தடையுத்தரவின்கீழ் யெகோவா எங்களைக் கவனித்துக் காத்தார்—பகுதி 3
அது மார்ச் 14, 1990. அந்தப் பெருஞ் சிறப்பு வாய்ந்த நாளில், கிழக்கு பெர்லினில் மத விவகாரங்களுக்கான அரசியல் துறையரங்கத்தில், அரசாங்க உயர் அதிகாரி ஒருவர், அப்பொழுது ஜெர்மன் சம உரிமை குடியரசு என அழைக்கப்பட்டதில், அல்லது கிழக்கு ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகளின்பேரில் சட்டப்பூர்வ தகுநிலை அளிக்கும் உரிமைப்பத்திரத்தைக் கொடுத்தபோது அங்கிருந்தவர்களுள் நானும் இருந்தேன். அந்த நாளின் நடவடிக்கைகளின்போது, நான் என் நினைவைப் பின்நோக்கிச் செலுத்தி நான் சாட்சியானபோது நாங்கள் அனுபவித்த அந்த இக்கட்டான காலங்களின்பேரில் சிந்தனை செய்தேன்.
என்னுடன் வேலைசெய்த சாட்சியாயிருந்த மார்கரீட்டா, பைபிளில் ஆதாரங்கொண்ட தன் நம்பிக்கைகளைப்பற்றி என்னிடம் 1950-ன் மத்திபத்தில், முதல் பேசினபோது, கிழக்கு ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்துவது கடுமையாயிருந்தது. அதன்பின் சீக்கிரத்திலேயே அவள் வேறு எங்கேயோ வேலை செய்ய சென்றுவிட்டாள், நான் மற்றொரு சாட்சியுடன் பைபிளைப் படிக்கத் தொடங்கினேன். நான் 1956-ல் முழுக்காட்டப்பட்டேன், மார்கரீட்டாவும் நானும் அதே ஆண்டில் மணம் செய்துகொண்டோம். நாங்கள் பெர்லினில் லிக்டென்பர்க் சபையோடு இணைந்திருந்தோம். அது பிரசங்க வேலையில் பங்குகொள்ளும் ஏறக்குறைய 60 ராஜ்ய பிரஸ்தாபிகளைக் கொண்டிருந்தது.
என் முழுக்காட்டுதலுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின், அரசாங்க அதிகாரிகள், எங்கள் சபையில் தலைமை வகித்து நடத்துபவரின் வீட்டுக்கு வந்தனர். அவரைக் கைதுசெய்யயும்படி திட்டமிட்டிருந்தனர், ஆனால் அவர் மேற்கு பெர்லினில் வேலையில் இருந்தார். அங்கேயே இருக்கும்படி அவருடைய குடும்பத்தார் அவருக்குத் தெரியப்படுத்த முடிந்தது, மேலும் சில மாதங்களுக்குப் பின் அவர்கள் மேற்கில் அவரிடம் போய்ச் சேர்ந்துகொண்டனர். நான் 24 வயதானவனாகத்தானே இருந்தபோதிலும், அப்பொழுது சபையில் கனத்தப் பொறுப்புகள் எனக்குக் கொடுக்கப்பட்டன. அத்தகைய கடமைகளைக் கவனிப்பதற்கு யெகோவா ஞானத்தையும் பலத்தையும் அருளுவதால் நான் நன்றியுடனிருக்கிறேன்.—2 கொரிந்தியர் 4:7.
ஆவிக்குரிய உணவு அளித்தல்
ஆகஸ்ட் 1961-ல் பெர்லின் மதில் கட்டப்பட்டபோது, கிழக்கிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் மேற்கிலிருந்த தங்கள் சகோதரரிலிருந்து திடீரென தனிப்படுத்தப்பட்டவர்களானார்கள். இவ்வாறு, முதல் தட்டச்சுப்பொறியைக் கொண்டும், பின்பு தொடர்ச்சியான படியெடுப்புப் பொறிகளைக் கொண்டும் நாங்கள் பிரதிகளெடுத்த காலப்பகுதி தொடங்கின. இந்த அச்சடிப்பைச் செய்வதற்கு எங்கள் வீட்டில் ஒரு பதுங்கிடத்தைக் கட்டுவதற்கு, 1963-ல் தொடங்கி, நான் இரண்டு ஆண்டுகள் செலவிட்டேன். நாள் முழுவதும் இயந்திரக் கருவிகள் செய்பவனாக உழைத்தப்பின்பு, இரவுகளை மற்ற இரண்டு சகோதரர்களின் உதவியுடன் தி உவாட்ச்டவரின் (The Watchtower) பிரதிகளை உண்டாக்குவதற்குச் செலவிட்டேன். அதிகாரிகள் எங்கள் அச்சடிப்பு அமைப்பை ஊடுருவிக் கண்டுபிடிக்கும்படி உறுதிகொண்டிருந்தனர், ஆனால் யெகோவா எங்களுக்கு உதவிசெய்தார், இவ்வாறு, நாங்கள் அதை அழைத்தபடி, எங்கள் உணவு உரிய நேரத்தில் தோன்றினது.
நம்முடைய பத்திரிகைகளின் போதிய பிரதிகளை உண்டுபண்ண பெரும் அளவுகளில் காகிதம் தேவைப்பட்டது, இந்த அளவான தொகைகளை அடைவது எளிதாக இல்லை. பேரளவில் காகிதத்தைத் தவறாமல் வாங்கிக்கொண்டிருந்தால், இது அதிகாரிகளின் கவனத்தை இழுத்திருக்கும். ஆகையால் நாங்கள் தனித்தனி சாட்சிகள் சிறிய தொகைகளில் காகிதம் வாங்கி எங்கள் தொகுதி பைபிள் படிப்புக்குக் கொண்டுவரும்படி ஏற்பாடு செய்திருந்தோம். அங்கிருந்து அது, நாங்கள் பத்திரிகையை உண்டாக்கும் இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்பு செய்துமுடிக்கப்பட்ட பத்திரிகைகளை மற்ற சாட்சிகள் பகிர்ந்தளித்தனர்.
புத்தக அச்சடிப்பில் நான் உட்பட்டிருந்ததாக அதிகாரிகள் சந்தேகித்ததால், அவர்கள் என்பேரில் தொடர்ந்து உன்னிப்பான கவனம் செலுத்திக்கொண்டிருந்தனர். 1965-ன் பிற்பகுதியில், அவர்கள் என்னை மீறிய முறையில் அதிகமாய்ப் பின்தொடருவதை நான் கவனித்து, அவர்கள் எதையோ திட்டமிடுகின்றனரென உணர்ந்தேன். திடீரென, அவர்கள் ஒரு நாள் விடியற்காலையிலேயே தாக்கினர்.
மயிரிழையில் தப்பியநிலை
அந்தப் பனிக்கால காலையில் நான் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தேன். அது விடிவதற்கு முன்னான சமயம், நான் கடும் குளிருக்கு எதிராக என்னை இறுக இழுத்து மூடிக்கொண்டிருந்தேன். நான் நடந்து செல்கையில், வேலிபுதர்களுக்குமேல் நான்கு தலைகளைக் கண்டேன். அந்த ஆட்கள் முக்கில் திரும்பி என் திசையை நோக்கி நடந்தனர். எனக்குத் திகிலுண்டாக அவர்களை அரசாங்க அதிகாரிகளென நான் கண்டுணர்ந்தேன். நான் என்ன செய்வது?
ஆழமாய் வீழ்ந்திருந்த உறைபனி குடைந்தெடுத்து ஒருபுறம் ஒதுக்கப்பட்டு ஒரு குறுகிய வழிவிடச் செய்யப்பட்டிருந்தது. நான் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தேன். என் தலையைக் கீழே குனிய வைத்து, என் கண்கள் தரையை நோக்கியிருக்க நான் தொடர்ந்து சென்றேன். விரைவான ஒரு ஜெபம் செய்தேன். அந்த மனிதர் மேலும் மேலும் நெருங்கி வந்தனர். அவர்கள் என்னை அடையாளங் கண்டுகொண்டனரா? அந்த இடுக்கமான பாதையில் நாங்கள் ஒருவரையொருவர் நெருங்கி கடந்து செல்கையில், என்ன நடந்ததென்று என்னால் நம்பவே முடியவில்லை. நான் மேலும் மேலும் விரைவாய் நடந்தேன். அவர்களில் ஒருவன் “ஹாய், அது அவன். நில்!” என்று கத்தினான்.
என்னால் கூடிய முழு விரைவில் நான் ஓடினேன். மூலையைச் சுற்றியோடி, அயலகத்தாரின் வேலியைத் தாண்டி குதித்து என் வீட்டுக் கொல்லைப்புறத்துக்குள் சென்றேன். வீட்டுக்குள் சடாரென்று புகுந்து, கதவை பூட்டித் தாழ்ப்பாளிட்டேன். “எல்லாரும் படுக்கையைவிட்டு எழுந்திருங்கள்! என்னைப் பிடிக்கும்படி அவர்கள் இங்கே வந்துவிட்டனர்,” என்று கூச்சலிட்டேன்.
மிக விரைவில் மார்கரீட்டா கீழே சென்று கதவண்டை நின்றாள். வினாடியில் நான் நிலவறையில் அடுப்பை எரிய வைத்தேன். என் உடைமையிலிருந்த சபை விவரப் பதிவுகளையெல்லாம் எடுத்து நெருப்பில் எரித்துப்போட்டேன்.
“திறந்துவிடு! கதவைத் திற! இது குற்றச்சாட்டு அரசாங்க வழக்குரைஞர்,” என்று அந்த மனிதர்கள் கோபாவேசத்துடன் கத்தினர்.
கண்டுபிடிக்க முடியாத அளவில் நான் எல்லாவற்றையும் எரித்துக்கொண்டிருக்கையில் மார்கரீட்டா விட்டுக்கொடுக்கவில்லை. பின்பு நான் மார்கரீட்டாவிடம் சென்று கதவைத் திறக்கும்படி தலையை அசைத்தேன். அந்த மனிதர் குபீர்ப்பாய்ச்சலில் நுழைந்தனர்.
“நீ ஏன் ஓடிப்போனாய்?” அவர்கள் கேட்டனர்.
சீக்கிரத்தில் மேலுமதிகமான ஆட்கள் வந்து சேர்ந்தனர், வீடு முழுவதும் புகுந்தாராயப்பட்டது. எங்கள் அச்சடிக்கும் இயந்திரமும் 40,000 காகிதத் தாள்களும் வைக்கப்பட்டிருந்த அந்தப் பதுங்கிடமே என் முக்கிய கவலையாயிருந்தது. ஆனால் அந்த மறைக்கப்பட்ட வாசல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. கேள்விகள் கேட்பது பல மணிநேரங்கள் தொடர்ந்து நீடித்தபோதிலும், மன அமைதியுடன் இருக்கும்படி யெகோவா எனக்கு உதவிசெய்தார். இந்த அனுபவம் நம்முடைய அன்புள்ள பரலோகத் தகப்பனிடம் எங்களை மேலும் நெருங்க இழுத்து சகித்து நிலைத்திருக்கும்படி பலப்படுத்தியது.
சிறையில் எனினும் சுயாதீனனாக
இராணுவ சேவைக்கு அறிவிப்புச்செய்யும்படி 1960-ன் பத்தாண்டின் பிற்பகுதியில், தெரிவிக்கப்பட்டேன். நான் மனச்சாட்சியுடன் சேவிக்க முடியாதாதலால், ஏழு மாதங்கள் சிறைகாவலிலும் கடும் உழைப்பு தண்டனை முகாமிலும் செலவிடும்படி வற்புறுத்தப்பட்டேன். பெர்லினுக்குத் தென்கிழக்கில் இருந்த, காட்பஸ் முகாமில் 15 சாட்சிகள் இருந்தனர். நாங்களெல்லாரும் எங்கள் கிறிஸ்தவ நடுநிலை வகிப்பினிமித்தம் அங்கிருந்தோம். (ஏசாயா 2:2-4; யோவான் 17:16) எங்கள் வேலைநாட்கள் வெகு நீடித்தவையாகவும் உழைப்பு கடினமானதாயும் இருந்தன. நாங்கள் காலை 4:15-க்கு எழும்பி, முகாமுக்கு வெளியே ரயில் தண்டவாளப் பாதைகளில் வேலைசெய்யும்படி கொண்டு செல்லப்பட்டோம். எனினும், சிறையில் இருக்கையில், யெகோவாவின் ராஜ்யத்தைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல எங்களுக்கு வாய்ப்புகள் இருந்தன.
உதாரணமாக, காட்பஸில் குறி-சொல்பவர்கள் இருவர் எங்களுடன் இருந்தனர். அவர்களில் இளையவன் ஒரு நாள் மனமுறிவுற்ற நிலையில் என்னிடம் பேச விரும்பினதாக நான் கேள்விப்பட்டேன். அவனுக்கு என்ன வேண்டியதாக இருக்கலாம்? அவன் தன் இருதயத்தில் இருந்தவற்றையெல்லாம் என்னிடம் வெளிப்படுத்தினான். அவனுடைய பாட்டியம்மாள் குறி-சொல்பவளாக இருந்தாள், அவளுடைய புத்தகங்களை வாசித்தப் பின்பு இவனும் அதைப்போன்ற வல்லமைகளை வளர்த்திருந்தான். இந்த மனிதன் தன்னை ஆட்கொண்ட அந்த வல்லமைகளிலிருந்து விடுதலையாவதற்கு அவ்வளவு அதிகமாய் விரும்பினபோதிலும், அவை பழிவாங்கும் நடவடிக்கைகளைக் குறித்து அவன் பயந்தான். அவன் மேலும் மேலும் அழுதான். ஆனால் இதெல்லாம் என்னிடம் செய்வதற்கு என்ன இருந்தது?
எங்கள் பேச்சின் போக்கில், அவன், தான் யெகோவாவின் சாட்சிகளுடன் இருக்கையில் எதிர்காலத்தைப்பற்றிக் குறிசொல்லும் தன்னுடைய திறமை தனக்கு இல்லாமற்போகச் செய்யப்படுகிறதென அவன் கூறினான். கெட்ட ஆவிகள், அல்லது பேய்கள், மற்றும் நல்லவைகள், அல்லது நீதியுள்ள தூதர்கள் இருக்கின்றனறென நான் விளக்கினேன். பூர்வ எபேசுவில் கிறிஸ்தவர்களானவர்களின் முன்மாதிரியை நான் பயன்படுத்தி, குறி-சொல்லுதல் சம்பந்தப்பட்ட அல்லது வேறு எந்த ஆவித்தொடர்பு பழக்கச் செயல்கள் சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களையும் ஒழித்து அழித்துப்போடுவதன் அவசியத்தை நான் அறிவுறுத்திக் கூறினேன். (அப்போஸ்தலர் 19:17-20) “பின்பு சாட்சிகளோடு தொடர்பு கொள், எல்லா இடங்களிலும் சாட்சிகள் இருக்கின்றனர்,” என்று நான் அவனுக்குச் சொன்னேன்.
சில நாட்களுக்குப் பின்பு, அந்த இளைஞன் முகாமைவிட்டுச் சென்றான், அதன்பின் அவனைப்பற்றி எதுவும் நான் கேள்விப்படவில்லை. ஆனால் அந்தக் கடும் திகில்கொண்ட மற்றும் ஆறுதலடைய முடியாத நிலையிலிருந்து விடுதலைக்காக ஏங்கி நாடின இந்த மனிதனோடு எனக்கு உண்டான இந்த அனுபவம் யெகோவாவின்பேரிலுள்ள என் அன்பை ஆழமாக்கிற்று. சாட்சிகளான நாங்கள் 15 பேர் எங்கள் விசுவாசத்தினிமித்தம் இந்த முகாமில் இருந்தோம், ஆனால் ஆவிக்குரியபிரகாரம் நாங்கள் விடுதலையாயிருந்தோம். அந்த இளைஞன் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டான், ஆனால் அவன் தன்னைத் திகிலுறச் செய்யும் ஒரு “கடவுளுக்கு” இன்னும் அடிமைப்பட்டிருந்தான். (2 கொரிந்தியர் 4:4) சாட்சிகளாகிய நாம் நம்முடைய ஆவிக்குரிய சுயாதீனத்தை எவ்வளவாய் மதித்துப் பாராட்ட வேண்டும்!
எங்கள் பிள்ளைகள் சோதிக்கப்பட்டனர்
பைபிளில் ஆதாரங்கொண்ட தங்கள் திடமான நம்பிக்கைகளுக்காக முதியோர் மட்டுமல்ல, இளைஞருங்கூட உறுதியாய் நிலைநிற்க வேண்டியிருந்தது. அவர்கள் பள்ளியிலும் வேலைசெய்யுமிடங்களிலும் இணங்கி உடன்படும்படி வற்புறுத்தப்பட்டனர். எங்கள் நான்கு பிள்ளைகளும் தங்கள் நம்பிக்கைகளுக்காக உறுதிநிலைநிற்கை ஏற்றனர்.
ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் கொடிவணக்க ஆசாரம் நடத்தப்பட்டது. பிள்ளைகள் அணிவரிசையில் முற்றத்துக்குள் சென்று, பாட்டுப்பாடி, கொடி ஏற்றப்படுகையில் டெல்மான் என்றழைக்கப்பட்ட வணக்கம் செய்தனர். எர்ன்ஸ்ட் டெல்மான் ஜெர்மன் கம்யூனிஸ்ட்டாக இருந்தார், 1944-ல் நாஜி SS-ஆல் கொலை செய்யப்பட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின், கிழக்கு ஜெர்மனியில் டெல்மான் நாட்டுத்தியாகியாகி விட்டார். யெகோவா தேவனுக்கு மாத்திரமே பரிசுத்த சேவை செலுத்த வேண்டுமென்ற பைபிளில் ஆதாரங்கொண்ட எங்களுடைய திட நம்பிக்கையினிமித்தம், அத்தகைய ஆசாரங்களின்போது பங்குகொள்ளாமல் மரியாதையுடன் நிற்கும்படி, என் மனைவியும் நானும் எங்கள் பிள்ளைகளுக்குப் போதித்தோம்.
பள்ளி பிள்ளைகளுக்கு கம்யூனிஸம் சார்ந்த பாட்டுகளும் கற்பிக்கப்பட்டன. மார்கரீட்டாவும் நானும் எங்கள் பிள்ளைகளின் பள்ளிக்குச் சென்று அவர்கள் ஏன் அத்தகைய அரசியல் பாட்டுகளைப் பாடமாட்டார்களென விளக்கிக் கூறினோம். எனினும், வேறு இயல்பான பாட்டுகளைக் கற்றுக்கொள்ள அவர்கள் மனமுள்ளோராக இருப்பரெனக் கூறினோம். இவ்வாறு, வெகு சிறு வயதிலேயே உறுதியாய் நிற்கவும் தங்களுக்கு இணையாயிருப்போரிலிருந்து வேறுபட்டிருக்கவும் எங்கள் பிள்ளைகள் கற்றுக்கொண்டனர்.
எங்கள் மூத்த மகள் 1970-ன் முடிவு பகுதியில், ஓர் அலுவலகத்தில் வேலை கற்பவளாய்ச் சேவிக்க விரும்பினாள். ஆனால் வேலை கற்கும் ஒவ்வொருவரும் முதல் 14 நாட்கள் இராணுவ சேவைக்கு முற்பட்ட பயிற்றுவிப்புக்கு உட்படவேண்டுமென தெரிவிக்கப்பட்டது. ரெனேட்டின் மனச்சாட்சி இதில் பங்குகொள்ள அவளை அனுமதியாதலால், அவள் தைரியமான நிலைநிற்கையை ஏற்றாள், முடிவில் அத்தகைய பயிற்றுவிப்புப் பெறும் கடமையிலிருந்து விடுவிக்கப்பட்டாள்.
அவளுடைய வேலைகற்கும் காலத்தின்போது, ரெனேட் ஒரு வகுப்புக்குச் சென்றாள் அதில் போர்க்கருவிகளைக் கொண்டு சுடும் பயிற்சிக்கு ஆஜராகும்படி அழைக்கப்பட்டாள். “ரெனேட், நீயும் சுடும் பயிற்சிக்கு வரப்போகிறாய்,” என கற்பிக்கிறவர் கூறினார். அவர் அவளுடைய மறுப்புகளுக்குச் செவிகொடுக்கவில்லை. “நீ சுட வேண்டியதில்லை,” என அவர் வாக்குக்கொடுத்தார். “நீ சிற்றுண்டிபானங்களைக் கவனித்துக்கொள்ளலாம்.”
அன்று மாலையில், நாங்கள் குடும்பமாகக் காரியங்களைக் கலந்து பேசினோம். சுடும் பயிற்சியின்போது, ரெனேட் நேர்முகமாகப் பங்குகொள்ளாவிடினும், அவள் அங்கிருப்பது தவறென நாங்கள் உணர்ந்தோம், எங்களோடு கலந்து பேசினதாலும் ஜெபத்தாலும் பலப்படுத்தப்பட்டு, அவள், தன்னை பயமுறுத்தி இணங்கவைப்பதற்கு விட்டுக்கொடுக்கவில்லை. எங்கள் இளம் பருவ மகள் கிறிஸ்தவ நியமங்களின் சார்பாக நிலைநிற்கை எடுப்பதைக் காண்பது எங்களுக்கு எத்தகைய ஊக்கமூட்டுதலாயிருந்தது!
எங்கள் பொது பிரசங்க நடவடிக்கைகள்
எங்கள் வேலைக்கு எதிர்ப்பு 1970-ன் பத்தாண்டுகளின் பிற்பட்ட பகுதியில் குறைந்தபோது, எங்களுக்குத் தேவைப்பட்ட கிறிஸ்தவ பிரசுரங்களைப் பேரளவில் மேற்கிலிருந்து கொண்டுவரத் தொடங்கினர். இது ஆபத்தான வேலையாயிருந்தபோதிலும், தைரியமுள்ள சகோதரர்கள் இதைச் செய்ய தாங்களாக முன்வந்தனர். புத்தகங்கள் அதிகமாய்க் கிடைக்கக்கூடியதானதையும் அவற்றைக் கிடைக்கக்கூடியதாக்கினவர்களின் பிரயாசங்களையும் நாங்கள் வெகு நன்றியோடு மதித்துணர்ந்தோம். தடையுத்தரவு போடப்பட்ட தொடக்க ஆண்டுகளின்போது துன்புறுத்தல் கடுமையாக இருக்கையில், வீடுவீடாகச் செய்யும் பிரசங்க நடவடிக்கை மெய்யான சவாலாயிருந்தது. அதிகாரிகள் தண்டிப்பரென்ற பயம் அதைத் தவிர்க்கும்படி சிலரை உண்மையில் வழிநடத்தினது. ஆனால் காலப்போக்கில் எங்கள் வெளிப்படையான பிரசங்க வேலை திடீர்த் திருப்பத்துடன் அதிகரித்தது. 1960-ன் பத்தாண்டுகளில், ராஜ்ய பிரஸ்தாபிகளில் ஏறக்குறைய 25 சதவீதம் மாத்திரமே வீடுவீடாகச் செய்யும் சேவையில் தவறாமல் பங்குகொண்டிருந்தனர். எனினும், 1980-ன் பத்தாண்டுகளின் பிற்பகுதியில் இந்த ஊழிய அம்சத்தில் தவறாமல் பங்குகொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை 66 சதவீதத்துக்கு எழும்பிவிட்டது! இதற்குள் அதிகாரிகள் எங்களுடைய பொது பிரசங்க நடவடிக்கைக்கு அதிக கவனம் செலுத்தவில்லை.
ஒரு சந்தர்ப்பத்தில் ஊழியத்தில் என்னோடு வேலை செய்துகொண்டிருந்த ஒரு சகோதரன் தன்னுடைய சிறு மகளைக்கூட அழைத்து வந்திருந்தார். நாங்கள் பேசிக்கொண்டிருந்த வயதான ஓர் அம்மாள் அந்தச் சிறுமி அங்கிருந்ததைக் கண்டு கனிவு உணர்ச்சியடைந்து, எங்களைத் தன் வீட்டுக்குள் வரும்படி அழைத்தாள். நாங்கள் வேதவார்த்தையிலிருந்து எடுத்துக் கூறினதை அவள் மதித்துணர்ந்து நாங்கள் மறுபடியும் வரவேண்டுமென ஒப்புக்கொண்டாள். பின்னால் நான் அந்தச் சந்திப்பை என் மனைவியினிடம் கொடுத்தேன், அவள் உடனடியாக அந்த அம்மாளிடம் ஒரு பைபிள் படிப்பைத் தொடங்கினாள். வயது முதிர்ந்தும் உடல் நலம் குன்றிக்கொண்டுமிருந்தும், இந்த அம்மாள் நம்முடைய சகோதரியாகி யெகோவாவின் சேவையில் தொடர்ந்து சுறுசுறுப்பாய் ஈடுபடுகிறாள்.
விடுதலை நெருங்குகையில் பொருந்திய சரிப்படுத்தல்கள்
நாங்கள் மேலுமதிக சுயாதீனத்தை அனுபவித்து மகிழவிருந்த காலத்துக்காக யெகோவா எங்களை ஆயத்தப்படுத்தினார். உதாரணமாக: தடையுத்தரவு நீக்கப்படுவதற்குச் சற்று முன்னால், கூட்டங்களில் நாங்கள் ஒருவரையொருவர் அழைத்த முறையை மாற்றிக்கொள்ளும்படி எங்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக, நாங்கள் ஒருவரையொருவர் எங்கள் முதல் பெயர்களால் மாத்திரமே அழைத்தோம். ஒருவரையொருவர் பல ஆண்டுகளாக அறிந்திருந்த பலர், உடன்-விசுவாசியின் கடைசி பெயரை அறியவில்லை. எனினும், அக்கறைக் காட்டியுள்ள இன்னும் பலரை எங்கள் கூட்டங்களுக்கு வரவழைப்பதற்காக ஆயத்தம் செய்வதில், நாங்கள் ஒருவரையொருவர் குடும்பப் பெயர்களால் குறிப்பிடும்படி ஊக்குவிக்கப்பட்டோம். சிலருக்கு இது பொதுமுறையானதாகத் தோன்றினது, ஆனால் இந்த ஆலோசனையைப் பின்பற்றினவர்கள் பின்னால் நாங்கள் சுயாதீனத்தை அடைந்தபோது அதிக எளிதாய்த் தகுந்தவாறு சரிப்படுத்தி அமைத்துக்கொண்டனர்.
மேலும் எங்கள் கூட்டங்களை ஒரு பாட்டுடன் தொடங்கும்படியும் ஊக்குவிக்கப்பட்டோம். இம்முறையில் மற்ற இடங்களில் சபைகள் பின்பற்றின நடைமுறைக்குப் படிப்படியாய்ப் பழக்கப்பட்டோம். மற்றொரு சரிப்படுத்துதல் எங்கள் படிப்பு தொகுதிகளின் அளவில் செய்ய வேண்டியிருந்தது. அவை 1950-ன் பத்தாண்டுகளில் நான்கிலிருந்து எட்டுக்குப் படிப்படியாய் வளர்ந்தன. பின்னால் அவை 10 ஆகவும் முடிவில் 12 ஆகவும் பெருகின. கூடுதலாக, ஒவ்வொரு சபையும் கூடுவதற்கான அதன் இடம் சாட்சிகள் பெரும்பான்மையருக்கு மையமாயுள்ள இடமாக இருக்கும்படி நிச்சயப்படுத்த கவனம் செலுத்தப்பட்டது.
சில சமயங்களில், ஆலோசனைக் கூறப்பட்ட சரிப்படுத்தல்களின் ஞானத்தை, அது செய்யப்பட்ட பின்பே நாங்கள் காண முடிந்தது. யெகோவா தம்மை ஞானமும் கனிவான முன்கவனமுமுள்ள தகப்பனாக எவ்வளவு அடிக்கடி காட்டினார்! படிப்படியாய், அவர் எங்களைத் தம்முடைய பூமிக்குரிய அமைப்பின் மீதிபாகத்தோடு இசைவாய்ப் பொருந்திய நிலைக்குக் கொண்டுவந்தார், நாங்கள் அவருடைய ஜனத்தின் உலகளாவிய சகோதரத்துவத்தின் பாகமாக மேலும் மேலும் அதிகமாய் உணர்ந்தோம். கிழக்கு ஜெர்மனியில் தடையுத்தரவின்கீழ் தம்முடைய ஜனங்கள் வேலைசெய்த ஏறக்குறைய 40 ஆண்டுகள் முழுவதிலும் யெகோவா தேவன் நிச்சயமாகவே, அவர்களை அன்புடன் பாதுகாத்தார். சட்டப்பூர்வ அங்கீகாரநிலையைக் கொண்டிருப்பதில் நாங்கள் இப்பொழுது எவ்வளவாய்க் களிகூருகிறோம்!
முன்பு கிழக்கு ஜெர்மனியாக இருந்ததில் இன்று, 22,000 அல்லது அதற்கு மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகள் இருக்கிறார்கள். யெகோவா தேவனின் ஞானமான வழிநடத்துதலுக்கும் அன்புள்ள கவனிப்புக்கும் ஒரு சாட்சியமாக அவர்கள் நிற்கின்றனர். தடையுத்தரவின்கீழ் நாங்கள் இருந்த ஆண்டுகளின்போது அவர் துணைநின்று ஆதரித்தது அவர் எந்த நெருக்கடிநிலையையும் அடக்கியாள முடியுமெனக் காட்டுகிறது. தம்முடைய ஜனங்களுக்கு விரோதமாய் எந்த ஆயுதம் உருவாக்கப்பட்டாலும் கவலையில்லை, அது வாய்க்காமற்போகும். தம்மில் நம்பிக்கை வைத்திருப்போரை யெகோவா எப்பொழுதும் நன்றாய்க் கவனித்துக் காக்கிறார். (ஏசாயா 54:17; எரேமியா 17:7, 8)—ஹார்ஸ்ட் ஷ்லோய்ஸ்னர் கூறினபடி.
[பக்கம் 31-ன் படம்]
ஹார்ஸ்ட் மற்றும் மார்கரீட்டா ஷ்லோய்ஸ்னர் கிழக்கு பெர்லினிலுள்ள சங்கத்தின் கட்டிடத்தில்.