இயேசுவைப் போல நீங்களும் போதிக்கிறீர்களா?
“அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.”—மத்தேயு 7:28, 29.
1. இயேசு கலிலேயாவில் போதித்தபோது, யார் அவருக்குப் பின்சென்றார்கள், இயேசுவின் பிரதிபலிப்பு என்னவாக இருந்தது?
இயேசு எங்கு சென்றாலும் ஜனக்கூட்டத்தார் அவரிடமாக திரண்டு வந்தார்கள். “இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெபஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.” அவருடைய செயல்களைப் பற்றிய அறிக்கை பரவினபோது, “கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.” (மத்தேயு 4:23, 25) அவர்களை அவர் கண்டபோது, “அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி”னார். அவர் போதித்தபோது, தங்கள் பேரிலிருந்த அவருடைய மனஉருக்கத்தை அல்லது மென்மையான பாசத்தை அவர்களால் உணரமுடிந்தது; அவரிடமாக அவர்களைக் கவர்ந்திழுத்தது, அவர்களுடைய காயங்களை ஆற்றும் மருந்து போன்றிருந்தது.—மத்தேயு 9:35, 36.
2. இயேசுவினுடைய அற்புதங்களோடுகூட, திரளான ஜனக்கூட்டத்தைக் கவர்ந்திழுத்தது என்ன?
2 என்னே அற்புதமான சரீர குணப்படுத்துதல்களை இயேசு நடப்பித்தார்—குஷ்டரோகிகள் சுத்தமாகின்றனர், செவிடர் கேட்கின்றனர், குருடர் பார்வையடைகின்றனர், முடவர்கள் நடக்கின்றனர், மரித்தோர் உயிர்பெற்று வருகின்றனர்! நிச்சயமாகவே இயேசுவின் மூலமாக செயல்பட்டுக்கொண்டிருந்த யெகோவாவினுடைய வல்லமையின் இந்த பிரமிக்கத்தக்க நடவடிக்கைகள் திரளான எண்ணிக்கையில் ஜனக்கூட்டத்தை கவர்ந்திழுக்கும்! ஆனால் அவர்களைக் கவர்ந்தது அற்புதங்கள் மாத்திரமே அல்ல; இயேசு போதித்தபோது அளித்த ஆவிக்குரிய குணப்படுத்துதல்களுக்காகவும்கூட திரளான ஜனக்கூட்டம் வந்தது. உதாரணமாக பிரசித்திப் பெற்ற மலைப்பிரசங்கத்தைக் கேட்ட பிற்பாடு அவர்களுடைய பிரதிபலிப்பை கவனியுங்கள்: “இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” (மத்தேயு 7:28, 29) அவர்களுடைய ரபீக்கள் தங்களுடைய போதகங்களுக்கு ஆதாரமாக பண்டைய ரபீக்களின் வாய்மொழி பாரம்பரியங்களை மேற்கோள் காட்டினார்கள். இயேசு கடவுளிடமிருந்து வந்த அதிகாரத்தோடு அவர்களுக்குப் போதித்தார்: “நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்.”—யோவான் 12:50.
அவருடைய போதனை இருதயத்தைச் சென்றெட்டியது
3. இயேசு அவருடைய செய்தியை அளித்தவிதம் எவ்விதமாக வேதபாரகர் மற்றும் பரிசேயருடையதிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது?
3 இயேசுவினுடைய போதனைக்கும் வேதபாரகர் மற்றும் பரிசேயருடைய போதனைக்குமிடையே உள்ள வித்தியாசமானது வெறும் அப்போதனையின் பொருளடக்கத்தில் மட்டும் அல்ல—மனிதர்களிடமிருந்து வந்த பாரமான வாய்மொழி பாரம்பரியங்களுக்கு எதிர்மாறாக கடவுளிடமிருந்து வந்த சத்தியங்களைப் போதித்தது மட்டும் அல்ல—அவை போதிக்கப்பட்ட விதத்திலும் வித்தியாசம் இருந்தது. வேதபாரகரும் பரிசேயரும் கர்வமுள்ளவர்களாகவும் கொடூரமானவர்களாகவும் உயர்வான பட்டப்பெயர்களை அகந்தையோடு வற்புறுத்துகிறவர்களாகவும் இருந்து ஜனக்கூட்டத்தை “சபிக்கப்பட்டவர்கள்” என்பதாக அலட்சியமாக நடத்தினார்கள். ஆனால் இயேசு மனத்தாழ்மையுள்ளவராக, சாந்தமுள்ளவராக, தயவுள்ளவராக, அனுதாபமுள்ளவராக, அடிக்கடி இசைந்துக்கொடுக்கும் மனச்சாய்வுள்ளவராக இருந்தார். மேலும் அவர்களுக்காக அவர் மனதுருகுபவராக இருந்தார். இயேசு சரியான வார்த்தைகளை மாத்திரமல்ல, ஆனால் தம்முடைய இருதயத்திலிருந்து வந்த மனதைக் கவரும் வார்த்தைகளைப் பேசினார், இது கேட்போரின் இருதயத்திற்குள் நேரடியாகச் சென்றது. சந்தோஷமான அவருடைய செய்தி மக்களை அவரிடமாக கவர்ந்திழுத்தது, அவர் பேசுவதைக் கேட்பதற்கு ஆலயத்திற்கு சீக்கிரமாக வரச்செய்தது, அவரை நெருக்கமாக பின்தொடர்ந்துகொண்டு, மகிழ்ச்சியோடு அவருக்குச் செவிகொடுக்கும்படியாக அவர்களைச் செய்தது. அவர் பேசுவதைக் கேட்பதற்கு மிகத் திரளான எண்ணிக்கையில் ஜனங்கள் வந்து, இவ்வாறு அறிவித்தனர்: “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை.”—யோவான் 7:46-49; மாற்கு 12:37; லூக்கா 4:22; 19:48; 21:38.
4. இயேசுவின் பிரசங்கிப்பில் அநேக ஆட்களைக் கவர்ந்திழுத்தது என்ன?
4 நிச்சயமாகவே, அவர் உதாரணங்களைப் பயன்படுத்தி பேசியது, மக்கள் அவருடைய போதனையினிடமாக கவர்ந்திழுக்கப்பட்டதாக உணர்ந்ததற்கு ஒரு காரணமாகும். மற்றவர்கள் பார்த்தவற்றை இயேசு பார்த்தார், ஆனால் அவர்களுடைய மனதில் தோன்றாத காரியங்களைப்பற்றி அவர் யோசித்தார். வயலில் லில்லிப் பூக்கள் வளருவது, பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டுவது, மனிதர் தானியத்தை விதைப்பது, மேய்ப்பர்கள் காணாமற்போன ஆடுகளைக் கண்டுபிடித்துக் கொண்டுவருவது, பழைய வஸ்திரங்களில் பெண்கள் ஒட்டுப்போட்டு தைப்பது, சந்தைவெளிகளில் பிள்ளைகள் விளையாடுவது, மீனவர் தங்கள் வலைகளை இழுப்பது—அனைவரும் பார்க்கும் சாதாரணமாக காணப்படும் காரியங்கள்—இயேசுவின் பார்வையில் ஒருபோதும் சாதாரணமாக இருக்கவில்லை. அவர் எங்குபார்த்தாலும், கடவுளையும் அவருடைய ராஜ்யத்தையும் விளக்குவதற்கு அல்லது தம்மைச் சுற்றியிருந்த மனித சமுதாயத்தைப் பற்றிய ஒரு குறிப்பைச் சொல்வதற்கு தாம் பயன்படுத்தக்கூடியவைகளை அவர் கண்டார்.
5. இயேசு தம்முடைய உதாரணங்களுக்கு எதை அடிப்படையாகக் கொண்டிருந்தார், அவருடைய உவமைகளை திறம்பட்டதாக்கியது என்ன?
5 இயேசுவின் உதாரணங்கள் மக்கள் பல தடவைகள் பார்த்திருக்கும் அன்றாடக காரியங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன, பழக்கப்பட்ட இந்தக் காரியங்களோடு சத்தியங்கள் சம்பந்தப்படுத்தப்படுகையில், செவிகொடுப்போரின் மனங்களுக்குள் அவை வேகமாகவும் ஆழமாகவும் பதிந்துவிடுகின்றன. இப்படிப்பட்ட சத்தியங்கள் வெறுமென கேட்கப்படாமல், மனக்கண்களால் பார்க்கப்பட்டு பின்னால் எளிதில் நினைவுகூரப்படுகின்றன. இயேசுவின் உவமைகளின் தனித்தன்மை எளிமையாக இருந்தது, இடையில் குறுக்கிட்டு சத்தியங்களை அவர்கள் புரிந்துகொள்வதைத் தடைசெய்யக்கூடிய அவசியமற்ற தகவலால் குழப்பம் இருக்கவில்லை. உதாரணமாக, இரக்கம் காட்டிய சமாரியன் உவமையை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நல்ல அயலான் யார் என்பதை நீங்கள் தெளிவாக பார்க்கிறீர்கள். (லூக்கா 10:29-37) இரண்டு குமாரர்களைப் பற்றிய உவமை இருக்கிறது—திராட்சத்தோட்டத்தில் வேலைசெய்வதாகச் சொல்லி ஆனால் செய்யாத ஒருவன், செய்ய மாட்டேன் என்று சொல்லி ஆனால் செய்த மற்றொருவன். உண்மையான கீழ்ப்படிதலின் முக்கியமான குறிப்பு என்ன என்பதை நீங்கள் விரைவில் காண்கிறீர்கள்—கொடுக்கப்பட்ட வேலையைச் செய்தல். (மத்தேயு 21:28-31) இயேசு உற்சாகமாக கற்பித்துக்கொண்டிருந்த போது எந்த மனமும் அரைத்தூக்கத்தில் அல்லது அலைபாய்ந்து கொண்டில்லை. அவர்களுடைய மனங்கள் கேட்பதிலும் பார்ப்பதிலும் சுறுசுறுப்பாக வைக்கப்பட்டிருந்தன.
அன்பின் அடிப்படையில் இயேசு இசைந்துகொடுத்தார்
6. நியாயமாக அல்லது இசைந்துகொடுப்பவராய் இருப்பது குறிப்பாக எப்போது பயனுள்ளதாயிருக்கிறது?
6 நியாயமாக இருப்பதைப் பற்றி அநேக சமயங்களில் பைபிள் பேசும்போது, அது இசைந்துகொடுப்பதை அர்த்தப்படுத்துகிறது என்று ஓர் அடிக்குறிப்பு காண்பிக்கிறது. ஒருவருடைய குற்றங்களை மன்னிப்பதற்கேதுவான சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கடவுளிடமிருந்து வரும் ஞானம் இசைந்துகொடுக்கிறது. நாம் நியாயமாக அல்லது சில சமயங்களில் இசைந்துகொடுப்பவராக இருக்கவேண்டும். அன்பு அதை ஆதரிக்கவும் மனந்திரும்புதல் இசைந்துகொடுப்பதைத் தகுதியானதாயும் செய்கையில் மூப்பர்கள் இசைந்துகொடுக்க மனமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். (1 தீமோத்தேயு 3:3; யாக்கோபு 3:17) இரக்கம் அல்லது கருணை தேவைப்படுத்துகையில் பொதுவான நியதிகளுக்கு விதிவிலக்குகளைச் செய்து, இயேசு இசைந்துகொடுப்பதற்கு மகத்தான முன்மாதிரிகளை வைத்தார்.
7. இயேசு இசைந்துகொடுப்பவராய் இருப்பதற்கு என்ன சில உதாரணங்கள் இருக்கின்றன?
7 இயேசு ஒரு சமயம் சொன்னார்: “மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.” ஆனால் பேதுரு மூன்று தடவைகள் அவரை மறுதலித்த போதிலும் அவர் பேதுருவை நிராகரித்துவிடவில்லை. மன்னிப்பதற்கேதுவான சந்தர்ப்ப சூழ்நிலைகளை இயேசு கவனத்தில் எடுத்துக்கொண்டார். (மத்தேயு 10:33; லூக்கா 22:54-62) உதிரப் போக்கினால் அசுத்தமாயிருந்த ஒரு பெண் ஜனக்கூட்டத்திற்குள் வந்து மோசேயின் நியாயப்பிரமாணத்தை மீறியது மன்னிப்பதற்கேதுவான சந்தர்ப்ப சூழ்நிலையாக இருந்தது. இயேசு அவளை கண்டனம் செய்யவில்லை. அவளுடைய நம்பிக்கை இழந்த நிலையை அவர் புரிந்துகொண்டார். (மாற்கு 1:40-42; 5:25-34; பார்க்கவும்: லூக்கா 5:12, 13.) இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களிடம் தன்னை மேசியா என்பதாக அடையாளங்காட்ட வேண்டாம் என்பதாக சொல்லியிருந்தார், என்றாலும் கிணற்றருகே சமாரியப் பெண்ணிடமாக தம்மை மேசியாவாக அடையாளப்படுத்தியபோது அவர் அந்தக் கட்டளையைக் கண்டிப்போடு பற்றிக்கொண்டிருக்கவில்லை. (மத்தேயு 16:20; யோவான் 4:25, 26) இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் அன்பும் இரக்கமும் கருணையும் இந்த இசைந்துக்கொடுத்தலை சரியானதாக்கிற்று.—யாக்கோபு 2:13.
8. வேதபாரகரும் பரிசேயர்களும் எப்போது விதிகளை மாற்றிக்கொள்வார்கள், எப்போது மாட்டார்கள்?
8 இசைந்துக்கொடுக்காத வேதபாரகர் மற்றும் பரிசேயர்களின் விஷயத்தில் வித்தியாசமாக இருந்தது. அவர்கள் தங்களைப் பற்றிய காரியங்களில், தங்களுடைய எருதுக்கு தண்ணீர் காட்ட தங்களுடைய ஓய்வுநாள் பாரம்பரியங்களை மீறுவார்கள். அல்லது தங்களுடைய எருது அல்லது தங்கள் குமாரன் கிணற்றிலே விழுந்துவிட்டால், அவனை வெளியே எடுக்க ஓய்வுநாளை மீறிவிடுவார்கள். ஆனால் பொது மக்களுக்கு அவர்கள் இசைந்துகொடுக்கவே மாட்டார்கள்! “தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் [தேவைகளை] தொடமாட்டார்கள்.” (மத்தேயு 23:4; லூக்கா 14:5) இயேசுவுக்கு பெரும்பாலான சட்டங்களைவிட மக்கள் அதிக முக்கியமானவர்களாக இருந்தார்கள்; பரிசேயர்களுக்கு மக்களைவிட சட்டங்கள் அதிகத்தை அர்த்தப்படுத்தின.
“கற்பனையின் குமாரன்” ஆவது
9, 10. எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது இயேசுவின் பெற்றோர் அவரை எங்கே கண்டனர், இயேசு வினாவியதனுடைய முக்கியத்துவம் என்ன?
9 இயேசுவின் பிள்ளைப்பருவத்து நிகழ்ச்சி ஒன்று மாத்திரமே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பதாக சிலர் வருத்தப்பட்டு சொல்கின்றனர். என்றபோதிலும் அநேகர் அந்த சம்பவத்தின் பெரும் முக்கியத்துவத்தை உணரத் தவறுகின்றனர். லூக்கா 2:46, 47-ல் அது நமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது: “மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள்.” இந்தச் சந்தர்ப்பத்தில் ‘வினாவு’வதற்கான கிரேக்க சொல், வெறுமென ஒரு சிறுவனின் ஆர்வமாக இருக்கவில்லை என்ற கருத்தை கிட்டலின் புதிய ஏற்பாட்டின் இறையியல் அகராதி கொடுக்கிறது. அந்த வார்த்தை நீதித்துறைச் சார்ந்த விசாரணை, புலன் ஆய்வு, மாற்கு 10:2 மற்றும் 12:18-23-ல் குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற “பரிசேயர் மற்றும் சதுசேயருடைய துருவி ஆராய்கின்ற, தந்திரமான கேள்விகளைக்” குறுக்கு விசாரணைச் செய்வது ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கேள்விகளைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்.
10 அதே அகராதி தொடர்ந்து சொல்கிறது: “இந்தப் பயன்பாட்டை முன்னிட்டுப் பார்க்கையில், . . . [லூக்கா] 2:46 அதிகமாக ஒரு சிறுவனின் கேள்வி கேட்கும் ஆர்வத்தை அல்லாமல் அவருடைய வெற்றிகரமான விவாதத்தையே குறிக்கிறது. [வசனம்] 47 பின்கூறப்பட்ட கருத்துக்கே பொருத்தமாயிருக்கும்.”a ஜோசப் ராதர்ஹேமின் மொழிபெயர்ப்பு 47-வது வசனத்தை விவாதமும் விசாரணையும் நிறைந்த ஒரு சந்திப்பாக மொழிபெயர்க்கிறது: “அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையும் முன்னிட்டு அதிக கிளர்ச்சியுற்ற நிலையில் இருந்தார்கள்.” ராபர்ட்சனின் புதிய ஏற்பாட்டில் வார்த்தைப் படங்கள் அவர்களுடைய மாறாத ஆச்சரியம் “அவர்களுடைய கண்கள் பிதுங்கி நிற்பதுபோல அதிக கிளர்ச்சியுற்ற நிலையில் இருந்தார்கள்” என்பதையே அர்த்தப்படுத்துகிறது என்பதாகச் சொல்கிறது.
11. மரியாளும் யோசேப்பும் தாங்கள் பார்த்தவற்றிற்கும் கேட்டவற்றிற்கும் எவ்வாறு பிரதிபலித்தார்கள், ஓர் இறையியல் அகராதி என்ன குறிப்பிடுகிறது?
11 இயேசுவின் பெற்றோர் கடைசியாக அவ்விடத்தில் வரும்போது, “அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்.” (லூக்கா 2:48) இந்தச் சொற்றொடரிலுள்ள கிரேக்க வார்த்தை “தாக்குவதை, அடித்து விரட்டுவதை” அர்த்தப்படுத்துகிறது என்பதாக ராபர்ட்ஸன் குறிப்பிடுகிறார். யோசேப்பும் மரியாளும் தாங்கள் பார்த்தவற்றாலும் கேட்டவற்றாலும் “தாக்கப்பட்டதாக” அவர் மேலுமாக சொல்கிறார். ஒரு கருத்தில் இயேசு ஏற்கெனவே வியக்கத்தக்க போதகராக இருந்தார். ஆலயத்தில் நடந்த இந்தச் சம்பவத்தை முன்னிட்டுப் பார்க்கையில், “இயேசு தம்முடைய பிள்ளைபருவத்தில் ஏற்கெனவே முரண்பாட்டை ஆரம்பித்துவிடுகிறார், இந்த முரண்பாட்டில் அவருடைய எதிரிகள் அவரிடமாக கடைசியில் சரணடைந்துவிடுவார்கள்,” என்பதாக கிட்டலின் புத்தகம் குறிப்பிடுகிறது.
12. பின்னால் மதத்தலைவர்களோடு இயேசுவின் உரையாடல்களை எது தனிப்படுத்திக் காட்டியது?
12 அவர்கள் நிச்சயமாகவே சரணடைந்தார்கள்! பல வருடங்களுக்குப் பிற்பாடு, பரிசேயர்கள் ‘அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியாத’ வரையாக இப்படிப்பட்ட கேள்விகளினாலே இயேசு பரிசேயர்களை தோற்கடித்தார். (மத்தேயு 22:41-46) சதுசேயர்களும்கூட உயிர்த்தெழுதல் பற்றிய விஷயத்தில் வாய் அடைக்கப்பட்டு, “அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.” (லூக்கா 20:27-40) வேதபாரகருடைய நிலையும் இதுவாகவே இருந்தது. இயேசுவோடு அவர்களில் ஒருவர் கொண்டிருந்த கலந்துரையாடலுக்குப் பின்பு, “அதன்பின்பு ஒருவரும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங் கேட்கத் துணியவில்லை.”—மாற்கு 12:28-34.
13. இயேசுவின் வாழ்க்கையில் ஆலயத்தில் நடந்த சம்பவத்தை முக்கியத்துவமுள்ளதாக்கியது என்ன, மேலுமாக என்ன முன்னுணர்வை அது தெரிவிக்கிறது?
13 ஆலயத்தில் இயேசுவையும் போதகர்களையும் உட்படுத்திய இந்தச் சம்பவம் நினைவுகூரப்படுவதற்காக அவருடைய பிள்ளைபருவத்திலிருந்து தெரிந்துக்கொள்ளப்பட்டிருப்பதற்குக் காரணம் என்ன? அது இயேசுவின் வாழ்க்கையில் ஒரு திரும்புக்கட்டமாக இருந்தது. அவர் சுமார் 12 வயதாயிருக்கையில், யூதர்கள் “கற்பனையின் குமாரன்” என்றழைக்கிறவரானார், அதன் எல்லா கட்டளைகளையும் கடைப்பிடிக்க பொறுப்புள்ளவரானார். மரியாள் தனக்கும் யோசேப்புக்கும் அவர் உண்டுபண்ணியிருந்த மனக்கவலையைக்குறித்துப் புகார்செய்தபோது, அவளுடைய மகனின் பதில், அவருடைய பிறப்பின் அற்புதமான இயல்பையும் அவருடைய மேசியானிய எதிர்காலத்தையும் உணர்ந்துகொண்டிருந்ததைக் காண்பித்தது. கடவுள் தமக்கு மிகவும் நேரடியான விதத்தில் தகப்பனாக இருந்ததை குறிப்பிடுவதன் மூலம் இது தெரியவருகிறது: “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா?” பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் முதல் வார்த்தைகளாக இவை இருக்கின்றன, அவர் பூமிக்கு அனுப்பப்பட்டதற்கான யெகோவாவின் நோக்கத்தை அவர் அறிந்திருப்பதை அவைக் காட்டுகின்றன. இவ்விதமாக, இந்த முழு நிகழ்ச்சியும் அதிக முக்கியத்துவமுள்ள ஒன்றாக இருக்கிறது.—லூக்கா 2:48, 49.
இயேசு பிள்ளைகளை நேசிக்கவும் புரிந்துகொள்ளவும் செய்கிறார்
14. ஆலயத்தில் இளம் இயேசுவைப் பற்றிய பதிவு, இளைஞருக்கு என்ன அக்கறையூட்டும் குறிப்புகளை மனதில் பதிய வைக்கிறது?
14 இந்தப் பதிவு விசேஷமாக இளம் பிள்ளைகளுக்கு கிளர்ச்சியூட்டுவதாக இருக்கவேண்டும். முழு வளர்ச்சிப்பருவத்தை நோக்கி வளர்ந்துவருகையில் இயேசு எத்தனை ஊக்கமாக படித்திருக்கவேண்டும் என்பதை அது காட்டுகிறது. ஆலயத்தில் ரபீக்கள் இந்த 12 வயது நிரம்பிய ‘கற்பனையின் குமாரனுடைய’ ஞானத்தைப் பார்த்து பிரமித்தார்கள். இருந்தபோதிலும் அவர் யோசேப்போடு தச்சு கடையில் வேலை செய்து, அவருக்கும் மரியாளுக்கும் தொடர்ந்து “கீழ்ப்படிந்திருந்தார்,” மேலும் “தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும்” அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.—லூக்கா 2:51, 52.
15. தம்முடைய பூமிக்குரிய ஊழியக்காலத்தின்போது இயேசு எவ்விதமாக இளைஞர்களுக்கு ஆதரவாயிருந்தார்?
15 இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியக்காலத்தின் போது இளைஞர்களுக்கு மிகவும் ஆதரவாயிருந்தார். “அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து, அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.” (மத்தேயு 21:15, 16; சங்கீதம் 8:2) இன்று தங்களுடைய உத்தமத்தைக் காத்துக்கொண்டு, தங்களுடைய சொந்த வாழ்க்கையை ஆபத்தில் வைத்தும்கூட அவ்விதமாகச் செய்து துதியைக் கொண்டுவரும் நூறாயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் அவர் அதேவிதமாகவே ஆதரவாயிருக்கிறார்!
16. (அ) ஒரு சிறு பிள்ளையை அவர்கள் மத்தியில் நிறுத்துவதன் மூலம் இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு என்ன பாடத்தைப் போதித்தார்? (ஆ) இயேசுவினுடைய வாழ்க்கையின் மிகவும் நெருக்கடியான எந்தச் சமயத்திலும்கூட இயேசு பிள்ளைகளுக்காக நேரத்தைக் கொண்டிருந்தார்?
16 தங்களில் பெரியவன் யார் என்பதாக அப்போஸ்தலர்கள் தர்க்கித்தபோது, இயேசு 12 பேரிடம் இவ்வாறு சொன்னார்: “எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி; ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு, இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.” (மாற்கு 9:35-37) மேலுமாக, பயங்கரமான சோதனையையும் மரணத்தையும் எதிர்ப்படுவதற்காக கடைசி முறையாக எருசலேமை நோக்கி அவர் பிரயாணம்செய்து கொண்டிருந்தபோது, பிள்ளைகளுக்காக நேரத்தை எடுத்துக்கொண்டார்: “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.” பின்னர் அவர் “அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.”—மாற்கு 10:13-16.
17. பிள்ளைகளிடம் பேசுவது இயேசுவுக்கு ஏன் எளிதாக இருந்தது, அவரைக்குறித்து பிள்ளைகள் எதை மனதில் கொள்ளவேண்டும்?
17 வயது அடைந்தவர்களின் உலகில் ஒரு பிள்ளையாக இருப்பது எப்படியிருக்கும் என்பதை இயேசு அறிவார். அவர் வயது அடைந்தவர்களோடு வாழ்ந்தார், அவர்களோடு வேலைசெய்தார், அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பதை அனுபவித்தார், அவர்களால் நேசிக்கப்படும்போது கிடைக்கும் அன்பான, பாதுகாப்பான உணர்வையும் அனுபவித்தார். பிள்ளைகளே, இதே இயேசு உங்கள் நண்பராயிருக்கிறார்; உங்களுக்காக அவர் மரித்தார், அவருடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் நீங்கள் என்றுமாக வாழ்வீர்கள்.—யோவான் 15:13, 14.
18. விசேஷமாக அழுத்தம் அல்லது ஆபத்துக்காலங்களில் என்ன கிளர்ச்சியூட்டும் எண்ணத்தை நாம் மனதில் வைக்கவேண்டும்?
18 இயேசு கட்டளையிட்டவிதமாக செய்வது அது தோன்றுவதைப் போல அத்தனை கடினமாக இல்லை. இளைஞரே, மத்தேயு 11:28-30-ல் நாம் வாசிக்கிறபடியே அவர் உங்களையும், மற்ற எல்லாரையும், ஆதரிப்பதற்கு தயாராக இருக்கிறார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, [அல்லது, “என்னுடன்கூட என் நுகத்தின்கீழ் வாருங்கள்,” அடிக்குறிப்பு, NW] என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” யெகோவாவை சேவித்துக்கொண்டு வாழ்க்கையில் நீங்கள் நடந்துசெல்கையில் இயேசு உங்கள் பக்கத்தில் நடந்துவருவதை, நுகத்தை மெதுவாயும் இலகுவாயும் ஆக்குவதை கற்பனைச் செய்துப்பாருங்கள். அது நம் அனைவருக்கும் கிளர்ச்சியூட்டும் ஓர் எண்ணமாகும்!
19. இயேசு போதித்த வழிகளைப் பற்றிய என்ன கேள்விகளை அவ்வப்போது நாம் மறுபார்வை செய்யலாம்?
19 இயேசு போதித்த ஒரு சில வழிகளை மாத்திரமே மறுபார்வை செய்தபின்பு, நாம் அவரைப்போல போதிப்பதைக் காண்கிறோமா? சரீரப்பிரகாரமாய் நோயுற்று அல்லது ஆவிக்குரியப் பிரகாரமாய் வறுமையில் இருப்பவர்களை நாம் காண்கையில், அவர்களுக்கு உதவுவதற்கு நம்மால் முடிந்ததைச் செய்வதற்கு நாம் மனஉருக்கமுள்ளவர்களாக இருக்கிறோமா? மற்றவர்களுக்கு கற்பிக்கையில், கடவுளுடைய வார்த்தையை நாம் போதிக்கிறோமா அல்லது, பரிசேயர்களைப்போல நம்முடைய சொந்த கருத்துக்களை நாம் போதிக்கிறோமா? ஆவிக்குரிய சத்தியங்களைத் தெளிவுபடுத்தி, கற்பனைசெய்ய உதவி, உறுதிப்பெறச் செய்து, புரிந்துகொள்ளுதலை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய அன்றாடக காரியங்களை நம்மைச்சுற்றி காண நாம் விழிப்புள்ளவர்களாக இருக்கிறோமா? சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக ஒரு சில விதிகளின் பொருத்தத்தில் இசைந்துகொடுப்பதன் மூலம் அன்பையும் இரக்கத்தையும் காட்டுவது அதிக பொருத்தமாக இருக்கையில், அப்படிப்பட்ட விதிகளை கண்டிப்போடு பற்றிக்கொண்டிருப்பதை நாம் தவிர்க்கிறோமா? பிள்ளைகளைப் பற்றி என்ன? இயேசு காண்பித்த அதே மென்மையான அக்கறையையும் அன்புள்ள தயவையும் நாம் காண்பிக்கிறோமா? சிறுவனாக இயேசு படித்த விதமாக படிப்பதற்கு உங்கள் பிள்ளைகளை நீங்கள் உற்சாகப்படுத்துகிறீர்களா? இயேசுவைப் போல உறுதியாக செயல்பட்டு, ஆனால் மனந்திரும்புகிறவர்களை, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்வதுபோல கனிவோடு ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பீர்களா?—மத்தேயு 23:37.
20. நம்முடைய கடவுளை நாம் சேவிக்கையில் என்ன மகிழ்ச்சியான எண்ணத்தால் நம்மைநாமே தேற்றிக்கொள்ளலாம்?
20 இயேசுவை போல போதிக்க நாம் நம்மால் ஆன அனைத்தையும் செய்ய முயற்சிசெய்தால், நிச்சயமாக அவர் ‘அவரோடுகூட அவருடைய நுகத்தின் கீழ்’ வருவதற்கு அவர் நம்மை அனுமதிப்பார்.—மத்தேயு 11:28-30.
[அடிக்குறிப்புகள்]
a நிச்சயமாகவே, இயேசு தம்மைவிட வயதில் மூத்தவர்களுக்கு விசேஷமாக நரைத்தவர்களுக்கும் ஆசாரியர்களுக்கும் பொருத்தமான மரியாதையைக் காண்பித்திருப்பார் என்று நம்புவதற்கு நமக்கு எல்லா காரணமுமிருக்கிறது.—ஒப்பிடவும்: லேவியராகமம் 19:32; அப்போஸ்தலர் 23:2-5.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ஜனக்கூட்டத்தார் இயேசுவிடம் ஏன் திரண்டு வந்தனர்?
◻ இயேசு ஏன் சில சமயங்களில் விதிகளின்பேரில் இசைந்துக்கொடுத்தார்?
◻ ஆலய போதகர்களிடம் இயேசு வினாவியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
◻ பிள்ளைகளிடம் இயேசு வைத்திருந்த உறவிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?