‘பற்களையுடைய’ ஓர் இரயில்
கிரீஸிலுள்ள விழித்தெழு! நிருபர்
மக்கள் குடியிருக்காத குறுகிய ஒரு மலைப் பள்ளத்தாக்கில் நீங்கள் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் பசுமரங்கள் நிறைந்திருக்கின்றன. பெரிய பாறைகள் அபாயகரமாக தொங்கிக்கொண்டிருக்கின்றன. அதன் அடியில் வளைந்து நெளியும் ஒரு நதி கொடூரப் பாய்ச்சலோடு பாய்ந்தோடுகிறது. நீங்கள் தன்னந்தனிமையில் இருக்கிறீர்கள் என்று உணரத் தொடங்கும் கணத்தில், திடீரென்று தூரத்திலிருந்து கிறீச்சொலியையும் தடதடவெனும் ஒலியையும் கேட்கிறீர்கள். மனிதனால் சென்றடைய முடியாத, மனிதன் காலெடுத்து வைத்திராத இடமாக தோன்றும் அந்தத் தன்னந்தனி காட்டில், நவீன போக்குவரத்து சாதனம் ஒன்றை பார்ப்பதை நீங்கள் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் அந்த சப்தத்தில் சந்தேகம் ஏதுமில்லை—ஒரு ரயில் வருகிறது!
அந்த சப்தம் நெருங்கி வரவர, உயர்ந்த மரங்களினூடே ஒரு சிறிய ரயிலைக் காண்கிறீர்கள். அதில் இரண்டே இரண்டு பெட்டிகளும் அவற்றிற்கு இடையில் ஒரு டீசல் எஞ்சினும் இருக்கின்றன. அது செங்குத்தான மலையின் ஏற்றத்தில் மெல்ல ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. தியாகாப்டோன்-காலாவ்ரிட்டா பற்றுரயில்வேக்கு (Rack Railway) நல்வரவு. ஐரோப்பாவிலேயே மிகுந்த ஆர்வத்தைத் தூண்டும் கண்கவர் ரயில்வேகளில் ஒன்றாக இருக்கும் இது கிரீஸின் பெலபனிஸஸ் பகுதியில் அமைந்துள்ளது. கிரேக்க மொழியில் இந்த ரயில் பாதை ஓதோடோட்டோஸ் என்று அழைக்கப்படுகிறது. சொல்லர்த்தமாக இது “பற்களையுடைய” என்று அர்த்தப்படுத்துகிறது. நீங்கள் காணவிருப்பது போல மிகப் பொருத்தமான ஒரு பெயர்.
ஏன் தேவை?
வட பெலோபொனெஸில் அமைந்துள்ள காலாவ்ரிட்டா நகரம், அதைச் சுற்றியுள்ள பகுதியின் பொருளாதார மற்றும் நிர்வாக மையமாக திகழ்கிறது. அதன் அருகாமையில் சில புகழ்பெற்ற துறவிமடங்கள் அமைந்துள்ளதால் அது சமய மற்றும் வரலாற்று ஆர்வமிக்க ஒரு இடமாகவும் விளங்குகிறது. ஒரு மலைப் பள்ளத்தாக்கைத் தழுவியிருப்பதால், இந்நகரம் அதன் இயற்கை அழகுக்கும் பேர்பெற்று இருக்கிறது. அதனைச் சூழ்ந்து அமைந்துள்ள காடுகளும், அதன் அநேக நீரூற்றுகளும், ஆரோக்கியமான சீதோஷ்ண நிலையும் அந்நகரத்தின் இயற்கை அழகின் காரணமாக திகழ்கின்றன.
அதன் வரலாற்றின் சிகரத்தில், 19-ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில், அந்நகரத்தின் மக்கள்தொகை 6,000-ஆக இருந்தது. ஆனால் கடலோர நகரங்களிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் இது மேடுபள்ளம் நிறைந்த மலைப்பகுதிகளால் பிரிக்கப்பட்டிருந்தது. அமைக்கப்பட்ட சாலைகளோ எந்தவித போக்குவரத்து தொடர்பு வசதிகளோ இல்லாதிருந்தன. நகரத்திற்குப் போவதற்கும் வருவதற்கும் குதிரை அல்லது கழுதையால் இழுக்கப்பட்ட வண்டிகளில் பல மணிநேரம் கடுமையான பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஊரேகோஸ் நதியை தனதடியில் கொண்ட ஓர் ஆழமான பள்ளத்தாக்கினூடே செல்வதே கடலோரப் பகுதியை சென்றடைவதற்கு மிக வசதியான வழியாக இருந்தது. இந்நதி தியாகாப்டோன் கிராமத்தில் சென்று முடிவடைகிறது.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்திற்குமுன், இப்பள்ளத்தாக்கு பயனுள்ள, மனமகிழச்செய்யும், கடலோர நகரங்களின் அத்தியாவசிய உயிர்நாடியாக விளங்கும் ஒரு ரயில்வேயின் தடமாக இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இந்த ரயில் பாதை கடந்துபோக வேண்டியிருந்த தடம் மிகவும் செங்குத்தான சரிவுகளைக் கொண்டிருந்ததை பொறியியல் ஆராய்ச்சிகள் காண்பித்தன. இந்த நிலைமையில் அவசியப்பட்டது ஒரு பல்ரயில்வேயாக இருந்தது.
பற்றுரயில்வே அல்லது பல்ரயில்வே (cog railway) என்பது என்ன? இது செங்குத்தான சரிவுகளுள்ள நிலப்பரப்பிற்கு ஏற்றாற்போல் அமைக்கப்பட்ட ஒன்றாகும். அது சாதாரண ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் பற்களையுடைய ஒரு தண்டவாளத்தை—ஒரு ஸ்டீல் பற்றுரயிலை—கொண்டிருக்கிறது. இதனுள் எஞ்சினில் உள்ள ஒரு பல்சக்கரத்தைப் பொருத்திப் பிணைக்கலாம். ரயில் மேலே ஏறும்போது அது வழுக்கி பின்னோக்கி செல்வதையும் கீழே இறங்கும்போது வழுக்கி முன்னோக்கி விழுவதையும் இது தடுக்கிறது.
தியாகாப்டோன்-காலாவ்ரிட்டா பல்ரயில்வேயில், அதிகபட்ச சாய்வு 7-ல் 1-ஆக இருக்கிறது (கிடைநிலையில் ஏழு மீட்டருக்கு செங்குத்துநிலையில் ஒரு மீட்டர் சாய்வு). அந்தத் தடத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் இந்தச் சாய்வு இருக்கிறது. ஆகவே, ரயில்வேயின் இந்த மூன்று இடங்களிலும் எஞ்சின் டிரைவர் ரயிலை நிறுத்தி, பல்சக்கரத்தைப் பற்றுதண்டவாளத்தில் பிணைத்து, மட்டுப்படுத்தப்பட்ட மெதுவான வேகத்தில் செல்லவேண்டும்.
கடினமான கட்டமைப்பு
ரயில் பாதை கடந்து செல்லவேண்டிய நிலப்பகுதி கடினமாக இருந்ததன் காரணமாக, அதை அமைப்பது ஒரு பெரிய பொறியியல் சாகசமாக இருந்தது. அந்த வேலை ஒரு இத்தாலிய கட்டமைப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிறுவனம் வேலையை 1891-ல் தொடங்கிற்று. கட்டுமான வேலையை இலகுவாக்கும் பொருட்டு, ஒரு குறுகிய ரயில் பாதை (75 சென்டிமீட்டர்) தெரிந்துகொள்ளப்பட்டது.
ஐந்தாண்டுகளுக்குப்பின், 1896-ல் டன்கணக்கில் பாறைகள் அகற்றப்பட்டன. மலைப் பாறைகளினூடே ஒன்பது சுரங்கப்பாதைகள் தோண்டப்பட்டு, ஆறு பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தொடக்கத்தில் பாலங்கள் அனைத்துமே கல்கட்டு வளைவுகளாக இருந்தன. ஆனால் பல வருடங்கள் கழித்து ஸ்டீல் பாலங்களினால் சில பாலங்கள் மாற்றீடு செய்யப்பட்டன. 720 மீட்டர் உயரத்திற்கு 23 கிலோமீட்டர் தூரம் ஏறுகிற புத்தம் புதியதொரு ரயில்வே, பயன்படுத்தப்பட தயாராகிவிட்டது. அதனுடைய பின்னணி உங்களுக்கு இப்போது தெரிந்திருப்பதால், அந்த ரயிலில் ஏறி உள்ளத்தைக் கவரும் அதன் பாதையினூடே பிரயாணம் செய்து மகிழ விரும்புகிறீர்களா?
திகைக்கவைக்கும் ஒரு தடம்
நாங்கள் கடலோரத்திலிருக்கும் தியாகாப்டோனிலிருந்து காலை ரயில் எண் 1328-ல் போகிறோம். அந்த கிராமத்தினூடே நாங்கள் போய்க்கொண்டிருக்கையில், பயணம் அமைதியாகவும் மெதுவாகவும் தொடங்குகிறது. எங்களுக்கு நிறைய ஆவலான எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், அந்தக் கிராமவாசிகள், அதைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஏனென்றால் தெளிவாகவே அவர்கள் இந்த ரயிலில் பலதடவைகள் பிரயாணம் செய்திருக்கிறார்கள். ஆனால் நாங்களோ குன்றாத ஆர்வத்தோடு தொடர்கிறோம்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, நாங்கள் அச்சந்தரும் பள்ளத்தாக்கு ஒன்றின் நுழைவாயிலைப் பார்க்கிறோம். திகைப்பூட்டும் ஒரு காட்சி அது. புரண்டோடிவரும் ஆறு எங்கள் இடதுபக்கத்தில் இருக்கிறது. எங்களுக்கு மேலே பெரிய பாறைகள் பயமுறுத்தும் வகையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றின்மேல் பைன் மரங்கள் அபாயகரமாக வேரூன்றி இருக்கின்றன. வளைந்தோடும் அந்த ஆறு ஒய்யாரமாக பாறைகளினூடே பாய்ந்துசெல்கிறது.
தாவரங்கள் அடர்த்தியாகவும் செழுமையாகவும் இருக்கின்றன. எங்களுடைய ரயில் பெரிய பிளேட்டனஸ் மற்றும் புங்க மரங்களாலான காடுகளினுள் நுழைந்து செல்வதாக தோன்றுகிறது. அம்மரங்களின் கிளைகள் ஏறக்குறைய எங்களுடைய ரயில் பெட்டியைத் தொடுகின்றன. அந்த ரயில்வே இப்போது சுமார் ஒரு நூற்றாண்டு காலம் இயங்கிவந்திருக்கிறது. இருப்பினும் இந்த மலை இடுக்கின் (gorge) ஒருசில பகுதிகள் இன்னும் சென்றெட்டமுடியாத ஒன்றாகவே இருந்துவருகின்றன. அவை தங்களுடைய எழிலை பயணிகளின் கண்களுக்கு மட்டுமே விருந்தாக அளிக்கின்றன.
நியாமாட்டா என்றழைக்கப்படும் முதல் ரயில் நிறுத்தத்திற்கு நாங்கள் வந்து சேருகிறோம். இங்கு உள்ளூர் விவசாயிகள் சிலர் இறங்கி தங்களுடைய விளைநிலங்களுக்கு நடந்து செல்வார்கள். நாங்கள் தொடர்ந்து பிரயாணம் செய்கையில், நிலப்பரப்பு இன்னும் அதிக சாய்வுள்ளதாகிக் கொண்டிருக்கிறது. திடீரென ரயில் நிற்கிறது. ஆபத்தொன்றும் இல்லை. ஆனால் எஞ்சின் டிரைவர் எச்சரிக்கையோடு செல்ல இப்போது நடுவிலுள்ள பல்தண்டவாளத்தை உபயோகிக்க வேண்டும். எஞ்சினில் உள்ள பல்சக்கரம் பல்ரயிலைப் பிணைத்துக்கொள்வதை நாங்கள் உணருகிறோம். இது ரயில் பெட்டிக்கு குலுக்கமில்லாத ஒரு சீரான அசைவைக் கொடுக்கிறது. ஒன்றும் ஆகாது பயப்படவேண்டியதில்லை என்று எங்களுக்கு அருகில் இருக்கும் அனுபவமுள்ள பயணி எங்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார். இருந்தபோதிலும், அதிக செங்குத்தான ஏற்றத்தைப் பார்க்கையில் எங்களுக்குக் கொஞ்சம் பயமாக இருக்கிறது.
அந்தப் பள்ளத்தாக்கின் அதிக திறந்தவெளிப் பகுதிகளின் சுவர்களை ஒட்டி பெரிய குகைகளை நாங்கள் பார்க்கிறோம். அவை உள்ளூர் மக்களால் செம்மறியாடுகளின் பட்டிகளாக உபயோகிக்கப்படுகின்றன. இடது பக்கமாக, கண்ணைக் கவரும் தொங்கூசிப் பாறைகளையும் (stalactites), பொங்கூசிப் பாறைகளையும் (stalagmites) கொண்ட சிறிய குகைகள் இருக்கின்றன. பெரிய நீர்வீழ்ச்சிகள் எல்லா பக்கங்களிலிருந்தும் விழுகின்றன. அவற்றின் ஒலி, அவற்றின் எதிரொலியோடு சேர்ந்து, மலை இடுக்கின் வடிவினால் அதிகரிக்கப்படுகிறது. இங்கு, இடது பக்கத்தில், அவ்வளவு நிரந்தரமில்லாத ஒருசில நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கும் நிலச்சரிவுகள் இருக்கின்றன. இறுதியில் அந்நீர்வீழ்ச்சிகள் புரண்டோடும் ஆற்றினால் அடித்துச் செல்லப்படும். ரயிலில் செல்வதற்குப் பதிலாக நடந்து செல்ல தீர்மானித்து, நடந்து செல்லும் சில பலசாலிகளான நடைவீரர்களை நாங்கள் கடந்து செல்கிறோம்.
உயரமான ஒரு பாலத்தின்மேல் நாங்கள் போய்க்கொண்டிருக்கும்போது பள்ளத்தாக்கும் ஆறும் மிகவும் ஆழமாகிக்கொண்டு போகின்றன. குறிப்பிட்ட ஒரு இடத்தில் மலை இடுக்கு மிகவும் குறுகலாக இருக்கிறது; இரண்டு மீட்டர் அகலம்கூட இருக்காது. அங்கு செங்குத்தான மலைச்சரிவை ஒட்டி இருக்கும் ஒரு சுரங்கப்பாதையில் ரயில் போகவேண்டியிருக்கிறது.
அநேக சுரங்கப்பாதைகளையும் பாலங்களையும் நாங்கள் கடந்துபோனபின், மலை இடுக்கு சிறிது சிறிதாக விரிந்து கடைசியில் அது ஒரு குறுகலான பள்ளத்தாக்காக மாறுகிறது. சீக்கிரத்தில் நாங்கள் காட்டோ ஸாக்லோரூ கிராமமாகிய இரண்டாவது நிறுத்தத்தை வந்துசேருகிறோம். அந்தச் சிறிய நிலையத்தில் எழுதியிருந்த அறிவிப்பு அதன் உயரம் 601 மீட்டர் என்பதாக காண்பிக்கிறது. இந்தக் கிராமத்தில் உள்ள சில வீடுகள் பள்ளத்தாக்கின் இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு, பெரிய பிளேட்டனஸ் மற்றும் வாதுமை மரங்களுக்கு இடையில் மறைக்கப்பட்டிருக்கின்றன. காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதை உங்களால் உணரமுடியும். அந்தக் கிராமவாசிகளைக் கேட்டுப்பாருங்கள்; தங்களுடைய வாழ்நாளில் இந்த இருண்ட பள்ளத்தாக்கில் அதிக வெயிலைப் பார்த்ததே கிடையாது என்று அவர்கள் உடனடியாக ஒப்புக்கொள்ளுவார்கள். அந்தப் பள்ளத்தாக்கின் வடிவத்தினாலும் மரங்களின் அடர்த்தியினாலும், ஒரு நாளைக்கு ஒருசில மணிநேரம் மட்டுமே சூரியன் தெரிகிறது. குளிர்காலத்தில் அதைவிட குறைவான நேரமே தெரிகிறது.
காட்டோ ஸாக்லோரூவுக்குப் பிறகு தொடர்ந்து பயணம் செய்கையில், மிகவும் சாதாரண ஒரு தடத்தினூடே ரயில் வளைந்து நெளிந்து காற்றாடி மற்றும் யூகலிப்டஸ் மரங்களுக்குள் புகுந்து செல்கிறது. இப்போது சமதளத்தைக்கொண்ட ஊரேகோஸ் நதிக்கரை இந்தத் தடத்தை ஒட்டியே அமைந்துள்ளது. கண்ணைக் கவரும் 65 நிமிட பயணத்திற்குப் பிறகு, அதிகாலையின் மூடுபனியினூடே காலாவ்ரிட்டாவின் கட்டடங்களை எங்களால் காணமுடிகிறது. இந்த நகரத்தின் மக்கள்தொகை சுமார் 3,000 மட்டுமே. இருப்பினும், வருடத்தின் ஒவ்வொரு பருவத்திலும் அநேக சுற்றுலாப் பயணிகளை இது கவர்ந்திழுக்கிறது. அருகிலுள்ள பனிச்சருக்கு வாசஸ்தலத்தில் (ski resort) விளையாட சிலர் வருகின்றனர். மற்றும் சிலரோ அதன் நல்ல சீதோஷ்ணநிலையை அனுபவித்து மகிழவும் உள்ளூர் சமையலை அனுபவிக்கவும் வருகின்றனர்.
‘உங்களுடைய சொந்த வீட்டில் இருப்பதைவிட பாதுகாப்பானது’
நாங்கள் ரயிலிலிருந்து இறங்கியவுடன், எங்களை அவ்வளவு சுகமாகவும் பாதுகாப்பாகவும் இங்குக் கொண்டுவந்து சேர்த்த எஞ்சின் டிரைவர் யோஆனியுடன் பேசுகிறோம். “எப்பவுமே எனக்கு இந்தப் பயணம் இஷ்டம்,” என்று நிலையான திருப்தியோடு அவர் கூறுகிறார். எதையோ ஞாபகப்படுத்திப் பார்க்கிற மாதிரி, தன் கண்களை உயர்த்தி அவர் மேலும் கூறுகிறார்: “ஆனால் குளிர்காலத்தில் கடுமையாக இருக்கும். பாருங்களேன், ரயில் எப்பொழுதுமே ஃபுல் ஆகிறதில்லை. அதனால் இந்தப் பயங்கரமான பள்ளத்தாக்குக்கு இடையில் ரொம்ப ஒண்டியாக இருக்கும். அதுபோக நிலச்சரிவு, பனி, குளிர், எப்பொழுதுபார்த்தாலும் மூடுபனி இதெல்லாம் வேறு இருக்கிறது. ஆனால் இந்தத் தடத்தில் போகிறதை ‘சாதாரணமான’ எந்தத் தடத்திற்காகவும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன்.”
இந்த ரயில்வேயின் பாதுகாப்பான தன்மையைப்பற்றி கேட்கையில் யோஆனி நிச்சயமாக சொன்னார்: “நீங்கள் உங்களுடைய சொந்த வீட்டில் இருக்கிறதைவிட அதிக பாதுகாப்பாகத்தான் இருக்கிறீர்கள்!” மெய்யாகவே, இந்த ரயில்வேயின் சுமார் 100-வருட வரலாற்றில், ஒரே ஒரு சிறிய விபத்து மட்டுமே, அதுவும் படுகாயம் ஏதுமின்றி, ஏற்பட்டிருக்கிறது.
1940-கள் மற்றும் 1950-களின்போது, இந்தத் தனிச் சிறப்பு வாய்ந்த ரயில், ஒதுக்காக இருக்கும் காலாவ்ரிட்டா நகரவாசிகளுக்கும் அதைச் சுற்றியுள்ள சென்றடைவதற்கு கடினமான கிராமங்களிலுள்ள மக்களுக்கும், யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய ‘சுவிசேஷத்தை’ கொண்டுவருவதற்கான ஒரு ஏதுவாக உபயோகிக்கப்பட்டது. (மாற்கு 13:10) அதன் விளைவாக இன்று, காலாவ்ரிட்டாவில் சிறிய ஆனால் வைராக்கியமுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபை ஒன்று உள்ளது.
ஆகவே, நீங்கள் கிரீஸுக்குப் போவீர்களானால், இடங்களைச் சுற்றிப் பார்க்கும் உங்களுடைய திட்டத்தில் ‘பற்களையுடைய’ ரயிலாகிய தியாகாப்டோன்-காலாவ்ரிட்டா ஓதோடோட்டோஸ்-ஐயும் ஏன் சேர்த்துக்கொள்ளக்கூடாது? சந்தேகமின்றி, மனதில் பதியும் ஒரு அனுபவத்தை—நீண்ட நாள் நினைவில் நிலைக்கும் ஒன்றை—நீங்கள் பெற்று மகிழ்வீர்கள்!
[பக்கம் 21-ன் பெட்டி]
“நீதிமன்ற அவை”
ரயில்வே தடத்தில் அமைந்திருக்கும் மிகப் பெரிய குகைகளில் ஒன்றுக்கு உள்ளூர் மக்கள் வைத்திருக்கும் பெயர் இதுதான். ஏன்? இந்தக் குகையிலுள்ள தொங்கூசிப் பாறைகள் மற்றும் பொங்கூசிப் பாறைகளின் வடிவங்கள் அப்படியே ஒரு நீதிமன்ற அவையைப் போன்று காட்சியளிக்கின்றன. பின்னணியில் “நீதிபதிகள்”—உறுதியான பொங்கூசிப் பாறைகளால் ஆன கம்பீரமான உருவங்கள்—இருக்கையில் அமர்ந்திருப்பதை நீங்கள் காணலாம். இரண்டு பக்கங்களிலும், அதிக பொங்கூசிப் பாறைகள், “சாட்சிகள்” மற்றும் “வழக்குரைஞர்கள்” வழக்கு விசாரணையை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். இறுதியாக, குகையின் வாயிலில், குற்றவாளியாக தீர்க்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட உயிரற்ற “குற்றவாளிகள்” குகையின் உட்புற கூரையிலிருந்து இரண்டு நீண்ட தொங்கூசிப் பாறைகளாக தொங்கிக்கொண்டிருப்பதை ஒருவர் காணலாம்.
[பக்கம் 22-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
‘பற்களையுடைய’ ரயிலின் வழித்தடம்
கிரீஸ்
தியாகாப்டோன் காட்டோ ஸாக்லோரூ காலாவ்ரிட்டா
[பக்கம் 23-ன் படங்கள்]
மேலே உள்படம்: தி மெகா ஸ்பிலையான் ரயில் நிலையம்
கீழே: குறுகலான ஒரு முகட்டில் ஏறிக்கொண்டிருக்கும் ‘பற்களையுடைய’ ஓர் இரயில்