உண்மையான பாதுகாப்பு கூடியகாரியமா?
கட்டுரையாளர் ரால்ஃப் வால்டோ எமர்ஸன் ஒருமுறை அறிக்கை செய்தார்: “அறிவாழமற்ற மனிதர் அதிர்ஷ்டத்தில் நம்புகின்றனர் . . . மனோபலமுள்ளவர்கள் காரணகாரியத்தில் நம்புகின்றனர்.” ஆம், மந்திரத் தாயத்துகள் மற்றும் அதிர்ஷ்ட மந்திரப் பொருட்களில் விசுவாசம் வைக்கும் ஒரு நபர் தன்னுடைய வாழ்க்கையின்மீதான கட்டுப்பாட்டைக் காணக்கூடாத சக்திகளிடம் ஒப்படைக்கிறார். அவர் தர்க்கத்தையும் நியாயவாதத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்டு, பகுத்தறிவுக்குப் பொருந்தாத மூடநம்பிக்கைகளைச்சார்ந்த பயங்களுக்கு அடிபணிகிறார்.
இருப்பினும், அப்படிப்பட்ட பயங்களிலிருந்து பைபிள் ஒருவரை விடுவிக்க முடியும். தாயத்துகளும் மந்திரப் பொருட்களும் செயலற்றவை, சக்தியற்றவை என்று அது காண்பிக்கிறது. எப்படி காண்பிக்கிறது? தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்காவின்படி, “[மற்ற காரியங்களோடுகூட] இயற்கை சக்திகளிடம் அவை கொண்டிருக்கும் தொடர்பிலிருந்து தாயத்துகள் சக்தியைப் பெறுவதாகக் கருதப்படுகின்றன.” இந்தச் சக்திகள், ‘இறந்தவர்களின் ஆவிகள்’ அல்லது ‘அதிர்ஷ்டத்தின் சக்தியாக’ இருக்கக்கூடும். ஆனால் இறந்தவர்கள் “ஒன்றும் அறியார்கள்” என்று பைபிள் தெளிவாகக் காண்பிக்கிறது. (பிரசங்கி 9:5) இவ்வாறு, உயிருடன் வாழ்பவர்களுக்கு உதவும் அல்லது வருத்தும் இறந்தவர்களின் ஆவிகள் எதுவும் இல்லை; உங்கள் சார்பாகச் செயல்படக்கூடிய அதிர்ஷ்டம் போன்ற காணக்கூடாத சக்தியும் எதுவும் இல்லை.
பைபிள் காலங்களில், கடவுள் அவரைவிட்டு விலகிப்போகிறவர்களை, அவருடைய பரிசுத்த பர்வதத்தை மறந்துவிடுகிறவர்களை, “அதிர்ஷ்ட தேவதைக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, விதியின் தெய்வத்திற்கு கலந்த திராட்ச ரசத்தை நிரப்புகிற”வர்களைக் கண்டனம் செய்தார். பாதுகாப்பைப் பெறுவதற்கு மாறாக, அந்த அதிர்ஷ்டத்தை ஆதரிப்போர் அழிவிற்கு ஒப்படைக்கப்பட்டனர். “நான் உங்களை வாளுக்கு இரையாக்குவேன்,” என்று யெகோவா தேவன் சொன்னார்.—ஏசாயா 65:11, 12, NW.
மாயமந்திரக் கலைகளைப் பழக்கமாகச் செய்துவருவதன்மூலம், பண்டைய பாபிலோன் தேசம் அதேவிதமாகவே புதிரான மாயச் சக்திகளால் காக்கப்படுவதில் விசுவாசம் வைத்தது. இருந்தபோதிலும், பாபிலோன் பேரிடரை அனுபவித்தது. “உன்னுடைய மந்திரவித்தைகளிலும் உன்னுடைய பெரிய சூனியங்களிலும் தொடர்ந்திரு,” என்று ஏசாயா தீர்க்கதரிசி சவால்விட்டார். “ஒருவேளை அவற்றிலிருந்து நீ உதவியைப் பெற முடியும் . . . ஆனால் இல்லை! உன்னுடைய தந்திரச்செயல்கள் பல இருந்தும், நீ சக்தியற்றிருக்கிறாய்.” (ஏசாயா 47:12, 13, தி நியூ இங்லிஷ் பைபிள்) காலப்போக்கில் அந்தத் தேசம் மொத்தமாக இல்லாமற்போயிற்று. மாயமந்திரம் சார்ந்த காரியங்களில் விசுவாசம் பிரயோஜனமற்றதாக நிரூபித்திருக்கிறது. அதேவிதமாகவே, எந்த மந்திர தாயத்து, மந்திரப் பொருள் அல்லது மந்திரக் கயிறும் உங்களுக்கு உதவ அல்லது பாதுகாக்க ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு வகையான விக்கிரகாராதனை
இன்னும், ஒரு பளிங்கை, ஒரு முயலின் பாதத்தை, அல்லது ஒரு மதச்சார்பான பதக்கத்தைக் கொண்டுச்செல்வதில் எந்தத் தீங்கையும் சிலர் காணாமல் இருக்கக்கூடும். இவை தீங்கற்ற வெறும் சிறு நகைகளே அல்லவா? பைபிளின்படி அவ்வாறில்லை. மாயமந்திரம் சார்ந்த காரியங்கள் நிச்சயமாகவே தீங்கற்றவையாக இல்லை என்று அது சொல்கிறது.
தாயத்துகளைப் பயன்படுத்துதல், விக்கிரகாராதனையின் ஒரு வகையாகும்—தெளிவாகக் கடவுளுடைய வார்த்தையில் கண்டனம் செய்யப்பட்ட ஒன்று. (யாத்திராகமம் 20:4, 5) ஓர் ஆள் தான் ஒரு தாயத்தை அல்லது ஒரு மந்திரக் கயிறை நேரடியாக வணங்குவதாக உணராமல் இருக்கக்கூடும் என்பது உண்மைதான். ஆனால், அப்படிப்பட்ட ஒன்றை ஒருவர் வெறுமனே கொண்டிருப்பது காணக்கூடாத மாயமந்திர சக்திகளிடமாக ஒரு பயபக்தியான, வணக்கத்திற்குரிய மனநிலையை வெளிக்காட்டுகிறதல்லவா? அந்த மந்திரப் பொருட்களுக்குத்தானே (முத்தமிடுதல் போன்ற) வணக்கத்திற்குரிய கவனம் அடிக்கடி செலுத்தப்படுகிறது என்பது உண்மை அல்லவா? இருந்தாலும் பைபிள், 1 யோவான் 5:21-ல் கிறிஸ்தவர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறது: “நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.” இது மந்திரப் பொருட்கள் அல்லது தாயத்துகளாகக் கருதப்படுபவற்றை உள்ளடக்குவதாய் இருக்கும் அல்லவா?
மாயமந்திரத்தின் கண்ணி
தாயத்துகளைப் பயன்படுத்துவதன்மூலம், அநேகர் மாயமந்திரத்தால் சிக்கவைக்கவும்படுகின்றனர். திட நம்பிக்கையின் காரணத்தினால் அல்லாமல் பழக்கவழக்கத்தின் காரணமாக ஒரு பளிங்கை அல்லது ஒரு மந்திரமருந்தை சிலர் எடுத்துச்செல்லக்கூடும் என்பது உண்மையே. ஆனால் ஒரு விபச்சாரியுடன் காதல் விளையாட்டுகளில் ஈடுபடுவது, எய்ட்ஸ் நோயைத் தொற்றிக்கொள்வதற்கு ஒருவேளை வழிநடத்துவதுபோல, மாயமந்திரத்துடன் விளையாடுவதும் பெருந்துயரமான விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். நல்ல காரணத்தோடுதான் கடவுள் இஸ்ரவேலரை மாயவித்தை, நாள் பார்த்தல், குறிசொல்லுதல் ஆகியவற்றிலிருந்து தடை செய்தார். “இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்,” என்று பைபிள் எச்சரிக்கிறது.—உபாகமம் 18:10-14.
ஏன் இந்தக் கடுமையான தடை உத்தரவு? ஏனென்றால் அப்படிப்பட்ட பழக்கங்களின் பின்னாலிருக்கும் காணக்கூடாத சக்திகள் இறந்தவர்களின் ஆவிகளுமல்ல, அதிர்ஷ்டத்தின் சக்தியும் அல்ல; ஆனால் பிசாசாகிய சாத்தானும் அவனுடைய பேய்களுமாகும்.a தாயத்துகளைப் பயன்படுத்துதல் பேய் வணக்கத்துடன் நேரடியான தொடர்புடையதாய் இருக்கிறது. வைன்ஸ் எக்ஸ்போஸிட்டரி டிக்ஷனரி ஆஃப் ஓல்ட் அன்ட் நியூ டெஸ்டமன்ட் வர்ட்ஸ் சொல்கிறது: “மாயமந்திரக் கலையில், மருந்துகளின் உபயோகம், எளிமையாக இருந்தாலுஞ்சரி சக்திவாய்ந்ததாக இருந்தாலுஞ்சரி, பொதுவாக மாயமந்திர சக்திகளிடம் மந்திர உச்சரிப்புகளும் வேண்டுகோள்களும் செய்யப்படுவதோடு இணைந்தும், பல்வேறு மந்திரப் பொருட்கள், தாயத்துகள், போன்றவற்றிற்கான ஏற்பாடுடனும் இருக்கிறது.”
ஆகவே ஒரு மாயமந்திரப் பொருளை வைத்திருக்கும் ஒருவர் ஆவியுலகத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறார். ‘இப்பிரபஞ்சத்தின் தேவனின்’—பிசாசாகிய சாத்தானின்—கெட்ட செல்வாக்கு மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்படும் அபாயத்தில் அவர் இருக்கிறார். (2 கொரிந்தியர் 4:4) அப்படியென்றால், நல்ல காரணத்துடனேயே, எல்லா வகைகளான ஆவியுலகக் தொடர்புகளையும் தவிர்க்கும்படி பைபிள் நமக்குக் கட்டளையிடுகிறது.—கலாத்தியர் 5:19-21.
மூடநம்பிக்கையின் பிடிகளிலிருந்து விடுபடுதல்
இருந்தாலும் தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “மக்கள் ஒருவருக்கொருவர் பயந்து, எதிர்காலத்தைப்பற்றி நிச்சயமற்ற எண்ணங்களைக் கொண்டிருக்கும்வரையாக மூடநம்பிக்கைகள் வாழ்க்கையின் பாகமாக இருக்கக்கூடும்.” ஆனால் கேடு விளைவிக்கும் மூடநம்பிக்கைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும்படி யெகோவாவின் சாட்சிகள் அநேகருக்கு உதவிசெய்கின்றனர். ஒரு தென்னாப்பிரிக்கப் பெண் நினைவுகூருகிறாள்: “நான் பொல்லாத ஆவிகளால் தொந்தரவு செய்யப்பட்டேன்; என்னை அவற்றிற்கு எதிராகப் பாதுகாப்பதற்காக என் வீடு முழுவதும் மியூடீயால் நிரப்பப்பட்டிருந்தது.” மாயமந்திரத்துடன் விளையாடுவதன் ஆபத்துக்களைக் காணும்படி யெகோவாவின் சாட்சிகள் அவளுக்கு உதவி செய்தனர். அவளுடைய பிரதிபலிப்பு? “பேய்த்தனத்துடன் தொடர்புடையதாய் நான் வைத்திருந்த எல்லாவற்றையும் நான் தூக்கியெறிய ஆரம்பித்தேன்,” என்று அவள் கூறுகிறாள். “என் உடல்நலம் முன்னேற்றமடைந்தது. நான் யெகோவாவைச் சேவிப்பதற்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றேன்.” அவள் இப்போது மூடநம்பிக்கையிலிருந்தும் ஆவியுலகத் தொடர்பிலிருந்தும் விடுபட்டிருக்கிறாள்.
நைஜீரியாவில் தன்னுடைய குணப்படுத்தும் கலைகளுடன் ஆவியுலகத் தொடர்பு கலந்த மூலிகைகள்மூலம் குணப்படுத்துபவர் ஒருவரையும் கவனியுங்கள். யெகோவாவின் சாட்சிகள் அவருடைய வீட்டிற்கு வருகையில், அடிக்கடி அச்சுறுத்தல்களையும் சாபங்களையும் பயன்படுத்தி அவர்களை வழக்கமாக விரட்டிவிடுவார். ஒருமுறை அவர் ஒரு விசேஷித்த மருந்தைக்கூட தயாரித்து, அதன்மேல் சில மந்திரங்களை உச்சரித்து, ஒரு சாட்சியின் முகத்தில் ஊதிவிட்டார்! “இன்னும் ஏழே நாட்களில் நீ இறந்திருப்பாய்!” என்று அவர் அலறினார். ஏழு நாட்கள் கழித்து, அந்தச் சாட்சி திரும்ப வந்தார்; அந்த மூலிகைகள்மூலம் குணப்படுத்துபவர், ஓர் ஆவி உருவைக் கண்டதாக நம்பிக்கொண்டு, பார்ப்பதற்காகத் தன் வீட்டிலிருந்து வெளியே வந்தார்! அவருடைய மாயமந்திரம் பிரயோஜனமற்றது என்பது வெளிப்படுத்தப்பட்டது; அவர் பைபிள் படிப்பிற்கு ஒத்துக்கொண்டார்; முடிவில் அவர்தானே ஒரு சாட்சியானார்.
நீங்களும் பயம் மற்றும் மூடநம்பிக்கையின் விலங்குகளிலிருந்து விடுவிக்கப்பட முடியும். இது எளிதாக இருக்காது என்பது ஒத்துக்கொள்ளத்தக்கதே. ஒருவேளை நீங்கள் தாயத்துகள் மற்றும் மந்திரப் பொருட்களின் உபயோகம் பொதுவானதாக இருக்கும் ஒரு கலாச்சாரத்தில் வளர்ந்திருக்கலாம். பண்டைய எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட ஒரு சவாலை எதிர்ப்பட்டனர். அவர்கள் ஆவியுலகக் கோட்பாட்டால் பெரிதும் செல்வாக்குச் செலுத்தப்பட்ட ஒரு கலாச்சாரத்தில் வாழ்ந்தனர். அவர்கள் கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை அறிந்தபோது என்ன செய்தனர்? பைபிள் சொல்கிறது: “மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.”—அப்போஸ்தலர் 19:19.
கடவுளுடைய பாதுகாப்பைப் பெறுதல்
மாயமந்திரத்தின் எல்லா அடையாளங்களையும் நீங்கள் உங்களிலிருந்து நீக்கிப்போட்டால், நீங்கள் பாதுகாப்பின்றி விடப்படுவீர்கள் அல்லவா? மாறாக, “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.” (சங்கீதம் 46:1) இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையை அழிக்கும்போது, கடவுளுடைய பாதுகாப்பு குறிப்பாக வெளிக்காட்டப்படும். “கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.”—2 பேதுரு 2:9; ஒப்பிடுங்கள்: சங்கீதம் 37:40.
அதற்கிடையில், ‘சமயமும் எதிர்பாராத சம்பவமும் நம் எல்லாருக்கும் நேரிடும்.’ (பிரசங்கி 9:11) கடவுள், தம்முடைய ஊழியர்கள் “கஷ்டங்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட” ஒரு வாழ்க்கையை நடத்துவார்கள் அல்லது எல்லா தனிப்பட்ட கேடுகளிலிருந்தும் தாம் அவர்களைக் காப்பார் என்று வாக்களிப்பதில்லை. இருந்தாலும், நம்முடைய ஆவிக்குரிய தன்மையையும் நாம் அவரோடு கொண்டுள்ள உறவையும் பாதுகாப்பதாக அவர் வாக்களிக்கிறார். (சங்கீதம் 91:1-9) எப்படி? ஒன்று, சாத்தானுடைய சீரழியும் செல்வாக்கிலிருந்து நம்மைப் பாதுகாத்து நமக்கு நற்பயனளிக்கும் சட்டங்களையும் நியமங்களையும் அவர் கொடுக்கிறார். (ஏசாயா 48:17) யெகோவாவின் வழிகளைப்பற்றிய அறிவை நாம் பெறுவதன்மூலம்,—உதாரணமாக, பிரயோஜனமற்ற அல்லது கேடு விளைவிக்கும் செயல்களிலிருந்து—‘சிந்திக்கும் திறமைதானே நம்மைக் காத்து, பகுத்துணர்வுதானே நம்மைப் பாதுகாக்கும்.’—நீதிமொழிகள் 2:11.
கடவுள் நம்மைப் பாதுகாப்பதற்கான மற்றொரு வழி, சோதனை காலங்களில் “இயல்புக்கு மீறிய வல்லமையை” கொடுப்பதன்மூலமாகும். (2 கொரிந்தியர் 4:7, NW) மேலும் சூழ்நிலைகள் ஒரு கிறிஸ்தவனை மேற்கொள்ளுவதாக அச்சுறுத்தும்போது, இருதயத்தையும் மனதின் சக்திகளையும் காப்பதற்கு அவர் ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தைக்’ கொடுக்கிறார். (பிலிப்பியர் 4:7) ஆம், “பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்க” கிறிஸ்தவன் தயாராக வைக்கப்படுகிறான்.—எபேசியர் 6:11-13.
அப்படிப்பட்ட பாதுகாப்பை நீங்கள் எப்படிப் பெற்றுக்கொள்ள முடியும்? யெகோவாவைப்பற்றியும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அறிவை எடுத்துக்கொள்வதன்மூலம் துவங்குங்கள். (யோவான் 17:3) இந்த வழிகளில் உங்களுக்கு உதவுவதற்கு யெகோவாவின் சாட்சிகள் அதிகத்தைச் செய்யலாம். யெகோவாவுடன் ஒரு மனமார்ந்த உறவை வளர்த்துக்கொள்கையில், அவருடைய தயவான பாதுகாப்பை நீங்கள் அனுபவிக்கத் துவங்குவீர்கள். சங்கீதம் 91:14-ல் நாம் வாசிக்கிறபடி, கடவுள் சொல்கிறார்: “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.”
ஆம், நீங்கள் அவருக்கு உண்மையாக இருந்தால், முடிவில் கடவுள், வரும் புதிய உலகில் நித்திய ஜீவனைத் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். அந்தச் சமயத்தில் வாழ்பவர்களைக்குறித்து யெகோவா உறுதியளிக்கிறார்: “அவனவன் . . . பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.” (மீகா 4:4) நோயும் மரணமும் இருக்கவே இருக்காது. (வெளிப்படுத்துதல் 21:4) இப்போதுங்கூட,—யெகோவாவுடன் ஒரு நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டால்—நீங்கள் ஓரளவான பாதுகாப்பை அனுபவித்து மகிழலாம். சங்கீதக்காரனைப் போல நீங்களும் இவ்வாறு சொல்ல முடியும்: “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.”—சங்கீதம் 121:2.
[அடிக்குறிப்புகள்]
a மேலுமான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட மரித்தவர்களின் ஆவிகள்—அவை உங்களுக்கு உதவ அல்லது கேடு செய்ய முடியுமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டைப் பாருங்கள்.
[பக்கம் 6-ன் படம்]
மாயமந்திரத்துடன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் எபேசு கிறிஸ்தவர்கள் விட்டொழித்தார்கள்
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ், பயம் இருக்கவே இருக்காது