கள்ளத்தீர்க்கதரிசிகள் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!
பிரேஸில் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி, இரவு படுக்கச் சென்ற பின்பு, திருடர்கள் உடைத்துக்கொண்டு அவர்களுடைய வீட்டுக்குள் வரும் சத்தத்தைக் கேட்டார்கள். திகிலடைந்து போன தம்பதி படுக்கை அறையின் ஜன்னல் வழியாக வெளியே தப்பி ஓடி போலீஸாரை அழைத்தார்கள். ஆனால் அதற்குப் பிற்பாடு அந்த அனுபவத்தால் அவ்வளவு நிலைகுலைந்துபோன மனைவியால் அந்த வீட்டில் உறங்க முடியவில்லை, அவள் தன்னுடைய அம்மாவின் வீட்டுக்குச் செல்ல வேண்டியதாயிற்று.
வீடு கொள்ளையடிக்கப்பட்ட அனுபவமுள்ள அல்லது ஏதோ வேறு ஒரு வகையில் களவாடப்பட்ட எவராலும் அவளுக்கு அனுதாபம் காட்ட முடியும். இப்படிப்பட்ட ஓர் அனுபவம் கலவரமடையச் செய்யக்கூடும், வருந்தத்தக்கவகையில், அதிகமதிகமான ஆட்கள் இவ்விதமாக துன்புறுகிறார்கள். என்றபோதிலும், இதைவிட அதிக வினைமையான பின்விளைவுகளைக் கொண்ட ஒரு வகையான களவு இருக்கிறது.
இந்த அதிக வினைமையான வகையான களவு என்ன? மேலும் திருடர்கள் யார்? இயேசு கிறிஸ்து, நம்முடைய நாளைக் குறித்து பேசுகையில் இதைக் குறித்து கொஞ்சம் தகவலை நமக்கு அளித்தார். அவர் சொன்னார்: “அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.” (மத்தேயு 24:11) கள்ளத்தீர்க்கதரிசிகள் கள்வர்களாக இருக்கின்றனர். என்ன விதத்தில்? அவர்கள் என்ன களவாடுகிறார்கள்? அவர்களுடைய களவு அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆகவே விஷயத்தை முழுமையாக புரிந்து கொள்வதற்கு பைபிளின் பிரகாரம் தீர்க்கதரிசனம் உரைத்தல் என்பது என்ன என்பதை நாம் முதலில் அறிந்து கொள்வது அவசியமாகும்.
தீர்க்கதரிசனம் உரைப்பது எதை அர்த்தப்படுத்துகிறது
தீர்க்கதரிசனம் உரைப்பது பற்றி நீங்கள் யோசிக்கும் போது உங்கள் மனதுக்கு வரும் முதல் காரியம், எதிர்காலத்தை முன்னுரைப்பதாக இருக்கலாம். இது நிச்சயமாகவே கடவுளுடைய பண்டைய தீர்க்கதரிசிகளுடைய வேலையின் ஓர் அம்சமாக இருந்தது. ஆனால் அதுவே அவர்களுடைய முக்கியமான வேலையாக இருக்கவில்லை. உதாரணமாக ஒரு தரிசனத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசி “காற்றை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை”க்கும்படி சொல்லப்பட்ட போது அவர் வெறுமென கடவுளிடமிருந்து வந்த ஒரு கட்டளையை வெளிப்படுத்த வேண்டியவராக இருந்தார். (எசேக்கியேல் 37:9, 10, NW) ஆசாரியர்கள் முன்பு இயேசு விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, அவரைத் துன்புறுத்தியவர்கள் அவர் மேல் துப்பினார்கள், அவரை அறைந்தார்கள், ஏளனமாக “கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும்,” என்றார்கள். அவர்கள் இயேசுவிடம் எதிர்காலத்தை முன்னுரைக்கும்படி கேட்கவில்லை. கடவுளுடைய வல்லமையினால் அவரை அடித்தவர்களை அடையாளம் காட்டும்படியாக அவர்கள் அவருக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தார்கள்.—மத்தேயு 26:67, 68.
உண்மையில், “தீர்க்கதரிசனம் உரைத்தல்” அல்லது “தீர்க்கதரிசனம்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மூல பைபிள் மொழி வார்த்தைகளால் தெரிவிக்கப்படும் முக்கிய கருத்து, அடிப்படையில் ஒரு விஷயத்தின் பேரில் கடவுளுடைய சிந்தையை எடுத்துரைப்பதாக அல்லது அப்போஸ்தலர் புத்தகம் குறிப்பிடுகிறபடி “தேவனுடைய மகத்துவங்களைப்” பற்றி சொல்வதாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 2:11) இந்தக் கருத்தில்தானே அநேக ஆட்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளால் களவாடப்படுகிறார்கள்.
ஆனால் கள்ளத்தீர்க்கதரிசிகள் யார்? அவர்கள் என்ன திருடுகிறார்கள்? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, எரேமியாவின் காலத்தில் இஸ்ரவேல் தேசத்தின் சரித்திரத்தை நாம் பின்னோக்கிப் பார்ப்போமாக. இதை நாம் அடுத்தக் கட்டுரையில் செய்யலாம். (w92 2/1)