யெகோவாவைச் சேவிப்பதினால் எனக்கு வந்த மகிழ்ச்சி
ஜார்ஜ் புரும்லி சொன்னது
நான் அப்போது தான் பேரரசர் ஹெலி செலசி-யினுடைய காவல்துறை மாணவர்களுக்கு ரேடியா பற்றிய வகுப்பை எடுத்து முடித்தேன். இவர்களில் ஒருவர் தனியாக என்னிடத்தில் வந்து, நான் யெகோவாவின் சாட்சிகளின் ஒரு மிஷனரி என்பது தனக்குத் தெரியும் என சொன்னார். அவர் மிக ஆவலாக “என்னோடு நீங்கள் பைபிள் படிப்பை நடத்துவீர்களா?” என்று கேட்டார்.
நம்முடைய வேலை அப்போது எத்தியோப்பியாவில் தடைசெய்யப்பட்டு இருந்ததால், அதிகாரிகள் என்னைப் பற்றி யார் என்று தெரிந்துவிட்டால், மற்ற சாட்சிகள் வெளியேற்றப்பட்டதுபோல நானும் இந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். இந்த மாணவர் உண்மையாக பேசுகிறாரா அல்லது அவர் என்னை ஏமாற்றி சிக்கவைக்க அனுப்பப்பட்ட அரசாங்கத்தின் கையாளா என்று எனக்கு சந்தேகம் இருந்தது. மூன்று சிறிய குழந்தைகளை வளர்க்கவேண்டிய ஒரு குடும்பத் தலைவனாக நான் இருந்துகொண்டிருக்கும்போது, என் வேலையை இழந்து, நான் அன்பு செலுத்த கற்றுக்கொண்ட நண்பர்களை விட்டுவிட்டு, இந்த நாட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்படுவது, எனக்குப் பயத்தைத் தந்தது.
‘ஆனால்,’ நீங்கள் ஒருவேளை கேட்கலாம், ‘ஒரு குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்புடைய ஓர் அமெரிக்கன் எப்படி, தன் சொந்த நாட்டையும் சொந்தக்காரர்களையும் விட்டுவிட்டு வட ஆப்பிரிக்காவிற்கு வர தேர்ந்தெடுத்தான்?’ விளக்கத்தைக் கொடுக்க என்னை அனுமதியுங்கள்.
ஐக்கிய மாகாணங்களில் வளர்ந்தது
நான் இன்னும் தொடக்கப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, 1920-களில், என் அப்பா உவாட்ச்டவர் (ஆங்கில காவற்கோபுரம்) பத்திரிகைக்குச் சந்தா செய்திருந்தார், மேலும் ஸ்டடீஸ் இன் த ஸ்கிரிப்ச்சர்ஸ் புத்தகங்களின் ஒரு தொகுப்பையும் வாங்கியிருந்தார். அப்பா அதை வாசித்து அனுபவித்தார், அவர் மிக மிக ஆவலாக அந்தப் புத்தகங்களை வாசித்துமுடித்தார். அவர் சிரிக்கவைத்து, குறும்புச்செயல் செய்யும் குணயியல்பை உடையவராக இருந்தார். இது ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் அழைப்புக் கொடுத்த விருந்தாளிகளிடம் அவர் குறும்புசெய்யும் விதத்திலிருந்து தெளிவாகத் தெரிந்தது. தங்க எழுத்துக்களில் “பரிசுத்தப் பைபிள்” என்று மேல்அட்டையிலும் பின்அட்டையிலும் பதித்துஎழுதப்பட்டு, தோலினால் பைண்டு செய்யப்பட்ட ஓர் அழகான புத்தகத்தை வைத்திருந்தார். இவர் உரையாடலை, “சரி, இன்று ஞாயிற்றுக்கிழமை. சில வேதவசனங்களை நீங்கள் எங்களுக்காக வாசிக்க முடியுமா?” என்று சொல்லி ஆரம்பிப்பார்.
விருந்தாளியோ, எப்போதும் படிக்க ஒத்துக்கொள்வார், ஆனால் அவர் அந்தப் புத்தகத்தைத் திறந்தால், அதனுள் உள்ள பக்கங்கள் அச்சடிக்கப்படாதவையாக இருக்கும்! எதிர்பார்த்தது போலவே, அந்த நபர், திகைத்துப்போவார். இதற்குப் பின்பு அப்பா, ‘பிரசங்கிகளுக்குப் பைபிளைப் பற்றி ஒன்றுமே தெரியாது’ என்று சொல்வார். பிறகு, அவர் ஒரு நகலை எடுத்து, ஆதியாகமம் 2:7-ஐ வாசிப்பார். இங்கு முதல் மனிதனின் படைப்பைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மனுஷன் ஒரு ஜீவ ஆத்துமாவாக ஆனான்.”—ஆதியாகமம் 2:7, கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு.
ஒரு மனிதன் ஓர் ஆத்துமாவை உடையவனாக இல்லை, ஆனால் ஆத்துமாவாக இருக்கிறான்; பாவத்தின் சம்பளம் மரணம்; மனிதன் சாகும்போது, அவன் உண்மையிலேயே எந்தவித உணர்வும் இல்லாதவனாக, செத்தவனாக இருக்கிறான், என்றெல்லாம் அப்பா விளக்குவார். (பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4; ரோமர் 6:23) நான் நன்றாக வாசிக்க கற்றுக்கொள்வதற்கு முன்பே, ஆதியாகமம் 2:7-ஐ மனப்பாடம் செய்துவிட்டேன். பைபிள் சத்தியங்களை அறிவதிலும், அவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதிலும் நான் அடைந்த உண்மையான சந்தோஷத்தின் பழைய நினைவுகளில் முதலானவை இவையாகும்.
அப்போது நாங்கள் எங்கள் வீட்டில், காவற்கோபுரம் (தி உவாட்ச் டவர்) பத்திரிகையைப் பெற்றுக்கொண்டிருந்ததால், இந்த ஆவிக்குரிய சத்துணவை முழு குடும்பமும் அனுபவிக்க ஆரம்பித்தோம். என் தாய்வழி பாட்டி, எங்களோடுதான் வசித்துக்கொண்டிருந்தார்கள். எங்கள் குடும்பத்தில், ராஜ்ய நற்செய்தியின் முதலாவது பிரஸ்தாபியாக அவர்கள் ஆனார்கள். நாங்கள் வசித்த இடமாகிய, இல்லினாய்ஸ்-ன் கார்பன்டேலில், சபை இல்லை, ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது கூட்டங்கள் நடந்தன. அம்மா, நகரின் மறுபக்கத்திற்கு ஐந்து குழந்தைகளாகிய எங்களைக் கூட்டிக்கொண்டு போவார்கள். அங்கு முதிர்வயதான பெண்மணிகள் ஒரு காவற்கோபுர படிப்பை நடத்தினர். நாங்கள் வெளி ஊழியத்திலும் பங்கெடுக்க ஆரம்பித்தோம்.
ரேடியோ வேலையிலிருந்து சிறைக்கு
நான் 1937-ல் 17 வயதாக இருந்தபோது திருமணம் செய்தேன். நான் ரேடியோக்களைப் பழுதுபார்க்கும் வேலையைச் செய்வதன் மூலமும் இந்தத் திறமையைச் சொல்லிக்கொடுப்பதன் மூலமும் என்னுடைய வாழ்க்கையை நடத்த முயன்றேன். பெக்கீ, ஹேங்க் என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தபின்பு என்னுடைய திருமணம் முடிவிற்கு வந்தது. விவாகரத்து என்னுடைய தவறினால் ஏற்பட்டது; நான் ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையைக் கடைப்பிடிக்கவில்லை. என்னுடைய இரண்டு மூத்த பிள்ளைகளை வளர்க்க முடியாமல் போன உண்மை, என்னை வாழ்நாள் முழுவதும் வாட்டிவதைப்பதாக இருந்தது.
இரண்டாம் உலக யுத்தம் வந்தது; அநேக விஷயங்களைக் குறித்து இது என்னைச் சிந்திக்க வைத்தது. படைக்குழுக்கள், நான் ஒரு துணைப்படைத் தலைவராக ஆகி, வரிப்பட எழுதுபவர்களுக்கு (டிராஃப்ட்டீஸ்) ரேடியோவைப் பற்றி சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பை எனக்குத் தந்தன. ஆனால் யெகோவா யுத்தத்தைப் பற்றி எவ்வாறு உணர்கிறார் என்பது என்னைத் தினந்தோறும் ஜெபம்செய்யும்படித் தூண்டியது. காவற்கோபுரம் சந்தா தீர்ந்தது. அதனால் லூஸியல் ஹெவர்த் என்பவள், சந்தா தீர்ந்தது என்ற அறிக்கையைப் பெற்று என்னைப் பார்க்க வந்தாள். லூஸியலின் அப்பா, ப்பெரி ஹெவர்த்-ம், அவளுடைய பெரிய குடும்பத்தில் அநேகர் 1930-களிலிருந்து சாட்சிகளாக இருக்கிறார்கள். லூஸியலும் நானும் விரும்ப ஆரம்பித்து, டிசம்பர் 1943-ல் திருமணம் செய்தோம்.
நான், 1944-ல் முழுக்காட்டுதல் எடுத்து, பின்பு என் மனைவியோடு பயனியராக முழுநேர ஊழியம் செய்ய சேர்ந்துகொண்டேன். சீக்கிரத்திலேயே, படை வரிப்பட பிரிவிற்கு அழைக்கப்பட்டேன், ஆனால் அந்தப் பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இதன் விளைவாக, ஒக்லஹோமா-வின் எல் ரெனா-வில் உள்ள கூட்டுக்குழு சீர்திருத்தப் பள்ளியில் மூன்று வருட கால சிறைத்தண்டனையைப் பெற்றேன். யெகோவாவிற்காக துன்பப்படுவது சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு காலையும் எழும்போது, நான் எங்கே இருக்கிறேன், ஏன் இருக்கிறேன் என்பதை உணரும்போது, அதிக திருப்தியடைந்தேன், யெகோவாவிற்கு நன்றியும் சொன்னேன். யுத்தத்திற்குப் பின்பு, எங்களில் 25 வயதிற்கு மேற்பட்டவர்களை விடுவிக்க ஆரம்பித்தார்கள். நான் பிப்ரவரி 1946-ல் விடுதலையானேன்.
முழுநேர ஊழியம்
நான் லூஸியலை மறுபடியும் சேர்ந்தபோது, ஒக்லஹோமா-வின் வேக்கனர் என்னும் சிறு நகரில் அவள் பயனியர் ஊழியம் செய்துவந்தாள். எங்களிடத்தில் கார் இல்லாததால், நகரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் எங்கும் நடந்தே போனோம். பின்பு, ஒக்லஹோமாவின் விவோக்கே-வுக்கு மாறிப்போனோம். பக்கத்தில் இருந்த ஒரு ரேடியோ நிலையத்தில் எனக்கு ஒரு வேலை கிடைத்தது, ஒலிபரப்பும் வேலையைச் செய்ய ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரங்கள் வேலைசெய்துவிட்டு, பயனியர் நேரம் எடுப்பது எளிதானதல்ல, ஆனால் யெகோவாவைச் சேவிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருந்ததற்காக நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். லாஸ் ஏஞ்சலிஸில் 1947-ல் மாநாடு நடக்கப்போகும் சரியான சமயத்தில் ஒரு பழைய காரை நாங்கள் வாங்க முடிந்தது. இங்கு தான் மிஷனரி பயிற்சிக்கான காவற்கோபுர சங்கத்தின் கிலியட் பைபிள் பள்ளி (உவாட்ச்டவர் பைபிள் ஸ்கூல் ஆஃப் கிலியட்)-க்கு விண்ணப்பிக்க நாங்கள் யோசிக்க ஆரம்பித்தோம்.
இது ஒரு பெரிய படியாக இருக்கும் என்பதை உணர்ந்தோம், எனவே ஐக்கிய மாகாணங்களை விட்டு வெளியேற அவசரமாக முடிவுசெய்ய நாங்கள் விரும்பவில்லை. என் குழந்தைகளை இழந்ததில் இன்னும் நான் கவலையோடு இருந்தேன், எனவே மீண்டும் ஒருமுறை அவர்களை அடைவதற்காக நாங்கள் முயற்சிசெய்தோம். என்னுடைய முந்திய வாழ்க்கை முறையினாலும் சிறைச்சாலை பதிவுகளாலும், அந்த முயற்சி பயனில்லாமல் போனது. எனவே நாங்கள் மிஷனரிகளாக ஆவதற்கு முயற்சிசெய்வது என தீர்மானித்தோம். கிலியட் பள்ளியின் 12-வது வகுப்பிற்கு நாங்கள் அழைக்கப்பட்டோம்.
பள்ளியிலிருந்து 1949-ல் நாங்கள் பட்டம்பெற்றோம், ஆனால் டெண்ணிஸ்சி என்ற இடத்தில் உள்ள சபைகளைப் பார்க்க முதலில் போவதற்காக நியமிக்கப்பட்டோம். ஐக்கிய மாகாணங்களில் மூன்று வருடங்களாக பிரயாண வேலையைச் செய்த பின்பு, காவற்கோபுர சங்கத்தின் தலைவருடைய அலுவலகத்திலிருந்து நாங்கள் ஒரு கடிதத்தைப் பெற்றோம், அதில் எங்களுடைய பிரசங்க வேலையோடு, எத்தியோப்பியாவில் உள்ள பள்ளியிலும் போதிக்கும் வேலையைச் செய்ய நாங்கள் விரும்புவோமா என்று கேட்டிருந்தது. அந்த அரசாங்கத்தின் தேவைகளில் ஒன்று, மிஷனரிகள் கற்றுக்கொடுப்பவர்களாக இருக்கவேண்டும். நாங்கள் அதற்கு ஒத்துக்கொண்டோம், 1952-ன் கோடைக்காலத்தில் எத்தியோப்பியாவிற்குச் சென்றோம்.
எத்தியோப்பியாவிற்கு நாங்கள் சென்றடைந்தபோது, காலை நேரங்களில் தொடக்கப்பள்ளி வகுப்புகளில் போதித்துக்கொண்டும், பிற்பகல் நேரங்களில் இலவச பைபிள் வகுப்புகளை நடத்திக்கொண்டும் இருந்தோம். அதிகம் பேர் பைபிள் படிக்க வந்ததால், நாங்கள் ஒவ்வொரு நாளும் பெரும்பாலும் மூன்று அல்லது நான்கு மணி நேரங்கள் பைபிளைப் போதிப்பதில் செலவிட்டோம். சில மாணவர்கள், போலீஸ்காரர்களாக இருந்தார்கள்; மற்றவர்கள் வாத்தியார்களாக, அல்லது மிஷனரி பள்ளிகளிலும் எத்தியோப்பியர்களின் ஆர்த்தடெக்ஸ் பள்ளிகளிலும் உதவிக்குருக்களாக இருந்தார்கள். சில சமயங்களில், ஒவ்வொரு பைபிள் படிப்பு வகுப்பிலும் 20 அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் இருந்தனரே! பல மாணவர்கள் பொய்மதத்தை விட்டுவிட்டு, யெகோவாவைச் சேவிக்க ஆரம்பித்தார்கள். நாங்களோ பெருமகிழ்ச்சியில் இருந்தோம். மீண்டுமாக, நான் ஒவ்வொரு காலையிலும் எழுந்திருக்கும்போதும், யெகோவாவிற்கு நன்றி சொன்னேன்.
பெற்றோராதலும் தடையுத்தரவுக்கு மத்தியில் பிரசங்கித்தலும்
நாங்கள், 1954-ல், பெற்றோராகப் போகிறோம் என்பதை தெரியவந்தோம், எனவே, ஐக்கிய மாகாணங்களுக்குப் போகவேண்டுமா அல்லது எத்தியோப்பியாவிலேயே தொடர்ந்து இருக்க வேண்டுமா என நாங்கள் தீர்மானிக்க வேண்டியதிருந்தது. ஆனாலும், இங்கேயே தொடர்ந்து இருக்கப்போவது, உலகப்பிரகாரமான ஒரு வேலை கிடைப்பதைப் பொருத்திருக்கிறது. ஒலிபரப்புப் பொறியாளராக இருந்து, ஹெலி செலசி பேரரசருக்காக வானொலி நிலையத்தில் செயலாற்றும் ஒரு வேலை எனக்குக் கிடைத்தது. ஆகவே, நாங்கள் அங்கேயே இருந்துவிட்டோம்.
எங்கள் மகள் ஜூடித், செப்டம்பர் 8, 1954-ல் பிறந்தாள். பேரரசருக்காக வேலைசெய்வதால், என் வேலை போகாது என்று நம்பிக்கையோடு இருந்தேன், ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பின்பு அந்த வேலையை இழந்தேன். எனினும், ஒரு மாதத்திற்குள், நான் போலீஸ் இலாகாவினால்—அதிக சம்பளத்திற்கு—இளம் மனிதர்கள் அடங்கிய வகுப்பிற்கு இருவழி வானொலிப் பெட்டிகளைப் பழுதுபார்ப்பதைப் பற்றி கற்றுக்கொடுக்க எடுத்துக்கொள்ளப்பட்டேன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், எங்கள் மகன்கள், பிலிப்-ம், லெஸ்லி-யும் பிறந்தார்கள்.
இதே சமயத்தில், பிரசங்க வேலையில் பங்குபெற இருந்த எங்களுடைய சுயாதீனம் மாறிக்கொண்டிருந்தது. யெகோவாவின் சாட்சிகளின் எல்லா மிஷனரிகளையும் வெளியேற்றும்படி எத்தியோப்பியர்களின் ஆர்த்தடெக்ஸ் சர்ச், அரசாங்கத்தைத் தூண்டியது. சங்கத்தின் அறிவுரையின்படி நான் என் விஸாவை, மிஷனரி வேலை என்று குறிக்கப்பட்டதிலிருந்து உலகப்பிரகாரமான வேலை என மாற்றினேன். எங்களுடைய மிஷனரி வேலைக்குத் தடைவிதிக்கப்பட்டது, எனவே நாங்கள் எச்சரிப்போடும், புத்திகூர்மையோடும் இருக்க வேண்டியதிருந்தது. சபைக் கூட்டங்களெல்லாம், தொடர்ந்து நடந்தன, ஆனால் சிறுசிறு படிப்புக் குழுக்களாக நாங்கள் சந்தித்தோம்.
சந்தேகப்பட்ட சாட்சிகளின் வீடுகளிலெல்லாம் காவல்துறையினர் சோதனைச் செய்தனர். ஆயினும், இவர்களுக்குத் தெரியாமலேயே, யெகோவாவை வணங்குகிற ஒரு காவல்துறை அதிகாரி, எங்களை எப்போது சோதனை செய்ய திட்டம் போட்டிருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே எப்படியாவது அறிவித்துவிடுவார். இதன் காரணமாக, அந்த வருடங்களில் எந்தப் பிரசுரமும் பறிமுதல்செய்யப்படவில்லை. எங்களுடைய காவற்கோபுர படிப்புகளை நடத்த நாங்கள், நகரின் கடைக்கோடியில் உள்ள உணவுவிடுதிகளுக்குச் செல்வோம், அங்கு திறந்தவெளியில் அமர்ந்து சாப்பிட வசதியான விருந்து மேஜைகள் இருந்தன.
நான் போலீஸ்-மாணவர்களுக்கு, ரேடியோ பற்றிச் சொல்லிக்கொடுக்கும்போது தான், ஆரம்பத்தில் நான் சொன்ன அந்த மாணவர் என்னிடத்தில் ஒரு பைபிள் படிப்புக்குக் கேட்டார். அவர் நேர்மையானவர் என நான் நினைத்தேன், எனவே நாங்கள் ஆரம்பித்தோம். இரண்டு படிப்புகள் தான் முடிந்தது, அதற்குள் மற்றொரு மாணவர் இவரோடு வந்தார், பின்பு மூன்றாவது மாணவரும் வந்தார். நான் அவர்களிடம், நீங்கள் என்னிடத்தில் படிப்பதாக யாரிடமும் சொல்லவேண்டாம் என்று அவர்களை எச்சரித்தேன், அவர்களும் அதை யாரிடமும் சொல்லவில்லை.
நியூ யார்க்-ன் யாங்கி விளையாட்டு அரங்கத்திலும் போலோ மைதானத்திலும் 1958-ல் தெய்வீக சித்தம் சர்வதேச மாநாடு நடந்தது. இந்த இடைப்பட்ட சமயங்களில், பெக்கியும் ஹேங்க்கும், மேலும் என் பெரிய குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் பலரும் சுறுசுறுப்பான சாட்சிகளாக ஆகி இருந்தார்கள். அதில் ஆஜராக இருக்க முடிந்ததில், என்னே மகிழ்ச்சி எனக்கு! என் இரண்டு மூத்த பிள்ளைகளோடும் மற்ற குடும்ப அங்கத்தினர்களோடும் மறுபடியும் சேர்வதில் நான் ஆனந்தப்பட்டதோடு, அந்த மாநாட்டின் இறுதிநாளில் இரண்டரை லட்சத்திற்கும் மேலான அந்தப் பெருங்கூட்டத்தைக் காண்பதில் சிலிர்த்துப்போய்விட்டேனே நான்!
இதற்கடுத்த வருடத்தில், சங்கத்தின் தலைவர், நேத்தன் H. நார், எத்தியோப்பியாவில் எங்களைக் காண வந்தார். தடையுத்தரவின்கீழ் எப்படி பிரசங்கவேலையைச் செய்வது என்பது பற்றி மிக அருமையான ஆலோசனைகளைச் சொன்னார். அவர் எங்கள் குடும்பத்தின்மீதும், நாங்கள் ஆவிக்குரிய வகையில் எவ்வாறு இருக்கிறோம் என்பதன்மீதும் அக்கறையைக் காண்பித்தார். நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு ஜெபிக்க சொல்லித் தந்துகொண்டிருக்கிறோம் என்பதாக நான் சொன்னேன். ஜூடித்துடைய ஜெபத்தைக் கேட்க விரும்புகிறீர்களா என்று அவரை நான் கேட்டேன். அவர், ஆம் என்று சொன்னார். ஜெபத்திற்குப் பின்பு அவர் அவளிடம் சொன்னார்: “ஜூடித், அது மிகப் பிரமாதம்.” பின்பு சாப்பிடும்நேரம் வந்தபோது, நான் சகோதரர் நார்-ரிடம் எங்களுக்காக ஜெபிக்கும்படிக் கேட்டேன், அவர் ஜெபித்தப் பின்பு, ஜூடித் சொன்னாள்: “நார் சகோதரரே, அது மிகப் பிரமாதம்!”
எங்கள் குழந்தைகளை ஐக்கிய மாகாணங்களில் வளர்ப்பது
காவல்துறை இலாகாவோடு என் ஒப்பந்தம் (கான்டிராக்ட்) 1959-ல் முடிவடைந்தது. நாங்கள் தொடர்ந்து அங்கு வாழ விரும்பினோம், ஆனால் அரசாங்கமோ எனக்கு எந்தவித புது ஒப்பந்தத்தையும் கொடுக்க தயாராக இல்லை. ஆகவே, நாங்கள் எங்கே போவது? சகோதரர்களின் தேவை அதிகம் உள்ள மற்ற நாடுகளுக்குள் செல்ல முயற்சிசெய்தேன், ஆனால் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஒருவித கவலையோடு, ஐக்கிய மாகாணங்களுக்குத் திரும்பிவந்தோம். திரும்பிவந்தபோது, மிக மகிழ்ச்சியான குடும்ப ஒற்றுமையை அனுபவித்தோம்; என் ஐந்து பிள்ளைகளும் ஒருவரையொருவர் பார்த்தவுடனே, நன்கு புரிந்துகொண்டு, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த ஆரம்பித்தனர். அப்போதிருந்து, அவர்கள் பிரியாதிருக்கிறார்கள்.
கேன்சாஸ்-யில் உள்ள விச்சிட்டா என்ற இடத்தில் நாங்கள் குடியேறினோம். அங்கு நான் ரேடியோ பொறியாளராகவும் அறிவிப்பாளராகவும் பணிபுரியும் ஒரு வேலையைக் கண்டுபிடித்தேன். லூஸியல், வீட்டுவேலைகள் செய்ய தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டாள், குழந்தைகளோ வீட்டிற்கு அருகில் இருந்த பள்ளியில் படித்துவந்தார்கள். ஒவ்வொரு திங்கட்கிழமை இரவும் ஒரு குடும்ப காவற்கோபுர பாடத்தை நடத்தினேன்; எப்போதும் இது உயிருள்ளதாகவும் ஆர்வத்தைத் தூண்டும்வண்ணமாகவும் இருப்பதற்காக முயற்சிசெய்வேன். பள்ளியில் அவர்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்ததா என்பதைத் தினந்தோறும் நாங்கள் சோதித்து அறிந்துகொள்வோம்.
பிள்ளைகள் அனைவரும், தேவராஜ்ய ஊழியப் பள்ளியைச் சேர்ந்தனர், இந்தப் பயிற்சி அவர்களுடைய பள்ளிப் படிப்பில் அவர்களுக்கு மிகவும் உதவிசெய்தது. அவர்களுக்குச் சிறு குழந்தைப் பருவத்திலிருந்தே பயிற்சிகொடுத்தோம். பைபிள் பிரசுரங்களை வீட்டுக்குவீடு ஊழியத்தில் அளிக்க கற்றுக்கொண்டனர். வீட்டுப் பைபிள்படிப்புகளுக்கும் எங்களோடுகூட வந்தார்கள்.
வாழ்க்கையின் அடிப்படை காரியங்களையும் நாங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க முயற்சி செய்தோம், அவர்களில் ஒருவரிடம் இருப்பதை, ஒவ்வொருவரும் எப்போதும் பெற்றிருப்பதில்லை என்பதை விளக்கிக் காண்பித்தோம். எடுத்துகாட்டாக, ஒரேமாதிரியான பரிசு அனைவருக்கும் எப்போதும் கிடைப்பதாக இருப்பதில்லையே. “உன் சகோதரரோ அல்லது சகோதரியோ ஒரு பொம்மையைப் பெறும்போது அது உனக்கும் கொடுக்கப்படுவதில்லை, இதைப் பற்றி நீ முணுமுணுப்பது சரியானதா?” என்று கேட்டு அவர்களோடு நியாயங்காட்டி பேசுவோம். மற்ற சமயங்களில், நிச்சயமாகவே, அந்த விடுபட்டவர்களும் வேறொன்றைப் பெறுவார்கள், எனவே யாரும் ஒதுக்கப்பட்டவர்களாக உணரத் தேவையில்லை. நாங்கள் எப்போதும் அவர்கள் அனைவர் மீதும் அன்பு செலுத்தினோம், ஒருவரைவிட மற்றொருவரை ஒருபோதும் அதிக செல்லமாக நடத்தவில்லை.
எங்கள் பிள்ளைகள் செய்ய அனுமதிக்கப்படாத காரியங்களை, மற்ற பிள்ளைகள் சிலசமயங்களில் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். “அந்தப் பிள்ளைகள் அதைச் செய்கிறார்கள், நாங்கள் மட்டும் ஏன் அதைச் செய்யக்கூடாது?” என்ற கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்பட்டது. நான் விளக்கம் கொடுக்க முயற்சிசெய்தேன், ஆனால் சில சமயங்களில், “நீ அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல; நீ பிரம்லி குடும்பத்தைச் சேர்ந்தவன். நமக்கு வித்தியாசமான சட்டதிட்டங்கள் இருக்கின்றன,” என்பதாகத் தான் என் பதில் இருக்க வேண்டியதிருந்தது.
பெரு நாட்டில் ஊழியம்செய்தல்
எத்தியோப்பியாவிலிருந்து திரும்பிவந்தது முதல், லூஸியலும் நானும் மறுபடியும் மிஷனரி சேவையில் ஈடுபடுவதற்காக மிகவும் ஏங்கிக் கொண்டிருந்தோம். இறுதியில், 1972-ல், தென் அமெரிக்காவின் பெருவுக்குப் போகும் அந்த அரிய வாய்ப்பு வந்தது. எங்கள் பிள்ளைகளை அவர்களுடைய பருவ வயதில் வளர்ப்பதற்கு இதைவிட சிறந்த இடத்தை நாங்கள் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. பெருவுக்கு ஊழியம்செய்ய வரும் மிஷனரிகளோடும், விசேஷித்தப் பயனியர்களோடும், மற்ற அநேகரோடும் சேர்ந்து கூட்டுறவை அனுபவித்தது, ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடத்தைக் கொடுப்பவர்கள் எவ்வளவு சந்தோஷமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் கண்கூடாக காண வாய்ப்பளித்தது. பிலிப் அவனுடைய கூட்டுறவை, கட்டியெழுப்பும் ஒத்தவயதினர் அழுத்தம் என அழைத்தான்.
சிறிது காலத்திற்குப் பின்பு, கான்ஸாஸ்-லிருந்த சில பழைய நண்பர்கள், ராஜ்ய ஊழியத்தில் நாங்கள் எவ்வளவு சாதிக்க முடிகிறது என்பதைக் கேள்விப்பட்டு, பெருவில் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள். எங்கள் வீட்டை, நான் ஒரு மிஷனரி வாழ்விடம் போல் மாற்றினேன். எல்லாரும் வெளி ஊழியத்தில் ஈடுபட சமயம் இருக்கும்படி, ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை நியமிக்கப்பட்டிருந்தது. காலை தின வாக்கியம் ஒவ்வொரு காலைச் சாப்பாடு நேரத்திலும் கலந்தாராயப்பட்டது. எங்களெல்லாருக்கும் ஒரு சந்தோஷமான நேரமாக அது இருந்தது. மறுபடியும், ஒவ்வொரு காலையும் நான் எழும்போது, நான் எங்கே, ஏன் இருந்தேன் என்பதை உணர்ந்து, யெகோவாவிற்கு மெளனமாக என் மனமார்ந்த நன்றிகளைச் செலுத்தினேன்.
சிறிது காலத்தில், ஜூடித் திருமணம் செய்தாள். அவளும் அவள் கணவரும் மாகாணங்களுக்கு (ஸ்டேட்ஸ்-க்கு) திரும்பிச்சென்றனர், ஏனென்றால் அவரால் தங்கியிருக்கும் விஸாவைப் பெறமுடியவில்லை. பிலிப், மூன்று வருடங்களாக விசேஷித்த பயனியர் ஊழியம் செய்த பின்பு, நியூ யார்க், புரூக்லினில் உள்ள பெத்தேல் ஊழியத்திற்கு விண்ணப்பம்செய்தபோது ஏற்றுக்கொள்ளப்பட்டான். இறுதியில் லெஸ்லியும் ஐக்கிய மாகாணங்களுக்கு திரும்பிச்சென்றான். அவர்கள் செல்லும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார்கள், அவர்கள் அடிக்கடி எங்களிடம், பெருவுக்கு அவர்களைக் கொண்டுசென்றது நாங்கள் அவர்களுக்குச் செய்ததிலேயே மிகச் சிறந்தது என சொல்வார்கள்.
பெருவின் பொருளாதார நிலை மோசமானபோது, நாங்களும் அதைவிட்டு வெளியேற வேண்டும் என்பதை உணர்ந்தோம். விச்சிட்டாவிற்கு நாங்கள் 1978-ல் திரும்பிவந்தபோது, ஸ்பானிய மொழி பேசுகிற சாட்சிகளின் குழு ஒன்றைச் சந்தித்தோம். அவர்கள் எங்களை அங்கு தங்கி, அவர்களுக்கு உதவிசெய்யும்படி கேட்டனர், நாங்களும் சந்தோஷத்தோடு அவ்வாறு செய்தோம். ஒரு சபை ஆரம்பிக்கப்பட்டது, நாங்கள் முன்பு ஊழியம்செய்த சபைகளைப் போலவே, இது எங்களுக்குப் பிரியமான ஒரு சபையாக சீக்கிரத்தில் ஆனது.
ஈக்வடார் சைகைசெய்து அழைக்கிறது
ஒரு வலிப்பு, என்னை ஒரு பக்கம் முடமாக்கியது, இதோடுகூட லூஸியலும் நானும் மற்றொரு நாட்டில் மறுபடியும் ஊழியம்செய்ய விரும்பினாலும் அதைப் பற்றி சந்தேகத்தோடு ஏங்கிக்கொண்டிருந்தோம். ஒரு வட்டாரக் கண்காணி, 1984-ல், ஈக்வடாரின் வளர்ச்சியைப் பற்றியும், அங்கு கிறிஸ்தவ மூப்பர்களுக்காக தேவையிருக்கிறது என்பதையும் எங்களிடத்தில் சொன்னார். நான் முடமாக இருந்ததினால், வெளிஊழியத்தில் அதிக பங்கைப் பெற முடியாது என்று நான் சொன்னேன், ஆனால் அவரோ, 65 வயதுடன் ஒரு பக்கம் முடமான மூப்பரும்கூட மிக உதவியாக இருக்கலாம் என உறுதியளித்தார்.
அவர் போனப்பின்பு, எங்களுக்குத் தூக்கமே வரவில்லை, முழு இரவும் ஈக்வடாருக்குப் போவது எப்படி என்பதைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். எனக்கு இருந்ததைப்போலவே, அதேபோல லூஸியலும் போவதற்கு அனலான ஆசையோடு இருந்தாள். ஆகவே, எங்களின் பூச்சிக்கொல்லி மருந்து தொழிலை (பெஸ்ட் கண்ட்ரோல்) விளம்பரம் செய்து அதை இரண்டு வாரங்களில் விற்றுவிட்டோம். பத்தே நாட்களில் எங்களுடைய வீட்டையும் விற்றுவிட்டோம். எனவே, எங்களின் இந்த முதிர்வயதான நாட்களிலும், வெளிநாட்டில் மிஷனரி ஊழியத்தில் பங்கெடுக்கும் அளவற்ற எங்கள் மகிழ்ச்சியை மீண்டும் பெற்றோம்.
குய்ட்டோ-வில் நாங்கள் குடியேறினோம். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்தை அல்லது சாதனையைக் கொண்டுவந்த வெளிஊழியம் மிகவும் மகிழ்ச்சிதருவதாக இருந்தது. ஆனால், 1987-ல் நான் பெருங்குடல் புற்றுநோய் உடையவனாக இருக்கிறேன் என்பதை சிகிச்சையின் மூலம் தெரியவந்தேன்; உடனே அறுவை சிகிச்சை எனக்குச் செய்யப்படவேண்டும். விச்சிட்டாவிற்கு அறுவை சிகிச்சைக்காக நாங்கள் மீண்டும் சென்றோம், அது வெற்றிகரமாக முடிந்தது. குய்ட்டோவில் வெறுமனே இரண்டு வருடங்கள் இருந்திருப்போம், அப்போது புற்றுநோய் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது, இதைத் தொடர்ந்து நாங்கள் மாகாணங்களுக்கு நிரந்தரமாக திரும்பிப்போக வேண்டியதாக இருந்தது. இப்போது நாங்கள் வாழுகிற, வடக்கு கெரோலினாவில் குடியேறினோம்.
மதிப்பான, பலன்தரும் வாழ்க்கை
என்னுடைய உடல் ஆரோக்கியம், பாதுகாப்பளிப்பதாக இல்லை. நான் 1989-ல் பெருங்குடல் திறப்பாய்வு அறுவைசிகிச்சை பெற வேண்டியதாக இருந்தது. இந்த நிலையிலும் நான், ஒரு மூப்பராக ஊழியம் செய்யவும், என் வீட்டிற்கு வந்து படிக்கிறவர்களோடு அநேக பைபிள் படிப்புகளை நடத்தவும் முடிகிறது. பல வருடங்களில், நாங்கள் நேரடியான சொல்பொருளின்படியே, நூற்றுக்கணக்கானவர்களுக்கு நடுவதிலும், நீர் பாய்ச்சுவதிலும், அல்லது சத்திய விதைகளை வளர்ப்பதிலும் உதவிசெய்தோம். இதனால் வருகின்ற சந்தோஷம், எத்தனையோ தடவைகள் அவை மறுபடியும் மறுபடியும் செய்யப்பட்டாலும், அது என்றைக்கும் குறையாது.
கூடுதலாக, என் பிள்ளைகள் அனைவரும் யெகோவாவைச் சேவிப்பதைக் காண்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. பெக்கீ, ஐக்கிய மாகாணங்களில் பிரயாண ஊழியத்தில் அவளுடைய கணவராகிய பால் மோஸ்க்கி என்பவரோடு சேர்ந்து 30 வருடங்களாக ஊழியம் செய்துவருகிறாள். பிலிப்பும், ஜூடித்தும் நியூ யார்க், புரூக்லின் பெத்தேலில் விசேஷித்த ஊழியம் செய்துவருகிறார்கள். ஹேங்க்கும் லெஸ்லியும் அவர்களின் வாழ்க்கைத்துணைவர்களும் சுறுசுறுப்பான சாட்சிகளாக இருக்கிறார்கள், மேலுமாக என் நான்கு சகோதரர்களும் சகோதரிகளும் அவர்களின் குடும்பங்களும், 80-க்கும் அதிகமான சொந்தக்காரர்களும் உட்பட, அனைவரும் யெகோவாவைச் சேவிக்கிறார்கள். லூஸியல், ஏறக்குறைய 50 வருடங்களாக ஒரு முன்மாதிரியான கிறிஸ்தவ மனைவியாக இருந்துவருகிறாள். சமீப ஆண்டுகளில், என்னுடைய அழிந்துகொண்டிருக்கும் உடம்பைப் பார்த்துக்கொள்வதில் அநேக விரும்பப்படாத வேலைகளையெல்லாம் குறைகூறாமல் செய்துவருகிறாள்.
உண்மையில், என் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருந்திருக்கிறது. வார்த்தைகளில் வெறுமனே சொல்லப்படுவதைக் காட்டிலும் அதிக மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. யெகோவாவைச் சேவிப்பது அவ்வளவு மகிழ்ச்சி தருவதாக இருப்பதால், இந்தப் பூமியில் அவரை என்றென்றுமாக வணங்க வேண்டும் என்பதே என்னுடைய இருதயப்பூர்வமான விருப்பம். சங்கீதம் 59:16-ஐ நான் எப்போதும் மனதில் வைத்துக்கொள்வேன்: “நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.”
[பக்கம் 23-ன் படம்]
எத்தியோப்பியன் பேரரசர் ஹெலி செலசியோடு ஜார்ஜ் புரும்லி
[பக்கம் 25-ன் படம்]
ஜார்ஜ் புரும்லி, அவருடைய மனைவி லூஸியல்