வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
பெயெர்செபா—அங்கு ஒரு கிணறு ஜீவனை அர்த்தப்படுத்தியது
“தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும்.” அது பைபிள் வாசிப்பவர்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு கூற்று. அது வடக்கு எல்லையருகே தாண் முதல், தெற்கில் பெயெர்செபா வரையாக, இஸ்ரவேல் முழுவதையும் விவரிக்கிறது. சாலொமோனின் ஆட்சியிலிருந்த சமாதானம் இவ்வாறு சித்தரிக்கப்படுகிறது: “சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள்தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள்தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.”—1 இராஜாக்கள் 4:25; நியாயாதிபதிகள் 20:1.
தாண் மற்றும் பெயெர்செபாவிற்கு மத்தியிலுள்ள வேறுபாடுகள், அவை ஒன்றைவிட்டு ஒன்று கொண்டிருந்த தொலைவைவிட அதிகத்தை உட்படுத்தியது. உதாரணமாக, தாண் போதிய மழையை அனுபவித்தது; வலப்பக்கத்திலுள்ள புகைப்படத்தில் காண்கிறபடி, யோர்தான் நதியின் ஊற்றுமூலங்களில் ஒன்றாக அமையும்படி தண்ணீர் நிலத்திலிருந்து பாய்ந்தது. பெயெர்செபா எவ்வளவு வித்தியாசப்பட்டதாக இருந்தது, ஏனென்றால் அது கடற்கரைக்கும் சவக்கடலின் தெற்கு முனைக்கும் இடையிலுள்ள வறண்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது.
பெயெர்செபா பகுதியில் வருடாந்தர மழைவீழ்ச்சி 15 முதல் 20 சென்டிமீட்டர் மட்டுமே இருந்தது. அதை அறிந்தவர்களாய், மேற்கண்ட பெயெர்செபாவின் சிறு குன்று அல்லது மண்மேட்டின் புகைப்படத்தைக் கவனியுங்கள்.a நீங்கள் பார்க்கும் பச்சை, குறைந்தளவு குளிர்கால மழைக்குப்பின், பெயெர்செபாவைச் சுற்றியுள்ள பயிர் நிலங்கள் கொஞ்ச காலத்திற்குப் பசுமையாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. அருகிலுள்ள சமவெளிகள்—இன்னும்—தானியப் பயிர் விளைவதற்குச் சிறந்தவையாக இருக்கின்றன.
அது வறண்ட பகுதியாக இருந்ததன் காரணமாக, பெயெர்செபாவைப்பற்றிய பைபிள் பதிவுகள் கிணறுகளையும் தண்ணீர் உரிமைகளையும்பற்றி அழுத்திக் கூறுகின்றன. தென்தொலைவில் பாலைவன வனாந்தரத்தைக் கடக்கும் வணிகர் கூட்டங்களின் பாதைகள் அல்லது சாலைகளின் அருகே அந்த நகரம் இருக்கிறது. நீங்கள் எண்ணிப்பார்க்க முடிந்தபடியே, கடந்துசெல்லும் அல்லது அங்கு நிறுத்தம் செய்யும் பயணிகளுக்கும் அவர்களுடைய மிருகங்களுக்கும் தண்ணீர் தேவைப்படும். தாணில் இருந்ததுபோல, அத்தகைய தண்ணீர் நிலத்திலிருந்து ஊற்றெடுத்து வரவில்லை, ஆனால் அவற்றை கிணறுகளிலிருந்து கிடைக்கப்பெற முடிந்தது. உண்மையில், எபிரெய வார்த்தையாகிய பீயர் என்பது ஒரு நிலத்தடி தண்ணீர் வழங்கீட்டை வடிகால் செய்வதற்காகத் தோண்டப்பட்ட ஒரு குழி அல்லது ஒரு துளையைக் குறிப்பிட்டது. பெயெர்செபா என்றால் “ஆணையின் கிணறு” அல்லது, “ஏழின் கிணறு” என்று பொருள்.
ஆபிராகாமும் அவருடைய குடும்பத்தாரும், பெயெர்செபாவிலும் அதைச் சுற்றியும் நெடுங்காலமாக வசித்து வந்தனர்; அவர்கள் கிணறுகளின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர். சாராளின் பணிவிடைக்காரி ஆகார் வனாந்தரத்திற்கு ஓடிப்போனபோது, கிணறுகளிலிருந்து அல்லது அவற்றைப் பயன்படுத்தும் பெடோயினிடமிருந்து—பின்வரும் பக்கத்தில், மேலே, சீனாய் தீபகற்பத்திலுள்ள ஒரு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் ஒரு பெடோயின் பெண்ணைப்போல—தண்ணீர் பெற திட்டமிட்டிருக்கக்கூடும். பின்னர், ஆபிரகாம், அவளுடைய பழிதூற்றும் மகனோடு ஆகாரை விரட்டிவிடவேண்டியபோது, அவர் தயவாகத் தண்ணீரைக் கொடுத்தனுப்பினார். அது தீர்ந்துபோனதும் என்ன நடந்தது? “தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.”—ஆதியாகமம் 21:19.
ஆகாருடைய தோல்துருத்தியை நிரப்புவதற்கு ஆபிரகாம் எங்கிருந்து தண்ணீரைப் பெற்றார்? ஒருவேளை தான் தோண்டி வைத்திருந்த கிணற்றிலிருந்து எடுத்திருக்கலாம்; அதனருகே அவர் ஒரு தாமரிஸ்க் மரத்தை நட்டு வைத்திருந்தார். (ஆதியாகமம் 21:25-33) தாமரிஸ்க் மரத்தை ஆபிராகம் தேர்ந்தெடுத்ததன் பொருத்தத்தை இப்போது விஞ்ஞானிகள் காண்கிறார்கள் என்று சொல்லப்படலாம்; ஏனென்றால், இந்த மரம், குறைந்தளவு ஈரப்பசையையே இழக்கும் சிறிய இலைகளைக் கொண்டிருப்பதால், இந்தப் பகுதியின் வறட்சியிலும் செழித்தோங்க முடியும்.—கீழுள்ள படத்தைப் பாருங்கள்.
ஆபிரகாமுக்கும் ஒரு பெலிஸ்திய அரசனுக்கும் இடையிலுள்ள ஒரு வாக்குவாதத்தின் தொடர்பாக அவர் ஒரு கிணற்றைத் தோண்டுவது குறிப்பிடப்பட்டது. பொதுவான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் ஓர் ஆழ்கிணற்றை தோண்டுவதற்குத் தேவைப்படும் உழைப்பு ஆகியவற்றின் காரணமாக ஒரு கிணறு ஒரு விலைமதிப்புள்ள சொத்தாக இருந்தது. உண்மையில், ஒரு கிணற்றை அனுமதியின்றி பயன்படுத்துவது, ஒருவருடைய சொத்து உரிமைகளின் மீறுதலாக அக்காலத்தில் கருதப்பட்டது.—எண்ணாகமம் 20:17, 19-ஐ ஒப்பிடவும்.
நீங்கள் பெயெர்செபா குன்றைக் காணச்சென்றால், தென்கிழக்குச் சரிவில் ஓர் ஆழமான கிணற்றை உற்று நோக்கலாம். அது முதலில் எப்போது கடினமான பாறையினூடே வெட்டப்பட்டு, பின்னர் அதன் மேல் பாகம் (கீழே காணப்படுகிறது) கற்களால் பலப்படுத்தப்பட்டது என்று ஒருவருக்கும் தெரியாது. நவீன புதைபொருள் ஆராய்ச்சியாளர் அதன் அடிபாகத்தைச் சென்றெட்டாமல், கீழே முப்பது மீட்டருக்கு அதை வெட்டித்திருத்தினர். அவர்களில் ஒருவர் குறிப்பிட்டார்: “ஆபிரகாமும் அபிமெலேக்கும் தங்கள் உடன்படிக்கையைச் செய்துகொண்ட ‘ஆணையின் கிணறு’ . . . இதுவே என்ற முடிவுக்கு வரத் தூண்டுகிறது.”—பிப்லிக்கல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ.
பின்னர் பைபிள் காலங்களினூடே, பெயெர்செபா அளவில் பெரிதாகி, ஒரு பெரிய வாசலைக் கொண்ட அரணமைக்கப்பட்ட நகரமானது. ஆனால் அது நிலைத்திருப்பதற்கும் அதன் வெற்றிக்கும், அதன் ஆழ்கிணற்றிலுள்ள அத்தியாவசியமான தண்ணீரே ஒரு மூல காரணமாக இருந்தது.
[அடிக்குறிப்புகள்]
a பெரிய அளவில் பெயெர்செபா குன்றின் படத்திற்கு 1993 யெகோவாவின் சாட்சிகளின் நாட்காட்டியைப் பாருங்கள்.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.