தடையுத்தரவின் கீழ் யெகோவா எங்களை கவனித்துக் காத்தார்—பகுதி 2
இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாசி படை வீரனின் சீருடையிலிருந்த என்னுடைய பெல்டில் “கடவுள் எங்களோடு இருக்கிறார்,” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. போரிலும் இரத்தம் சிந்துதலிலும் சர்ச்சுகளுக்கு இருந்த ஈடுபாட்டின் மற்றொரு உதாரணமாக எனக்கு இது இருந்தது. அது எனக்கு வெறுப்புண்டாக்கியிருந்தது. கிழக்கு ஜெர்மனியில் லிம்பக்-ஒபர்ஃப்ரோனா என்ற இடத்தில் இரண்டு யெகோவாவின் சாட்சிகள் என்னை சம்பாஷணையில் ஈடுபடுத்துவதற்குள் மதத்தின் பேரில் எனக்கு அதிக வெறுப்புண்டாகி, ஒரு நாத்திகனாகவும் பரிணாமக் கோட்பாட்டாளனாகவும் நான் ஆகியிருந்தேன்.
“நான் ஒரு கிறிஸ்தவனாக ஆவேன் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்காதீர்கள்,” என்று என்னை சந்தித்த சாட்சிகளிடம் நான் சொன்னேன். கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று அவர்களுடைய விவாதங்கள் என்னை நம்ப வைத்தன. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்தினால் நான் ஒரு பைபிளை வாங்கினேன். காலப்போக்கில் அதை அவர்களோடு படிக்க ஆரம்பித்தேன். அது 1953-ம் ஆண்டு வசந்த காலத்தில் நடந்தது. ஏற்கெனவே ஏறக்குறைய மூன்று வருடங்களாக கம்யூனிஸ்ட் தடையுத்தரவின் கீழ் சாட்சிகளின் வேலை அப்போது இருந்தது.
அப்போதிருந்த யெகோவாவின் சாட்சிகளின் நிலைமையை ஆகஸ்ட் 15, 1953 காவற்கோபுரம் இவ்வாறு விவரித்தது: “தொடர்ந்து வேவு பார்க்கப்பட்டு பயமுறுத்தப்பட்டு வந்தாலும், தங்களைப் பின்தொடர்ந்து எவரும் வரவில்லை என்பதை முதலில் நிச்சயப்படுத்திக் கொண்ட பிறகே ஒருவரோடு ஒருவர் சந்திக்க வேண்டியிருந்தாலும், காவற்கோபுர பிரசுரங்களை ஒருவர் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் ‘கலகத்தைத் தூண்டும் பிரசுரங்களை விநியோகிப்பதற்காக’ இரண்டு அல்லது மூன்று வருடங்கள் சிறையில் போடப்படும் சந்தர்ப்பம் இருந்தாலும், தலைமைத்தாங்கி வழிநடத்திய அதிக முதிர்ச்சி வாய்ந்த நூற்றுக்கணக்கான சகோதரர்கள் சிறையிலிருந்தாலும், கிழக்கு ஜெர்மனியில் இருக்கும் யெகோவாவின் ஊழியர்கள் தொடர்ந்து பிரசங்கித்து வருகின்றனர்.”
மேற்கு ஜெர்மனியில் நியுரெம்பர்க் என்ற இடத்தில் 1955-ல் நடந்த யெகோவாவின் சாட்சிகளின் சர்வதேச மாநாட்டுக்கு நானும் என் மனைவி ரெஜினாவும் ஆஜரானோம். அதற்கு அடுத்த ஆண்டு மேற்கு பெர்லினில் நாங்கள் இருவரும் முழுக்காட்டப்பட்டோம். மேற்கு பெர்லினிலிருந்து கிழக்கு ஜெர்மனியை பிரித்த பெர்லின் சுவர் 1961-ல் கட்டப்படுவதற்கு முன்பே நாங்கள் முழுக்காட்டப்பட்டோம். ஆனால் நான் முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன்பே, யெகோவா தேவனிடம் எனக்கிருந்த உண்மைத்தவறாமை பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டது.
உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ளுதல்
லிம்பக்-ஒபர்ஃப்ரோனா என்ற இடத்தில் இருந்த யெகோவாவின் சாட்சிகளின் சபைக்கு நாங்கள் செல்ல ஆரம்பித்த போது, மேற்கு ஜெர்மனியில் பைபிள் பிரசுரங்களை கொண்டு செல்வதற்கு அந்தச் சபைக்கு ஒருவர் தேவைப்பட்டார். எங்களுக்கு சிறு வியாபாரமும் இரண்டு இளம் பிள்ளைகளும் இருந்தனர். ஆனால் யெகோவாவை சேவிப்பது எங்களுடைய வாழ்க்கையின் மையமாக ஏற்கெனவே ஆகிவிட்டிருந்தது. 60 புத்தகங்களை மறைத்து எடுத்துச் செல்ல எங்களுடைய பழைய காரை நாங்கள் வேறு விதமாக மாற்றியமைத்தோம். இவ்வாறு புத்தகங்களை எடுத்துச் செல்வது அபாயம் ஏற்படக்கூடிய வேலையாக இருந்ததால், யெகோவாவின் பேரில் நான் சார்ந்திருக்கும்படி அது எனக்கு கற்பித்தது.
கிழக்கு பெர்லினிலிருந்து மேற்கு பகுதிக்கு காரில் கடந்துசெல்வது சுலபமாக இல்லை. அதை நாங்கள் எவ்வாறு சமாளித்தோம் என்று அடிக்கடி நினைத்து நான் ஆச்சரியப்படுவதுண்டு. ஒரு சமயம் விடுதலையளிக்கப்பட்டிருந்த பகுதியில் நாங்கள் பிரசுரங்களை சேகரித்தோம். கிழக்கு ஜெர்மனிக்கு எல்லையைக் கடந்து திரும்பி செல்வதற்கு முன்பு புத்தகங்களை காரில் மறைந்து வைத்தோம்.
ஒரு சமயம் புத்தகங்களை நாங்கள் மறைத்து வைத்த உடனேயே ஓர் அடுக்கக வீட்டிலிருந்து ஓர் அந்நியர் வெளியே வந்து “இங்கும் இருக்கிறீர்களா” என்று கடூரமாக கத்தி என்னை அழைத்தார். என்னுடைய இருதயத் துடிப்பு ஒரு கணம் நின்றுவிட்டது. அவர் நம்மை கவனித்துக் கொண்டிருந்தாரா? “அடுத்த முறை நீங்கள் வேறு ஏதாவது ஓர் இடத்துக்குச் செல்வது நல்லது. கிழக்கு ஜெர்மன் போலீஸ் ரேடியோ-கார் அந்த மூலையில் தான் நிறுத்தப்பட்டிருக்கும். அவர்கள் உங்களை ஒருவேளை பிடிக்கலாம்,” என்றார். நான் “அப்பாடா!” என பெருமூச்சுவிட்டேன். கஷ்டமின்றி எல்லையை கடந்து சென்றோம். காரில் இருந்த நாங்கள் நான்கு பேரும் வீட்டுக்கு திரும்பிச் செல்லும் வழி முழுவதும் பாடிக்கொண்டே சென்றோம்.
தனிமையில் இருப்பதற்கு தயாரிப்பு
கிழக்கு ஜெர்மனியில் இருந்த சகோதரர்கள் 1950-களில் மேற்கு ஜெர்மனியில் இருந்தவர்களின் பேரில் பிரசுரங்களுக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் சார்ந்திருந்தனர். ஆனால் 1960-ல் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அது கிழக்கு ஜெர்மனியில் இருந்த ஒவ்வொரு சாட்சியும் தாங்கள் வசித்து வந்த இடத்திலிருக்கும் உடன்சாட்சிகளோடு நெருக்கமான தொடர்புகொள்ளும்படி உதவிசெய்தது. பிறகு ஜூன் 1961-ல் மூப்பர்களுக்கான ராஜ்ய ஊழியப்பள்ளியின் முதல் வகுப்பு பெர்லினில் நடத்தப்பட்டது. நான் முதல் நான்கு-வார வகுப்புகளுக்கு ஆஜரானேன். ஆறு வாரங்களுக்குப் பிறகு பெர்லின் சுவர் எழுப்பப்பட்ட போது நாங்கள் திடீரென மேற்கிலிருந்து துண்டிக்கப்பட்டோம். எங்களுடைய வேலை இப்போது தலைமறைவாக மட்டுமல்ல, அமைப்போடு தொடர்பின்றியும் இருந்தது.
கிழக்கு ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகளின் வேலை மெதுவாக குறைந்து முழுவதுமாக நின்றுவிடும் என்று சிலர் பயந்தனர். என்றபோதிலும், ஒரு வருடத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட அமைப்பு சம்பந்தப்பட்ட மாற்றங்கள் ஆவிக்குரிய ஒற்றுமையையும் பலத்தையும் காத்துக்கொள்வதற்கு எங்களுக்கு உதவி செய்தன. கூடுதலாக, ராஜ்ய ஊழிய பள்ளியின் முதல் வகுப்புக்கு ஆஜரான மூப்பர்கள் பெற்றுக்கொண்ட பயிற்றுவிப்பு, மற்ற மூப்பர்களுக்கு இந்தப் பயிற்றுவிப்பைக் கொடுப்பதற்கு அவர்களை ஆயத்தப்படுத்தியது. 1949 மாவட்ட மாநாடுகள் மூலம் யெகோவா எங்களை 1950-ன் தடையுத்தரவுக்கு தயாரித்தது போல நாங்கள் தனிமையாயிருக்கும் சமயத்துக்காகவும் யெகோவா எங்களை தயார் செய்தார்.
மேற்கிலிருந்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுவிட்டதால், அமைப்பு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதற்கு நாங்கள் முதற்படி எடுக்க வேண்டும் என்பது தெளிவாக இருந்தது. மேற்கு பெர்லினில் இருக்கும் நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களுக்கு நாங்கள் கடிதம் எழுதினோம். மேற்கிலிருந்து பிரயாணம் செய்பவர்கள் அடையக்கூடிய கிழக்குப் பகுதியிலிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில் அவர்களை சந்திக்கும்படி அதில் எழுதியிருந்தோம். குறிக்கப்பட்ட இடத்தில் வாகனத்தை பழுதுபார்ப்பது போல் நடித்து காத்துக்கொண்டிருந்தோம். சில நிமிடங்களுக்குப் பிறகு சகோதரர்கள் காரில் பைபிள் பிரசுரங்களை எங்களுக்குக் கொண்டு வந்தார்கள். பாதுகாப்பு காரணங்களுக்காக பெர்லினில் நான் விட்டுவந்த என்னுடைய ராஜ்ய ஊழியப் பள்ளி புத்தகம், நான் எடுத்து வைத்திருந்த குறிப்புகள், பைபிள் ஆகியவற்றையும்கூட சகோதரர்கள் கொண்டுவந்தது சந்தோஷமாயிருந்தது. அவைகளை திரும்பவும் பெற்றுக்கொண்டது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருந்தது! அடுத்த சில ஆண்டுகளின் போது இவைகள் எனக்கு எவ்வளவு தேவைப்படும் என்பதைக் குறித்து நான் அப்போது உணரவில்லை.
தலைமறைவாக நடத்தப்பட்ட பள்ளி
சில நாட்களுக்குப் பிறகு ராஜ்ய ஊழியப் பள்ளி வகுப்புகள் கிழக்கு ஜெர்மனியின் எல்லா பாகங்களிலும் ஏற்பாடு செய்யும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. என்னையும் சேர்த்து நான்கு போதனையாளர்கள் நியமிக்கப்பட்டனர். நம்முடைய வேலை தடையுத்தரவின் கீழ் இருந்ததினால் எல்லா மூப்பர்களையும் பயிற்றுவிப்பது சாத்தியமில்லாத வேலையாக எனக்குத் தோன்றியது. நாங்கள் செய்துகொண்டிருப்பவற்றை மறைப்பதற்கு, வகுப்புகளை விடுமுறை கால கூட்டங்கள் போல் ஏற்பாடு செய்வதற்கு நான் தீர்மானித்தேன்.
ஒவ்வொரு வகுப்பிலும் நான்கு மாணவர்களும், போதிப்பவராக நானும், சமையல் செய்பவராக ஆறாவது சகோதரரும் இருந்தனர். மனைவிகளும் பிள்ளைகளும்கூட இருந்தனர். ஆகையால் 15-லிருந்து 20 நபர்கள் அடங்கிய ஒரு தொகுதியை நாங்கள் கொண்டிருந்தோம். கூடாரங்களில் தங்குவது முடியாத காரியமாக தோன்றியது. ஆகையால் பொருத்தமான இடத்தைத் தேடுவதற்காக நானும் என் குடும்பமும் சென்றோம்.
ஒரு சமயம் கிராமத்தினூடே பயணம் செய்கையில், முக்கிய சாலைகளிலிருந்து தள்ளி சோலைக்கு வழிநடத்தும் ஒரு சந்து இருப்பதை நாங்கள் கவனித்தோம். அது சிறந்த இடமாக தோன்றியது. ஆகையால் நான் மேயரை அணுகினேன். “மற்ற சில குடும்பங்களோடு இரண்டு வாரங்கள் கூடாரத்தில் தங்குவதற்கு நாங்கள் ஓர் இடத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்,” என்று நான் விளக்கினேன். “பிள்ளைகள் கும்மாளம் அடித்து விளையாடுவதற்கு வசதியாக நாங்கள் மட்டும் தனியான இருக்க விரும்புகிறோம். அங்கே இருக்கும் சோலைகளை நாங்கள் உபயோகித்துக் கொள்ளலாமா?” அவர் ஒத்துக்கொண்டார். ஆகையால் நாங்கள் ஏற்பாடுகள் செய்தோம்.
நடுப்பகுதி வெளியிலிருந்து தெரியாமல் மறைந்து இருக்கும்படி அந்த இடத்தில் நாங்கள் கூடாரங்களையும் டிரெயிலர் வீட்டையும் அமைத்தோம். டிரெயிலர் வீடு எங்கள் வகுப்பறையாக சேவித்தது. ஒரு நாளுக்கு 8 மணிநேரங்களாக 14 நாட்கள் ஆழ்ந்த படிப்புக்காக நாங்கள் அங்கே கூடினோம். எதிர்பாராது வருபவர்களுக்கென சுற்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் நாற்காலிகளும் ஒரு மேசையும் போட்டு வைத்திருந்தோம். அப்படிப்பட்டவர்கள் வந்தனர்! அப்படிப்பட்ட சமயங்களில் எங்களுடைய குடும்பங்களின் அன்பான ஆதரவை நாங்கள் உண்மையிலேயே போற்றினோம்.
வகுப்புகள் நடந்துகொண்டிருந்த போது எங்களுடைய குடும்பங்கள் காவல் காத்துக்கொண்டிருந்தன. ஒரு சமயம் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் காரியதரிசியாகவும் இருந்த மேயர் சந்து வழியாக எங்களுடைய சோலையை நோக்கி வருவதை கண்டனர். காவல் காத்துக்கொண்டிருந்தவர் டிரெயிலர் வீட்டுக்குள் குறித்த நேரத்தில் எச்சரிக்கை செய்வதற்கு கம்பி மூலம் இணைக்கப்பட்டிருந்த ஒரு சுவிட்சை அழுத்தினார். உடனே நாங்கள் டிரெயிலர் வீட்டுக்குள் இருந்து குதித்து மேசையைச் சுற்றி முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்த இடங்களில் இருந்துகொண்டு சீட்டு விளையாட ஆரம்பித்தோம். மெய்யான காட்சிபோன்று தோன்ற வைப்பதற்கு அங்கு ஒரு புட்டி ஷ்னாப்ஸ்கூட இருந்தது. மேயர் சிநேகப்பான்மையாக எங்களைச் சந்தித்துவிட்டு அங்கு உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் குறித்து எந்தவித சந்தேகமும்படாமல் வீட்டுக்கு திரும்பிசென்றுவிட்டார்.
தேவராஜ்ய ஊழியப் பள்ளி வகுப்புகள் 1962-ம் ஆண்டு வசந்த காலத்திலிருந்து 1965-ம் ஆண்டு பிற்பகுதி வரை தேசம் முழுவதும் நடத்தப்பட்டன. கிழக்கு ஜெர்மனியில் எங்களுடைய குறிப்பிட்ட நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்பதன் பேரில் தகவலும், அங்கு பெற்றுக்கொண்ட ஊக்கமான பயிற்சியும் பிரசங்க வேலையை கண்காணிப்பதற்கு மூப்பர்களைத் தயாரித்தது. வகுப்புகளுக்கு ஆஜராவதற்கு மூப்பர்கள் தங்கள் விடுமுறை நாட்களை தியாகம் செய்தது மட்டுமன்றி, சிறையிலடைக்கப்படும் அபாயத்தையும் எதிர்ப்பட்டனர்.
பள்ளியின் நன்மைகள்
எங்களுடைய வேலைகளை அதிகாரிகள் உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தனர். பெரும்பாலான மூப்பர்கள் பள்ளிக்கு ஆஜராகி முடிந்த பின்பு 1965-ம் ஆண்டின் பிற்பகுதியில் நம்முடைய அமைப்பின் வேலைக்கு ஒரு முடிவைக் கொண்டு வர அவர்கள் முயற்சி செய்தனர். வேலையை முன்நின்று நடத்துபவர்கள் என்று கருதிய 15 சாட்சிகளை அவர்கள் சிறையிலடைத்தனர். அது நன்கு-தயாரிக்கப்பட்ட செயலாக இருந்தது. தேசம் முழுவதும் விரிவாக நடைபெற்றது. மறுபடியும் சாட்சிகளின் வேலை நிறுத்தப்படும் என்று அநேகர் நினைத்தனர். ஆனால் யெகோவாவின் உதவியோடு நாங்கள் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒழுங்குபடுத்திக் கொண்டு முன்பு போலவே நம்முடைய வேலையை செய்தோம்.
ராஜ்ய ஊழியப்பள்ளியில் மூப்பர்கள் பெற்றுக் கொண்ட பயிற்சியும், இப்படிப்பட்ட வகுப்புகளின் போது அவர்கள் அனுபவித்த கூட்டுறவின் மூலம் ஏற்பட்ட முறிக்க முடியாத நம்பிக்கை பந்தமும் இவ்வாறு செய்வதை சாத்தியமாக்கிற்று. இப்படியாக அமைப்பு அதன் மனவுறுதியை காண்பித்தது. அமைப்பின் போதனைகளை மிக நெருக்கமாக கீழ்ப்படிதலோடு பின்பற்றியது எவ்வளவு முக்கியமானதாய் இருந்தது!—ஏசாயா 48:17.
அரசாங்க அதிகாரிகள் செய்த மிகப்பெரிய தடங்கல் முயற்சிகள் நம்முடைய வேலையின் பேரில் சிறிதளவு எதிரிடையான பாதிப்பை மட்டுமே கொண்டிருந்தது என்பது அதைப் பின்தொடர்ந்து வந்த மாதங்களில் தெளிவாக ஆனது. சிறிது நேரத்துக்குப் பிறகு ராஜ்ய ஊழியப்பள்ளி வகுப்புகளை நாங்கள் மறுபடியும் ஆரம்பிக்க முடிந்தது. நிலைமைக்கு தக்கப்படி மாறும் நம் பண்பு திறத்தை அதிகாரிகள் தெரிந்து கொண்ட போது அவர்களுடைய தந்திரங்களை மாற்றிக் கொள்ள அவர்கள் வற்புறுத்தப்பட்டனர். யெகோவாவுக்கு என்னே ஒரு மாபெரும் வெற்றி!
ஊழியத்தில் சுறுசுறுப்பாயிருத்தல்
அச்சமயத்தில் எங்களுடைய சபை புத்தகப்படிப்பு தொகுதிகள் ஐந்து நபர்கள் அடங்கியதாய் இருந்தன. இப்புத்தகப்படிப்பு ஏற்பாட்டின் மூலம் நாங்கள் ஒவ்வொருவரும் நம்முடைய பைபிள் பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டோம். இந்தச் சிறு படிப்பு தொகுதிகளிலிருந்து பிரசங்க வேலை கிரமமாக நடத்தப்பட்டது. பைபிளை படிக்க விரும்பிய அநேக ஆட்களை கண்டுபிடிக்க யெகோவா என்னையும் ரெஜினாவையும் ஆரம்பத்திலிருந்து ஆசீர்வதித்தார்.
கண்டுபிடிக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுவதிலிருந்து எங்களை பாதுகாத்துக்கொள்ள வீட்டுக்கு-வீடு ஊழியத்தை மாற்றியமைத்தோம். நாங்கள் ஒரு விலாசத்துக்குச் செல்வோம். பின்பு மற்றொரு வீட்டைத் தட்டுவதற்கு முன் இடையில் இருக்கும் சில வீடுகளை விட்டுவிடுவோம். ஒரு வீட்டில் ஒரு பெண் என்னையும் ரெஜினாவையும் உள்ளே அழைத்தார்கள். நாங்கள் அவர்களோடு ஒரு வேதப்பூர்வ பொருளை கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய மகன் அந்த அறைக்குள் வந்தார். அவர் ஒளிவுமறைவின்றி நேரடியாக பேசினார்.
“உங்களுடைய கடவுளை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?” என்று அவர் கேட்டார். “நான் பார்க்கும் காரியங்களை மட்டும்தான் நான் நம்புவேன். அதைத் தவிர மற்றவையெல்லாம் வெறும் குப்பை.”
“அதை என்னால் நம்ப முடியாது,” என்று நான் பதிலளித்தேன். “நீங்கள் உங்களுடைய மூளையை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் உங்களுக்கு ஒரு மூளை இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.”
பார்க்க முடியாவிட்டாலும் நாம் ஒத்துக்கொள்ளும் மின்சாரம் போன்ற மற்ற காரியங்களைப் பற்றி ரெஜினாவும் நானும் உதாரணங்களைக் கொடுத்தோம். அந்த இளம் மனிதன் கவனமாக செவிகொடுத்துக் கேட்டார். அவரோடும் அவருடைய தாயோடும் ஒரு வீட்டு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இருவரும் சாட்சிகளாக ஆனார்கள். உண்மையில், என்னோடும் என் மனைவியோடும் படித்த 14 நபர்கள் சாட்சிகளாக ஆனார்கள். அதில் ஒரு பாதி வீட்டுக்கு-வீடு சந்திப்புகளின் போது சந்திக்கப்பட்டார்கள். மறு பாதி முறைப்படியல்லாத சாட்சி கொடுக்கும் போது நாங்கள் முதலில் சந்தித்தவர்கள்.
வீட்டு பைபிள் படிப்பு ஒழுங்காக நடத்தப்பட ஆரம்பித்தவுடன் அந்த நபர் நம்பகமானவர் என்று நாங்கள் எண்ணினால், நாங்கள் அவரை நம்முடைய கூட்டங்களுக்கு அழைத்தோம். என்றபோதிலும் கடவுளுடைய ஜனங்களின் பாதுகாப்பை அந்த மாணாக்கன் கஷ்டத்துக்குள்ளாக்குவாரா என்பது தான் முக்கிய யோசனையாக இருந்தது. ஆகையால், ஒரு வருடத்துக்குப் பிறகு தான் நாங்கள் ஒரு பைபிள் மாணாக்கரை கூட்டத்துக்கு அழைப்போம். சில சமயங்களில் அதற்கும் அதிகமான காலம் கடந்த பிறகு தான் அழைப்போம். ஓரளவு பிரசித்திப் பெற்ற ஒரு மனிதரைப் பற்றி எனக்கு ஞாபகம் வருகிறது; கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த உயர்மட்ட அதிகாரிகளோடு அவருக்கு ஒரு நெருக்கமான உறவு இருந்தது. ஒன்பது வருடங்கள் அவர் பைபிள் படித்தார். அதற்குப் பிறகு தான் அவர் கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டார்! இன்றைக்கு இந்த மனிதன் நம்முடைய கிறிஸ்தவ சகோதரராக இருக்கிறார்.
அதிகாரிகள் இன்னும் எங்களைப் பின்தொடருகின்றனர்
பெரும் அளவில் கைதுசெய்யப்படுவது 1965-க்குப் பிறகு நடக்கவில்லை. ஆனால் சமாதானத்தில் வாழவும் நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. அதிகாரிகள் எங்களைத் தொடர்ந்து கவனமாக கவனித்து வந்தனர். இந்தக் காலத்துக்குள்ளாக நம்முடைய அமைப்பின் வேலையோடு நான் அதிக நெருக்கமாக ஈடுபட்டேன். ஆகையால் அதிகாரிகள் என் மீது விசேஷ கவனம் செலுத்தினார்கள். கேள்விகள் கேட்பதற்காக அவர்கள் எண்ணற்ற முறைகள் காவல் நிலையத்துக்கு என்னைக் கூட்டிச் சென்றனர். “உங்களுடைய சுயாதீனத்துக்கு நீ இப்போது குட்-பை சொல்லலாம், சிறைக்குச் செல்,” என்று அவர்கள் சொல்வார்கள். ஆனால் அவர்கள் எப்போதும் என்னை இறுதியில் போகும்படி விட்டுவிடுவார்கள்.
இரண்டு அதிகாரிகள் 1972-ல் என்னை சந்தித்து தங்களை அறியாமலேயே நம்முடைய அமைப்பை புகழ்ந்து பேசினர். எங்களுடைய சபை காவற்கோபுரம் படிப்பை அவர்கள் செவிகொடுத்துக் கேட்டிருக்கின்றனர். “அந்தக் கட்டுரை தாக்கிப் பேசுவதாக நாங்கள் கண்டோம்,” என்று அவர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அந்தக் கட்டுரையை மற்றவர்கள் வாசித்தால் கம்யூனிஸ்ட் கருத்தியல் கோட்பாட்டைக் குறித்து அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி அவர்கள் அக்கறையுள்ளவர்களாய் இருந்தனர். “ஐம்பது அல்லது அறுபது இலட்சம் காவற்கோபுரம் பிரதிகள் விநியோகிக்கப்படுகின்றன. அது வளர்ந்து வரும் நாடுகளில் வாசிக்கப்பட்டு வருகிறது. அது வெறும் மலிவான விஷயங்கள் நிறைந்த சுருக்கமான செய்தித்தாள் அல்ல,” என்றார்கள். ‘நீங்கள் எவ்வளவு சரியாகச் சொன்னீர்கள்!’ என்று நான் எனக்குள்ளே நினைத்துக்கொண்டேன்.
நாங்கள் 1972-க்குள் 22 ஆண்டுகள் தடையுத்தரவின் கீழ் இருந்து விட்டோம். யெகோவா எங்களை அன்பாகவும் ஞானமாகவும் வழிநடத்தி வந்திருக்கிறார். நாங்கள் அவருடைய போதனைகளை கவனமாக பின்பற்றி வந்தோம். ஆனால் கிழக்கு ஜெர்மனியில் இருக்கும் சாட்சிகள் சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படுவதற்கு முன்பு 18 வருடங்கள் கடந்து செல்ல வேண்டியிருக்கும். நம்முடைய கடவுளாகிய யெகோவாவை வணங்குவதற்கு நாங்கள் இப்போது அனுபவிக்கும் அற்புதமான சுயாதீனத்துக்கு நாங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!—ஹெல்முட் மார்டின் சொன்னது.