ள கத்தோலிக்கன் என்பதாக நினைத்து சதித்திட்டத்தின் விவரங்கள் அனைத்தையும் தெரிவித்துவிட்டார். வில்லியம் கேள்விப்பட்ட விஷயங்கள் அவரை வெகுவாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது, ஏனென்றால், அவருடைய மிக நெருங்கிய நண்பர்களில் பலர் புராட்டஸ்டன்ட் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர், ஆனால் அவருயை உணர்ச்சிகளை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை; மாறாக அரசன் அவருக்குக் கொடுத்த எல்லா விவரங்களிலும் இவர் மிகுதியான அக்கறையைக் காண்பித்தார்.
2 என்றபோதிலும், விரைவாக வில்லியம் சதித்திட்டத்தைச் தோல்வியுறச் செய்வதற்குத் திட்டங்களை செயல்படுத்தினார். இறுதியில் இது ஸ்பானிய கத்தோலிக்க ஆதிக்கத்திலிருந்து நெதர்லாந்தை விடுவிப்பதற்கு வழிநடத்தியது. வில்லியம் சதித்திட்டத்தை முதலில் கேட்ட போது தன்னடக்கத்தை அப்பியாசித்ததன் காரணமாக, அவர் “மெளன வில்லியம்” என்பதாக அறியப்படலானார். ஆரஞ்சின் வில்லியம் அத்தனை வெற்றிகண்டவராக இருந்தபடியால், நாம் இவ்விதமாகச் சொல்லப்படுகிறோம்: “அவரே ஆலந்து குடியரசின் சுதந்தரம் மற்றும் மேன்மையின் மெய்யான ஸ்தாபகர்.”
3. கிறிஸ்தவ மூப்பர்கள் தன்னடக்கத்தை அப்பியாசிக்கையில் நன்மையடைவது யார்?
3 தன் கட்டுப்பாட்டின் காரணமாக மெளன வில்லியம் தனக்கும் தன் ஜனங்களுக்கும் நன்மையைக் கொண்டு வந்தார். அதேவிதமாகவே, பரிசுத்த ஆவியின் கனியாகிய தன்னடக்கத்தை இன்று கிறிஸ்தவ மூப்பர்கள் அல்லது கண்காணிகள் வெளிப்படுத்த வேண்டும். (கலாத்தியர் 5:22, 23) இந்தப் பண்பை அப்பியாசிப்பதன் மூலம் அவர்கள் தங்களுக்கும் சபைக்கும் நன்மையைக் கொண்டு வருகிறார்கள். மறுபட்சத்தில், அவர்களுடய பங்கில் தன்னடக்கத்தை அப்பியாசிக்க தவறுவது மிகப் பெரிய தீங்கை இழைத்துவிடக்கூடும்.
தன்னடக்கம்—மூப்பர்களுக்கு இன்றியமையாத ஒரு தேவை
4. அப்போஸ்தலனாகிய பவுலின் எந்த புத்திமதி, மூப்பர்கள் தன்னடக்கத்தை அப்பியாசிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது?
4 மூப்பராக இருந்த பவுல் தன்னடக்கத்தின் முக்கியத்துவத்தை மதித்துணர்ந்தார். எபேசுவிலிருந்து அவரிடம் வந்திருந்த மூப்பர்களுக்குப் புத்திமதி கூறுகையில் அவர் அவர்களிடம் இவ்விதமாகச் சொன்னார்: “உங்களைக் குறித்தும் . . . மந்தை முழுவதையுங் குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்.” மற்ற காரியங்களோடு கூட, தங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருப்பதில், தன்னடக்கத்தை அப்பியாசிக்க, தங்கள் நடத்தையைக் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியமும் உட்பட்டிருந்தது. தீமோத்தேயுவுக்கு எழுதுகையில் பவுல் இதே குறிப்பை எழுதினார்: “உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு.” தாங்கள் என்ன பிரசங்கித்தார்களோ அதை கடைபிடிப்பதைவிட, பிரசங்கம் செய்வதிலேயே அதிக அக்கறையுடையவர்களாயிருக்கக்கூடிய சிலருடைய மனித மனச்சாய்வைக் குறித்து பவுல் உணர்வுள்ளவராக இருந்ததை இப்படிப்பட்ட புத்திமதிகள் காண்பித்தன. ஆகவே தங்களுக்குத் தாங்களே கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை அவர் முதலாவதாக வலியுறுத்தினார்.—அப்போஸ்தலர் 20:28; 1 தீமோத்தேயு 4:16.
5. கிறிஸ்தவ மூப்பர்கள் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்கள்? வேதாகமத்தில் அவர்களுக்குரிய தகுதிகள் எங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன?
5 ஆண்டுகளினூடாக, மூப்பர்களின் வேதபூர்வமான கடமை படிப்படியாக தெளிவாகியிருக்கிறது. இன்று மூப்பர் ஸ்தானம், நியமிக்கப்படும் ஒன்றாக இருப்பதை நாம் காண்கிறோம். மூப்பர்கள், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவினால் அல்லது அதனுடைய நேரடியான பிரதிநிதிகளால் நியமிக்கப்படுகிறார்கள். அந்தக் குழு, “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யை பிரதிநிதித்துவம் செய்கிறது. (மத்தேயு 24:45–47) ஒரு கிறிஸ்தவ கண்காணியாக அல்லது மூப்பராவதற்குரிய தகுதிகள், முக்கியமாக அப்போஸ்தலனாகிய பவுலால் 1 தீமோத்தேயு 3:1–7 மற்றும் தீத்து 1:5–9-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
6, 7. மூப்பர்களுக்குரிய குறிப்பான எந்தத் தகுதிகள் தன்னடக்கத்தை தேவைப்படுத்துகிறது?
6 கண்காணி பழக்க வழக்கங்களில் மிதமானவராக இருக்க வேண்டும் என்று 1 தீமோத்தேயு 3:2, 3-ல் பவுல் குறிப்பிடுகிறார். இதுவும், ஒரு மூப்பர் ஒழுங்குள்ளவராக இருக்க வேண்டிய அவசியமும் தன்னடக்கத்தை அப்பியாசிப்பதைக் கேட்கிறது. ஒரு மூப்பராக இருக்க தகுதி பெறுகிறவர் அடிக்கிறவராக, சண்டை பண்ணுகிறவராக இருப்பதில்லை. இந்தத் தகுதிகளும்கூட அவர் தன்னடக்கமுள்ளவராக இருப்பதைத் தேவைப்படுத்துகிறது. மேலுமாக ஒரு மூப்பர் குடி வெறியனாக, மதுபானப் பிரியனாக இல்லாதிருப்பதற்கு அவர் தன்னடக்கத்தை அப்பியாசிக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 3:2, 3 அடிக்குறிப்புகளையும் கூட பார்க்கவும்.
7 தீத்து 1:7, 8-ல் பவுல், கண்காணி கட்டாயமாக தன்னடக்கமுள்ளவனாயிருக்க வேண்டும் என்பதாகத் திட்டவட்டமாக குறிப்பிட்டார். என்றபோதிலும், இந்த வசனங்களில் வரிசைப்படுத்தப்பட்ட மற்ற தேவைகளில் எத்தனை தன்னடக்கத்தை உட்படுத்துகிறது என்பதைக் கவனியுங்கள். உதாரணமாக ஒரு மூப்பர் குற்றஞ்சாட்டப்படாதவராக இருக்க வேண்டும். நிச்சயமாகவே, ஒரு மூப்பர் தன்னடக்கத்தை அப்பியாசித்தாலொழிய இந்தத் தேவைகளை நிறைவுசெய்ய முடியாது.
மற்றவர்களோடு செயல்தொடர்பு கொள்ளும்போது
8. புத்திமதியைக் கொடுக்கையில், மூப்பர்களுக்குத் தேவையாயிருக்கும் என்ன குணாதிசயங்கள் தன்னடக்கத்தின் அவசியத்தை வற்புறுத்துகின்றன?
8 மறுபடியுமாக, ஒரு கண்காணி உடன் விசுவாசிகளோடு தொடர்பு கொள்ளும் போது பொறுமையாயும் நீடிய சாந்தமாயுமிருக்க வேண்டும், இது தன்னடக்கத்தைக் கேட்பதாயிருக்கிறது. உதாரணமாக கலாத்தியர் 6:1-ல் நாம் இவ்விதமாக வாசிக்கிறோம்: “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் [முக்கியமாக மூப்பர்கள்] சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிச்கையாயிரு.” சாந்தமான ஆவியை வெளிப்படுத்துவது தன்னடக்கத்தைக் கேட்கிறது. உண்மையில் ஒருவர் தன்னைக் குறித்து எச்சரிக்கையாயிருப்பதில் தன்னடக்கமும்கூட உட்பட்டிருக்கிறது. அதேவிதமாகவே இக்கட்டிலிருக்கும் ஒரு நபருக்கு உதவி செய்ய ஒரு மூப்பர் கேட்கப்படுகையில் தன்னடக்கம் மிகவும் முக்கியமாக இருக்கிறது. அந்த நபரைக் குறித்து மூப்பர் என்ன நினைத்தாலும் சரி, அவர் தயவாயும், பொறுமையாயும், புரிந்துகொள்கிறவராயும் இருத்தல் வேண்டும். ஆலோசனை கொடுக்க விரைவதற்குப் பதிலாக மூப்பர் செவிசாய்க்க மனமுள்ளவராக இருந்து அவரை உண்மையில் தொந்தரவு செய்வது என்ன என்பதை அவரிடமிருந்தே வரவழைக்க வேண்டும்.
9. வெகுவாக குழம்பி போயிருக்கும் சகோதரர்களோடு செயல்தொடர்பு கொள்கையில் மூப்பர்கள் என்ன ஆலோசனையை மனதில் கொண்டிருக்க வேண்டும்?
9 விசேஷமாக வெகுவாக குழம்பி போயிருக்கும் ஆட்களோடு செயல்தொடர்பு கொள்ளும்போது, யாக்கோபு 1:19-லுள்ள புத்திமதி பொருத்தமாக உள்ளது: “என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.” ஆம் குறிப்பாக கோபம் அல்லது உணர்ச்சிவசப்பட்ட பிரதிபலிப்புகளை எதிர்ப்படுகையில், அதேவிதமாக பிரதிபலிக்காதபடி ஒரு மூப்பர் கவனமாக இருத்தல் வேண்டும். உணர்ச்சிகள் மிகுந்த வார்த்தைகளை உணர்ச்சிகள் மிகுந்த வார்த்தைகளைக் கொண்டு சந்திக்காமலிருக்க, “தீமைக்குத் தீமை செய்யாதிருக்க” தன்னடக்கம் தேவைப்படுகிறது. (ரோமர் 12:17) அதேப் போன்று பிரதிபலிப்பது, மோசமான நிலைமையை படுமோசமாக்கிவிடுகிறது. ஆகவே இங்கும்கூட மூப்பர்களுக்கு “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்” என்பதாக நினைப்பூட்டி கடவுளுடைய வார்த்தை நேர்த்தியான ஆலோசனையைத் தருகிறது.—நீதிமொழிகள் 15:1.
மூப்பர்கள் கூட்டங்களிலும் நீதிவிசாரணைகளிலும் தன்னடக்கம்
10, 11. மூப்பர்கள் கூட்டங்களில், தன்னடக்கம் தேவை என்பதைக் காண்பிக்கும் என்ன காரியங்கள் சம்பவித்திருக்கின்றன?
10 கிறிஸ்தவ கண்காணிகள், தன்னடக்கத்தை அப்பியாசிக்க கவனமாயிருக்க வேண்டிய மற்றொரு சந்தர்ப்பம், மூப்பர் கூட்டங்கள் ஆகும். உண்மைக்காகவும் நீதிக்காகவும் வெளிப்படையாக அமைதியாக பேசுவதற்கு சில சமயங்களில் மிகுதியாக தன்னடக்கம் தேவையாக இருக்கிறது. ஒரு கலந்துரையாடலில் மேலுயர்ந்து நிற்க முயற்சிப்பதை தவிர்ப்பதற்கும்கூட தன்னடக்கம் தேவை. இப்படிப்பட்ட ஓர் இயற்கையான மனச்சாய்வு ஒரு மூப்பருக்கு இருக்கமானால் மற்றொரு மூப்பர் அவருக்குப் புத்திமதி கொடுப்பது தயவானச் செயலாக இருக்கும்.—3 யோவான் 9-ஐ ஒப்பிடவும்.
11 மேலுமாக மூப்பர் கூட்டங்களின் போது அளவுக்கு அதிகமாக ஆர்வமுள்ள ஒரு மூப்பர் உணர்ச்சிவயப்பட்டு தன் குரலை உயர்த்தவும்கூட தூண்டப்படலாம். இப்படிப்பட்ட செயல்கள் தன்னடக்கமின்மையை எவ்வளவு மிகுதியாக காட்டிக்கொடுத்துவிடுகிறது! அவை உண்மையில் இரட்டிப்பாக தன்னையே தோற்கடித்துக் கொள்வதாக இருக்கிறது. மறுபட்சத்தில் ஒரு நபர் எந்த அளவுக்குத் தன்னடக்கத்தை இழந்துவிடுகிறாரோ அந்த அளவுக்குத் தன் சொந்த நிலையையே அவர் பலவீனப்படுத்திக் கொள்கிறார், உணர்ச்சிகள் பகுத்தறிவை மறைத்துவிட அனுமதித்துவிடுகிறார். மறுபட்சத்தில், ஒரு நபர் உணர்ச்சிவசப்படும் அளவுக்கு அவர் அவருடைய உடன்மூப்பர்களை நிலைகுலைந்து போக அல்லது எதிராக செயல்படவும்கூட வழிசெய்துவிடுகிறார். தவிர, மூப்பர்கள் கவனமுள்ளவர்களாயிருந்தாலொழிய முனைப்பான கருத்து வேறுபாடுகள், அவர்கள் குழுவின் மத்தியில் பிரிவினைகளை உண்டுபண்ணிவிடக்கூடும். இது அவர்களுக்கும் சபைக்கும் தீங்கிழைப்பதாக இருக்கும்.—அப்போஸ்தலர் 15:36–40.
12. என்ன நிலைமைகளைக் கையாளும் போது, மூப்பர்கள் தன்னடக்கத்தை அப்பியாசிக்க கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
12 பாரபட்சத்தை அல்லது தங்கள் அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய்வதைத் தவிர்ப்பதற்கும்கூட தன்னடக்கம் மூப்பர்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறது. பிறர் விருப்பத்துக்கு இணங்கச் செயலாற்றுவது, அபூரண மனித சலுகைகள் ஒருவர் சொல்லும் அல்லது செய்யும் காரியங்களின் மீது செல்வாக்குச் செலுத்த அனுமதிப்பது அத்தனை எளிதாக இருக்கின்றது! மறுபடியும் மறுபடியுமாக மூப்பர்கள் தங்களுடைய பிள்ளைகளில் ஒருவரோ அல்லது வேறு ஓர் உறவினரோ தவறான நடத்தையில் குற்றமுள்ளவர்களாக காணப்பட்ட போது, உறுதியாக செயல்பட தவறியிருக்கின்றனர். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் இரத்த பாசங்கள் நியாயமான நடவடிக்கையைத் தாமதப்படுத்த அனுமதியாதிருப்பதற்குத் தன்னடக்கம் தேவைப்படுகிறது.—உபாகமம் 10:17.
13. நீதிவிசாரணைகளின் போது, மூப்பர்களுக்கு ஏன் விசேஷமாக தன்னடக்கம் தேவையாக இருக்கிறது?
13 தன்னடக்கம் அதிமுக்கியமாக இருக்கும் மற்றொரு சமயம் நீதிவிசாரணைகளின் போதாகும். மூப்பர்கள் தவறாக உணர்ச்சியினால் பாதிக்கப்படாதபடிக்கு மிகுதியாக தன்னடக்கத்தை அப்பியாசிக்க வேண்டும். கண்ணீரினால் அவர்கள் மிக எளிதில் தடுமாறிவிடக்கூடாது. அதே சமயத்தில், விசுவாச துரோகிகளை கையாளும் போது சம்பவிக்கிற வண்ணமாக, குற்றச்சாட்டுகள் குவிக்கப்படுகையில், மூப்பரின் மீது அவதூறு சுமத்தப்படும் போது அவர் மனஅமைதியை இழந்துவிடாதபடிக்குக் கவனமுள்ளவராக இருக்க வேண்டும். இங்கே அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகள் வெகு பொருத்தமாக உள்ளன: “கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாயிருக்க வேண்டும்.” அழுத்தத்தின் கீழ் சாந்தத்தை அப்பியாசிக்க தன்னடக்கம் தேவையாயிருக்கிறது. “கர்த்தருடைய ஊழியக்காரன்”, “போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும்” என்பதாக பவுல் தொடர்ந்து காண்பிக்கிறார். சாந்தத்தை வெளிப்படுத்தி, எதிர்ப்பைக் கையாளும்போது கட்டுப்பாட்டுக்குள் தன்னை வைத்திருப்பதற்கு மிகுதியாக தன்னடக்கம் தேவைப்படுகிறது.—2 தீமோத்தேயு 2:24, 25.
எதிர்பாலாரோடு தன்னடக்கம்
14. எதிர்பாலாரோடு கொள்ளும் செயல்தொடர்புகளில் மூப்பர்கள் என்ன நேர்த்தியான புத்திமதிக்குச் செவிசாய்க்க வேண்டும்?
14 எதிர்பாலாரோடு செயல்தொடர்பு கொள்ளும் விஷயம் வருகையில், தன்னடக்கத்தை அப்பியாசிக்க மூப்பர்கள் மிகுந்த எச்சரிப்புடன் இருக்க வேண்டும். ஒரு சகோதரியிடம் மேய்க்கும் சந்திப்பைச் செய்ய ஒரு மூப்பர் தனியாகச் செல்வது பொருத்தமற்றதாகும். மூப்பர், மற்றொரு மூப்பரோடு அல்லது ஓர் உதவி ஊழியரோடு செல்ல வேண்டும். இந்தப் பிரச்னையை மதித்துணர்ந்து தானே, பவுல் மூப்பனாகிய தீமோத்தேயுவுக்கு இவ்விதமாக புத்திமதி சொன்னார்: “முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப் போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப் போலவும் பாவித்து புத்தி சொல்லு.” (1 தீமோத்தேயு 5:1, 2) சில மூப்பர்கள் ஒரு தகப்பன் செய்வது போன்ற ஒரு சைகையோடு ஒரு சகோதரியின் மீது கைவைப்பது காணப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளக்கூடும், ஏனென்றால், சுத்தமான கிறிஸ்தவ சகோதர பாசத்துக்குப் பதிலாக, ஒரு காதல் உணர்ச்சி இப்படிப்பட்ட ஒரு சைகையைத் தூண்டக்கூடும்.—1 கொரிந்தியர் 7:1 ஒப்பிடவும்.
15. ஒரு மூப்பர் தன்னடக்கத்தை அப்பியாசியாதபோது யெகோவாவின் நாமத்துக்கு வரக்கூடிய நிந்தனையைக் குறிப்பிட்ட ஒரு சம்பவம் எவ்வாறு உயர்த்திக் காண்பிக்கிறது?
15 ஒரு சில மூப்பர்கள் சபையிலுள்ள சகோதரிகளோடு தங்கள் செயல்தொடர்புகளில் தன்னடக்கத்தை அப்பியாசிக்க தவறியதால் சத்தியத்துக்கு எவ்வளவு தீங்கு விளைந்திருக்கிறது! ஒரு சில வருடங்களுக்கு முன்பு, சாட்சியாக இல்லாத ஒரு கணவனைக் கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவ சகோதரியோடு ஒரு மூப்பர் வேசித்தனம் செய்ததன் காரணமாக அவர் சபை நீக்கம் செய்யப்பட்டார். அந்த முன்னாள் மூப்பரின் சபை நீக்க அறிவிப்பு செய்யப்பட்ட அதே இரவில், ஆத்திரமடைந்த கணவன் ஒரு சுழல் துப்பாக்கியோடு ராஜ்ய மன்றத்துக்குள் பாய்ந்து வந்து குற்றவாளிகள் இருவரையும் பார்த்துச் சுட்டார். ஒருவரும் கொல்லப்படவில்லை, உடனடியாக அவரிடமிருந்து துப்பாக்கி பறிக்கப்பட்டது. அடுத்த நாள் ஒரு முக்கிய செய்தித்தாள், அதன் முதல் பக்கத்தில் ‘சர்ச்சில் துப்பாக்கிசூடு’ என்ற செய்தியை வெளியிட்டது. மூப்பரின் தன்னடக்கமின்மை சபையின் மேலும் யெகோவாவின் நாமத்தின் மேலும் என்னே நிந்தையைக் கொண்டுவந்தது!
மற்ற பகுதிகளில் தன்னடக்கம்
16. பொதுபேச்சுகளை கொடுக்கையில் மூப்பர்கள் ஏன் தன்னடக்கத்தை அப்பியாசிக்க கவனமுள்ளவர்களாயிருக்க வேண்டும்?
16 ஒரு மூப்பர் பொதுபேச்சைக் கொடுக்கையிலும்கூட தன்னடக்கம் வெகுவாகத் தேவைப்படுகிறது. ஒரு பொது பேச்சாளர் நம்பிக்கை மற்றும் சமநிலைக்கு ஒரு மாதிரியாக இருக்க வேண்டும். சிலர் சிரிப்பை வரவழைக்க வேண்டும் என்பதற்காகவே அநேக வேடிக்கையான குறிப்புகளின் மூலம் தாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார்கள். இது பார்வையாளர்களை பிரியப்படுத்தும் ஆசைக்கு இணங்கிப் போவதைக் காண்பிக்கலாம். நிச்சயமாக சோதனைக்கு இணங்கிப் போதல் அனைத்துமே தன்னடக்கமின்மையாக இருக்கிறது. ஒரு பேச்சைக் கொடுக்கையில், குறித்த நேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்வதும்கூட தன்னடக்கமின்மையையும் போதிய தயாரிப்பு இல்லாமையையும் காண்பிக்கிறது என்ற சொல்லப்படலாம்.
17, 18. ஒரு மூப்பர் தன்னுடைய பல்வேறு உத்தரவாதங்களையும் சமநிலைப்படுத்துவதில் தன்னடக்கம் என்ன பங்கை வகிக்கிறது?
17 கடினமாக உழைக்கும் ஒவ்வொரு மூப்பரும் அவருடைய நேரத்தையும் சக்திகளையும் கேட்கும் பல்வேறு காரியங்களையும் சமநிலைப்படுத்தும் சவாலை எதிர்பட வேண்டும். ஏதாவது ஒரு இயல்பு கடந்த அளவுக்குச் சென்றுவிடாதிருக்க தன்னடக்கம் தேவையாகும். ஒரு சில மூப்பர்கள் சபையின் தேவைகளைக் குறித்து அவ்வளவு அக்கறையுள்ளவர்களாக இருந்து தங்கள் குடும்பங்களை அசட்டை செய்துவிட்டிருக்கின்றனர். ஆகவே ஒரு சகோதரி, ஒரு மூப்பரின் மனைவியிடம் அந்த மூப்பர் தன்னிடமாக செய்த நேர்த்தியான மேய்ப்பு சந்திப்பைப் பற்றி சொன்னபோது மூப்பரின் மனைவி, “எப்போதாவது எனக்கு அப்படி ஒரு மேய்ப்பு சந்திப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்!” என்று சொன்னாள்.—1 தீமோத்தேயு 3:2, 4, 5.
18 ஒரு மூப்பர் தனிப்பட்ட படிப்பில் செலவிடும் நேரத்தை வெளி ஊழியத்தில் அல்லது மேய்க்கும் சந்திப்புகளில் செலவிடும் நேரத்தோடு சமநிலைப்படுத்தவும்கூட அவருக்குத் தன்னடக்கம் தேவையாக இருக்கிறது. மனித இருதயம் ஏமாற்றும் தன்மையுள்ளதாக இருப்பதை முன்னிட்டுப் பார்க்கையில், ஒரு மூப்பர் தனக்கு அதிக இன்பந்தரக்கூடிய காரியத்தில் அவர் செலவிட வேண்டிய நேரத்துக்கும் அதிகமான நேரத்தைச் செலவிடுவது அவருக்கு மிகவும் சுலபமாகும். அவருக்கு புத்தகங்கள் விருப்பமாக இருக்குமென்றால், அவர் செலவிட வேண்டிய நேரத்துக்கும் அதிகமான நேரத்தை தனிப்பட்ட படிப்பில் செலவழித்துக் கொண்டிருக்கலாம். வீட்டுக்கு வீடு ஊழியம் சற்றே கடினமாக கண்டால், மேய்க்கும் சந்திப்புகளைச் செய்வதில் அக்கறையுள்ளவராக இதை அசட்டை செய்வதற்குச் சாக்குபோக்குகளைக் காணமுடியும்.
19. மூப்பர்களுக்கிருக்கும் என்ன பொறுப்பு தன்னடக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது?
19 இரகசியத்தைக் காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும்கூட மூப்பர் உறுதியான தன்னடக்கத்தைக் கடைபிடிக்க எச்சரிப்பாயிருப்பதைத் தேவைப்படுத்துகிறது. பின்வரும் புத்திமதி இங்கே பொருத்தமாக உள்ளது: “மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.” (நீதிமொழிகள் 25:9) மூப்பர்கள் மத்தியில் மிகப்பரவலாக மீறப்படும் தகுதிகளில் இது ஒன்றாக இருக்கக்கூடும் என்பதை அனுபவம் காட்டுகிறது. ஒரு மூப்பர் நல்ல பேச்சுத்தொடர்பைக் கொண்டிருக்கக்கூடிய ஞானமுள்ள மற்றும் அன்பான மனைவியைப் பெற்றிருப்பாரேயானால், இரகசியமாக வைக்கப்பட வேண்டிய இயல்புடைய விஷயங்களைக் கலந்து பேசவோ அல்லது வெறுமென குறிப்பிடும் மனச்சாய்வையோ கொண்டிருக்கக்கூடும். ஆனால் இது தகுதியற்றதும் மிகவும் ஞானமற்றதுமாக இருக்கிறது. முதலாவதாக, அது நம்பிக்கை துரோகமாக இருக்கிறது. ஆவிக்குரிய சகோதர சகோதரிகள், விஷயம் கண்டிப்பாக இரகசியமாக வைக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதன் காரணமாக மூப்பர்களிடம் வந்து நம்பிக்கையாக தெரிவிக்கிறார்கள். இரகசியமான செய்திகளை ஒருவருடைய மனைவியிடம் கூறுவது தவறானதாகவும், ஞானமற்றதாகவும், அன்பற்றதாகவும்கூட உள்ளது, ஏனென்றால், இது அவள் மீது அனாவசியமான சுமையை வைக்கிறது.—நீதிமொழிகள் 10:19; 11:13.
20. தன்னடக்கத்தை அப்பியாசிப்பது மூப்பர்களுக்கு ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது?
20 சந்தேகமின்றி, தன்னடக்கம் அத்தனை முக்கியமாகவும் விசேஷமாக மூப்பர்களுக்கு அவ்விதமாகவும் இருக்கிறது! யெகோவாவின் மக்கள் மத்தியில் முன்சென்று வழிநடத்தும் சிலாக்கியம் ஒப்படைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அவர்கள் அதிக உத்தரவாதமுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகம் கொடுக்கப்பட்டிருப்பதால், அவர்களிடம் அதிகம் கேட்கப்படும். (லூக்கா 12:48; 16:10; யாக்கோபு 3:1 ஒப்பிடவும்.) மற்றவர்களுக்கு நேர்த்தியான ஒரு முன்மாதிரியை வைப்பது மூப்பர்களின் சிலாக்கியமாகவும் கடமையாகவும் இருக்கிறது. அதற்கும் மேலாக, நியமிக்கப்பட்ட மூப்பர்கள் மற்றவர்களைவிட அதிகமாக நன்மையையோ அல்லது அதிகமாக தீமையையோ செய்யக்கூடிய ஒரு ஸ்தானத்தில் இருக்கிறார்கள். இது அவர்கள் தன்னடக்கத்தை அப்பியாசிக்கிறார்களா இல்லையா என்பதையே அதிகமாகச் சார்ந்திருக்கிறது. பவுல் பின்வருமாறு சொன்னது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “கண்காணியானவன் . . . தன்னடக்கமுள்ளவனாயிருக்க வேண்டும்.” (w91 11/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻மூப்பர்களுக்குரிய என்ன வேதப்பூர்வமான தேவைகள் அவர்கள் தன்னடக்கத்தை அப்பியாசிக்க வேண்டும் என்பதைக் காண்பிக்கிறது?
◻உடன்விசுவாசிகளோடு செயல்தொடர்பு கொள்ளும்போது மூப்பர்களுக்கு ஏன் தன்னடக்கம் அவசியமாயிருக்கிறது?
◻மூப்பர்கள் கூட்டங்களில் தன்னடக்கம் எவ்வாறு அப்பியாசிக்கப்பட வேண்டும்?
◻மூப்பர்கள் இரகசியத்தைக் காத்துக்கொள்ள வேண்டிய தேவையினால் என்ன சவால் முன்வைக்கப்படுகிறது?
[பக்கம் 20-ன் படம்]
மூப்பர் கூட்டங்களில் தன்னடக்கத்தை வெளிப்படுத்துவது இன்றியமையாததாகும்
[பக்கம் 23-ன் படம்]
கிறிஸ்தவ மூப்பர் தன்னடக்கத்தை அப்பியாசித்து இரகசியங்களைக் காத்துக்கொள்ள வேண்டும்