ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
ஓர் இளம் ரயில் பயணப்பிரியன் சத்தியத்தைக் கற்றுக்கொள்கிறான்
ஓர் ஆளின் இருதயம் நீதியினிடமாக மனச்சாய்வுகொண்டிருக்குமானால், அப்போது யெகோவா தேவன், கிறிஸ்து இயேசுவையும் பரலோகத் தூதர்களையும் பயன்படுத்தி, இத்தகைய செம்மறியாடு போன்ற ஓர் ஆள் ராஜ்ய நற்செய்தியுடன் முடிவில் தொடர்புகொள்ளப்படுவதை நிச்சயப்படுத்துகிறார். தகுந்த சமயத்தில், அந்த ஆள் இயேசுவின் தயவுக்குரிய வலது பக்கத்தில் வரக்கூடும். (மத்தேயு 25:31-33) ஒரு தனிச்சிறப்புவாய்ந்த முறையில் சத்தியத்துடன் அறிமுகமான, ஆஸ்திரியாவிலுள்ள ஓர் இளம் ரயில் பயணப்பிரியனைக் குறித்ததில் இது உண்மையாய் இருந்தது.
இந்த இளைஞனுடைய பொழுதுபோக்கின் அதிகக் கிளர்ச்சியூட்டும் பாகம், ரயில்வே நிர்வாகத்தின் அனுமதியுடன் ரயில் ஓட்டுபவரின் அருகில் அமர்ந்துகொண்டுச் செல்வதாகும். அவன் ஒவ்வொரு பயணத்தையும் தன்னுடைய வீடியோ காமராவில் பதிவுசெய்தான், அதை தன்னுடைய வீட்டில் மீண்டும் போட்டுப்பார்க்க இப்படிச் செய்தான். வியன்னாவிலிருந்து சால்ஸ்பர்க்குக்குச் செல்லும் ஒரு பயணத்தின்போது ரயில் ஓட்டுநர் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருந்தார். அவர் ரயில் பயணப்பிரியனிடம் ராஜ்யத்தைப்பற்றிப் பேசுவதற்கு அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார். இந்த ஓட்டுநர் கடவுளையும் பைபிளையும்பற்றி பேசுவதைக் கேட்டு, முதலில் அந்த இளைஞன் ஆச்சரியமடைந்தான். ஆனால் அந்தப் பயணத்தின்போது, ஓட்டுநர் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்ததற்கு கவனஞ்செலுத்துவதைவிட இயற்கைக் காட்சியின்மீதே அதிகக் கவனத்தைச் செலுத்தினான்.
மீண்டும் வீட்டிற்குச்சென்று, இந்த உற்சாகமுள்ள இளைஞன் தன்னுடைய வீடியோ பதிவை ஒரு தடவையல்ல, ஆனால் பத்து தடவைகள் போட்டுப்பார்த்தான்; ஏனென்றால் அவன் இந்தப் பயணத்தில் அதிக அக்கறையுடையவனாய் இருந்தான். அவன் ஒலியையும் பதிவுசெய்திருந்த காரணத்தால், அந்தச் சாட்சி அவனிடம் என்ன சொன்னார் என்பதைத் திரும்பத் திரும்பக் கேட்டான். எந்தளவுக்கு அவன் அந்த வீடியோவைப் பார்த்தானோ, அந்தளவுக்கு தன்னிடம் சொன்னவற்றை அதிகமாக அறிந்தவனானான். இப்பொழுது அவன் அதைக்குறித்துச் சிந்திக்க ஆரம்பித்து, முடிவாக பைபிளிலிருந்து சொல்லப்பட்ட அதிசயமான தகவலின்பேரில் அதிகமான ஆர்வத்தைப் பெற்றான். மேலுமாக அவன் அறிய விரும்பினான்.
அந்த ஓட்டுநர் பெயரை நினைவில் வைத்திருந்தான், வியன்னாவில் எங்கேயோ அவர் வாழ்கிறார் என்பதையும் அவன் தெரிந்துகொண்டிருந்தான். ஆகவே தபால் நிலையத்திற்குச் சென்று, தொலைபேசி டைரக்டரியில் அந்தப் பெயரில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு எண்ணையும் சுழற்ற ஆரம்பித்தான். தொலைபேசியில் பேசியவர்களிடம் அவன் கேட்ட கேள்வி: “நீங்கள் ஒரு ரயில் ஓட்டுநரா?” இல்லை என்ற பதில் வந்தால், அவன் மற்றொரு எண்ணுக்கு ஃபோன் செய்வான். கடைசியாக, அந்த ஓட்டுநரை அவன் கண்டுபிடித்தான். அவன் தன்னுடைய கதையையும் தான் வீடியோவில் கேள்விப்பட்ட பைபிள் செய்தியில் அக்கறையாய் இருப்பதையும் அவருக்குச் சொன்னான்.
அந்த இளைஞன் இருந்த இடத்துக்கு அருகில் வசிக்கும் யாராவது ஒருவர் அவனைச் சென்று சந்திக்கும்படிக்கு, கிளை அலுவலகத்தின் மூலம் அந்தச் சாட்சி ஏற்பாடுகள் செய்தார். எப்படியோ அந்த உள்ளூர் சபையிலிருந்த மற்றொரு சாட்சியும் ரயில் ஓட்டுநராக இருந்தார். இந்த இரண்டாவது ஓட்டுநர் அந்த ரயில்வே பயணப்பிரியனைச் சந்தித்தார், ஒரு பைபிள் படிப்பையும் தொடங்கினார். கோடைகாலமாகிய 1991-ல், அந்த இளைஞன் முழுக்காட்டப்பட்டான்.
எல்லாருடைய இருதயங்களையும் ஆராய்கிற யெகோவா, இந்த ஆள் நீதிக்காக உண்மையான அன்பைக் கொண்டிருந்தார் என்பதை அறிந்திருக்கவேண்டும். அதனால், பைபிள் சத்தியத்துடன் அவன் தொடர்புகொள்ளும்படி அவர் செய்தார்—அதுவும் ஒரு தனிச்சிறப்புவாய்ந்த முறையில்.—1 நாளாகமம் 28:9; யோவான் 10:27.