மரித்தோரைப் பற்றிய பயம் பரவலாக உள்ளது
சூரியன் அஸ்தமித்து வெகு நேரமாகிவிட்டது. விரும்புவதைவிட சற்று தாமதமாக நீங்கள் வீடு திரும்பிக்கொண்டிருக்கிறீர்கள். உள்ளூர் கல்லறைத் தோட்டத்தை நீங்கள் கடந்துவரும்போது, உங்கள் இருதயம் சற்று வேகமாக அடித்துக்கொள்ள ஆரம்பிக்கிறது. இருளான இரவின் மயான அமைதியில் மிகச் சிறிய சத்தமும் உங்களுக்குக் கேட்கிறது. திடீரென்று தூரத்தில் காதைத் துளைக்கின்ற, திடுக்கிட வைக்கும் ஒரு சப்தத்தை கேட்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்புக்காக வீட்டை நோக்கி வேகமாக நடந்துசெல்கிறீர்கள்—உங்கள் நாடி வேகமாகத் துடிக்கிறது.
ஒரு கல்லறைத் தோட்டத்தில் அல்லது அதற்கு அருகாமையில் இருக்கும்போது பதற்றமான உணர்ச்சிகளை நீங்கள் எப்போதாவது அனுபவித்ததுண்டா? அப்படியானால், உலகம் முழுவதிலும் பொதுவாக இருந்துவரும் மதசம்பந்தமான ஒரு கருத்து உங்களைப் பாதித்திருக்கலாம்—மரித்தோரின் ஆவிகள் உயிரோடிருப்பவர்களுக்கு உதவிசெய்யவோ தீங்கு செய்யவோ முடியும் என்பதே.
மரித்தோருக்கு உயிரோடிருப்பவர்களின் உதவிதேவை அல்லது அவர்கள் சாந்தப்படுத்தப்படாவிட்டால், உயிரோடிருப்பவர்களுக்கு தீங்கு செய்யக்கூடும் என்ற நம்பிக்கையின் விளைவாக, ஆதாரமற்ற பயத்தை அடிப்படையாகக் கொண்ட அநேக பழக்கவழக்கங்கள் தோன்றியிருக்கின்றன. உதாரணமாக சில லத்தீன் அமெரிக்க தேசங்களில், விபத்தில் மாண்ட ஒரு நபருக்கு, சிலுவையைக் கொண்ட சிறிய ஒரு வசிப்பிடத்தை எழுப்பும் பழக்கம் அநேகருக்கு உண்டு. அங்கு மக்கள் மெழுகுவர்த்திகளைக் கொளுத்தி மலர்களை வைத்து மரித்த நபரின் ஆத்துமா அல்லது ஆவியில் அக்கறைக் காட்ட அல்லது அதற்கு உதவிசெய்ய முயற்சி செய்கின்றனர். சில சமயங்களில், பிரார்த்தனைக்குக் கிடைத்த “அற்புதமான” பதில்களைப் பற்றிய அறிக்கைகள் பரப்பப்படுவதால், மரித்த தனிநபரின் ஆத்துமா அல்லது ஆவியின் சிறிய வசிப்பிடமாகிய அனிமிட்டா இருக்கும் இடத்துக்கு மக்கள் அடிக்கடி செல்ல ஆரம்பிக்கின்றனர். அங்கே, மரித்த நபர் எதையாவது செய்துமுடிக்க அல்லது பெற்றுக்கொள்ள—ஒரு வேளை அற்புதமாக சுகம்பெற—அவர்களுக்கு உதவிசெய்தால் தங்கள் நன்றியறிதலை விசேஷமான ஒரு விதத்தில் காண்பிப்பதாக மண்டாஸ் செய்கிறார்கள் அல்லது நேர்ந்துக்கொள்கிறார்கள். மறுபட்சத்தில், அந்த நபரின் ஆத்துமா இரவின் இருளில் தோன்றி அங்கிருப்பவர்களை திகிலடையச்செய்வதாக அறிக்கைச் செய்யப்படலாம். கடந்த கால சம்பவங்களின் காரணமாக அப்படிப்பட்ட ஆத்துமாக்கள் உயிரோடிருப்பவர்களை தொந்தரவுச் செய்யும் பென்னான்டோ என்று பொதுவாகச் சொல்லப்படுகின்றன.
அநேக தேசங்களிலுள்ள மக்கள் மரித்தோரின் “ஆவிகளைச்” சாந்தப்படுத்துவதற்காக பெரும் பாடுபடுகின்றனர். ஆடம்பரமான விருந்துகள் செய்யப்படுகின்றன, பலிகள் செலுத்தப்படுகின்றன, ஆறுதலான வார்த்தைகள் பேசப்படுகின்றன—மரித்த ஆட்களின் ஆவிகளினால் பழிவாங்கப்படுவதை தவிர்ப்பதற்கான முயற்சியில் இவை அனைத்தும் செய்யப்படுகின்றன. ஆவியை சமாதானம் செய்வது பின்னால் விட்டுச்செல்லப்பட்டவர்களுக்கு வெகுமானங்களையும் ஆசீர்வாதங்களையும் கொண்டுவரும் என்பதாக நம்பப்படுகிறது.
“எந்த ஒரு சம்பவமும் ‘சாதாரணமாக அல்லது இயல்பாக’ நடைபெறுவதில்லை என்பதாக அநேகர் நம்புகின்றனர்,” என்பதாக ஆப்பிரிக்காவிலிருந்து வரும் ஓர் அறிக்கைச் சொல்கிறது. “எந்த ஒரு நிகழ்ச்சியும்—வியாதி, நாசம், மலடு, பொருளாதார கஷ்டம், அளவுக்கு அதிகமான மழை அல்லது வெயில், விபத்துக்கள், குடும்பத்தில் பிரிவினை, மரணம் போன்ற எதுவாக இருந்தாலும்—மீமானிட சக்திகளையுடைய காணக்கூடாத ஆவிகளே அவற்றை செய்வதாக நம்பப்படுகிறது.” மற்றொரு அறிக்கைச் சொல்கிறது: “தங்கள் மூதாதையர்களின் ஆவிகள் பரலோகத்தில் ஓரிடத்தைக் கொண்டிருப்பதாகவும் பூமியில் இன்னும் உயிரோடிருக்கும் உறவினர்களை விழிப்பாக கண்காணித்துவருவதாகவும் மக்கள் நம்புகிறார்கள். மூதாதையர்கள் கொண்டிருப்பதாக நம்பப்படுகிற இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பயன்படுத்தி, மரித்தோரை உறவினர்கள் கனப்படுத்துவதை அல்லது அசட்டை செய்வதைப் பொறுத்து, இந்த மூதாதையர்கள் பூமியிலுள்ள தங்கள் உறவினர்களை ஆசீர்வதிக்கவும் பாதுகாக்கவும் அல்லது அவர்களைத் தண்டிக்கவும் முடியும்.”
ஆனால் இது கடவுளுடைய வார்த்தையோடு இணக்கமாக இருக்கிறதா? உங்கள் கருத்து என்ன?
[பக்கம் 4-ன் படம்]
சிலியில் ஒரு “அனிமிட்டா”