தடையுத்தரவின் கீழ் யெகோவா எங்களைக் கவனித்துக் காத்தார்—பகுதி 1
பல பத்தாண்டுகளாக யெகோவாவின் சாட்சிகள், தங்கள் கிறிஸ்தவ வேலைகள் தடைசெய்யப்பட்டிருக்கும் தேசங்களிலுள்ள தங்கள் சகோதரர்களைப் பற்றி யோசித்திருக்கின்றனர். என்ன சம்பவித்திருக்கிறது என்பதில் சிலவற்றை வெளிப்படுத்தும் மூன்று கட்டுரைகளில் முதலாவதை சமர்ப்பிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இவை கிழக்கு ஜெர்மனி என்று அப்பொழுது அறியப்பட்டிருந்ததில் சம்பவித்த உண்மையுள்ள கிறிஸ்துவர்களின் தனிப்பட்ட பதிவுகளாகும்.
ஒரு ஜெர்மன் நாட்டுப் போர்க் கைதியாக நான் 1944-ல் ஸ்காத்லாந்தில் அயிருக்கு அருகே கம்நாக் முகாமில் ஒரு மருத்துவ ஏவலராக வேலை செய்து வந்தேன். உள்ளூர் மக்களோடு தோழமைக் கொள்வது தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் முகாமுக்கு வெளியே செல்ல நான் அனுமதிக்கப்பட்டேன். ஒரு ஞாயிற்றுக் கிழமை ஓய்வுநேரத்தில் உலாவிக்கொண்டிருக்கையில் பைபிளிலிருந்து காரியங்களை எனக்கு விளக்க உள்ளார்வத்தோடு முயற்சி எடுத்துக்கொண்ட ஒரு மனிதனை நான் சந்தித்தேன். அதற்குப் பின் நாங்கள் அடிக்கடி ஒன்றாக சேர்ந்திருந்தோம்.
காலப்போக்கில், ஒரு வீட்டில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்துக்கு அவர் என்னை அழைத்தார். நான் விரோதி தேசத்தின் ஓர் உறுப்பினனாக இருந்தபடியால் இது அவருக்கு அபாயமிக்கதாய் இருந்தது. அந்தச் சமயத்தில் அவர் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை நான் உணரவில்லை—அது அவர்களுடைய சிறிய பைபிள் படிப்பு தொகுதிகளின் ஒரு கூட்டமாக இருந்திருக்க வேண்டும். அதிகம் புரிந்துகொள்ளாவிட்டாலும், ஒரு சிங்கத்தோடும் ஆட்டுக்குட்டியோடும்கூட நீண்ட ஒரு வெள்ளை உடையை அணிந்துகொண்டிருக்கும் ஒரு சிறுமியின் படம் எனக்கு தெளிவாக நினைவிலிருக்கிறது. பைபிள் புத்தகமாகிய ஏசாயாவில் வருணிக்கப்பட்டுள்ளபடி, புதிய உலகின் இந்த விளக்கப்படம், என்னை வெகுவாக கவர்ந்தது.
டிசம்பர் 1947-ல், நான் சிறை முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டேன். ஜெர்மனிக்கு வீடு திரும்பிய போது, போருக்கு முன்னே எனக்கு அறிமுகமாயிருந்த மார்ஜிட்டை திருமணம் செய்துகொண்டேன். போலந்து மற்றும் செக்கோஸ்லோவாக்கியா எல்லைக்கு அருகே சிட்டோவில் எங்கள் வீட்டை அமைத்துக் கொண்டோம். ஒரு சில நாட்களுக்குள்ளே, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் எங்கள் கதவைத் தட்டினார். “ஸ்காத்லாந்தில் சந்தித்த அதே தொகுதியாக இது இருந்தால், நாம் அவர்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும்” என்று நான் என் மனைவியிடம் சொன்னேன். அதே வாரத்தில் சாட்சிகளோடு முதல் கூட்டத்தில் நாங்கள் ஆஜராயிருந்தோம்.
விரைவில், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஒழுங்காக ஆஜராயிருந்து பிரசங்க வேலையில் பங்குகொள்ள வேண்டிய அவசியத்தை பைபிளிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். உண்மையில், பைபிளிலிருந்து சாட்சிகள் கற்றுக்கொடுத்த காரியம் சீக்கிரத்தில் எங்களுடைய வாழ்க்கையில் அதிமுக்கியமான காரியமாக ஆனது. காலப்போக்கில், நான் ஒரு தொகுதிக்கு பைபிள் படிப்பை நடத்த ஆரம்பித்தேன். பின்னர் 1950 பிப்ரவரியில், இரண்டு பிரயாண கிறிஸ்தவ கண்காணிகள், “நீங்கள் ஒருபோதும் முழுக்காட்டுதல் பெற விரும்பவில்லையா?” என்று கேட்டார்கள். அதே பிற்பகலில் மார்ஜிட்டும் நானும் முழுக்காட்டுதல் மூலம் கடவுளுக்கு எங்கள் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினோம்.
தொந்தரவுகளின் ஆரம்பம்
சிட்டோவ், ஜெர்மனியில் சோவியத் மண்டலத்தில் இருந்தது, யெகோவாவின் சாட்சிகளுக்கு தொந்தரவு கொடுப்பதற்கு முயற்சி 1949-ல் ஆரம்பமாயிருந்தது. அதிகமான தொந்தரவுக்குப் பின்தானே, பாட்ஸனில் ஒரு சிறிய அசெம்ளிக்கு ஒரு கட்டிடத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. பின்னர், கோடையின் போது, பெர்லினில் பெரிய மாவட்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேஷ இரயில்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டன. என்றபோதிலும் ஆயிரக்கணக்கானோர் ஆஜராயிருந்தனர்.
சபை கூட்டங்களிலும்கூட அமைதி கெடுக்கப்பட்டது. கூச்சலிட்டு விசிலடிப்பவர்கள் அதற்காகவே வருவார்கள். ஒரு சமயம் பிரயாண கண்காணியின் பேச்சை இடையில் நிறுத்திவிட நாங்கள் ஏறக்குறைய வற்புறுத்தப்பட்டோம். செய்தித்தாள்கள் எங்களை அழிவை அறிவிக்கும் தீர்க்கதரிசிகள் என்றழைத்தனர். மலை உச்சிகளில் ஒன்றுகூடி சேர்ந்து மேகங்களில் எடுத்துச் செல்லப்பட காத்திருந்ததாகக்கூட செய்தித்தாள் கட்டுரைகள் தெரிவித்தன. சாட்சிகள் தங்களோடு ஒழுக்கமற்றவிதமாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாக சில பெண்கள் சொன்னதாகவும்கூட செய்தித்தாள்கள் குறிப்பிட்டன. ‘யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கிறவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வர்’ என்ற விளக்கமானது, சாட்சிகளோடு பாலுறவு கொள்கிறவர்கள் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வர் என்பதாக பொருள்படும்படி திரித்துக்கூறப்பட்டது.
பின்னால் நாங்கள் போர்ப்பிரியர்களாக இருப்பதாகவும்கூட குற்றஞ்சாட்டப்பட்டோம். கடவுளுடைய அர்மகெதோன் யுத்தத்தைப் பற்றி நாங்கள் சொன்ன காரியம், நாங்கள் ஆயுதப்போட்டியையும் போரையும் ஊக்குவிப்பதாக அர்த்தப்படுத்தும்படி தவறாக எடுத்துரைக்கப்பட்டது. எத்தனை முட்டாள்தனம்! என்றபோதிலும், ஆகஸ்ட் 1950-ல் நான் அச்சிடுபவனாக வேலை செய்துவந்த உள்ளூர் செய்தித்தாள் அலுவலகத்தில் இரவு வேலைக்காக வந்த போது, நான் வாயிலில் நிறுத்தப்பட்டேன். போலீஸோடு வந்த காவற்காரன் “நீங்கள் வேலையிலிருந்து விலக்கப்பட்டுவிட்டீர்கள்” என்று சொன்னான். “நீங்கள் போரை ஆதரிக்கிறீர்கள்.”
வீட்டில் இது மார்ஜிட்டுக்கு நிம்மதியைக் கொடுத்தது. “இனிமேலும் பிந்திய நேரங்களில் வேலை இல்லை” என்று அவள் சொன்னாள். நாங்கள் கவலைப்படவில்லை. சீக்கிரத்தில் எனக்கு மற்றொரு வேலை கிடைத்தது. எங்கள் தேவைகளுக்கு கடவுளை நாங்கள் நம்பியிருந்தோம், அவர் அதை அளித்தார்.
எங்கள் வேலை தடைசெய்யப்படுகிறது
ஆகஸ்ட் 31, 1950-ல் ஜெர்மன் குடியரசில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை தடைசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர். சாட்சிகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, சிலர் ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டனர். நாசிக்களின் கான்சன்ட்ரேஷன் முகாம்களில் துன்பமனுபவித்திருந்த, சிட்டோவிலிருந்து வந்த இருவர் கம்யூனிஸ்டுகளால் சிறைப்படுத்தப்பட்டார்கள்.
எங்களுடைய சபையை கண்காணித்து வந்த ஒருவர் அவருடைய மனைவியோடு கூட கைதுசெய்யப்பட்டார். அவர்களை கைது செய்தவர்கள், அவர்களுடைய இரண்டு சிறு பிள்ளைகளை தனியே கவனிப்பாரின்றி வீட்டில் விட்டுவந்தனர். பாட்டி, தாத்தா பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். இன்று இரண்டு பெண்களும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்வதில் வைராக்கியமாக இருக்கின்றனர்.
கிழக்கு ஜெர்மனியின் சபைகளிலிருந்து விரைதூதுவர்கள் தடையிலிருந்து விலகிய மேற்கு பகுதியிலுள்ள சில இடங்களில் பிரசுரங்களை பெற்றுக்கொள்ள பெர்லினுக்கும் பெர்லினிலிருந்தும் பிரயாணம் செய்தனர். துணிச்சல்மிக்க இந்த விரைதூதுவர்களில் அநேகர் கைது செய்யப்பட்டனர், நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டனர், சிறை தண்டனை விதிக்கப்பட்டனர்.
அதிகாரிகள் ஒரு நாள் அதிகாலை எங்கள் வீட்டை சோதனையிட வந்தனர். அவர்கள் வருவதை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். ஆகவே, என்னிடமிருந்த சபை பதிவுகள் அனைத்தையும் ஒரு களஞ்சியத்தில் வைத்து குளவி கூடுக்கு அருகே வைத்திருந்தேன். பூச்சுகள் என்னை ஒருபோதும் தொல்லைப்படுத்தியதில்லை. ஆனால் அந்த மனிதர்கள் சுற்றிலும் குத்திப் பார்க்க ஆரம்பித்த போது அவர்கள் குளவிகளின் கூட்டத்தால் திடீரென சூழ்ந்துகொள்ளப்பட்டார்கள். அந்த மனிதர்கள் அனைவரும் தப்பிக்க ஓட்டம் பிடித்தனர்!
யெகோவா தடையுத்தரவுக்காக எங்களை 1949-ல் நடைபெற்ற மாநாடுகள் மூலமாக தயார் செய்திருந்தார். நிகழ்ச்சிநிரலானது தனிப்பட்ட படிப்பையும், கூட்டங்களில் ஆஜராயிருத்தலையும், பிரசங்க வேலையையும் தீவிரமாக்கவும், உதவிக்காகவும் ஊக்குவிப்புக்காகவும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கவும் எங்களை துரிதப்படுத்தியிருந்தது. இது உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருக்க எங்களுக்கு உதவி செய்தது. இதன் காரணமாக, மக்கள் அடிக்கடி எங்களில் குறைகண்டுபிடித்து எங்கள் மீது பழி சுமத்திய போதிலும் நாங்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.
தடையுத்தரவின் கீழ் கூட்டங்களை நடத்துதல்
தடையுத்தரவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எங்கள் சபை கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என்பதைப் பற்றி கலந்து பேச இரண்டு உடன் சாட்சிகளை நான் சந்தித்தேன். ஆஜராவது ஆபத்தானதாக இருந்தது, ஏனென்றால் ஆஜராயிருக்கிகையில் கைது செய்யப்படுவது சிறை தண்டனையை அர்த்தப்படுத்தக்கூடும். எங்கள் பிராந்தியத்திலிருந்த சாட்சிகளை சந்தித்தோம். சிலர் கவலையாயிருந்தனர், ஆனால், ஒவ்வொருவரும் கூட்டங்களில் ஆஜராயிருப்பதனுடைய அவசியத்தை உணர்ந்தவர்களாயிருந்தது உற்சாகமளிப்பதாக இருந்தது.
ஒரு களஞ்சியத்தை வைத்திருந்த அக்கறை காட்டிய ஒரு நபர் கூடுமிடமாக பயன்படுத்திக் கொள்ள அதை அளித்தார். அது அனைவரும் பார்க்கக்கூடிய வண்ணமாக ஒரு வயலில் இருந்தபோதிலும், களஞ்சியத்துக்கு ஒரு பின்கதவும் பின்னால் புதர் செடிகள் மறைத்துக்கொண்டிருந்த ஒரு பாதையும் இருந்தது. எனவே நாங்கள் வந்து போவது கவனிக்கப்படவில்லை. குளிர்காலம் முழுவதுமாக பழைய களஞ்சியமே எங்கள் கூடுமிடமாக இருந்தது, கூட்டங்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடத்தப்பட்டன, சுமார் 20 பேர் ஆஜராவார்கள். ஒவ்வொரு வாரமும் நாங்கள் எங்களுடைய காவற்கோபுரம் பத்திரிகை படிப்புக்காகவும் ஊழியக் கூட்டத்துக்காகவும் கூடிவந்தோம். நாங்கள் ஆவிக்குரிய விதமாக சுறுசுறுப்பாய் எங்களை வைத்துக்கொள்வதை வலியுறுத்தும்படி நிகழ்ச்சிநிரல் எங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. அக்கறை காட்டிய அதே நபரை சீக்கிரத்தில் எங்களுடைய புதிய சகோதரராக வரவேற்பதில் நாங்கள் கிளர்ச்சியடைந்தோம்.
நீதிமன்ற தீர்ப்புகளின் கடுமை 1950-களின் மத்தியில், குறைந்தன. சில சகோதரர்கள் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். அநேகர் மேற்கு ஜெர்மனிக்கு நாடுகடத்தப்பட்டனர். என்னைப் பொறுத்த வரையில், மேற்கு ஜெர்மனியிலிருந்து வந்த ஒரு சகோதரரின் சந்திப்பை தொடர்ந்து எதிர்பாராத காரியங்கள் நிகழ்ந்தன.
என்னுடைய முதல் முக்கியமான வேலை நியமனம்
சகோதரர் தன்னை ஹேன்ஸ் என்று அழைத்துக்கொண்டார். எங்கள் உரையாடலைத் தொடர்ந்து, பெர்லினில் உள்ள ஒரு விலாசத்துக்குச் செல்லும்படியாக எனக்கு சொல்லப்பட்டது. வாயில் மணியிலிருந்த இரகசிய பாஷையை கண்டுபிடித்த போது, நான் உள்ளே அழைக்கப்பட்டேன். இரண்டு பேர் என்னைச் சேர்ந்து கொள்ள இன்பமான ஆனால் மிகப் பொதுவான ஓர் உரையாடலைக் கொண்டிருந்தோம். பின்னர் அவர்கள் பின்வருமாறு கேட்டனர்: “உங்களுக்கு ஒரு விசேஷமான வேலை நியமனம் அளிக்கப்பட்டால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா?”
“நிச்சயமாக” என்று நான் பதிலளித்தேன்.
“நல்லது” என்று அவர்கள் சொன்னார்கள். “நாங்கள் இதைத்தான் தெரிந்து கொள்ள விரும்பினோம். பத்திரமாக வீடு போய் சேருங்கள்.”
மூன்று வாரங்களுக்குப் பிறகு பெர்லினுக்கு திரும்பி வரும்படி சொல்லப்பட்டேன். அதே அறையில் நான் இப்பொழுது இருந்தேன். சிட்டோவைச் சுற்றியிருந்த பிராந்தியத்தின் ஒரு நிலப்படத்தை என்னிடம் கொடுத்துவிட்டு சகோதரர்கள் விஷயத்துக்கு வந்தார்கள். “இந்தப் பிராந்தியத்திலுள்ள சாட்சிகளோடு எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தொடர்பை எங்களுக்கு உங்களால் ஏற்படுத்திக் கொடுக்க முடியுமா?”
“நிச்சயமாக நான் செய்வேன்,” என்று உடனடியாக நான் பதிலளித்தேன். பிராந்தியம் பெரியதாக, ரிஸாவிலிருந்து சிட்டோவ் வரையாக 100 கிலோமீட்டருக்கும் அதிகமாக நீளமாயும், 50 கிலோமீட்டர் வரையாக அகலமாயும் இருந்தது. என்னிடமிருந்ததெல்லாம் ஒரு சைக்கிளே. தனிப்பட்ட சாட்சிகளோடு தொடர்பை ஸ்தாபித்துக்கொண்ட பிறகு ஒவ்வொருவரும் அவருடைய சபையோடு சேர்க்கப்பட்டார். இது பிரசுரங்களையும் அறிவுரைகளையும் பெர்லினிலிருந்து பெற்றுக்கொள்ள ஒழுங்காக ஒரு பிரதிநிதியை அனுப்பி வைத்தது. இம்முறையில் இயங்குவது அதிகாரிகள் ஏதாவது ஒரு சபையை துன்புறுத்திக் கொண்டிருக்கையில் மற்ற சபைகளுக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்த்தது.
யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள்
துன்புறுத்தலின் மத்தியிலும், பைபிள் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிதலாக, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய எங்கள் செய்தியோடு வீட்டுக்கு வீடு செல்வதை நாங்கள் ஒருபோதும் விட்டுவிடவில்லை. (மத்தேயு 24:14; 28:19, 20; அப்போஸ்தலர் 20:20) எங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்த ஆட்களுடைய சிபாரிசின் அடிப்படையில், நாங்கள் சில விலாசங்களுக்குச் சென்று, அதிசயமான சில அனுபவங்களை அனுபவித்துக் களித்தோம். சில சமயங்களில், பின்வருவது விளக்குகிறபடியே எங்களுடைய தவறுகள்கூட ஆசீர்வாதங்களாக மாறின.
சந்திப்பதற்கு ஒரு விலாசம் என்னுடைய மனைவிக்கும் எனக்கும் கொடுக்கப்பட்டது, ஆனால் நாங்கள் தவறான வீட்டுக்குச் சென்றுவிட்டோம். கதவு திறக்கப்பட்டபோது நாங்கள் ஒரு போலீஸாரின் சீருடை மாட்டப்பட்டிருப்பதை கவனித்தோம். மார்ஜிட் முகம் வெளிறிப்போனாள்; என் இருதயம் அடித்துக்கொண்டது. இது சிறைவாசத்தை அர்த்தப்படுத்தக்கூடும். அவசரமான ஒரு ஜெபத்துக்கு மாத்திரமே நேரம் இருந்தது.
“நீங்கள் யார்” என்று அந்த மனிதன் சுருக்கமாக கேட்டார். நாங்கள் அமைதியாயிருந்தோம்.
“உங்களை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன்,” என்று மார்ஜிட் சொன்னாள். “ஆனால் எங்கே என்று எனக்கு யோசித்துப் பார்க்க முடியவில்லை. ஆம். நீங்கள் ஒரு போலீஸ்காரர். நீங்கள் அலுவலில் இருக்கையில் உங்களை நான் பார்த்திருக்க வேண்டும்.”
இது அமைதிப்படுத்தும் ஒரு பாதிப்பை ஏற்படுத்த அவர் சிநேகப்பான்மையான குரலில், “நீங்கள் யெகோவாக்களா?” என்று கேட்டார்.
“ஆம்,” என்று சொல்லி நான் சேர்ந்துகொண்டேன். “நாங்கள் அவர்களே. உங்கள் கதவை வந்து தட்டுவதற்கு எங்களுக்கு தைரியம் தேவை என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டாக வேண்டும். நாங்கள் உங்களில் தனிப்பட்டவிதமாக அக்கறையுடையவர்களாயிருக்கிறோம்.”
அவர் வீட்டுக்குள் எங்களை அழைத்தார். பல முறை நாங்கள் அவரை சந்தித்தோம், ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த மனிதன் நம்முடைய ஒரு கிறிஸ்தவ சகோதரனாக ஆனார். அந்த அனுபவம் யெகோவாவில் எங்களுடைய நம்பிக்கையை எப்படி பலப்படுத்தியது!
சகோதரிகள் அடிக்கடி விரைதூதுவர்களாக செயல்பட்டார்கள், இது யெகோவாவில் முழுநிறைவான நம்பிக்கை வைப்பதை அவர்களுக்குத் தேவைப்படுத்தியது. ஒரு சமயம் மார்ஜிட் பிரசுரங்களை எடுத்துவர பெர்லினுக்குப் பயணப்பட்ட போது இதுதான் நடந்தது. எதிர்பார்ப்புக்கும் மிக அதிகமாக இருந்தது. கனமாகவும் அளவுக்கு அதிகமாகவும் திணிக்கப்பட்டிருந்த ஒரு கைப்பெட்டியை கட்டுவதற்கு துணிஉலர்த்தும் கொடிக்கயிறு ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்தது. மார்ஜிட் இரயிலில் ஏறும்வரையாக எல்லாம் சுமுகமாகவே இருந்தது. பின்னர் எல்லைக்காவல் அதிகாரி வந்தார்.
“இது யாருடையது? இதில் என்ன இருக்கிறது?” என்று கைப்பெட்டியை சுட்டிக்காட்டி கேட்டார்.
“அது என்னுடைய துணிமணிகள்” என்று மார்ஜிட் பதிலளித்தாள்.
சந்தேகத்தில், அதை திறக்கும்படி அவளுக்கு உத்தரவிட்டார். மெதுவாகவும் வேண்டுமென்றேயும் மார்ஜிட் கைப்பெட்டியைச் சுற்றியிருந்த கொடிக்கயிற்றின் முடிச்சுக்களை ஒவ்வொன்றாக பிரிக்க ஆரம்பித்தாள். எல்லைக்காவல் அதிகாரியின் வேலை, குறிப்பிட்ட ஒரு தூரம் மாத்திரமே இரயிலில் பிரயாணம் செய்து பின்னர் இறங்கி திரும்பிவர பயணத்துக்கு வேறு ஓர் இரயிலில் பிரயாணம் செய்வதை தேவைப்படுத்தியதால், அவர் பொறுமையிழந்தார். கடைசியாக இன்னும் மூன்று முடிச்சுகள் இருக்கையில் அவர் முயற்சியை விட்டுவிட்டார். “தள்ளிப் போ, உன் துணிமணிகளை உன்னோடு எடுத்துக்கொண்டு போ!” என்று அவர் கத்தினார்.
யெகோவாவின் தனிப்பட்ட கவனிப்பு
அடிக்கடி நாள் ஒன்றுக்கு நான்கு மணி நேர தூக்கத்திலேயே நான் சமாளித்தேன், ஏனென்றால் நான் பொதுவாக சபை விஷயங்களை இரவு நேரங்களில் தானே கவனித்தேன். இப்படித்தான் என்னுடைய ஓரிரவு வேலைக்குப் பின்பு ஒரு நாள் காலை அதிகாரிகள் எங்கள் கதவை தட்டினார்கள். அவர்கள் சோதனையிட வந்திருந்தார்கள். எதையும் மறைத்து வைக்க நேரமில்லாமல் போனது.
அதிகாரிகள் இடத்தை முழுவதுமாக சோதனையிட்டு காலைப்பொழுது முழுவதையும் கழித்தனர், கழிவறையில் ஏதாகிலும் மறைத்து வைக்கப்பட்டிருக்குமா என்பதாக அதையும் பார்த்தனர். சட்டை செருகு சட்டத்தில் தொங்கிக்கொண்டிருந்த என் சட்டையை ஆராய எவரும் நினைக்கவில்லை. அதிலிருந்த அநேக பாக்கெட்டுகளில் பத்திரங்களை நான் அவசரமாக திணிந்து வைத்திருந்தேன். அதிகாரிகள் தேடிக்கொண்டிருந்தவற்றால் பாக்கெட்டுகள் புடைத்து நின்றன, ஆனால் அவர்கள் வெறுங்கையோடு புறப்பட்டு சென்றனர்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் 1961 ஆகஸ்டில் நான் பெர்லினில் இருந்தேன். பெர்லின் சுவர் எழுப்பப்படுவதற்கு முன்னால் நான் பிரசுரங்களை எடுத்துச் செல்ல வந்திருந்த கடைசி சமயமாக அது இருந்தது. சிட்டோவுக்கு திரும்பி வர நான் ஆயத்தஞ்செய்து கொண்டிருந்த போது பெர்லின் இரயில் நிலையத்தில் ஜனங்கூட்டம் அதிகமாயிருந்தது. இரயில் உள்ளே வந்த போது, ஏறிக்கொள்ள அனைவரும் பிளாட்பாரத்தில் அவசரப்பட்டனர். கூட்டத்தோடு தள்ளப்பட்டு திடீரென்று இரயிலில் காலியான ஒரு பகுதியில் நான் என்னைக் கண்டேன். நான் உள்ளே ஏறினவுடனேயே காவலர் வெளியிலிருந்து கதவை பூட்டிவிட்டார். ஒரு பகுதியில் நான் தன்னந்தனியாக இருக்க, மற்ற பயணிகள் அனைவரும் இரயிலின் மற்ற பகுதிகளில் மந்தையாக அடைந்து இருந்தார்கள்.
நாங்கள் சிட்டோவை நோக்கிப் புறப்பட்டோம். கொஞ்ச நேரம் நான் இரயில் பெட்டியில் தனியாக இருந்தேன். இரயில் நின்ற போது, என்னுடைய பகுதியிலிருந்த கதவுகள் திறக்கப்பட்டன. சோவியத் போர்வீரர்களில் அநேகர் உள்ளே ஏறினர். அப்போது தானே சோவியத் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் நான் ஏறியிருந்ததை உணர்ந்தேன். நிலம் பிளந்து என்னை விழுங்கிவிட்டால் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன். என்றபோதிலும், எதுவும் தவறாக இருப்பதாக போர்வீரர்களுக்குத் தெரியவில்லை.
நாங்கள் சிட்டோவுக்கு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். இங்கே எங்கள் பகுதியின் கதவுகள் திறக்கப்பட்டன, போர்வீரர்கள் குதித்து வெளியேறினார்கள். இரயில் நிலையத்தில் எல்லாப் பயணிகளையும் அவர்கள் சோதனைப் போட ஆரம்பித்தார்கள். தொந்தரவு செய்யப்படாதவன் நான் மாத்திரமே. அநேக போர்வீரர்கள், நான் ஓர் உயர் அதிகாரி என்று நினைத்து எனக்கு வணக்கமும் தெரிவித்தார்கள்.
அதற்குப் பின்தான் அந்தப் பிரசுரங்கள் எவ்வளவு மதிப்புள்ளவை என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம், ஏனென்றால் பெர்லின் சுவர் எழுப்பப்பட்ட போது, எங்கள் சப்ளை மார்க்கத்தில் தற்காலிகமாக தடங்கல் ஏற்பட்டது. என்றபோதிலும் பல மாதங்களுக்கு எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய அந்தப் பிரசுரங்கள் போதுமானவையாக இருந்தன. இதற்கிடையில் எங்களோடு தொடர்புகொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட முடியும்.
கிழக்கு ஜெர்மனியிலிருந்த எங்களுக்கு 1961-ல் பெர்லின் சுவரின் வருகை, மாற்றங்களை கொண்டு வந்தது. ஆனால் எப்போதும் போல் யெகோவா எதிர்பார்த்ததைவிட அதிகம் செய்கிறவராகவே இருந்தார். அவர் தொடர்ந்து தடையுத்தரவின் கீழ் எங்களை கவனித்து காத்துவந்தார்.—ஹெர்மன் லாப் சொன்னபடி.
[பக்கம் 27-ன் படம்]
பாட்ஸனில் ஒரு சிறிய அசெம்ளியை நாங்கள் அனுபவித்துக்களித்தோம்