மனிதரின் துன்பம் என்றாவது முடிவடையுமா?
சரஜெவோவின் ஜனநெருக்கமுள்ள ஒரு சந்தையிடத்தில் வெடிகுண்டு ஒன்று வெடித்ததற்குப் பின் கோரமான காட்சிகள்; ருவாண்டாவில் படுகொலைகளும் முடமாக்குதலும்; சோமாலியாவில் பட்டினியாயிருக்கும் பிள்ளைகள் உணவுக்காக அழுது கூச்சலிடுதல்; லாஸ் ஏஞ்சலிஸில் நில அதிர்ச்சி ஒன்றிற்குப் பின் மனக்கலக்கமுற்ற குடும்பங்கள் தங்கள் இழப்புகளை எண்ணுதல்; வங்காள தேசத்தின் வெள்ளப்பெருக்கு சேதத்துக்காளாகி உதவியற்று தவிப்போர். மனிதரின் இத்தகைய துன்ப காட்சிகள் தினந்தோறும் டிவியில் அல்லது பத்திரிகைகளிலும் செய்தித்தாள்களிலும் நம்முன் தோன்றுகின்றன.
மனிதரின் துன்பத்தினால் உண்டாகும் விசனகரமான விளைவானது, கடவுளில் விசுவாசத்தை இழக்கும்படி அது சில ஆட்களைச் செய்வதாகும். ஐக்கிய மாகாணங்களில் யூத மதத் தொகுதி ஒன்று பிரசுரித்த ஒரு கூற்றின்படி, “தீமை இருந்துவருவது விசுவாசத்திற்கு மிக அதிக வினைமையான தடங்கலை எப்போதும் அளித்திருக்கிறது.” ஆஷ்விட்ஸ் போன்ற கான்சன்ட்ரேஷன் முகாம்களிலும் ஹிரோஷிமாவின்மீது வெடித்த ஒன்றைப்போன்ற வெடிகுண்டுகளினாலும் உண்டான மரணங்களை இந்த எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். “நீதியும் வல்லமையுமுள்ள ஒரு கடவுள், குற்றமற்ற அத்தனை பல உயிர்கள் அழிக்கப்படுவதை எவ்வாறு அனுமதிக்கக்கூடும் என்ற கேள்வி மதபக்தியுள்ளவரின் மனச்சாட்சியை வேதனைப்படுத்தி சிந்தனையைத் தடுமாறச் செய்கிறது” என்று இந்த நூலாசிரியர்கள் சொல்கின்றனர்.
வருந்தத்தக்கதாய், முடிவற்ற இந்தக் கடுந்துயர அறிவிப்புகள், மனித மனவெழுச்சிகளை உணர்வற்று மரத்துப்போகச் செய்யுமாறு பாதிக்கக்கூடும். நண்பர்களும் உறவினர்களும் பாதிக்கப்படாதவரையில், மற்றவர்களின் துன்பத்தின்பேரில் பெரும்பாலும் கவலையற்றிருப்போராகப் பலர் தங்களைக் காண்கின்றனர்.
எனினும், நாம் நேசிக்கும் நமக்குச் சொந்தமானவர்களுக்காயினும் இரக்கம் உணரக்கூடியோராக நாம் இருப்பதான இந்த உண்மை, நம்மை உண்டாக்கினவரைப்பற்றி நமக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். மனிதன் ‘தேவசாயலிலும்’ அவருடைய “ரூபத்தின்படியேயும்” படைக்கப்பட்டானென பைபிள் சொல்லுகிறது. (ஆதியாகமம் 1:26, 27) தோற்றத்தில் மனிதர் கடவுளைப்போல் இருக்கிறார்களென்று இது பொருள்படுகிறதில்லை. இல்லை, ஏனெனில் “தேவன் ஆவியாயிருக்கிறார்” என்றும் ‘மாம்சமும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இராது’ என்றும் இயேசு கிறிஸ்து விளக்கினார். (யோவான் 4:24; லூக்கா 24:39) கடவுளுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருப்பதானது கடவுளுடையதைப்போன்ற பண்புகளைக் காட்டுவதற்கான நம்முடைய உள்ளாற்றலைக் குறிப்பிடுகிறது. ஆகையால், இயல்பான மனிதர்கள் துன்பப்படுவோருக்காக இரக்கத்தை உணருவதால், மனிதனின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் இரக்கமுள்ளவராக இருக்கிறாரென்றும், துன்பப்படும் தம்முடைய மனித சிருஷ்டிக்காக ஆழ்ந்த இரக்க உணர்ச்சியடைகிறாரென்றும் நாம் முடிவுக்கு வரவேண்டும்.—லூக்கா 11:13-ஐ ஒத்துப்பாருங்கள்.
கடவுள் தம்முடைய இரக்கத்தைக் காண்பித்திருக்கும் ஒரு வழியானது, துன்பத்தின் காரணத்தைக் கூறும் எழுதப்பட்ட ஒரு விளக்கவிவரத்தை மனிதவர்க்கத்திற்கு அளிப்பதன் மூலமாகும். இதை அவர் தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் அளித்திருக்கிறார். துன்பப்படுவதற்கல்ல வாழ்க்கையை மகிழ்ந்தனுபவிப்பதற்காகவே கடவுள் மனிதனைப் படைத்தாரென்று பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. (ஆதியாகமம் 2:7-9) முதல் மனிதர்கள் கடவுளுடைய நீதியுள்ள அரசாட்சியை ஏற்காது தள்ளிவிட்டதனால் தங்கள்மீது துன்பத்தைக் கொண்டுவந்தனரென்றும் அது தெரிவிக்கிறது.—உபாகமம் 32:4, 5; ரோமர் 5:12.
இவ்வாறிருந்தும், கடவுள், துன்பப்படும் மனிதகுலத்துக்காக இன்னும் இரங்குகிறார். இது, மனிதரின் துன்பத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவருவாரென்ற அவருடைய வாக்கில் தெளிவாகக் காட்டப்படுகிறது. “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:3, 4; இவற்றையும் பாருங்கள்: ஏசாயா 25:8; 65:17-25; ரோமர் 8:19-21.
மனிதரின் துன்பத்தைக் கடவுள் நன்றாய் அறிந்திருக்கிறாரென்றும் அதற்கு ஒரு முடிவைக் கொண்டுவரும்படி தீர்மானித்திருக்கிறாரென்றும் இந்த அருமையான வாக்குகள் நிரூபிக்கின்றன. ஆனால், முதலாவதாக, மனிதரின் துன்பத்திற்கு எது உண்மையில் காரணமாயிருந்தது, அது நம் நாள் வரையில் தொடரும்படி கடவுள் ஏன் அனுமதித்திருக்கிறார்?