அதிர்ஷ்ட மந்திரப் பொருட்கள் உங்களைப் பாதுகாக்க முடியுமா?
ஒரு பிரேஸிலிய மனிதனின் பாக்கட்டில் எடுத்துச்செல்லப்படும் ஒரு பளிங்கு. ஓர் அமெரிக்க உடற்பயிற்சி வல்லுநனின் அதிர்ஷ்ட நாணயம். ஓர் அயர்லாந்து குடும்பத்தின் வீட்டில் படுக்கைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் புனித ப்ரிஜெடின் சிலுவை. இலட்சக்கணக்கான மக்கள் அத்தகைய பொருட்களை அதிர்ஷ்ட மந்திரப் பொருட்கள் அல்லது தாயத்துகளாகப் பயன்படுத்துகின்றனர்.a இந்த மந்திரப் பொருட்களைக் கொண்டிருப்பது, தீங்கைத் தடுத்து விலக்கி தங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
உதாரணமாக பிரேஸிலை எடுத்துக்கொள்ளுங்கள். வேஷா என்ற பத்திரிகையின்படி, அநேக பிரேஸிலியர்கள், “அந்தக் கற்களை வைத்திருக்கும் ஒருவருக்கு அதிர்ஷ்டத்தையும் அத்தியாவசியமான ஆற்றல்களையும் கவரக்கூடிய சக்தி இருப்பதாகக் கருதப்படும் பாறை துண்டுகளையும் சற்றுமதிப்பு குறைந்த கற்களையும்” எடுத்துச்செல்கின்றனர். மாயமந்திர சக்திகளுக்கு அவமதிப்புக் காட்டுவதற்குப் பயந்து, அவ்விடத்திலுள்ள மற்றவர்கள் ஒரு மதச்சார்பான அடையாளத்தை அல்லது வாசகத்தை தங்கள் வீட்டுச் சுவரில் வைக்கின்றனர். சிலர் பைபிளைக்கூட ஒரு பரிசுத்த மந்திரப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்; அவர்கள் அதை நிரந்தரமாக சங்கீதம் 91-ற்குத் திறந்தவண்ணம், ஒரு மேசையின்மேல் வைக்கின்றனர்.
தென்னாப்பிரிக்காவில், மியூடீ, அல்லது பாரம்பரிய மருந்து, அதேவிதமாக பயன்படுத்தப்படுகிறது; வெறுமனே அதன் குணப்படுத்தும் தன்மைகளுக்காக அல்ல, ஆனால் கெட்ட அதிர்ஷ்டத்திற்கு எதிராகப் பாதுகாக்கும்படி பயன்படுத்தப்படுகிறது. நோய், மரணம், பொருளாதாரநிலையில் மாற்றங்கள், மேலும் காதல் தோல்விகளுங்கூட பகைவரால் ஏவிவிடப்பட்ட மந்திரங்கள் அல்லது இறந்துபோன முன்னோர்களைச் சாந்தப்படுத்தத் தவறியதன் விளைவு என அடிக்கடி எண்ணப்படுகிறது. மியூடீ பொதுவாக, செடிகள், மரங்கள், அல்லது மிருகங்களின் பாகங்களிலிருந்து எடுக்கப்பட்ட மருந்து நீரைப் பக்குவப்படுத்தும் ஒரு நாட்டு வைத்தியரிடமிருந்து பெறப்படுகிறது. கவனத்திற்குரியவிதத்தில், மியூடீ நாட்டுப்புறங்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதாய் இல்லை; அந்தப் பழக்கம் தென்னாப்பிரிக்க நகரங்களிலும் பரவலானதாக இருக்கிறது. வணிகர்களும் பல்கலைக்கழக பட்டதாரிகளும் மியூடீயைச் சார்ந்திருப்போரில் உட்பட்டிருக்கின்றனர்.
நல்ல அதிர்ஷ்டத்திற்கான தேடுதல், ஐரோப்பிய நாடுகளிலும் பொதுவானதாக இருக்கிறது. எமிர் எஸ்டின் எவான்ஸுக்கு அளிக்கப்பட்ட நாட்டுப்புற வாழ்க்கையைப்பற்றிய ஆராய்ச்சிகள் (Studies in Folklife Presented to Emyr Estyn Evans) நமக்குத் தெரிவிக்கிறது: “அயர்லாந்தில் ஒரு வட்டாரத்தில் அல்லது பட்டணத்தில், சில குடியிருப்புகள் அல்லது புற வீடுகளில், குதிரைலாடங்கள் கதவுகளுடன் சேர்த்து அல்லது அவற்றின்மேல் கட்டப்படாமல் இருப்பதைக் காண்பது அபூர்வமாக இருக்கிறது.” அந்த நாட்டில் இன்னும் பொதுவானது என்னவென்றால், நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்படி படுக்கைகளுக்கும் கதவுகளுக்கும்மேல் தொங்கவிடப்பட்டிருக்கும் நாணல் சிலுவைகளாகும். மேலோட்டத்தில், அத்தகைய மூடநம்பிக்கைகளை அயர்லாந்தைச் சேர்ந்த அநேகர் பெரும்பொருட்டாகக் கருதுவதில்லை என கருத்துரையாளர்கள் சொல்கின்றனர். இருந்தாலும் சிலரே அவற்றை முழுமையாகப் புறக்கணிக்கிறார்கள்.
பாதுகாப்பிற்கான தேடுதல்
அத்தகைய மூடநம்பிக்கைகள் ஏன் கவர்ச்சியூட்டுகின்றன? அவை பாதுகாப்பிற்கான மக்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தியாக்க உதவுவதாகத் தோன்றுகின்றன. உண்மையில், தங்களுடைய வீடுகளில், அதைவிட இரவில் தெருக்களில் நடக்கும்போது எத்தனைபேர் பாதுகாப்பாக உணருகிறார்கள்? அதோடுகூட வாழ்க்கையை நடத்துவதற்கு, பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான அழுத்தத்தையும் கூட்டுங்கள். ஆம், “தொந்தரவுகளின் காலம்” என்று பைபிள் அழைக்கிற அந்தக் காலத்தில்தான் நாம் வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1, தி நியூ இங்லிஷ் பைபிள்) ஆகவே பாதுகாப்பிற்கான ஒரு பலமான ஆசையை மக்கள் கொண்டிருப்பது இயல்பானதாகவே இருக்கிறது.
ஆவியுலகக் கொள்கை மற்றும் மாயமந்திரத்தின் வெவ்வேறு வகைகள் பிரபலமாக இருக்கும் கலாச்சாரங்களில் இது குறிப்பாக அவ்வாறிருக்கலாம். இறந்தவர்களின் ஆவிகள் என்று ஊகிக்கப்பட்டவற்றிற்கான பயம் அல்லது ஒரு பகைவரின் சாபத்திற்கு இரையாவதற்கான பயம், ஒரு மந்திரப் பொருள் அல்லது ஒரு தாயத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு என்றழைக்கப்படும் ஒன்றைத் தவிர்க்கமுடியாததாகத் தோன்றச் செய்யலாம். எவ்விதமாக இருந்தாலும் சரி, தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “பெரும்பாலான மக்கள் தங்களைப் பாதுகாப்பற்றவர்களாகச் செய்யும் பயங்களைக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பைக் கொடுப்பதன்மூலம் மூடநம்பிக்கைகள் அத்தகைய பயங்களை மேற்கொள்ள உதவுகின்றன. தாங்கள் விரும்புவதைப் பெற்று, தொந்தரவைத் தவிர்க்கலாம் என்று அவை மக்களுக்கு நம்பிக்கையூட்டுகின்றன.”
தாயத்துகளின் போலியான சக்தி
எனவே, தாயத்துகள், மந்திரித்த கயிறுகள், மந்திரப் பொருட்களின் பல்வேறு வகைகளும் வடிவங்களும், உலகெங்கும் மக்களால் அணியப்பட்டு, கொண்டுச்செல்லப்பட்டு, காட்சியில் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மனிதனால் உண்டாக்கப்பட்ட மந்திரப் பொருள் ஒன்று எந்த உண்மையான பாதுகாப்பையும் கொடுக்க முடியும் என்று நம்புவது நியாயமாக இருக்கிறதா? பொதுவாகப் பயன்படுத்தப்படும் மந்திரப் பொருட்களில் பெரும்பாலானவை மொத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட வியாபாரப் பொருட்களாகும். ஒரு தொழிற்சாலையில் ஒன்றுசேர்த்து உருவாக்காக்கப்பட்ட ஏதோ ஒரு பொருள் மந்திரச் சக்திகளை உடையதாயிருக்கும் என நம்புவது நியாயவாதத்தையும் பொது அறிவையும் எதிர்ப்பதாக இல்லையா? மேலும், ஒரு நாட்டு வைத்தியனால் விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு மருந்துக்கலவைநீருங்கூட, சாதாரண பொருட்களால்—வேர்கள், மூலிகைகள், போன்றவற்றால்—செய்யப்பட்ட ஒரு கலவையே அல்லாமல் வேறொன்றுமல்ல. அப்படிப்பட்ட ஒரு கலவை ஏன் மந்திரத் தன்மைகளைக் கொண்டதாய் இருக்கும்? தவிர, தாயத்துகளைப் பயன்படுத்துகிற மக்கள், அவற்றைப் பயன்படுத்தாதவர்களைவிட அதிக நாட்கள் வாழ்வதாக—அல்லது அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக—ஏதாவது உண்மையான அத்தாட்சி இருக்கிறதா? அப்படிப்பட்ட மாயமந்திரப் பொருட்களை உண்டாக்குபவர்கள்தாமே நோய்க்கும் மரணத்திற்கும் இரையாவதில்லையா?
மக்களுக்கு உண்மையான பாதுகாப்பையும் தங்களுடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும் உணர்ச்சியையும் கொடுப்பதற்கு மாறாக, தாயத்துகளையும் மந்திரப் பொருட்களையும் மூடநம்பிக்கையுடன் பயன்படுத்துவது, உண்மையில் மக்கள் தங்களுடைய பிரச்னைகளைப் புத்தியுடன் கையாளுவதிலிருந்து தடுத்து, எல்லாவற்றையும் குணப்படுத்தும் ஒன்றாக அதிர்ஷ்டத்தை நோக்கி இருக்கும்படி உற்சாகப்படுத்துகிறது. தாயத்துகளின் சக்தியில் நம்பிக்கை வைப்பது அதைப் பயன்படுத்துபவருக்கு ஒரு பொய்யான பாதுகாப்புணர்ச்சியையும் கொடுக்கலாம். மதுபானத்தின் செல்வாக்கில் இருக்கும் ஒரு மனிதன், தன்னுடைய நரம்பியக்கங்களும் திறமைகளும் பழுதாகவில்லை என்று உரிமைபாராட்டலாம்; ஆனால் அவர் வண்டி ஓட்ட முயன்றால், தனக்கு அல்லது மற்றவர்களுக்குப் பெரும்பாலும் தீங்கைக் கொண்டுவருவது சாத்தியம். ஒரு தாயத்தின் சக்தியில் தன்னுடைய நம்பிக்கையைக் கொண்டிருக்கும் ஒருவரும், அதேவிதமாகவே தனக்குத் தீங்கிழைக்கக்கூடும். பாதுகாக்கப்படுகிறார் என்ற போலி எண்ணத்தின்கீழ் இருந்துகொண்டு, அவர் முட்டாள்தனமாகக் காரியங்களில் துணிந்திறங்கும் அல்லது ஞானமற்ற தீர்மானங்களை எடுக்கும் மனச்சாய்வைக் கொண்டிருக்கக்கூடும்.
தாயத்துகளின் சக்தியில் நம்பிக்கை வைப்பது, அவற்றைப் பயன்படுத்தும் இலட்சக்கணக்கானோருக்கு மறைவாக இருக்கும் இன்னும் மற்ற துயரார்ந்த அபாயங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஆபத்துக்கள் யாவை, மற்றும் தீங்கைத் தடுப்பதற்குச் சரியான வழி ஏதாவது இருக்கிறதா? பின்தொடரும் கட்டுரை இந்தக் கேள்விகளைக் கையாளும்.
[அடிக்குறிப்புகள்]
a வெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலஜியேட் டிக்ஷனரி “தாயத்து” என்பதை, “அணிந்திருப்பவரை (நோய் அல்லது பில்லிசூனியம் போன்ற) தீங்கிற்கு எதிராகப் பாதுகாக்க அல்லது அவருக்கு உதவும்படியாகப் பெரும்பாலும் ஒரு மந்திர வாசகம் அல்லது அடையாளத்தால் பொறிக்கப்பட்ட (ஓர் அணிகலனாக) ஒரு மந்திர சக்தியுடைய பொருளாக வரையறுக்கிறது.”