வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒரு கிறிஸ்தவர் பொருத்தமான விவாகத்துணையை கண்டடைய இயலாமற்போகையில் அவனோ அல்லது அவளோ என்ன செய்யலாம்?
பக்தியுள்ள கிறிஸ்தவர்களாக இருந்தபோதிலும் நாம் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் ஏதோவொன்று கைகூடிவராதபோது நாம் வேதனையடைகிறோம். நம்முடைய உணர்ச்சிகளை நீதிமொழிகள் 13:12 நன்றாக வெளிப்படுத்துகிறது. அது சொல்கிறது: “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்.” விவாகம் செய்துகொள்ள விரும்பி, ஆனால் பொருத்தமான ஒரு துணையைக் கண்டடைய முடியாமற்போகையில் சில கிறிஸ்தவர்கள் இவ்விதமாகத் தான் உணர்ந்திருக்கிறார்கள். “வேகிற”வர்கள் என்பதாக பவுல் அப்போஸ்தலன் விவரிக்கிறவர்களைப் பற்றியதில் இது விசேஷமாக இவ்விதமாக இருக்கிறது.—1 கொரிந்தியர் 7:9.
எதிர்பாலார் ஒருவரில் உண்மையான துணையைக் [பூர்த்திசெய்து நிறைவாக்குபவரை, NW] கண்டடையும் ஆசையை யெகோவா மனிதர்களில் வைத்துள்ளார். ஆகவே விவாகமின்றியிருக்கும் அநேக கிறிஸ்தவர்களுக்கு இப்படிப்பட்ட பலமான உணர்ச்சிகள் ஏற்படுவதுகுறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. (ஆதியாகமம் 2:18) விவாகம் செய்துகொள்வதற்கு (அல்லது குறிப்பிட்ட வயதிற்குள் விவாகம் செய்து கொள்வதற்கு) அதிக முக்கியத்துவமளிக்கும் கலாச்சாரங்களில் அல்லது விவாகமின்றியிருக்கும் கிறிஸ்தவர்கள் சபையில் மகிழ்ச்சியான விவாக தம்பதிகளால் சூழப்பட்டிருக்கையில் இந்த இயற்கையான உணர்ச்சிகள் தீவிரமடைகின்றன. இருப்பினும் கவலை நீண்ட ஒரு காலப்பகுதிக்கு நீடித்திருக்க அனுமதிப்பது நல்லதல்ல. எனவே உண்மை மனதுள்ள கிறிஸ்தவர்கள் எவ்விதமாக அளவுக்கு அதிகமாக கவலைப்படாமல் நிலைமையை சமாளிக்க முடியும்?
நிலைமையைச் சமாளிப்பது எளிதல்ல, மற்றவர்கள் இந்தக் கவலையை அது வெறும் மிகைப்படக் கூறுவது என்றோ அல்லது வெறும் அற்பமான அசெளகரியம் என்றோ கருதக்கூடாது. ஆனால் நிலைமையை சமாளிக்கும் அல்லது தீர்க்கும் திறமை பெருமளவில் விவாகமின்றியிருக்கும் நபர் எடுக்கக்கூடிய படிகளைச் சார்ந்திருக்கிறது.
பின்வரும் இந்த நடைமுறையான பைபிள் நியமத்தில் உயிர்நாடியை நாம் காண்கிறோம்: “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [சந்தோஷம், NW].” (அப்போஸ்தலர் 20:35) இதைச் சொன்னவர் விவாகமின்றியிருந்த மனிதராகிய இயேசு கிறிஸ்துவாகும். அவர் இந்த விஷயத்தைக்குறித்துப் பேச தகுதியுள்ளவராக இருந்தார். சுயநலமில்லாத உள்ளெண்ணத்தோடு மற்றவர்களுக்காகக் காரியங்களைச் செய்வது நெடுங்காலம் காத்திருக்குதலால் விளையும் உணர்ச்சிகளை மேற்கொள்வதற்கு நம்மில் எவருக்கும் உதவிசெய்யும் நேர்த்தியான நடவடிக்கையாகும். விவாகமின்றியிருக்கும் கிறிஸ்தவரைப் பொருத்தவரை இது எதை அர்த்தப்படுத்துகிறது?
உங்கள் சொந்த குடும்பத்தாருக்கும் சபையிலுள்ள மற்றவர்களுக்கும் தயவான செயல்களை செய்ய நாடுங்கள், ஊழியத்தில் உங்கள் நடவடிக்கையை அதிகரியுங்கள். இது வெறுமென ‘சுறுசுறுப்பாய் இருங்கள், அப்பொழுது விவாகம் செய்துகொள்ள விரும்புவதுபற்றி நீங்கள் மறந்துவிடுவீர்கள்,’ என்று சொல்வது போன்ற ஓர் ஆலோசனை இல்லை. இல்லை. பலன்தரும் கிறிஸ்தவ வேலைகளில் ஈடுபட்டிருக்கையில், நீங்கள் ‘இருதயத்தில் உறுதியுள்ளவராக சுயசித்தத்தைச் செய்ய அதிகாரமுள்ளவராக’ இருப்பதைக் காண்பீர்கள். உங்கள் தற்போதைய சூழ்நிலைமையைப் பிரயோஜனமான முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.—1 கொரிந்தியர் 7:37.
விவாகம் செய்துகொள்ள வெகுவாக ஆசைப்பட்ட சிலர், தாங்கள் அதிலேயே அமிழ்ந்துவிடும்படி அனுமதித்திருக்கிறார்கள். அவர்கள் துணைகளுக்காக செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யும் அளவுக்கும்கூட சென்றுவிட்டிருக்கிறார்கள். விவாகமின்றியிருக்கும் காலத்திலிருந்து பெறப்படக்கூடிய நன்மைகளைப் போற்றுவதன்பேரில் முக்கியத்துவம் வைப்பது எவ்வளவு மேன்மையாக இருக்கும்.—“விவாகம் இன்றியிருத்தல், ஆனால் கடவுளுடைய சேவைக்கு நிறைவாயிருத்தல்” மற்றும் “விவாகமின்றி இருப்பது— பலன்மிகுந்த ஒரு வாழ்க்கைமுறை” கட்டுரைகளை 1988, மே 1, காவற்கோபுரம் பத்திரிகையிலும் “திருமணமே மகிழ்ச்சிக்கு ஒரே திறவுகோலா?” 1992, ஆகஸ்ட் 15 காவற்கோபுரம் பத்திரிகையிலும் பார்க்கவும்.
விவாகமின்றியிருக்கும் நிலையில் சகித்திருக்க உதவிக்காக யெகோவாவிடம் ஜெபியுங்கள். (பிலிப்பியர் 4:6, 7, 13) விவாகம் செய்துகொள்ளாத அநேக கிறிஸ்தவர்கள், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் தியானம் செய்வதற்கும் கிறிஸ்தவக் கூட்டங்களில் ஆஜராவதற்கும் பங்கேற்பதற்கும் தங்கள் நேரத்தை பயன்படுத்திக்கொள்வதன் மூலம், இயேசு தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு வாக்களித்த ‘தங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலைக்’ கூடுதலாக அனுபவித்திருக்கிறார்கள். (மத்தேயு 11:28-30) இது காலப்போக்கில் பொருத்தமான ஒரு துணையை கண்டடைய முடியும்போது அவர்கள் மேம்பட்ட கணவன்மாராக அல்லது மனைவிமாராக இருக்கும்பொருட்டு ஆவிக்குரியத்தன்மையை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவியிருக்கிறது.
யெகோவா தம்மை சேவிக்கும் விவாகமின்றியிருக்கும் எல்லா ஆட்களின் நிலைமையையும் புரிந்துகொள்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். உங்களுடைய தற்போதைய சூழ்நிலை நீங்கள் விரும்புகிற ஒன்றாக இல்லாமலிருக்கலாம் என்பதை அவர் அறிவார். நம்முடைய அன்புள்ள பரம தகப்பன் உங்களுக்கு ஆவிக்குரிய பிரகாரமாயும் உணர்ச்சி சம்பந்தமாயும் எது நிலையான நன்மையைக்கொண்டுவரும் என்பதையும்கூட உணர்ந்தவராய் இருக்கிறார். நீங்களோ இதைக்குறித்து உறுதியாயிருக்கலாம்: யெகோவாவுக்காக பொறுமையோடு காத்திருப்பதன்மூலமும் அவருடைய வார்த்தையின் நியமங்களை அன்றாட வாழ்க்கையில் பொருத்தி பிரயோகிப்பதன்மூலமும் உங்களுக்கு நித்திய நன்மையுண்டாகும்வகையில் உங்களின் அதிமுக்கியமான தேவைகளை அவர் பூர்த்திசெய்வார் என்பதைக்குறித்து நிச்சயமாயிருக்கலாம்.—சங்கீதம் 145:16 ஒப்பிடவும்.