வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
மத போதனை கட்டாயமாக இருக்கும் ஒரு பள்ளிக்குத் தங்கள் பிள்ளை செல்ல வேண்டியதாயிருக்கும் போது ஒரு கிறிஸ்தவ குடும்பம் என்ன செய்ய வேண்டும்?
கிறிஸ்தவ பெற்றோர், பொய் மதம் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்படுவதில் அக்கறையுள்ளவர்களாக இல்லை. ஆனால் பிள்ளைகள் பொய் மத நடவடிக்கைகளில் அல்லது சடங்குகளில் பங்கு கொள்ளாவிட்டாலும் மதம் கற்பிக்கப்படுகின்ற ஒரு வகுப்பில் அவர்கள் ஆஜராக இருப்பதற்கு மறுக்க முடியாத சூழ்நிலைமைகள் இருக்கக்கூடும்.
பிள்ளைகளுக்கு மத போதனை அளிப்பதன் சம்பந்தமாக, கடவுளுடைய சிநேகிதனாகிய ஆபிரகாம் நேர்த்தியான ஒரு மாதிரியை வைத்தார். அவர் மத சம்பந்தமான பிழைகளாலும் அருவருப்பான “பரிசுத்த” பழக்க வழக்கங்களாலும் சூழப்பட்டிருந்த கானானில் தன் பிள்ளைகளை வளர்த்தார். (யாத்திராகமம் 34:11-15; லேவியராகமம் 18:21-30; உபாகமம் 7:1-5, 25, 26; 18:9-14 ஒப்பிடவும்.) இருந்தபோதிலும் அவர்தானே தன்னுடைய குடும்பத்துக்கு மத போதனைகளை அளித்தார். ஆபிரகாம் “தன் பிள்ளைகளுக்கும் தனக்கும் பின்வரும் தன் வீட்டாருக்கும் . . . நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான்” என்பதைக் கடவுள் உறுதியாக அறிந்திருந்தார்.—ஆதியாகமம் 18:19.
ஓர் இளைஞனாக இயேசுவும்கூட மெய் வணக்கத்தில் குடும்பத்திடமிருந்தும் சபைப் போதனைகளிலிருந்தும் நன்மையடைந்தார். இதன் காரணமாக, “ஞானத்திலும் வளர்த்தியிலும், தேவ கிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.”—லூக்கா 2:52.
உலகிலுள்ள பெரும்பாலான பகுதிகளிலும் கிறிஸ்தவ இளைஞர்கள் பொது பள்ளிகளில் உலகப்பிரகாரமான கல்வியை பெற்றுக்கொள்கின்றனர். கற்பிக்கப்படும் அனைத்துமே பைபிள் சத்தியத்தோடும் ஸ்தாபிக்கப்பட்ட உண்மையோடும் முழுவதுமாக இசைவாக இருப்பதில்லை. உதாரணமாக, பல தலைமுறைகளாக கிறிஸ்தவ இளைஞர்கள் தங்களுடைய பொது பாடதிட்டத்தின் பாகமாக அறிவியல் அல்லது உயிரியல் வகுப்புகளில் ஆஜராயிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பரிணாமம் பற்றியும் அதோடு சம்பந்தப்பட்ட பூமியில் உயிரினுடைய “இயற்கையான” ஆரம்பங்களைப் பற்றியும் பொதுவாய் வியாபித்திருக்கும் கோட்பாடுகளின் செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
என்றபோதிலும் இப்படியாக அவர்கள் இந்த செல்வாக்குக்கு உட்படுத்தப்பட்டது, இந்தக் கிறிஸ்தவ இளைஞர்களை கடவுளற்ற பரிணாம ஆதரவாளர்களாக மாற்றிவிடவில்லை. ஏன்? ஏனென்றால், வீட்டிலும் கிறிஸ்தவ கூட்டங்களிலும், கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையின் அடிப்படையில் திருத்தமான அறிவை ஏற்கெனவே அவர்கள் பெற்றுக்கொண்டிருந்தார்கள். இது, ‘சரி தவறுயின்னதென்று பகுத்துணர்ந்து அவர்களுடைய அறியத்தக்க ஆற்றல்களை பயிற்றுவிக்க’ அவர்களுக்கு உதவி செய்திருந்தது. (எபிரெயர் 5:14) அநேக பெற்றோர், பரிணாமத்தை சமநிலையாக சிந்திக்கும் உயிர்—அது எப்படி வந்தது? பரிணாமத்தினாலா அல்லது படைப்பினாலா? என்ற விசுவாசத்தைப் பலப்படுத்தும் புத்தகத்தைத் தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து படித்திருக்கிறார்கள். இப்படியாக ஆயத்தமான நிலையில் இருந்தபடியால் இந்தப் பள்ளி பிள்ளைகள் பரிணாமத்தைப் பற்றிய வகுப்பறை போதனைகளை நம்பத்தக்கதாக ஏற்றுக்கொள்ளவில்லை. என்றபோதிலும் அவர்கள் அளிக்கப்பட்ட விவரங்களை தாங்கள் கவனித்துக் கேட்டதையும் அவைகளைக் கற்றுக்கொள்ள முடிவதையும் தங்கள் வகுப்பறை விடைகளிலும் சோதனைகளிலும் அவர்கள் காண்பித்திருக்கிறார்கள். சிலர், மனிதனின் சிருஷ்டிகர் பைபிளில் அளித்துள்ள உண்மைகளுக்கு இசைவாக மாற்று விளக்கங்களையும்கூட அளிக்க வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.—1 பேதுரு 3:15.
ஆனால் உள்ளூரில் செல்வாக்குப் பெற்றுள்ள மதத்தைப் பற்றியோ அல்லது பொதுவாக மதத்தைப் பற்றியோ போதிப்பதற்காகவே ஒதுக்கப்பட்டுள்ள வகுப்பு நேரங்களைப் பற்றி என்ன?
இப்படிப்பட்ட போதனை வெறும் தகவலாக, நடுநிலையோடு சமர்ப்பிக்கப்படுவது சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆசிரியர் அந்த மதத்தைக் கடைபிடிக்கிறவராகவும்கூட இருந்து, மாணவர்களின் மனங்களிலும் இருதயங்களிலும் செல்வாக்கு செலுத்த முயற்சி செய்யக்கூடும். ஆகவே யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பிள்ளைகள் மத போதனை வகுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதை விரும்புகிறார்கள். இது பள்ளி நேரத்தை அதிக பயனுள்ள விதத்தில் பிரயோஜனப்படுத்திக் கொண்டு மற்ற வகுப்புகளுக்குப் பாடங்களை செய்து முடிக்கவும் அல்லது பள்ளி நூலகத்தில் படிப்பதற்கும் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால் சில இடங்களில், இப்படிப்பட்ட கோரிக்கைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. பள்ளி அல்லது பொதுப் பணி அதிகாரக் குழுக்கள் பட்டம் பெறுவதற்கு எல்லா பிள்ளைகளும் மத பயிற்சி ஒன்றில் ஆஜராயிருந்து அதை முடிக்க வேண்டும் என்றும்கூட தேவைப்படுத்தக்கூடும். அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன செய்வது என்பதை ஒவ்வொரு குடும்பமும் தீர்மானிக்க வேண்டும்.
கடவுளுடைய ஊழியர்களில் சிலர் கடந்த காலங்களில், மெய் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்த அதே சமயத்தில், மத போதனைகள் அல்லது நடவடிக்கைகளின் செல்வாக்குக்கு உட்படுத்தப்படுவதை சகித்திருக்க வேண்டிய சூழ்நிலைமைகளில் தங்கள் விருப்பத்துக்கு எதிராக இருந்திருக்கிறார்கள். மோசேயின் விஷயத்தில் அவ்விதமாக இருந்தது. அவர் எகிப்தின் பார்வோனுடைய பேரனாக வளர்க்கப்பட்டார், “எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டி”ருந்தார். (அப்போஸ்தலர் 7:20-22) அதில் எகிப்தில் பொதுவாக இருந்த நம்பிக்கைகளும் மத சம்பந்தமான பழக்க வழக்கங்களும் ஓரளவு உட்பட்டிருந்திருக்கலாம். ஆனால் மோசே, அவருடைய குடும்பத்திடமிருந்தும் மற்ற எபிரெயர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்டிருந்த உன்னத போதனைகளால் பாதுகாக்கப்பட்டிருந்தார்.—யாத்திராகமம் 2:6-15; எபிரெயர் 11:23-26.
பாபிலோனில் விசேஷ போதனை அளிக்கப்பட்டு அரசாங்க ஊழியர்களாக ஆக்கப்பட்ட தானியேலின் கூட்டாளிகளாகிய மூன்று இளம் எபிரெயர்களின் முன்மாதிரியையும்கூட சிந்தித்துப் பாருங்கள். (தானியேல் 1:6, 7) அவர்கள் விரும்பிய எதையும் செய்யவோ அல்லது செய்ய மறுக்கவோ கட்டுப்பாடில்லா உரிமையுடன் அவர்கள் இருக்கவில்லை. ஒரு சமயம் நேபுகாத்நேச்சார் ராஜா தேசபக்திக்குரிய செயல்கள் நடப்பிக்கப்பட இருந்த தூரா சமவெளியில் தான் நிறுத்தியிருந்த பொற்சிலைக்கு அருகில், மற்ற அதிகாரிகளோடு கூட அவர்கள் கூடிவர வேண்டும் என்று உத்தரவிட்டார். மூன்று எபிரெயர்கள் எவ்விதமாக பிரதிபலித்தார்கள்? அங்கே போகாதிருப்பதை அவர்கள் விரும்பியிருக்கக்கூடும் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம், ஆனால் அது சாத்தியமாக இல்லை.a என்றபோதிலும் அவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளுக்கும், சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கும் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தார்கள். அவர்களுடைய தெய்வீக மனச்சாட்சி, அங்கே இருக்க அவர்களை அனுமதித்த அதே சமயத்தில், உறுதியாக பொய் மதத்தின் எந்த ஒரு செயலிலும் பங்குகொள்ளவோ அல்லது தனிப்பட்ட வகையில் ஈடுபடவோ அவர்கள் மறுத்தனர்.—தானியேல் 3:1-18.
மாணவர்கள் அனைவரும் ஒரு மத வகுப்பில் ஆஜராக இருப்பதும் ஒருவேளை வகுப்பு சோதனைகளில் தேறக்கூடியவர்களாக இருக்கும் அளவுக்கு அவைகளைக் கற்பதும் கட்டாயமாக இருக்கும் பட்சத்தில், நேபுகாத்நேச்சாரின் கட்டளைபடி அங்கிருந்த அந்த மூவரைப் போல மெய்க் கிறிஸ்தவர்களின் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் அங்கு இருக்கக்கூடும். ஆனால் கிறிஸ்தவ இளைஞர்கள் கடவுளை முதலில் வைப்பர். மற்றவர்கள் பொற்சிலையை வணங்கிய போது அந்த மூன்று இளைஞர்கள் குறுக்கிட முயற்சி செய்யாதிருந்தது போலவே, அங்கு சொல்லப்படும் ஒவ்வொரு தவறான கூற்றுக்கும் அல்லது மற்றவர்கள் கலந்து கொள்கின்ற ஒவ்வொரு வேதபூர்வமற்ற பழக்கத்துக்கும் அவர்கள் மறுப்பு தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. என்றபோதிலும் கிறிஸ்தவ இளைஞர்கள், அவர்கள்தாமே வணக்கச் செயல்கள், கூட்டு ஜெபங்கள், மதப் பாடல்கள் போன்ற காரியங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள்.
இந்த இளைஞர்கள் மற்ற சமயங்களில் ‘கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே அவர்களை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களி”லிருந்து கட்டியெழுப்பும் அறிவை எடுத்துக் கொள்ள மும்முரமாக பிரயாசப்பட வேண்டும். (2 தீமோத்தேயு 3:15) தங்கள் பிள்ளைகளோடு பேச்சு தொடர்பு கொள்வதன் மூலம், பெற்றோர் வகுப்பறை போதனையின் பொருளடக்கத்தை இடைவிடாமல் கண்காணித்து வரவேண்டும். இது, தங்களுடைய பிள்ளைகள் குழம்பிப் போகாமல் அல்லது தவறாக வழிநடத்தப்படாமல் இருக்கும்படிக்கு எது திருத்தப்பட வேண்டும் அல்லது பைபிளிலிருந்து தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பதை உரிமை வயது அடைந்த கிறிஸ்தவர்கள் காண்பதற்கு உதவி செய்யும். (w91 12/15)
[அடிக்குறிப்பு]
a தூரா சமவெளியில் தானியேல் இருந்ததாக பைபிள் சொல்வதில்லை. ஒருவேளை அரசாங்கத்தில் அவருக்கிருந்த உயர்ந்த பதவியின் காரணமாக அங்குபோகாதிருக்க அனுமதி பெற முடிந்திருக்க வேண்டும்.