கிறிஸ்மஸ் இயேசுவை வரவேற்க அதுதான் வழியா?
வெகு காலமாக காத்திருந்த மேசியாவின், இரட்சகரின் பிறப்பு நிச்சயமாகவே களிகூறுவதற்குரிய ஒரு காலமாக இருந்தது. பெத்லகேமின் சுற்றுப்புறத்தில் ஒரு தேவதூதன் மேய்ப்பர்களிடம், “இதோ, எல்லா மக்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்று அறிவித்தார். திரளான தேவதூதர்கள் சேர்ந்து கொண்டு கடவுளை இவ்வாறு துதித்தனர்: “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே நற்பிரியமுள்ள மனிதர்மேல் சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக.” (லூக்கா 2:10-14, NW) அன்று கிறிஸ்து பூமிக்கு வந்ததற்காக சந்தோஷத்தைக் காட்டிய தேவதூதர்கள் போன்று கிறிஸ்தவர்களும் செய்ய வேண்டுமென்று சிலர் முடிவுக்கு வரலாம்.
இது தூதர்கள் துதிப்பாடல்களை ஆரவாரித்த முதல் பைபிள் பதிவு அல்ல. பூமியின் அஸ்திபாரம் போடப்பட்ட போது, “விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்கள்.” (யோபு 38:4-7) இந்த நிகழ்ச்சியின் சரியான தேதி பைபிளில் பதிவு செய்யப்படவில்லை. (ஆதியாகமம் 1:1, 14-18) அந்தச் சமயமானது எவ்வளவு சந்தோஷமானதாயிருந்தாலும், தேவதூதர்கள் கெம்பீரித்ததால், பூமியின் சிருஷ்டிப்பை வருடாவருடம் கொண்டாட வேண்டுமென்று, ஒருவேளை அதை நினைவுகூர ஒரு புறமதப் பண்டிகையை தெரிந்தெடுத்து தழுவிக்கொள்ள வேண்டுமென்று கிறிஸ்தவர்கள் விவாதிக்கவில்லை.
என்றபோதிலும், கிறிஸ்மஸ் கொண்டாடும் ஜனங்கள், இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கு இதையேதான் செய்கின்றனர். அதிக நம்பத்தகுந்த என்சைக்ளோபீடியாவில் “கிறிஸ்மஸ்” என்ற தலைப்பின் கீழ் பார்க்கையில், கிறிஸ்து பிறந்த நாள் அறியப்படவில்லை என்பதை நிச்சயப்படுத்துகின்றது. அந்த நாள் குறித்ததில் பைபிள் மெளனம் சாதிக்கின்றது.
“எக்காளமும் விளங்காத சத்தம் தொனித்தால்”
பூர்வ கொரிந்துவிலிருந்த சபைக்கு ஒழுங்கின்மையின் பேரில் திருத்தம் கொடுக்கையில் அப்போஸ்தலனாகிய பவுல் “தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல் சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்” என்று எழுதுகிறார். அதே சூழமைவில் அவர் கேட்கிறார்: “எக்காளமும் விளங்காத சத்தம் தொனித்தால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம் பண்ணுவான்?” (1 கொரிந்தியர் 14:8, 33) இப்பொழுது, கிறிஸ்தவர்கள் தம் குமாரன் பூமியில் பிறந்ததைக் கொண்டாட வேண்டுமென்று ஒழுங்கின் தேவன் நோக்கம் கொண்டிருந்தால், அபூரண மனிதர்கள் மனம்போனபடி புறமதப் பண்டிகைகளினிடையே ஒரு தேதியைத் தெரிந்து கொண்டு, தேவபக்தியற்ற பழக்கங்களைத் தழுவிக்கொள்ளும்படி விடுவாரா?
யெகோவா தேவன் தம்முடைய ஜனத்திடம் இவ்வகையில் தொடர்பு கொள்வதில்லை என்பதை சில பைபிள் உதாரணங்களை ஆராய்ச்சி செய்வது தெளிவுபடுத்துகிறது. மோசேயின் சட்டத்தின் கீழ் இஸ்ரவேலர் வருடாந்தரப் பண்டிகைகளைக் கொண்டாட அவர் தேவைப்படுத்திய போது, தேவன் குறிப்பான தேதிகளை நியமித்து அந்த விழாக் காலங்களை எப்படி அநுசரிக்க வேண்டுமென்று அவர்களுக்குச் சொன்னார். (யாத்திராகமம் 23:14-17; லேவியராகமம் 23:34-43) இயேசு கிறிஸ்து, தம்முடைய பிறந்த நாளை நினைவுகூர வேண்டும் என்று ஒருபோதும் கட்டளையிடாத போதிலும், அவரைப் பின்பற்றுபவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளை அநுசரிக்க வேண்டுமென்று கட்டளையிட்டார். பொ.ச. 33, நைசான் 14, தாம் “காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே,” இயேசு புளிப்பில்லா அப்பத்தையும், திராட்சரசத்தையும் உபயோகித்து, கர்த்தருடைய இராப்போஜனக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார். அவர் கட்டளையிட்டார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” (1 கொரிந்தியர் 11:23, 24) எப்பொழுது, எப்படிக் கர்த்தருடைய இராப்போஜனத்தை அனுசரிக்க வேண்டுமென்பது பற்றிய எக்காளமானது, தெளிவாகவும், தவறாகப் புரிந்துகொள்ள முடியாத விதத்திலும் உள்ளது. அப்பொழுது கிறிஸ்மஸ் பற்றியது என்ன? பைபிளில் எந்த இடத்திலும் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட வேண்டுமென்ற கட்டளையை நாம் காண முடிவதில்லை, எப்பொழுது அல்லது எவ்வாறு கொண்டாட வேண்டும் என்றும் அது சொல்வதில்லை.
‘மக்களை ஆதாயப்படுத்திக் கொள்ள’
“ஓ! ஆமாம், கிறிஸ்மஸ் புறமத தொடக்கத்தைக் கொண்டது என்பது எனக்குத் தெரியும், ஆனால் டிசம்பர் 25 தேதியில் சாதாரண மனிதர்கள் கிறிஸ்தவத்தில் அக்கறை காட்டும் வரை, மதிப்பிற்குரிய இயேசுவின் போதகத்தை அறிவதற்காக வரும்ரை, கிறிஸ்மஸ் கிறிஸ்தவத்தில் அதனிடத்தைக் கொண்டிருக்கிறது,” என்பதாக டோக்கியோ சீயோன் சர்ச்சில் ஒரு மதகுரு சொன்னார். அவருடைய நியாயத்தை அநேகர் ஒப்புக்கொள்கின்றனர். அவ்விதமாக விட்டுக்கொடுத்து இணங்கி போவது சரியானது என்று நீங்கள் நம்புகிறீர்களா?
விசுவாசிகளை சம்பாதித்துக் கொள்ள பவுலும்கூட விட்டுக்கொடுத்து இணங்கிப் போனார் என்று சிலர் விவாதிக்கின்றனர். “நான் என்னை எல்லாருடைய அடிமையாக ஆக்குகிறேன்,” என்று அவர் எழுதுகிறார், “எவ்வளவு பேரை ஆதாயப்படுத்தக் கூடுமோ அதற்காக . . . புறஜாதியாருடன் வேலை செய்யும் போது, புறஜாதியாரை ஆதாயப்படுத்திக் கொள்ள, யூத சட்டத்திற்கு வெளியே, புறஜாதியானாக வாழ்கிறேன். . . . இவையெல்லாவற்றையும், சுவிசேஷத்திற்காக, அதன் ஆசீர்வாதங்களில் பங்கெடுக்கும்படி செய்கிறேன்.” (1 கொரிந்தியர் 9:19-23, இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு) புறஜாதியாரை, கிறிஸ்தவத்திற்குள் கவர்ந்திழுப்பதற்கு புறமதப் பண்டிகைகளைத் தழுவிக் கொள்வதை இந்த வார்த்தைகள் நியாயப்படுத்துகின்றனவா?
பவுலின் கூற்றின் சூழமைவைக் கவனமாகச் சிந்தித்துப் பாருங்கள். 21-ம் வசனத்தில் அவர் சொன்னார்: “தேவனுடைய சட்டத்திற்கு நான் கீழ்ப்படியவில்லை என்பதை இது அர்த்தப்படுத்தவில்லை; உண்மையில் நான் கிறிஸ்துவின் சட்டத்தின் கீழ் இருக்கிறேன்.” (TEV) எனவே அவர் கிறிஸ்துவின் சட்டத்தை மீறிச் செல்கின்ற விஷயங்களில் விட்டுக்கொடுத்து இணங்கிப் போகவில்லை, ஆனால், இவை கிறிஸ்துவின் பிரமாணங்களுக்கு எதிராக இல்லாதவரையில், உள்ளூர் பழக்க வழக்கங்களுக்கு மரியாதைக் காட்டுவதன் மூலம், அவர் ‘புறஜாதியானைப் போல் வாழ்ந்தார்.’a
இதை மனதில் கொண்டு, பின்வரும் பைபிள் கட்டளையின் வெளிச்சத்தில் நோக்கும் போது, கிறிஸ்மஸ் என்ற பெயரில் புறமத பண்டிகைகளைக் “கிறிஸ்தவத்தினுள்” தழுவிக்கொள்வது எப்படி காணப்படும் என்று எண்ணிப் பாருங்கள்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும், அநீதிக்கும் சம்பந்தமேது? . . . அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? . . . ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்.” (2 கொரிந்தியர் 6:14-17) என்ன சாக்குப்போக்குகள் கொடுக்கப்பட்டாலும், புறமதப் பண்டிகைளால் கிறிஸ்தவத்தில் கலப்படம் செய்வது எவ்வகையிலும் இயேசுவை இரட்சகராக வரவேற்பதாகாது. அது, முதல் நூற்றாண்டில் இயேசு மாம்சத்தில் வந்தபோது பொருத்தமற்றதாக இருந்திருக்கும், இன்றும், எதிர்காலத்திலும் கிறிஸ்து கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற ராஜாவாக வரும்போதும் அதேவிதமாகப் பொருத்தமற்றதாயிருக்கும். (வெளிப்படுத்துதல் 19:11-16) உண்மையில், ‘கிறிஸ்தவன்’ என்ற வேஷத்திற்குப் பின்னால் புறமதப் பண்டிகைகளைக் கொண்டாட விரும்புபவர்கள் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கிறவர்களாக இருக்கக்கூடும்.
“ஒளிந்துகொண்ட கிறிஸ்தவர்கள்” திரும்ப நிலைநாட்டப்படவில்லை
ஜப்பானிலிருந்த கத்தோலிக்கர்களுக்கு ஷோகன் சகாப்தத்தில் என்ன நிகழ்ந்தது என்பதிலிருந்து ஒரு பாடம் கற்றுக்கொள்ளுங்கள். 1614-ல் கத்தோலிக்கர்கள் ஒடுக்கப்பட்டபோது சுமார் 3,00,000 ஜப்பானிய கத்தோலிக்கர் மூன்று தெரிவுகளைக் கொண்டிருந்தனர்: உயிர்த்தியாகிகளாவது, தங்கள் விசுவாசத்தை விட்டுவிடுவது அல்லது மறைந்து வாழ்வது. மறைந்து வாழத் தொடங்கியவர்கள் ஒளிந்துகொண்ட கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர். தங்களுடைய விசுவாசத்தை மறைத்து ஏமாற்றுவதற்காக, அவர்கள் பலவித புத்த, ஷிண்டோ வழக்கங்களை இணங்கி ஏற்றனர். அவர்களுடைய மத ஆராதனையில் மரியா கேனானை உபயோகித்தனர், அது குழந்தையைத் தூக்கிக் கொண்டிருக்கும் உருவமைப்பிலுள்ள புத்தபோதிசத்வாவாக வேஷம்போட்டுள்ள மரியாளாகும். அவர்களுடைய பண்டிகைகளில் புத்த மதம், கத்தோலிக்க மதம் மற்றும் நாடோடி மதங்கள் கலந்திருந்தன. என்றபோதிலும் புத்த ஈமச்சடங்குகளுக்கு ஆஜராகும்படி வற்புறுத்தப்பட்டால், அவர்கள் கிறிஸ்தவ ஜெபங்களை உச்சரித்தனர், மேலும் புத்த ஆராதனையை செல்லுபடியற்றதாக்கும் மோதோஷி என்ற சடங்கைச் செய்தனர். இந்தக் “கிறிஸ்தவர்களுக்கு” என்ன ஆயிற்று?
ஒளிந்துகொண்ட கிறிஸ்தவர்கள் என்ற புத்தகம் விளக்குகிறது: “இந்தக் கிரிஷிடான்ஸில் [கிறிஸ்தவர்கள்] பெரும்பான்மையானோரைக் குறித்ததில், ஷிண்டோ மற்றும் புத்த தேவர்களை வணங்குவதை விட்டுவிடுவதை கடினமாக்குகின்ற ஒரு மதப் பற்றுதல் அவர்களில் வளர்ந்தது.” தடை நீக்கப்பட்டு கத்தோலிக்க மிஷனரிகள் ஜப்பான் திரும்பிய போது, இந்த “ஒளிந்துகொண்ட கிறிஸ்தவர்களில்” பெரும்பான்மையானோர் தங்களுடைய கலப்பு வகையான மதத்தைப் பற்றிக்கொண்டனர்.
என்றபோதிலும், ரோமன் கத்தோலிக்கத்திற்கு திரும்பிவர மறுத்த அந்த “ஒளிந்துகொண்ட கிறிஸ்தவர்களைக்” கத்தோலிக்க சர்ச் நியாயமாகக் குறைகூறமுடியுமா? அந்தக் கத்தோலிக்க சர்ச் இதைப்போன்றே, கிறிஸ்மஸ் உள்ளிட்ட பல புறமதப் போதகங்களையும் பண்டிகைகளையும் தழுவிக்கொண்டுள்ளது. கிறிஸ்தவர்களாக உரிமைப் பாராட்டிய போதிலும், கத்தோலிக்கரும், புராட்டஸ்டன்டுகளும், புறஜாதியாரின் பண்டிகைகளால் தங்களுடைய “கிறிஸ்தவத்தை” புறமதப்படுத்தினதால், அவர்களும்கூட இயேசு கிறிஸ்துவை மறுத்துக்கொண்டிருக்கக்கூடுமல்லவா?
உண்மை கிறிஸ்தவத்திற்குத் திரும்ப நிலைநாட்டப்படுதல்
முப்பத்தாறு வருடங்களாக கத்தோலிக்க மதப்பற்றுள்ள பெண்ணாக இருந்த ஸெட்சுகோ, கடைசியாக இதை உணர்ந்து கொண்டாள். இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின், அவள் தன்னுடைய ஆவிக்குரிய வெற்றிடத்தை ஒரு கத்தோலிக்க சர்ச்சுடன் கூட்டுறவுக் கொள்வதால் நிரம்ப முயன்றாள். கிறிஸ்மஸ் ஆராதனைக்கு ஆஜராகி, தன்னுடைய சர்ச்சுக்கு உள்ளேவும், வெளியேயும் பகட்டான கிறிஸ்மஸ் மரங்களைப் பார்த்துவிட்டு, ‘எவ்வளவு மனநிறைவைத் தருகிறது’ என்று நினைத்தாள். “பக்கத்திலுள்ள சர்ச்சுகளைவிட மேலோங்கியிருந்த எங்கள் அழகிய அலங்காரங்களைப் பற்றி நான் பெருமையாக உணர்ந்தேன்,” என்று அவள் சொன்னாள். அப்படியிருக்க, கொஞ்சகாலம் ஞாயிறு பள்ளியில் போதித்து வந்த போதிலும், ஸெட்சுகோ உண்மையில் கத்தோலிக்க போதகங்களைப் பற்றி புரிந்துகொள்ளுதலைக் கொண்டில்லை. எனவே சர்ச் வேலையில் மேலும் அதிகமாக ஈடுபாடு கொள்ள அவள் விரும்பிய போது, அவள் தன்னுடைய பாதிரியைச் சில கேள்விகள் கேட்டாள். அவளுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பதற்குப் பதிலாக, அந்தப் பாதிரி அவளை சிறுமைபடுத்தினார். மனங்கசந்துபோய், அவள் தானே பைபிளைப் படிக்க முடிவு செய்தாள். இரண்டு வாரம் கழித்து, யெகோவாவின் சாட்சிகள் அவளை சந்தித்தனர், அவள் ஒரு வீட்டு பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டாள்.
அவள் விளக்குகிறாள்: “என்னுடைய முந்தைய நம்பிக்கைகளை தப்பென்று காட்டிய பைபிள் சத்தியங்களை எதிர்படுவது மிகவும் துன்பமாயிருந்தது. நான், நிலைகுலைந்து போனதால் முடி உதிருதலைக்கூட, அலோபீசியா நியூரோட்டிகாவைக் கொண்டிருந்தேன். என்றபோதிலும், படிப்படியாக சத்தியத்தின் வெளிச்சம் என் இருதயத்தில் பிரகாசித்தது. குளிரும், மழையுமாக இருக்கும் டிசம்பரில், மேய்ப்பர்கள் தங்களுடைய ஆடுகளை, இரவில் வெளியே விட்டு கவனிக்க முடியாத சமயத்தில், இயேசு பிறந்திருக்க முடியாது என்று கற்றபோது நான் அதிர்ச்சியடைந்தேன். (லூக்கா 2:8-12) அது இயேசுவின் பிறப்பைப் பற்றிய என்னுடைய கற்பனை எண்ணத்தைத் தகர்த்தது, ஏனென்றால் ஆடுகளையும் மேய்ப்பர்களையும் பற்றி காட்சிகளை அலங்கரிக்க நாங்கள் பருத்தி பஞ்சை உறைபனிக்காக உபயோதிருந்தோம்.”
பைபிள் உண்மையில் என்ன போதிக்கிறது என்பதை அவள் தனக்குதானே நிச்சயப்படுத்திக் கொண்ட பின், ஸெட்சுகோ கிறிஸ்மஸ் கொண்டாடுவதை நிறுத்த முடிவு செய்தாள். இனிமேலும் அவள் வருடத்திற்கு ஒரு முறை “கிறிஸ்மஸ் ஆவியைக்” கொண்டில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் சந்தோஷமான கிறிஸ்தவ கொடுத்தலின் ஆவியை வெளிப்படுத்துகிறாள்.
நீங்கள் கிறிஸ்துவை உண்மையாக நம்புவீர்களானால், புறஜாதியார் கிறிஸ்மஸைத் தூய்மைகேடு செய்வதைக் காணும்போது நீங்கள் எரிச்சலடையாதீர்கள். அவர்கள், அது ஆதியில் எப்படி இருந்ததோ அதைத்தான் திரும்பச் செய்கிறார்கள்—ஒரு புற மதப் பண்டிகை. பரலோக ராஜாவாக காணக்கூடாதவராக திரும்பிவந்துள்ள இயேசு கிறிஸ்துவை வரவேற்க கிறிஸ்மஸ் ஒருவரையும் வழிநடத்தாது. (மத்தேயு அதிகாரங்கள் 24, 25; மாற்கு, அதிகாரம் 13; லூக்கா, அதிகாரம் 21) மாறாக, உண்மை கிறிஸ்தவர்கள் வருடம் முழுவதும் கிறிஸ்துவின் ஆவியைக் காண்பிக்கின்றனர். மற்றும் இயேசு ராஜாவாக ஆகியுள்ள ராஜ்யத்தினுடைய நற்செய்தியை அறிவிக்கின்றனர். இந்த விதமாகத்தான் கடவுள், நாம் இயேசுவை நம்முடைய இரட்சகராகவும் ராஜ்யத்தினுடைய ராஜாவாகவும் வரவேற்க விரும்புகிறார்.—சங்கீதம் 2:6-12. (w91 12/15)
[அடிக்குறிப்புகள்]
a விருத்தசேதனம் பற்றிய காரியத்தில் பவுல் பிரதிபலித்த இரண்டு விதங்களையும் ஒப்பிடுங்கள். “விருத்தசேதனமும் ஒன்றுமில்லை” என்று அவர் அறிந்திருந்த போதிலும், தாய் வழியில் யூதனாகிய தன் பிரயாணத் தோழன் தீமோத்தேயுவை அவர் விருத்தசேதனம் செய்கிறார். (1 கொரிந்தியர் 7:19; அப்போஸ்தலர் 16:3) தீத்துவின் காரியத்தில், யூதேய மார்க்கத்தைப் புகுத்த முயற்சிப்பவர்களுடன் கொண்ட போராட்டத்தில் கொள்கை அடிப்படையில், அப்போஸ்தலனாகிய பவுல், அவர் விருத்தசேதனம் செய்யப்படுவதை தவிர்த்தார். (கலாத்தியர் 2:3) தீத்து ஒரு கிரேக்கன், எனவே, தீமோத்தேயுவைப் போல் அல்லாமல், விருத்தசேதனம் செய்யப்பட நியாயமான காரணம் அற்றவராயிருந்தார். ஒரு புறஜாதியாராகிய அவர் விருத்தசேதனம் செய்யப்பட வேண்டுமென்றால், ‘கிறிஸ்துவினால் அவருக்கு ஒரு பிரயோஜனமுமிராது.’—கலாத்தியர் 5:2-4.
[பக்கம் 7-ன் படம்]
மெய்க் கிறிஸ்தவர்கள் இயேசுவை வருடம் முழுவதுமாக கனப்படுத்துகிறார்கள்