கடவுளுடைய சேவையில் வீட்டு ஞாபகத்தை சமாளிப்பது
இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம்: “போய், சகல ஜாதிகளையும் சீஷராக்”குங்கள் என்று கட்டளையிட்டார். (மத்தேயு 28:19) அந்தக் கட்டளையை நிறைவேற்றுவதென்பது அநேக கிறிஸ்தவர்களுக்கு வீட்டைவிட்டு வெகு தூரம் சென்று கடினமான சூழ்நிலைமைகளை ஏற்றுக்கொள்வதாக இருந்திருக்கிறது. கடவுளுடைய சேவையினிமித்தம் பயணக் கண்காணிகளும், அவர்களுடைய மனைவிகளும், மற்றவர்களும் பல்வேறு காரியங்களை விட்டு வருகிறார்கள். இப்பேர்ப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுக்கு வீட்டு ஞாபகம் உண்மையிலேயே ஒரு சவாலாக இருக்கலாம்.
முன்பு அனுபவித்துமகிழ்ந்த பாதுகாப்பையும் பாசத்தையும் யோசிக்கத் துவங்கியவுடன், வீட்டு ஞாபகம் வருகிறது. நீங்கள் மனம் நொந்துபோய், எதையும் செய்ய முடியாத அளவிற்கு உணர்ச்சிகளைப் பெரிதும் இது பாதிக்கக்கூடும். உண்மையில் சொன்னால், தங்களுடைய உடைமைகளை விற்று, அதிக செலவுசெய்து அயல் நாட்டிற்கு சென்றபிறகும், சிலர் போட்ட திட்டங்களையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, வீடு திரும்பியிருக்கிறார்கள். வீட்டு ஞாபகம் அவர்களை ஆட்கொண்டது.
முதல் முறையாக மாறிப்போகும்போது, அவ்வாறு உணர்ச்சிகள் அடிக்கொருதரம் பாதிக்கப்படுவது சகஜம்தான். ஆனால், சிலர் வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்படுகிறார்கள். 20 வருஷங்களுக்கும் மேலாக பிரிந்திருந்த பிறகு, யாக்கோபு ‘தன் தகப்பனுடைய வீட்டின்மேல் வாஞ்சையாயிருந்தார்.’ (ஆதியாகமம் 31:30) வீட்டு ஞாபகத்தினால் யாரெல்லாம் அவதிப்படும்படி எதிர்பார்க்கலாம்? அதை எது தூண்டிவிடுகிறது? அப்படிப்பட்ட உணர்ச்சிகளை ஒரு நபர் எவ்வாறு சமாளிக்கலாம்?
சோகத்தை எது தூண்டிவிடுகிறது?
வீட்டு ஞாபகம் யாரையும் பாதிக்கும். மேதிய அரசனாகிய ஆஸ்டீயாகஸுடைய மகளாகிய ஆமீடஸுக்கு சந்தோஷமாயிருக்க எல்லா காரணமும் இருந்திருக்கக்கூடும். அவளுக்கு செல்வமும் கெளரவமும் அழகான வீடும் இருந்தன. ஆனால் மேதிய மலைகளுக்கான ஞாபகம் அவளுக்கு மிதமிஞ்சி இருந்ததால், தேற்றவேண்டி, அவளுடைய கணவனாகிய நேபுகாத்நேச்சார் அரசன், அவளுக்காக பாபிலோனில் தொங்கும் தோட்டத்தைக் கட்டினான்.
ஒரு நபருக்கு தான் இடம் மாறுவதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் வாழ்க்கை அதிக கஷ்டமாக தோன்றினால், வீட்டு ஞாபகம் விசேஷமாய் சோதிப்பதாக இருக்கலாம். யூதேய மக்கள் நாடு கடத்தப்பட்டபோது, “பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம். கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?” என்று புலம்பினார்கள்.—சங்கீதம் 137:1, 4.
அநேக காரியங்கள் வீட்டு ஞாபகத்தினால் உண்டாகும் துயரைக் கிளறிவிடும். கனடாவை விட்டுவந்த டெர்ரி சொல்கிறாள்: “ஒரு நாள் ஒரு புத்தகத்திலிருந்து குடும்ப படம் கீழே விழுந்தது. அதை எடுத்தவுடன், வீட்டு ஞாபகம் வெள்ளம்போல என்னை அப்படியே சூழ்ந்துகொண்டது. நான் அழத் தொடங்கினேன்.” இங்கிலாந்தைவிட மிகவும் ஏழ்மையான நாட்டிற்கு மாறிச்சென்ற கிறிஸ் என்பவர், “ஒரு பழைய பாட்டின் ராகம் அல்லது வீட்டில் சமைக்கிற மாதிரி தயாரிக்கப்பட்ட பதார்த்தத்தின் கமகமவென்ற வாசனைத்தானே, விட்டுவந்தவற்றிற்கான ஏக்கத்தை எனக்குத் தரும்,” என்று ஒத்துக்கொள்கிறார்.—எண்ணாகமம் 11:5-ஐ ஒத்துப்பாருங்கள்.
அநேகமாக, நெருக்கமான குடும்ப பந்தங்கள் காரணிகளாகத் திகழ்கின்றன. இப்போது அண்டை நாட்டில் வசித்துவரும் பிரேஸிலிய பெண்ணாகிய ரோஸாலி என்பவள் குறிப்பிடுகிறாள்: “வீட்டிலிருந்து துர்ச்செய்தி வரும்போது, என்னால் அங்கிருந்து உதவமுடியவில்லையே என்று நினைத்து நான் மனமுடைந்து போய்விடுகிறேன். சில நேரங்களில் வீட்டிலிருந்து எந்த செய்தியும் கிடைக்காதபோது, நான் காரியங்களை கற்பனை செய்து பார்க்கத் துவங்குவது நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.” ஜேனஸ் வட அமெரிக்காவிலிருந்து அமேசானிய உஷ்ண பிரதேசங்களிலுள்ள ஒரு சிறிய ஊருக்கு மாறிச்சென்றாள். அவள் சொல்கிறாள்: “வீட்டிலிருந்து சந்தோஷமான செய்தி வந்தவுடன், எனக்கு வீட்டு ஞாபகம் வந்துவிடுகிறது. அவர்கள் ஜாலியாக இருப்பதைக் கேள்விப்படும்போது, நானும் அங்கிருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று நினைக்கத் துவங்குகிறேன்.”
ஆட்களை விட்டுப் பிரிந்திருப்பதுதானே வீட்டு ஞாபகத்திற்கு காரணமல்ல. லின்டா விளக்கமாக சொல்கிறாள்: “எனக்கு வேண்டிய பொருட்களை எங்கே வாங்குவது என்று தெரியவில்லையென்றால் நான் நொந்துவிடுவேன். விலைகளும் தெரியாது, பேரம் பேசவும் எனக்குத் தெரியாது. ஒரு காரை சொந்தமாக வாங்கலாமென்றால் விலை அபாரமாக இருக்கிறது. இதனால் ஜேஜே-என்று கூட்டமாக இருக்கும் பொதுப் போக்குவரத்து வண்டியில் முண்டியடித்து ஏறினால், என்னை எப்போதும் நெருக்கித் தள்ளிவிடுகிறார்கள். இதுவே போதும், வீட்டு நினைப்பு வந்துவிடுகிறது.” பண்பாட்டு ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் உள்ள இடைவெளியைப் பற்றி குறிப்பிடுபவளாய், ஜேனட் சொல்கிறாள்: “ஏழ்மைதானே என்னை நிலைகுலையச் செய்தது. ஆட்கள் ரொட்டிக்காகப் பிச்சையெடுப்பதையோ தண்ணீரில்லாமல் பெரிய குடும்பத்தில் எல்லாரும் ஒரே ரூமில் இருப்பதையோ நான் முன்னொருபோதும் பார்த்ததே கிடையாது. . . . இப்படிப்பட்ட காரியங்கள் என்னை அவ்வளவு வருத்தியதால், இனிமேலும் என்னால் அங்கு வாழ முடியாது என்று நான் நினைத்தேன்.”
உங்கள் உணர்ச்சிகளை சமாளிப்பது
நாம் நேசிக்கிற ஆட்களுக்காகவோ பழகிப்போன வளர்ப்புச் சூழல்களுக்காகவோ அளவுகடந்து உணர்ச்சிவசப்படுவதைப்பற்றி வெட்கப்படவே வேண்டாம். அன்பான தனிப்பட்ட உறவுகளை மகிழ்ந்து களிக்கவே யெகோவா தேவன் நமக்கு உணர்ச்சிகளைக் கொடுத்தார். எபேசு சபையிலிருந்த கிறிஸ்தவ கண்காணிகள் உணர்ச்சி ரீதியில் முதிர்ச்சிவாய்ந்த மனிதர்களாக இருந்தார்கள். ஆனால் பவுல் அப்போஸ்தலனின் சந்திப்பு முடிவடையும் தறுவாயில், என்ன நடந்தது? ஏன், “அவர்களெல்லாரும் மிகவும் அழுது, . . . பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்”தார்கள்! (அப்போஸ்தலர் 20:37, 38) வீட்டு ஞாபகத்தின் காரணமாக அந்தச் சம்பவம் நடக்கவில்லை என்பது வாஸ்தவம்தான். ஆனால் அது நம்முடைய மனதுக்கு உணவளிக்கிறது. உணர்ச்சிகள் உள்ளவர்களாயிருப்பது சகஜம்தான், ஆனால் அவை நம்மை ஆட்டிப்படைக்காதபடி பார்த்துக்கொள்ளவேண்டும். அப்படியென்றால், வீட்டு ஞாபகத்தை வெற்றிகரமாக எவ்வாறு உங்களால் சமாளிக்க முடியும்?
உள்ளூர் மொழியை பேசக் கற்றுக்கொள்வது அமைதலான உணர்வை அளிப்பதற்கு முக்கியமாயிருக்கிறது. பேச்சுத்தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதென்றால் வீட்டைப் பற்றிய ஞாபகம் அடிக்கடி வரலாம்; ஏனென்றால் நீங்கள் அந்நிய மொழியில் பேசவேண்டியதாயிருக்கிறது. ஆகையால், வேறொரு பிராந்தியத்திற்கு செல்லுமுன், அந்த இடத்தின் மொழியை வாசிக்கவும் பேசவும் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்படி முடியவில்லையென்றால், மாறிச்சென்றவுடன் முதல் சில வாரங்கள் மொழியைக் கற்றுக்கொள்வதில் முழுமுயற்சியுடன் இறங்குங்கள். அப்போதுதான் அதை ஜரூராகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்; இதனால், அதைக் கற்றுக்கொள்வதற்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது. இந்த வாரங்களை முக்கியமாக மொழியைக் கற்றுக்கொள்வதற்காக அர்ப்பணிப்பீர்களென்றால், வெகு சீக்கிரத்தில் நீங்கள் பலரோடு பேசத் துவங்கிவிடுவீர்கள்; வீட்டு ஞாபகமெல்லாம் பறந்துபோய்விடும்.
கூடிய சீக்கிரத்தில் புதிய நண்பர்களை உண்டாக்கிக்கொள்ளுங்கள்; இதனால் வீட்டிலிருப்பதுபோல உணருவீர்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய சபைதான் உண்மையான நண்பர்களைக் கண்டடைவதற்கான சிறந்த இடம். நீங்களாகவே போய் பேசுங்கள். மற்றவர்கள்பேரில் அக்கறையுள்ளவர்களாயிருங்கள். அவர்களுடைய வளர்ப்புச்சூழல், அவர்களுடைய குடும்பம், அவர்களுடைய பிரச்னைகள், மேலும் அவர்களுடைய நாட்டங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளப் பாருங்கள். உடன் விசுவாசிகளை உங்களுடைய வீட்டிற்கு வரச்சொல்லுங்கள். இதன் மூலம், மற்றவர்களும் உங்கள்மீது அக்கறைகொள்வதை நீங்கள் காண்பீர்கள்.
நட்புறவுகள் கடவுளுடைய மக்கள் மத்தியில் குடும்ப பந்தத்தைப்போல அவ்வளவு பிணைப்பதாக இருக்கலாம். இயேசு சொன்னார்: “தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான்.” (மாற்கு 3:35) கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம், “என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான்” என்றுங்கூட உறுதியளித்தார். (மாற்கு 10:29, 30) அப்படிப்பட்ட அருமையான ஆவிக்குரிய சகோதரத்துவத்தோடு, ஒரு புதிய நாட்டிலும் நாம் தனிமையில் இல்லை.
வீட்டிலுள்ளவர்களோடு நட்புறவுகளைக் காத்துக்கொள்வதும் வீட்டு ஞாபகத்தை சமாளிக்க துணைபுரியும். நீங்கள் இடம் மாறி சென்றிருப்பதால், கடிதம் மூலம் தொடர்புகொள்வது இப்போது விசேஷ அர்த்தமுடையதாயிருப்பதைக் காண்பது உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடும்; ஏனென்றால் வார்த்தைகளுக்கு ஒருவேளை நீங்கள் பெருமளவு கவனம் செலுத்துவீர்கள். சொல்வதற்கு சந்தோஷத்தில் ஆழ்த்தும் விஷயங்கள் கட்டாயமாக இருக்கும். முன்பு குறிப்பிடப்பட்ட ஜேனட் ஆலோசனையாகக் கூறுகிறாள்: “தூரத்தில் இருப்பவர்களுக்கு போன் செய்வது அதிக செலவாகும். ஆனால் தபால் மூலம் பதிவுசெய்த காசட்டை அனுப்பினால், ஓரளவு கம்மிதான். ஓர் இயந்திரத்திடம் பேசுவது முதலில் விநோதமாக இருக்கும். ஆனால் நீங்கள் யாரோடாவது மைக்கில் பேசினால், அது சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.” ஒரு காசட்டில் அவர்களும் பதிவுசெய்து திரும்ப அனுப்புமாறு கேட்டுக்கொள்ளலாம்.
ஐக்கிய மாகாணங்களிலிருந்து லத்தீன் அமெரிக்காவுக்கு 25 வருஷங்களுக்கு முன்பு மாறிச்சென்ற ஷெர்லி கூறுகிறாள்: “பிரச்னைகளைவிட நான் எப்போதும் கட்டியெழுப்பும் அனுபவங்களை எழுதுவதுண்டு. இது மற்றவர்கள் எனக்குத் தொடர்ந்து எழுதும்படி ஊக்குவிக்கிறது.” ஆனால் கவனமுள்ளவர்களாயிருங்கள். எப்பொழுது பார்த்தாலும் கடிதம் எழுதுவது புதிய நண்பர்களை உண்டாக்குவதிலிருந்து உங்களைத் தடைசெய்யும். கனடாவிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மாறிச்சென்ற டெல் என்பவர் சொல்கிறார்: “வீட்டிலிருந்துகொண்டு எதையெல்லாம் இழக்கிறீர்கள் என்று நினைத்து நினைத்து ஏங்குவதை தவிர்த்துவிடுங்கள். அதற்கு மாறாக, வீட்டைவிட்டு வெளியே போய் உங்களுடைய புதிய இடத்தை ரசித்துமகிழுங்கள்.”
புதிய நாட்டின் பழக்கவழக்கங்கள், வரலாறு, சிரிக்க வைக்கும் விஷயங்கள், அக்கறையூட்டும் இடங்களையும் கண்ணுக்கினிமையான இடங்களையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இது அநாவசியமான காரியங்களை யோசிப்பதிலிருந்து உங்களைக் காக்கும். மாறிச்சென்ற இடத்திலேயே இருக்கவேண்டும் என்று உத்தேசித்தால், வெகு சீக்கிரத்திலோ அடிக்கடியோ உங்களுடைய தாய் நாட்டை விஜயம் செய்யாமல் இருப்பது நல்லது. புதிய நட்புகளை உருவாக்குவதற்கும் புதிய சூழல்களுக்கு பழக்கமாவதற்கும் காலமெடுக்கும். அடிக்கடி வீட்டிற்கு செல்வது அந்தக் காரியக்கிரமத்தை தடைசெய்யும். புதிய வீட்டில் ஸெட்டில் ஆன பின்பு, உங்களுடைய பழைய வீட்டிற்கு நீங்கள் ஹாயாக போய் விஜயம் செய்துவிட்டு வரலாம். அதுவரை, புதிய வீடு உங்களுக்கு பிடித்துப்போக செய்வதில் மும்முரமாயிருங்கள்.
தொடர்ந்து எதிர்நோக்கியிருங்கள்
யெகோவா இந்த முழுப் பூமியையும் நமக்கு வீடாகக் கொடுத்தார். (சங்கீதம் 115:16) சந்தோஷமுள்ள கிறிஸ்தவ மனப்பான்மையிருந்தால், எந்த நாட்டிலும் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கும் நற்செய்தியை பிரசங்கிப்பதற்கும் வேறொரு நாட்டிற்கோ உங்களுடைய தாய்நாட்டிலேயே வேறொரு இடத்திற்கோ மாறிச்சென்றால், சந்தோஷமுள்ள எதிர்பார்ப்போடு செல்லுங்கள். புதிய நண்பர்களை உருவாக்குவது, வித்தியாசப்பட்ட பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்வது, சீஷராக்குவது, அல்லது கடவுளுடைய சேவையில் பலன்தரும் காரியங்களில் ஈடுபடுவது ஆகியவற்றை ஆவலோடே எதிர்நோக்கியிருங்கள்.
நீங்கள் எங்கிருந்தாலுஞ்சரி, யெகோவா தேவன் எப்போதும் உங்களோடேகூட இருக்கும் நண்பராயிருப்பார். (சங்கீதம் 94:14; 145:14, 18) ஆகவே அவரோடு ஜெபத்தில் நெருங்கிய தொடர்புகொள்ளுங்கள். (ரோமர் 12:12) கடவுளுடைய ஊழியராக வாழ்க்கையின் நோக்கத்தை மனதில் வைக்க இது உங்களுக்கு உதவும். ஊர் என்ற நகரத்திலிருந்த செளகரியமான வீட்டை விட்டுவந்தபோது, ஆபிரகாமும் சாராளும் தங்களுடைய நோக்கத்தை மனதிற்கொண்டார்கள். அவர்கள் யெகோவாவின் கட்டளைக்கு கீழ்ப்படியும் வண்ணம், உற்றார் உறவினரை விட்டுவந்தார்கள். (அப்போஸ்தலர் 7:2-4) விட்டுவந்த இடத்தை நினைத்து அவர்கள் ஏக்கமாயிருந்திருப்பார்களென்றால், திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். அவர்களோ மேன்மையான இடத்தை நாடினார்கள்; முடிவில், கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் பரதீஸிய பூமியில் கிடைக்கும் ஜீவனை அவர்கள் நாடினார்கள்.—எபிரெயர் 11:15, 16.
அயல் நாடுகளிலோ உங்களுடைய தாய்நாட்டில் ராஜ்ய அறிவிப்பாளர்கள் அதிகம் தேவைப்படுகிற இடத்திலோ பிரசங்கிப்பது பெரிய சவாலாக இருக்கும். அதேசமயத்தில் அது நன்மைபயக்கும் மிகவும் பலன்தரும் வேலையாகவும் இருக்கும். (யோவான் 15:8) தற்காலிகமாக அநாவசியமான யோசனைகள் உங்களைச் சூழ்ந்துகொள்ளுமானால், உங்களுடைய இலக்கை மனதில் வைத்து ஆவலோடு எதிர்பார்த்திருப்பதன் மூலம் அவற்றை மேற்கொள்ளலாம். கல்யாணமாகாத மிஷனரி சகோதரி சொன்னாள்: “நான் விசனமாக உணர்ந்தால், புதிய உலகைப்பற்றியும் எவ்வாறு முழு மனிதவர்க்கமும் ஒரே குடும்பமாக இருக்கப்போகிறது என்பதையும் நினைக்கத் துவங்கிவிடுவேன்.” இப்படிப்பட்ட இதமான எண்ணங்கள், வீட்டு ஞாபகத்திற்கு நீங்கள் ஆளாகாமல், உங்களுடைய சந்தோஷத்தைத் தக்கவைக்கும்.
[பக்கம் 29-ன் படம்]
வீட்டு ஞாபகம் கிறிஸ்தவ ஊழியத்தைத் தடைசெய்யவேண்டிய அவசியமில்லை